திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-10-

இப்படி ஸ்ரீ வைகுண்டத்திலும் கேட்க்கும் படி பெரிய ஆர்த்தியோடே கூப்பிடச் செய்தே-சர்வ ரக்ஷகனானவன் தான் வந்து தோற்றி
அருளா விட்ட வாறே மிகவும் அவசன்னரான ஆழ்வார் –
ஸ்ரீ யபதியாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து தன்னுடைய காருண்ய வாத்சல்யாதி கல்யாண குணங்களாலே
தேவ மனுஷ்ய சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணி ஆஸ்ரிதருடைய விரோதி நிரசனம் பண்ணி அவர்களை ரஷிக்கக் கடவனாய்
-அதுக்கு ஈடான பரிகரத்தை யுடையனாய் -ஆஸ்ரிதற்கு அணித்தாக திருமலையில் நின்று அருளுவதும் செய்து –
தேச காலாதி கார்யாதி கார்ய விசேஷங்களை அபேக்ஷியாதே ரக்ஷகனாய் இருந்துள்ள திரு வேங்கட முடையான் திருவடிகளில் விழுந்து
-ச ப்ராதுச் சரணவ் காடம் என்னும் படியால் இளைய பெருமாள் பிராட்டி முகமாக பெருமாளை சரணம் புக்காப் போலே
தத் கைங்கர்ய ஏக பிரயோஜனராய் தம்முடைய ஆற்றாமை யாலே அநந்ய கதிகராய் பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டு சரணம் புகுகிறார் –

—————————————————————

நீ போக்கி வேறு ஒரு கதி இன்றிக்கே இருக்கிற என்னை -நீயே உன் திருவடிகளில் சேரும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

ரஷ்யத்தின் அளவன்றிக்கே இருக்கும் பெரும் பாரிப்பை யுடையையாய் -அமர்யாதமாய் இருந்துள்ள ரக்ஷகத்வாதி குண பிரதையாலே லோகத்தை அடைய அடிமை கொள்ளுவதும் செய்து -நித்தியமாய் வி லக்ஷண தேஜோ ரூபமான திருவடியை  யுடையையுமாய் இருந்து வைத்து லோகத்துக்கு எல்லாம் திலகமாக திருமலையில் நின்று அருளி என்னை அடிமை கொள்ளுவதும் செய்து எனக்கு தாரகன் ஆனவனே –குல தொல் அடியேன்-குல ப்ரயுக்தமாய் பழையதாக அடிமையாய் இருக்கிற நான்-

——————————————————————

பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் -அவற்றையும் நீயே போக்கி -என்னை உன் திருவடிகளிலே சேர்த்து அருள வேணும் என்கிறார் –

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்காக திருவவதாரம் பண்ணி யருளி -ந்ருசம்சராய் வலியராய் இருந்துள்ள அசூரர்களுடைய குலங்கள் எல்லாவற்றையும் சின்னமாய் தூளியாய் நிச்சேஷமாம் படி சீறி இறை பெறாதே ஜ்வலியா நின்றுள்ள திரு வாழியை வலவருகே தரித்து அருளி அவ்வாதாரத்திலே உதவப் பெறாதார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி அறாக்கசமான சுனைகளிலே அக்னி ஜ்வலிக்கிறால் போலே தாமரை மலர்ந்து விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருமலையில் வந்து நின்று அருளினவனே –
ஏதேனும் பெற்றாகிலும் பர்யாப்தி பிறவாதபடியான ஸ்நேஹத்தை யுடையனான நான் உன் திருவடிகளை பெறும்படி –

———————————————————————

நீர் ஒரு யத்னம் பண்ணாது இருக்க நீர் சொல்லிற்று எல்லாம் செய்ய முடியுமோ என்னில் உனக்கு விலக்ஷணரான போக்தாக்கள் உண்டாய் இருக்க முன்னம் என்னை விஷயீ கரித்தால் போலே -கேவல கிருபையால் மேலும் என் அபேக்ஷிதம் செய்ய வேணும் என்கிறார் –

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

நிறம் கண்டார் பிச்சேறும்  படியான அழகிதான மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையையாய் அத்யாச்சர்ய குண சேஷ்டிதங்களை யும் யுடையையாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து தெளிந்து நிரதிசய போக்யமான திரு அருவிகள் மாணிக்கமும் பொன்னும் முத்துமாக கலந்து பார்ஸ்வங்களிலே ஏறட்டா நின்றுள்ள  திருமலையில் நின்று அருளி என்னை அடிமை கொண்டு அருளுவதும் செய்து என்னுடைய ஹ்ருதயத்தில் புகுந்து தித்திக்கிற நிரதிசய போக்யனே -உன்னுடைய திருவடிகளை பெறும்படி அடியேனுக்கு கிருபை பண்ணி அருள வேணும் –

———————————————————————

பண்டு பரிக்லப்த்தமான அவற்றில் ஓர் உபாயமும் என் பக்கலில் இல்லை -எனக்கு என்ன ஒரு உபாயம் கண்டு தந்து அருள வேணும் என்கிறார் -வரையாதே எல்லாருடைய பிரதிபந்தகங்களையும் போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனான நீ -என்னை உன் திருவடிகளிலே சேரும் படி பார்த்து அருள வேணும் என்கிறார் -என்றுமாம் –

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

ஐயோ ஐயோ என்று தயை பண்ணாதே லோகத்தை நலியும் அஸூரருடைய ஆயுஸ்ஸிலே நெருப்பை உமிழ்கிற சர வர்ஷத்தை வர்ஷிக்கும் ஸ்ரீ சார்ங்கத்தை யுடையவனே
திருமா மகள்கேள்வா!-விரோதி நிராசனம் பண்ணிற்று -பிராட்டிக்கு இனிதாகைக்காக என்று கருத்து
தேவா!-அ ஸூர நிரசனம் பண்ணுகையால் வந்த வீர ஸ்ரீ யாலே விளங்கா நின்றுள்ளவனே
தங்கள் அபிமதங்கள் கிடைக்கும் இடம் என்று தேவர்களும் ரிஷி கணங்களும் விரும்பும் திரு மலையிலே நின்று அருளினவனே -நிரதிசய போக்யமான உன் திருவடிகளை சுவட்டை அறிந்து வைத்தும் அனுபவிக்கப் பெறாத படிக்கு ஈடான பாபத்தை பண்ணின நானும் பெறும்படி பண்ணி அருள வேணும் –

—————————————————————-

உம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அது என்று செய்வது என்கிறார்

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

நேர் ஓக்க நில்லாதே திரண்டு நின்ற மரா மரம் ஏழையும் எய்த ஏக வீரன் ஆனவனே
நிரவிவரமாம் படி கூடி நின்ற யாமளார்ஜுனங்களின் நடுவே உனக்கு ஒரு நலிவு இன்றிக்கே போய் இஜ் ஜகத்தை உண்டாக்கினவனே
செறிந்த மேகம் என்னலாம் படியான யானைகள் சேரா நின்றுள்ள திரு மலையிலே நின்று அருளினவனே
மிகவும் வலியுடைத்தான ஸ்ரீ சார்ங்கத்தை யுடைய உன் திருவடிகளை -கையிலே அவ்வில் உண்டாய் இருக்க காள செபம் பண்ணுவதே என்று கருத்து –

————————————————————–

ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு அடிமை செய்கை  யன்றோ எல்லார்க்கும் ப்ராப்யம் என்னில் அங்கு உள்ளாரும் ஆசைப் பட்டு வந்து அன்றோ திருமலையில் உனக்கு அடிமை செய்கிறது -அப்படியே நானும் திருமலையில் புஷ்கலமாக அடிமை செய்யப் பெறுவது என்றோ என்கிறார் -அந்நிய பரரான தேவர்களும் வந்து ஆசைப்பட்டு அடிமை செய்யும் படி ஸ் ப்ருஹணீயமான உன் திருவடிகளை மெய்யாக நான் பெறுவது என்றோ -என்றுமாம் –

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான்  எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

சர்வ ஸூலபமான திருவடிகளை என்றோ நாம் காணப் பெறுவது என்று பேராசையோடே வந்து அயர்வறும் அமரர்கள் திரண்டு நின்று ஸ்தோத்ரம் பண்ணி அநந்ய பிரயோஜனமாக மன ப்ரப்ருத் யுபகரணங்களாலே அடிமை செய்யும் படியான திரு மலையிலே நின்று அருளினவனே
மெய்ந்நான் எய்தி -ஞான அனுசந்தானம் மாத்திரம் அன்றிக்கே சாஷாத் கரித்து-

——————————————————————–

நான் நிஸ்ஸாதனாய் இருக்கச் செய்தே -உன்னுடைய போக்யதையை அனுசந்தித்து உன்னை ஒழிய ஒரு க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டுக்கிறிலேன் என்கிறார் –

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக திருமலையில் நின்று வந்து அருளி -என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி -பிரதிபக்ஷ நிரசன சீலனான பெரிய திருவடியை த்வஜமாக உடையையான வேண்டற்பாடடாலும் அழகாலும் என்னை அடிமை கொண்டு எனக்கு நிரதிசய போக்யனானவனே

———————————————————————–

நோலாது வைத்து ஆற்றேன் என்ன பெறலாமோ சிறிது எத்தனம் பண்ண வேண்டாவோ என்னில் என்ன -எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது -ஆனபின்பு வந்து என்னுடைய ஆர்த்தியை தீர்த்து அருள வேணும் என்கிறார் –

நோலா  தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

உன்னுடைய திருவடிகளைக் காண்கைக்கு ஈடாக சாதன அனுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து ஒன்றும் தரிக்க மாட்டுகிறி லேன் என்று வி லக்ஷண ஞானராய் ஞான பிரதானனான நீல கண்டனும் -அவனிலும் பூர்ணனான சதுர் முகனும் இந்திரனும்
தய நீயமாம் படி தங்களுக்கு போக்ய பூதைகளான ஸ்திரீகளை முன்னிட்டுக் கொண்டு ஸமாச்ரயிக்கலாம் படி அவர்களுக்கு ஸூ லபனாய் திருமலையில் நின்று அருளினவனே -கறுத்த நிறத்தோடு கண்டார் பிச்சேறும் படி ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாய் வந்து பிறந்து அருளினால் போலே என்னுடைய ஆர்த்தி தீர வர வேணும் –

————————————————————

தாம் அபேக்ஷித்த போதே காணப் பெறாமையாலே இப்போதே உன்னைக் காணா விடில் ஒரு க்ஷணமும் தரிக்க மாட்டேன் என்கிறார் –

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

அநாஸ்ரிதர்க்கு எளியாரைப் போலே இருந்தே அற வரியையாய் -ஆஸ்ரிதற்கு அரியாரைப் போலே இருந்தே அற எளியையுமாய்-செந்தாமரைப் பூ போலே இருக்கிற அழகிய திருக் கண்களையும் -சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளத்தையும் -நாலு திருத் தோள்களையும்  உடையையாய்க் கொண்டு எனக்கு நிரதிசய போக்யனாய் -எனக்கு தாரகனானவனே -பெரு விலையனான மாணிக்கங்களினுடைய ஒளி ராத்ரியைப் பகலாக்கா நின்றுள்ள திருமலையில் நின்று அருளினவனே –அத்யந்த தயநீய தசாபன்னராய் -நோவாலே அந்தோ என்கிறார் –

—————————————————————–

தன்னுடைய அபேக்ஷிதம் ஈண்டென பெறுகைக்காக பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையானை சரணம் புகுகிறார் –

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –
சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம் –

———————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் எல்லாரும் திருநாட்டில் சென்று அடிமையிலே மூர்த்த அபி ஷிக்தராய் இருந்து என்றும் அடிமை செய்யப் பெறுவார் என்கிறார் –

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

தன் திருவடிக்கு கீழே அநந்ய பிரயோஜனராய் புகுந்து அடியார் உள்ளார் வாழுங்கோள் -என்னும் படிக்கு ஒப்பு இல்லாதனாய் இருந்துள்ள சர்வேஸ்வரனை சம்ருத்தமான பழனங்களை யுடைய திரு நகரி யிலே ஆழ்வார்
ஆயிரம் திருவாய் மொழியிலும் தம்முடைய துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையில் சொன்ன இத்திருவாய் மொழி பற்றினார் எல்லாம் திரு நாட்டிலே போய் அவ்விடம் தங்கள் இட்ட வழக்காய் கொண்டு இருந்து என்றும் செலுத்தப் பெறுவர்-கற்றவர்களை சமாஸ்ரயித்தவர்கள் என்றுமாம் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: