திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –6-1-

கீழே நோற்ற நோன்பு தொடங்கி நாலு பிரயோகம் சரணம் புக்க இடத்திலும் அவன் வாராமையாலே-குணவானாய் சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியாகையாலே சர்வ நிர்வாஹ ஷமனாய் இருக்கிற எம்பெருமானைத் திரு வண் வண்டூரில்-ஸம்ருத்தி தம்மை நினையாதபடி பண்ணுகையாலே நம் தசை அறியாமையால் வாராது ஒழிந்தான்-அறிவிக்க வரும் என்று பார்த்து-தம் பரிஜனங்களில் அவன் பக்கல் போய் வர வல்லார் ஒருவரைக் காணாமையாலே -தன் ஆற்றாமை கை கொடுக்க கழிக்கரையிலே சென்று
-அங்கே வர்த்திக்கின்றன சில பஷிகளை அத்யாதரம் பண்ணி இருந்து திரு வண் வண்டூரில் தூது விடுகிறாள் –

——————————————————————-

இப்பிராட்டி சில குருகுகளை நோக்கி திரு வண் வண்டூரில் சென்று என்னுடைய தசையை எம்பெருமானுக்கு  அறிவியுங்கோள் என்கிறாள்  –

வைகல்  பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
நாள் தோறும் அழகிய கழியிலே வந்து மேய்க்கிற குருகினங்காள்-இத்தால் தன்னுடைய அபேக்ஷிதங்களை செய்து முடிக்க வேண்டும் படி தன்னோடு அவற்றுக்கு உள்ள கண் அணைவு சொல்லிற்று –
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்-கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
ஒரோ முதலே செய்யை விழுங்கும் படியான செந்நெல் உயர்ந்த திரு வண் வண்டூரில் உறைவதும் செய்து கையும் திரு வாழி யுமான அழகையும் முறுவலையும் காட்டி என்னை தோற்பித்து இருக்கிறவனைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.
இங்கு நின்றும் போனோம் என்று வேண்டல்பாடு அடியாதே-உசித விநயங்களைப் பண்ணி பிரிந்தால் தன்னைப் போல் அன்றிக்கே தரியாத படியான பாபத்தை பண்ணின என் காதன்மை சொல்லுங்கோள்-கைகள் கூப்புகை -சிறகு விரிக்கை -காதன்மை -ஆசைப்பாடு-

—————————————————————

பரம காருணிகனான திரு வண் வண்டூர் நாதனுக்கு என் திறத்தை அறிவியுங்கோள் என்று சில நாரைகளைக் குறித்து சொல்லுகிறாள் –

காதல்  மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

விரஹ வியஸன ஸஹம் அல்லாத படி ஸ்நே ஹத்தை யுடைத்தாய் -அதுக்கு மேலே விஸ்லேஷிக்கில் முடியும்படியான மார்த்வத்தை யுடைத்தான பேடையை இழவாமைக்காக அத்தோடு பிரியாதே மேய்கிற கரு நாராய்
வேத கோஷங்களும் வைதிகமான யாகங்களிலும் யுண்டான ப்ரேஷாதி கோஷங்களும் மிக்கு இருந்துள்ள திரு வண் வண்டூருக்கு நாதனாய் பிரளயம் கொள்ளுகிற ஜகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து உபகரித்து அருளின செயலாலே நம்மை அடிமை கொண்டு இருக்கிறவனைக் கண்டு
கை தொழுகை போராது -முதலிகளாய் இருப்பர் தீர்க்க பிராணாமத்தை பண்ணி -எம்பெருமான் பக்கலிலே போகிறன சிலவாகையாலே –அடியேன் -என்கிறாள் –

———————————————————————

திறம் திறமாக திரளுகிற புள்ளினங்களைக் கண்டு தன் காரியத்துக்காக திரளுகிறனவாகக் கொண்டு திரு வண் வண்டூரில் இருக்கிற எம்பெருமானுக்கு என்னுடைய வியஸனத்தை அறிவியுங்கோள் என்கிறாள் –

திறங்களாகி  எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

திறம் –திரள் /உழலுகை –சஞ்சரிக்கை –
விலக்ஷணமான சம்பத்து பெருகா நின்றுள்ள திரு வண் வண்டூரில் நிரந்தர வாசம் பண்ணா நிற்பதும் செய்து பிரதிகூல நிரசன த்வரையாலே சுழலா நின்றுள்ள திரு வாழியோடே கூடின திருக் கையையும் -தர்ச நீயமான திருப் பவளத்தையும் யுடையனாய் -அத்தாலே மிகவும் வேண்டற்பாடு யுடையனாய் இருக்கிறவனைக் கண்டு அவனுக்கு தயை பிறக்கும் படி நீங்கள் அபிமான ரஹிதராய் கொண்டு தொழுது -தான் நினையாது இருக்கையாலே நான் படுகிற மநோ துக்கத்தை அவனுக்கு பணியுங்கோள் என்கிறாள் –பணியீர்-அவற்றின் பக்கல் தனக்கு யுண்டான கௌரவ அதிசயத்தாலே பணியீர் என்கிறாள் –

————————————————————-

திரு வண் வண்டூரில் எழுந்து அருளி இருக்கிற எம்பெருமானைக் கண்டு சரீரம் கட்டு அழிந்து ஒருத்தி படும் பாடே -என்று சொல்லுங்கோள் என்று சில அன்னங்களை குறித்து அருளிச் செய்கிறாள் –

இடரில்  போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

விஸ்லேஷ கந்தம் இல்லாத சம்ச்லேஷ ஸூ கத்திலே முழுகி பிரிய மாட்டாதே ஒன்றுக்கு ஓன்று பவ்யமாகக் கொண்டு சஞ்சரிக்கிற அன்னங்காள்-
நிரந்தரமாக வேத கோஷம் மிக்கு இருந்துள்ள திரு வண் வண்டூரில் தன் வடிவு அழகைக் காட்டி என்னை அனுபவிப்பித்து ஸூ லபனாய் இப்போது எட்டாது இருக்கிறவனைக் கண்டு-

—————————————————————–

சில அன்னங்களை குறித்து அவ்விடம் புக்காரை எல்லாம் மறப்பிக்கும் விஷயமாய் இருக்கும் -நீங்கள் அங்கு புக்கால் என்னையும் நினையுங்கோள்  என்கிறாள் –

உணர்த்தல்  ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

கிலாக்கையையும் கிலாய்த்து இருத்துகைக்கு அகப்படும் துக்கத்தையும் அனுசந்தித்து இனியூட சம்பாவனை இல்லாத படி பிரியாதே மேய்வதும் செய்து பரஸ்பரம் பவ்யமான அன்னங்காள் -கொழுத்த வண்டல்கள் மேலே சங்குகள் உறங்கா நின்றுள்ள திரு வண் வண்டூரில் நம்மை விஸ்லேஷித்ததையும் மறந்து தான் ஒப்பித்து போது போக்கி நமக்கு அ பவ்யனாய் இருக்கிறவனைக் கண்டு
புக்க வாறே அங்குத்தை ஐஸ்வர்யங்கள் உங்களை மறக்கப் பண்ணும் -அங்கனம் செய்யாதே கூப்பின கைகளும் நீங்களுமாய் எனக்காகவும் ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேணும் –

—————————————————————-

சில குயில்களைக் குறித்து திரு வண் வண்டூரில் சென்று எம்பெருமானைக் கண்டு உள்ள தசையை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு மாற்றம் கொண்டு வந்து என் மையல் தீருவதொரு வண்ணம் அருளிச் செய்ய வேணும் என்கிறாள் –

போற்றி  யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

மனுஷ்ய கந்தம் தட்டாதே புன்னை மேலே குறைவதும் செய்து அன்யோன்ய சம்ச்லேஷத்தாலே மநோ ஹரமான வடிவை யுடைய குயில்கள் -உங்களை ஏத்தி இரந்தேன்-நீரில் காட்டிலும் ஸூ கமாய் இருக்கையாலே சேற்றிலே வாளைகள் உகளித்து துள்ளா நின்று இருந்துள்ள திரு வண்  வண்டூரில் நான் நோவு படா நிற்கத் தான் தேறி தனக்கு நல்லாரான அயர்வறும் அமரர்களுக்கு கையும் திரு வாழி யுமான அழகைக் காட்டி அவர்களும் தானும் போது போக்கி இருக்கிறவனைக் கண்டு -ஆற்றல் ஆழி -வலியுடைய திருவாழி என்னவுமாம் –

—————————————————————

நாங்கள் அவனை அறியும் படி எங்கனே என்று கேட்ட கிளிகளைக் குறித்து அவனுடைய அடையாளங்களை சொல்லி இவ்வடையாளங்களின் படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கு ஒரு வார்த்தை அருவியுங்கோள் என்கிறாள் –

ஒரு  வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

ஐஸ்வர்ய தரங்களாலே புகுகை அரிது -ஆகிலும் வருந்தி ஒரு படி சென்று புக்கு -அவ் ஊரில் போக்யதையாலே அவ்வளவும் சென்று புகுகை அரிது -ஆகிலும் ஓரு படி சென்று புக்கு என்றுமாம் –
உன்னுடைய சஹசரத்தோடு கலக்கையாலே அழகு பெற்று இருக்கிற கிளியே -எனக்காக அவனுக்கு ஒரு வார்த்தை அறிவிக்க வேணும் –
இசலி பூக்கும் பொழிலை யுடைத்தாய் அப் பொழிலில் உதிர்ந்த தாதுக்களால் சிவந்த பர்யந்தங்களை யுடைய திரு வண் வண்டூரில் –
என்னை விஸ்லேஷித்துக்காக வாட்டமில்லாத திவ்ய அவயவங்களை யுடையனாய் யுத்தத்தில் உஜ்ஜவலமான திரு வாழி யையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் தனக்கு திவ்ய சிஹ்னமாக யுடையவனாய் இருந்தவனை வ்யக்தமாகக் கொண்டு-

——————————————————————

நான் அவனுடைய அழகுகளைக் கேட்டால் மறுத்து எனக்கு சொல்லலாம் படி திருந்தக் கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்ல வேணும் என்று பூவையை நோக்கிச் சொல்லுகிறாள் –

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

ஒண் சிறு பூவாய!-அங்கே போக விடுகைக்கு ஈடான வடிவு அழகையும் வடிவில் லாகவத்தையும் யுடையான பூவாய்
பெருத்து குளிர்ந்து இருந்துள்ள தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களையும் அவ் ஊருக்கு ராஜாவாக்கைக்கு தகுதியான திரு அபிஷேகத்தையும் -பெருத்த நாலு திருத் தோள்களையும் -கறுத்து திண்ணிதான மஹா மேகம் போலே இருக்கிற திருமேனியை யுடையனுமாய் இவ் வடிவு அழகாயேய் உள்ளே ஒரு நீர்மை இன்றிக்கே முதலியாய் இருக்கிறவனை –

—————————————————————-

நீங்கள் திரு வண் வண்டூரில் சென்று அவனைக் கண்டக்கால் ஓலக்கத்திலே விண்ணப்பம் செய்யாதே ஏகாந்தத்திலே அடியேன் திறத்தை அறிவியுங்கோள் என்று சில அன்னங்களை  குறித்துச் சொல்லுகிறாள் –

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–6-1-9-

பூக்களிலே சம்ச்லேஷத்தாலே அசைகிற அன்னங்காள் -திருப் பள்ளி எழுச்சி சங்கங்கள் இங்கே கேட்க்கும்படி த்வனியா நின்றுள்ள திரு வண் வண்டூரில் எழுந்து அருளி இருப்பதும் செய்து தன்னைப் பிரிந்தார் நோவு அறிய கடவன் அன்றிக்கே வஞ்சகனாய் ஒருவருக்கும் கிட்டாமையே ஸ்வரூபமான கிருஷ்ணனைக் கண்டு திருவடிகளை கையாலே தொழுது
விடிவை சங்கு-என்று தித்ருஷூக்களை யாஹ்வானாம் பண்ணுகிற சங்கத்வனியை யுடைய ப்ரபாதசமயம் என்றுமாம்
கொடிய வல்வினையேன்-அவன் உபேக்ஷிக்கிலும் அவனால் அல்லது செல்லாத மஹா பாபத்தை யுடையேன் –

—————————————————————–

சில வண்டுகளைக் குறித்து -எல்லோரோபாதியும் நம்மையும் சொல்லுகிறாள் என்று இராதே என் காரியமும் உங்களுக்கே பாரமாகக் கொண்டு -பிரதிகூல நிரசனங்கள் எல்லாம் பண்ணி அனுகூல பரித்ராணமும் பண்ணி பரிபூர்ண மநோ ரதனாய் இருந்தவனுக்கு தனக்கு ரக்ஷணீயை நானும் ஒருத்தி உளேன் என்று சொல்லுங்கோள் -என்று அவன் மறந்து இருந்தான் என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறாள் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

வெறி வண்டினங்காள்!-பரிமளத்தை யுடைய வண்டினங்காள்
என்னைப் போலே கலங்கி இராதே தெளிந்த நீரை யுடைய பம்பை வாச பார்ஸ்வத்திலே
மாறில் போர்-எதிர் இல்லாத போர் / ஏறு சேவகனார்க்கு-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளைத்தனத்தை யுடையராய் இருக்கிறவர்க்கு –

————————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லவர்கள் காமினிகளுக்கு காமுகர் போக்யராமா போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

மின்னை வென்று திரு மார்வுக்கு சேர்ந்து இருந்துள்ள திரு யஜ்ஜோபவீதத்தை யுடைய ஸ்ரீ வாமனனாய் இம் மஹா பிருதிவ்யை எல்லாம் அளந்து கொண்ட மஹா வஞ்சகன் திருவடிகளில் -வாமன வ்ருத்தாந்த கதனத்தாலே மின்னிடை மடவாருக்காக தோற்றுகிற தோற்றரவை ஸூசிப்பிக்கிறது –இன் கொள் பாடல்-இனிய பாடல் –

———————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: