திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-7-

இப்படி அப்ரக்ருதிங்கதையான இப்பிராட்டி நெடும் போதோடு கூட உணர்ந்து பின்னையும் எம்பெருமானை காணப் பெறாமையாலே
அவனை ஒழியத் தரிக்க மாட்டாமை தன் பந்துக்கள் பக்கலிலும் கிரீட உபகாரணாதி களிலும் அத்யந்த விமுகையுமாய்-
எம்பெருமானைக் கண்டு அல்லாதது தரிக்க மாட்டாமையாலே தன் மரியாதைகளை அதிலங்கித்து தனியே திருக் கோளூர் ஏறப் புக
-சோக நித்திரை போய் உணர்ந்து இப்பிராட்டியை தன் மாளிகையில் காணாத திருத் தாயார் -இவள் திருக் கோளூரில் போனாள்-என்று
அத்யவசித்து-இவள் இங்கு இருக்கும் போதும் அவனாலே போது போக்கி இருக்கும் படியும் -அதி ம்ருது பிரக்ருதியாய் இருக்கிற இவள் அவ் வூரிலே
தனியே எங்கனம் போக்க கடவள் என்றும் -அங்கே சென்றால் அவ் வூரையும் அவனையும் கண்டால் எங்கனம் உடை குலைப் படக் கடவள் என்றும்
சொல்லா நின்று கொண்டு தன் பெண் பிள்ளையுடைய அவசாதத்தாலும் -அவளைத் தான் பிரிகையாலும் மிகவும் நோவு பட்டு சோகிக்கிறாள் –

——————————————————————-

இப்பிராட்டியுடைய திருத் தாயாரானவள் -தன் பிள்ளையை தன் மாளிகையில் காணாது ஒழிந்து-தன் மகள் ஆகையாலும் அவளுடைய ஸ்வ பாவ அனுசந்தானத்தாலுமாக -இவள் இங்கும் நின்றும் போய்ப் புகுமூர் திருக் கோளூரே-என்று அத்யாவசிக்கிறாள் –

உண்ணுஞ்  சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

பசியில் உண்ணக் கடவ சோறும் -தாஹத்தால் குடிக்கக் கடவ தண்ணீரும் -தின்னாது ஒழியில் தரியாத தசையில் தின்னக் கடவ வெற்றிலையுமான தாரகாதிகள் எல்லாம் எனக்கு என் ஸ்வாமியான கிருஷ்ணனே என்னா நின்று கொண்டு அவனைக் காணப் பெறாமையாலே கண் நீர் மல்கி –
அவனுடைய கல்யாண குணங்களையும் சம்பன்னனானவன் விரும்பி இருந்துள்ள ஊரையும் தனக்கு வழி போகைக்கு உறுப்பு யுண்டாம்படி வினவிக் கொண்டு என் பெண் பிள்ளை பூமியில் போகுமூர் திருக் கோளூரே -இது நிச்சிதம்-

———————————————————————

திருக் கோளூரிலே புக்க என் பெண் பிள்ளை மீள வருமோ -சொல்லி கோள் என்று பூவைகளை திருத் தாயார் கேட்க்கிறாள் –

ஊரும்  நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பேரும் தார்களுமே பிதற்ற-தன் படியைக் கண்டு அவனுடைய திரு நாமங்களையும் சிஹ்னங்களையும் அடைவு கெட்டுப் பிதற்றும் படி பண்ணி –
கற்பு வான் இடறி-கடக்க அரிதான தன் மரியாதையை த்ருணம் போலே பொகட்டு
சேரும் நல் வளம் சேர் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர்
-நல்ல சம்பத்தை யுடைய திருக் கோளூருக்கே போய்ச் சேரும் என் பெண் பிள்ளை -பூவைகாள் உங்களைக் காண என்றாகிலும் வருமோ -சொல்லி கோள் -போருங்கொல்-போக வல்லளேயோ -என்றுமாம் –
கொடியேன் -இப் பெண் பிள்ளையை பிரிந்த இன்னாப்பாலே கொடியின் -என்கிறாள் –

——————————————————————–

திருக் கோளூர் ப்ரத்யாஸன்னம் ஆனால் எங்கனே உடை படக் கடவள்-என்கிறாள் –

பூவை  பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

பூவை பந்து முதலான அழகிய உபகரணங்களை கண்டால் ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ஜியம் கண்டால் போலே இவளுக்கு அஸஹ்யமாய் அவற்றால் உள்ள ரசமும் பகவான் நாம உச்சாரணத்தாலே யாய் உஜ்ஜீவிக்கும் என் மகள் -இதுக்கு மேல் ஸ்ரமஹரமான நீர் நிலங்களை யுடைய திருக் கோளூருக்கே போய் -என் பாவை எம்பெருமானுடைய பிரத்யா சத்தியாலே  உடை குலைப்பட்டு -தான் நெடுநாள் அவனைப் பிரிந்து பட்ட பாடும் -அவன் கை விட்டு இருந்த படியையும் நினைத்து கோவைப் பழம் போலே இருக்கிற திருப் பவளம் துடிப்ப மிக்கு இருந்துள்ள நீரை உடைய கண்ணும்  இவளுமாய் என் படக் கடவளோ  –

————————————————————-

சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் அயல் சேரியில் உள்ளாரும்-அந்நிய ஸ்த்ரீகளும் இவளுடைய விருத்தாந்தத்தைக் கண்டு குண ஹீனை என்பரோ-இம் மஹா குணத்தை அறிந்து கொண்டாடுவாரோ என்கிறாள் –

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

கொல்லை-வரம்பு கடந்தாள்
சம்பத்தாலே மிக்கு அவன் கண் வளர்ந்த திருக் கோளூருக்கே அத்யந்த முக்தையான பெண் பிள்ளை தன்னுடைய மிருதுவான இடை துவள போய்ப் புக்காள்-

———————————————————

திருக் கோளூருக்கு அணித்தான திருச் சோலையையும் அங்கு உள்ள பொய்கை களையும்-அவன் கோயிலையும் கண்டால் எங்கனே உகக்குமோ என்கிறாள் –

மேவி நைந்து  நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து மிகவும் சித்திலையாய் விளையாட்டுகளிலும் மூளாள் -ப்ராப்த யவ்வனை அன்றிக்கே இருக்கிற பருவத்தில் இப்படி வி லக்ஷணையாய் இருக்கிற   இப் பெண் பிள்ளை இதுக்கு மேலே தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி யுடைய திருக் கோளூரிலே போய் –பூவியல் பொழில் -என்றும் பூத்து இருக்கும் பொழில் / ஆவிஉள் குளிர-மிகவும் கமர் பிளந்து இருக்கிற ஹ்ருதயம் உள் குளிர்ந்து இருக்கிற படி –

——————————————————————

திருக் கோளூரிலே சென்று எம்பெருமானுடைய ஸ்நேஹ பஹு ளமான வீஷீதாதிகளைக் கண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே மேன்மேல் என சிதிலையாக கடவள் ஆகாதே என்கிறாள்

இன்று  எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

தன்னைப் பிரிந்து நோவு படுகிற எனக்கு இத்தசைக்கு துணை அன்றிக்கே போன சிறுப் பெண்  பிள்ளை எனக்கு உதவாதத்துக்கு   மேலே தெற்குத் திக்குக்கு திலகம் போலே இருக்கிற திருக் கோளூரிலே போய்ப் புக்கு பெரிய பிராட்டியார் பக்கல் போலே தன் பக்கல் பிரணயி யானவள் –

———————————————————————-

இவள் பிரகிருதி மார்த்வத்தையும் எம்பெருமானைப் பிரிந்து சிதிலை யாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து இவள் புக்கால் படும்படியை அனுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்று புக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் –

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

பகவத் குண ஸ்மரணத்தாலே நீர் துளும்பா நின்ற கண்ணையும் -அனுசந்தானம் பண்ண ஒண்ணாத படி அறிவு கெட்ட மனசையும் உடையளாய் -அல்லாதார்க்கு போலே வ்யர்த்தமே போகிற காலம் அல்லாமையாலே சிலாக்கியமான பகலும் இரவும் அதிவ்யாமுக்தனே என்று கூப்பிட்டு -இதுக்கு மேலே ஒரு புருஷார்த்தம் தேடித் போய்
ஐஸ்வர்யம் மிக்கு அவன் கிடந்த திருக் கோளூருக்கே தன்னுடைய பல ஹானியாலே தளர்ந்து வாடி வாடி எங்கனே போய் புக்க கடவள்-

———————————————————-

திருக் கோளூரிலே சங்கத்தால் என்னை பொகட்டுப் போன என் பெண் பிள்ளை அஸ் சங்கமே துணையாக அங்கே போய் புக வல்லளேயோ என்கிறாள் –

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

துவண்டு நுண்ணியதாய் இருக்கிற இடையிலே தன்னுடைய ச்ராந்தியாலே கையை வைத்து மிகவும் அவசன்னையாய்-
தன்னோட்டை சம்ச்லேஷத்தால் துவண்ட திருமேனியை யுடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகன் ஆனவன்
இது திருவாய் மொழியில் பல இடத்திலும் என் பெண் பிள்ளை -என்று சொல்லுகைக்கு காரணம் அவள் நசை அற்ற பின்னும் அவள் மேல் தனக்கு நசை அறாமை-

—————————————————————–

எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்-

காரியம்  நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

முதலிலே ஒன்றும் அனுசந்திக்க மாட்டாள் –அங்கனம் இருக்கச் செய்தே விலக்ஷணமான அவ்வவ பதார்த்தங்களை ஒருகால் அனுசந்தித்தாள் ஆகில் என் கிருஷ்ணனுக்கு என்று மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே நீராக நிற்கும் இவள் இங்கு அவனை நினைத்து இருக்கும் இருப்புக்கள் எல்லாம் தவிர அதுக்கு மேல் ஒரு புருஷார்த்தம் தேடி –
தங்கள் சேரியில் உள்ளார் பல பழிகளை சொல்லி கோஷியா நிற்க திருக் கோளூரிலே பெண் பிள்ளை போனாள் -திருக் கோளூருக்குப் போகையாலே தன் பெண் பிள்ளையே யாகிலும் நடந்தால் என்று ச பஹு மானமாகச் சொல்லுகிறாள்
எம்மை தனக்கு பிரதி கூல கோடியிலும் நினைத்திலள்-

——————————————————————

குடிக்கு வரும் பெரும் பழியைப் பாராதே திருக் கோளூரிலே புக்கு அவனை ஒரு காலும் விடுகின்றிலள் என்கிறாள் –

நினைக்கிலேன்  தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

புகுந்த வ்ருத்தத்தை நினைக்கவும் க்ஷமை ஆகிறிலன்-தெய்வங்காள் என்று தன் ஆற்றாமையால் சொல்லுகிறாள்
விசாலமான திருக் கண்களை உடைய சிறுப் பெண் பிள்ளை இங்கு இருக்கிற இருப்புக்கு மேலே ஸர்வேச்வரத்வ ஸூ சகமான அழகிய திருக் கண்களை உடையவனை ஒரு க்ஷணமும் விடுகிறிலள்
குடிக்கு வருகிற பெரும் பழியையும் பாராதே இத்தை எல்லாம் கடலிலே கவிழ்த்து அவன் கண் வளருகின்ற திருக் கோளூருக்கே போனாள் –

—————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்  –

வைத்தமா  நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

ஆயாசப் படாதே உபயோகம் கொள்ளலாம் படி வைத்த மஹா நிதி போலே இருக்கிற பிரதிகூல நிராசன ஸ்வ பாவனான எம்பெருமானையே சொல்லி ஆர்த்தியோடே கூப்பிட்டு
தாம் விரஹ தசையை அனுசந்திக்க ஷமர் அல்லாத படி பகவத் விஷயத்திலே ஏகாக்ரர் ஆகையால் தமக்குப் பிறந்த தேற்றத்தால் சம்ருத்தமான திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் திருக் கோளூரிலே அருளிச் செய்த இது திருவாய் மொழியை புத்தி பூர்வகமாகச் சொல்ல வல்லார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: