திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-1-–

சம்சாரிகளிலே அந்நிய தமரராய் இருக்க -இவர்களையும் திருத்தும் படியாக ஸ்வ விஷயத்தில் ஞானத்தை பிறப்பித்த உபகாரத்தை அனுசந்தித்து
-அதிலே ஈடுபட்டு -இனிமை நமக்கு உண்டாகுகைக்கு ஹே து என் என்று பார்த்தார் –தம்மைப் பார்த்த இடத்து விபரீதா சரணமாய்
-பகவத் பிராப்திக்கு உபாயமாக சொல்லுகிற வழிகள் கனாக் கண்டும் அறியாதே -அதுக்கும் மேலே அமிர்தம் இருக்க நஞ்சை தின்பாரைப் போலே
விஷயாந்தரங்களிலே பிரவணராய் -இப்படி இருக்கிற தசையையும் உணர அறியாதே உபேஷ்யனான என்னை -இவை ஒன்றையும் பாராதே
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால் தன சேஷித்வத்தையும் என் சேஷத்வத்தையும் அறிவித்து தன திருவடிகளில் கைங்கர்யத்தை அல்லாது
செல்லாத படி பண்ணி -இப்படி என் பக்கலிலே வியாமுக்தனாய் என்னோடே வந்து கலந்து அருளினான் என்று ப்ரீதர் ஆகிறார்
மித்ரா பாவேந என்ற ஸ்லோகத்தில் எம்பார் -சர்வஞ்ஞனுக்கு ஒரு அஞ்ஞானமும் விஸ்ம்ருதியும் சர்வ சக்தனுக்கு ஓர் சக்தியும் உண்டு -என்று அருளிச் செய்வர்
ஒருவன் தன்னை ஆஸ்ரயித்ததால்-முன்பு புத்தி பூர்வம் பண்ணின குற்றத்தில் விஸ்ம்ருதி -ஞானம் பிறந்தால் பிராமாதிகமாக வருமவற்றில்
அஞ்ஞானம் -இவனை விட வேண்டும் அளவில் அசக்தியும்-இப்படி இருக்கைக்கு அடி-ஸ்வாபாவிகமான குடல் துடக்கு –

——————————————————————-

என் பக்கல் உள்ள அஹ்ருதயமான யுக்தியை சஹ்ருதயமாகக் கொண்டு பரபக்தி யுக்தர் பெரும் பேற்றை தன் கிருபையால் எனக்குத் தந்து அருளினன்-என்கிறார் –

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

கையார் சக்கரத்து –
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே திரு வாழி யைப் பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் வேண்டாது இருக்கை-ஆபரணஸ்யாபரணம் –
என் கரு மாணிக்கமே! –
நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை எனக்கு முற்றூட்டாக தந்தவனே -புறம்பு ஆத்மகுணத்திலும் போக வேண்டுவது இல்லை –பக்தானாம் என்கிற பொதுவையும் அழித்தது
என்றென்று-
மெய்யே நல்லராய் இருப்பார் சொல்லும் வார்த்தை இது –இது அந்நிய பரரான நமக்கு குற்றமாக கடவது இ றே-ஒரு கால் சொல்லி அநு சாய்த்து விட்டேனோ -இது தான் பொல்லா வார்த்தையோ -ஸ் மரன் மநுஷ்யஸ் தைதம்-என்றும் ஸ்ம்ருதோயச்சதி சோபனம் -என்றும் சொல்லா நின்றதே என்ன
பொய்யே கைம்மை சொல்லிப்
நல்ல வார்த்தை இ றே நாமும் மெய்யாகப் பெற்றோம் ஆகில் பொய் என்றும் -கைம்மை என்றும் -இரட்டிப்பால் மிகுதியாய் -பெரும் பொய் என்கை –அதாவது அகவாய் அறியாதாரைப் பகட்டுகை அன்றிக்கே-ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆனவனும்-மெய் என்று இருக்கும் படி சொல்லுகை -அகவாயில் நினைவு ஒழிய சொல்லக் கூடாது என்று இருக்கும் இ றே அவன்
புறமே புறமே ஆடி
பொய்யும் மெய்யுமாகத் தான் கலந்து சொன்னதோ -பாஹ்ய விஷயங்களில் அவகாஹித்து -வீப்சையாலே-அவை தன்னிலும் ஒன்றிலே துவக்கு உண்டால் -புறம்பு கால் வாங்க மாட்டாது இருக்கை -ஆடி என்று அவற்றிலே நடையாடி என்றுமாம் –இது தான் ஞானம் பிறப்பதற்கு முன்பு உள்ள காலத்தை பற்றச் சொல்லுகிறார் ஆதல் –
இவ்விஷயத்தில் தமக்கு பிறந்த ப்ரேமம் -பெறுகிற பேற்றுக்கு போராது என்று இருக்கையாலே சொல்லுகிறார் ஆதல் -மயர்வற மதி நலம் அருள பெற்ற பின்பு காளத்ரய வார்த்தைகளும் கரதலாமலகவத் விசதமாய் இ றே இருப்பது -பரமபக்தி பர்யந்தமாக உண்டானாலும் பேற்றைப் பார்த்தால் முதலடி இட்டதில்லை என்னும்படியாய் இ றே இருப்பது
உம்முடைய படி இதுவாகில் பேறு இருந்தபடி என் என்ன
மெய்யே பெற்றொழிந்தேன்
பேற்றில் ஒரு புரை இல்லை –என்னால் வருமது இ றே புரை உள்ளது –அவனால் வருமது புரை இல்லை என்கை –
பேற்றில் இனி செய்யலாவது இல்லை -பேறு என் அளவு அன்றிக்கே சம்சாரிகளுக்கும் நிழலாம் படியாக பெற்றேன்
விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?-
விதி என்று பகவத் கிருபை –கர்ம பரதந்த்ரனுக்கு கர்மம் அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணா தோபாதி -அவனுக்கும் கிருபா பரதந்த்ரன் ஆகையால் கிருபை பண்ணி அல்லது நிற்க ஒண்ணாமை யாலே விதி என்கிறது -பகவத் கிருபை கரை புரள புக்கால் நிவாரகர் உண்டோ –காப்பது ஏது என்னாதே காப்பார் யார் என்கிறது -பல போக்தாவான இவனாலும் -கிருபா ஜனகை யான அவனாலும் ஒண்ணாது என்கை –ஸ்வ தந்த்ரனான அவனாலும் ஒண்ணாது -ஸ்வ தந்தர்யத்திலும் விஞ்சி இ றே கிருபை இருப்பது -இவனால் கிருபையை விஞ்சைக் குற்றம் செய்ய ஒண்ணாது -அவனால் ஸ்வ தந்தர்யத்தால் குற்றம் கண்டு கை விட ஒண்ணாது -நிரங்குச மான ஸ்வ தந்தர்யத்தை யுடைய நம்மால் தடுக்கத் தட்டு என் என்ன
ஐயோ!
ஸ்வ தந்தர்யத்தை நினைத்தோ -கிருபையை விஞ்சி கால் வாங்கி காண் -இனி என்கிறார்
ஐயோ என்றது ஹர்ஷத்தாலே -கிருபையின் கீழ் குற்றம் காண ஞானம் இல்லை -விட சக்தி இல்லை
கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–
ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்
கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

————————————————————-

அஸ்த்தானே பய சங்கிகள் சொல்லும் வார்த்தையை நான் அஹ்ருதயமாகச் சொல்ல -சர்வஞ்ஞனான அவன் அத்தை மெய்யாகக்  கொண்டு தன் விபூதியோடே நான் இட்ட வழக்கு ஆனான் என்கிறார்

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –
போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்
மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் -இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இ றே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்
என் பொல்லா மணியே –தத கடகடா சப்த சமா கர்ண ந தத்பர கமலேக்ஷண -இவற்றைத் தப்பித் போய்-முறிந்து விழுகிற ஓசையைக் கேட்டு அபூர்வ தர்சனத்தாலே சிவந்து மலர்ந்த கண்ணும் தானுமாய் இருக்கிறபடி –
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை -என்ன கடவது இ றே -அழகிது என்னில்-நாட்டில் அழகோ பாதியாம் -என்று வியாவிருத்தி தோற்ற
பொல்லா மணியே என்னுதல்-பொல்லா என்று நாட்டார் கண்டு கண் எச்சில் படாமைக்கு கரி கீறுகிறார் என்னுதல்
கண் எச்சிற்க்கு அரிதாக சொல்லியது -என்று வியாக்யானம் பண்ணினான் -துளையா மணி -அனுபபுக்தமாய் இருக்கும் மணி என்றுமாம் -பொள்ளல் -துளை தல் -இதுவும் யசோதை பிராட்டி சந்நிஹிதையாய் நின்று சொன்ன வார்த்தை
தேனே! இன்னமுதே! என்றேன்றே
தேனே – வந்து எடுத்துக் கொண்ட போதை ஸ்பர்சத்தாலும் முக்த ஜல்பித்ததாலும்-கொண்டாடி சொன்ன வார்த்தை
இன்னமுதே -அப்போதே போக்யத்தையாலே சொன்ன வார்த்தை நிரதிசய போக்யமாய் -போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை
என்றேன்றே-
ஒரு கால் சொல்லி அநு தப்பித்து மீண்டேனோ
சில கூத்துச் சொல்லத்
சிலருடைய செயலை வேறே சிலர் அநு கரிக்கை-ப்ரேம பரவசையானவள் சொல்லக் கேட்ட வார்த்தையை அஹ்ருதயமாக நான் சொல்லுகை
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
தான் ஆகில் -இத்தலையில் உள்ளது எல்லாம் அறிய வல்ல சாமர்த்தியத்தை யுடையனாய் இருக்க -அஹ்ருதயமாக உக்தியையும் சம்பந்தத்தையும் கொண்டு நான் இட்ட வழக்கு ஆனான் -உடையவன் தன் உடைமையான எனக்கு உடைமை யானான் –
என்னை உடையவன் நான் இட்ட வழக்கு ஆனான் அத்ரோத்தமாயிற்று-அவன் விபூதி செய்வது என் -என்னில்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–
யஸ் யைதே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே விபூதியும் தான் இட்ட வழக்கு ஆயிற்று –ச விபூதிகனாய்க் கொண்டு உள்ளே புகுந்தான் –
வானே மா நிலமே -பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்
மற்றும் -அவற்றின் கார்யமான அண்டங்களும்
முற்றும் -நித்ய விபூதியும்
என்னுள்ளனவே.-நித்ய ஸூ ரிகள் செல்லாமை பார்த்து அங்கே இராதே லீலா விபூதி அழிந்த படி பார்த்து இங்கே புகுந்தான்
உபய விபூதியில் உள்ள நிர்வாஹமும் என் பக்கலிலே இருந்து பண்ணும் அத்தனையாய் விட்டது-

————————————————————-

பொய்யே கைம்மை சொல்லி -என்றும் சில கூத்து சொல்ல என்றும் -சொன்ன வார்த்தையை விவரியா நின்று கொண்டு இப்படி வாங்மாத்திரத்தாலே உன்னைப் பெற்ற நான் உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப்பட்டேன் என்கிறார் –

உள்ளன  மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா –
உள்ளுள்ளன -வேறு சில உளவாக -அந்தக்கரணம் பிராகிருத விஷய ப்ரவண மாய் இருக்கை-
புறமே சில மாயம் சொல்லி-
புறப் பூச்சாக -சில வார்த்தைகளை சொல்லி -இத்தால் கூத்துச் சொல்ல -என்றத்தை சொல்லிற்று –
கீழே கூத்து என்கிறது -பிறருடைய வியாபாரத்தை தான் அநு கரிக்கும் அளவாயிற்று -இங்கு மனஸ் அந்யத் வாசல் அந்யத் -என்கிறபடியே க்ருத்ரித்மத்தை சொன்னேன் என்கிறார்
சொல்லுகிறதவை தான் எவை என்ன –
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
பரம உதாரனே -பெரு விலையான நீல ரத்னம் போலே சிலாக்கியமான வடிவை எனக்கு உபகரித்தவனே -அப்புத்தயா சொல்லா நிற்கச் செய்தே -சஹ்ருத்யமாக சொல்லுகிறார் என்று தோற்றும் படி பல காலும் சொல்லி
சர்வஞ்ஞானான நீயும் மெய் என்று பிரமிக்கும் படி –
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்-
பகட்டும் க்ருத்ரியுக்தமான மனசை –
அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும்படி கொண்டு முழுகும் விஷயம் இ றே
உன்னை -மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் உன்னை –ப்ராப்தனாய் நிரதிசய போக்யனான உன்னை
நிதி எடுத்தால் போலே லபித்து
அசன்னேவ என்னும் படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –
பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே
சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு
நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய
பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –

———————————————————————

பொய்யே கைம்மை சொல்லி -சில கூத்து சொல்ல -புறமே சில மாயம் சொல்லி -என்று இவ்விஷயத்தில் பொய் சொல்லி போருகைக்கு நிபந்தம் ப்ரக்ருதி சம்பந்தத்தால் யான பின்பு இத்தைப் போக்கி உன் திருவடிகளில் அழைத்துக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

என் கொள்வன்  உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
பரமை காந்திகளே போலே -உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தை கொள்வன்-என்று சொல்லா நின்று வைத்து
வன் கள்வனேன்
களவாவது -பரத்வ வ்யாபஹாரம்
வலிய களவாவது -சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை
த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார் மேல்
மனத்தை வலித்து-
விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை -இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-
கண்ண நீர் கரந்து-
விஷய அனுபவத்தால் வந்த கண்ண நீரை மாற்றி -விஷய ப்ராவண்யம் சாஸ்த்ரா உபதேசத்தால் போமோ -உன் போக்யதை யைக் காட்டினால் அன்றோ அந்தக் கண்ண நீர் மாறுவது –
நின் கண் நெருங்க வைத்தே-
மனசை உன் பக்கலிலே செறியும் படி பண்ணி இதுவும் என்னால் செய்யலாவது ஓன்று அன்று -உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –
எனது ஆவியை நீக்க கில்லேன்
என் சரீரத்தின் நின்றும் என் ஆத்மாவை பிரிக்க மாட்டு கிறி லேன் -ஆன பின்பு நீயே செய்து அருள வேணும்
என் கண் மலினம் அறுத்து
மலினம் -மாலினியம் -அதாவது பிரகிருதி சம்பந்தம் –என்னுடைய பிரகிருதி சம்பந்தத்தை நீயே போக்கி –
என்னைக் கூவி அருளாய் கண்ணனே –
அஷமனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -தன் பக்கல் அசக்தியை அனுசந்தித்து சோகித்தவனை -மாஸூச -என்றில்லையோ –
அதாவா –
கண்டு கொண்டு உந்து ஒழிந்தேன் -என்ற இடம் ஞான அனுசந்தான மாத்ரமாய்-பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கை வராமையாலே இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்-
ஸ்வரூப ப்ராப்தமான உன்னை ஒழிய அநர்த்த ஹேதுவான விஷயங்களை விரும்புவேனோ என்று ஸ்வரூப அநு ரூபமான அபேக்ஷையை பண்ண நிற்கச் செய்தேயும்
வன் கள்வனேன்
அபேக்ஷித்த போதே கிடையாமையாலே மஹா பாபியேன் என்கிறார் –
மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து-நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்-என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய்-
குண அனுசந்தானத்தாலே சிதிலமான மனசை திண்ணிதாகப் பண்ணி -இழவால் வந்த கண்ண நீரையும் மாற்றி -இப்படி நீ என்றால் உடை குலைப் படாத படி உன்பக்கலிலே நெருங்கும் படி சேர்த்து -பிராணா யத்தஸ்திதியான என்னுடைய சரீரத்தின் நின்றும் என் ஆத்மாவைப் பிரிக்க ஷமன் ஆகிறி லேன் -போக விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அறுத்து உன் திருவடிகளில் அழைத்து அருள வேணும்
கண்ணனே
உன்னை ஒழியச் செல்லாதார்க்கு வந்து முகம் காட்டி அவர்கள் விரோதியை போக்குமவன் அல்லையோ -பரித்ராணாம் ஸாதூ நாம் -அஞ்ஞரோடு பக்தி பரவசரோடு வாசி இல்லை இ றே-உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு அஷமராக்கைக்கும்-ஈஸ்வரன் கடவனாகைக்கும் –

—————————————————————-

கீழே மலினமாவது பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாக அருளிச் செய்து -அதிலேயிட்டு என்னை நோவுபட விட்டு இருந்தாய் என்கிறார்

கண்ண  பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நித்ய ஸூ ரிகளுக்கு பரம போக்யமான -உடம்பு படைத்தவனை -அவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே-நித்ய அபூர்வமான வடிவு இ றே
கண்ண பிரானை -அவ்வடிவை கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு உபகரித்தவனை
அமுதை-போன உயிரை மீட்க வற்றாய்-நிரதிசய போக்யமான வடிவை எனக்கு அனுபவிப்பித்தான்
நண்ணியும் நண்ணகில்லேன்
கிட்டியும் கிட்டாதார் கணக்கு ஆனேன் -பேறாக சொல்லுகிறது ஞான பலத்தை –பெறாமை யாகிறது -ஞான அனுகூலமான பிராப்தி இல்லாமை -அது இன்றிக்கே ஒழிகிறது என் என்னில் -அசித் சம்சர்க்கத்தாலே-சம்சாரத்திலே நீ வைக்கையாலே-என்கிறார் –
நடுவே ஓர் உடம்பிலிட்டுத்-
சரீர சம்பந்தம் அநாதி யாய் இருக்க -நடுவே என்பான் என் என்னில் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தி இல்லாமையாலும் கர்ம உபாதிகம் ஆகையாலும்-பகவத் பிரசாதத்தால் விடக் காண்கையாலும் –
முத்துக்கு மாலினியம் அநாதியாய் இருக்க ஒரு நாளிலே கடைந்து தெளியக் காண்கையாலே-ஸ்வரூப அதிரேகி -என்று தோற்றுமா போலே
பகவத் அர்ஹமான வஸ்துவுக்கு மாம்ஸாஸ் ருங்மயமான அசித்தோடே என்ன சேர்த்தி உண்டு –
பெருமாளோடு அனுபவிக்கப் பாரித்த பிராட்டி முன்பே ராவணன் தோற்றினால் போலே இருக்கிறதாயிற்று இவருக்கு சரீர சம்பந்தம் -சம்சர்க்கம் ஒழிய ஆச்ரயத்தோடு ஒரு சம்பந்தம் இல்லை என்கை –
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
பலவாய்ச் செய்யப்பட்டு வலிதான பாபம் ஆகிற பாசத்தால் த்ருடமாக நெருக்க கட்டி
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–
சரீரகத தோஷம் தெரியாதபடி பண்ணி -அக்வாயைப் பார்த்தால் காக்கை நோக்கும் படியாய் இருக்கை
தோலின் கை பாணி புறத்தால் வந்த வழு மூட்சியைப் பார்த்து ஸ் ப்ருஹை பண்ணும் படி இ றே பண்ணி வைத்தது –
என்னை -ஸ்வ ரக்ஷணத்தில் அப்ராப்தனாய் அசக்தனாய் இருக்கிற என்னை
போர வைத்தாய் புறமே.–அனுபவத்தில் பாரித்து இருக்கிற பிராட்டியை அசோகா வனிகையிலே வைத்தால் போலே -இவர்களுக்கு சம்சாரிகள் நடுவே இருக்கிற இருப்பு
ஸ்வ கர்மத்தால் வந்ததை அவன் குற்றம் ஆக்குவான் என் -என்னில் -பிரஜை தானே கிணற்றில் விழுந்தாலும் -மாதா நோக்கிற்று இலள்-என்னுமத்தைக் கொண்டு -அவள் தள்ளினாள் -என்ன கடவது இ றே -ஸ்வரூப பாரதந்தர்யோபாதி கர்மமும் அவனைக் குறித்து பொறுத்தோம் என்ன கழி கிறி திறே-

—————————————————————

இவருக்கு பிரகிருதி அனுசந்தானத்தாலே வரும் வ்யஸனம் விஸ்ம்ருதமாம் படி எம்பெருமான் திரு வடிவு அழகைக் காட்டாக கண்டு ப்ரீதர் ஆகிறார் –

புறமறக்  கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

புறமறக் கட்டிக் கொண்டு –
புச்சம் உள்ளே அகப்படும் படி பந்தித்துக் கொண்டு -சிலரால் தலை கண்டு அவிழ்க்க ஒண்ணாது இருக்கை -மம மாயா துரத்யயா என்று -கர்ம அநு குணமாக சர்வ சக்தி பிணைத்த பிணையை சிலரால் அவிழ்க்க ஒண்ணுமோ
இருவல் வினையார் –
பெரிதாய் வலிதான கர்மங்கள் –வினையார் என்கிறது அவற்றால் நெருக்கு உண்ணுகிற படியைக் கண்டு சொல்லுகிறாராதல் -அவை தான் பல வாகையாலே பஹு வசனமாதல்
குமைக்கும்-முறை முறை யாக்கை புகல் ஒழியக் –
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழையும் ஷூ த்ர பதார்த்தம் போலே -தேவாதி சரீரங்கள் தோறும் புக்கு அஹம் புத்தி பண்ணி நோவு படுகிற ஞானானந்த லக்ஷணம் ஆகிற வஸ்து -புண்யம் தேக சரீரத்தில் புக விட்டு நலியும் -பாபம் திர்யக் ஸ்தாவரங்களிலே புக விட்டு நலியும் -புண்ய பாபங்கள் இரண்டும் மனுஷ்ய சரீரத்தில் புக விட்டு நலியும் இப்படி அடைவு அடைவே அஸ்திரமான சரீரத்தில் அஹம் புத்தி பண்ணி நோவு படுகிறது தவிர தவிர்ந்து என்று தோற்றும் படி
கண்டு கொண் டொழிந்தேன்-
உத்தேச்யனான உன்னைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –சரீர பிரவேசம் தவிர்ந்தேன் -அவன் உடம்பை கண்டவாறே தம் உடம்பை மறக்கும் படி இ றே அவ் உடம்பில் வை லக்ஷண்யம் இருப்பது
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
வைத்த கண் வாங்க ஒண்ணாத படி அழகிய நிறத்தை உடைத்தாய் -சர்வ பூஷண பூஷார்ஹங்களாய் -கற்பக தரு பணித்தாள் போலே நாலாய்-பாஹுச்சாயாம் அவஷ்டப்த -என்று சகல லோக ஆபாஸ்ரயமான தோள் —
செய்ய வாய் -சவிலாசஸ்ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் என்று முகமாகிறது முறுவல் எடுத்து வைக்க கொள் காலம் ஆயிற்று
செய்ய வாய் -தோளை அண்டை கொண்டார்க்கு -அபாயம் சர்வ பூதோப் யோ தாதாமி -என்னும் வாய்
செய்ய தாமரைக் கண் -ராம கமலா பத்ராஷ -என்கிறபடி இதுக்கு அடியான பிராப்தி எல்லாம் தோற்றும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணும் கண் –
அறமுயல் ஆழி அங்கைக் –
லஷ்மணஸ்ய தீமத-என்கிறபடி ரக்ஷகனான ஈஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷண தர்மத்தில் உத்யுக்தமான திரு வாழி யைக் கையிலே உடையவன்
கருமேனி அம்மான் தன்னையே–
அது திரு வாழி க்கு பரபாகமாய் சிரமஹரமான திரு மேனியை யுடையவன்
அவை அடங்க என்னது -என்னலாம் படியான பிராப்தி இருக்கிறபடி-
ஆக்கை புகல் ஒழிய – கருமேனி அம்மான் தன்னைக் கண்டு ஒழிந்தேன்
நீல தோயத மத்யஸ்த்தா -என்னும் படி இ றே ஹிருதயத்திலே இருக்கிற படி
முன்பு இவ்வுடம்பு அவன் உடம்பை மறப்பித்தால் போலே இப்போது அவன் உடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது-

———————————————————————-

அவன் கிருபையால் தாம் பெற்ற பேற்றை கண்டு விஸ்மிதர் ஆனார் -எத்தனையேனும் அயோக்கியருக்கும் கிருபை யுண்டாக இழக்க வேண்டா கிடீர் என்கிறார் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

அம்மான் ஆழிப் பிரான் –
கையும் திரு வாழியுமான சேர்த்தியை நித்ய ஸூ ரிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன்
அவன் எவ்விடத்தான்?-
அவன் எவ்வளவில் உள்ளான் -நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூ ரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத படி அவ்வருகு ஆனவன்
யான் ஆர்?-
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகு ஆனவன் -உபய விபூதியும் இருவருக்கும் நடுவே -நீர் கண்ட படி என் என்னில்-
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்-
எல்லா வகையாலும் மஹா பாபத்தை பண்ணினவர்கள் பக்கலிலும் பகவத் கிருபை -பெருகப் புக்கால் தகை இன்றியிலே பெருகும் கிடி கோள் -பகவத் கிருபை ஏறிப் பாய புக்கால் கரையிலே நின்றோம் என்ன தப்ப விரகு இல்லை
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே-
ஜென்மமும் வ்ருத்தமும் ஞானமும் இன்றிக்கே பூர்வ ஜென்ம வாசனையே யான ஆனையினுடைய துக்கத்தை போக்குகைக்கு அரை குலைய தலை குலைய மடுவின் கரையிலே வந்து தோற்றினால் போலே என் துக்கத்தை போக்க வேணும் -என்று கையைத் தலையிலே வைத்து அஹ்ருதயமாக கூப்பிட்டே அக்ருத்ரிம பக்தி உக்தன் ஆனேன் –
கை தலை பூசல் -தலையிலே வைத்த கை மாறாதே என்றுமாம் –
ஆனைக்கு உதவினதும் தங்களுக்கு உதவிற்றாக உபகார ஸ்ம்ருதியாலே அஞ்சலி பண்ணி சொல்லுமத்தை அஹ்ருதயமாக சொல்லியே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன்–
-அந்த பொய்ம்மால் போய் மெய்ம்மாலாய் நின்றேன் -அவன் செய்வது என் என்னில் –
எம்பிரானும் என் மேலானே.–
நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற எனக்கு உபகாரகனாய் போந்தவன் -என்னை இப்படி யாக்கின தானும் தன் பேறாக மேல் விழுந்தான் -கிருஷியும் தன்னதாயே விட்டது –
மொயம்மாலாய் ஒழிந்தேன் -எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்

——————————————————————–

உபய விபூதி உக்தனானவன் விபூதியை விட்டு என்னுள்ளே ஸ்தாவர ப்ரதிஷ்டையாய்-நின்றான் -நானும் என் விபூதி எல்லாம் அவனேயாகப் பற்றினேன் என்கிறார்

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்-மாலார் வந்து-
நித்ய ஸூ ரிகளும் பூமியில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஒரு நீறாகச் சேர்ந்து அடிமை சர்வாதிகனானவன் வந்து -காட்டில் த்ரியக்குகளோடு இளைய பெருமாளோடு வாசி அற அடிமை கொண்டால் போலே -விலக்கடி யுண்டான சம்சாரத்தில் இருக்கிறவர்களோடு நிலவரான நித்ய ஸூ ரிகளோடு வாசி அற அடிமை கொள்ளும் ஏற்றத்தை உடையவன் என்கை –
இனநாள்-
இப்போது -பூர்வ க்ஷணத்தில் அறியாதே இருக்க -இங்கனே பலித்துக் கொடு நின்றேன்
அடியேன் மனத்தே மன்னினார்-
சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார் -இனி நீர் செய்யப் பார்த்தது என் என்ன
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்-மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–
போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் ஆவார் அவரே -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா -மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-

——————————————————————-

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி தன் கிருபையால் அப்ராக்ருதமான வடிவோடே வந்து கலந்தான் என்கிறார் –

ஆவார் ஆர்  துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

ஆவார் ஆர் துணை? என்று –
இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று
அலை நீர்க் கடலுளழந்தும்-நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்-
ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் -ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்-
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும்
ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்-
எம்பெருமானார் -கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார்
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்
ஆஆ! என்று அருள் செய்து –
ஐயோ ஐயோ என்று தன்னுடைய நிரவதிக கிருபையை பண்ணி -கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப்பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் –
அடியேனொடும் ஆனானே.–
ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –

—————————————————————–

அவன்தான் கிருபையால்-சப்தாதி விஷய ப்ராவண்யத்தை தவிர்த்து -தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த மஹா உபகாரத்தை அனுசந்தித்த க்ருதஞ்ஜைதையை பற்றாசாக வந்து என்னோடே நிரவதிக சம்ச்லேஷத்தை பண்ணினான் என்கிறார் –

ஆனான்  ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து –
என்னை அடிமை கொள்வான் ஆனான் என்கிற இந்த யுக்தி மாத்ரத்தையே குவாலாகக் கொண்டு -இப்படி சொல்லுகைக்கு தான் பண்ணின க்ருஷியை மறந்தான் -என்னுடைய யுக்தி மாத்ரத்தையே குவாலாக நினைத்தான் -பலம் பூஜிக்கிற நான் அன்றிக்கே உகப்பும் தன்னதே யாயிற்று
வந்து-தானே இன்னருள்செய்து-
தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –
என்னை முற்றவும் தானானான்-
உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்-
சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்-
ஞான ப்ரதானார்த்தமான ஜல சர சஜாதீயன் ஆனான் –
தாரண அர்த்தமாக கூர்ம ரூபி யானான் -சடக்கென விரோதியைப் போக்குகைக்கு இரண்டு வடிவைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு ஆர்த்தி யானான் –
கானார் ஏனமுமாய்க்
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுக்கைக்கு வராஹ ரூபத்தைக் கொண்டான் –
மனுஷ்யர் நடையாடாத காட்டில் மிகவும் வர்த்திக்கும் வராஹம் –
கற்கியாம் இன்னம்-
என் கார்யம் சமைந்த பின்பும் -சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கும் தனையும் -இவருக்கு என் வருகிறதோ என்று கொண்ட குதை மீண்டிலன் –
மேல் வரும் விரோதத்தை போக்குகைக்கு இன்னமும் கல்கியாக இருந்தான் -நான் தன்னைத் தப்புகைக்காக பிறந்த அளவும் போரும்-அவன் ரஷிக்கைக்காக பிறந்த பிறவி -நான் கர்மத்தால் பிறந்தவை அடங்க அனுக்ரஹத்தாலே பிறந்தான் –
கார்வண்ணனே.–
வர்ஷூ க வலாகஹம் போலே இருக்கிறான் அத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறிலன்

————————————————————–

நிகமத்தில் இப்பத்தும் வல்லார் நிரவதிக வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர் என்கிறார்  –

கார் வண்ணன்  கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை-
உபகார சீலனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –
தாழ நின்று அவ்வடிவை என்னை அனுபவிப்பித்தவன் –
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-
ஏர்களின் ஸம்ருத்தியை யுடைத்தாய் அழகிதான் வயலோடு கூடின திரு நகரி -வளம் என்று அழகுக்கும் -மிகுதிக்கும் பேர் -இங்கு மிகுதியைச் சொல்லுகிறது –
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
சீரை யுடைத்தான தமிழ் என்னுதல் -கவிகளுக்கு அங்கமான சீரையும் வண்ணத்தையும் யுடைய அழகிய தமிழ் என்னுதல் –சீர் ஆகிறது பாவில் ஏக தேசம் –வண்ணம் ஆகிறது தூங்கல் ஓசை என்றும் வண்ண ஓசை என்றும் சொல்லக் கடவது –
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார்
சாதாரமாகச் சொல்லுமவர்கள் -ஆரு தல் -பருகுதல் -அம்ருத பானம் போலே இருக்கை -தொண்டர்க்கு அமுது உண்ண-என்ன கடவது இ றே
பொலிந்தே.-அடிக் கீழே புகுவார் –
அத்யாவசாய மாத்ரமாய் ருசி இன்றிக்கே இருக்க போய் புகுகை அன்றிக்கே இங்கே வைஷ்ணவ ஸ்ரீ யோடே நெடு நாள் அனுபவித்து -தாய் நிழலிலே ஒதுக்கினால் போலே போய் அனுபவிக்கப் பெறுவர்கள்


கந்தாடை      அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: