திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-8-

பாஹ்ய அனுசந்தானம் கூடிய ஷமர் அல்லாத படி மோஹம் செல்லுகையாலே -அந்தக்கரணம் எம்பெருமான் பக்கலில் மிகவும் பிரவணராய்
அவன் குணங்களை நெடும் போது அனுபவிக்கையாலே -பெரு விடாய் தட்டி நோவு பட்டவர்கள் நீரிலே மூழ்கித் தரித்தால் போலே
-விஸ்லேஷ வியசனத்தால் வந்த பலஹானி நீங்கி தரித்து ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை போலே ஜகத் வ்ருத்தாந்த அனுசந்தான ஷமரான ஆழ்வார்
-பழையபடியே தமக்கு எம்பெருமானோடே உண்டான விரஹத்தை அனுசந்தித்து தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
திருக் கோளூர் ஏறப் புக -என்று தன்னுடைய நகர உபவனத்தின் அளவும் சென்று தன்னுடைய பல ஹானியால் போக மாட்டாது இருக்கிற இப்பிராட்டி
-பின்னையும் அவன் வரக் காணாமையாலே -வாராது ஒழிகைக்கு நிபந்தம் தன் ஐஸ்வர்ய பரப்பாலே-
நான் ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே அறிவிக்க வரும் என்று பார்த்து -அவனை பிராபிக்கைக்கு தன் தசையை அவனுக்கு
அறிவிக்கை ஒழிய மற்று ஒரு உபாயம் காணாதே -அங்குள்ள பஷிகளை அடைய -பெருமாள் பிராட்டிக்கு தம் எதிர் கண்ட முதலிகள் அடைய
தூத ப்ரோக்ஷணம் பண்ணினால் போலே -எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் நிலங்களில் எங்கேனும் புக்காகிலும் அவனைக் கண்டு
என் ஆர்த்தியை அறிவித்து என் துக்கத்தை தீர்க்க வேணும் என்கிறாள் –
திருக் கோளூரிலே சம்ச்லேஷம் சிலகாலம் சென்று தேவ யோகத்தால் விஸ்லேஷம் பிறக்க தூது விட்டு செல்லுகிறது என்றும் சொல்லுவர் –

—————————————————————–

எம்பெருமானுக்கு என்னுடைய ஸ்திதியை அறிவித்து அவனுடைய பரமபதத்தையும் சம்சார விபூதியையும் நான் தர ஆள வேணும் என்று சில புள்ளினங்களை பிராட்டி இரக்கிறாள்-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

நன்னலப் புள்ளினங்காள்-– அழகிய நீர்மையை உடைய புள்ளினங்காள் / வினையாட்டியேன் -கையிலே அகப்பட்டவனை விட்டு தூத ப்ரேக்ஷணம் பண்ணுகைக்கு ஈடான பாபத்தை பண்ணின நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்-என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே-
ஸ்ருஷ்ட்டி காலத்தில் தரதம பாவம் பாராதே சகல லோகத்தையும் உண்டாக்கின பரம உதாரனுமாய் அக்குண சேஷ்டிதாதிகளாலே என்னை சர்வ ஸ்ஹரணம் பண்ணி அடிமை கொண்ட கிருஷ்ணன் ஆனவனுக்கு –

——————————————————-

எம்பெருமானுக்கு என்னுடைய ஸ்திதியை அறிவித்து வந்து நானும் தோழிமாரும் கொண்டாடும் கொண்டாட்ட்த்தை அங்கீ கரிக்க வேணும் என்று சில கிளிகளை இரக்கிறாள் –

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

உங்கள் வரவால் அதி பிரீதைகள் ஆகையால் மிகவும் கறுத்து ஒளியை உடைத்தாய் பெருத்து இருந்துள்ள கண்களை யுடைய மங்கைமார் சந்நிதியில் என் கையிலே இருந்து பாலோடும் நெய்யோடும் கூடின அடிசிலை என்றும் மேவி எங்களை உஜ்ஜீவிப்பிக்க வேணும் –
திருக் கையிலே மிகவும் பொருந்தி இருக்கிற திரு வாழி யையும் யுடையனாய் -கனிந்து இருக்கிற திருப் பவளத்தையும் யுடையனாய் -அவ் வழகாலே என்னை அடிமை கொண்டவனை கண்டு அவன் வருவதற்கு முன்னே கடுக வந்து தன் திருமேனியில் உண்டான த்ருட சம்ச்லேஷத்தில் அபி நிவேசத்தை பண்ணி –

——————————————————————

இனமாய் இருக்கிற வண்டுகளைக் குறித்து எம்பெருமானுக்கு தன் தசையை அறிவித்து வந்து என் தலை மேலே வர்த்தியுங்கோள் என்கிறாள் –

ஓடிவந்து  என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3-

உங்கள் வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய் பெருத்து இருக்கிற பூவில் மதுவை பானம் பண்ணி கோளோ
குருநாடுடை தர்மபுத்திராதிகளுக்காக மநோ ஹராமாம்பாடி சஞ்சரியா நின்றுள்ள குதிரை பூண்ட பெரிய தேரையே உபகரணமாகக் கொண்டு சேனையை பொடியாம்படி முடித்த மஹா உபகாரகன் சூடி அருளின திருத் துழாயிலே மதுவைப் பானம் பண்ணுகையாலே சுத்தமாய் தேனை யுடைய வாய்களோடே கூட –

——————————————————————–

என்னை நோவு படுத்திப் போந்து -எட்டா நிலத்திலே ஓலக்கம் இருந்து -வளையம் வைத்து போது போக்கி -ஓரம் செய்கையோ நாம் தக்கோர் ஆனபடி என்று திரு நாட்டிலே சென்று எம்பெருமானுக்கு சொல்ல வேணும் என்று சில தும்பிகளைக் குறித்து அருளிச் செய்கிறாள்-

தூமது  வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

நான் வளர்க்கிற முல்லைகளில் வர்த்திக்கிற தும்பிகாள்-உங்களுடைய இனிய பேச்சுக்களோடே அங்கே சென்று –
பூக்களில் மது பானம் பண்ணப் போகில்-
என்னோடே ஸ்வப்ன கல்பமான சம்ச்லேஷத்தை பண்ணி விஸ்லேஷித்து-அத்தாலே க்ருதக்ருத்யனாய் -திருக் குழலில் செவ்வியாலே மிகவும் மது தாரைகள் பாயா நின்றுள்ள திருத் துழாயாலே அலங்க்ருதமான முடியை யுடைய அயர்வறும் அமரர்கள் தன்னுடைய அழகையும் குணங்களையும் கொண்டாட இருக்குமவனைக் கண்டு போகத்தில் அபர்யாப்த்தியாலே-வினையேன் -என்கிறாள் –பொய் –ஸ் நே ஹிப்பாரைப் போலே காட்டி வஞ்சிக்கை-

—————————————————————

திரு நாடாகவுமாம் –மற்றேனும் அவன் உகந்து அருளின தேசங்கள் ஆகவுமாம் -எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு தம்முடைய தக்கோர்மை இருக்கும்படி இதுவோ என்னுங்கோள் என்று தன்னுடைய கிளிகளைக் குறித்து சொல்லுகிறாள்  –

நுங்கட்கு  யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

பிரதிகூலர்க்கு பயங்கரமான த்ருஷ்ட்டியை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்து -தன்னுடைய விஸ்லேஷத்தில் தரியாத படியான பாபத்தை பண்ணின என்னுடைய நெஞ்சை நிஸ் சேஷமாக பறித்துக் கொள்ளுவதும் செய்து -அத்தாலே பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே -சிவந்த திருக் கண்களை யுடையனாய் -காள மேகம் போலே சிரமஹரமான திரு நிறத்தையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடையனாய் -அர்த்தித்தது கொடுக்கும் மாத்திரம் அன்றிக்கே தானே அபேக்ஷிதங்கள் அறிந்து கொடுக்கும் வி லக்ஷண கற்பகமுமாய் இருந்தவனை -என்னை சர்வ ஸ்வபஹரணம் பண்ணி விஸ்லேஷிக்கிற தசையில் என்னை அநு நயிக்கைக்காக வடிவு அழகைக் காட்டி கண்ணாலே நோக்கி முறுவல் செய்து தன்னையும் தன்னுடைமையையும் எனக்காக தந்தவனுக்கு என்றுமாம் –

————————————————————

ஆஸ்ரிதரோடு ஏக ரசன் ஆகையால் நம் அபேக்ஷிதங்கள் செய்வான் ஒருவன் -அவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு என்று அவனுக்கு அறிவியுங்கோள் என்று சில பூவைகளைக் குறித்து சொல்லுகிறாள் –

என்மின்னு  நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

தன்னுடைய திரு மார்வில் விளங்குகிற திரு யஜ்ஜோபவீதத்தையும் தன் நிறத்தையும் காட்டி என்னை அடிமை கொண்டு எனக்கு ஸ் நே ஹியான கிருஷ்ணனாய் ஆஸ்ரிதர் இருந்த இடத்து அளவும் செல்லுமதான தன் திருவடிகளில் மன்னின திருத் துழாயில் செவ்வி நமக்கு அல்லது வேறு ஒருவருக்கும் கொடான்
என் கருமம் நானே தலைக் கட்ட வேண்டி இதுக்கு உங்களை தூதாக விட வேண்டும்படியான பாபத்தை பண்ணின நான் வளர்த்த சிறு பூவைகாள் -இதுவோ தக்கவாறு என்று உங்களை கற்பித்து வைத்த பாசுரங்களை சொல்லிச் செல்லுங்கோள் –

—————————————————————-

சேதனங்களை தூத ப்ரேக்ஷணம் பண்ணின இடத்தில் கார்ய கரம் ஆகாதே -எம்பெருமான் கை விட்டால் போலே கை விடுகைக்கு ஹேது சேதனங்களேயோ -என்று பார்த்து அசேதனமான பாவைகளை என் துக்கத்தை கெடுக்க வல்லி கோளே என்று பிரார்த்திக்கிறாள் –

பூவைகள்  போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

நிரதிசய போக்யனாய் சர்வாந்தராத்மாவாய் நின்று வைத்து தத்கத தோஷைர ஸம்ஸ்ப்ருஷ்டனாகை யாகிற ஆச்சர்யத்தை யுடையனாய் -கையும் திரு வாழி யுமான அழகாலே என்னை தோற்பித்து அடிமை கொள்ளுவதும் செய்து ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனானவனுக்கு
வினையாட்டியேன் -உங்களைக் கொண்டு கார்யம் தலைக் கட்ட வேண்டும் படியான பாபத்தை பண்ணினேன் -முதலிலே உங்களை பற்றாமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் என்றுமாம்
பாசற-என்பது -பந்துக்களோடு பற்றுதல் என்றுமாம் –

———————————————————————

முன்னே நின்ற குருகை குறித்து -அயர்வறும் அமரர்களைப் போலே உம்மால் அல்லது செல்லாதாள் ஒருத்தி உம்மைப் பெறாதே நோவு படா நின்றாள் என்று சொல் என்று அருளிச் செய்கிறாள் –

பாசற  வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-

பயலைமையை பிராபித்து இப்படியே முடியாதே பாபத்தை பண்ணின நான் எத்தனை காலம் துக்கப் படக் கட வேன் -பழிப்பற்ற சிறகை யுடையையாய் என்னைப் போலே பயலைமை யோடு இராது -அழகிய வெளுத்த நிறத்தை யுடைய குருகே-வெள்ளைக் குருகாவது ஹ்ருதய நைர்மல்யத்தை யுடைய குருகு என்றுமாம்
அருள்செய் தொருநாள்-என் பக்கலிலே ஒரு நாள் கிருபை பண்ணி
பழிப்பற்ற நீலச் சுடரை யுடைய மயிர்முடியை யுடையனாய் இருந்துள்ள அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு பிறர் ஏசும் தசை கடந்து தம்மால் அல்லது வேறு ஒருவரால் செல்லாத ப்ரக்ருதி யானாள் என்று சொல்லு –

——————————————————————–

நீங்கள் சென்றால் அவன் வந்திலனேயாகிலும் -அங்குத்தை வார்த்தையைக் கொண்டு வந்து நாள் தோறும் அத்தையே இருந்து சொல்லி உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்று சில புதா வினங்களை இரக்கிறாள்-

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

அத்யந்தம் குணவானான எம்பெருமானாலே இகழப் பட்ட மஹா பாபியான நான் உங்களை ஒழிய வேறு சில நிர்வாஹகரை உடையேன் அல்லேன் -தறையிலே சஞ்சரிக்குமா போலே நீர்த்திரை மேல் சஞ்சரித்து இறை தேட வல்லி கோளான புதா வினங்காள்-புதா -பெரு நாரை –
கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருபத்தொரு மஹா மேகம் போல் இருக்கிற நிறத்தை யுடையனாய் அத்யந்த சீலவானாய்-அழகும் குணங்களும் அயர்வறும் அமரர்களையே புஜிக்கக் கொடுத்து அவர்களை பிரிய மாட்டாமையாலே எனக்கு எட்டாது இருக்கிறவனைக் கண்டு –அருளி -என் பக்கலிலே அனுக்ரஹத்தை பண்ணி-

—————————————————–

தன் பாடே வந்து ஸூ கிதமாய்க் கொண்டு சஞ்சரிக்கிற ஹம்ஸ மிதுனங்களைக் குறித்து -பிராட்டியும் தானும் கூட ரஹஸ்யமாக அநந்ய பரனாய் எழுந்து அருளி இருந்த இடத்தில் என் தசையை விண்ணப்பம் செய்து மறுமாற்றம் எனக்கு வந்து சொல்ல வேணும் என்று அருளிச் செய்கிறாள் –

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-

உம்முடைய சிலாக்கியமான சேவலும் நீரும் சபரிகரமாக வந்து ஓர் இடர் இன்றிக்கே அலர் மேலே சம்போகங்களாலே அசைந்து வருகிற அன்னங்காள்
என் ஸ்வாமி நி யான பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் உடையவனானவனுக்கு இப்படி இவள் துர்க்கதை யானாள் என்று –

————————————————————————

நிகமத்தில் -இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய் என்கிறார் –

மாற்றங்கள்  ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-

தூத ப்ரேக்ஷணம் பண்ணுகையாலே எம்பெருமான் வரவு நிச்சிதம் என்று தளிர்த்த திரு நகரியை யுடைய ஆழ்வார் பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான எம்பெருமானுடைய திருவடிகளில் நல்ல சொற்களை தெரிந்து கொண்டு அருளிச் செய்த
-நீதியினுடைய தோற்றம் போலே இருக்கிற தோற்றத்தை யுடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: