திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-1—

இப்படி ப்ரதிபாதன அர்ஹமாம் படி எம்பெருமான் ஸ்வ விஷய ஞானத்தை பிறப்பித்த உபகாரத்தை ஸ்மரித்து அதிலே ஈடுபட்ட ஆழ்வார்
-விபரீதங்களே அனுஷ்ட்டித்து பகவத் பிராப்தி உபாயமாக சொல்லுகிற வழிகள் கனாக் கண்டும் அறியாதே –
புருஷார்த்தங்கள் வேணும் -என்னும் பிரதிபத்தியும் இன்றிக்கே சம்சார சாகரத்தில் அழுந்த நின்று வைத்து ஓடுகிற தசையை உணர்வதும் செய்யாதே
-அதுக்கும் மேலே விஷய பரனுமாய் எம்பெருமான் பக்கல் இச்சையும் இன்றிக்கே இருந்து வைத்து -அவன் சந்நிதியில்
அசத்திய பாஷணம் மஹா பாதக சமமாய் இருக்க -சர்வஞ்ஞனவனுக்கும் கூட இவன் நமக்கு ஸ்நேஹீ -என்று
கருதும் படி பெரும் பொய்களை சொல்வதும் செய்து -இப்படிகளாலே அத்யந்தம் உபேஷியனாய் இருந்துள்ள என்னை இவை ஒன்றும் பாராதே
-விதி சப்த்தையான கேவல கிருபையால் -தான் சர்வ சேஷி என்னும் இடத்தையும் –
தன திருவடிகளில் அடிமை செய்வதே பரம புருஷார்த்தம் என்னும் இடத்தையும் அறிவித்து -அவ்வடிமையால் அல்லது செல்லாத படி பண்ணி
என் பக்கலிலே மிகவும் வ்யாமுக்தனாய் என்னோடே வந்து கலந்து அருளினான் -என்று ப்ரீதர் ஆகிறார் –

——————————————————————-

நான் அத்யந்தம் அந்நிய பரனாய் இருந்து வைத்தே தன ஸுந்தர்யாதி களில் ஈடுபட்டார் சொல்லும் சொல்லை பொய்யே சொல்ல -பரம பக்தர்கள் பெரும் பேற்றை ஸ்வ கிருபையால் அவன் எனக்குத் தந்து அருளினான் என்று ப்ரீதர் ஆகிறார்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

கையார் சக்கரத்து- என் கரு மாணிக்கமே! என்றென்று-பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி-மெய்யே பெற்றொழிந்தேன்
நான் பாஹ்ய விஷயங்களில் மிகவும் பிரவணனாய் அதுக்கு மேலே கையிலே பூரணமான திரு வாழி யையும் வடிவு அழகையும் காட்டி என்னை அகப்படுத்தினவனே -என்று பலகாலும் பெரும் பொய்யைச் சொல்லி –
விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?-
உன் கிருபை பெருக்கப் புக்கால் ஒருவராலும் தடுக்க முடியாது –
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே-எம்பெருமான் எனக்கும் அரியது உண்டோ என்று அருளிச் செய்ய -அனுக்ரஹ சீலனாய் என் பொய்யிலே அகப்பட்ட நீ இனி வல்லை யாகில் போய்க் காண் என்கிறார் –ஐயோ -என்றது களிப்பாலே

———————————————————–

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

தன் பக்கல் ஸ்நேஹஹீனனாய் இருந்து வைத்து அஸ்த்தானே பய சங்கிகள் சொல்லும் சொல்லை நான் சொல்ல -சர்வேஸ்வரனான தான் சவிபூதிகனாய்க் கொண்டு என்னுள்ளே புகுந்து அருளினான் என்கிறார் –
பொல்லா மணியே -பிறர் கண் எச்சில் படாமைக்கு சொல்லுகிறது -கூத்து -பொய்

——————————————————————–

ஹ்ருதயம் அந்நிய பரமாய் இருக்க -வாங்மாத்திரத்தாலே -உன்னை பெற்ற நான் உன்னை ஒழிய வேறு ஒரு புருஷார்த்தத்தை  ஆசைப்பட்டேன் என்கிறார் –

உள்ளன  மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா புறமே -இத்யாதி
அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்கச் செய்தே-பரம உதாரனே -நிரதிசய போக்யமானவனே -என்றால் போலே-புறம் பூச்சாக சில பொய்களை சொல்லி சர்வஞனான உன்னையும் வஞ்சிக்கும் படியான கள்ள மனம் தவிர்ந்து உன்னைக் காணப் பெற்று க்ருதார்த்தன் ஆனேன் –
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
என் பக்கல் உண்டான வியாமோஹத்தாலே அவசர பிரதீஷானனாயக் கொண்டு வந்து திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனே –

—————————————————————

இதுக்கு முன்பு எல்லாம் உன் பக்கல் இப்படி பொய்யனாய் யாயிற்றது பிரகிருதி சம்பந்தத்தால் யான பின்பு இந்த பிரகிருதி சம்பந்தத்தை போக்கி யருள வேணும் என்கிறார்-

என் கொள்வன்  உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

பரமை காந்திகளைப் போலே உன்னைத் தவிர மற்று ஒன்றிலும் கார்யம் இல்லை என்று சொல்லா நின்று வைத்தும் பகவதீயமான ஆத்மாவை அபஹரித்தவன் கள்வன் ஆகையால் -விஷயங்களின் நின்றும் மனசை நிவர்த்திப்பித்து அத்தை பெறாமையாலே ப்ரவ்ருத்தமான கண்ண நீரையும் மாற்றி மனசை உன் பக்கலிலே செறியும் படி பண்ணி என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க மாட்டுகிறிலேன்-ஆனபின்பு என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை நீயே போக்கி உன் திருவடிகளில் என்னை அழைத்து அருளாய் கிருஷ்ணனே –
அதவா-
கீழ் பிறந்த சம்ச்லேஷம் ஞான அனுசந்தானம் மாத்ரமேயாய் பாஹ்ய காரண யோக்யம் அன்றிக்கே ஒழிந்த வாறே -அதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -உன்னோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியான பிரக்ருதியை அறுக்கைக்கு ஈடான உபாய அனுஷ்டானத்தையும் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் ஷமன் ஆகிறிலேன்-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்
என் கொள்வன்உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்-
இதர விஷய ப்ராவண்யத்தை தவிர்ந்து உன்னைக் கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி அபேக்ஷை வர்த்தியா நிற்கச் செய்தேயும்-
வன் கள்வனேன்
நினைத்த படி கிடையாமையாலே மஹா பாபியேன் என்கிறார்
மனத்தை என்று தொடங்கி –
உன் குணங்களை நினைக்கையாலே சிதிலமான கரணங்களை நிலை நிறுத்தி உன்னை ஆஸ்ரயித்து என் ஆத்மாவை ப்ரக்ருதியோடு பிரிக்க மாட்டு கிறி லேன் –

———————————————————————-

மலினமாவது பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –

கண்ண பிரானை  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை-நண்ணியும் நண்ணகில்லேன்-
அயர்வறும் அமரர்களுக்கு போக்யனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி எனக்கு போக்யனான உன்னைப் பெற்று வைத்தே பெறாதார் கணக்கு ஆனேன் –
நடுவே ஓர் உடம்பிலிட்டுத்- திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்-புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே-
பெறாது ஒழி கிறது என் என்னில்-திருவடிகளில் சம்பந்தத்தை உணர்ந்தார்க்கு ப்ரக்ருதியோடு இருக்கைக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே-ஒரு ஹேயமான சரீரத்தில் என்னை பிரவேசிப்பித்து -அவித்யா கர்மாதிகளாலே த்ருடமாகக் கட்டி சரீரகத தோஷம் தெரியாத படி யாகப் பண்ணி உன்னைக் காண ஒண்ணாத நிலத்திலே என்னைப் போர வைத்தாய்-

—————————————————————-

இவருக்கு பிரகிருதி அனுசந்தானத்தாலே வரும் வ்யஸனம் விஸ்ம்ருதமாம் படி எம்பெருமான் திரு வடிவு அழகைக் காட்டாக கண்டு ப்ரீதர் ஆகிறார் –

புறமறக்  கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

பந்தம் அறுத்து விட ஒண்ணாத படி பந்தித்து புண்ய பாப கர்மங்கள் நலிகைக்கு ஈடாக பர்யாயேண வரும் சரீர பிரவேசத்தை தவிர்ந்து என்று தோற்றும் படி
அறமுயல் ஆழி-ஆஸ்ரித  பரித்ராணாம்  ஆகிற பரம தர்மத்தில்முயலா நின்றுள்ள திரு வாழி-

————————————————————

தாம் பெற்ற பேற்றாலே விஸ்மிதரான ஆழ்வார் எத்தனையேனும் பாபிகளுக்கும் எம்பெருமான் கிருபை யுண்டாக்க கிடையாதது இல்லை என்கிறார் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

திருவாழியை திருக் கையிலே யுடையனான சர்வேஸ்வரன் எத்தனையேனும் அளவுடையார்க்கும் சென்று கிட்ட ஒண்ணாத விலஷணன்-நான் அதி ஷூத்ரன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆர்த்தியை நீக்கினால் போலே என் துக்கத்தை போக்க வேணும் என்று தலையிலே கையை வைத்து அஹ்ருதயமாக கூப்பிட்டே அக்ருத்ரிம பக்தி உக்தன் ஆனேன் -என்னை இப்படி ஆக்கின அவன் தானும் என்னை அல்லது அறியான் ஆனான் -ஆனபின்பு எத்தனையேனும் பாபிகள் மேலும் எம்பெருமானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இன்றிக்கே பெருகும் கிடி கோள்-

—————————————————————

தனக்கு விலக்ஷண போக்தாக்கள் உண்டாய் இருக்கச் செய்தே என்னுள்ளே இப்போது புகுந்தான் -எனக்கு இனி சர்வவித போகமும் எம்பெருமானே என்கிறார் –

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

அயர்வறும் அமரர்களும் பூமியிலே வைஷ்ணவர்களும் அநந்ய பிரயோஜனராய் தொழும் படியான பெருமையை யுடையவர் -இப்போது என்னை அல்லது அறியாதே என் மனசிலே வந்து செறிந்தார் –
இனி போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான அபரிமித சம்பத்தும் குணவான்களான புத்ராதிகளும் -பரிவுடைய தாயும் தந்தையும் மற்றும் எல்லாம் ஆவார் அவரே-

—————————————————————

சம்சாரத்தில் நான் பட்ட கிலேசம் எல்லாம் நீங்கும் படி தன்னுடைய நிரவதிக கிருபையால் அப்ராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே சம்ச்லேஷித்தான் என்கிறார்-

ஆவார் ஆர்  துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

ஷூ பிதமான கடலிலே நடுவே அழுந்துகிற நாவாய் போலே சம்சார சமுத்திரத்தின் நடுவே அகப்பட்டு நின்று ரக்ஷகர் ஆவார் ஆர் என்று நான் நடுங்க
அற வி லக்ஷணமான ஒப்பனையோடும் திவ்ய ஆயுதங்களோடும் கூட வந்து தன்னுடைய நிரவதிக கிருபையை என் பக்கலிலே பண்ணி என்னோடே சம்ச்லேஷித்தான் –


எம்பெருமான் என் பக்கல் பண்ணின மஹா உபகாரத்தை நான் சிறிது அனுசந்திக்க இந்த க்ருதஞ்ஜையே  பற்றாசாக வந்து என்னோடே நிரவதிக சம்ச்லேஷத்தை பண்ணி அருளினான் என்கிறார் –

ஆனான்  ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-

நான் அபேக்ஷியாது இருக்க தன்பேறாகக் கொண்டு என்னோடே சம்ச்லேஷித்து பண்ணி எனக்கு எல்லா போகமும் ஆனான் –
என்னை முற்றவும் தான் ஆனான் -என்கிறது என்னை உள்ளும் புறமும் ஓர் இடம் ஒழியாமே வியாபித்தான் என்றுமாம் –
என்னை விஷயீ கரிக்கைக்காக மத்ஸ்ய கூர்மாதி அநேக அவதாரங்களை பண்ணி பின்னையும் என் பக்கல் உள்ள அபி நிவேச அதிசயத்தால் கல்கியாக கடவ பரம உதாரன்

——————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லார் நிரவதிக வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர் என்கிறார்  –

கார் வண்ணன்  கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

காள மேகம் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையனாய் உத்தப்புல புண்டரீக தடாகம் போலே இருக்கிற திருக் கண்களை யுடையவன் ஆகையால் சிலாக்யனான கிருஷ்ணனை
ஏர்களின் ஸம்ருத்தியை யுடைத்தாய் அழகியதாய் இருக்கிற வயலோடும் கூடின திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த சீரியதான படியை யுடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை ப்ரீத்தி பூர்வகமாகச் சொல்லுமவர்கள் -கவிகளுக்கு அங்கமான சீரையும் வண்ணத்தையும் உடைய ஒள்ளிய தமிழ் என்றுமாம் –

—————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: