திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-4-

நாடும் இரைக்கவே நாம் மடலூர்ந்தும் -என்று பெரிய த்வரை இறே கீழ் சென்றது -மடல் எடுக்கை தான் அவனை பெறுகையோபாதி தேட்டமாம் படி
பலஹானி பிறந்து இவ்வளவிலே ராத்திரி வந்து கைக்கொண்டு -அது தான் சந்த்யா மாத்திரம் அன்றிக்கே-மத்திய ராத்ரியாகி –
சராசரங்கள் அடைய உறங்கி -ஹிதம் சொல்லும் பந்துக்களும் -இவள் ஆர்த்தி பொறுக்க நாட்டாமை பரவசராய் விழுந்து –
உசாத்துணையும் இன்றிக்கே தனிப்பட்டு -வியசனத்துக்கு அடியான தன்னுடைய பாபத்தையும் -இஸ் சமயத்தில் முடிய ஒண்ணாத
பாரதந்தர்யத்தையும் அனுசந்தித்து -விஷஸ் யதாதா நஹிமே அஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்யவா நேஸ்மநி ராக்ஷஸஸ்ய -என்று
இத்தனை விஷம் தருவாரையும் காண்கின்றிலேன்-விஷம் போலே நின்று கொல்லுகை அன்றிக்கே அப்போதே முடியும் படி –
ஒரு சஸ்திரம் தருவாரையும் காண்கின்றிலேன் -அவரைப் பிரிந்து உயிர்க் கொலையாக்கும் ராவண க்ருஹத்தில் நற்கொலை யாக்கும்
பரிகரத்தை தருவார் சில தார்மிகரைக் கிடைக்குமோ -என்னும் தசையாய் -பிரளய ஆபத்து தசையில் யுதவும் புருஷோத்தமனுடைய
குணங்களை அனுசந்தித்து -அவையும் எனக்கு கார்யகரமாவது ஒழிவதே -என்று வேண்யுத்க்ரநத்திலே ஒருப்பட்ட பிராட்டி போலே
முடிவு தேட்டமான தசையில் ஈஸ்வரன் ஜகத் ரக்ஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே யோக நித்திரை பண்ணா நின்றோம் -என்று
தன்னுடைய ரக்ஷண உத்தியோகத்தை ஸ்மரிப்பிக்க -நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனான பின்பு
இனி ஒரு தட்டு இல்லை என்று அவன் குண ஞானத்தால் தரித்து தலைக் கட்டுகிறது-

—————————————————————-

பிரளய ஆபத் சகனானவன் -என்னை விரகப் பிரளயம் கொள்ள வந்து உதவிற்று இலன் -இனி சத்தையை நோக்குவார் யார் என்கிறாள் –

ஊரெல்லாம்  துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி –
சிலருடன் போது போக்க ஒண்ணாத படி ஊராக உறங்கிற்று -உணர்ந்து இருப்பார் சிலரும் உறங்குவார் சிலரும் இன்றிக்கே இருந்ததே குடியாக குடியாக உறங்கிற்று –
இவள் பிறந்த ஊர் ஆகையால் இவள் தசையை அனுசந்தித்து சோகத்தால் சோர்ந்து கிடந்த படி –நாக பாசத்தின் அன்று போலே ஓன்று இரண்டு பேராகிலும் உணர்ந்து இறுக்கப் பெற்றதோ -பழி சொல்லுவாரும் இன்றிக்கே -ஹிதம் சொல்லுவாரும் இன்றிக்கே -உசாத் துணையும் இன்றிக்கே -இருக்கிற படி -புறம்பு போய் ஒன்றைக் கண்டு தரித்தாலோ என்னில்
உலகெல்லாம் நள்ளிருளாய்-
பிரளயம் கோத்தால் போலே பதார்த்தங்கள் அடைய இருள் மறைத்தது
நள்ளிருள் -செறிந்த இருள் -என்னுதல் -நடு இருள் என்னுதல்-சகல பதார்த்தங்களும் ஒடுங்கினால் ராத்திரிக்கு அசாதாரணமான ஒலி என்னுதல் – பதார்த்த தர்சனம் பண்ணியும் தரிக்க ஒண்ணாத படியாய் யாயிற்று -என்கை –
நீரெல்லாம் தேறி –
ஜல சர தத்துவங்களும் த்வனி அடங்கி-ஸ்ரவண இந்த்ரியத்துக்கு முதலிலே விஷயம் இல்லை என்கை –ஆக மூன்று பதத்தாலும் வாக் இந்த்ரியத்துக்கும் சஷூஸ்ஸூ க்கும் ஸ்ரவணத்துக்கும் விஷயம் இல்லை என்கை –பகலில் வந்தால் இந்திரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களில் பாலி பாய்ந்து ஆற்றாமை மட்டம் செய்யும் -அங்கனம் ஒன்றும் இன்றிக்கே சர்வ இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே யாய் ஆற்றாமை விஞ்சி இருக்கும் இ றே
ஓர் நீளிரவாய் நீண்டதால்-
பகல் விரவிய இரவு அன்றிக்கே இரவே யாக -மனுஷ்ய ராத்திரியில் காட்டிலும் தேவர்களுடைய ராத்திரி நீண்டு இருக்கும் இ றே -அதுக்கும் ஒரு அவதி உண்டு இ றே -அங்கனம் ஓர் அவதி காண் கிறி லோம்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்-
பிரளய ஆபத்தில் தரம் பாராதே எல்லாரையும் ரஷித்தான்-ஜகத்துக்கு எல்லாம் வந்த ஆபத்து போருமாயிற்று இவளுக்கு வந்தது – -பிரளயம் கொள்ளப் புக்க ஜகத்து மடல் எடுக்க புக மாட்டாமை யன்றே ரஷித்தது-தம் தம்மால் பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்துக்களில் உதவுமவன் அன்றோ -அன்று ஒருவர் அர்த்தியாது இருக்க ரஷித்தான் -இன்று இரந்ததே குற்றம் –
நம் பாம்பணையான்-ஆர்?எல்லே! வல்வினையேன்-
உடம்பிலே அணைய வேணும் என்பார்க்கு உடம்பு கொடுக்குமவன் -சம்சாரிகளுக்கு செய்யுமதும் பெற்றிலேன் -அநந்ய பிரயோஜனர்க்கும் செய்யுமதும் பெற்றிலேன்-சாமான்ய ரக்ஷணமும் இல்லை யாயிற்று -விசேஷ ரக்ஷணமும் இல்லையாயிற்று
நம் -சம்ச்லேஷ தசையில் கையாளாகத் தாழ நின்று பரிமாறின படி -அத்தாலே கூப்பிடுகைக்கு வேண்டுவது பண்ணிப் போனான் அத்தனை
வாரானால் -வருகிறிலன் -வயிற்றிலே வைத்து ரக்ஷிக்க வேண்டா -உடம்பிலே அணைக்க வேண்டா -வந்து முகம் காட்ட அமையும் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவா -தமஸ் சர்வஸ் யலோகஸ்ய ஸமுத்யன் நிவ பாஸ்கர
ஆவிகாப்பார் இனியே.–
பிரளயத்தின் கையிலே அகப்பட்டாரை போலே இந்த ராத்ரியின் கையிலே அகப்பட்டு கிடக்கிற நான் பிராண ரக்ஷணம் பண்ணவோ -எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ -என்று எனக்கு முன்னே தளருகிற தோழி காக்கவோ -ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ -பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ
எல்லே -என்னே –ஆச்சர்யத்தாலே யாதல் -தோழி சந்நிதி இன்றிக்கே இருக்க -வாசனையால் அவளை சம்போதிக்கிறாள் ஆதல் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் ஆனவன் உதவாதபடியான மஹா பாபத்தை பண்ணினேன்
வல் வினையேன் ஆவி -விரஹத்துக்கு சளையாதே ஆவி -பிரிவே ஹேதுவாக நூறே பிராயம் என்னும் ஆவி
இனி –யார் -ஆபத்துக்களில் உதவிப் போருமவன் உதவாத பின்பு பாதகர் என்னை நோக்கவோ –

