குரவை ஆய்ச்சியரிலே ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பரவசராய்
செல்லுகிற ப்ரீத்யனுபவம் கலங்கி நோவு படுகிற ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர
-பகவத் குண சேஷ்டிதாதிகளாலே ஈடுபட்டு இருக்கிற தம்முடைய தசையை அனுசந்தித்து இத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
இப்படி குரவை ஆய்ச்சியரிலே கிருஷ்ண குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து மிகவும் ப்ரீதராய்
பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபேக்ஷை பண்ணி -அது பெறாமையாலே தமக்கு ஓடுகிற தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்றுமாம் –
திருத் தொலை வில்லி மங்கலத்தில் சம்பத்திலும் -அங்கு நின்று அருளுகிற தேவபிரானுடைய திரு அழகிலும் அகப்பட்டு
பண்டு பழகின பழக்கத்தின் மிகுதியால் மிகவும் பிரவண சித்தையாய் இருக்கிற பிராட்டியைக் கண்டு
-இவளுக்கு அவன் பக்கல் உண்டான அதி மாத்ர ப்ராவண்யத்தை தவிர்க்கையாலே உபாக்ராந்தைகளான திருத் தாய்மாரைக் குறித்து
இப்பிராட்டி யுடைய கருத்து அறிவாள் ஒரு தோழி -இவள் திருத் தொலை வில்லி மங்கலம் கண்டஅன்று தொடங்கி
அரவிந்த லோசனனை ஒழிய புறம்புள்ளது ஒற்றது எல்லாம் அற்று -அவனே எல்லாமாகக் கொண்டு அவன் பக்கலிலே
இவளுடைய மநோ வாக் காயங்கள் மிகவும் பிரவணம் ஆயிற்று -இப்படி விளையும் படியான இவள் பிரக்ருதியை அறிந்து வைத்து
இவளைத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே நீங்களே கொண்டு புக்கு -அங்குத்தைப் படி காட்டிக் கொடுத்து இனி
மீட்க நினைத்தால் முடியுமோ -ஆனபின்பு இவள் பக்கல் ஆசையை அறுங்கோள் என்கிறாள் –
————————————————————–
திருத் தாய்மாரைக் குறித்து இவளுடைய தோழியானவள் இவள் பிரகிருதி அறிந்து வைத்து இவளுக்கு திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின நீங்கள் ஹித உபதேசம் பண்ணினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள் –
துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
துவளில்மா மணி-பழிப்பு அற்று சிலாக்கியமான மணி
தொழும்-இவளை -தொழுகையே ஸ்வ பாவமான இவளை
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்-குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–
அதி தவளமாய் அழகிதாய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்றும் திரு வாழி என்றும் -தாமரைத் தடாகம் போலே இருக்கிற திருக் கண்கள் என்றும் சொல்லி பின்னையும் இவற்றை காண வேணும் என்று சொல்ல உபக்ரமித்து -மாட்டாதே குவளை போலே இருக்கிற அழகிய கண்கள் நீர் மல்கும் படியாக தன்னுடைய துக்கத்தை வாய் விட்டுச் சொல்ல மாட்டாதே நிரந்தரமாக குமுறா நின்றாள்-
—————————————————————
இவளைத் திரு தொலை வில்லி மங்கலத்தில் திரு நாளிலே கொடு புகுவார் உண்டோ -என்கிறாள் –
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதே ஒன்றாய் எழுகிற த்வனியை உடைத்தான திரு நாளில் ஆரவாரத்தை யுடைத்தான திருத் தொலை வில்லி மங்கலத்திலே தான் அறியாது இருக்கிற இவளை நீங்களே கொடு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
இவளுடைய இனிய பேச்சுக்கள் கேட்க ஆசை இல்லாமையால் நீங்கள் இவள் அகலும்படி பண்ணினி கோள்
திமிர்கொ டாலொத்து நிற்கும் -ஸ் த்பதை யானால் போல் இருக்கும்
மற்றிவள் தேவ தேவபிரான்என்றே-நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–
பின்னையும் இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் எம் பெருமானுடைய திரு நாமத்தை சொல்ல வென்று உபக்ரமித்து முடிய சொல்ல மாட்டாதே கண்கள் நீர் மல்கி உள்ளோடுகிற அவசாதத்தின் மிகுதியால் சிதிலையுமாய் நீராகா நின்றாள் –நிமிகை –உதடு நெளிக்கை-
————————————————————–
திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கொடு போகிற நீங்கள் திருச் சோலையிலே உள்ளிட்டு கொடு போய் கெடுத்தி கோள் -என்கிறாள் –
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
திரு பொருநல் கரையை விழுங்கி குளிர்ந்த திருச் சோலையையும் சிரமஹரமான நீர் நிலத்தையும் யுடைய திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
ஒருத்தி பேச்சே -என்று நாடு எல்லாம் உரைக்கும் படி இருந்த இந்த மொழியாளை -பொருள் இன்றி உரையே கொள்ளப்படும் மழலை வார்த்தை உடையாள் என்றுமாம் –
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்-நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–
தன்னுடைய சந்நிதானத்தாலே களித்து திரை மோதா நின்றுள்ள திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் -திக்குகளோடே கூடின ஜகத்தை எல்லாம் அநாயாசேன வளர்ந்து அளந்து கொண்டு அருளின படியும் -பசு மேய்த்து அருளின படியும் -ஆகிற ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்திகளையே அடைவு கெடச் சொல்லி தன் கண்ணில் பரப்பு எல்லாம் நீர் மல்க பிதற்றவும் க்ஷமை இன்றிக்கே நிற்கும் –
—————————————————————–
திருத் தொலை வில்லி மங்கலத்தையும் -அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமஷ்டியையும் யாதொருநாள் கண்டாள்-அன்று தொடங்கி தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள் –
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் தங்கள் இட்ட வழக்கு ஆகையால் வியாச பதம் செலுத்த வல்லவராய் உள்ளவர்கள் அந்த வேதார்த்த பூதனான எம்பெருமானைப் பெற்று வாழுகிற திருத் தொலை வில்லி மங்கலத்தை கண்ட பின் ஒன்றும் தடை நில்லாள் -அன்னைமீர் இவள் நம்மை கை கடந்தாள் கிடி கோள் –
சொல்லும் சொல் எல்லாம் திரு நாமங்களே யாய் செல்லா நின்றாள் –வருத்தம் ஒன்றும் இன்றிக்கே அத் திருநாமங்கள் வழியே அவன் அழகையும் அவன் குணங்களையும் அனுசந்தித்து மேன் மேல் என ப்ரீதையாய்-அந்தகரணமும் ப்ரீதமாய்-அந்த ப்ரீதி அதிசயத்தாலே அழியா நிற்கும் –
—————————————————————–
இவளுடைய ஸ்வ பாவத்தை அறிந்து வைத்து இவளைத் திரு தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு எம்பெருமானுடைய அழகைக் காட்டிக் கொடுத்து கெடுத்தி கோள் என்கிறாள் –
குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-
குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்-
தன்னுடைய மார்த்தவத்தாலே நையும் ஸ்வ பாவையாய் நிரதிசய தீப்தி யுக்தமான திரு முகத்தை யுடையளாய் -அதி சபலையுமாய் இருக்கிற இவளை திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொண்டு புக்கு -வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸை யுடையனாய் -சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய்க் கண்களைக் காணவே அறிந்து கொள்ளலாம் படியான தண்ணளியையும் உடையனாய் இருக்கிறவனுடைய -ஒருவருக்கும் கோசரம் அன்றிக்கே இருக்கிற இருப்பில் அழகையும் நீங்களே காட்டிக் கொடுத்து கோளே
இழைகொள் சோதி-ஆபரணத்தின் ஓளி தன்னுள்ளே அடங்கின சோதி என்றுமாம்
இருந்தமை-அவன் படிகளை எல்லாம் என்றுமாம்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்-நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.
அன்னைமீர் வர்ஷ தாரை போலே மிக்கு இருந்துள்ள கண்ண நீரோடு அன்று தொடங்கி மயங்கி -அவ்விருப்பிலும் பகவத் குணங்களிலே உட்ப்புகா நின்ற சிந்தையை உடையளாய்த் திருத் தொலை வில்லி மங்கலத்தின் திக்கை ஏகாக்ர சிந்தையாய்க் கொண்டு நோக்கி அபி நிவேசத்தாலே தொழா நிற்கும்-
———————————————————————
இக்கலக்கத்திலும் திருத் தொலை வில்லி மங்கலத்தை நோக்கினாள் ஆகில் மற்று ஓர் இடமும் நோக்காள் என்கிறாள் –
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-
நோக்கும் பக்கமெல்லாம் – பார்த்த பார்த்த இடம் எல்லாம் /வாய்க்கும்-ஸம்ருத்தமாகை / நோக்குமேல் -நோக்க க்ஷமை யாகில் –
வைகல் நாடொறும்-வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே –
என்றும் ஓக்க நிரந்தரமாக இவள் பகவத் ஸுந்தரியாதிகளாலே-வித்தை யாகையாலே வாயில் புறப்படும் சொல்லும் திரு நாமமே
வைகல் நாடொறும்-தாழ்த்து விடுகிற நாள் தோறும் என்றுமாம்
அன்னைமீர்-என்ற சம்போதானத்துக்கு கருத்து ஒருத்தி படி கண்டி கோளே -என்கிறது –
——————————————————————–
எம்பெருமானுடைய சிஹ்னங்களும் திரு நாமங்களும் அடைய இவள் வாயிலே பட்ட பின்பு நிறம் பெற்றன என்கிறாள் –
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-
அன்னைமீர் அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து-என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்–அழகிய மாமையுடைய மயில் போலே இருக்கிற இச் சிறுப் பெண் பிள்ளை நம்மைக் கை கடந்து அந்தரங்கை யாகக் கொண்டு இருக்கிற நான் சொல்லிலும் திருத் தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய மற்று ஒன்றும் கேளாள்-
என்ன வார்த்தை-என்றது ஏதேனும் ஒரு வார்த்தை யாகிலும் கேளாள் என்றுமாம் –
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?-–
-பண்டு பண்ணின பாக்ய பலமோ -எம்பெருமான் தன் வடிவு அழகைக் காட்டி பண்ணின ஆச்சர்யமான செயலோ
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.-
அவனுடைய திரு வாழி தொடக்கமான சிஹ்னங்களும் குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான திரு நாமங்களும் நிறம் பெறும்படி இவள் வாயன் ஆயின –
—————————————————————
திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் பிராட்டிக்கு உண்டான சைத்திலயத்தைச் சொல்லுகிறாள் –
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-
அங்கு உள்ளார் பரிக்ரஹை யாலே நிறம் பெற்ற வேதமும் -வைதிக சமாராதானங்களும் -பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழ்கிற திருப் பொருநல் வடகரையான திருத் தொலை வில்லி மங்கலத்தை -வேதமும் வைதிக சமாராதனங்களும் -அத்தால் வந்த சம்பத்துமானவை மிக்கு இருந்து வாழ்ந்து சொல்லுகிற திருத் தொலை வல்லி மங்கலம் என்றுமாம் –
கறுத்து பெருத்து இருக்கிற திருக் கண்களை யுடைய இவள் திருவடி தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் நெடும் போதோடு கூடி வருந்தி அரவிந்த லோசனன் என்று இப்படி நிரந்தரமாக சொல்லி அவ் வழியாலே அவனுடைய அழகையும் குணங்களையும் நினைத்து சித்திலையாய் நோவு படா நின்றாள்-
——————————————————————-
இப்பெண் பிள்ளையுடைய மநோ வாக் காயங்கள் மூன்றும் எம்பெருமான் பக்கலிலே மிகவும் பிரவணம் ஆயிற்றன என்கிறாள் –
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-
இவள் நாள் தோறும் நோவு பட்டு எம்பெருமானுடைய குணங்களை வாய் வெருவி மிகவும் கண்ண நீர்கள் பாய மரங்களும் இரங்கும் படி திரு நாமத்தைச் சொல்லி கூப்பிடா நின்றாள்
கேசி ஹந்தாவான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம் என்று தன்னுடைய அழகிய கைகளை கூப்பித் தொழும் திருத் தொலை வில்லி மங்கலம் என்ன கற்ற பின்பு
அவ்வூர்த் திருநாமம்-என்பான் என் என்னில் பெண் பிள்ளை திருத் தொலை வில்லி மங்கலம் என்றால் உள்ள இனிமை தன் வாயாலே சொன்ன இடத்திலே பிறவாமையாலே
———————————————————————–
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-
இவள் எம்பெருமான் பக்கலிலே அதி பிரவணையாய் இருக்கிற படியையும்-இவளுக்கு அவனால் அல்லது செல்லாது இருக்கிற படியையும் கண்டு இவளோடு ஓக்க மற்று சங்கிக்க ளாவார் ஒருவரும் இல்லாமையால் பிராட்டிமாரில் ஒருத்தியோ-என்று சங்கிக்கிறாள் -இவர்களில் ஒருத்தியோ என்று சங்கித்து -அவர்களுக்கும் இவள்படி இல்லாமையால் லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் –
இவள் திரு நாமத்தை சொல்லி நிரந்தரமாக கூப்பிடா நின்றாள் -இது என்ன ஆச்சர்யம் –
இப் பெண்பிள்ளையை கிடைக்கும் என்று முற்கோலி வந்து பதறி – நின்று அருளியும்-இருந்து அருளியும் – நிரந்தரமாக வர்த்தித்து அருளுகிற திருத் தொலை வில்லி மங்கலத்தை தலையால் வணங்கும் -அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே இவளுக்கு மநோ ரதமும் –
—————————————————————
நிகமத்தில் இது திருவாய் மொழி யில் கருத்தை வ்யக்தம் ஆக்கா நின்று கொண்டு -இத்தைக் கற்றவர்கள் இதுக்கு அனுரூபமான கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் என்கிறார் –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-
மநோ வாக் காயங்களாளினால் திருத் தொலை வில்லி மங்கலத்தை எம்பெருமானையே எல்லா உறவுமுறையும் என்று பற்றவும் செய்து -திரு நகரியில் உள்ளார்க்கு சர்வவிதமுமான ஆழ்வார் அருளிச் செய்த
முந்தை ஆயிரம்-அர்த்த பழைமையாலே பழையதான ஆயிரம் –
——————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply