திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-3–

கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியை கண்டு மங்களா சாசனம் பண்ணியும் -ஸம்சயாநரைத் திருத்தியும் சென்ற பாவ வ்ருத்தி பர்யவசித்த பின்பு எம்பெருமானுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே தோற்று -பழைய படி பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கைவராமையாலே அவசன்னராய் —
எம்பெருமான் மேல் விழவும்-தம்மோடு கலந்தால் அவனுடைய குணங்களுக்கு கிலானி பிறக்கும் என்று பார்த்து அகலும் ஸ்வ பாவரான ஆழ்வார் -தம் ஸ்வரூபத்துக்கு போராத படி -வழி யல்லா வழி யாகிலும் எம்பெருமானோடே சம்ச்லேஷிப்போம்-என்று தமக்கு பிறந்த தசா விபாகத்தை அந்யாபதேசத்தால் பேசுகிறார் –
எம்பெருமானை புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையால் எல்லாரும் இகழும் படி தன்னுடைய குடிப்பிறப்பையும் பந்துக்களையும் தோழிமாரையும் மற்றும் உள்ள மரியாதைகளையும் பாராதே மடலூர்ந்தாகிலும் அவனோடே சம்ச்லேஷிக்கையிலே அத்யவசிக்க-
இத்தை அறிந்த தோழி யானவள் இது கார்யம் அன்று கற்பிக்க -அவளுக்கு தன் தசையை அறிவித்து மடலூருகை தவிரேன் என்கிறாள்
என்றாலும் இறையோன் -திருவாய் மொழியில் தான் முடிய பார்த்தாள்-இத்திருவாய் மொழியில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –

—————————————————————

இப்பிராட்டி மடலூரத்  துணிந்தமையை அறிந்த தோழி -இது அபவாதகரம் என்று நிஷேதிக்க -நான் அவனுடைய ஸுந்தர்யாதி களிலே அகப்பட்டு பழிக்கு அஞ்சாத தசை யானேன் -என்கிறாள் –

மாசறு   சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

என்னோட்டை சம்ச்லேஷ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே முறுவல் செய்த திருப் பவளத்தை உடையனாய் -மடலூர்ந்தே யாகிலும் சம்ச்லேஷிக்க வேண்டும் படி அபரிச்சேத்யமான அழகை யுடையனாய் தன் பேறாக வந்து சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனுமாய் பெரும் மதிப்பனும் ஆனவனை-
நிரந்தரமாக தேடி துக்கப்பட்டு அறிவு இழந்து அநேக காலம் உண்டு தோழீ -ஏசுகையிலே துணிந்த ஊரார் சொல்லும் பழி எத்தைச் செய்வது –
பாசறவு -பந்துக்கள் பக்கல் பற்றுகையுமாம்-

—————————————————————

ஏதேனும் தசையிலும் இங்கனம் செய்வது கடவல்ல என்ற தோழியைக் குறித்து தரிப்பு அரிதாம் படி  ஹ்ருதயத்திலும் சரீரத்திலும் பிறந்த ஸைதில்யத்தை அறிவிக்கிறாள் –

என்  செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

சம்ச்லேஷ தசையிலே என் பக்கல் மிகவும் பிரவணனாய் ஸ்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை நிறையக் கொண்டான்
நிறை போவதற்கு முன்பே அழகிய நிறத்தையும் இழந்து உடம்பும் மெலிந்து அவனுக்கு அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான என்னுடைய சிவந்த வாயும் கறுத்த கண்ணும் விவர்ணம் ஆயிற்றன –
நிறை யாகிறது மனசிலே ஓடுகிறது ஒருவருக்கும் தெரியாத படி இருக்கை –

—————————————————————

ஏதேனும் சிலவற்றால் போது போக்கி இருக்கும் அத்தனை அல்லது அஸத்ருசங்களிலே ப்ரவர்த்தித்தால் நாடு பழி சொல்லாதோ என்னில் -எனக்கு அவனால் அல்லது செல்லாது -நாட்டார் சொல்லும் பழி என்னை எத்தைச் செய்வது -என்கிறாள் –

ஊர்ந்த  சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

யசோதை பிராட்டி முலையிலே அணையுமா போலே அணைந்து பேய் முலையைச் சுவைப்பதும் செய்து -தாய் முகத்தில் சிரிக்குமா போலே முறுவல் செய்கையாலே சிவந்த திருப் பவளத்தை யுடையவன் -இச் சேஷ்டிதங்களால் என்னை நிறை கொண்டான் –
போயும் வந்தும் அவன் திறமான சொல்லால் அல்லது போது போக்குகைக்கு வேறு ஒரு சொல் உடையேன் அல்லேன்-
தீர்ந்த என்றதுக்கு கருத்து -அந்தரங்கை யான நிஷேதிக்கக் கடவையோ-என்று –

—————————————————————

இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார் –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரார் சொல்லும் பழி யாகிற எருவை இட்டு தாயார் சொல்லும் ஹித வசனம் ஆகிற நீரைப் பாய்ச்சி சங்கமாகிற நெல்லை வித்தி முளைத்த நெஞ்சு ஆகிற பெரிய செய்யிலே
பெரிதாய் கால தத்வம் உள்ளதனையும் கிடையா விட்டாலும் விடாத காதலை கடல் போல் விளைவித்த வ்ரஷூக்கமான மேகம் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனாய் நான் இட்ட வழக்கான கிருஷ்ணன்-

————————————————————————-

நான் சொன்ன படி குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே நைர்க்ருண்யாதி அநேக தோஷங்களை யுடையவனே யாகிலும் என்னுடைய நெஞ்சு அவனை அல்லது அறியாது என்கிறாள் –

கடியன்  கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

ஸ்வ கார்ய பரனாய் பிறர் நோவு அறியாதே ஒருவருக்கும் எட்டாதானாய் -வஞ்சகனாய் -துர்ஜேய ஸ்வபாவனாய் இருந்தானே யாகிலும்
அதி லோகமான என் நெஞ்சு அவனை அல்லது அறியாதே இருக்கும்
எல்லே -தோழியை குறித்து சம்போதான வசனம்
ப்ரணய கதைகள்அறிக்கைக்கு ஈடான வை லக்ஷண்யத்தை யுடையளாய் வைத்து என்னை இப்படி நலியலாமோ -என்று கருத்து –
இங்கனம் நீ துணிந்தால் தாயார் பொடியாளோ என்னில் -அவள் பொடித்து செய்வது என் –

——————————————————————

நீ இப்படி துணிந்தால் தாயார் ஜீவியாள்-அத்தாலே ஊரார் பழி சொல்லுவார் என்று தோழிமார் சொல்ல கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதாதிகளிலே நான் அகப்பட்டேன் -இனி யார் என் செய்யில் என் என்கிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

இனி ஆசை இல்லை என்கிறது என் –என்னில் -முன்னை அமரர்  -முதல்வனாய் வைத்து வண் துவராபதிக்கு மன்னனாய் ஸ்ப்ருஹணீயமான திரு நிறத்தை யுடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய விஷித குண  சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்ளே தப்ப ஒண்ணாத படி அகப்பட்டேன்  –

——————————————————————–

அவனை குண ஹானி சொல்லுகிறவர் வாய் அடங்கும்படி நாம் அவனை வரக் கண்டு வந்த உபகாரத்துக்காக தலையால் வணங்க வல்லோமே -என்கிறார் –

வலையுள்  அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

தன்னுடைய குண சேஷ்டிதாதிகளிலே என்னை அகப்படுத்திக் கொண்டு தான் என்றால் என்னில் காட்டிலும் ப்ராவண்யத்தை யுடைய நெஞ்சைத் தன் பக்கலிலே அழைத்துக் கொள்ளுவதும் செய்து அபலைகளுக்கு செல்ல ஒண்ணாத படி அலை எறிகிற கடலுள்ளே கண் வளர்வதும் செய்து காண்டற்கு அதி ஸ்ப்ருஹணீயமான திருவாழியை யுடைய சர்வேஸ்வரனை –
கலை கொள் அகல் அல்கும் தோழி-அவளுடைய தர்சனம் தனக்கு அனுகூலம் ஆகையால் கொண்டாடி சம்போதிக்கிறாள்-

————————————————————

மஹா உபகாரகன் ஆனவனை-குண ஹீனன் என்று சொல்லுகிற தாய்மார் இவனை யாகாதே நாங்கள் குண ஹீனன் என்று சொல்லிற்று -என்று லஜ்ஜிக்கும் படி என்றோ நாம் அவனைக் காண்பது -என்கிறாள் –

பேய் முலை  உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பூதனை தொடக்கமான விரோதி வர்க்கத்தை போக்கி அது பாத்தம் போராமை ஸ்மிதம்  பண்ணுகையாலே வெளுத்த திரு முகத்தையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடைய திவ்யாஸ்யத்தையும் யுடையனாய் இப்படி உபகாரம் ஆனவனை –

————————————————————————-

தன் நெஞ்சில் மடலூர வேணும் என்று துணிந்த துணிவை வ்யக்தமாக தோழிக்கு வாய் விடுகிறாள் –

நாணும்  நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

லஜ்ஜையும் அடக்கத்தையும் நிஸ்சேஷமாக்கி போக்கி அவ்வழியே தான் என்றால் மிகவும் பிரவணமான என்னுடைய நெஞ்சையும் தன் பக்கலிலே அழைத்துக் கொண்டு மிகவும் தூரமான திரு நாட்டிலே இருக்கிற அயர்வரும் அமரர்கள் அதிபதியை –
வாயால் நிஷேதியாதே நின்று வைத்தே இவள் இத்தனையும் செய்து முடிப்பது காண்-என்று உகந்து இருக்கிற தோழியை -ப்ரீதியாலே என் தோழீ என்று சம்போதித்து உன் ஆணையே உலகு தோறும் அவனை பழி தூற்றி செய்யலாம் மிறுக்குகள் எல்லாம் செய்து தடை நில்லாதே மடலூராக கட வேன்-

——————————————————————

இருந்ததே குடியாக ஷோபிக்கும் படி மடலூர்ந்தாகிலும் நிரதிசய போக்யனானவனை கணக்கு காட்டுவோம் என்கிறாள் –

யாமடல்  ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

மடலூர்ந்தாகிலும் -கையும் திருவாழியையும் காட்டி நம்மை இப்பாடு படுத்தினவனுடைய செவ்வித் திருத்த துழாய் மலர் கொண்டு சூடுவோம்
நாம் ஸ்த்ரீத்வத்தை தவிர்த்து ஆபத்துக்கள் வாயிலும் புறப்படாத குண ஹானியை தெருவுதோறும் பிரசித்தமாகச் சொல்லி ஜகாத்தும் ஷோபிக்கும் படியாக –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்

இரைக்குங்  கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

ஓதம் கிளறுகிற கடல் போலே இருந்த திரு நிறத்தை யுடையனாய் தண்ணளியையும் யுடையனான கிருஷ்ணனை
தாம் வ்யவசித்தர் ஆனவாறே -எம்பெருமானுடைய வரவு அணித்து-என்று சஞ்சாத பரிமளமான திருச்சோலை
நிரைக்கொள் அந்தாதி-ஸூ சங்கதமான அர்த்த சப்தங்களை யுடைத்தாகை

————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: