திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-2-

மாசறு சோதி தொடங்கி -வைகல் பூங்கழிவாய் அகப்பட -வியஸன பரம்பரையாலே மிகவும் நோவு பட்டு
-ஓர் ஆச்வாஸம் பெறாதே இருக்கிற இப்பிராட்டி -இனி அவன் வரிலும் அவனோட்டை சம்ச்லேஷம் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது
-இனி சம்ச்லேஷித்து மீளவும் விஸ்லேஷித்து துக்கம் பரம்பரைகளை அனுபவிப்பதில் காட்டிலும் ஸம்லேஸ்ஷியாது ஒழியவே முடிதும்
–முடியவே இந்த விஸ்லேஷ துக்கம் அனுபவித்து ஒழி யலாம் என்று ப்ராணய ரோஷத்தாலே துணிந்து –
நாம் இங்கனே இல்லை யகலப் படுக்க -அவன் தான் வாரா நின்றானோ என்று சிந்தித்து நான் தன்னை விஸ்லேஷித்து
நெடும் காலம் துக்கப் படுகையாலும்-களித்து சரணம் புகிலும் பொறுக்க மாட்டாத தன் திருவடிகளில் பெரிய ஆர்த்தியோடே
நாலு பிரயோகம் சரணம் புகுகையாலும் -மிகவும் ஆற்றாமை யோடே திரு வண் வண்டூரில் தூது ப்ரேஷணம் பண்ணுகையாலும்
-அவன் வரவை ஸூ சிப்பிக்கிற நன்னிமித்தங்களாலும் -அவன் தான் நமக்கு அநபிமதமாய் இருக்கப் போனாப் போலே
தன் வரவு அநிஷ்டமாய் இருக்க வருவான் ஒருவன் ஆகையாலும் -நம்முடைய பாக்ய வைகல்யத்தாலும் அவன் வரவு தப்பாது என்று பார்த்து
தங்களுடைய லீலா உத்யானத்தில் அதி மநோ ஹரமாய் இருபத்தொரு மண்டபத்தில் எம்பெருமானுக்கு தங்கள் பக்கல் வந்து அணுக ஒட்டாத படி
அநாதரமாகிற கல் மதிலை இட்டுக் கொண்டு -தன்னுடைய கிளி தொடக்கமான லீலா உபகரணங்களை யும் அவனுக்கு எட்டாதபடி பண்ணிக் கொண்டு
தோழிமாரும் தானும் கழகமாக இருந்து -அவன் வந்தாலும் அவனைக் கடாக்ஷித்தல் -அவனோடு சம்ச்லேஷித்தல் செய்யக் கடவோம் அல்லோம் –
-அவனோடே விஸ்லேஷித்து பட்ட வியஸனம் தீர அவன் எதிரே முடிய வேணும் என்னும் மநோ ரதத்தோடும் அந்நிய பரைகளைப் போலே இருக்க
-வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் -என்று கூப்பிட்ட பிராட்டியுடைய த்வனியைக் கேட்டு-
திரௌபதியை துச்சாசனாதிகள் சபையில் நலியா நிற்க -அவள் கோவிந்த என்று கூப்பிட்ட ஆர்த்த த்வனியைக் கேட்டால் போலேயும்
-சர தல்பகத்ரான ஸ்ரீ பீஷ்மர் தசையை அனுசந்தித்த போது போலேயும் மிகவும் கலங்கிய எம்பெருமான் –
நம்மைப் பிரிந்தவள் இங்கனே நோவு பட நாம் உதவாபி பெறாது ஒழிவதே-நமக்கு பும்ஸத்வம் ஆவது என் -என்று
லஜ்ஜா பயங்களினால் விஹவலனாய் மிகவும் கின்னனாய்க் கொண்டு -இவளோடு சம்ச்லேஷித்து அல்லது தரிக்க மாட்டாதானாய்
இவள் இருந்த இடத்துக்கு அதூர விப்ரக்ருஷ்டமாக வந்து இவள் பிரணய கோபத்தினால் அணுக ஒண்ணாத படி இருக்கிற இருப்பைக் கண்டு
-சாபராதரான நாம் அநபிமத தசையில் கண் காண நேரே சென்று இசைவின்றிக்கே மேல் விழில்-ம்ருது பிரகிருதி யாகையாலே மாந்தும் –
ஆனபின்பு இவளுடைய ஹிருதய காலுஷ்யத்தைப் போக்கி சம்ச்லேஷித்து இவளையும் தரிப்பித்து நாமும் உளவோமாம் விரகு ஏதோ என்று நிரூபித்து
-ச ப்ராதுச் சரணவ் காடம் -என்னும்படியாலே அனுவர்த்தித்து திருத்திக் கொள்கிறோம் என்று ஒருபடி நிலை நின்று
-தன் திருமேனியோடு விகல்ப்பிக்கலாம் படி இருபத்தொரு சோலையினுள் இட்டு அவளுக்கும் தோழிமாருக்கும் தெரியாத படி
பிரத்யா சன்னமாகச் சென்று -அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்த தன் திருக் கண்கள் ஆரளவும் நின்று கண்டு அருளி
-இப்பிராட்டி யுடையவும் தோழிமாருடையவும் ஆலோகாலாபாதிகளை பெறாமையாலும் -இவளுடைய லீலா உபகரணமான கிளி பூவைகளுடைய
-சம்ஸ்பர்ச மதுரா லாப ச்ரவணங்களைப் பெற்று ஆத்ம தாரணம் பண்ணப் பெறாமையாலும் -இப்பிராட்டி தன்னில் காட்டிலும்
தன் பக்கலிலே பரிவுடைத்தாகையாலே தனக்கு இவளோட்டை சம்ச்லேஷத்துக்கு புருஷகாரமாக நினைத்த தோழிமார் உள்ளிட்ட பரிஜனமும்
-இவள் தன்னில் காட்டிலும் -வைமுக்கயம் பண்ணி இருகையாலும் -ஷணே அபி தே யத் விரஹோ அதி துஸ் ஸஹ -என்னும் கணக்காலே
-க்ஷண காலமும் எம்பெருமான் தனக்கு இவளை ஒழிய தரிப்பு அரிதாய் செல்லா நிற்க -இப்பிராட்டியும் தோழிமாரும்
சோபயன் தாண்ட காரண்யம்-என்னும் படியே அவனுடைய ஸுந்தர்ய தரங்கங்களாலே – தங்கள் இருந்த உத்யானம் எல்லாம்
மயில் கழுத்து சாயல் ஆகையாலும் -ஆலங்கட்டி போலேயும் வர்ஷா தாரை போலேயும் அவனுடைய கடாக்ஷங்கள் தங்கள் மேலே
நிரந்தரமாக பட்டதனாலே புளகித காத்ரைகள் ஆகையாலும் -அவனை பிரத்யா சன்னன் என்று அறிந்து -ப்ரணய கோபம் அற மிக்கு
-அவன் பக்கல் பராங்முகிகளாய் இருக்க -அவனும் தன்னுடைய ஸுந்தர்யாதி களையும் தன்னுடைய ஆற்றாமையையும் ஆவிஷ்கரித்து
ஊடல் தீர்த்து இப்பிராட்டியோடே சம்ச்லேஷித்து முடிக்கிறான் –

————————————————————————–

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

இப்பிராட்டியும் தோழிமாரும் வாங்க மறந்து -அசேதனம் ஆகையாலே தானாக இறாய்க்கவும் அறியாத பந்தையும் கழலையும் தன்னுடைய ஜீவனா த்ருஷ்டத்தாலே கண்டு எடுத்துக் கொண்டு -க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸா-என்னும் படியால் திருக் கண்களாலே அவற்றை நிரந்தரமாக நோக்கி திரு உடம்பில்  எங்கும் படும் படி அணைத்துக்-கொண்டு  இப்பிராட்டியை ஸ்பர்சிக்கப் பெறாமையால் உள்ள வியஸனம் எல்லாம் தீர விளை நீர்  அடைத்துக் கொள்ளுகிற படியைக் கண்டு -இது நம்முடைய ஸ்நேஹத்தால் பிறந்ததாகில் -இத்தனை காலம் தாழ்த்தக் கூடாதாகை யாலே -மற்றும் சிலர் பக்கல் ஸ்நேஹத்தைப் பண்ணி -அவர்களோடே கலந்து பிரிந்து -பிரிவாற்றாமையாலே கலங்கி -நம்மை அவர்கள் என்று பிரமித்து -நம்முடைய பந்தையையும் கழலையும் அவர்களானவாகக் கொண்டு ஆசுவாசிக்கிறான் என்று நிரூபித்து -அவனை குறித்து -உன்னை இப்படி கலங்கப் பண்ண வல்ல நிரவாதிக ஸுந்தர்யத்தையும் ஆத்மகுணத்தையும் யுடையராய் -உன் அருள் சூடப் பிறந்தவர்கள் இத்தை அறியில்  செய்வது என் -என்ன -அவர்கள் அஸந்நிஹிதைகள் அன்றோ காணும்படி எங்கனே என்ன -அவர்களோடே நீ கலந்து பரிமாறின படியை அஸந்நிஹிதையாய் வைத்தே நான் எங்கனே அறிந்த படி -அப்படியே அவர்களும் அறிவர் -ஆகையால் அவர்கள் காணச் செய்கிற செயல் அன்றோ இது என்ன -அங்கனே யாகில் வருவது என் என்ன -தத் கடாக்ஷ ஏக தாரகனாய் இருக்கிற உன்னை அவர்கள் கடாஷியாது ஒழி வர் என்று அஞ்சா நின்றேன் என்ன -என்னோடு உனக்கு உறவு இல்லை யாகில் நீ அஞ்சுகிறது என் என்ன -சிலர் அநர்த்தப் படக் கண்டால் ஐயோ என்னும் போது உறவு வேணுமோ என்று இவர் அருளிச் செய்ய -இப்படி அதி சங்கை பண்ணுகிறது என் -எனக்கு வேறு ஒரு ஸ்ப்ருஹணீய விஷயம் உண்டோ -உன்னுடைய கடாக்ஷம் யன்றோ எனக்கு தாரகம் என்ன -அது பொய்யிறே-என்ன -என்னோடு பரிமாறுவார் திறத்தில் நான் பொய் செய்வது உண்டோ என்ன -நீ யார் திறத்தில் மெய் செய்தாய் என்ன -ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்காக ஏக தார வ்ரதனாய் -உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்துச் சென்று இலங்கையை அழித்தது பொய்யோ -என்ன -அதுவும் அவளுக்கு ஸ்நேஹித்து செய்தாய் அல்ல -ஒருத்திக்கு ஒரு மெய் செய்யவே எல்லாரும் மெய்யன் என்று உன்னை விஸ்வஸித்து உனக்கு அகப்படுவர் என்று செய்தாய் அத்தனை -என்ன -ஆகில் உன்னை அகப்படுத்துகைக்காக அச் செயல்களை செய்தாலோ என்ன-அத்தை இனி என் பக்கல் ஆவிஷ்கரித்து பிரயோஜனம் இல்லை -அபூர்வர்கள் பக்கலிலே போ என்ன -போகாதே பின்னையும் பந்தையும் கழலையும் இவன் விரும்பப் புக -என்னை உன் அருள் சூடப் பிறந்த மின்னிடை மடவார்களாக பிரமித்து -என்னுடைய லீலா உபகரணங்களையும்  அவர்களனவாக கருதி இவற்றைக் கொண்டு ஆஸ்வசிக்கிறாய்-இவை அவர்களுடையன அல்ல -என்னுடைய பந்தும் கழலும் இவை -இவற்றைத் தந்து அவர்கள் உன்னை உபேக்ஷியாமே அவர்கள் இருந்த இடத்து ஏற ஈண்டென போகு நம்பீ என்று எம்பெருமானை முகம் பாராதே இருந்து அருளிச் செய்கிறாள் –

——————————————————————–

போகு  நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

இப்பிராட்டி போகு நம்பீ என்று முதல் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவனும் போவோம் என்று சிறிது கிட்ட வர -உறவு உடையாரைப் போலே எங்களைத் தீண்டாதே கடக்க நில்லும்  என்ன -தன்னைக் கிட்ட வேண்டா என்று இவள் நிஷேதித்த நிஷேத வசனத்தை கேட்டு -கமர் பிளந்த இடத்திலே ஒரு பாட்டம் விழுந்தால் போலே இவனுக்கு திருக் கண்களிலும் திருப் பவளத்திலும் பிறந்த புதுக் கணிப்பைக் கண்டு அவர்கள் ஈடுபட -அத்தைக்கு கண்டு ஈடுபடா நின்று வைத்து என்னோடு உறவில்லை என்கிறபடி எங்கனே -என்று அவன் அருளிச் செய்ய -நாங்கள் உன் அழகைக் கண்டால் ஈடுபட்டு ஸம்ஸலேஷிக்கும் உறவை உடையோம் அல்லோம் -உன் அழகைக் கண்டு ஈடுபட்டு சிதிலைகளாகப் போகப் பிறந்தோம் அத்தனை -என்று பராங்முகிகளாய் நிற்க -எம்பெருமானும் நீங்கள் ஆரானால் ஆகிறீர் இது ஒரு மயிர் முடி இருந்த படி என் என்ன போலியைக் கண்டு பிரமிக்கும் படி உன்னை இப்படி பிச்சேற்றும்  மயிர் முடியை உடையராய் -உனக்கு சத்ருசைகளாய் இருக்கும் அவர்களோடு போய் சம்ச்லேஷி-என்ன -அவர்களை சந்திக்க வல்ல விரகு பெரும் தனையும் இங்கனே இருக்கிறோம் என்ன -நீ உனக்கு அபிமதைகளாய் இருக்கிறவர்களை  விஸ்லேஷித்து நோவு பட்டு இராதே அவர்களோடே சம்ச்லேஷிக்கைக்கு உபாயம் சொல்லக் கேளாய் -என்ன -அது என் -என்னில் -குழலை ஊதி அக்குழல் ஓசை வழியே அவர்கள் அடைய மெய்க்காட்டு கொண்டு அவர்களோடே சம்ச்லேஷி என்ன -அவனும் பெண்களை அழைக்காக குழலூதுகிறான் என்பர் அது ஈடு அன்று என்ன -நீ மேய்க்கிற பசுக்களைக் கடக்க விட்டு அவற்றை அழைக்கிறாயாய் பெண்கள் எல்லாம் வந்து திரளுகைக்காக நீர் வாய்ப்பான நிலங்களில் போய் இருந்து குழலூதி அவ் வலியால் அவர்களை அழைத்து சம்ச்லேஷி என்கிறாள்-

————————————————————————–

போயிருந்து  நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

குழலூது போய் -என்று என்னைச் சொல்லுவான் என் -னான் ஜாதி உசிதமான வ்ருத்தி யாகையாலே குழலூதுகிறேன் இத்தனை போக்கி -வேறு சிலரை அழைக்கவோ குழலூதுவது -நான் உன்னை அல்லது அறிவேனோ -என்று அருளிச் செய்ய உன்னுடைய பொய் அறிவும் எங்கள் பக்கல் விலை செல்லாது -உன் பொய்யில் புதியது உண்டு அறியாத அபூர்வர்கள் கோஷ்ட்டியில் போய் இருந்து சொல்லு என்று பிராட்டி உபாலம்பிக்க-தன்னைக் குறித்து இவள் மேன்மேல் என சொல்லுகிற அம்ருத உபமான வார்த்தைகளை கேட்டதினாலே பிறந்த நிரவதிக ஹர்ஸஜிஹா பிரகர்ஷத்தாலே அத்யாச்சிரயமாம் படி -திருக் கண்களிலும் திருப்பவளத்திலும் பிறந்த அழகைக் கண்டு -எங்களை யாராகக் கருதி இப்படி ஹ்ருஷ்டன் ஆகிறாய் -என்ன -நீங்கள் ஆரானால் ஆகிறீர் இது ஒரு தோள் அழகு இருந்த படி என் என்ன -அல்ப சாத்ருஸ்யத்தைக் கண்டு இவன் இப்படி பிரமிக்கும் படியான தோள் அழகு உடையராய் அம்ருத மதன சமயத்திலே பெரிய பிராட்டியாரோடு சம்ச்லேஷித்த போதும் பிறவாத புஷ்கல்யத்தை இவனுக்கு பிறப்பித்து இப்படி இவனுக்கு ஸ் ப்ருஹணீய தமைகளாய்  இருக்கிறவர்கள் ஆரோ என்கிறாள் -அம்ருத மதனத்தில் தன் கையில் கடல் பட்டத்தை இவன் தன்னைப் படுத்தினார்கள் ஆரோ என்றுமாம் –

————————————————————

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

நாம் தாழ்க்கை இ றே இவள் இப்படி நினைக்கைக்கு ஹேது என்று பார்த்து -நான் எனக்கு உரியேனோ -பசுக்களின் பின்னே போக வேண்டாவோ -நினைத்தபடி வரலாய் இருக்குமோ –பசுக்களுடைய ரக்ஷண அர்த்தமாக போக வேண்டுகையாலே தாழ்த்தேன் இத்தனை -மற்ற விளம்ப ஹேது இல்லை என்று அவன் அருளிச் செய்ய -எல்லா லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து -வட தளத்திலே கண் வளர்ந்து அருளுகை யாகிற ஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய உனக்கு -பசு மேக்கப் போனேன் என்ற அசத்தியத்தை -கேட்டார்க்கு சத்யம் என்று தோற்றும்படி சொல்லுகை விஸ்மயமோ என்று இவள் அருளிச் செய்ய -நான் பசுக்களை மேய்க்கப் போனமை அசத்தியமோ என்று அவன் அருளிச் செய்ய -பெண்களுடைய நோக்கிலே அகப்பட்டு -அவர்களை விட்டுப் போக மாட்டாதே அவர்கள் விளையாடுகிற மணல் குன்றுகளில் நின்றோ பசு மேய்ப்பது -இப் பொய்களை எங்களை ஒழிய புறம்பே சொல் என்கிறாள் -பசுக்கள் மேய்க்கைக்கு சம்பாவனை இல்லாத வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடுகிற மணல் குன்றுகளில் நின்று பசுக்களை வயிறு நிரம்பும் படி பண்ண வல்லன் என்று வட தள சயனம் போலே இருப்பதோர் ஆச்சர்ய உதாஹரணம் சொல்லிற்று ஆகவுமாம்-

—————————————————————-

கழறேல்  நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

நான் சொன்னவை எல்லாம் -பொய்யை   மெய்யாக உபபாதித்தேனாக  என்னை க்ரித்ரிமன் ஆக்குவதே -என்று எம்பெருமானை அருளிச் செய்ய -பிராட்டியும் முதன்மை அடித்து -எங்களை அபிபவித்து வார்த்தை சொல்லாதே கொள்ளும் உம்முடைய க்ரித்திரிமம் சகல லோக பிரசித்தம் அன்றோ -என்ன அவனும் -நான் பொய்யன் என்னும் இடத்துக்கு ஒரு சாக்ஷி காட்டிக் காண் -என்ன -ஜெயத்ரன் வதத்தின் அன்று பகலை இரவாக்க வேணும் என்று நீர் ஒரு பொய்யிலே துணிய -அதுக்கு பெரு நிலை நின்று அத்தை முற்றத் தலைக் கட்ட வல்ல உம்முடைய கையிலே திரு வாழி யைக் கேட்டுக் கொள்ளும் என்ன -அவன் மேல் சொல்லலாவது காணாமையாலே நிருத்தரனாய் இருக்க -நீ இன்னாதே இராதே உனக்கு ஒரு ஹிதம் சொல்லக் கேள் -என்ன அவனும் -இது ஒரு பேச்சில் இனிமை இருக்கும் படியே -என்று கொண்டாட -போலியைக் கண்டு பிச்சேறும் படியான பேச்சு அழகை யுடையவர்கள் மனம் வாடாமே அங்கே போ என்று இவள் பேசாதே இருக்க -நீ பேசாதே இருந்தாயே யாகிலும் எனக்கு தாரகம் இவற்றின் பேச்சே அமையும் -என்று இவளுடைய பூவையையும்  கிளியையும் இவன் உபலா ளிக்க-இவள் -நீ நினைக்கிறவர்களின அல்ல -எங்களின-இவற்றோடு குழகாதே கொள் -என்கிறாள் –

————————————————————————

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

முந்துற இப்பிராட்டியும் தோழிமாரும் அநபிபவநீயை களாய் இருக்கையாலே அணுக  கூசியிருந்த எம்பெருமான்  -தன் முக முத்ரையாலும் சவிநயமாக பாவ கர்ப்பமான பேச்சுக்களாலும் கலங்கி மருந்தீடுபட்டாரைப் போலே இவர்கள் நிஷேதிக்க மாட்டாதே இருக்க -அதுவே பற்றாசாகக் கொண்டு நிர்ப்பயனாய் சென்று அணுகி இவள் பாடே இருந்த குழமணனை எடுத்தருள -குழகி-எங்கள்  குழமணன் கொண்டு அடிக்கழிவு செய்தால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு –என்ன -அவனும் எனக்கு இனி இதுவே பிரயோஜனம் -பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டோ என்ன -நாங்கள் இப் பொய்களுக்கு பழையோம் அல்லோம் -உன்னுடைய நிரவதிகமான அபி நிவேசத்துக்கு நாங்கள் விஷயமாகப்  போருவுதுமோ-என்று பிராட்டி அருளிச் செய்ய -நீ யல்லது எனக்கு ஸ் ப்ருஹணீய விஷயம் உண்டோ -என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உள்ளார் -அங்கே போ என்று இவர்கள் சொல்ல -அங்கே போவோம் என்று இவர்கள் இருந்த  கோஷ்ட்டிக்குள் நடுவே வந்து புகுரைப் புக-முதலிகளாய்  இருக்கும் உமக்கு சிறுப் பெண்கள் கழகத்திலே புகுருகை ஈடென்னப் போராது என்ன -எனக்கு முதலித் தனம் வேண்டா -நான் பயலியாகப் போகவே அமையும் என்று அவன் அருளிச் செய்ய -தீமை செய்யும் சிரீதரனான உனக்கும் இது பாலிசப்பிரவ்ருத்தி என்கிறாள் –


கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

இவர்கள் கழகத்தில் ஏறப் புக்கு -இவர்களால் நிவாரய மாணனாய் ஏறப் பெறாது ஒழிந்த எம்பெருமான் -செய்யலாவது காணாமையாலே -அவர்களுடைய லீலா உபகரணமான பாவையை சென்று எடுக்க கணிசிக்க -அத்தை இவன் தான் அவர்கள் கையில் நின்றும் பறிக்கப் புக -அவர்களும் எங்கள் கையில் பாவையைப் பறிப்பது உனக்கு போராது என்று சொல்ல -அவனும் பஹு குணனான எனக்கு அல்ப தோஷம் தோற்றப் படுமோ என்று அருளிச் செய்ய -அவர்களும் நிர்ஹேதுகமாக ஜகாத்தை பிரளய காலத்திலே திரு வயிற்றிலே வைத்து  பரிகரிக்கை தொடக்கமான அபரிச்சேதய மஹா குணங்களை உடையையாய் இருந்தாயே யாகிலும் -அக் குணங்களுக்கு நிறம் தருமா போலே இப் போராச் செயலும் உனக்கு அவித்யாவஹம் என்று அருளிச் செய்ய -அதுக்கு மேலே சில பணி மொழிகளை எம்பெருமான் அருளிச் செய்ய -இப்படி பொறுக்க ஒண்ணாத வார்த்தைகளை சொல்லி எங்களோடு நீ விளையாடுதி-அது கேட்க்கில் எம்மனைமார் கூடும் கூடாது என்று நிரூபியாது ஒழிவர்கள் என்ன -ஆனால் வந்தது என் என்ன -ஒரு நாளாக அவர்களுக்கும் உனக்கும் விப்ரதிபத்தியாய் முடியும் என்கிறாள் -ஐ ம்மார் -ஆணுடன் பிறந்தார் –

——————————————————————–

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-
நாம் இருக்கில் இ றே இங்கு இவனுக்கு நம்மை நலியலாவது -நாம் போவோம் என்று தானும் தோழிமாரும் போக உபக்ரமிக்க எம்பெருமானும் அவர்கள் போகிற வழியைக் கொண்டு அவர்களை போக ஒட்டாதே வளைக்க -அவர்களும் சேதன அசேதனங்களை -தேவ திர்யக் மனுஷ்யாதி விபாகங்களை ஒளிந்து ஒன்றாம் படி கலசி -அழித்தது ஸ்ருஷ்டித்தது என்று தெரியாத படி சம்ஹார காலத்துக்கு முன்பு இருந்த படிகளில் ஒரு வாசி படாத படி ஸ்ருஷ்டித்து -இதில் ஓர் ஆயாஸப் படாத படி மஹா ப்ரபாவமான வி லக்ஷண சங்கல்ப ரூப ஞானத்தை யுடைய -சர்வேஸ்வரனான நீ தோழிமார் தங்களோடு கூடிக் கொண்டு விளையாட்டுப் போருங்கோள் -என்ன அறியாதே போந்த எங்களை -உன்னுடைய ஸுந்தர்யாதி களாலே நெருக்கி எங்களை போக ஒட்டாது ஒழிந்தால் -இத்தை சஹியாத உன்னுடைய மின்னிடை மடவார் இம்மாத்திரத்தை கொண்டு யோக்யதையாலே சம்ச்லேஷம் வ்ருத்தம் என்று சொல்லி உன்னை உபேக்ஷிப்பார் என்கிறாள் –

—————————————————————

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

எம்பெருமான் தன்னை போக ஒட்டாது ஒழிய -அவனைக் கடைக் கணியாது இருந்து  தானும் தோழிமாரும் சிற்றில் இழைக்கை தொடக்கமான லீலா விநோத வியாஜத்தாலே-அந்நிய பரைகளாய் இருக்க  -இவளுடைய வீஷி தாதிகளை   ஒழிய தான் தரிக்க ஷமன் அல்லன் ஆகையால் -இவள் கடாஷிக்கைக்காக இவளுடைய சிற்றிலையும் சிறு சோற்றையும் தன திருவடிகளாலே சிதற -சிற்றில் அழித்த சீற்றத்தாலே-தன்னுடைய சங்கல்பத்தை மறந்து –அவன் முகத்தை பார்த்து -அவன் கண் அழகிலே ஈடுபட்ட பிராட்டி -நாங்கள் ப்ரீதி அதிசயத்தாலே  நெஞ்சு உருகி தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய திருக் கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படும்படி பண்ணுகைக்காக எங்களுடைய சிற்றிலையும் -நாங்கள் அடுகிற சிறு சோற்றையும்  உன் திருவடிகளாலே அழித்து அருளினாய் -எங்களுடைய லீலா விநோதங்களை கண்டு ப்ரீதனாய் உன்னுடைய முக ஒளி திகழ முறுவல் செய்து -நின்றிலை -இங்கனே செய்தவிடம் தக்கோர்மை செய்தாய் அல்ல என்று சொல்லி எம்பெருமானோடு சம்ச்லேஷியின் என்று தான் பண்ணின சங்கல்பத்தையும் அவன் தன்னுடைய ஸுந்தரியாதிகளாலே சிதிலம் ஆக்கின படியைச் சொல்லி அவனை இன்னாதாகிறாள் –

————————————————————————–

நின்றிலங்கு  முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

அந்நிய பரைகளாய்-நேராகப் பாராதே இருந்த இப்பிராட்டியும் தோழிமாரும் நேராகப் பார்க்கைக்காக இழைக்கிற சிற்றிலை திருவடிகளாலே அழித்து அருள -அவ் வன்னியாயப் பாடு அறிவிப்பாரைப் போலே -அவனை திருவடிகளே தொடக்கி திரு முடி அளவும் நோக்குகையாலே -அவனுக்குப் பிறந்த அழகையும் மேன்மையையும் -தங்கள் இவனோடு சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்று அபிசந்தி பண்ணி இருக்க -அத்தை அழித்த பிரசங்கத்தாலே -இருபத்தொரு கால் ஷத்ரிய குலத்தை எல்லாம் கோலி யறுத்த ஆண் பிள்ளைத் தனத்தையும் -பண்டு பிரளய காலத்தில் அஸத் கல்பமான ஜகத்தை உண்டாக்கினால் போலே -இடைச் சாதி அடைய தலை எடுக்கும் படி வந்து திருவவதாரம் பண்ணி யருளின உபகாரத்தையும் பேசா நின்று கொண்டு -ஊடல்  தீர்ந்து -அவனோடே சம்ச்லேஷித்து-ஏவம்விதமான உன்னால் இதைப் பெண்களான நாங்கள் நலிவே படப் பிறந்தோமே என்று தங்களுடைய ஆர்த்தி எல்லாம் தீர தங்கள் பட்ட நோவை அறிவிக்கிறார்கள் –

————————————————————–

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

அதி ஸ்நேஹிதையான யசோதை பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடிந்தது போலே -ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால் எம்பெருமானோடே கலப்பேன் அல்லேன் என்று அகல -அது பொறுக்க மாட்டாமை தளர்ந்த தளர்த்தியை அனுசந்தித்து இனியராய் -எம்பெருமானை ஏத்திய இத்திருவாய் மொழியை -இப்பாவ வ்ருத்தி இன்றிக்கே வாக் மாத்திரத்திலே சொன்னார்க்கும் எம்பெருமான் சந்நிஹிதனாய் இருக்கச் செய்தே பிறங்கி ஆழ்வார் தாம் பட்ட வியஸனம் பட வேண்டா என்கிறார் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: