திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-2-

திருவேங்கடமுடையான் திருவடிகளிலே புக்கு அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாமை தத் அர்த்தமாக அவன்
திருவடிகளிலே சரணம் புக்க இடத்திலும் –
ஸ்வ அபேக்ஷிதம் பெறாதே மிகவும் நோவு பட்டு இருக்கிறதுக்கு மேலே -தமக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்களான
விஷய இந்திரியாதிகளுடைய ஸ்வ பாவத்தை நிரூபித்து கலங்கின ஆழ்வார் -இவ்வார்த்தி தீரலாம் என்று பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று விழ
-இவரை எங்கனம் பரிஹரிப்போம் என்று அவனும் சிந்தியா நிற்க -அத்தை அனுசந்திக்க ஷமர் இன்றிக்கே -தம்மை ஒரு விசேஷ கடாக்ஷம் பண்ணி
அருளிற்றிலராக கொண்டு அத்யந்தம் அவசன்னராய் -தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
பெரிய பெருமாளோடே ஸம்ஸலேஷித்து விஸ்லே ஷித்தாள் ஒரு பிராட்டி -விஸ்லேஷ வியாசனத்தோடே முறுகடியாலே
அத்யந்தம் அவசன்னையாய் -க்ஷணம் தோறும் இருந்து கண்ண நீர்கள் வெள்ளமிட அழுதும்-க்ருதாஞ்சலியாய்க் கொண்டு தொழுதும்
-பரவசையாய் மோஹித்தும் -உணர்ந்தும் -அவருடைய அசரண்ய சரண்யாத்வாதி குணங்களையும் அழகுகளையும் நினைத்து
–அவற்றைப் பேசியும் -சாஸ்திரங்களில் சொல்லுகிற அடைவு அன்றிக்கே அக்ரமமாக எல்லா தசைகளும் வந்து தலை காட்டி
நோவு படுகிற இவளுடைய தசையை அனுசந்தித்து
மிகவும் அவசன்னையான திருத் தாயார் பெரிய பெருமாளுக்கு இவளுடைய அவஸ்தைகளை விண்ணப்பம் செய்து
-இவள் திறத்து செய்து அருள நினைத்தது என் என்று அதிதாருண த்வனியாக மிகவும் கூப்பிடுகிறாள் –

————————————————————————

இப்பிராட்டியுடைய பேச நிலம் இன்றிக்கே இருக்கிற தசையைப் பெரிய பெருமாளுக்கு அறிவித்து இவள் திறத்து செய்து அருளக் கடவது என் என்கிறாள் –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

உறங்குகைக்கு அடைத்த இரவோடு -உறங்காமைக்கு அடைத்த பகலொடு வாசி இன்றிக்கே நித்திரை என்று ஒரு தத்வம் உண்டு என்று அறியாள்-
இப்படி நோவு படா நிற்க வாராது ஓழியான்-என்று அத்யவசித்து அவன் வந்தால் காண்கைக்கு பிரதிபந்தகமான கண்ண நீரை கடலைக் கையாலே இறைக்க -என்று உபக்ரமிப்பாரைப் போலே கைகளால் இறையா நிற்கும் -கூராராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் -என்று சொல்லத் தொடங்கி சங்கு சக்கரங்கள் என்ற மாத்திரத்தாலே இளைத்து -விடாய்த்தார் ஹஸ்த சேஷ்டிதையாலே தண்ணீர் வேண்டுமா போலே -தன் கருத்தையும் குறையும் அஞ்சலியாலே தெரிவியா நின்றாள்-
திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் -என்று சொல்ல உபக்ரமித்து அத்தை சேஷ் டை யாலும் தலைக் கட்ட மாட்டாதே மிகவும் தளரா நின்றாள்
இவ் வழகை யுடைய உன்னைப் பிரிந்தால் தரிக்க முடியுமோ என்னா நின்றாள் -தன் ஆற்றாமையால் இம் மஹா பிருத்வியை எல்லாம் தன் கைகளால் துழாவா நின்றாள்
ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -ஜல சர தத்துவங்களுக்கு ஜலத்தை ஒழியச் செல்லாதாப் போலே உம்மை ஒழிய இவளுக்கு செல்லாது என்றதாகவுமாம்-

————————————————————-

இப்பெண் பிள்ளையுடைய தசை என்னாய் விடக் கடவது -என்கிறாள் –

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

உன் கண் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட நீ என் ஆர்த்தி தீர கண்களால் நோக்கி அருளப் பார்த்தாயோ இல்லையோ என்னும் –தான் அபேக்ஷித்த போதே நோக்கி அருளாமையாலே இன்னாப்பாலே கண்ண நீர் வெள்ளமிட சேஷ்டிக்க க்ஷமை அன்றிக்கே இருக்கும் -சிரமஹரமான கோயிலையும் பெரிய பெருமாள் திரு அழகையும் நினைத்துப் பெரு விடாயாலே காண ப் பெறாமையாலே செயல் அற்று என் செய்கேன் என்னும் -இதுக்கு மேலே ஸந்தாபத்தாலே வெவ்விதாக பலகால் நெடு மூச்செறிந்து அவ் உஷ்ணத்தாலே உருகா நிற்கும் -இத்துக்கத்துக்கு அடியாக நான் பண்டு பண்ணின பாபமே உன்னுடைய வடிவை காட்ட வல்லையே என்று அதின் கொடுமையை சொல்லா நிற்கும் -கர்ம அனுகுணமாக நான் நோவு படக் கண்டு உபேக்ஷித்து இருக்கை ஜல ஸ்தல விபாகம் இல்லாத உன்னுடைய உதார குணத்துக்கு சத்ருசமோ -என்னும் –
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!-நான் உதாரனாய் இருந்தேனோ என்னில் நிர் ஹேதுகமாக பண்டு ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதிகளை பண்ணி அருளினவன் அல்லையோ-

———————————————————-

இவள் இவ்வவஸ்தையை ப்ராப்த்தை யாகைக்கு-இவள் இடையாட்டத்தில் நீர் செய்தது என் என்கிறாள்  –

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;-இத்யாதி –
ஒன்றும் லஜ்ஜிக்கத் தவிர்ந்தாள் -லஜ்ஜை போகையாலே சம்ச்லேஷ அபேக்ஷை தோற்றும்படி -மணி வண்ணா -என்று திருநாமத்தை வாய் விட்டு சொல்லா நிற்கும் -இவ்வார்த்த த்வனி வழியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே தோற்றி அருள வேணும் -என்று ஆகாசத்தை பாரா நிற்கும் -அங்கு வந்து அருள காணாமையாலே அறிவு கெடும் -பின்னையும் அக்ஷணமே தெளிந்து மிடுக்கு உடையரான அசூரரரை முடித்த ஏக வீரனே என்று -பிரதிபந்தன நிரசன சாமர்த்தியத்தை சொல்லி அது தனக்கு உதவா விட்ட வாறே உள் உடையும் –
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்-பாஹ்ய சஷூஸூக்கு-ஒரு நாளும் விஷயம் இன்றிக்கே இருக்கிற நீ -நான் உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும்
காகுத்தா!-இங்கனம் அரிதான பொருளை செய்வாரோ என்னில் நீ காகுஸ்தன் அல்லையோ
கண்ணனே!’ என்னும்;-அங்கு பெறாதனவும் பெறுவிக்கும் கிருஷ்ணன் அல்லையோ என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் பெறாதார்க்கும் உன்னைக் கொடுத்து அருள கடவதானமை தெரியும் படி கொடி கட்டிக் கொண்டு அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது-

—————————————————————-

இப்பெண் பிள்ளை திறத்து செய்து அருள நினைத்தது என் என்று பெரிய பெருமாளுக்கு விண்ணப்பம் செய்கிறாள் –

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;-இத்யாதி –
ஸ்வாதீனம் அல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் -தான் சேஷ்டிக்க மாட்டாதே இருக்கும் படி அவசன்னையாய் இருக்கச் செய்தே-விளக்கு முடியும் அளவில் கிளம்பா அவியுமா போலே-ஸ்வஸ் த்தரைப் போலே எழுந்து இருந்து உலாவி மோஹிக்கும்-உணர்த்தி இன்றிக்கே இருக்கச் செய்தே பூர்வ வாசனையால் கை கூப்பும் அத்தாலே உணர்ந்து -பெரிய பெருமாள் பக்கல் உள்ள ஸ்நேஹமே புருஷார்த்தம் -என்று இருக்கக் கடவ இவள் ஸ்நேஹம் போலே பொல்லாதது இல்லை என்று சொல்லி பின்னையும் காணப் பெறாத வ்யஸன அதிசயத்தாலே மோஹிக்கும் -சகல பதார்த்தையும் தன்னுள்ளே அடக்கி ஒன்றை ஒன்றை ஓன்று நலியாத படி பரிஹரிக்கும் கடலின் தன்மையான நீ என் திறத்தில் கண்ணறையனாய் இரா நின்றாய் என்னும்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்-இத்யாதி -கையும் திரு வாழி யுமான அழகைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு -‘வட்டவாய் நேமி வலங்கையா!’ -வந்திடாய் -என்று சொல்ல உபக்ரமித்து -நடுவே இளைத்து திரியக் குறையும் சொல்லா நின்று கொண்டு மோஹியா நின்றாள் -கோயிலின் நில மிதியாலே நிறைய நீர்மை யுடையீரான நீர் இவள் திறத்து செய்து அருள பார்த்து அருளிற்று என் –

———————————————————–

இவளுக்கு ப்ரதி க்ஷணம் பேதித்து வருகிற அவஸ்தா விசேஷங்களை விஜ்ஜாபித்து -இவளை இப்பாட்டு படுத்துகை தேவருடைய ஆஸ்ரித வத்சலத் வாதிகளுக்கு போருமோ என்கிறாள் –

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்-‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-
உன்னுடைய ஸுந்தரியாதிகளையும் உன்னோட்டை சம்ச்லேஷத்தையும் நினைக்கும் -அப்போதே ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமையாலே மோஹிக்கும் -ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே அபேக்ஷிதம் பெற்று தரித்தாரைப் போலே பயாவஹமாம் படி தேறும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டு கை கூப்பும் -மீளவும் வியசன அஸஹிஷ்ணுதை யாலே திருவரங்கத்து உள்ளாய் என்னும் –
வந்திக்கும் என்றென்றே மயங்கும்;-செயல் அறுதியாலே திருவடிகளை நினைத்து தண்டனிட்டுக் கிடைக்கும் -ஸ்தோத்ரம் பண்ணும் என்றுமாம் -அத்தசையில் கண் மிகவும் நீர் மல்குவதும் செய்ய -பிரானே வாராய் என்னா நின்று கொண்டே அறிவு கெடும்
அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-இத்யாதி -அசுரர்க்கு பலம் வர்த்திக்கும்  ஸந்த்யா காலத்திலே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்காக ஹிரண்யனுடைய சரீரத்தை பிளந்து அருளி ப்ரயோஜனாந்தர பரருமாய் அபிமானிகளுமாய் பெரு மிடுக்கருமான தேவர்களுக்காக  நிரதிசய போக்யமான வடிவோடே கடல் கடைந்து அருளினாய் -இப்படிச் செய்வான் ஒருவனாய் இருந்து உன் திருவடிகளை சிந்தித்தோமாய் முடிய வேணும் என்று துணிந்து இருந்துள்ள இப்பெண் பிள்ளைக்கு உன்னைக் காட்டாத இவளை மதி கெடுத்தவனே -உன்னைக் கண்டு உன் எதிரே முடிய வேணும் என்று பிராணங்களை தரித்து இருக்கிறாள் என்றுமாம் –

—————————————————————–

இவள் இவ்வவஸ்தா பன்னையாய் இருக்க இவள் ஆர்த்தி தீர்த்து அருளாது ஒழிகைக்கு காரணம் என்னுடைய கர்ம விபாகம் -என்கிறாள் –

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! –என்னும்-என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தை பண்ணி -என்னை அறிவு அழித்து -என் மனசை நிஸ்சேஷமாக பறித்து கொண்டவனே –-என்னம்’மா மாயனே!’ என்னும்; -சம்ச்லேஷ தசையில் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனே என்னுதல் -சம்ச்லேஷ தசையில் ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனே என்னும் –
சம்ச்லேஷ தசையில் வார்த்தை அருளிச் செய்யும் போது திருப் பவளத்திலும் திரு உடம்பிலும் பிறக்கும் அழகை நினைத்து -‘செய்யவாய் மணியே!’-என்னா நிற்கும்
தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-சிரமஹரமான கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை நினைத்து இவன் தனக்கு உதவுகிறிலை-என்று சொல்லா நிற்கும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;-அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து ஆஸ்ரிதர் உடைய ஆபன் நிவாரண அர்த்தமாக காணவே எதிரிகள் பயப்படும் படி கொடியவான திவ்ய ஆயுதங்களை தரித்து இருக்கிற நீ என்னுடைய பிரதிபந்தகங்களை நீக்கி என்னோடே சம்ச்லேஷித்து அருளாது ஒழி வதே-என்று கருத்து –
பைகொள்பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் -பாவியேன் செயற் பாலதுவே-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போகனாய் இருக்கிற நீ இவள் இடையாட்டத்தில் கிருபை பண்ணுகிறீலை-இவள் துக்கிதையாய் இருக்கச் செய் தே இவளை விஷயீ கரியாதே -படுக்கை நேர்பாடாய் இருந்ததீ என்று உறங்கி அருளுவதே என்றுமாம் –

——————————————————–

அவ்வவ பதார்த்தங்களை அனுசந்தித்து அவை பொறுக்கும் அளவுகளில் அன்றோ ஸூ க துக்கங்களை சுமத்துவது -இப்படி என்னை படுத்தலாமோ என்னா நின்றாள் -என்கிறாள் -ஆஸ்ரிதரை வாழ்விக்கையும் அநாஸ்ரிதரை துக்கப் படுத்துகையும் அன்றிக்கே மற்றைப் படியே ஆயிற்றோ உம்முடைய படி என்னா நின்றாள் என்றுமாம் –

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!-இடம் அறிந்து ஸூ க துக்கங்களை படைத்தவனே
பற்றிலார் பற்ற நின்றானே!-தம் தாமுக்கே சில நன்மை இல்லாதாரை விஷயீ கரிக்கக் கடவதோ என்னில் அபராதமேயாய் தங்களுக்கு ஒரு பற்றும் இன்றிக்கே இருக்கிற ஜெயந்தன் போல்பாருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி நீர்மையை யுடையவன் அல்லையோ
கால சக் கரத்தாய்! -காலத்தை நடத்தும் திரு வாழி யை யுடையவனே -விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்னில் காலதத்வமும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றுமாம்
கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;-‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’என்னும்’-
ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தால் போலே ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி -அங்கு வர மாட்டாதார்க்கும் ஆஸ்ரயணீயனாய் கொண்டு -ஸ்ரீ நந்தகோபர் திருமகனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி அங்கு உதவாதார்க்கும் இழக்க வேண்டாத படி மத்ஸ்யாதிகளும் அகப்பட தம் தாமுடைய தாரகங்களை இழவாதே புஜிக்கலாம் படியான கோயிலிலே வந்து நித்ய சந்நிஹிதனாய் இருக்கிறாய் அல்லையோ -என்னும்
என் தீர்த்தனே!’ என்னும்;-உன்னுடைய போக்ய அதிசயத்தினாலே உன்னால் அல்லது செல்லாத படி என்னைப் பண்ணினவனே என்னும் -நான் இழிந்து ஆடும் துறையே என்றுமாம்
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்-அழகியதாய் பெருத்து சிரமஹரமான கண் நீர் மல்க இரா நின்றாள் -இவ் வழகு போக்தாவானவன் புஜிக்கப் பெறாமையாலே காட்டில் எறிந்த நிலாவாகா நின்றது என்று திருத் தாயாருக்கு கருத்து –
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–விஸ்லேஷ துக்கம் அனுபவிக்கைக்கு பாத்தம் இல்லாத படி மிகவும் பாலையான என் மகள் –

—————————————————————

இவளுக்கு மேன் மேல் என வருகிற நோய்கள் தீர்க்கைக்கு நான் என் செய்வது என் என்கிறாள் –

கொழுந்து  வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி கோவர்த்தன உத்தரணம் பண்ணி பசு நிரை மேய்த்தவன் கிடீர் என்னுடைய ஆர்த்தி போக்காது ஒழிகிறான் என்று சொல்ல உபக்ரமித்து -நடுவே இளைத்து -பின்னையும் வார்த்தை ஒரு படி தலைக் கட்டும் -இப்படி எல்லார்க்கும் ரக்ஷகனாய் இருக்கிற இவன் தன்னால் அல்லது செல்லாத என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்திலன் என்று தன் இன்னாப்பாலே அழும்-ஸ்ருதி உப நிஷத்கரைப்   போலே தன்னுடைய அபேக்ஷித சித்த்யர்த்தமாக தொழுவதும் செய்யும் –தொழுத இடத்திலும் நீர் வரக் காணாமையாலே ஆத்ம தத்வம் எல்லாம் நெருப்பாம் படி நெடு மூச்சு எறியும் -என்னுடைய விரஹ அக்னி அவியலாம் படி உன்னுடைய சிரமஹரமான நிறத்தோடு வந்து தோற்ற வல்லையே என்னும் -தன்னுடைய ஆர்த்த த்வனி வழியே வருகிறாய் என்று அத்யவசித்து உன்னுடைய சர்வ பரிஸ்பந்தமும் காணலாம் படி எழுந்து மேலே பார்த்து இமை கொட்டாதே இருக்கும் -பின்னையும் தோற்றாது ஒழிந்த வாறே உன்னை நான் காணும் விரகு என் என்னும் –
அழகிய மிக்க நீர் சூழ்ந்து இருந்துள்ள கோயிலை இடமாக உடையவனே -லஷ்மீ சமையான என்னுடைய மகள் அந்த சிரமஹரமான தேசத்திலே வந்து தரிக்கைக்கு நான் என் செய்வேன் –

—————————————————————-

இப்பாட்டில் ஓடுகிற தசையைக் கண்டு இவளுடைய துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் -என்கிறாள்

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
என் திருமகள் என்றது தான் எம்பெருமானை ஸ்நேஹிகைக்கு நிபந்தம் -திருமகள் சேர் மார்பனாய் கொண்டு எனக்கு தாரகன் ஆனவனே என்னும் –
ஆதாரதிசயத்தாலே உன்னுடைய திரு எயிற்றாலே நீ இடந்து எடுத்துக் கொண்ட நிலமகளுக்கு வல்லபன் ஆனவனே என்னும் -நப்பின்னை பிராட்டி உன்னோடே சம்ச்லேஷிக்க வல்லவனே என்ற துளும்புகிற தசையில் ம்ருத்யுவை போலே இருக்கிற ருஷபங்கள் ஏழையும் நீ தழுவி கைக் கொண்ட நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நேஹியானவனே -என்னும்
இப்படி இவர்களை ஸ்நேஹித்து வைத்து இவர்கள் அடியேனாய் இருக்கிற என் திறத்திலே அங்கீ காரம் பண்ணாமைக்கு நிபந்தம் என் என்று கருத்து -பிரணயிநி விஷயத்தில் இப்படி அபி நிவிஷ்டனாய் இருந்து வைத்து என்னை அங்கீ காரம் பண்ணாது இருப்பான் என் என்றுமாம் –
என்னுடைய ஆர்த்திகளையும் தீர்த்து அருளுகைக்காக தெற்குத் திக்குக்கு சிலாக்யமான கோயிலை ஸ்தானமாக கொண்டவனே-

————————————————————

பெரிய பெருமாளை சம்ச்லேஷிக்க பெறாளோ-என்று தோற்றும்படியான அவசன்னையான இப்பெண் பிள்ளை அவர் திருவடிகளை அணுகி சம்ச்லேஷிக்கப் பெற்றாள் என்கிறாள் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

இப்பெண் பிள்ளை தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் -மூன்று லோகத்தையும் ஆளக் கடவ இந்திரனுக்கு அதுக்கு ஈடாக ஆத்மாவாய் நின்றவனே என்னும் -தன்னுடைய ஐஸ்வர்யத்துக்கு ஈடான தாரை யுடையனாய் சாதகன் என்று தோற்றும் படியான ஜடையையும் யுடையனாய் ருத்ரனுக்கு ஆத்மதயா நின்று அவனுக்கு நிர்வாஹகன் ஆனவனே என்னும் -சதுர்முகனான தைவத்துக்கு அந்தராத்மாதயாவாக நின்று நிர்வாஹகன் ஆனவனே என்னும் -உன்னோடு ஒத்த வடிவை யுடைய அயர்வறும் அமரர்களுக்கு தலைவனான வனே என்னும் -அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இன்றிக்கே எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவனே நீ உன்னால் அல்லால் செல்லாது இருக்கிற என்னை ரஷியாது ஒழிவதே என்று கருத்து –
கீழ் சொன்னவை போல் அன்றிக்கே மிகவும் உதார குணத்தை உடையையாய்க் கொண்டு கோயிலிலே ஸூலபனானவனே என்னும்-

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் ஆழ்வார் பட்ட கிலேசம் படாதே திரு நாட்டில் நிரதிசய ஆனந்த உக்தராய் கொண்டு அயர்வறும் அமரர்கள் நித்ய ஸூ ரிகள் – சூழ இருப்பர் என்கிறார் –

முகில்  வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

பெரிய பெருமாள் திருவடிகளிலே சேர்ந்து அங்குத்தை பிரசாதத்தை பெற்று தரித்தவன் -மிக்க புனலை யுடைய திருப் பொருநலில் துகில் வண்ணமான தூ நீரிலே சேரக் கடவான் –
அழகிய பொழில் சூழ்ந்து இருந்துள்ள வண் குருகூர்ச் சடகோபன் -பெரிய பெருமாள் திருவடிகளிலே சொன்ன ஆயிரம் திரு வாய் மொழியிலும் இத் திருவாய் மொழி வல்லார் எம்பெருமானுடைய திரு நிறத்தாலே முகில் வண்ணமான திரு நாட்டிலே

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: