திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-5-

கீழ் கிருஷ்ண அனுபவமே பண்ணினார் -அந்த ப்ரீதி உள் அடங்காமையாலே பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து
அது பெறாமையாலே தமக்கு பிறந்த பாரவஸ்யத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் என்று பூர்வர்கள் நிர்வாகம் –
பட்டர் -கீழே நிரவதிக ப்ரீதியாய் சென்றது -அதுக்கும் இதுக்கும் சேர்த்தி இங்கனம் ஆக ஒண்ணாது
-தண்ணீர் குடியா நிற்க விக்கினால் ரஸா அனுபவம் கலங்கி நோவு படுமா போலே -செல்லுகிற ப்ரீத்யனுபவம் கலங்கி
பிறந்த பாரவஸ்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-அதாவது
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர பகவத் விஷயத்தில் பூர்ண அனுபவம் இன்றிக்கே இருக்கையாலே
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார் –
இது திருவாய் மொழிக்கு கீழ் எல்லாம் -சர்வேஸ்வரனைப் பேசினார் -இத்திரு வாய் மொழியிலே தம்மை பேசுகிறார் –
யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை விளாக்குலை கொண்டு -பேசுகைக்கு தாம் அல்லது இல்லாதா போலே –
இவ்விஷயத்தில் தம் விஷயத்தை பேசுகைக்கும் தாம் அல்லது இல்லை யாயிற்று –
தலை மகளாயும்-திருத் தாயாரையும் -தோழியாயும் பிறந்த அவஸ்தைகள் அடங்க இவர் தமக்கே பிறந்த
தசா விசேஷம் என்னும் படி இ றே இவரது பிரணவ அதிசயம் –
ப்ராவண்யத்தை விளைக்கிற திருத் தாயாரும் தோழியும் நிஷேதிக்கிறது சாதனா புத்த்யயே என்று இறே -என்று
–இவள் மேல் விழுகிறது ப்ராப்ய புத்தியால் -இந்த ப்ராவண்ய அதிசயத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
திருத் தொலை வில்லி மங்கலத்தில் நின்று அருளினை தேவபிரானுடைய அழகிலும் -அவ்ஊரில் சம்பத்திலும் ப்ரவண சித்தையாய் இருப்பாள்
ஒரு பிராட்டியை -அதி பிராவண்யம் ஆகாது என்று மீட்க நினைத்த திருத் தாய்மாரை இவள் கருத்து அறிந்த தோழி
-உங்களை இவளை மீட்க முடியாது -என்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஜனக ராஜன் திருமகள் திருவவதரித்த அளவிலே ஜ்யோதிஷரைக் கேட்க
ஸார்வ பவ்மனுக்கு புக கடவள்–கனக்க ஜீவிக்கும் – நடுவே வனவாச கிலேசமும் அனுபவிக்க கடவள் -என்றார்கள்
அது போலே இவளுக்கும் ஒரு அபம்ருத்யு உண்டு -அதாவது திருத் தொலை வில்லி மங்கலத்தில் இவளைக் கொண்டு போகாது ஒழியில்
இவள் ஜீவிக்கும் என்றார்கள் -அவ் ஊரில் கொண்டு புகாத படி அல்லாமையாலே கொண்டு புக்கார்கள்
-அங்கே அவகாஹித்த படியைக் கண்டு மீட்கப் புக -இனி இவளை மீட்க முடியாது -நீங்களும் இவள் வழியே ஒழுக பாருங்கோள் -என்று
தோழி வார்த்தையாகச் செல்லுகிறது –
இத்தால் சேஷத்வம் சத்தா ப்ரயுக்தமானவோபாதி ப்ராவண்யமும் சத்தா ப்ரயுக்தம் என்னும் இடத்தை நிர்வஹிக்கிற தாயிற்று –

——————————————————————-

இவள் பிரகிருதி அறியாதே திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின பின்பு உங்கள் ஹித வசனத்துக்கு இவள் மீளுமோ -என்கிறாள் –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
குற்றம் அற்று இருக்கையாலே பெரு விலையனான மணியாலே செய்த மாடம் –மணிக்கு தோஷ பாவம் -வந்து கழித்தது அன்றிக்கே -ப்ராகபாவமும் இன்றிக்கே -அத்யந்த பாவமாய் இருக்கை -முக்தனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போல் அன்றிக்கே -ஈஸ்வரனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே இருக்கை –திவா ராத்ர விபாகம் பண்ண ஒண்ணாத படியான பிரகாசமான மாடம் –
ஓங்கு –ஆகாச அவகாசம் அடையும்படியான மாடம் -கலந்து பிரிகிற போது-ஊர் எது என்ன -அணிமை சொல்லுகைக்காக அவ் ஊரின் மாடங்களின் நிழல் அன்றோ இது என்றான் ஆயிற்று –
தொலைவில்லி மங்கலம்தொழும் இவளை –
பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது கான் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்
இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு
அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ
உமக்காசை இல்லை விடுமினோ;
வகுத்தவன் கைக்கு கொண்டால் உமக்கு ஆசை இல்லை –ஹிதம் சொல்லுவதை
பெற்ற எங்களை விடுங்கோள் என்கிறது எத்தைக் கொண்டு என்ன
தவள ஒண்சங்கு சக்கரமென்றும்
ஸ்யாமமான திரு நிறத்துக்கு பரபாகமான திரு நிறத்தை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்
உண்பது சொல்லில் உலகலந்தான் வாய் அமுதம் என்று பிராட்டிமாரும் ஆசைப்பட்டு சீறு பாறு என்னும் செல்வம் உடையவன்
அங்கனம் விசேஷணம் இட்டுச் சொல்ல ஒண்ணாத திரு வாழி
என்றும் -இவற்றைக் காண வேணும் என்னுதல் –இவற்றோடு வர வேணும் என்னுதல் -சொல்ல மாட்டு கிறி லள் -பல ஹானியாலே
தாமரைத் தடங்கண் என்றும்-தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய்-போக்தாக்கள் அளவன்றிக்கே இரண்டு ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்கள்
என்றும் என்றும் என்கையாலே துர்பலன் மலையை எடுத்தால் போலே இருக்கிற படி
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–
குவளையும் ஒப்பாக மாட்டாத அழகிய கண்கள் நீர் மல்கும் படியாக -தாமரைத் தடங்கண் நீர் மல்க பிராப்தமாய் இருக்க இவள் கண் நீர் பாய்வதே –இவள் ஜிதந்தே என்பது கண்ண நீரால் யாயிற்று -கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -இவளை மீட்கப் போமோ
நின்று நின்று குமுறுமே.–கன்றைக் கிட்டு கட்டி வைத்தால் ஸூ ரபி படுமா போலே படா நின்றாள் -பெரு வெள்ளத்தில் சுழிக்குமா போலே அகவாயில் உள்ளது வெளியிட மாட்டாதே நின்று சுழிக்கிற படி
உகும் இறும் என்றால் போலே சிலர் சொன்னார்கள் -அவர்கள் இவளுக்கு ஓடுகிற பாவ வ்ருத்தி அறியாமையால் சொல்லுகிறார்கள் -இவள் இப்படி அவகாஹித்த பின்பு மீட்கப் பாராதே பின் செல்லப் பாருங்கோள் என்கிறாள் –

——————————————————————–

அவ்ஊரில் கொண்டு புக்கத்துக்கு மேலே திரு நாளிலே கொண்டு புகுவார் உண்டோ என்கிறாள் –

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம்
ஓத்துச் சொல்வார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவாராய் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வனியைக் கொண்டு திரு நாளிலே ஆரவாரம்
பரமபதத்தில் கொண்டு புக்கி கோளாகிலும் மீட்கலாயிற்று
கொண்டு புக்கு-இவள் அறியாதே இருக்க நீங்களே கொண்டு புக்கு –
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
இவள் பேச்சைக் கேட்டால் போன உயிரும் மீளுமாயிற்று -மென் மொழி -அம்ருதத்தில் வியாவ்ருத்தி-ஸ்ரவண யோக்யமாய் இராதே அம்ருதம்
மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு இருக்குமவன் பெற்றுப் போனான் -நீங்கள் ஆசை இல்லாமையால் அகற்றினி கோள் -தம் தாமுக்கு அனர்த்தத்தை தாம் தாமே விளைத்துக் கொள்ளுவார் உண்டோ -அகற்றுகை யாவது –அகலும் படி பண்ணினி கோள் என்கை –அதாவது இவ் ஊரில் புக்க பின்பு இவர்களோடு வார்த்தை சொல்லாத தவிர்ந்தாள் யாயிற்று
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
ஸ்தபதை யானால் போலே இருக்கும் -வியாபார க்ஷமை இன்றியே இரா நின்றாள் -ஸ் தப்தோ சாஸ் யுத தாமாதேச மபிராஷ்ய -என்கிறபடியே பரிபூர்ண ஞானரைப் போலே இரா நின்றாள்-
மற்றிவள்–வேறு இவள் வார்த்தை சொல்லப் புக்காள் ஆகில் –
தேவ தேவபிரான்என்றே-இங்கே கண்டாலும் அயர்வரும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து ஸூலபனானான் -என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது
என்றே நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
அந்த சீலவத்யையை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே உதடு நெளிக்கும்-உதடு நெளிக்கிற வாயோடு கண்ண நீர் மல்க –
நெக்கு -சிதலையுமாய் –
ஒசிந்து -பரவசையுமாய் –
கரையும் -நீராகா நின்றாள்
நெக்கொசிந்து கரையுமே.-பெரு வெள்ளத்தில் கரையானாது நெகிழ்ந்து ஒட்டு விட்டு ஒசிந்து பொசிந்து அவயவியாகாத படி கரைந்து போமா போலே அழிந்து போகா நின்றாள் -இப்படி இவள் கரையா நிற்க வன் நெஞ்சரான நாம் இதுக்கு பாசுரம் இடுவது மீட்க்கத் தேடுவது ஆகா நின்றோம் இ றே-

———————————————————————-

திருநாளில் தான் கொண்டு போகிறி கோள் -திருச் சோலை உள்ளிட்டு இவளை கொண்டு போய் கெடுத்தி கோள் -என்கிறாள் –

கரைகொள்  பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
திருப் பொருநல் கரையை விழுங்கி பரந்து இருந்துள்ள சோலையையும் நீர் நிலங்களையும் யுடைத்தான திருத் தொலை வில்லி மங்கலத்திலே இவளைக் கொண்டு புக்கு -போகிற நீங்கள் திருச் சோலையூடே கொண்டு போக வேணுமோ
உரைகொள் இன்மொழி யாளை
கேட்டார் அடங்க இது ஒரு பேச்சே என்று கொண்டாடும்படியான இனிய மொழியை யுடையவள் என்னுதல் -அர்த்தத்தில் இழியா வேண்டாதே சப்தமே அமைந்து இருக்கும் என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –என்று நின்றார் நின்ற துறைகளில் ஈடுபடும்படி இருக்கை –மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல் -உரை என்று ஸ்ரீ ராமாயணமாய் அது குத்துண்ணும் படி இருக்கும் என்னுதல்
நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
அவ் வூரில் கொடு புகுகையும் இவள் பக்கல் நசை அறுகை என்றும் பர்யாயம் அன்றோ -இவளை வேண்டாமை இ றே கொடு புக்கது
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
வ்யூஹ விபவங்களையும் இங்கேயே அனுபவிக்கும் படி இ றே இவள் அவகாஹித்தது-ஸ்வ ஸ்பர்சத்தாலே திரைக் கிளர்த்தியை யுடைத்தாய் களித்து வருகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்றும் -பரமபதத்தை விட்டு ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க்கைக்காக வந்து கிடக்கிற நீர்மையிலே சிதிலை யாகா நின்றாள்
மஹா பலியால் பூமி அபஹ்ருதை யாயிற்று என்று கேட்டவாறே அப்படுக்கையில் பொருந்தாதே திக்குகளோடே கூடின பூமியை அநாயாசேன எல்லை நடந்து கொண்டதும் -நிரைகள் மேய்த்ததுமே
அது பரதசை என்னும்படி கோப சஜாதீயனாய் கையிலே கோலைக் கொடுத்து பசு மேய்த்துவா என்னலாம் படியான நீர்மையையும் அனுசந்தித்து -அப்படிப்பட்ட ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்திகளை
பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.
ஜாமதக்கன யஸ்ய ஜல்பத-என்கிறபடியே அடைவு கெடச் சொல்லி -இக்கண்ணில் பரப்பு அடைய நீர் மல்கும் படி -பிதற்றவும் க்ஷமை அன்றிக்கே ஸ்தப்த்தையாய் இரா நின்றாள்-

————————————————————

அவ் வூரையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கண்ட பின் தடை நிற்கை தவிர்ந்தாள் -என்கிறாள் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

நிற்கும் நான்மறை -அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –
வாணர் -வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்
வாழ்தொலை வில்லி மங்கலம்
வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்
கண்டபின்-அவ் வூரில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்து கெடுத்தி கோள்
அற்க மொன்றும் அறவுறாள் –
அற்கம் -அல்குதல் அடங்குதல் தாயார் சொல் வழி வருமத்தை ஒன்றையும் அறவிட்டாள்
மலிந் தாள்கண் டீர்-இவளுடைய பகவத் ப்ராவண்யம் எனக்குத் தெரியாதபடி விஞ்சினாள் கிடி கோள்
இவள் அன்னைமீர்!-மீட்க்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாய் சொன்ன என்னோடு வாசி இல்லை தெரியாமைக்கு -நித்ய ஸூ ரிகள் யாத்திரை சம்சாரிகளுக்கு தெரியில் அன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
சொல்லும் சொல் எல்லாம் திரு நாமமே யாய் -இது தன்னிலும் வடிவு அழகுக்கும் ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கும் வாசகமான திரு நாமங்களையே சொல்லா நின்றாள் -கிருஷ்ணன் ஆகில் ஆஸ்ரித பாரதந்தர்யம் பிரசித்தம் இ றே -பிரான் -உபகார சீலன் –
என்றும் ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.-
திருநாமங்களை இடைவிடாதே செல்லா நின்றால்-இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள்-
ஒற்கம் -ஒல்குதல்-அதாவது ஒடுங்குதல் -இளைப்பு
திரு நாமங்கள் வழியே அவன் அழகையும் குணங்களையும் நினைந்து மேன் மேல் என ப்ரீதையாய்
உண்மகிழ்ந்து குழையுமே.-– அந்தகாரண ப்ரீதி அதிசயத்தாலே ஆஸ்ரயம் அழியா நிற்கும்-

———————————————————-

இவள் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தே -தேவ பிரானுடைய அழகைக் காட்டிக் கொடுத்து கோளே -என்கிறாள் –

குழையும்  வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

குழையும் வாண்முகத் தேழையைத்
ஒரு சம்ச்லேஷ விஸ்லேஷம் வேண்டாதே ஸ்வபாவ சுத்தமான மார்த்தவத்தாலே நையும் ஸ்வ பாவையாய் -உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையும் -என்கிற பகவத் அனுபவத்தால் ஒளியை யுடைத்தான முகத்தை யுடையளாய் -கிடையாது என்றாலும் மீள மாட்டாத சாபலத்தை யுடையவளை
தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
பெருக்காற்றிலே கொடு புகுவாரைப் போலே திருத் தொலை வில்லி மங்கலத்தில் கொடு புக்கு -அது தனக்கு மேலே ஆழம் காலிலே கொடு புகுவாரைப் போலே அங்கு இருந்த இருப்பைக் காட்டினீர்
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாய் இருக்கை என்னுதல் -வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸ் என்னுதல் -ஆபரண ஓளி தன்னுள்ளே அடங்கும்படி இருக்கும் இருக்கும் சோதி என்னுதல்
செந்தாமரைக்கண் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் இருக்கும் திருக் கண் -அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான கண்கள்
பிரான் -பக்தானாம் என்கிற வடிவு
இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் -கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையாரே நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை
காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே -நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
வர்ஷ தாரை போலே மிக்க கண்ண நீரை யுடையளாய் இரா நின்றாள் -காட்டின உங்களை போலே குறி அழியாதே இருக்கிறாளோ -ஏழை என்ற இடத்தை மூதலிக்கிறாள் –அன்று தொட்டும் –நீங்கள் காட்டின அன்று தொடங்கி –மை யாந்து -மயங்கி -குழையும் -என்கிற இடத்தை மூதலிக்கிறாள்
இவள் நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.
அவன் குணங்களில் உட்ப்புகா நின்ற நெஞ்சை யுடையவள் -ஸ்வரூபத்தையும் ஆத்மகுணத்தையும் ஒழிய வடிவு அழகிலே இடம் கொள்ளா நின்றாள்
அன்னைமீர் -இவளை மீட்கப் பார்க்கிற அளவு இ றே உங்களது –அத்திசை உற்று நோக்கியே.-தொழும் -அவ் வூரின் திக்கை  ஏகாக்ர சிந்தையாய் நோக்கித் தொழா நின்றாள் –

—————————————————————–

கலக்கத்தாலே முதலிலே பார்க்க மாட்டாள் -பார்த்தாள் ஆகில் மற்று ஓர் இடமும் நோக்காள் -என்கிறாள் –

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

நோக்கும் பக்கமெல்லாம் -பார்த்த பார்த்த இடம் எல்லாம் -பொருநல் நோக்கும் பக்கம் எல்லாம் -என்று பாடுவாரும் உண்டு
கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை-வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்-
கரும்புக்கும் அத்தோடு கூட எழுந்த செந்நெலுக்கும் செந்தாமரை யானது நிழல் செய்யா நின்றது -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்கிறபடியே
வாய்க்கும் -சம்ருத்தமாம் -என்னுதல் — இட்டது எல்லாம் சதா சாகமாகப் பனைக்கும் -என்னுதல் –
சிரமஹரமான திருப் பொருநலின் வடகரையில் நகரங்களுக்கு உண்டான சிறப்புக்களில் ஒன்றும் குறையாத அந்த வூரை
நோக்குமேல் -அத் திசையல்லால் மறு நோக்கிலள்-
-முதலிலே பார்க்க மாட்டாள் -பார்த்தாள் ஆகில் அத்திக்கை யல்லால் வேறு ஒரு திக்கை நோக்கிகிறிலள்
வைகல் நாடொறும்-கழிகிற நாள் தோறும் -என்னுதல் -தாழ்த்து விடுகிற நாள் தோறும் என்னுதல் –
வாய்க்கொள் வாசகமும் -சொல்லும் வார்த்தையும் –
மணி வண்ணன் நாமமே -குண விஷயம் ஆதல் -விபூதி விஷயம் ஆதல் அன்றிக்கே -அழகுக்கு வாசகமான திரு நாமங்களே இவள் சொல்லுகிறது
இவள் அன்னைமீர்!–இவ்விஷயத்தில் இவள் அவகாஹித்த படி கண்டி கோளே-

———————————————————————-

அவன் சின்னங்களும் திரு நாமங்களும் இவள் வாயிலே பட்ட பின்பு நிறம் பெற்றன என்கிறாள் –

அன்னைமீர்!  அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே -மைத்ரேய என்னுமா போலே –
அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்
முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இ றே -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –
முன்னம் நோற்ற விதி கொலோ? -முன்னே பண்ணின பாக்ய பலமோ -ஜன்மாந்தர சகஸ்ரரேஷூ -பஹு நாம் ஜென்ம நா மந்தே –
முகில் வண்ணன் மாயம் கொலோ?-அதுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது -அழகைக் காட்டிப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களோ -அதில் சம்சயம் இத்தலையாலே சாதித்ததுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது என்று -இதில் சம்சயம் -இதுக்கு முன்பு ஒரு வ்யக்தியில் இப்படி பிறக்கக் காணாமையாலே
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–
தவள ஒண் சங்கு சக்கரம் -என்று ஆபரணத்தோடே விகல்பிக்கலாம் படி யான சங்கு சக்ராதி சிஹ்னங்களும்
அரவிந்த லோசனன்தேவ பிரான் என்று அவனுக்கு வாசகமான திரு நாமங்களும்
நிறம் பெறும்படி இவள் வாயினவாயின -அல்லாதார் தங்கள் திருந்துகைக்காக திரு நாமங்கள் சொல்லுவார்கள் -திருநாமம் திருந்துகைக்கு இவள் சொல்ல வேணும் -நாமும் திரு நாமங்கள் சொல்கிறோம் -இவள் வாயில் பட்ட வாறே இங்கனம் உயிர் பெற வேணுமோ என்கிறாள் –

————————————————————-

திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அந்நாள் தொடங்கி இன்று அளவும் உண்டான இவளுடைய ஸைதில்யத்தை சொல்லுகிறாள் –

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

திருந்து வேதமும்
வேதம் கட்டளை பட்டது அவ் வூரார் பரிஹரித்த பின்பாயிற்று -ஸ்வரூபம் ஞான மாத்திரம் என்னும் சுருதிகள் -ஞாத்ருத்வ சுருதிகள் பேதாபேத சுருதிகள் -சகுண சுருதிகள் -நிர்குண சுருதிகள் இவை யடங்க விஷய விபாகத்தாலே ஒருங்க விட்டுக் கொண்டு இருக்குமவர்கள்
வேள்வியும்-வைதிக சமாராதானமும்
திரு மா மகளிரும் தாம்மலிந்து இருந்து வாழ் – பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்-
ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை –
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
கண் அழகுக்கு அஸி தேக்ஷிணை யோடு ஒக்கும் –-தடம் கண்ணி -அவளில் காட்டில் வியாவ்ருத்தி -அவனை அனுபவிக்கையாலே வந்தது இ றே அவளுக்கு -அம் மிதுனத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு இ றே இக் கண்ணுக்கு
-இவள் கரும் தடம் கண்ணி -அவன் அரவிந்த லோசனன்
திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றை வரையும் என்னுதல் -அன்று தொடங்கி இக்காலம் எல்லாம் என்னுதல்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.
ஒரு கால் அரவிந்த லோசனன் என்னும் போது நெடும் போது கூடிப் பெரு வருத்தத்தோடே சொல்ல வேண்டி இருக்கை –
என்றென்றே – இருக்க மாட்டாதே நிரந்தரமாக சொல்லா நின்றாள் -அவ் வழி யாலே அழகையும் குணங்களையும் நினைத்து நையா நின்றாள் -இரங்குமே-சரீரத்து அளவு அன்றிக்கே நெஞ்சம் சிதிலமாகா நின்றது –

——————————————————————–

இவள் மநோ வாக் காயங்கள் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே பிரவணம் ஆயிற்றின என்கிறாள் –

இரங்கி  நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ
மனஸ் ஸூ நெகிழ்ந்து -அகவாய் அழிந்த வழி புக்கு போக்கு வீடு இருக்கிற படி –
வாசனையே உபாத்யாயராக சொல்லுமது ஒழிய -உணர்த்தியோடே சொல்வது ஒரு நாளும் இல்லை –
நாடொறும் வாய் வெரி இ -என்றது பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை இ றே
இவள் கண்ண நீர்கள் அலமர-கண்கள் வாய் வெருவுகிற படி -கண்ணாலே போக்கு விடுகிற படி
மரங்களும் இரங்கும் வகை-அசித் கல்பமான ஸ்தாவரங்களும் இரங்கும் படி யாயிற்று -இவள் ஆர்த்த த்வனி -அபி வ்ருஷா பரிம்லா நா -என்று ராம விஸ்லேஷத்தில் பட்டது அடங்க இவள் பேச்சில் படா நின்றன –
மணி வண்ணவோ என்று கூவுமால்-வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமத்தையே சொல்லா நின்றாள் -நீல மணி போலே குளிர்ந்து இருக்கிற திரு நிறத்தை உடையவனே என்னா நின்றாள்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கேசி ஹந்தாவான கிருஷ்ணன் -அவதாரத்தில் பிற்பாடருடைய விரோதிகளை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற திருத் தொலை வில்லி மங்கலம் என்று –
தன் கரங்கள் கூப்பித்தொழும்-இவள் தொழுவித்துக் கொள்ளுமவள்-என்று இருக்கிறாள் தோழி -அத்தலை இத்தலை யாவதே என்கிறாள் -இது தான் என்று தொடங்கி -என்னில் –
அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.
வார்த்தை சொல்லக் கற்ற பின்பு -திரு நகரியில் உள்ளார் -திருத் தொலை வில்லி மங்கலம் -என்றாயிற்று வார்த்தை கற்பது -கோயிலில் உள்ளார் கோயில் என்றும் பெருமாள் என்றும் கற்குமா போலே –
அவ் வூர்த திரு நாமம் என்கிறது இவள் வாயால் திருத் தொலை வில்லி மங்கலம் -என்றமையில் உள்ள இனிமை தான் சொன்னால் பிறவாமையாலே –

——————————————————————–

அவனால் அல்லது செல்லாத படியான இவளுடைய ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு பிராட்டிமாரில் ஒருத்தியோ -என்று சங்கிக்கிறாள் –

பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
நப்பின்னை பிராட்டி பிறந்திட்டாளோ -அங்கனம் இன்றிக்கே ஸ்ரீ பூமி பிராட்டி பிறந்திட்டாளோ -எல்லாருக்கும் இவ் வேற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ -என்பார்கள் பூர்வர்கள் –
சர்வேஸ்வரனுக்கு சம்பத்தாய் இருக்கிறவள் பிறந்தாளோ-அதுக்கு விளை பூமியாய் இருக்கிறவள் பிறந்தாளோ -அவ் விளை பூமியினுடைய பல ஸ்வரூபமாய் இருக்கிறவள் பிறந்தாளோ –
அங்கனம் இன்றியே அவர்களுக்கும் இவள் படி இல்லாமையால் அவர்களோடு ஒப்பு அன்று -லோகம் எல்லாம் வாழ்க்கைக்கு இவள் ஒருத்தி பிறந்தாள் என்றுமாம் -விஷ்ணு நா சத்ருஸோ வீரயே -என்றால் போலே நாய்ச்சிமார் பக்கலிலும் ஒரு வகைக்கு ஒப்பு சொல்லலாம் படி இருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள் -உபமான ம சேஷானாம் ஸாதூ நாம் யஸ் சதாபவத் -என்கிறபடியே எல்லாருக்கும் இவரை ஒப்பாகச் சொல்லலாம் -இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
இவள் திரு நாமத்தை சொல்லி கூப்பிடா நின்றாள் –இது என்ன ஆச்சர்யமோ -இவ் விபூதியில் இங்கனம் இருப்பாரையும் காணலாம் ஆகாதே -அவன் தன் பக்கல் பண்ணின வ்யாமோஹ அதிசயத்தை சொல்லிக் கூப்பிடா நின்றாள்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
தன்னுடைய வ்யாமோஹத்துக்கு அவன் கிருஷி பண்ணின படி -முற்பாடானாய் வந்து -அவன் நிற்பது இருப்பதாகாக் கொண்டு நித்ய வாசம் பண்ணா நிற்கும் வூர் -பசியன் சோறு தாழ்த்தால்படுமா போலே
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.
தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் பிரார்த்த்யமான படி -இருந்த இடத்தே இருந்து தலையை சாய்க்கும் படி ஆனாள்-இவள் அகவாய் ஓடுகிறது அவ் வூர் திரு நாமம் கேட்க்கையிலே -திரு நாமத்தை கேட்க வல்லேனே என்று ஆயிற்று இவள் மநோ ரதம்-
இவள் வாயால் சொல்லக் கடவ திரு நாமத்தை நாம் சொல்லிக் கெடுக்க கடவோம் அல்லோம் -என்று அவ் வூர் என்கிறாள் –

—————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழி யில் கருத்தை சொல்லிக் கொண்டு -இத்தைக் கற்றவர்கள் இதுக்கு அனுரூபமான கைங்கர்யத்தை பண்ணப் பெறுவார் என்கிறார் –

சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று
தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூ லபனாய் இருந்தவனையே சர்வவித்த பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர் -வண்குரு கூரவர் சடகோபன்
அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது -அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.
செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: