திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-3-

கீழே நண்ணாதார் முறுவலிப்ப-திருவாய் மொழியில் -சம்சாரிகள் துர்கதியை அனுசந்தித்து -ஒன்றும் தேவு-திருவாய் மொழியிலே
-அவர்களைத் திருத்தி -இவர்களில் அந்நிய தமராய் இருந்த நம்மை இவர்களையும் திருத்தும் படி பண்ணுவதே -என்று ஈஸ்வரன் பண்ணின
உபகாரத்தை அனுசந்தித்து திருந்தினவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணின பாவவ்ருத்தி பர்யவசித்து-ஏறாளும் இறையோனில்
தமக்குப் பிறந்த இழவே தலையெடுத்து -ஆற்றாமையால் மடல் எடுத்தாலும் கிட்டுவோம் -என்று துணிகிறாள் –
ஏறாளும் இறையோனில்-அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டேன் என்று தன்னை முடிக்கப் பார்த்தாள்
-அது அவனது ஆகையால் முடிந்தது இல்லை -இதில் அத்தலையே பிடித்து அழிக்கத் தொடங்கினாள் –
அங்கு உயிரினால் குறைவிலம் -என்று உயிரை வேண்டா என்றாள் -இங்கு உயிருக்கும் உயிரை வேண்டேன் என்கிறாள்
–இதில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –
அவன் தானே மேல் விழ-தம்மோட்டை கலவி அவனுக்கு அவத்யம்-என்று அகன்றவர் தம்மைப் பாராதே -வழி யல்லா வழி யாகிலும்
அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்
அதவா
மலியும் சுடர் ஒலி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை -என்று வடிவு அழகை அனுசந்தித்த போதே பெற வேணும் என்னும்
ஆசை பிறந்து அது கிடையாதே ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் -அவள் பேச்சாலே தம்முடைய தசையை பேசுகிறார் என்றுமாம்
அவனைப் பிரிந்து புணர்ந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையாலே எல்லாரும் இகழும் படி-தன்னுடைய பிறப்பையும் பந்துக்களையும் தோழிமாரையும் மற்றும் உள்ள மரியாதைகளையும் பாராதே –
நாம் மடலூர்ந்தே யாகிலும் அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று அத்யவசிக்க இத்தை அறிந்த தோழி கார்யம் அன்று என்று கற்பிக்க-அவளுக்கு தன் தசையை அறிவித்து மடலூருகை தவிரேன் என்கிறாள் –

———————————————————————

இப்பிராட்டி மடலூரத்  துணிந்தமையை அறிந்த தோழி -இது அபவாதகரம் என்று நிஷேதிக்க -நான் அவனுடைய ஸுந்தர்யாதி களிலே அகப்பட்டு பழிக்கு அஞ்சாத தசை யானேன் -என்கிறாள் –

மாசறு  சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதி –
நான் அவனை மாசறு சோதி யாக்கக் காண் புகுகிறது -விரக்தராய் ஸ்வரூபஞ்ஞராய் இருக்கிற இவருக்கு உட்பட இப்படி மடல் எடுக்கும் படி இ றே விஷய வைலக்ஷண்யம் –
பக்தா நாம் என்கிற வடிவை நிலை நிறுத்தப் புகுகிறேன் -விசேஷணங்கள் அடைய மடல் எடுக்கைக்கு விஷயம் ஆக்குகிறாள் -அழுக்கு அற்ற அழகை யுடையவனை -அழுக்கு மாசு ஆகிறது -வியதிரேகத்தில் மடல் எடுக்காது ஒழிகை -இவ் வழகு விஸ்லேஷத்தில் மடலில் மூட்டாதாகில் -அல்லாத விஷயத்தோ பாதியாம் என்கை -அவ்வடிவைப் பிரிந்த போது-ஏன் மரியாதையை நோக்கி இருக்கவோ என்கிறாள் –
என் செய்ய வாய்-
கலந்த போது அகவாயில் ஹர்ஷம் தோற்றும் படி ஸ்மித்தத்தாலே விக்ருதனாய் இருந்த படி –
என் செய்ய வாய்–மாசறு சோதி —
ஸ்மிதமும் வடிவு அழகும் ஆயிற்று என்னை மடலிலே மூட்டிற்று -பண்டும் ஒரு ஸ்மிதம் இ றே ஊர் பூசல் விளைத்தது -இவள் கையில் மடலைக் கொடுத்து ஊர் பூசல் ஆக்கிற்று ஒரு ஸ்மிதம் இ றே -அவாக்ய அநாதர என்று -ஒருத்தரையும் மதியாதவன் -என்னோடே கலந்து பெறாப் பேறு பெற்றால் போலே விக்ருதனாய் இருக்க நான் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கவோ –
மணிக் குன்றத்தை-
கலந்த போது குளிர்ந்த ஒளியை யுடையனாய் -பிரிவு ப்ரஸக்தமாய்-தன் செல்லாமையாலே கால் வாங்க மாட்டாத படி நின்ற படி -அவிகாராய என்கிற வடிவும் இப்படி விக்ருதமாய் இருக்க -நான் அவிக்ருதையாய் இருக்கவோ
ஆசறு சீலனை –
தன்னுடைய உத்கர்ஷமும்-இவள் அபகர்ஷமும் பாராதே கலப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்று சொல்லும் படி பண்ணக் காண் நான் புகுகிறது –
வடிவிலே அகப்பட்ட அளவேயோ—அகவாயில் குணத்திலும் அன்றோ அகப்பட்டது -குற்றம் அற்ற சீலத்தை யுடையவனை –அதாவது கலக்கிற போது தன் பேறாக வந்து கலக்கை-என் பேறாக வந்து கலந்தானோ என் ஸ்வரூபத்தை நோக்கி இருக்க
ஆதி மூர்த்தியை –
என்னை பெறுகைக்கு க்ருஷி பண்ணிப் போந்தவனை -மஹா புருஷ பூர்வஜ-என்கிறபடியே என் பேற்றுக்கு முற்பாடானாய் இருக்க -நான் ஆற்றாமையிலும் பிற்பாடை யாகவோ -தன் மேன்மை பாராதே என் சிறுமை பாராதே கலந்தவன் அன்றோ -நான் ஆறி இருக்கவோ –
ஆதி மூர்த்தியை –
அவன் நீர்மை எதுவானாலும் உன் மதிப்பிற்கு போராது காண் மடல் எடுக்கை என்ன –பெரு மதிப்பனைக் குறித்து -மடல் எடுத்தால் அம் மதிப்பு உண்டாம் அத்தனை அன்றோ –
காரணந்து த்யேய-என்று சாஸ்திரங்கள் மூட்டுகிற விஷயத்திலே யன்றோ நான் மடல் எடுக்கிறது
நாடியே-பாசற வெய்தி –
நிரந்தரமாகத் தேடி -பலித்தது இது என்கிறாள் -ஆனாலும் உன் அறிவுக்கு போராது என்ன
அறிவிழந்து எனை நாளையம்-
அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது -ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ -என்ன –
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–
அவ்வெல்லை கடந்திலமோ –என்கிறாள் –
ஏசறும் ஊரவர்-ஏசி அற வேணும் -என்று இருக்கிறவர்கள் -ஏசுகையிலே துணிந்து இருக்கிறவர்கள் –
கவ்வை -பழி – / தோழி! என்செய்யுமே?–-இவ்விஷயத்துக்கு புறம்பானோர் சொல்லுமதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று அறியாயோ -அவர்கள் பழி நமக்கு புறம்பாம் அத்தனை அன்றோ -நமக்கு இது உபகாரகம் அன்றோ -பழி பற்று அறுக்கிறது-
அலர் எழில் ஆர் உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால் –நமக்கு ஸ்மாகரம் அன்றோ -என்கிறாள் –

————————————————————

எல்லா தசையிலும் பழி பரிஹரிக்க வேண்டாவோ -என்ன பரிஹரிக்கும் எல்லை கடந்தது காண் என்று தன் வடிவைக் காட்டுகிறாள் –

என்  செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி –
இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்
தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –
நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி -ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இ றே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இ றே அவள் நோய் இருப்பது –
ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க் ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இ றே மஹா ராஜர்
இவ்வை வரண்யத்துக்கு அடி சொல்லுகிறது –
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை –
கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை ச்ரவஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இ றே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இ றே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –
என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை -இழந்தவை இன்னவை என்கிறாள் -மேல்
முன் செய்ய மாமை இழந்து
முன்னே உள்ள மாமை என்னுதல் -நிறைக்கு முன்னே என்னுதல் -முன்னே காண காண என்னுதல் -முன்பு தோன்றினவற்றை வாங்கி இ றே கிழிச் சீலை யறுப்பது-
செய்ய மாமை -ஸ் ப்ருஹணீயமான மாமை என்கை –சிவப்பைச் சொல்லுகிறது அன்று -தாத்பர்யம்
இழந்து -அவன் விரும்பியதாகையாலே நிறம் நிதி இழந்தாப் போலே சொல்லுகிறாள்
மேனி மெலி வெய்தி-
வடிவு தான் நீர்ப்பண்டம் போலே காண காணக் சருகு ஆகிறபடி -நிறம் வந்தாலும் -அவன் தான் வந்தாலும் -ஆஸ்ரயம் இல்லை என்கை –
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–-
அவயவியாய் தேடுகிறேனோ -அவயவங்கள் தோறும் அழிந்து வாரா நிற்க -அவன் வாய் புலற்றுமது ஆகையால் என்னது என்கிறாள் -அவன் உகந்த வழியால் தமக்கு ப்ராப்யம் ஆகலாம் இ றே
தொழுது வைத்தேன் –அவன் என்னது என்று சொல்லக் கேட்டு இருக்குமே -அத்தாலே என்னது என்கிறாள் –
சிவந்த வாயும் -கறுத்த கண்ணும் -ஒரு வெளுப்பு ஆயிற்று -பிரளய காலத்திலேயே ஸூ க்ஷேத்ரம் போலே ஏகோதகமாய் அழிந்தது –
பயப்பூர்ந்தவே.-விஷம் ஊர்ந்தால் போலே வைவர்ணயம் வண்டலிட்டு வாரா நின்றது
மடலை நிஷேதித்தாய் யாகிலும் -வடிவை மறைக்கலாமோ என்கிறாள் –

——————————————————————-

ஏதேனும் ஒரு லோக யாத்ரையாலே போது போக்கி இருக்க வன்றோ அடுத்து என்ன -அவனால் அல்லது எனக்கு செல்லாதான பின்பு அவ்வெல்லை கழிந்தேன் என்கிறாள்-

ஊர்ந்த  சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-பேய் முலை-சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்-
பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்
ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இ றே நலிந்து –
உதைத்த பாதத்தன்-
ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இ றே பூதனை நிரசன தசை
பேய் முலை-சார்ந்து சுவைத்த செவ்வாயன் –
யசோதை பிராட்டி மடியிலே அணைந்து முலைக்கு கீழே முழுகினால் போலே யாயிற்று முலை யுண்டது
சுவைத்த -பிராண ஸஹிதம் பபவ் -என்னுமா போலே உயிரும் முலையிலே சுரக்கும் படி யாயிற்று முலை யுண்டது
செவ்வாயன் –பிள்ளைகள் தாய் முகத்திலே சிரிக்குமா போலே ஸ் மீதம் பண்ணின திரு வதரத்திலே பழுப்பை யுடையவன் –
என்னை நிறை கொண்டான்
ஒரு செயலால் இரண்டு ஸ்த்ரீ வதம் பண்ணினான் -ஆசைப்பட்டாரிலே உகவாதாரே நன்று ஆயிற்று காணும் –அவளை நற்கொலையாகக் கொன்றான் -என்னை உயிர் கொலையாகக் கொன்றான்
நிறை -நிறைவு -அடக்கம் -ஸ்த்ரீத்வம் -நிரூபகமான ஸ்த்ரீத்வம் போனால் நிரூப்யம் உண்டோ என்கை –
அவன் அப்படி செய்தால் லோக யாத்ரையோடு போது போக்கினாலோ என்ன
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-
போயும் வந்தும் அவன் திறமான சொற்கள் அல்லது வேறு போது போக்கைக்கு சொல்லுடையேன் அல்லேன்
அவனை நினை -அவனை மற-என்று சொல்லுகிற இத்தனை இ றே -இத்தை இ றே ஏது செய்தால் மறக்கேன் என்கிறது –
நாம் இவ்விஷயத்தில் மூட்டப்படும் பாடும் நம்மாலும் மீட்க ஒண்ணாத படி ப்ரவணை யாவதே -என்று ப்ரீதை யானாள்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–
அந்தரங்கை யான நீ நிஷேதிக்கக் கடவையோ -அதில் குறை யுண்டோ ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது-என்ன ஊரார் பழி கொண்டு கார்யம் என் -உன் நெஞ்சில் குறை இல்லாமை யன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள் –

—————————————————————–

இவளை எத்தைச் சொல்லி மீட்கலாவது என்று பார்த்து -ஊரார் கிடக்க உன்னோடே கலந்து வைத்து  நிர்க்ருணரைப்   போலே  வாராத அவன் தானோ நன்றாகச் செய்தான் என்ன -இவர்கள் பழி நமக்கு உத்தேச்யமாம் படி ப்ராவண்யத்தை விளைவித்தவனை குறை சொல்லக் கடவையோ என்கிறாள்-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரவர் கவ்வை எருவிட்டு –
ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் -விபீஷணஸ்து
தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இ றே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இ றே எனக்கு தரித்து இருக்க லாயிற்று
அன்னை சொல் நீர்படுத்து-
தாயார் சொன்ன ஹித வசனத்தை நீராக நிறுத்தி –
ஊரார் பழி சொல்லப் புக்க பின்பு இ றே தாய் மாரும் அறிந்தது -எருவாகிறது ஒரு கால் இட்டு விடுமத்தனை -இ றே -நீர் எப்போதும் வேணும் -அகத்துக்கு உள்ளே இருந்து எப்போதும் சொல்லா நிற்கும் இவள் -ஊரார் இரு கால் சொல்லி விடும் அத்தனை
ஈர நெல் வித்தி-
சங்கம் ஆகிற நெல்லை வித்தி -சங்கத்துக்கும் அவன் அடி என்று இருக்கிறாள்
முளைத்த –
வித்தினாலும் முளைக்கும் போது அவன் வேணும் என்று இருக்கிறாள் -அரி பக்ஷ ஜய்ஸ் ஸூ கம்
நெஞ்சப் பெருஞ் செய்யுள்-
சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே த்ரிபாத் விபூதி சத்ருசமாம் படி பண்ணி
பேரமர் காதல்-
ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் /காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –
கடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை
கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இ றே காதல் பெருகின படி -இது இ றே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –
காரமர் மேனி –
எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இ றே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு
நம் கண்ணன்
விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும்
நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இ றே
தோழீ! கடியனே?–
இவ்விஷயத்தில் மூட்டுகைக்கு க்ருஷி பண்ணின நீ -இப்படி ப்ராவண்யத்தை விளைத்தவனை -நிர்க்ருணன் -என்னக் கடவையோ -அவன் நீர்மை சொல்லிப் பொருந்த விடுகையும் குற்றம் சொல்லி மீட்க்கையும் உனக்கே பரமாவதே -தாய்மார் வார்த்தை போலே இரா நின்றதீ உன் வார்த்தையும் –

———————————————————–

நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள் –

கடியன்  கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட-அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
அவன் குண ஹானியை உன்னில் காட்டில் அறிந்த நான் சொல்லக் கேள் என்கிறாள்
கடியன்-ஸ்வ கார்ய பரன்-எதிர்த்தலை பாராதே மேல் விழுந்து சடக்கென கலக்குமவள்
கொடியன்-எதிர்தலையிலே நோவு பாராதே பிரிய வல்லவன் -நோபஜனம் ஸ்மரன் என்று வேறு ஓன்று தோற்றாத தசையில் பிரிவை பிரசங்கித்து பிரிய வல்லவன் –
நெடிய மால் -பிரிய புகா நின்றான் என்று அறிந்தால் அநபிபாவநீயனாய் எட்டப் போகாதவன் -மால் என்று பெருமை –நெடுமையால் அதன் மிகுதி -கை புகுந்தாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை-
உலகங் கொண்ட-அடியன் -சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொள்ள வல்ல திருவடிகளை யுடையவன் –கொடுத்தவனுக்கு ஓர் அடியும் சேஷியாத படி கொல்லுமவன் -ஸர்வஸ்வாதனம் பண்ணுவாராய்ப் போலே வந்து -ஸர்வஸ்வாபஹாரம் பண்ணும் வஞ்சகன் –
அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்-
வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும் -அங்கனமே ஆகிலும் –
கொடிய என் நெஞ்சம்
உல்லோ கமான நெஞ்சு -குணம் கண்டால் பற்றவும் தோஷம் கண்டால் விடவும் இ றே லோகத்தில் கண்டு அறிவது -தோஷம் காண காண மேல் விழும் நெஞ்சு -நீ சொல்ல மாட்டாததும் -சிசுபாலாதிகள் சொல்லுமதுவும் சொல்ல மாட்டேனோ -அவனை விடுகைக்கு உறுப்பாம் ஆகில் –
அவனென்றே கிடக்கும்-இத் தோஷங்களை உடையவன் அன்றோ தத் சம்பந்தத்தால் மேல் விழா நிற்கும் -என்று பிள்ளான்
விசேஷணங்களில் தாத்பர்யம் இன்றிக்கே-விசேஷியத்தில் ஊன்றா நின்றது -என் நெஞ்சுக்கு மாயாவாத ருசி உண்டோ அறிகிறிலேன் -என்பர் ஜீயர் -இத்தால் குண நிபந்தனம் அன்று அவனோட்டை சம்பந்தம் -சத்தா ப்ரயுக்தம் -என்கை –
எல்லே!-
ஆச்சர்யம் ஆதல் –தோழியை சம்போதிக்கிறாள் ஆதல் -தன்னை கை கடந்த படியைக் கண்டு முகம் மாறின தோழியை வாராய் என்று கையைப் பிடிக்கிறாள் –
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே-
ப்ரணய கதைகள் அறிகைக்கு ஈடான வடிவு அழகையும் குணத்தையும் உடைய நீ மடலை நிஷேதிக்க கடவையோ-
நான் விலக்குகிறேன் அல்லேன் -தாயார் வெறுக்கும் -என்று சொல்லுகிறேன் என்ன -உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்கப் புகுகிறேன் -அந்நிலை கழிந்தது இல்லையோ என்கிறாள் –

———————————————————————-

தோழிமார் எல்லாரும் வந்து -நீ இப்படி செய்யில் தாயார் முடியும் -அத்தாலே ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் என்ன -கிருஷ்ணனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே அகப்பட்டேன் -எல்லார்க்கும் என் பக்கல் நசை அற அமையும் என்கிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

அன்னை என் செய்யில் என்?
கீழே தாயார் பொறாள்-என்ன பொறாதே செய்வது என் -என்றது –
இதில் -அவள் என் செய்யும் -என்று வ்யவசிதை யானாள்-என்றால் -அவள் ஜீவியாள் கிடாய் –என்ன ஜீவிக்கில் என் -முடியில் என் -என்கிறாள் –
இப்படி தாயை உபேக்ஷித்தால் ஊரார் பழி சொல்லுவார்கள் என்ன –
ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
குண கதனம் பண்ணில் என் –குரவ கிங்கரிஷ்யந்தி -ஜீவிப்பார்க்கு அன்றோ இவர்களைக் கொண்டு கார்யம் உள்ளது
எல்லாரையும் உபேக்ஷித்தாலும் எங்கள் வார்த்தையை கேட்க வேண்டாவோ என்ன –
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
என்னைக் கடல் கொண்டது -எனக்காய் இருக்கிற உங்களுக்கும் யாகாதபடி அகப்பட்டேன் –என் கார்யம் நான் நினைத்தபடி யாகில் யன்றோ உங்கள் வார்த்தை கேட்டு மீளுவது –
என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –
முன்னை அமரர் முதல்வன் –
பெரியார் சிறியோர் என்று இன்றிக்கே ஆழப் பண்ணும் கடலிலே அகப்பட்டேன் -யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-என்கிற நித்ய ஸூ ரிகளுக்கும் சத்தா ஹேதுவாய் இருக்கிற மேன்மையை யுடையவன் –
வண் துவராபதி-மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.-
வண் துவராபதி-மன்னன்– அம்மேன்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத நீர்மையை யுடையவன் -பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய -என்று பெண்களுக்கு ஓலக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் இருப்பு -நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்துக்கும் அவ்வருகே ஓன்று இ றே -அது மேன்மைக்கு முடி சூடி இருக்கும் இருப்பு -இது நீர்மைக்கு முடி சூடி இருக்கிற இருப்பு -நாயகன் பக்கல் பதினாறாயிரம் பேர் மடல் எடுக்கை தவிரில் அன்றோ நான் மடல் எடுக்கை தவிருவது
மணி வண்ணன் -நீர்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத வடிவு அழகு -பிரணயிநி துவக்குண்பது வடிவு அழகிலே இ றே
வாசுதேவன் -அதில் காட்டிலும் ஆபி ஜாதியத்திலே யாயிற்று அகப்பட்டது –ஸ்நுஷாதசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந
வலையுளே அகப்பட்டேன் -நோக்கிலும் முறுவலிலும் அகப்பட்டேன் -முகப்பில் அனுகூலம் போலே தோற்றி பந்துக்களோட்டை தொற்றை யறுத்து வ்யதிரேகத்தில் முடிய ஒண்ணாது இருக்கை-

———————————————————————

அவன் குண ஹானி சொன்னார் வாய் அடங்கும் படி நாம் அவனைக் கண்டு வந்த உபகாரத்துக்கு தலையால் வணங்க வல்லோமே என்று உயிர்த் தோழிக்கு சொல்லுகிறாள் –

வலையுள்  அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

வலையுள் அகப்படுத்து என்னை- நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
தன்னுடைய குண சேஷ்டிதாதிகளாலே-என்னை அகப்படுத்திக் கொண்டு -இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்னும்படி -தான் என்றால் என்னிலும் அதி ப்ரவணமான
நெஞ்சை அழைத்துக் கொண்டு -எட்ட ஒண்ணாத படி ஷூபிதமான கடலிலே கண் வளர்ந்து அருளினான் –
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்-
எட்டாத படி இருந்தாலும் கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகு விட ஒண்ணாதாய் இருக்கிறபடி-ஏதேனும் ஒருபடி கிட்டியாகிலும் பெற வேண்டும்படி இருக்கை
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு-
அவளுடைய தர்சனம் தனக்கு அனுகூலமாய் இருக்கையாலே கொண்டாடி சம்போதிக்கிறாள் –
கலையை யுடைத்தாய் அகன்ற நிதம்பத்தை யுடையளாகை –
உன் வடிவு அழகு போலே இருக்க வேண்டாவோ வார்த்தை -என்கை –
அன்றிக்கே -மடியிலே கிடந்தது வார்த்தை வார்த்தை சொல்லுகிறாள் ஆகவுமாம்-பிரிந்த போது ஹிதம் சொன்னாளே யாகிலும் காணும் போது நாலு கண்ணாலும் காண வேணும் -தனி காண மாட்டாள் யாயிற்று
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.
வந்த உபகாரத்துக்கு நாமும் அவன் பக்கல் வணங்கக் கூட வற்றோ -அவன் தானே வர விருக்கை யன்றிக்கே தானே மேல் விழுந்தாள்-அவன் வந்திலன் -என்கிற ஸ்த்ரீகள் முன்னே அவன் குண ஹானியைச் சொல்லி ஷேப வசனங்களை பண்ணுகிறார் முன்னே என்றுமாம்
பிரணயி வணங்கப் பெறுமோ என்னில் -சிஷ்டாசாரம் உண்டு -கௌசல்யா லோக பார்த்தாராம் ஸூ ஷூ வேயம் மனஸ்வி நீ தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா ஸாபி வாதய-
தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை -என்று தாயமாரோ பாதி கழித்தாள் கீழே
தீர்ந்த என் தோழீ -என்ற உயிர் தோழி யாகையாலே இவளை சம்போதிக்கிறாள் –

————————————————————–

மஹா உபகாரகன் ஆனவனை-குண ஹீனன் என்று சொல்லுகிற தாய்மார் இவனை யாகாதே நாங்கள் குண ஹீனன் என்று சொல்லிற்று -என்று லஜ்ஜிக்கும் படி என்றோ நாம் அவனைக் காண்பது -என்கிறாள் –

பேய் முலை  உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து- மருதிடை-போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட-
பூதனை யுடைய முலை வழியே பிராணனை முடித்து -அந்த அவசாதத்தை தப்பி ரக்ஷையாக நிறுத்தின சகடம் தானே அஸூரா வேசத்தாலே மேல் விழ-அத்தை நிரசித்து -தவழ்ந்து போகா நிற்க முன்னே நின்ற யமளார்ஜ்ஜுனங்களின் நடுவே போ அவ்வாபத்தை தப்பி தன்னைக் கொண்டு தப்புகை அன்றிக்கே அஸூர விஷ்டமான குருந்தை வேரோடு பறித்து -பகாசூரனை நிரசித்து -குவலயா பீடத்தை முடித்த
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
பெரு மிடுக்கை யுடையவையாய் இருக்கச் செய்தேயும் ஒன்றுக்கும் பாத்தம் போராமையாலே ஸ்மிதம் பண்ணினான் -வெளுத்த தந்த பங்க்தியும் ஆதொண்டை பழம் போல் இருக்கிற திரு வதரத்தை யுடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
இவள் தலைமைக்கு -பூத்தரு புணர்ச்சி -புனல் தரு புணர்ச்சி -களிறு தரு புணர்ச்சி -என்று தமிழர் சொன்ன வகை போய் -அவன் தன்னை நோக்கினத்துக்கு இவள் எழுதிக் கொடுக்கிறாள் இ றே -மடலை எடுத்து அழிக்க நினைக்கிறவள்-உபகாரகன் என்பான் என் என்னில் -அச்சம் உறுத்தி முகம் காட்டுவித்துக் கொள்ளுகை ஒழிய அழிக்க நினைக்கிறாளோ -காணும் இத்தனை யாம் படி தன்னை நோக்கி வைத்தான்
நாம் உறுகின்றது தோழீ!
நாம் என்றோ கிட்டுவது -யாம் -பேறு இருவருக்கும் ஒத்து இருக்கிற படி -சோகாஸ் யாஸ்ய கதா பாரம் ராகவோ அதிகமிஷ்யாதி
அன்னையர் நாணவே.
அவனுக்கு குண ஹானி சொல்லுகிற தாய்மார் லஜ்ஜிக்கும் படி -இவள் தான் அவனைப் பெற்ற தனக்கு வரும் லாபம் ஒழிய -இவனையே நாம் இப்படிச் சொல்லிற்று என்று அவர்கள் லஜ்ஜித்து கவிழ்ந்து நிற்கை உத்தேச்யம் என்று இருக்கிறாள் –

——————————————————————

தன் நெஞ்சில் வியவசாயத்தை பிறருக்காக மறைத்துப் போந்தாள்-இதுக்கு முன்பு -அத்தை தோழிக்கு வாய் விடுகிறாள் –

நாணும்  நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து
அகம் விட்டு புறப்படக் கடவது அன்றிக்கே இருக்கிற லஜ்ஜையும் -அகவாயில் உள்ளது வாய் விடக் கடவது அன்றிக்கே இருக்கிற மடப்பத்தையும் அபஹரித்து
என்னை –
அவையே நிரூபகமான என்னை –
நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-
அவற்றுக்கு ஆஸ்ரயமாய்-என்னிலும் தன் பக்கலிலே ப்ரவணமான நெஞ்சையும் அபஹரித்து
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை-
மிகவும் உயர்ந்த பரமபத்திலே கொடு போய் இருக்கும் -இந்த்ராதிகள் குடி இருப்பு போல் அன்றிக்கே சர்வதிகமாய் இ றே பரமபதம் இருப்பது –
இவள் தன் த்வரையாலே-திருப் பாற் கடலிலே கிடக்கில்-திரையில் படியிட்டு வரக் கூடும் என்று நினைத்து -நம்முடைய த்வரையாலும் சென்று கிட்ட ஒண்ணாத தேசத்திலே இருந்தான்
தேவ பிரான் -இங்கு நின்றும் கொடு போன வொடுக்கு மாடுகளை அங்கு உள்ளார்க்கு பாரித்துக் கொண்டு இருக்கிற படி -நாம் சம்சாரத்தில் போய் பெற்றது இது என்று காட்டுகிற படி
தன்னை -சர்வ உத்க்ருஷ்டனை நான் அழிக்கப் புகுகிற படி பாராய்
ஆணை
பகட்டுக்கள் இத்தனை போக்கி செய்து முடிக்க புகுகிறாளோ என்று தோழி இருக்க -உன் ஆணை என்கிறாள்
என் தோழீ!
இவள் இத்தனையும் செய்து முடிப்பது காண் என்கிறது தோற்ற தோழி இருக்கிற படியைக் கண்டு -என் தோழி என்று உகக்கிறாள் –
ஆணை -என் -என்று சொல்லுவாரும் உண்டு -நீ என் நினைவை பின் செல்வாயானால் இனி தடை என் என்கிறாள் –நீ என் வழியே ஒழுகுவாய் ஆனால் கூடாதது உண்டோ
உலகு தோறு அலர் தூற்றி-
ஒரு லோக மாத்திரத்திலே பழி சொல்லி விடுவேனோ -பரம பதம் எல்லையாக பழித்துக் கொடு செல்லுகிறேன்-அலர் -பழி -என்னை ஊரார் பழி சொல்லும் படி பண்ணினான் தன்னை லோகமாக பழி சொல்லும் படி பண்ணுகிறேன்
ஆம்-கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.-
என்னாலான மிறுக்குகள் செய்து -கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –
சென்று கும்பிடக் கடவேன்
குதிரியாய்-என்று தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் -இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இ றே -அவை போகையாலேகேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்
குதிரி -குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –
மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –
மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –

——————————————————————-

இருந்ததே குடியாக ஷோபிக்கும் படி மடலூர்ந்தாகிலும் நிரதிசய போக்யனானவனை கணக்கு காட்டுவோம் என்கிறாள் –

யாமடல்  ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடல் ஊர்ந்தும்
செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ நாம் மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது -பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது
எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-
கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி இப்படி மடல் எடுப்பித்தவனுடைய –
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
மடலைக் கொடு புறப்பட்டால்-எதிரே வந்து என் கையில் மடலை வாங்கி தன் தோளில் மாலையை வாங்கி என் தோளில் இடில் இ றே அவனுக்கு நிறம் உள்ளது -இல்லையாகில் அவன் படும் பாடு பாராய் -செவ்வி மாலை சூடக் காண் நான் வேண்டி இருக்கிறது -என் தோளில் மாலை பாராய் சரு கான படி -அத்தலையை அழித்து ஆகிலும் பெற கடவோம்
தூ மடல் -செவ்வித் திருத்த துழாய் -உனக்கு நிரூபகமான ஸ்த்ரீத்வம் எல்லா அளவிலும் கெடாது காண் என்ன –
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
லஜ்ஜா சூன்யமாய் -லோகமாக திரண்ட இடத்தே சொல்லி விட்டேன் -தெருவுகள் தோறும் புகக் கட வேன் –
அயல் தையலார்-க்ருஹ அர்ச்சனைகள்-அர்ச்சக பராதீனன் என்றும் சொல்லி மூலைகளில் இருக்க ஒட்டுவேனோ -அந்நியர்களான ஸ்த்ரீகள்
நாமடங்காப் பழி தூற்றி
அவர்களுக்கு நா புரளாத பழி என்னுதல்-
நா மடங்காதே -வாய் ஓவாதே பழி சொல்லும்படி என்னுதல்
தூற்றி -சிசுபாலாதிகள் வாக்கில் கேளாததும் கேட்க்கும் படி
நாடும் இரைக்கவே-
அவன் ஊரார் கவ்வை பரிஹரியானாகில் நாடாகப் பழி சொல்லும் படி பண்ணுகிறேன் -ஜகாத் ஷோபத்தை பண்ண கட வேன் -இந்நாட்டுக்கு ஓர் பேர் இ றே உண்டாகப் புகுகிறது – ஒருத்தி ஒருவனை படுத்திற்று இ றே -ஒருவன் முகம் காட்டிற்று இலன் -என்னும்படி பண்ணுகிறேன் -ஒருவன் உளன் ஆகில் ஒருத்தி உடம்பு இங்கனம் இருக்க அடுக்குமோ ஜகத்து நிரீஸ்வரம் என்னும்படி பண்ணுகிறேன் -கலந்த என் வார்த்தையில் காட்டிலோ வடிவு இல்லாத வேதத்தின் வார்த்தை -எல்லாரையும் நாஸ்திகர் ஆகும் படி பண்ணுகிறேன்
நாடும் இரைக்கவே–யாம் மடலூர்தம் -தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்

இரைக்குங்  கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் –
ஷூ பிதமான கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையவன் -மடல் எடுப்பித்த வடிவு அழகு இருக்கிறபடி -சாபமாநய-என்ற போது கடல் பயத்தால் வெருவுண்டால் போலே -இவள் மடலில் துணிந்த வாறே சர்வாதிகன் கலங்கின படி என்றுமாம் -இது அனந்தாழ்வான் வார்த்தை -எப்போதும் கடலின் ஸ்வ பாவத்தை யுடையவன்
கண்ணபிரான் தன்னை-
சம்ச்லேஷ தசையில் தாழ நின்று பரிமாறின படி -வடிவு அழகு அது -ஸ்வ பாவம் அது -மடலூராது ஒழிய போமோ
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இவர் வியவசிதரான வாறே -அவன் வரவு அணித்து -என்று சோலை சஞ்சாத பரிமளம் ஆயிற்று
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-
இவர் ஆற்றாமையால் முன்னாடி தோற்றாதே இருந்த தசையில் சொல்ல செய்தேயும் -எழுத்தும் சொல்லும் பொருளும் அடியும்தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்த படி -ருஷி சோகாவேசத்தாலே சொன்னது ப்ரஹ்மாவின் பிரசாதத்தாலே ஸ்லோகம் ஆனால் போலே -பகவத் பிரசாதம் அடியாக சர்வ லக்ஷனோ பேதம் ஆயிற்று
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–
இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது –


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: