திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-8-

இப்படி சிரீவர மங்கல நகரிலே புக்கு ஸ்வ அபிலஷி தத்தை-பெறாமையாலே -மிகவும் அவசன்னரான ஆழ்வார்
-தமக்கு ஏதேனும் தசை வந்தாலும் எம்பெருமான் திருவடிகளே சரணம் என்னும் இஜ் ஞானத்தை பெற்றோம் என்னும் ப்ரீதியாலே தரித்து
-ஸ்ரீ பரத ஆழ்வான் தனக்கு பெருமாளை பிரிகையாலே வந்த வியசனமும் -பெருமாள் திரு முடி சூடி அருள பெறாமையாலே வந்த வியசனமும்
-இதுக்கு நிமித்த பூதன் நான் என்று உண்டான லோக அபவாதத்தாலே வந்த வியசனமும் -எல்லாம் பெருமாள் திருவடிகளில் செல்லத் தீரும் என்று
மநோ ரதித்தால் போலே
-திருக் குடந்தையில் செல்ல நம் மநோ ரதங்கள் எல்லாம் பூர்ணமாம் என்று ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில்
வந்து புகுர -அவரும் திரு வாயைத் திறந்து தம்முடைய ஆர்த்தி தீர ஒரு வார்த்தை அருளிச் செய்தல் திருக் கண்களாலே நோக்குதல் அக்ரூரனை அழைத்து தழுவினால் போலே அழைத்து தழுவி அருளுதல் செய்யாமையாலும் -தம்மை ஸம்ஸாரஸ்த்தராக அனுசந்திக்கையாலும் மிகவும் அவசன்னராய் -எப்போதும் புஜியா நின்றாலும் பர்யாப்தி பிறவாத அவனுடைய ஸுந்தரியாதிகளை மிகவும் அநுஸந்தியா நின்று கொண்டு ஸ்தநந்த்ய பிரஜை ஸ்தந்யார்த்தியாய் நோவு பட்டு தாய் கால் கீழே செல்ல -அவள் அங்கீ கரியாதே உபேக்ஷித்தால் பிரஜை கதறுமா போலே தம்முடைய அபேக்ஷிதம் பெறாமையாலே கூப்பிடுகிறார்-

————————————————————-

உன்னுடைய ஸுந்தரியாதிகளாலே-என்னை நீராக்கா நின்றுள்ள உன்னைக் கண் வளரக் கண்டேன் இத்தனை -என்னைக் குறித்து ஆலோ காலாபாதிகள் பண்ணி யருளக் காண்கிறிலேன் -என்கிறார் –

ஆரா  அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

எப்போதும் அனுபவியா நின்றாலும் திருப்தி பிறவாத படி நிரதிசய போக்யனானவனே –
உன் பக்கல் யுண்டான ஸ்நேஹாதிசயத்தாலே அசேதனமான என்னுடைய சரீரமும் கூட அத்யந்த சிதிலமாம் படி பண்ணுகிற அபி நிவேச ப்ரகர்ஷத்தை யுடையவனே-
இப்படி ஸைதில்யத்தை எனக்கு பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்றுமாம்
மிகவும் கனக்கையாலேஅசைந்து வருகிற செந்நெல் கதிர்கள் கவரி வீசினால் போலேயாய் பெரு நீரை யுடைய திருக் குடந்தையில் என் நாதனான நீ -அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி கிடந்தது அருளினாய் -அது காண்பதும் செய்தேன் –செழு நீர் -என்று அழகிய நீர் என்றுமாம் –

———————————————————————

தன் திறத்தில் செய்து அருளின உபகாரத்தையும் ஆஸ்ரித விஷயத்தில் செய்து அருளும் உபகாரங்களையும் எம்பெருமானுக்கு அறிவித்து -ஏவம் பூதனான நீ என் அபேக்ஷிதம் செய்து அருளுகிறிலை என்று அவசன்னராய் கிம்கர்த்த வ்யதாமூடராய் கூப்பிடுகிறார் –

எம்மானே!  என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

எனக்கு நாதனுமாய் என்னோட்டை சம்ச்லேஷ கதாரகஸ்வரூபனாய் விஸ்லேஷ தசையிலும் நான் அவசன்னனாகாத படி உன் குணங்களால் என்னை நிர்வஹிப்பதும் செய்து ஆஸ்ரிதற்கு ஈடாக தேவ மனுஷ்யாதி சஜாதீயமாய் அதிசிலாக்யமான எல்லா வடிவையும் யுடையையாக வல்லையுமாய்-ஆஸ்ரித பரித்ராணாம் பண்ணப் பெற்றதால் நிரதிசய தீப்தி உக்தனுமாய் மேனாணித்து இருப்பவனே
சிவந்து பெருத்து இருந்துள்ள தாமரைப் பூக்கள் பெரு நீர் மேலே மலரா நின்றுள்ள திருக் குடந்தையில் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்கள் அலரக் காண் கிறி லேன் -நான் செய்வது என் –

——————————————————————

இப்படி கூப்பிட்ட இடத்திலும் -ஸ்வ அபிலஷிதம் பெறாமையாலே நம்முடைய நிர்வாஹம் நாமே செய்து கொள்வோம் என்று பார்த்து அருளினானாகாதே-என்று நினைத்து என்னுடைய அபேக்ஷிதங்கள் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது ஒரு பிரவ்ருத்தி இல்லை -உன்னை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகர் யுண்டாக சம்பாவனை இல்லை -என்னை நீயே விஷயீ கரிக்கப் பார்த்து அருளினாயோ -தானே யத்னம் பண்ணி வருகிறான் என்று விடப் பார்த்து அருளினாயோ –
நானே எத்தனம் பண்ணி உன்னைப் பெற அமையும் என்று இருக்கிறாய் யாகில் -என்னுடைய பந்தத்தால் யாதல் – ஹேத்வந்தரங்களாலே யாதல் வரும் ஒன்றால் தரிக்கும் பிரகிருதி அல்லேன் -ஸ்நேஹிகளுக்கு என் புகுகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி செம்பால் செய்த திரு மதிள் சூழ்ந்த திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிறவனே -என்னுடைய ஆத்மா உண்டாயச் செல்லும் நாள் எத்தனை நாள் உண்டு -அத்தனை நாளும் உன் திருவடிகளை பெற்றுச் செல்லும் படி பார்த்து அருள வேணும் –

————————————————————–

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்காக திருக் குடந்தையில் வந்து கண் வளர்ந்து அருளுகிற உன்னை -காண வேணும் என்று அலமந்து காணப் பெறாமையாலே நோவு படா நின்றேன் என்கிறார் –

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே!
எத்தையேனும் அளவுடையார்க்கும் முட்டப் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருந்துள்ள குண பிரதையை- யுடையையாய் அவ்வளவும் அன்றிக்கே உன் குண விபூதியாதிகளுக்கும் முடிவு இல்லாதவனே
எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
ஸமஸ்த லோகங்களையும் சேஷமாக வுடைய அத்விதீயனான சர்வேஸ்வரனே-சர்வாத்மாக்களையும் தன் அழகாலே தோற்பித்து அடிமை யாக்கிக் கொள்ள வல்ல வி லக்ஷணமான திரு உடம்பை யுடையவனே என்றும் சொல்லுவர்
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
உன் திருவடிகளுக்கு மிகவும் ஸ் நே ஹிகள் ஆனவர்களை பிரிய மாட்டாமை-அவர்களதான திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளினவனே –
நிரதிசய போக்யனான உன்னை நினைத்த படி அனுபவிக்கப் பெறாதே அத்யந்தம் அவசன்னனான நான் காண வேணும் என்று
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–
அலமந்து -இவ்வார்த்திக்கு வந்து தோற்றி அருளாது ஒழி யான் என்று பார்த்து வர சம்பாவனை யுள்ள ஆகாசத்தை நோக்கி எங்கும் காணாமையாலே அதி ஸ்நேஹிதிகளை போலே அழுவதும் செய்வன்-க்ருபணரை போல் தொழுவதும் செய்வன்-

———————————————————–

உன்னைக் காண வேணும் என்னும் சாபலத்தாலே தய நீய ப்ரவ்ருத்திகள் பலவும் பண்ணியும் காணப் பெறுகிறிலேன்  -நீயே உன் திருவடிகளை நான் பெறும் வழி பார்க்க வேணும் என்கிறார் –

அழுவன்  தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–5-7-5-

அதி பாலரைப் போலே அழுவதும் செய்வன்-பேர் அறிவாளரைப் போலே தொழுவதும் செய்வன் -சாபலத்தின் மிகுதியால் என் செய்தால் கிடைக்கும் என்று அறியாதே கூத்தாடிப் பார்ப்பன் -பரவசனாய் பாடுவதும் செய்து அவ்வளவும் அன்றிக்கே கூப்பிடுவதும் செய்வன் -நீ வாராது ஒழிந்தாலும் என்னை விடாதே இருக்கிற அதிமாத்ர ஸ்நேஹத்தாலே வர சம்பாவனை யுள்ள தேசத்தை பார்த்து வரக் காணா மையாலே என் செய்தமானோம் என்று லஜ்ஜித்து கவிழ்ந்து இருப்பன்-பக்தியை வினை என்பான் என் என்னில் -அநிஷ்டவாஹம் ஆகையாலே –
பெருத்து அழகிதான் நீர் நிலத்தை யுடைய திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளினவனே -அழகிய கண்களாலே நோக்கி ஹேயனான என்னை உன் திருவடிகளில் சேரும்படி பார்த்து அருள வேணும்
செந்தாமரைக் கண்ணா -என்றது கண்களாலே நோக்க வேணும் என்னும் கருத்தால்-

————————————————————————-

உன்னுடைய போக்யத்தையிலே அகப்பட்டு இருந்துள்ள எனக்கு இதர விஷயங்களோடு சேருகிறது இல்லையான பின்பு -நீயே பிராப்தி பிரதி பந்தகங்களையும் போக்கி உன்னை பெறுவதொரு விரகு அறி யில் அத்தை தப்பிலும் நான் அறியாத படி பார்த்து அருள வேணும் என்கிறார் –

சூழ்  கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

உன் திருவடிகளில் தாஸ்ய ரசம் முறை என்னும் இடம் அறிந்து வைத்து துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு இன்னம் எத்தனை நாள் அகன்று இருக்கக் கட வேன்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து ஒரு நாளும் விஸ்லேஷ கந்தம் இன்றிக்கே என்னை உன்னை புஜிக்க பெற்றார்கள் என்னும் இந்த சிலாக்கியமான புகழை யுடையவர்களதான திருக் குடந்தையில் கண் வளர்வதும் செய்து அனுபவிப்பார்க்கு ஒரு நாளும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யனுமாய் அறிவினுடைய பிரயோஜன ரூபனுமாய் முகக்கொள்ள ஒண்ணாத படி இருக்குமவனே –

————————————————————-

வெறும் உன் கிருபையால் உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி என்னை ஆத்மாந்தமான அடிமையால் அல்லது செல்லாதபடி பண்ணி யருளினாய் -இனி உன் திருவடிகளை ஒழிய செல்லாத்தான பின்பு திருவடிகளைத் தந்து பின்னை சம்சாரத்தை அறுக்க வேணும் என்கிறார் –

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான ஒளியை யுடையையாய் -ஸ்ப்ருஹணீயமான திருக் கண்களையும் சிரமஹரமான வடிவையும் யுடையையாய் எரியேய்ந்த பவளக் குன்று போலே உஜ்ஜவலனுமாய் -நாலு திருத் தோள்களையும் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொள்ளுவதும் செய்து -உன் கிருபையால் என்னை ஆத்மாந்தகமாக அடிமை கொள்ளுவதும் செய்து -அதுக்கடியாக பிராட்டியோடும் கூடத் திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே –

—————————————————————

தரியேன் என்ற பின்பும் எம்பெருமான் வந்து விஷயீ கரியா விட்டவாறே அவனை அனுசந்திக்க ஒண்ணாத படி கலங்கின ஆழ்வார் -ரக்ஷிக்கிலும் ரக்ஷிக்கிறாய் -தவிரிலும் தவிருகிறாய் -அது நிற்க -என்னை உன் திருவடிகளை நினைக்க வல்லனாம் படி பண்ணி யருள வேணும் -இதுவே எனக்கு இப்போது வேண்டுவது என்கிறார் –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னை விஸ்லேஷித்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு-வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்
வளைந்து இருந்துள்ள வாயையுடைய திரு வாழி யாகிற திவ்ய யாயுதத்தை ஏந்திற்று ஆஸ்ரிதருடைய ஆபன் நிவாரண அர்த்தமாக வன்றோ
அதுக்கும் மேலே அத்யாச்சர்யமான அழகோடு கூட திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிறது ஆஸ்ரிதற்கு அணித்தாக வாக அன்றோ
விரஹ வியசனத்தின் மிகுதியால் சரீரம் தளர்ந்து பிராணனும் சிதிலமாய் போகிற இப்போது தரித்து ஏகாக்ரனாய் உன் திருவடிகளை அனுசந்திக்க வல்லனாம் படி நீயே பண்ணி யருள வேணும்-

——————————————————————

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காகத் திருக் குடந்தையில் வந்து கண் வளர்ந்து அருளி -என்னை அடிமையிலே இசைவித்து -அத்தால் அல்லது செல்லாத படி பண்ணி யருளின நீ உன்னைக் கண்ணாலே காணலாம் படி வர வேணும் என்கிறார்

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

அம்மானே -பெரியோனே
அயர்வறும் அமரர்களுக்கு தலைவனான ஸ்ரீ சேனாபதி யாழ்வானுக்கு தலைவனாய் -சகல ஜகத்துக்கும் காரண பூதனான சர்வேஸ்வரனுமாய் திக்குகளில் செல்ல ஓளி விடா நின்றுள்ள சிலாக்கியமான ரத்தினங்கள் சேரும் திருக் குடந்தையில் வருத்தம் இன்றிக்கே லோகம் எல்லாம் ஆஸ்ரயிக்கும் படி கிடந்தவன் –

—————————————————————–

திருக் குடந்தையில் புகவே நம்முடைய சகல துக்கங்களும் போய் -அசேஷ மநோ ரதங்களும் பெறலாம் என்று புக்க ஆழ்வார் அப்படி பெறாமையாலே -இன்னம் எத்தனை இடம் தட்டித் திரியக் கட வேன் என்கிறார் –

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

எனக்கு புறம்பு தோற்றாதே உள்ளே அனுபவிக்கலாம் படி இருக்கிற ஆச்சர்ய பூதனே-எனக்கு புறம்பு அனுபவிக்க ஒண்ணாத படி யான அருவாய்க் கொண்டு வருமவனே -என்றுமாம்
நித்ய ஸித்தமான வடிவை யுடையையாய் நிரதிசய போக்யனாய்க் கொண்டு என் ஹிருதயத்திலே தித்திக்குமவனே
உன்னை அனுபவிக்கைக்கு விரோதியுமாய் ஒருவராலும் தீர்க்க ஒண்ணாதே இருக்கிற வினைகளைத் தவிர்த்து என்னை ஆளுவதும் செய்து என்னை விஷயீ கரிக்கைக்காக திருக் குடந்தையில் வந்து புகுந்து அருளினவனே –

—————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழி பத்தும் பழுது அறக் கற்க வல்லார் காமினிகளுக்கு காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

உழலை  என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

உழலை போலே இருக்கிற எலும்பை யுடைய பூதனையுடைய முலை வழியே அவளுடைய பிராணனை வாங்கின அவன் திருவடிகளே தம்முடைய இஷ்டங்கள் பூரிக்கைக்கு உபாயம் என்று அத்யவசித்த ஆழ்வார் -தமக்கு தத் பிராப்தி விரோதி நிரசனம் பண்ணுவானும் அவனே என்று கருத்து –
குழலின் மலிய– திருக் குழல் ஓசையைக் காட்டிலும் இனிதாக என்றபடி –

———————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: