ஸ்ரீ ராம விருத்தாந்தத்திலே திருவடியைப் போலே ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே சக்தரான ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால்
-மின்னிடை மடவாரிலே -எம்பெருமானோடு சம்ச்லேஷிப்பேன் அல்லேன் -என்று மிறங்கின நம்மை –
ஆவேன் என்னப் பண்ணி அருளின உபகாரகத்தை -நல்குரவிலே அனுசந்தித்து –
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் என்கையாலே -தூரஸ்தன் என்று இன்னாதான ஆழ்வார்
-அணியவாய் எண்ணி முடிக்க ஒண்ணாதனவாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தங்களை காட்டி அருளக் கண்டு
-தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று மநோ ராதித்த படியே இனிதாகப் பேசி அனுபவிக்கிறார்
பிறந்த வாற்றில்-பல ஹானியால் பேச மாட்டிற்று இலர்
குரவை ஆய்ச்சியரில் -எல்லா சேஷ்டிதங்களையும் தரித்துப் பேசுகிறார்-
——————————————————-
ப்ரீதி பூர்வகமாக இரவும் பகலும் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-
உரவுநீர்ப் பொய்கை-விஷ ஜலம் -வலிய நீர் என்றுமாம்
அரவில் பள்ளிப் பிரான்-திரு அவதாரம் பண்ணுகைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -நாகணை மிசை நம்பிரான் ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது
மாய வினைகள்-ஆச்சர்யமான சேஷ்டிதங்கள்
இரவும் நன்பகலும்-எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கிற காலம் ஆகையால் நன்றான இரவும் பகலும் –
———————————————————–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
கானத்தோடே இனிய குழலை ஊதிற்றும்–பசு மேய்த்து வந்த இளைப்பு தீரும்படி அவனை தன்னுடைய முக்தமான அழகிய கண்களாலே அம்ருதத்தை வர்ஷித்தால் போலெ குளிர நோக்கி திருக் குழலிலே பரிமளம் அவன் திரு மேனி எல்லாம் வெள்ளம் இடும்படி தழுவின நப்பின்னை பிராட்டி யுடைய தோள்களில் கலந்ததுவும் -நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் அத்யாச்சர்யமான அழகையும் உடையனாய் அனுக்ரஹ சீலனாய் இருக்கை –நேயத்தோடு கழிந்த போது -இனிமையோடு போன காலம் –
——————————————————————-
கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு எனக்கு காலம் எல்லாம் போகப் பெற்றேன் -இன்னது பெற்றிலேன் என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார் –
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-
தங்கள் மிடுக்குக்கு லோகத்தில் ஒப்பு இன்றிக்கே இருக்கிற மல்லரைச் செற்றது பசு மேய்த்தது போலே வருத்தம் இல்லா லீலா மாத்திரமே
புகர்கொள் சோதி-பிரதிகூல நிரசனத்தாலே ஒளி பெட்ரா தேஜஸ் ஸூ
நுகர வைகல் வைகப்பெற்றேன்-அனுபவிக்கைக்கு ஈடாக காலம் நெடுக பெற்றேன் என்றுமாம் –
—————————————————————–
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-
யசோதை பிராட்டிக்கு அத்யந்தம் பவ்யனாய்-அவ்விருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி அவாப்தவ்யம் இல்லை என்கிறார் -தேவக் கோலப் பிரான்- ஊருகிற சகடத்தை தப்பாத படி நிரசித்து இருந்த அப்ராக்ருதமான அழகை உடையான் –
——————————————————————–
திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம் –
வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-
வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும்
தேவர்கள் இரக்க தானே அபி நிவிஷ்டனாய் வந்து பிறந்ததுவும் -இருளிலே வந்து பிறந்தான் என்றுமாம் -கம்ச பயத்தாலும் -விஸ்லேஷிக்கிறான் என்னும் வியசனத்தாலும் -கட்டிக் கொண்டு தாயார் கதற இருளிலே போனான் -என்னவுமாம் –
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன்-சம காலத்திலே இருந்து பயப்படாதே இப்போது நிர்ப்பயனாய் இனிதாக அனுபவிக்கப் பெற்றேன் –
———————————————————————-
கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார் –
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும்-எதிரிட்ட புள்ளைப் பிளந்ததும்-இமில் -என்று ககுத்தை சொல்கிறது
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும்-ஸ்ப்ருஹணீயமாம் படி உயர்ந்து தழைத்து நின்ற குருந்தின் வடிவைக் கொண்ட அஸூரனை முடித்ததும்-
—————————————————
ஆஸ்ரிதர் உடைய நோவு பொறுக்க மாட்டாமை-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடே கூட தானே வந்து பிறந்து அருளினவனுடைய சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு ஆர் நிகர் நீள் நிலத்து என்கிறார்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
தனக்கே அபிமதமான த்விஜ சதுர்புஜாதி ரூபங்களைக் கொண்டு -ஆஸ்ரிதருடைய விரோதிகளை போக்கினால் -அவர்களுக்கு ஒரு கார்யம் செய்தானாய் அன்றிக்கே தன்னுடைய சீற்றத்தை முடித்தானாய் இருக்கும் –ஆஸ்ரிதருடைய விரோதிகளை போக்கி -திருமஞ்சனம் ஆடி அருளி ஒப்பித்த அழகிய திருத் துழாய் மாலையை திரு முடியிலும் திரு மார்பிலும் உடையவன் –
—————————————————————–
நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
பாண விஷய பிரமுகரான கிருஷ்ண சேஷ்டிதங்களையே அநுஸந்திக்கும் நெஞ்சை யுடைய எனக்கு இனி கலக்கம் உண்டோ என்கிறார்
காணும் நெஞ்சுடையேன்-அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன்-
—————————————————————-
சர்வேஸ்வரனை மலங்கப் பண்ணும் நா வீறுடைய எனக்கு பூமியில் எதிர் உண்டோ என்கிறார்-
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
ஏழு கடலையும் ஏழு மலையையும் ஏழு லோகங்களையும் கழிய தரையிலே நடத்தினால் போலே ஓக்க நடத்தி –
இவை எல்லாம் கலங்க என்றுமாம்
ஆவது -அதிருகை / உலக்க -முடிய / மால்வண்ணனை-கறுத்த நிறத்தை யுடையவனை-
—————————————————————
சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார் –
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-
மாயங்கள் செய்து-ஜயத்ரதன் வதத்தின் அன்று திரு வாழி யாலே ஆதித்யனை மறைக்கை தொடக்கமான மஹா ஆச்சர்யங்களை யுடையவனை
நூற் றிட்டு-மந்திரித்து-
——————————————————————
நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார் –
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-கேசவன்-என்றது கீழில் திரு வாய் மொழியையும் இது திரு வாய் மொழியையும் அநு பாஷிக்கிறது -என்றும் சொல்லுவார்
தூய ஆயிரத் திப்பத்தால்-ஆயிரம் திருவாய் மொழியிலும் கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசின இது திருவாய் மொழியால் –துவள் -குற்றம்
—————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply