திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-1–

இப்படி பெரிய ஆர்த்தியோடே எம்பெருமானை சரணம் புக்க இடத்திலும் தம்முடைய அபிலஷிதம் பெறாதே மிகவும் அவசன்னரான ஆழ்வார் –
தாம் ஜிதேந்த்ரியராய் இருந்தாரே யாகிலும் -ப்ரக்ருதி சம்பந்தரானவர்கள் ஹேயதையால் பகவத் அநர்ஹமாய் விஷயாந்தர ப்ரவணமாய்
பகவத் அனுபவ விரோதியாய் இருந்துள்ள இந்த்ரியங்களாலே நலிவு படுகிற படியைக் கண்டு -தாமும் பிரகிருதி சம்பந்தராகையாலே
தாத்ருசமான இந்த்ரியங்களாலே நலிவு படுகிறார் ஆகவும் -சத்வாதி குணங்களும் -எல்லாருக்கும் ரக்ஷகனாய் ரஷிக்கைக்கு ஈடான சாமர்த்யத்தையும்
யுடையனாய் ரஷிக்கைக்கும் உறவு யுடையனாய் இருந்து வைத்து தம்முடைய துக்கத்தை போக்காது ஒழிந்தவாறே-
குண த்ரயத்தாலே பேர்க்க ஒண்ணாத படி கட்டி இந்திரியங்கள் ஆகிற படரையிட்டு குத்து வித்து -அயர்வறும் அமரர்களும் தானும்
இதுவே போது போக்காக பார்த்திரா நின்றான் என்றும் புத்தி பண்ணி -பரம தயாளுவாய் ரஷிக்கைக்கு சக்தனுமாய் இருக்கிற நீ
இங்கனம் நோவு பட கண்டு இருக்கலாமோ -என்று கேட்டார்க்கும் தரிக்க ஒண்ணாத படி பெறும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –

—————————————————————

தன்னால் அல்லது செல்லாத படியாய் உன் திருவடிகளிலே சரணாசும் புகுந்த பின்பும் என்னை இந்த்ரியங்களால் நலிய பாரா நின்றாய் -என்று இன்னாதாகிறார் –

உண்ணி  லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

விஷயங்களில் விமுகனான என்னை உள்ளே வர்த்திக்கிற ஐந்து இந்த்ரியங்களாலும் மிகவும் நலிவு படுத்தி
நீ வேண்டாதாரை நலிகைக்கு ஈடாக அபரிச்சேதயமாய் துஸ்தரமான பிரக்ருதியை உபகரணமாக யுடையையாய் –
குண த்ரய அதீதரான நித்ய ஸூ ரிகளாலே ஏத்தப் படுவதும் செய்து சர்வத்தையும் யுடைய ஸ்வாமியுமாய் நிரதிசய போக்யனுமாய் -உபகாரகனுமாய் -என்னிடையாட்டம் உனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டு நிர்வஹிக்கிறவனே-

————————————————————-

துர்பலனான என்னை இந்த்ரியங்களாலே இரவும் பகலும் நலிவித்து உன்னை நான் கிட்டாத படி பண்ணி இந்நோவை அறிவிக்க ஒண்ணாத படி நீயும் போதி-என்று இன்னாதாகிறார் –

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

எனக்கு விதேயமாய் தவிர்ந்து என்னை தன் கருத்திலே நடத்தா நின்றுள்ள பிரபலமான ஐந்து இந்திரியங்களை என் பக்கலிலே இட்டு
நிரதிசய போக்யனுமாய் அத் யுதாரனுமாய் ஜகத்தை எல்லாம் ரஷியா நிற்கவும் செய்து அதுக்கு உறுப்பாக விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் யுடையையாய் வைத்து என் பாபத்தாலே எனக்கு காண ஒண்ணாத வேதைக சமதிகம்யனாய் இருக்கிறவனே-

—————————————————————–

ஜகத்துக்கு நீயே சர்வ வித ரக்ஷகனாய் வைத்து என்னை உன் திருவடிகளிலே வந்து அணுக ஒண்ணாத படி இந்திரியங்களை இட்டு நிரந்தரமாக நலிவித்து உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறார் –

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

இடைவிடாது நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்களாலும் திருவடிகளை பெறாத படி தடுத்து –
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமாய் நிரவதிக தேஜசாசன திரு அபிஷேகம் முதலான திவ்ய ஆபரணங்களையும் உடையவராய் இருந்து வைத்து ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களை பண்ணினவனே –
மதுவாகிற அசூரனை போக்கினால் போலே திருவடிகளிலே ருசி பிறக்கைக்கு விரோதிகளான ஹேயனான என்னுடைய பாபங்களை எல்லாம் போக்கினவனே –

————————————————————————–

நீயே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் என்னும் இடத்தை நான் அறியாத படி சப் தாதி விஷயங்களைக் காட்டி என்னை பிரமிப்பித்து போகா நின்றாய் -என்கிறார் –

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

சூது -உறுவது -சிறு வயசிலே சேதன அசேதனங்களை அடைய வைத்து ஒரு ஆலின் தளிர் மேலே சிறு பிள்ளையாய் கண் வளர்ந்து அருளின ஆச்சர்யம் போலே எனக்கு உண்டான சப் தாதி விஷய ப்ராவண்யத்தை தீர்க்க வல்லவனே –

———————————————————————

அப்ரிதிகிரியமாம் படி விஷயங்களாலும் இந்த்ரியங்களாலும் நலிவித்து என்னை நீ கை விட்டால் வேறு எனக்கு ரக்ஷகர் உண்டோ என்கிறார் –

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

ஐந்து விஷயங்களும் ஆகிற நோயால் இவ்வாத்மாவை முடிக்க வல்லவாய் -உடம்பு ஆகிற செக்கில் இட்டுத் திரிக்கும் ஐந்து இந்திரியங்களை எதிரும் பார்ஸ்வங்களிலும் நிறுத்தி என்னைக் கை விடுவாரைப் போலே இருந்தாய்
பிரதிபக்ஷத்தை அடக்கும் திருவாழியை ஏந்தி ஆஸ்ரிதற்கு பிரதிகூலரான அசுரரை நிச்சேஷமாக நீக்கின நீ உபேக்ஷித்தால் இனி பரிஹரிக்க வல்லார் யார்
விண்ணுளார் பெருமானேயோ-ஹா ராமா ஹா லஷ்மணா என்னுமா போலே தமக்கு உறவு முறையரான அயர்வறும் அமரர்களையும் எம்பெருமானையும் நினைத்து தம்முடைய ஆர்த்தியாலே கூப்பிடுகிறார் –

——————————————————————-

எத்தனையேனும் அளவுடையாரையும் நலிய வல்லவனான இந்திரியங்கள் நீ கை விட்டால் அதி துர்ப்பலனான என்னை எல்லா அநர்த்தமும் படுத்தவோ என்கிறார் –

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

அயர்வறும் அமரர்கள் சம்சாரத்திலே எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேணும் என்று வந்து புகுரிலும்-அவர்களையும் நலிய வல்லவனான ஐந்து இந்திரியங்கள் இவை -எம்பெருமானுக்கு அடிமை செய்யும் இங்கு உண்டான வைஷ்ணவர்களை என்றுமாம் –
தனக்கு நிலமான சம்சாரத்திலே அதிதுர்பலனான என்னை விஷயமாக பெறுவதுக்கு மேலே ரக்ஷகனான நீயும் விட்டால் எப்பாடு படுத்தா –
என்னுடைய சஷூராதிகளிலே சந்நிஹிதனாய் என்னுடைய ஆர்த்த ஸ்வரத்தையும் ஆர்த்தி கர்ப்பமான என்னுடைய உக்தியையும் உன்னால் அல்லது செல்லாததான என் தசையையும் அனுசந்திப்பதும் செய்து நினைத்தது முடிக்க வல்லையுமுமாய் இருக்கிற நீ வந்து இந்த்ரியங்களால் உள்ள நலிவு தீர்த்து நான் உன்னைப் பெறும் விரகு சொல்ல வேணும் –

——————————————————————-

நீ உபேக்ஷித்தால் அதிக்கலமான -அதி வேலமான இந்திரியங்களை வெல்ல உபாயம் உண்டோ என்கிறார் –

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

ஒன்றைச் சொல்லி ஒரு வழி நில்லாத அதிக்கலமாய் தனித் தனியே பிரதானமான ஐந்து இந்த்ரியங்களையும் நீ உன் கிருபையால் வென்று தாராயாகில் வெல்ல உபாயம் இல்லை –
தேவர்களும் அசுரர்களும் வலிக்க -அவர்கள் மாட்டாதே கை வாங்க என்றுமாம்
அலைகையாலே கடைய அரிதான கடலிலே வா ஸூ கியைச் சுற்றி மந்த்ர பர்வதத்தை வைத்த என் நாதனுமாய் -தேவர்களை போலே நீ தந்ததைக் கொள்ளாதே உன்னையே ஆசைப்படுகிற எனக்கு நிரதிசய போக்யம் ஆனவனே –

————————————————————

என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து நான் மநோ வாக் காயங்களினால் உன்னை நிரந்தரமாக அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-

நிரதிசய போக்யம் போலே தோற்றி பிரபலமான சப் தாதி விஷயங்கள் ஆனவை எத்தனையேனும் அளவுடையாரையும் மதி கெடுக்கைக்கு அடியாக நீ பண்ணி வைத்த பழையதான இஸ் சம்சார சம்பந்தத்தை என்னை நிஸ் சேஷமாக விடுவித்து –
எனக்கு பரிவனான கிருஷ்ணனே -அயர்வறும் அமரர்களை அடிமை கொண்டு உஜ்ஜீவிப்பிக்குமா போலே நான் உன் திரு வடிவையும் திருவாழி முதலான திவ்ய சிஹ்னங்களையும் நிரந்தரமாகச் சிந்தித்து ஏத்திக் கை தொழும் படி பண்ணி அருள வேணும் –

—————————————————————

சானுபந்தமாக முடிக்க வற்றான பாபங்களை விளைக்கும் விஷயங்களில் ஆத்மாவை தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

குலத்தை அடியோடு முடிக்க வற்றான மஹா பாபங்களை விளைப்பனவுமாய் துஷ் பரிஹரமாய் புக்காரை தன் பக்கலில் நின்றும் போகாத படி பிடிக்க வற்றான சப் தாதி விஷயங்களில் புகத் தள்ளும் ஐந்து இந்த்ரியங்களையும் –
பலத்தை முதலில் கெடுக்கும் ப்ரசாதங்களையே பண்ணி அருள வேணும்
பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமான அநேக பதார்த்தங்களையும் முதலிலே உண்டாக்குவதும் செய்து எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமானவனே -நினைத்தது செய்ய வல்லையாய் எனக்கு உபகாரகனுமான நீ என்னுடைய இந்த்ரியபாதையை போக்கி அருள வேணும் என்று கருத்து –

———————————————————-

அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவங்களுக்கு பாங்கான உடம்பை எனக்கு தந்தாய் -அதுவே ஹேதுவாக ஐந்து இந்திரியங்களும் பொறுக்க ஒண்ணாத படி என்னை நலியா நின்றன –அவற்றைப் பரிஹரித்து அருள வேணும் என்று ஆர்த்தராய் மஹா த்வனியோடு கூப்பிடுகிறார் –

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

எனக்கு நிரதிசய போக்யமானவனே என்று உன்னைக் குறித்து கூப்பிட்டு ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ஸ்நேஹத்தாலே சிதிலனாய் நிற்கை யாகிற இப் புருஷார்த்தத்தை ஒழிய இந்திரியங்கள் சுமத்தின சுமையை எல்லாம் சுமைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டைத் தந்தாய் –
துஷ் பரங்களான விஷய பரங்களை சுமத்தி ஐந்து இந்திரியங்களும் திக்கு தோறும் வலித்து எற்றா நின்றன -ஆஸ்ரித அபேக்ஷித பூர்ண ஷமனான நாதனேயோ -இந்திரியங்களை சேதனரைப் போலே பேசுவான் என் என்னில் சில சேதனர் வேணும் என்று கோலி பாதிக்குமா போலே பாதகம் ஆகையால்-

————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்த்ரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம் என்கிறார் –

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

குண அனுரூபமான வடிவை யுடைய மூவருமாய் ஸ்ருஷ்ட்டி யாதிகளையும் பண்ணும் ஸ்வபாவனுமாய் -ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி காரணத்தயா பிரசித்தமான புண்டரீகத்தோடே கூடின திரு நாபியுடைய ஏகார்ணவ சாயியான எம்பெருமானுக்கே –கண்டு பாட-அனுசந்தித்து பாட –

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: