திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-9–

கீழ் தூது விடுகிறவற்றுக்கு அங்குப் போனால் சொல்லும் வார்த்தையாக இவள் சொன்ன பாசுரத்தால் வந்த
ஆர்த்த நாதத்தாலே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தெல்லாம் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை
அறிவிக்கைக்கு ஷமர் இல்லை என்று பார்த்து தம்முடைய ஆர்த்த த்வனியாலே அழைத்துக் கொள்வாராக நினைக்க
தம்முடைய ஜகதாகாரத்தையைக் காட்டி யருளி -நீர் என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று அருளிச் செய்ய ஜகத் சரீரியாய் இருக்கிற
இந்த ஞான லாபத்தால் போராது -உன்னுடைய அசாதாரண விக்ரஹத்தை எனக்கு காட்டி அருள வேணும் என்று
வைஸ்வரூப்யத்தைக் கண்ட அர்ஜுனன் -சதுர் புஜமாய் பிரசன்னமான வடிவைக் காண வேணும் என்று அர்த்தித்தால் போலே
விடாய் எல்லாம் கெட சங்க சக்ராதி பூஷிதமான அப்ராக்ருதமான வடிவோடே தோற்றி அருள வேணும் என்று
பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் இருப்பும் நிலை குலைந்து வந்து முகம் காட்ட வேண்டும் படி கூப்பிடுகிறார் –
என்னுடைய ஆர்த்த த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் அழியப் புகா நின்றது -என்னுடைய ரக்ஷணத்துக்காக வந்திலையாகிலும்
உன்னுடைய விபூதி ரக்ஷணத்துக்காக வாகிலும் வர வேணும் என்று கூப்பிடுகிறார் என்றுமாம் –

———————————————————————

ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார் –

நீராய்  நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-சீரார் சுடர்கள் இரண்டாய்ச்-
அண்ட காரணமான பூத பஞ்சகங்களையும் ஸ்ருஷ்டித்து -ஸமேத்யான் யோன்ய சம்யோகம் -என்கிறபடியே ஒன்றாகச் சேர்த்து -பூதேப்யோ அண்டம் -என்கிறபடியே அண்டத்தை ஸ்ருஷ்டித்து -ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு -பிரகாசகரான சந்த்ர சூர்யர்களை ஸ்ருஷ்டித்து
சீரார் சுடர்கள் இரண்டாய்ச்-பிரகாசகராயும் போஷகராயும் இருக்கை
சிவனாய் அயனானாய்-அண்டரருஷ்டாவாக ப்ரஹ்மாவையும் -இவை அதிப்ரவர்த்தமான போது அழிக்கைக்கு ருத்ரனையும் ஸ்ருஷ்ட்டித்தான் -தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத்-தத் அநு பிரவேஸ்ய ஸச் சத்யச்சா பவத் என்கிறபடியே -சாமா நாதி கரண்யம் அநு பிரவேச க்ருதம் –
நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இ றே –
கொடியேன்பால்-ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இ றே பாபம்
வாராய்! -அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.-நான் உளேன் ஆகைக்காக-என் சத்தையை நோக்குகைக்காக வந்திலையேயாகிலும் உன் விபூதியை நோக்குகைக்காக வர வேணும் -மண் -லீலா விபூதி -விண்-நித்ய விபூதி -லீலா விபூதியாவது அழிவதாம் அன்றோ -என்னில் ஏக ரூபமான நித்ய விபூதியும் ஆர்த்த த்வனியாலே அழியக் கிடாய் புகுகிறது -மரங்களும் இரங்கா நிற்க -பரம சேதனர் என் படார் –மகிழவே -அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக –

—————————————————————–

நீர் சொல்லுகிறது ஒரு தேச விசேஷத்திலே கொடு போய் காட்டுமது காணும் -என்ன -நீ இங்கே கொடு வந்து காட்டிற்று இல்லையோ -என்கிறார் –

மண்ணும்  விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
பூம் யந்தரிஷாதி சகல லோகங்களிலும் -விசேஜஞ்ஞர் உகக்கவும் அவிசேஜஞ்ஞர் -வர்ஷேண பீஜம் ப்ரதிஸஞ்ச ஹர்ஷ -என்கிறபடி செவ்வி பெறவும் –
குறளாய்-நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் வடிவை சம்சாரிகள் கண்ணாலே அனுபவிக்கலாம் படி கோடியைக் காணி யாக்கின படி -பால் சென்றதனையும் ரசிக்குமா போலே போக்யத்தை மிக்கு இருக்கிறபடி-கூராழி வெண் சங்கு ஏந்தி -என்கிற வடிவில் காட்டில் ஆகர்ஷகமாய் இருக்கிற படி
வலங்காட்டி-அம்புக்கு செல்லாத இடமாகையாலே அழகு ஆகிற பலத்தை காட்டி அழித்து
மண்ணும் விண்ணும் கொண்டமாய-மஹா பலியாலே அபஹ்ருதமான த்ரை லோக்யத்தையும் இந்திரனுக்கு வாங்கிக் கொடுத்த –கொண்ட என்றது இந்திரன் பேறு தன் பேறாய் இருக்கிற படி -பிறந்த வன்றே ப்ரஹ்மசாரியாய் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு இரந்து -சிறு காலைக் காட்டி அபஹரித்து பெரிய காலாலே அளந்து கொண்ட ஆச்சர்யங்கள் –
அம்மானே-இது எல்லாம் வேண்டிற்று உடையவனாகை இ றே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே கிட்டி –உனை-கண்டு அல்லது நிற்க ஒண்ணாத உன்னை —நான்-காண்கையில் சபலனான நான் -பிரதிகூலனுக்கு காட்டிய வடிவு அநந்ய பிரயோஜனனுக்கு அரிதாவதே –
கண்டு உகந்துகூத்தாட-மஹா பலியைப் போலே கொடுக்கலாவது இல்லை -இந்தப் போலே கொள்ள வேண்டுவது இல்லை -கண்ணாலே கண்டு ஹ்ருஷ்டானாய் -ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு ஆடும்படியாக -கொள்வதும் அழகே -அவன் கொடுப்பதும் அழகே
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–-நான் இருந்த இடத்தே வந்து கிட்டி -மஹா பலிக்கு காட்டினவோபாதி ஒரு நாள் அமையும் -நான் இருந்த சம்சாரத்தில் மஹா பலி யஜ்ஜ்வாடத்திலே உலவினால் போலே உலாவ வேணும் –

——————————————————————

அது சற்றுப் போது காட்டாறு பெருகுமா போலே செய்தோம்   அத்தனை என்ன -அது காதாசித்தகம் என்ன ஒண்ணாதபடி   யுகம் தோறும் ராம கிருஷ்ண ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளுகை  உனக்கு ஸ்வ பாவமாக இருக்க -நான் உன்னைக் காண ப் பெறாதே இன்னமும் நெடு நாள் நோவு படக் கடவேனோ என்கிறார் –

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
அக்ரத பிரயயவ் ராம –என்றும் -அத தாசரதிர் வீரோ ராமோ நாம மஹா பல விஷ்ணுர் மானுஷ ரூபேண சசரா வ ஸூ தாதலே-என்றும் சொல்லுகிறபடியே -நின்றும்
பாஹும் புஜபோகாபமுப தாயாரி ஸூதநக-அஞ்சலிம் பிராங்முக க்ருத்வாபிரதி சிஸ்யே மஹோததே -என்கிற படியே கிடந்தும்
உடஜ ராம மாசீ நம் -என்கிறபடியே ரிஷிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
ஒரு நாள் செய்து போகை அன்றிக்கே -பதினோராயிரம் ஆண்டும் நூறாண்டும் -சம்பவாமி யுகே யுகே என்கிறபடியே –
சிறியோர் பெரியார் என்னாதே சர்வ ரக்ஷகன் அல்லையோ -சிலர் கூப்பிட ஜகத் ரக்ஷணம் பண்ணுகை ரக்ஷகத்வத்துக்கு குறைவன்றோ-என்னை ஒருவனையும் ஒழியவிட்டு உன்னுடைய சர்வ ரக்ஷகத்வத்தை இழக்க வி றே புகுகிறது
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது -ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இ றே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–
அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –

———————————————————————

நான் வர நினைத்தாலும் பல பிரதிபந்தகங்கள் உண்டே என்ன சகடாசூரனிலும் வலிதோ என் பிரதிபந்தகம் என்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்-பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
சகட வசுர உடல் தளர்ந்து முறிந்தும் –சகடாசூரனுடைய உடல் கட்டுக் குலைந்தும் –சின்னம் பின்னம் என்கிற க்ரமம் இன்றிக்கே ஒரு காலே முறிந்தும் வேறாம் படி பிளந்து உரு மாய்ந்து போம்படி திருவடிகளை ஆண்டு சேஷி யான உன்னைத் தந்தவனே -முலை வரவு தாழ்த்து -திருவடிகளை நிமிர்க்க துகளாய்ப் போயிற்று -பிள்ளைத் தனத்தால் அவன் அகப்பட்டான்-திருவடிகளின் அவதானத்தாலே பிழைத்த வித்தனை
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்மாதிகள் பெரிய கிளர்த்தியோடே ஜய ஸ் துதி களைப் பண்ணிக் கொண்டு சூழ்ந்து சேவிக்க
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–ஆகாசம் அவகாசம்எ ல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்
ஒரு நாள் -ஆனைக்கு வந்து தேப்பற்றினார் போலே ஒருநாள் வந்து அருள வேணும் –

——————————————————————–

ஸர்வத்ர சந்நிஹிதனாய்-ஹ்ருதயத்திலும் ஸ்பஷ்ட தரமாக பிரகாசியா நின்று வைத்து -என் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் நான் தளரேனோ என்கிறாள் –

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
பரமபதத்தில் நித்ய ஸூ ரிகளுக்கு அழகு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே-
நித்ய ஸூ ரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஓக்க அனுபவிக்கலாம் படி திருமலையில் நின்று அருளினவனே –
திருமலையில் நிலை போலே பிரகாசிக்கிறதாயிற்று இவருக்கு பரமபதத்தில் இருப்பும்
பரமபதத்தில் மேன்மையும் அறியாதே திருமலையில் நீர்மையும் அறியாதே இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-அனுபவிப்பைக்கும் -திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவனே
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே
காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தொற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! -அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே
எனதாவி-உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–
என்னுடைய ஹ்ருதயத்தில் உள்ளே மிகவும் பிரகாசித்து -என்னுதல் -அந்தர் பஹிச்ச வர்த்தித்து என்னுதல் -பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

——————————————————————

காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார் –

பாயோர்  அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
ஓர் அடியை பாய் வைத்து -பரம்ப வைத்து -அத்திருவடியின் கீழே கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் அளந்து கொண்டு
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மற்றை ஓர் அடியால்-சகல லோகங்களையும் ஸ்பர்சித்த
தடவந்த -தடவின -தென்றல் பட்டால் போலே உஜ்ஜீவிக்கும் படி இருக்கை
மாயோன்! -ஆச்சர்ய பூதனே -இது எல்லாம் தன் பேறாகச் செய்த வ்யாமோஹத்தை உடையவன் என்கை
உன்னைக் காண்பான் வருந்தி -என்னைக் கிட்டுக்கைக்கு வருந்தி திரிந்த உன்னைக் காண வேணும் என்று நான் வருந்தி -அத்தலை இத்தலையாய் –எனைநாளும்–அநேக காலமும் -ஒரு நாள் என்னாசையை ஆவிஷ்கரித்து விட்டேனோ
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

————————————————————–

பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது யத்னம் பண்ண வேணும் காணும் என்ன -சர்வமும் த்வத் அதீனமாய் இருக்க -அதற்கு புறம்போ நான் என் கார்யம் செய்கைக்கு என்கிறார் –

உலகில்  திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.–6-9-7-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்-
லோகத்தில் பரிமாறுகிற சாதனமான கர்மம் நீ இட்ட வழக்காய் -அனுஷ்டாதாக்களும் நீ இட்ட வழக்காய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்!
ஒரு சரீரத்தை ஒரு சேதனன் ஆத்மாவாய் அபிமானிக்குமா போலே சகல பதார்த்தங்களும் ஏக ஆத்மா வானவனே-அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா -பல பூதனான தானே கர்த்தாவும் -கர்மமும் -உபகரணங்களுமாய் -இருக்கை
புற அண்டத்து-அண்டப் புறத்து -அசங்க்யேயரராய் ஞான ப்ரபையாலே சர்வகதரான முக்தாத்மாக்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!-அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.-
சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

———————————————————————-

அருளாய் என்ற போதே தம் அபேக்ஷிதம் பெறாமையாலே இன்னம் என்னை அகற்றி அந்தர படுத்தப் புகுகிறாய் அல்லை இ றே என்கிறார் –

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

அறிவி லேனுக்கு அருளாய் -உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்
அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்
வெறிகொள் சோதி மூர்த்தி! -அருளோம் என்றாலும் விட ஒண்ணாத வடிவை உடையவனே -அதி பரிமளிதமாய் தேஜோ ரூபமான வடிவு -சர்வ கந்த -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
அடியேன் நெடுமாலே!-சேர்ந்த குளிர்ந்த தண்ணீரை விடாயார்க்கு எட்டாதபடி வைப்பாரைப் போலே -அவ்வடிவிலே தோற்ற எனக்கு எட்டாது இருக்கிறவனே -என் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணினவன் என்றுமாம்
கிறிசெய்து என்னைப் -எனக்கு முன்பு செய்தது இத்தனையும் விரகு அடித்ததாம் இத்தனை இ றே -அநந்ய கதியாய் இருக்கிற என்னை பிரமிக்கும் படி ஒரு விரகு பண்ணி -அதாகிறது பேறு உன்னதான பின்பு கிருஷியும் உன்னதாக வேண்டாவோ என்கை
புறத்திட்டு-உனக்கு அசலாம் படி விஷயங்களில் தள்ளி
இன்னம் கெடுப்பாயோ?-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ -புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இ றே
இன்னம் கெடுப்பாயோ?-பேறு அவனாலே யானாள் இழவும் அவனாலே என்னலாம் இ றே -ஸ்தநந்த்யபிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–அநந்ய கதியாய் உன்கை பார்த்து இருக்கிற நான் -நெஞ்சு கலங்கும்படியாக –

——————————————————————–

புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ என்ற இடத்தை விவரித்துக் கொண்டு உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் கிட்டாதோ என்கிறார் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

ஆவி திகைக்க -நெஞ்சு கலங்கும் படி
ஐவர் குமைக்கும் -பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்
சிற்றின்பம்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை
பாவி யேனைப் -அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப் தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இ றே இங்கனம் சொல்லுகிறார்
பல -பைதல் கைசு -நோய் முக்கை சு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை
நீ காட்டிப் படுப்பாயோ?-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.
வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –/தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் / கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

———————————————————————

வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அல்பம் அஸ்திரம் என்றது ஸ்வரூப கதனம் பண்ணின இத்தனை -ப்ராப்தமான கைங்கர்யத்தைப் பற்ற இரண்டும் அப்ராப்தம் என்கிறார் –

குறுகா நீளா  இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

குறுகா நீளா -ஸ்வ தஸ் சங்கோச விகாசங்கள் இல்லை
இறுதி கூடா -முடிவு இன்றிக்கே
எனை ஊழி-சிறுகா பெருகா -காலோபாதிகமான சங்கோச விகாசங்களும் இன்றிக்கே இருக்கை
அளவில் இன்பம் சேர்ந்தாலும்-இப்படி ஐஸ்வர்யத்தில் காட்டிலும் அதிகமாய் நித்தியமான ஆத்மானுபவ ஸூ கத்தை பெற்றாலும்
மறுகால் இன்றி -ஒருகால் லபித்தால்-மறித்து ஒரு கால் இன்றிக்கே -மாயோன் -அல்ப காலம் ஆனாலும் ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு பற்ற வேண்டும்படி ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனே
உனக்கே ஆளாகும்-சிறு காலத்தை உறுமோ-உனக்கே அடிமை ஆகும் அல்ப காலத்தை ஒக்குமோ -கைவல்யம் வேண்டா என்கிறதுவும் அபிராப்தியாலே -கைங்கர்ய அபேக்ஷையும் ப்ராப்தியாலே
அந்தோ!-கைங்கர்யத்துக்கும் இதர புருஷார்த்தத்துக்கும் உண்டான நெடு வாசி உபதேசிக்க வேண்டுவதே
தெரியிலே.–ஆராயப் புகில்-ஆராயாது ஒழிந்த போது அதுவும் புருஷார்த்தம் என்று இருக்கலாம் –

—————————————————————

நிகமத்தில் இப்பத்தும் கற்றவர்கள் சர்வேஸ்வரனுக்கு  அந்தரங்க கிங்கராவார் என்கிறார்-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
ஸ்ரவண மனன நிதித்யாச நங்களால் பரிச்சேதிக்க முடியாத ஸ்ரீ யபதிக்கு -ஸ்ரீ யபதியை ஷூத்ரனால் பரிச்சேதிக்க முடியாது என்கை
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இ றே அநந்யார்ஹ சேஷம் ஆவது
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
இதர புருஷார்த்தங்களில் அல்ப அஸ்திரத்வாதிகளையும்-பகவத் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் வ்யக்தமாகச் சொன்ன
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.—இத் திருவாய் மொழி தானே சர்வ ரக்ஷகனுக்கு அந்தரங்க பரிகரமாகும்


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: