பரம யோகிகளுக்குப் பிறக்கக் கடவதான பர பக்தி இவர்க்குப் பிறந்து தத் பிரகாரங்களை இத் திருவாய் மொழி யளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது -ஒன்றும் இல்லாமையால் -பரம பதத்திலே போக வேணும் -என்று மநோ ரதிக்கிற இவரை
-தம்மில் காட்டில் -சடக்கெனக் கொடு போக வேணும் என்று விரைகிற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –
அதாகிறது -வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம்
எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்
நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –
நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே
தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
-தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது-
அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –
——————————————————————
திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-
சூழ் விசும்பு –-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –
அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -/ ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் /அழகிய முகில் என்னுதல் –
தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன –
அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இ றே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –
ஆழ்கடல்-அலைதிரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –
-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தன என்றுமாம் -இது எல்லாம் ஆரைக் கண்டால் என்னில் –
என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இ றே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –
வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –
தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —
———————————————————
மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்–பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–நிருபாதிக சேஷியானவனுடைய அடியாரைக் கண்டு நல்ல நீரை யுடைத்தான மேகங்களானவை உகப்பாலே -உயர்ந்த ஆகாசத்தில் பூர்ண கும்பங்களாக சமைக்கப் பட்டன –முற்படக் கண்டு உகந்தன -பின்பு அவை தானே பூர்ண கும்பங்களாகாய்த்தின -ஒரு கால் தூர்ய கோஷத்தைப் பண்ணினோம் என்று இருக்கிறனவில்லை –ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எங்கும் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன –நீராலே அணியப் பட்ட கடல்கள் ஒருகால் ஆடினோம் என்று இராதே -ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன –
நெடுவரைத்-தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–அவ்வோ லோகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள் -உலகு என்று லோகத்தில் உள்ளாரைச் சொல்லுகிறது -மஞ்சா க்ரோஸந்தி இத்வத் — -சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –
——————————————————————–
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
தொழுதனர் உலகர்கள்--ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனம் பெற்றோம் என்று தொழுதார்கள் –
தூப நல் மலர் மழை-பொழிவனர்–தூபத்தையும் -நல்ல மலர் மழையையும் பிரயோகித்து தொழா நின்றார்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே–திரு உலகு அளந்து அருளின ஸ்ரீ வாமனன் செயலுக்குத் தோற்று அடிமை புக்கவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிக்கிறது –
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் -முனிவர்கள் என்று வாங்நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இ றே என்று இருந்தார்கள் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–பரம பதத்துக்கு போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து –தம் தம்முடைய எல்லையில் வந்தால் ஆதரிக்கிறோம் என்று இருக்கை அன்றிக்கே எதிரே வந்து ஆதரித்தவர்கள் –
பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே– தூப நல் மலர் மழை-பொழிவனராய்க்கொண்டு -முனிவர்களான உலகர்கள் தொழுதனர் -வைகுந்தத்துக்கு வழி இது என்று எதிரே வந்து -எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் -என்று அந்வயம் –
—————————————————————-
மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்--பார்த்த பார்த்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -என்னும் நசையாலே தேவர்கள் தோப்புக்கள் சமைத்தார்கள் -இமையவர் என்று ஸ்வபாவ கதனம் அன்று -தோப்புக்கள் சமைக்கையில் உள்ள தவறையாலே கண் விழித்து இருக்கிற படி -பிரபுத்தராய் இருக்கிறபடி என்கை –
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்--அர்ச்சிராதிகளாய் உள்ள அவ்வோ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் -என்று கைகளை நிரையே காட்டினார்கள் –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-அதிரா நின்றுள்ள குரலையுடைய முரசங்கள்-கடல் கிளர்ந்து முழங்கினால் போலே முழங்கா நின்றன -அங்குத் தங்குகையில் யுண்டான ஆதார அதிசயம் தோற்ற வாத்ய கோஷங்களைப் பண்ணினார்கள் –
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–ஸ்ரீ யபதியுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு அடிமை புக்கவர்களுக்கு என்னுதல் -இவர்களை எதிர் கொள்ளுகைக்கு பிராட்டியோடே ஒப்பித்து அருளுகிற படியைச் சொல்லுதல்-
——————————————————————-
ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த அந்தப்புர பரிகரம் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் சொல்லுவது –வழியில் தேவர்கள் -அவர்கள் ஆகிறார் வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-–கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் சமாராதானங்களை இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள்-நிறபேஷாராய்ப் போகிற இவர்களுக்கு -தம் தாம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார் -யாக பலங்களைக் கொடுப்பார்கள் ஆகிறார்கள் இ றே தம் தாம் ஆதரத்தாலே –ப்ரீதி கச்சின் முனிஸ் தாப்யாம் ஸம்ஸ்த்தித கலசம் ததவ்-என்று தம் தாமுக்கு உள்ளவற்றை கொடுக்கும் அத்தனை இ றே –
—————————————————————
ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
வேள்வி உள் மடுத்தலும்– விரை கமழ் நறும் புகை–அவர்கள் தங்கள் யாக பலங்களை சமர்ப்பித்த அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் -/ விரை கமழ் நறும் புகை–பரிமள பிரசுரம் ஆகையால் ஸ்ப்ருஹணீயமான புகை –
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்--அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் -/ கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது / மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இ றே இவன் பேறு –
——————————————————————-
மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
மடந்தையர் வாழ்த்தலும் -அந்த தேவ ஸ்த்ரீகள் புகழ்ந்த அளவில்
மருதரும் வசுக்களும்-மருத் கணங்களும் வஸூ கணங்களும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் -காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –
தொடு கடல்-கிடந்த எம் கேசவன்- பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -அத்தை விட்டு -ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படி –தொடு கடல் -தோண்டப்பட்ட கடல் -ஆழ்ந்த கடல் –
எம் கேசவன்- கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன்–ஆஸ்ரித அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ரஷித்தவன் -அவதாரத்துக்கு பிற்பாடார் இழவாத படி திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவன் —எம் கோவலன்—கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளினான் என்கிறது -அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள் -/ கிளர் ஒளி மணி முடி-மிக்க ஒளியை யுடைத்தாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் –பர வ்யூஹ வித்துவான்கள் அளவன்றிக்கே திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையிலே தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –
————————————————————————-
பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை யருளிச் செய்கிறார் –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று--அவனுடைய ஸுலப்யத்திலே தோற்று சபரிகரமாக எழுதிக் கொடுத்தவர்கள் என்றாய்த்து -நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பது –குடந்தை எம் கோவலன் -குடி குடியார் -என்றது கீழ் —குடி குடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே -இவர்கள் விபவங்களிலே ஆஸ்ரயித்தவர்கள் -இவர்கள் உகந்து அருளின நிலங்களில் ஆஸ்ரயித்தவர்கள் -என்றாய்த்து அங்கு உள்ளார் ஸ்லாகிப்பது –
முடி யுடை வானவர் -அவனோபாதியும் மதிப்பில் குறைவற்றவர்கள் யாய்த்து இவர்களை ஆதரிப்பார் -அபிஷேகம் அவனுக்கும் நித்ய ஸூ ரி களுக்கும் ஒத்து இருக்குமாகில் வாசி என் என்னில் -அவன் ரக்ஷணத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமைக்கு முடி சூடி இருப்பார்கள் –
முறை முறை எதிர் கொள்ள-பர்யாயமாக எதிர் கொள்ள -யத்ர பூர்வே ஸாத்யா என்றும் -அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தங்களுக்கு உத்தேசியரானவர்களுக்கு உத்தேச்யர்கள் ஆகிறார்கள் இ றே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்க்ருதமாய் –ஒக்கத்தை யுடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான திரு மதிலில் திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–-தங்கள் வரவால் யுண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த வடிவை யுடைய ஸ்ரீ யபதியதான பரம பதத்தில் புகுகைக்காக -வந்து கிட்டினார் என்றவாறே தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்கை –
—————————————————————-
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்–வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று–பரமபதத்தைச் சென்று கிட்டின அளவிலே திரு வாசல் காக்கிற முதலிகள் -ஸ்ரீ வைகுண்ட நாதனுடையார் எங்களுக்கு ஸ்வாமிகள் -எங்கள் பதத்தைக் கொள்ள வேணும் என்றாய்த்து அவர்கள் பாசுரம் -பயிலும் திருவுடையார் யாவராலும் எம்மையாளும் பரமர் -என்ற இவரைப் போலே யாய்த்து அங்குள்ளாரும் இருப்பது -திருவாசல் முதலிகள் எதிரே வந்து சத்கரித்து -கையைக் கொடுத்து -கொண்டு புக்கு தங்கள் கைபுடைகளிலே இருத்தி பிரம்பையும் கொடுப்பார்கள் ஆயத்து-சென்று புகுகிறவர்களுக்கும் கைங்கர்யமே உத்தேச்யம் -அங்கு இருக்கிறவர்களுக்கு கைங்கர்யமே யாத்திரை -ஆகையால் இவர்கள் கொள்வதும் அவர்கள் கொடுப்பதும் அது -புகுது என்றது -புகுதுக -என்றபடி
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-இவர்களால் ஸதக்ருதரான அளவிலே நித்ய ஸூ ரிகள் விஸ்மயப்படுவார்கள் —அமரரும் முனிவரும்–கைங்கர்ய தாரகரானவர்கள் –அமரர் -அதுக்கு ஷமர் அன்றிக்கே ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபடும் ஸ்வ பாவரானவர்கள் –முனிவர்கள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அடிமையில் ஒன்றும் குறைய நிற்க மாட்டாதாரும் -குண அனுபவத்துக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாத படியாய் இருப்பாரும் யாய்த்து -வியந்தனர் -விஸ்மயப் பட்டார்கள் –வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–சம்சாரத்தில் சப் தாதி விஷயங்களில் பழகிப் போந்தவர்கள் பரம பதத்திலே வந்து புகுந்து கைங்கர்யமே யாத்திரை யாவது –இது ஒரு பாக்ய பலம் இருந்த படியே -என்றாய்த்து அவர்கள் கொண்டாடுவது –
———————————————————————–
சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்–வைகுந்தம் புகுவது -மண்ணவர் விதியே என்று இவர்கள் சொல்லுகிற இது வார்த்தை என்று என்று வேறே சிலர் -இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்ய பலம் அன்றோ -என்பார்கள் -விஷயங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் இருந்து வைத்து -அநந்ய பிரயோஜனராய் பகவத் குண அனுபவம் பண்ணப் பெற்ற மஹா புருஷர்களாய் -விண்ணுளாரிலும் சீரியர் -என்கிறவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்யம் அன்றோ என்பார்கள் –-வைகுந்தம் புகுவது -என்றது அங்கு -இங்கு புகுந்தனர் என்கையாலே தங்கள் பாக்யத்தை காட்டுகிறது -/ நல் வேதியர்--உபநிஷத் பாகத்தில் பிரதிபாத்யரானவர்கள் -யத்ரர்க்ஷய–யத்ர பூர்வே -என்று ஓதப்படுபவர்கள் –
பதியினில்-எதிரே புறப்பட்டு ஆதரித்து தங்கள் கோயில்களிலே கொண்டு புக்கு
பாங்கினில் பாதங்கள் கழுவினர்–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –
————————————————————————-
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே எம்பெருமான் தானே வந்து எதிர் கொள்ள -அப்ராக்ருதரான அயர்வறும் அமரர்கள் என்றுமாம் –
மா மணி மண்டபத்து-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –
அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –
அடியரொடு இருந்தமை––அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இ றே இருப்பது –கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்--நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரி தொடங்கி சோலை செய்தால் போலே இருக்கை –
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –
———————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-