———————————————————–

இத்தசையில் உதவக் கடவ கிருஷ்ணனும் வருகிறிலன் -நெஞ்சே நீயும் அபவ்யமாகா நின்றாய் -என்கிறாள்

ஆவி  காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆவி காப்பார் இனியார்? –
உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –
ஆழ்கடல் மண் விண் மூடி-மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்-
அபரிச்சேத்யமான கடலையையும் பூமியையும் ஆகாசத்தையும் மறைத்து -அவ்வளவிலும் பர்யவசியாதே மஹத்தான விகாரத்தை யுடையதாய் -நித்ய விபூதியையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது -ஸ்ரீ விஸ்வரூபம் காட்டினாள் போலே சர்வசக்தி செய்யுமத்தையும் செய்யா நின்றது –அத்விதீயமாய் அதி பிரபலமான ராத்ரியாய் முடிவு காண போகிறது இல்லை -நூறு ஆயிரம் ஆதித்யர்களாலும் பேதிக்கப் போகாத ப்ராபல்யம் -இருளுக்கும் இராத்திரிக்கும் வாசி தெரிவிக்க மாட்டாமையாலே -இருளை இராத்திரி என்கிறாள் –
காவி சேர் வண்ணன் –
புல்லேந்தீவர பத்ராபம் –என்கிற நிறத்தை யுடையவன் –இருளோடு செறிந்த நிறம் நிறம் ஆகையால் -இருளோடு செறிந்து வரலாம் கிடீர் கம்சன் காவலாக வைத்த துஷ்ப்ரக்ருதிகள் கண் படாத படி -இருளிலே வந்து அவதரித்தவர் -அன்று தாமஸ பிரக்ருதிகளை போக்க வந்தவனுக்கு இன்று இந்த தமஸை போக்கல் ஆகாதோ
என் கண்ணனும் வாரானால்
முன்பு இராத்திரிகளில் வந்து உதவுமவன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.-
அவனும் என்னுடையவனாய் இ றே உதவாது ஒழிந்தது -ஆபத்துக்கு உதவாதவனாய் யன்றே -அது உனக்கும் ஒக்கும் இ றே -என் கண்ணன் என்னலாம் படி இ றே அவன் பவ்யதை-பவ்யரானார் அடங்க அபவ்யராம் பாவத்தை பண்ணினேன் –
நீயும் பாங்கு இல்லையே
சேஷியாய் ஸ்வ தந்த்ரனானவன் செய்யுமத்தை பார தந்தர்யமே ஸ்வரூபமாய் இருக்கிற நீயும் செய்ய வேணுமோ -பிரணயித்வத்தை விட்டேன் என்னலாம் ஸ்வ தந்த்ரன் ஆகையால் -உனக்கு அங்கனம் இருப்பது ஓன்று உண்டோ –

———————————————————–

சகல துக்கங்களையும் கெடுத்து உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வ பாவனான காகுத்ஸனனும் வருகிறிலன் -பரதந்த்ரை யாகையாலே முடியவும் விரகு பெறுகிறிலன் என்று இன்னாதாகிறாள்

நீயும்  பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்-ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
மன ஏவ என்கிறபடியே உன்னை ஒழிய ஒரு கார்யம் செய்ய ஒண்ணாத படி பிரதானமான நீயும் பாங்கு ஆகிறது இல்லை -முதலிலே நெடிதான இராத்திரியும் -முடிவு காண ஒண்ணாதே வளரா நின்றாலும் குறைந்து வரலாம் இ றே -அங்கனம் செய்யாதே நிலை பெறுகிறது இல்லை -அவ்வளவு அன்றிக்கே ராத்திரி என்கிற பேரை பொகட்டு கல்பம் என்கிற பேரை யுடைத்தாய் -அவ்வளவிலும் தலைக் கட்டாதே நெடுகா நின்றது –
காயும் கடும் சிலை
பிரதி பக்ஷத்தை தக்தமாக்குவதாய் -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத சிலை -அவஷ்டப்ய மஹத்தநு-வில்லை அணைக்கவே பணி போரும்படி இ றே இருப்பது –
என் காகுத்தன் வாரானால்
பிராட்டிக்கு உதவியது தனக்கு உதவிற்று என்று இருக்கிறாள் -ஒரு நாள் ஓர் ஆபத்தில் உதவினார்க்கு பின்பு உதவல் ஆகாதோ -தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்ன கடவது இறே
கீழே கண்ணனும் வாரானால் -என்றாள்-அபி ஷிக்த ஷத்ரிய புத்ரன் அல்லேன்-என்ற அவன் வரத் தவிர்ந்தாலும்-முடி சூடி நோக்கிப் போந்த குடியிலே பிறந்ததற்கு வர வேண்டாவோ
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றார்கள் இ றே -பெண்கள் இருந்த இடத்தே சென்று விரோதியைப் போக்கினவன் வருகிறிலன் -அபியாதா ப்ரஹர்த்தாச-என்ன கடவது இ றே –
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே
அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-
வல்வினையேன் –
அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே
பெண் பிறந்தே –
முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

———————————————————————

கண்டார்க்கு பொறுக்க ஒண்ணாத வ்யஸனம் செல்லா நிற்க வரையாதே ரக்ஷிக்கும் ஸ்ரீ வாமனன் வருகிறிலன் -என்னுடைய சிந்தா வ்யத்தையே போக்குவார் என்கிறாள் –

பெண்  பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று-
பர தந்தரைகளாய் ம்ருது ப்ரக்ருதிகளாய் பிறந்த ஸ்த்ரீகள் -அனுபவிக்கும் மஹா துக்கம் -பாரதந்தர்யத்தாலே முடியவும் மாட்டாதே -மார்த்வத்தாலே கிலேசமும் பொறுக்க மாட்டாதே ஒழிகை –
இந்த துக்கத்தை பொறுக்க மாட்டேன் என்று -சர்வ ரக்ஷகன் பொறுக்கும் அத்தனை போக்கி -ரக்ஷண மாத்திரத்திலே அந்வயித்தவர்கள் -பொறுக்க வல்லார்களோ -வகுத்தவன் பொறுக்கும் இத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லர்களோ -வகுத்தவன் பொறுக்கும் அத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லார்களோ –உத்தர்த்தும் அர்ஹஸி ஹரேத் புருஷோத்தமோ அஸி -என்று புருஷோத்தமன் பொறுக்கும் அத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லர்களோ
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் –
தோற்றத்தில் துக்க நிவ்ருத்தியை பண்ணுமவன் –
ஈஸ்வர ஆஞ்ஜையால் இருந்த இடத்தில் இராதவனும் தோற்று கிறிலன் –
ஒளித்தான் -ஈஸ்வரபடர் காண ஒண்ணாத படி மறைந்தான் -இத்தர்மஹாநி காண்பதில் ஈஸ்வர ஆஞ்ஞாதி லங்க நத்தால் வந்தது அனுபவிக்க அமையும் -என்று இருந்தான்
இம் மண்ணளந்த-
இப்பூமிக்கு என்ன ஆபத்து உண்டாய் அளந்தான் –இப்பூமி மஹா பாலி கையில் அகப்பட்டது எல்லாம் இவள் விரஹத்தின் கையில் அகப்பட்டாள் யாயிற்று -பூமியை வரையாதே அளந்தவன் –
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-
மஹாபலியால் நெருக்கு உண்ட பூமியின் கிலேசம் போக்க குளிர நோக்கின கண்ணின் பரப்பை யுடையனாய் -அதின் கிலேசம் போனதினால் யுண்டான ப்ரீதியால் பண்ணின ஸ்மிதத்தாலே சிவந்த அதரத்தை யுடையவன் -பிறர் பிரயோஜனத்துக்கு இரங்குமவன் தன பிரயோஜனத்தை விட்டு வைப்பதே
நம் காரேறு வாரானால்-
பூமியின் கிலேசம் போனது தன் பேறு என்னும் இடம் நிறத்தில் தோற்றி-இது கைப் பட்டது -என்று மேனாணித்து இருந்தவன் –
வாரானால் -இரக்க வேண்டா -அளக்க வேண்டா -வடிவு அழகைக் காட்ட அமையும் –
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–
வேதங்களுக்கு நிலம் அல்லாத பகவத் விஷயத்தை யுள்ள படி பேசினார் -தம்முடைய சிந்தா வ்யதை தம்முடைய ஞானத்துக்கு அவிஷயம் ஆயிற்று -அபரிச்சின்னம் என்னுமது ஒழிய இவ்வளவு என்ன ஒண்ணாது
தீர்ப்பாரார்
வரையாதே சர்வ ரக்ஷகனானவன் உபேக்ஷித்த பின்பு யாராலே போக்கலாம்
என்னையே –
மறக்கவும் மாட்டாதே நினைக்கவும் மாட்டாதே இருக்கிற என்னை -இது இவளுக்கே யுள்ளது ஓன்று –

——————————————————————

ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

ஆர் என்னை ஆராய்வார்?
தன்னை நலிந்த ராக்ஷஸிகளையும் கூட -அஞ்சாதே என்று ஆராய்ந்தாள் இ றே -ஆர் என்னை ஆராய்வார்? -என்கிறாள் –
அன்னையரும் தோழியரும்-
இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்-
அன்னையரும் தோழியருமான நீங்கள் -என்னே என்னாதே -என் பட்டாய் என்னாதே என்னுதல்-அன்றியே
நீர் -இது ஒரு நீர்மையே –அவனுக்கு தன்னை ஒழியச் செல்வதாய் இருக்க -அவனை ஒழிய தனக்குச் செல்லாத படியாய் இருக்கிற இது ஒரு ஸ்வ பாவமே
என்னே -இது ஒரு ஆச்சர்யம் ஆதல் –
நீளிரவும் துஞ்சுவரால்-
நெடிய ராத்திரி எல்லாம் எனக்கு உறங்காது ஒழிகை ஸ்வ பாவமாய் இருக்கிறாப் போலே அவர்களுக்கும் உறங்குகையே ஸ்வ பாவம் யாயிற்று -பிரதம யோஜனையில் – துஞ்சுதிர் என்னும் அர்த்தத்தை காட்டக் கடவது –
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்-
வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் -தாஸாம் ஆவீர்பூத் -என்று ஒரு நீர் சாவியிலே வர்ஷித்தால் போலே தோற்றுமவன் வருகிறிலன் –
நம் கண்ணனும்-பெண்களுக்கே யுதவுமவன் வருகிறிலன் –
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.
காரியத்தால் நான் முடியச் செய்தேயும்-இன்னாள் இன்னாள்-என்கிற பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை –அவனோடே ஒத்ததீ இதுவும் –அவன் வாராதாவோபாதி இதுவும் போகிறது இல்லை -இத்தால் சென்று அற்ற நிலையைச் சொல்லுகிறது -சப்த அவசேஷை யானேன் என்றபடி –
வல்வினையேன் -முடிகை தேட்டமான வளவிலும் முடிய பெறாத பாபத்தைப் பண்ணினேன் –
பின் நின்றே-நான் முடிந்த பின்பும் பின்னே நின்று பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை
நாமரூபே வ்யாகரவாணி -என்கிறபடியே ஓக்க வந்தால் ஒக்கப் போகலாகாதோ –

———————————————————————

விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாத  பிராணனை   ரஷிப்பார் ஆர் -என்கிறாள் –

பின் நின்ற  காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –
புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –
நெஞ்சம் பெரிதடுமால்-
நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –பாதகம் பாத்யத்தின் அளவன்று-என்கை -அக்னி போல் தனக்கு ஆச்ரயமான நெஞ்சை தக்தமாக்கா நின்றது –
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்-
பதார்த்தங்கள் தோற்றாத படி முன்னே நின்று ராத்ரியாகிற கல்பம் கண்ணை மறையா நின்றது -பிரேம வியாதியும் ராத்திரியும் முன்பும் பின்புமாய் க்ருத சங்கேதங்களாய் நலிகிற படி உட்கண்ணும் அழிந்து புறக் கண்ணும் அழிந்தது -க்ராஹகமுமாய் ப்ரகாசகமுமான கண்ணை க்ராஹ்ய மான இருள் மறையா நின்றது
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-
ஆர்த்த த்ராணர்த்தமாக எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறவன் -இவ்விருள் போக்குகைக்கு ஆயுதம் எடுக்க வேண்டா என்கை –
எம் மாயவனும்-ஜயத்ரவதத்தின் அன்று பிரகாச த்ரவ்யமான திரு வாழி யைக் கொண்டு தமஸை அழைக்குமவன் -நிவர்த்தகத்தை கொண்டு நிவர்த்தியத்தை அழைக்குமவனுக்கு அத்தைக்கு கொண்டு நிவர்த்தியத்தை போக்கத் தட்டு இல்லை இறே-எம் என்று கிருஷ்ணாவதாரத்தில் தமக்கு உண்டான அசாதாரண்யத்தை சொல்லுகிறார்
வாரானால் -பிரதிஞ்ஜையை யழித்து விருத்தத்தை யனுஷ்ட்டிக்க வேண்டா -வந்து வடிவைக் காட்ட அமையும் என்கை -வருகைக்கு இச்சை இல்லாமை போக்கி வருவோம் என்றால் அருமை இல்லை இ றே
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–
இப்படியே முடியாதே நோவு படுத்தா நின்றுள்ள உயிராகிய சத்ருவை போக்குவார் ஆர் -முடியும் அளவிலும் நூறே பிராயமாய் இருக்கிற ஆத்மவஸ்துவைப் போக்கி ரஷிப்பார் ஆர் -அச்சேத்யோயம் அதாஹ் யோயம் -என்கிற வசனத்தைக் கொண்டு தன்னை முடியாதது ஒன்றாக நினைத்து நலியா நின்றது -பிரிவிலும் முடியாத என்னுயிர்ப்பகையை நீக்கி என்னை நோக்குவார் ஆர் -என்று ஒரு தமிழன் இட்டு வைத்தான் –
இவ்விடத்தே -சர்வ ரக்ஷகனும் உதவாத தசையில் –

————————————————————

ராத்திரி யாகிற யுகம் செல்லா நிற்கவும் எம்பெருமான் வந்து தோற்றாது ஒழிந்த வாறே -அநிமிஷர் ஆகையால் உறவு முறையாரைப் போலே -இவ்வவஸ்தையிலே உறங்காதே நீர்மையை யுடையருமாகையாலே -தெய்வங்காள் என் செய்கேன் -என்று தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் –

காப்பார்  ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

காப்பார் ஆர் இவ்விடத்து?
ரக்ஷகன் உதவாத தசையில் இனி பாதகர் நோக்கவோ -நாம் நோக்கிக் கொள்ளவோ -அவனத்தை-எனக்கு -என்கையோ பாதி இ றே -அவனுடைய ரக்ஷணத்தை நாம் ஏறிட்டு கொள்ளுகை-
கங்கிருளின் நுண் துளியாய்ச்-
நுண் துளி -சிறு துளி -தடித்த இருளையும் சிறு துளியையும் யுடைத்தாய்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-
நெடுமையே ஸ்வ பாவமாய் இருக்கிற கல்பமாய்க் கொண்டு முடிவு இன்றிக்கே செல்லுகிற ராத்திரியிலே
அதவா -மருங்குலை -மருங்கு என்னுமா போலே கங்குலை – கங்கு என்று குறைத்தாய் -ராத்திரியில் இருள் என்றுமாம் –அப்போது கங்குல்வாய் என்று -கால பரமாய்-இக்காலத்தில் என்ன கடவது -சப்த ராத்ரம் தச ராத்ரம் -என்னுமா போலே
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
இவ்விருளைப் போக்குகைக்கு சந்த்ராதித்யர்கள் சேர உதித்தால் போலே கையும் ஆழ்வார்களுமாய் வந்து தோன்றுகிறிலன் –
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -என்றும் –
மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் -என்றும் சொல்லக் கடவது இ றே
அவ்விருளைப் போக்கும் போது இவர்கள் வேணும் என்கை -தூ -தூய்மை -பால -ஸ்வ பாவமாக உடைத்தாகை-ரக்ஷண பரிகரங்களை தரித்து ரக்ஷணத்திலே தீஷித்து இருக்கிறவனும் வருகிறிலன்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்!
தீமையே ஸ்வ பாவமாக யுடைத்தாய் -போக்கப் போகாத படியான பாபத்தை பண்ணினேன் -ரக்ஷகனும் அநாதரிக்கும் படி பண்ணின பாபம் என்கை –
தெய்வங்காள்! என்செய்கேனோ?
தேவதைகளுக்கும் இவளுக்கும் அநிமிஷத்துவத்தாலே ஒரு சாம்யம் உண்டு -அவர்கள் பிறப்பே அநிமிஷர் -இவள் விரஹத்தாலே அநிமிஷை -தோழிமாரும் உறங்குகின்ற சமயத்திலே இவர்கள் உணர்ந்து இருக்கையாலே தன் ஆர்த்தி பொறுக்க மாட்டாமை உறங்காது இருக்கிறார்களாக கொண்டு -இவர்களில் காட்டில் நமக்கு வேறு உறவு உண்டோ -என்று -என் செய்கேன் என்று தன் செயல் அறுதியை அவர்களுக்கு அறிவிக்கிறார்கள்-

——————————————————————-

ராத்திரியும் பாதகமாய் ரக்ஷகனும் வாராது இருக்கவும் -குளிர்ந்த தென்றலானது நலியா நின்றது என்கிறாள் –

தெய்வங்காள்  என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்-
வேறு உறங்காது இருப்பார் இல்லாமையால் -பின்னையும் தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் -கீழ் சொன்ன கல்பம் -ஒரு ராத்திரி மாத்திரம் -என்னும்படி -ஒரு ராத்திரி தானே அநேக கல்பங்கள் ஆகா நின்றது -ஸுபரி போகத்துக்காக பல வடிவு கொண்டால் போலே -ராத்திரியும் நலிகைக்காக அநேகம் வடிவு கொண்டது –
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-
பிரசங்கத்தாலே வந்து நலிகை யன்றிக்கே -புத்தி பூர்வமே -முடித்து அல்லது போகேன் என்று ஆக்ரஹம் யுடையாரைப் போலே நின்று -ராவணன் இடம் பார்த்து வந்தால் போலே -விரஹ தசை என்று அறிந்து வந்து நலியா நின்றது –
எனதாவி மெலிவிக்கும்–
நலி கைக்கும் ஆஸ்ரயம் இல்லாத படி சென்று அற்ற உயிரை நலியா நின்றது
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடைய -பாவஞ்ஞமான பரிகரத்தை யுடையவன் கிடீர்-
என் கண்ணனும் வாரானால்-
ஆஸ்ரிதற்காக தன் ப்ரதிஞ்ஞஜையை அழிய மாறுமவன் -கையில் திரு வாழி யை விட்டு இருளைத் துணித்து தன் வடிவைக் காட்டுகிறிலன்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–
குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் -தை வருகை யாவது -தடவுகையாய் -காந்தனுடைய ஸ்பர்சத்துக்கு ஸ்மாரகமான தென்றல் என்றுமாம் –
வெம்சுடரில் தான் அடுமே-
சுடர் என்று லௌகிக அக்னி -வெஞ்சுடர் என்று -அதில் காட்டில் கொடிய நரக அக்னி -அதில் காட்டிலும் நலியா நின்றது -நரக அக்னியில் காட்டில் விஸ்லேஷ தசையில் அனுகூல ஸ்பர்சம் கொடிதாய் இ றே இருப்பது -அத்யுஷ்ணமான நெருப்பில் காட்டில் சுடா நின்றது என்கை –

————————————————————

ராத்திரி நலியா நின்றது -ஸூர்யோதமும் நமக்கு என்றவாறே ப்ரார்த்தயமாய் விட்டது -ரக்ஷகனானவனும் தோற்று கிறிலன் -என்னுடைய மநோ துக்கத்தை போக்குவார் யார் இனி வேறு என்கிறாள் –

வெஞ்சுடரில்  தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்-
வளர்ந்த இருளும் சிறு துளியாய் -ராத்ரியானது நெருப்பில் காட்டில் நலியா நின்றது -ராவணன் மாரீச சஹனாய் வந்தால் போலே -ராத்திரி சிறு துளியை சஹகாரமாகக் கொண்டு வந்தது -இரண்டையும் போகத்துக்கு வர்த்தகமாக சொல்லக் கடவது இ றே
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்-
தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-
இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இ றே
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இ றே ஆதித்யன் போக்குவது –
நின்று ருகுகின்றேனே.–-நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்-
விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –

——————————————————————–

இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்து அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே லோகமாக யுறங்குவதே என்கிறாள் –

நின்று  ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-
முடிவு இன்றிக்கே நிரந்தரமாக உருகுகிற என்னை போலே மஹாதத்த்வமான ஆகாசம் சென்று அற்று நுண் துளியாய் உருகிச் செல்லுகிற ராத்திரியில் சகல பதார்த்தங்களும் அவகாச பிரதானம் பண்ணும் மஹா தத்வம் அழிகிற படிக்கும் வேறு த்ருஷ்டாந்தம் இல்லை –என்னை சொல்லும் அத்தனை -அளவுடையார் எல்லாம் அழிகிற காலம் ஆகாதே –
அன்றொரு கால் வையம் அளந்த –
ஒரு காலத்திலே காதாசித்கமாக பூமியை அளந்தான் அத்தனை –நியத ஸ்வ பாவன் அன்று என்றாகிலும் சொல்லுகிறார் இல்லை -இவள் தான் வரையாதே அளந்து கொண்ட மஹா குணத்தை யுடையவன் தன்னாலே வந்த ஆற்றாமைக்கு உதவாது ஒழியுமோ என்று பார்த்து இருந்தாய் -வாரான் என்று சொல்ல அமையும் –
பிரான் வாரான் என்று-
உபகாரகன் என்று இ றே பிரமித்து இருக்கிறது -பெருக்காறு வற்றினால் போலே அக்காலத்திலே வற்றிற்று என்றாகிலும் சொல்ல அமையும் –
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.-
அவன் திறமாக ஒரு வார்த்தையும் அமையும் –கடியன் கொடியன்-என்று அவன் குண ஹானியைச் சொல்லவும் அமையும் -ஒரு கால் -ஒரு கால் சொல்லவும் அமையும் -வாரான் என்ற போதே முடியாதார்க்கு இ றே இரு கால் சொல்ல வேண்டியது
உலகோர் உறங்குமே.-
அன்னையரும் தோழியரும் -என்று இன்னாதானது லோகமாக சொல்ல வேண்டும்படி யாயிற்று அதுக்கு பின் பிறந்த அவசாத அதிசயம் -வாராதவனே நல்லன் என்னும்படி இருந்ததீ சந்நிஹிதரான லோகத்தார் படி –

—————————————————————–

நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை –

உறங்குவான்  போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-
நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் -ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
இவர் குண ஆவிஷகாரத்தாலே தரித்தவாறே -திரு நகரியும் தரித்த படி -விஸ்லேஷத்தில் அபி வ்ருஷா என்றும் -சம்ச்லேஷத்தில் அகால பலீனோ வ்ருஷா -என்றும் இ றே இருப்பது –
சிறந்த பொழில் -சம்ருத்தமான பொழில் –
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ
பண்ணிலே கிளர்ந்த அந்தாதி -நிறம் -பண் -இப்பத்தை அனுசந்தித்தால் -எங்கனே சரீர விஸ்லேஷம் பிறந்து போய் பரம பதம் புகாது ஒழி யும் படி
பேர் என்னை மாயாதால் -என்று முடிகை தேட்டமாய்-அது தானும் பெறாதே -இவர் பட்ட கிலேசத்தை படாதே -இப்பாசுரத்தை கேட்டு பிழையார் என்கை –
பகவத் பரர் உடைய ஆர்த்தியைக் கண்டால் தரிக்க மாட்டாதே ஒழி கை இ றே ஸ்வரூபம் -இவருடைய பாவ பந்தம் இல்லையே யாகிலும் இவர் தசையை அனுசந்தித்தால் பரம பதம் புகாது ஒழிய சம்பாவனை இல்லை என்கிறது –


கந்தாடை        அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: