திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –6-1—

கீழே நோற்ற நோன்பு தொடங்கி நாலு பிரயோகம் சரணம் புக்க இடத்திலும் தம்முடைய அபேக்ஷிதம் பெற்றிலர்-பலத்தோடு அவ்யபிசாரியாய் அவிளம்ப்ய பல பிரதானமான யுபாயத்தை ஸ்வீகரிக்கச் செயதேயும் அபேக்ஷிதம் கிடையாதே ஒழிவான் என் என்னில்
-இவர் தம்முடைய ஹிதத்தோ பாதி ஜகத்தினுடைய ஹிதத்துக்கும் கடவ-அது பற்றாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து-கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே திரு வண் வண்டூரில் தூது விடுகிறாள் ஒரு பிராட்டி பேச்சாலே இவர் தம் தசையை யருளிச் செய்கிறார்-நாயகனானவன் -யசஸ் வீ ஞான சம்பன்ன -என்று நம் தசையை அறியுமவனுமாய் — ரிபூணாமபி வத்சலம்-என்று-சத்ருக்கள் பக்கலிலும்-இரங்கும் நீர்மையை யுடையவனுமாய் -சத்ரோ ப்ரக்க்யாத வீ ரஸ்ய ரஞ்ச நீயஸ்ய விக்ரமை –என்று-வரும் இடத்தில் -பிரபல பிரதிபந்தகங்களையும் தள்ளி வர வல்ல ஆண் பிள்ளையுமாய் இருக்க வாராமைக்கு அடி -திரு வண் வண்டூரில் போக்யதையாலே -நம் ஆற்றாமையை அறிவிக்க வரும் என்று பார்த்து தன் பரிகரங்களில் அவன் பக்கல்
போய் வர வல்லார் ஒருவரைக் காணாமையாலே -தன் ஆற்றாமை கை கொடுக்க
-பிரிந்தார் இரங்கும் நெய்தல் நிலத்தில் புறப்பட்டு கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிறாள் –

————————————————–

இப்பிராட்டி சில குருகுகளை நோக்கி திரு வண் வண்டூரில் சென்று என்னுடைய தசையை எம்பெருமானுக்கு  அறிவியுங்கோள் என்கிறாள்  –

வைகல்  பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
வைகல் -நாள் தோறும் -நாயக வ்யாவ்ருத்தி -காதா சித்கமாக கலந்து பொகட்டு போனவனை போல் அன்று இ றே நாள் தோறும் முகம் காட்டுகிற நீங்கள் —
தர்ச நீயமான கழி என்னுதல் -பூத்த கழி என்னுதல் –
கழிவாய்-கழி இடத்தே -கழியிலே -பிரிந்தவன் பாதகனாகை அன்றிக்கே இருந்த தேசமும் பாதகமாகை-இருவர் கூட அனுபவிக்கும் இடம் தனித்தால் ம்ருத்யுசமமாய் இ றே இருப்பது –
வந்து -வழி பறிக்கும் தேசத்தில் வந்து உதவினால் போலே இ றே நீங்கள் சந்நிதி பண்ணின படி -பம்பா தீரே ஹநுமதா சங்கத -ஆள் இட்டு அறிவிக்க வேண்டும் தசையிலே நீங்களே வந்து
வந்து மேயும் -நான் அபேக்ஷியாது இருக்க -க்ருஹே புக்தம சங்கிதம் -என்னுமா போலே இ றே நீங்கள் செய்தது -என் கார்யம் செய்த பின் இனி உங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -இவள் கார்யம் இங்கே வந்து மேய்கை
மேயும் குருகினங்காள் -உபவாச க்ருசையாய் இருக்க என் கார்யம் புஷ்கலமாய் இருக்கிற உங்களுக்கு செய்ய வேண்டாவோ -இரவு உண்டார்க்கு உண்ணாதார் கார்யம் செய்கை பரம் அன்றோ –
இளங்காள்-இருவராய் இருப்பார்க்கு தனியார் கார்யம் செய்ய வேண்டாவோ -பெருமாள் தனிமையில் மஹா ராஜரும் பரிகரமும் தோற்றினால் போலே யாயிற்று தனிமையில் இவை வந்து முகம் காட்டின படி
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
வாராமல் கால் தாழப் பண்ணிற்று அவ் ஊரில் போக்யதை யாயிற்று -அவன் குற்றம் அன்று -மதுராம் ப்ராப்ய கோவிந்த
செய் கொள் செந்நெல்-ஒரு முதலே ஒரு செய் யைக் கொள்ளும்
உயர் -செய்க்கு வரம்பு என்று ஒரு மரியாதை உண்டு -அதுவும் இல்ல இ றே ஆகாசத்துக்கு -உயரா நிற்கும் அத்தனை
திரு வண்வண்டூர் -பரமபத வ்யாவ்ருத்தி
உறையும் -அவதார வ்யாவ்ருத்தி
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைக்கு அடங்கலும் தானே ஆபரணமாய் இருக்கும் என்னுதல் –கையிலே கொண்ட திரு ஆழி என்னுதல்
கனி வாய் -முறுவலை எனக்கு முற்றூட்டு ஆக்கியவன்
பெருமான் -திரு அதரத்தில் பழுப்புக்கும்-கையும் திரு வாழி யுமான சேர்த்திக்கும் ஆயிற்று இவள் எழுதிக் கொடுத்தது -ராஜ புத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிக்கு தோற்பாரை போலே
கண்டு -காட்சியில் எனக்கு முற்பாடராய் இரா நின்றி கோள் இ றே -இவளை பற்றினாருக்கு இவளிலும் ஏற்றம் உண்டு இ றே -ஏத்தி இருப்பாரை வெல்லுமே -ஏஷ சூடா மணி ஸ்ரீ மான் –
கைகள் கூப்பிச்
அவனுக்கு மறுக்க ஒண்ணாத அஞ்சலியைப் பண்ணுங்கோள் –
பலத்தோடு வியபிசரியாத செயலைச் செய்யுங்கோள் -என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-பத்தாம் பாட்டிலே யாயிற்று இன்னாப்பு பிரசங்கிப்பது-பட்டர் பத்துப் பாட்டிலும் இன்னாப்பு தோற்ற நிர்வஹித்து அருளுவார்
முன்பு போலே என்று இராதே பெரிய முதலிகள் கும்பிடுங்கோள் -கும்பிட்ட வாறே முகம் பார்ப்பார் -பின்னை முகம் மாறுவதற்கு முன்னே என் தசையைச் சொல்லுங்கோள்
கைகளை கூப்பி -கைகளை கூப்புகையாவது -சிறகுகளை விரிக்கை –
சொல்லீர்-ஒரு மஹா பாரத்துக்கு போரும் இ றே
வினையாட்டியேன் காதன்மையே.-சொல்லீர்
பிரிந்தால் அவனைப் போல் அன்றியே தரிக்க மாட்டாத படி பாபம் பண்ணின என் காதன்மை சொல்லீர் -அவன் வேண்டேன் என்றாலும் விட மாட்ட தபடியான பாபம் -வந்த ஆளின் கையிலே வார்த்தை சொல்லி விடுகை அன்றிக்கே திர்யக்குகளைக் குறித்து தூது விட வேண்டும்படியான பாபத்தை பண்ணினேன் –
காதன்மை என்றவாறே -தம்மளவு என்று இராமே -என்னுடைய காதன்மை -வன் நெஞ்சர் காதல் போல் அன்றி இ றே மெல்லியலார் காதல் -மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –

————————————————————-

ஆர்த்த ரக்ஷணத்தில் தீஷித்தவன் ஆனவனுக்கு   என் திறத்தை அறிவியுங்கோள் என்று சில நாரைகளைக் குறித்து சொல்லுகிறாள் -யாம் கபீ நாம் சஹஸ்ராணி என்னும் விஷயம் இ றே –

காதல்  மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
காதலே நிரூபகமாக யுடைத்தாய் -விரஹ சஹம் அல்லாத பேடை பிரியவும் பொறாதே கலக்கவும் பொறாதே இருக்கை –
உடன் மேயும் -பிரிந்தால் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -உணர்த்த டலு டுணர்ந்து இ றே –
அந்வயத்திலே-வ்யதிரேகத்தில் வருமது எல்லாம் அறிந்து பரிமாறா நின்றன -இரண்டுக்கும் வாய் அலகு ஒன்றால் பிறக்கும் கார்யம் பிறவா நின்றது -நான் உபவாச க்ருசையாய் இருக்க -இதம் மேத்யமிதம்ஸ்வாது-என்கிறபடி புஜிக்க உங்களுக்கு பிராப்தி யுண்டோ -நாட்டில் பிறந்து பொகட்டு போகாதாரும் சிலர் யுண்டாகாதே
கரு நாராய் -பிரிவுக்கு பிரசங்கம் இல்லாமையால் தன்நிறம் பெற்று இருக்கிற படி -பிரிந்தவன் வடிவுக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
அவன் குறையால் அன்று -ஊரில் போக்யதையால் தாழ்த்தான் அத்தனை –வேத கோஷமும் யாகத்தில் சஸ்த்ராதி கோஷங்களும் சமுத்திர கோஷம் போலே இருக்கிற சிரமஹரமான ஊர்
திரு வண் வண்டூர் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதன் என்றத்துக்கும் அவ்வருகே ஓன்று இ றே இது -எங்கனம் என்னில்
ஞாலமெல்லாம் உண்ட
தளர்ந்தார் தாவளம்-குணாகுனா நிரூபணம் பண்ணாதே ஆபத்தே கைம்முதலாக வயிற்றிலே வைக்கை-ஆபன்னராய் இருந்ததுக்கு மேற்பட்ட தூது விடுகை மிகையாய் இருக்குமவள்
நம்பெருமானைக் கண்டுபாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே
ஆபத்சகத்வத்தை காட்டி என்னை அநன்யார்ஹை ஆக்கினவன்
கண்டு-பாதம் கைதொழுது– கண்டவாறே விக்ருதராய் -கர்த்தவ்யத்தை மறவாதே திருவடிகளில் தண்டண்  இடுங்கோள்
தொழுகை போராது -முதலிகளாய் இருப்பர் கனக்க அனுவர்த்தியுங்கோள்
பணியீர் -எதிர்த்தலை திர்யக்குகள் ஆகவுமாம் -தான் ஜனக குலத்தில் பிறக்கவுமாம் -கடகரை கௌரவித்துச் சொல்லக் கடவது என்கை
அடியேன் திறமே-பிராட்டியான தசையிலும் வாசனையால் ஸ்வரூபத்தில் இங்கனம் அல்லது பிரதிபத்தி இல்லை இவர்க்கு -இவருடைய நான் இருக்கிற படி
திறமே -ஒரு மஹா பாரதம் இ றே -அவள் படி -என்னும் அத்தனை -சொல்லித் தலைக் கட்டப் போகாது-

———————————————————–

திறம் திறமாக திரளுகிற புள்ளினங்களைக் கண்டு தன் காரியத்துக்காக திரளுகிறனவாகக் கொண்டு திரு வண் வண்டூரில் இருக்கிற எம்பெருமானுக்கு என்னுடைய வியஸனத்தை அறிவியுங்கோள் என்கிறாள் –

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
திறம் திறமாகக் கொண்டு -பார்த்த பார்த்த இடம் எல்லாம் -செய்களூடே சஞ்சரியா நின்றனவாயிற்று -இரை தேடித் திரிகின்றன என்று அறியாதே தன் காரியத்துக்காக திரண்டு சஞ்சரியா இருக்கின்றனவாக நினைத்து இருக்கிறாள் -பிராட்டியையும் பெருமாளையும் கூட்டுகைக்கு முதலிகள் திரள் திரளாக சஞ்சரித்தால் போலே தங்களைக் கூட்டுகைக்காக என்று இருக்கிறாள்
புள்ளினங்காள்!-பிரிந்து கூட்ட இராதே கூடி இருக்கப் பற்றது இ றே-ராமாவதாரத்துக்கு பின்பு பிரிந்தாரை கூட்டுவது திர்யக்குகள் என்று இருக்கிறாள்
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
உன் தசையை அறிந்து வந்து உதவாதவன் நாங்கள் சொன்னவாறே வர புகுகிறானோ என்ன -அவன் குறை அன்று -அவ் வூரில் ஐஸ்வர்யம் நினைக்க ஒட்டாது என்று இருக்கிறாள்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
பிரதிகூல நிரசன த்வரையாலே  சுழன்று வருகிற திரு வாழி யைக் கையிலே யுடையவன் –கறங்குகை -சுழலுகை
அகவாயில் ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணி அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு –
அன்றிக்கே -இவளை வென்றோம் என்னும் ஹர்ஷத்தாலே கையிலே திரு வாழியை சுழற்றி ஸ்மிதம் பண்ணி முதன்மை தோற்ற இருக்கிற இருப்பு –என்று பட்டர் அருளிச் செய்வர் –
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.
தயை பிறக்கும் படி பஃன அபிமானராய்த் தொழுது நீர் கறங்கு சக்கரக் கை கனிவாய்ப் பெருமானாய் இருக்கிற இருப்புக்கு அசலாளாய் நோவு படக் கடவுளோ -என்னுங்கோள் -அன்றிக்கே –
ந சாஸ்யே துஷ்டவா கஸ்தி -என்கிறபடியே நெஞ்சு சோதித்து தரிக்கைக்கு பரிகரம் உடையவர் –பஃன அபிமானராய் விழுங்கோள் என்றுமாம் -நிக்ருத ப்ரணத ப்ரஹவ
பணியீர் -அவற்றின் பக்கல் கௌரவ அதிசயம் இருக்கிற படி
அடியேன் இடரே.–அத்தலைக்கு அடியேன் என்கிறாள் அன்று -சேர்த்தவர்களுக்கு அடியேன் என்கிறாள்
இடர் – தான் நினையாது இருக்கையாலே நான் படுகிற துக்கத்தை -கலவி இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க இவள் தசையை கேட்டு அறிய வேண்டும்படி இ றே அவர் அளவு –

—————————————————————–

திரு வண் வண்டூரில் எழுந்து அருளி இருக்கிற எம்பெருமானைக் கண்டு சரீரம் கட்டு அழிந்து ஒருத்தி படும் பாடே -என்று சொல்லுங்கோள் என்று சில அன்னங்களை குறித்து அருளிச் செய்கிறாள் –

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

இடரில் போகம் மூழ்கி-இணைந்தாடும் மட அன்னங்காள்?
விஸ்லேஷ கந்தம் இல்லாத சம்ச்லேஷ ரசத்தில் அவகாஹித்து போகத்துக்கு ஏகாந்தமான வனத்திலே போந்து சம்போகம் செல்லா நிற்க -ராவணன் வந்து தோற்றினால் போலே இருக்கை யன்றிக்கே சம்போகத்துக்கு எல்லையில் செல்லப் பெற்றப் படி
இணைந்தாடும்-ஒரு தலை நோவு பட்டு தூது விட வராதே -இரண்டு தலையும் ஓக்க களிக்கப் பெறுவதே -ஒன்றுக்கு ஓன்று பவ்யமாகக் கொண்டு சஞ்சரிக்கை –
பேதைக்கு மார்த்த்வம் ஜென்ம சித்தம் -சேவலுக்கு கலவியால் அதின் படி யுண்டாயிற்று
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நிரந்தரமாக வேத கோஷம் கடல் கிளர்ந்தால் போலே இருக்கும் சிரமஹரமான ஊர் -கர்மணை வஹி சம்சித்தி மாஸ்த்திதா ஜநகாதாய -என்ன கடவ இவள் படை வீடு இ றே வேத கோஷம் மாறிக் கிடக்கிறது
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கடல் மேனி – கடல் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –பிரான் -பக்தானாம் என்று அவ்வடிவை ஆஸ்ரிதற்கு உபகரிக்குமவன் -கண்ணன் -அவர்க்கு கையாளாய் யாயிற்று அனுபவிப்பது
-நெடுமால் -வ்யாமுக்தனானவனை –அன்றிக்கே -சிரமஹரமான வடிவை எனக்கு உபகரித்து -பவ்யனாய் -இன்று எட்டாதே இருக்கிறவனைக் கண்டு -இது பட்டர் நிர்வாஹம் –
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–
உடம்பு கட்டு அழிந்து சிதிலையாய் அகவாய் சிதிலமாய் இங்கிதம் கொண்டு அறிய வேண்டாதே உடம்பிலே வெளியிட்ட படி -மானசமாய் மறைந்து போரும் அளவு அன்றிக்கே இருக்கை –ஒருத்தி -காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடியா நின்றது -என்றால் எய்தவன் அறியும் இ றே
நீராகா நின்றாள் என்று -உருகப் பண்ணி மறைந்து இருக்கிறவருக்கு அறிவியுங்கோள்-

———————————————————————

சில அன்னங்களை குறித்து அவ்விடம் புக்காரை எல்லாம் மறப்பிக்கும் விஷயமாய் இருக்கும் -நீங்கள் அங்கு புக்கால் என்னையும் நினையுங்கோள்  என்கிறாள் –

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து
ஊடுகையும் கிலாந்து இருக்கையுமாய் படும் துக்கத்தை அனுசந்தித்து -அபிமதை ஊடுகையாவது என் என்னில் -என்னைப் பாரா நிற்க பூவைப் பார்த்தாய் காண் -என்னுதல் -ஸ்நாதனானாய் என்னுதல் –உணர்த்துகை யாவது -அது தான் உனக்காக காண் என்று தெளிவிக்கை –
உடன் மேயும் மடவன்னங்காள்!
பிரிவில் இ றே சூழ்த்துக் கொடுக்க வேண்டுவது என்று உடனே திரியா நின்றது -இப்படி தூரதர்சியாய் இருப்பார்க்கு அன்றோ விச்சேதியாமல் அனுபவிக்கலாவது
மேயும் -இதம் மேத்ய மிதம் ஸ்வாது -என்னா நின்றன -ஊடல் உணர்தல் புணர்தல் -என்ற இம் மூன்றிலும் இவற்றுக்கு புணர்தலேயாய் சொல்லுகிறபடி –ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன் -என்று மூன்றையும் பிரயோஜனமாக சொன்னார்கள் தமிழர்
மட வன்னங்காள்-மடப்பம் -துவட்சி-சம்ச்லேஷம் அடங்க வடிவில் தொடை கொள்ளும் படி இருக்கை –துவட்சி பேடைக்கு ப்ரக்ருதி –சேவலுக்கு கலவியால் யுண்டாய் இருக்கிற படி -பரஸ்பரம் பவ்யதை யாகவுமாம் –
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும்
திணுங்கின வண்டல்களிலே சங்குகள் வந்து உறங்கா நிற்கும் -சேற்றுக்கு இறாய்க்கும் சங்குகள் நீர் உருத்தின வாறே கொழுத்த வண்டல்களிலே சேரா நிற்கும் –
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
தொடுக்கப் பட்டு தர்ச நீயமாய் சிரமஹரமான திருத் துழாயை திரு முடியில் யுடையனாய் அத்தாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவனைக் கண்டு –
நம் பாடு வருகைக்கு உறுப்பாக ஓப்பியா நிற்கும் -நீங்கள் அறிவிக்கும் அத்தனையே குறை -அன்றிக்கே பிரிவை ஒன்றாக நினையாதே வளையம் வைத்து ஒப்பித்து நமக்கு அபவ்யமாய் இருக்கிறவரை -என்றுமாம் –
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.
இப்போது முதலிகளாய் இருப்பர் -வழியே பிடித்து தொழுது கொடு சொல்லுங்கோள்
புணர்த்த கை -கூப்பின கை -கூட்டின கை –
அடியேனுக்கும் போற்றுமினே.-அவ் ஊர் உங்களையும் விஸ்மரிப்பிக்கும் -உங்கள் பரிகரமான என்னையும் நினையுங்கோள் -அவனை மறக்கும் படி பண்ணின தேசம் அன்றோ -போற்றுகை யாவது கௌரவித்து சொல்லுகை -தொழுத கைகளும் நீங்களுமாய் எனக்காகவும் ஒரு வார்த்தை சொல்ல வேணும்
கைகள் கூப்பிச் சொல்லீர் -பாதம் கை தொழுது பணியீர் -என்று பிராட்டியான தசையிலும் இவர்க்கு ஸ்வரூபம் மாறாதே செல்லுகிற படி-

—————————————————————-

சில குயில்களைக் குறித்து அவனுக்கு என் தசையை அறிவித்து அங்கு நின்றும் ஒரு மறு மாற்றம்  கொண்டு அருளிச் செய்ய வேணும் என்கிறாள் –

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
புன்னையின் கீழே நின்று குயில்களுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறாள் -ஏகாந்தமாக அனுபவிக்கிற சேர்த்தி நித்தியமாக வேணும் -தன் ஆர்த்தி கண்டு இரங்குகைக்கு பாசுரம் இது என்று இருக்கிறாள் –
யான் இரந்தேன் -ஸீதாம் உவாஸ-என்கிறபடியே புருஷகாரத்வாரா -எல்லாராலும் இரக்கப் படும் நான் இரந்தேன் -நியமிக்கிறேன் அல்லேன் -இரக்கிறேன்-இரப்பார் கார்யம் செய்து தர வேணும் என்னும் நினைவாலே
புன்னை மேலுறை பூங் குயில்காள்!
வைமா நிகரைப் போலே மனுஷ்ய கந்தம் தட்டாத படி உயர வர்த்திக்கை -இசை இ றே உயர்த்தியை காட்டுகிறது -நெய்தல் நிலத்தில் புன்னை படர்ந்து அன்றோ இருப்பது என்னில் –பணைத்து ஓங்கி இருக்கும் என்கிறது -வானார் வ ண் கமுகு என்றும் சேண் சினை ஓங்கு மரம் -என்றும் சொல்லுகையாலே -நெருப்பிலே சஞ்சரிப்பாரை போலே புன்னைப் பூவிலே வர்த்தியா நின்றன -அக்னி ஸ்தம்பனம் யுடையார்க்கு வர்த்திக்கலாம் இ றே
உறை -பூவின் மேலே நித்ய வாசம் பண்ணா நின்றன –நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நே மான் புஷப பல த்ருமான் என்று ராக்ஷஸே தர்ச நத்தோபாதி நினைத்து இருக்கும் தன்னைப் போல் அன்றே
கலவியால் உள்ள புஷ்கல்யம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை –
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
நீர் உறுத்தினால் சேற்றிலே யாயிற்று வாளை கள் களித்து வர்த்திப்பது -அவ் ஊரில் பதார்த்தங்கள் பிரிந்து துடிக்கை அன்றிக்கே களித்து வர்த்தியா நிற்கும் –
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
கையும் திரு வாழி யுமான அழகை நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்துக் கொண்டு போது போக்காய் இருக்கிறவனைக் கண்டு -ஆற்றல் என்று வலியாய்-ஆர்த்த ரக்ஷணத்துக்கு வலியை யுடைய திரு வாழி என்னுதல் -ஆற்றலை யுடையனாய் பிரிவுக்கு சிளையாதவன் என்னுதல் -ஒரு நீர்ச் சாவியான நான் கிடைக்க நிரபேஷர் ஆனவர்களுக்கு காட்சி கொடுத்து கொண்டு இருக்கிறவனை
ஆற்றல் -ஆஸ்ரிதர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதவனாய் இருக்கும் என்றுமாம் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை என்ன கடவது இ றே
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.
மறு மாற்றம் கொண்டு வந்து அருளிச் செய்ய வேணும் -எப்படிப் பட்ட மறுமாற்றம் என்னில் –
மையல் தீர்வதொரு வண்ணமே-என்னுடைய கிலேசமும் மோஹமும் தீருவதொரு பிரகாரம் -ததா குரு தயாம் மதி -என்கிறபடியே என் பக்கல் தயையைப் பண்ணி அருள வேணும் –

———————————————————-

சில கிளிகளைக் குறித்து அவனுடைய அடையாளங்களை சொல்லி இவ்வடையாளப் படியே கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள் –

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

ஒரு வண்ணம் சென்று புக்கு
வழியிலே நெஞ்சை அபஹரிக்கும் போக்யதையை யுடைத்து அதில் கால் தாழாதே ஒருபடி சென்று புக்கு -ச ததந்த புரத்வாரம் சமதீத்ய -என்னுமா போலே ஐஸ்வர்ய தரங்களாலே புகுகை அரிது வருந்தி புக்கு என்னவுமாம் –இப்போது முதலிகள் பிரம்பு வந்து விழும் அதுக்காக பிற்காலியாதே மேல் விழுங்கோள் என்கை
எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
நிவேதியத மாம் -என்கிறபடியே வடிவைக் காட்டுகிறாள் -அங்குத்தை வார்த்தை கேட்டால் அல்லது தரிக்க மாட்டாது எனக்கு -ஒரு நல் வார்த்தை சொல்லு –
சஹசரத்தோடே கூடி இருக்கையாலே அழகு பெற்று இருக்கிற கிளியே -மௌக்த்யமும் பேச்சும் வாயில் பழுப்பும் வடிவில் பசுமையும் அவனோடு போலியாய் இருக்கையாலே உன்னைக் கண்டு கொண்டு இருக்க அமைந்தது என்றுமாம் –
செரு ஒண் பூம்பொழில்-
செருவை ஒளிப்பதாய் தர்ச நீயமான பூம் பொழில் -சூழ் -என்னைப் பாராதே பூவைப் பார்த்தாய் -உன் உடம்பு பூ நாறிற்று வேற்று உடம்பு -என்று மிதுனங்களை சீறு பாறு என்னப் பண்ணும் என்னுதல் -சலம் கொண்டு மலம் சொரியும் என்று இசலி இசலி பூக்களை சொரியா நிற்கும் என்னுதல் –
செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
பொழில் உதிர்ந்த தாதுக்களாலே சிவந்த பர்யந்தங்களை யுடைத்து என்னுதல் -கடல் கரை யாகையாலே சிவந்த மணலீட்டை யுடைத்து என்னுதல் –
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
உனக்கு வழியில் விடாய் எல்லாம் கெடும்படி வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற திரு நிறத்தையும் அதுக்கு பரபாகமாக தாமரைத் தடாகம் பரப்பு மாற பூத்தால் போலே இருக்கிற அவயவங்களையும் காண இ றே புகுகிறது -கலவியோடு பிரிவோடு வாசி அற ஒருபடிப் பட்டு இருக்கிறவரை
கண்டார்க்கு விடாய் கெடும் வடிவு -அவ்வடிவிலே இழிந்தவர்கள் துவக்கு உண்ணும் முறுவல் -அநந்யார்ஹம் ஆக்கும் கண் -அநந்யார்ஹம் ஆனாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் விழும் திருவடிகள் –
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.
அஸ்தானே பய சங்கை பண்ணி யுத்த உன்முகமான திவ்ய ஆயுதங்கள் -இன்னார் என்று அறியேன் என்று கிட்டினாரை மதி கெடுக்கும் திவ்யாயுதங்கள் -திவ்ய அவயவத்தோ பாதி திவ்ய ஆயுதங்களும் அசாதாரண சிஹ்னம் ஆகை -யானி ராமஸ்ய சிஹ்னானி லஷ்மணஸ்ய சயாநிவை
திருந்தக் கண்டே -என்னைப் போலே மாநஸமாக அன்றிக்கே வ்யக்தமாக கண்டு –

—————————————————————–

ஒரு பாவையை நோக்கி அந்தரங்கையான எனக்கு வந்து சொல்லலாம் படி கண்டு ஒரு மறு மாற்றம் கேட்டு வந்து சொல்லாய் என்கிறாள் –

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
திருந்தக் கண்டு– பிறருக்கு சொல்லலாம் படி விசதமாகக் கண்டு
எனக்கு ஒன்றுரையாய்; -நீ வந்து சொல்லும் வார்த்தை கேட்டால் தரிக்க இருக்கிற எனக்கு -ஒரு வார்த்தை கேட்டு வந்து சொல்லாய்
ஒண் சிறு பூவாய!-அழ குக்கு ஒரு கிளி யோடு ஒத்து -பால்யமும் அத்தால் வந்த லாகவமும் இதுக்கு ஏற்றம் -போக விடுகை மிகை என்னும் படி கண்டு கொண்டு இருக்கும் அழகை யுடைத்தாய் -தூது போகைக்கு கார்ய காலத்தில் வடிவை சிறுக்க வேண்டாத படி -ஏற்கவே சிரமம் செய்து இருக்கிற லாகவத்தையும் யுடைத்தாகை –
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்-பெருந் தண் தாமரைக் கண்
அவனுடைய போக்யத்தையே அன்றிக்கே போக ஸ்தானமே அமைந்து இருக்கை -போக்தாக்கள் அளவன்றிக்கே பெருத்து சிரமஹரமாய விகாசம் செவ்வி குளிர்த்தி இவற்றையும் யுடைத்தான திருக் கண்கள் –
பெரு நீண் முடி நாற்றடந்தோள்
நித்ய ஸித்தமான உபய விபூதிக்கும் கவித்த முடி -திரு வண் வண்டூர்க்கு நிர்வாஹகன் என்று சூடின முடி என்றுமாம் -யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ-என்கிறபடியே இவள் தன்னை தோற்பித்து சூடின முடி என்னுதல் –
கற்பக தரு பணைத்தால் போலே நாலாய் சுற்று உடைத்தான் தோள்-சிரமஹரமான நிறத்தை யுடைத்தாய் ஸ்த்திரமாய் அபரிச்சின்னமான மேகம் போலே இருக்கும் வடிவு -நிறமேயாய் அகவாய் திண்ணியதாய் இருக்கிறபடி என்றுமாம் –
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–
அவ்வடிவைக் கண்டால் சர்வ நிர்வாஹகன் என்று தோற்றி இருக்கை -அகவாயில் நீர்மை இன்றிக்கே முதலிகளாய் இருக்கிறவரை என்றுமாம் –

———————————————————————

சில அன்னங்களை குறித்து -நீங்கள் சென்றால் ஏகாந்தத்திலே ந கச்சின் ந அபராத்யதி -என்றார் முன்னாக என்னிடையாட்டத்தை அறிவியுங்கோள் -என்கிறாள் –

அடிகள் கைதொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–6-1-9-

அடிகள் கைதொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
திருவடிகளை கையாலே தொழுது -அவனுக்கு மறுக்க ஒண்ணாதே இரங்க வேண்டும் செயல்களை செய்து –
சம்ச்லேஷத்தாலே பூவிலே அசையா நின்றுள்ள அன்னங்காள் –அன்னங்கள் செருக்கு இருக்கிறபடி -என் காலும் ஒரு பூவில் பொருத்தப் பண்ணினால் அன்று உங்களுக்கு இது ஏற்றமாவது -அக்னியில் கால் வைப்பாரைப் போலே என் கால் பூவில் என் கால் பூவிலே பொருந்துகிறது இல்லை
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
விடிவுகள் தோறும் ப்ரபாத சமயங்கள் தோறும் சங்க த்வநியாய செல்லா நிற்கும் -ஆசையுடையாரைக் காண சங்க த்வனியாலே அழைக்கிறாப் போலே இருக்கை -அவ்வோ காலங்களுக்கு அடைத்தவை எல்லாம் மாறிக் கிடக்கிறதே இங்கு -விடியாத ஊரிலே என்னை வைத்து -விடியும் ஊரிலே இருக்கிறவன்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.-
அவன் உபேக்ஷித்தாலும் விட மாட்டாத மஹா பாபத்தை யுடையேன் -நாட்டார்க்கு ஆச்வாஸ ஹேதுவான பகவத் ப்ரத்யாசக்தி பாதகமாம் படியான பாபத்தை பண்ணினேன் -பாவனமான விஷயம் எனக்கு பாப ஹேது வாவதே -மேரு மந்த்ர மாத்ரோ அபி -யான் நாம சங்கீர்த்தன தோ மஹா பயாத் விமோஷ மாப் நோதி ச சம்சய யன்னர-என்கிற விஷயம் இவளுக்கு பய ஹேதுவாய் இரா நின்றது
திறம் கூறுமின்; -ஒரு மஹா பாரதம் இ றே
வேறு கொண்டே –கூறுமினே –ஓலக்கத்தில் அன்றிக்கே ஏகாந்தத்திலே ந கச்சின் ந அபராத்யதி -என்பார் கூட இருக்க அறிவியுங்கோள் -ஏவ முக்தஸ்து ராமேணச லஷ்மணஸ் சமய தாஞ்சலி ஸீதா சமஷம் காகுத்ஸத்தமித்தம் வசன மப்ரவீத் –

—————————————————————–

சில வண்டுகளைக் குறித்து அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர் -அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்கிறாள் என்று அருளிச் செய்வார் -ஆளவந்தார்
இத்தலை இல்லை யாகில் அத்தலை யுண்டாக கடவது -பெண் பிறந்தார் கார்யம் எல்லாம் செய் தோம் என்று ஸ்மரித்து இருக்கிறவர்க்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி யுண்டு என்று சொல்லுங்கோள் என்கிறாள் -என்று எம்பெருமான் அருளிச் செய்வார்-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
அல்லாதாராபாதி என்று இராதே விசேஷித்து என் காரியங்களும் உங்களுக்கே பரம் என்று இருந்தேன் -தன் பெருமையை பார்த்து இலள்-இவற்றின் சிறுமையை பார்த்து இலள் -செல்லாமையை பார்த்து இரக்கிறாள்-
விசேஷண்து ஸூக்ரீவோ ஹா நு மத்யர்த்த முக்தவான் –
வெறி வண்டினங்காள்!– பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை -உங்கள் வடிவில் பரிமளமே பாதேயம் போன்று இருந்ததீ -என் உடம்பையும் இப்படி ஆக்கினால் அன்றோ உங்கள் உடம்பால் பிரயோஜனம் பெற்றி கோளாவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
என்னைப் போல் கலங்கி இருக்கும் இங்குத்தை பதார்த்தங்கள் ஒழிய தெளிந்த பதார்த்தங்களை காண் கிறி கோள் இ றே -வைடூர்ய விமலோதகா-என்கிறபடியே தெளிந்து இ றே அங்குத்தை பதார்த்தங்கள் இருப்பது -உபதத்தோ தகா நத்ய-என்று இ றே இங்குத்தவை இருப்பது
வட பார்ஸ்வத்திலே -கடலுக்கு தென்பால் இருக்கிற பிராட்டியை போல் யாயிற்று இவள் இருக்கிற இருப்பு
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
எதிர் இல்லாத போரை ராவணனையும் அவன் அரணாக இட்ட மதிலையும் துகளாகச் செற்று –
ருஷிகள் குடியிறுப்பு பெற்றோம் -பிராட்டி உடன் கூடப் பெற்றோம் இலங்கை விபீஷண விஷயமாகப் பெற்றோம் என்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.
எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் -ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –
உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

—————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் வல்லவர்கள் காமினிகளுக்கு காமுகர் போக்யராமா போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ப்ருஹ விஷயமாவார்  என்கிறார் –

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
மின்னை வென்று ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமான சேர்த்தியை யுடைத்தான திரு யஜ்ஜோபவீதத்தை யுடைய ஸ்ரீ வாமனனாய் –
வி நீதமாய் ஆகர்ஷகமான வடிவைக் காட்டி இசைவித்து -பூமிப் பரப்பை தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தன் உடைமை அவனதாக்கி அவன் தந்தானாம் படி பண்ணின பண்ணின மஹா வஞ்சகன் திருவடிகளில் –
ஸ்ரீ வாமன வ்ருத்தாந்த கதனம் மின்னிடை மடவாருக்கு தோற்றுகிற தோற்றரவுக்கு ஸூ சகம் -இதில் பிறந்த பிரணய ரோஷம் மின்னிடை மடவாராக்கைக்கு ஸ்ரீ வாமனனாய் வந்து தோன்ற கிழக்கு வெளுத்த படி -மஹா பலியை அர்த்தியாய்ச் சென்று வஞ்சித்து பூமிப் பரப்பு அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டால் போலே யாயிற்று பிரணய கோபத்தால் -அல்லோம் -என்றவர்களை திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட படி
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
ஈழம் பிரம்பு கொண்டது என்னுமா போலே பண் மிகுந்து இருக்கை -பாட்ட் யே கே யேச மதுரம் -என்கிறபடியே இயலும் இசையும் இனிதாய் இருக்கை
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–
இத்தை அப்யஸிக்க வல்லார்கள் -மின்னிடையவர்க்கு மதனர் ஸ் ப்ருஹ விஷயமாமா போலே -இவர் தூது விடுகிற விஷயத்துக்கு போக்யராவார் -அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன் -என்று விஷய ப்ராவண்யம் விநாச பர்யாயம் என்னுமவர் -இத்தை உத்தேச்யமாக சொல்லார் இ றே -ஸர்வதா சாம்யம் உள்ள இடத்திலே அது தன்னையே சொல்லக் கடவது –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: