திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-10–

சம்சாரத்தினுடைய அசாரதையைக் கண்டு சர்வரையும் எம்பெருமானைக் கொண்டு சம்சார சம்பந்தத்தை அறுத்து
உஜ்ஜீவிப்பிக்க வேணும் என்று பார்த்து யத்னம் பண்ணி அவர்களுக்கு அபேக்ஷை இல்லாமையாலே
-தம்முடைய அபேக்ஷிதத்தை எம்பெருமான் பக்கலிலே அர்த்தித்துபெற்று உஜ்ஜீவித்த ஆழ்வார் –
அவன் தன் குணங்களாலும் திருத்த ஒண்ணாதே கை விட்ட சம்சாரிகளை தம்முடைய கிருபாதிசயத்தினாலே
பகவத் பரத்வ ஞான பிரதானத்தை பண்ணித்த திருத்த உத்யோகித்து-ஸூ க துக்கங்களில் தங்கள் நினைத்த படி இன்றிக்கே
பரதந்த்ரராய் இருக்கிற இருப்பைக் காட்டி
கர்மாதி பரதந்த்ரன் இன்றிக்கே ஸ்வ தந்திரனாய் இருப்பான் வேறே ஒருவனைக் கொள்ளா விடில் ஸூ க துக்க அனுபவங்களும்
மற்று உண்டான லோக யாத்ரைகளும் நடவாமையாலே ஒரு நிர்வாஹகன் வேண்டும் இடத்தில் -ஜகத்துக்கு நிர்வாஹகானாக
நாம் அங்கீ கரித்த இவன் யார் -என்ன குணங்களை யுடையவன் -என்ன பேரை யுடையவன் -என்று ஏவம் ஆதிகளை அறிய வேணும் என்று
அபேக்ஷை பிறந்தால் அவற்றை ப்ரதிபாதிக்கும் போது பிரத்யஷாதிகள் அதீந்த்ரிய விஷயத்தில் பிரமாணம் ஆக மாட்டாமையால்
அவ்வர்த்தத்தில் சாஸ்திரமே பிரமாணமாக வேண்டின இடத்தில் பாஹ்ய ஆகமங்கள் புருஷ புத்தி ப்ரபவங்கள் ஆகையால்
விப்ர லம்பாதி தோஷ சம்பாவனையாலே பிரமாணம் ஆக மாட்டாதே -சதுர்த்தச வித்யா ஸ்தானமான வேதமே பிரமாணம் ஆக வேணும் –
அதிலும் பூர்வ பாகமானது ஸ்வர்க்க தத் ஸ்தானாதிகளுக்கு ப்ரதிபாதகம் ஆகையால் பரத்வத்தில் பிரமாணம் ஆக மாட்டாது
சாத்விக புராண இதிஹாசங்களாலே உப ப்ரு மஹிதமாய் நியாய உபேதமான வேதாந்தம் பிரமாணம் ஆக வேணும்
அது தான் தத்வ பரமாயும் உபாசன பரமாயும் ப்ராப்திபரமாயும் உள்ள வாக்கியங்களில் வைத்துக் கொண்டு
தத்வ பரமான காரண வாக்யங்களுக்கு எல்லாம் வ்யாக்யானம் பலிக்கும் படி கதி சாமான்ய நியாயத்தாலே நிரணீ தனான
ஸ்ரீ யபதியான நாராயணனுடைய ஜகத் காரணத்தவத்தாலும் ஜெகன் நிபந்த்ருத்வத்தாலும் ஜகத் ரக்ஷகத்வத்தாலும்
சர்வ ஆபத்துக்களையும் போக்குகையாலும் சர்வ தத்துவத்துக்கும் ஆத்மாவாகையாலும் சர்வாதிபன் ஆகையால்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஈஸ்வரன் ஆகையால் ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய ஈச்வரத்வத்தை நிராகரித்து
-ஸ்ரீ யபதியே ஈஸ்வரன் என்றும் -அவன் அத்யந்த ஸூ லபன்-என்றும் பிரதிபாதியா நின்று கொண்டு சுருதி சாயையாலே
பகவத் பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் உபபாதித்து அவர்களை பகவத் பிரவணர் -ஆக்குகிறார் –

—————————————————————-

ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்றுள்ள உபநிஷத் வாக்ய ப்ரக்ரியை அனுசரியா நின்று கொண்டு கார்யரூப பிரபஞ்சம் ஓன்று ஒழியாமே இன்றிக்கே கிடந்த காலத்திலே சதுர்முக பிரமுகரான ஜகத்தை எல்லாம் உண்டாக்கின ஜகத் காரணமான சர்வேஸ்வரன் உங்களுக்கு கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி மலை போலே மணி மாடங்கள் உயர்ந்து இருக்கிற  திரு நகரியிலே நின்று அருளின அவனை ஆஸ்ரயியாதே  வேறே ஆஸ்ரயிணீய  தெய்வம் உண்டு என்று தேடித் திரி கிறி கோளே-என்று அவர்களை  ஷேபிக்கிறார்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

தைவங்களும் லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத காலத்திலே –
ஒன்றும் -என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்தில் லயத்தை சொல்லிற்று ஆகவுமாம்-

——————————————————————

அவனாலே ஸ்ருஜ்யராம் இடத்தில் உங்களோடு நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு வாசி இல்லை -ஆனபின்பு நித்ய ஸ்ரீ யான சர்வேஸ்வரன் நின்று அருளுகிற திரு நகரியை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

வசன ஆபாசங்களாலும் யுக்த ஆபாசங்களாலும் மேலாக உபபாதித்து நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளையும் உங்களையும் கண்டு படைப்பதும் செய்து அவற்றைப் போலே யன்றிக்கே நித்தியமான ஸ்ரீ யையும் புகழையும் யுடைய ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் நிரந்தர வாசம் பண்ணுகிற கோயில்
பரந்து -சர்வதோ திக்கமாக –

————————————————————

ஜெகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும் இவனே பரன்-இது இசையாதோர் என்னோடே வந்து பேசிக் காணுங்கோள் -என்கிறார் –

பரந்த  தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பரந்த -இத்யாதி
ஈஸ்வரத்வ சங்கை பண்ணலாம் படி விஸ்திருதமான பல தேவதைகளையும் அவர்களுக்கு போரும்படியான பல லோகங்களையும் உண்டாக்கி
தெளிய கில்லீர் -தெளிய மாட்டு கிறி லீர்
பரன் திறமன்றி-இத்யாதி –
சர்வ ஸ்மாத் பரனான பொலிந்து நின்ற பிரானுக்கு சேஷமாய் அல்லது ஸ்வதந்திரமாய் இருபத்தொரு வேறு ஒரு தேவதை இல்லை -உண்டாகில் அதுக்கு உபபத்திகளை சொல்லுங்கோள் –

——————————————————————

வ்யாமாதீத நையாயிக வைசேஷிகாதிகள் வந்து ப்ரத்யவஸ்தி தராய்-சாவயவமான ஜகத்து கார்யம் என்றும் -கார்யம் ஆகையால் கர்த்ருமத் என்றும் கர்த்ரு விசேஷ அபேக்ஷை பண்ணில் உபநிஷத்துக்கள் ஈசன் என்றும் -ஈசானன் என்றும் சொல்லுகிற பேரைத் துணையாகக் கொண்டு கீழ் சொன்ன அனுமான முகத்தாலும் மற்றும் அவ்வர்த்தத்துக்கு சாதகமான உபபத்திகளாலும்-ருத்ர தத்வம் பரம் என்று அவர்கள் சாதிக்க -ஒருவன் தான் பிராணனோடு இருக்க தன் தலையை அறுக்கக் கொடுக்க -ஒருவன் அத்தாலே பாதகியாய் கபால பாணியாய் இரந்து சரீர தாரணம் பன்னித் திரிய -சர்வேஸ்வரன் க்ருபையாலே கபால மோஷாதிகளை பண்ணி ரஷித்தான் என்று இதிஹாச புராணாதிகளில் பிரசித்தமான லிங்கத்தையும் அகாரார்த்தை சர்வேஸ்வரனாக சொல்லுகிற ஸ்ருதியையும் காட்டி அவற்றின் சந்நிதியிலே நிலை நிற்க மாட்டாதே துர்பலையான சமாக்த்யையைத் தள்ளி இந்த ஸ்ருதி லிங்கங்களையே ஈஸ்வர அனுமானத்துக்கும் காலாத்யயாபிதிஷ்டமான தூஷணத்துக்கு உடலாக முன்னிட்டு இப்புடைகளாலே அவர்களை நிராகரித்து பிரசித்தமான உபநிஷத் மரியாதையாலே எம்பெருமான் சர்வேஸ்வரன் என்று சாதித்து குத்ருஷ்டிகளான உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்கிறார் –

பேச நின்ற  சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

பேச நின்ற சிவனுக்கும்-இத்யாதி –
நீங்கள் ஈஸ்வரன் என்று பேசுகிற ருத்ரனுக்கும் அவனுக்கு ஜனகமான ப்ரஹ்மாவுக்கும் மற்றும் உள்ளார்க்கும் ஈஸ்வரன் உபநிஷத் ப்ரசித்தனான நாராயணனே
இவ்வர்த்தத்தை பிரசித்தமான கபால மோக்ஷத்திலே கண்டு கொள்ளுங்கோள் –
தேச மாமதிள் சூழ்ந்து-இத்யாதி
அநபிபவ நீயமாம் படி தேஜஸை யுடைத்தாய் அரணாகப் போரும்படி மதிள் சூழ்ந்த அழகிதான திரு நகரியிலே நின்று அருளின ஈஸ்வரன் பக்கல் குத்ருஷ்டிகளாய் ஆனுமா நிகரான உங்களுக்கு அநீஸ்வரத்வ சாதகமான ஆபாச யுக்திகள் தேடித் சொன்னால் நிஷ்பலம் –

———————————————————

லைங்க புராண நிஷ்டர் தொடக்கமான நீங்களும் உங்களுடைய தேவதைகளும் எல்லாம் நாராயணாத்மகராய் இருக்கிறி கோளே -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

இலிங்கத்  திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

இலிங்கத் திட்ட புராணத்தீரும்-இத்யாதி
ருஷிக்கு தமஸ் பிரசுர தசையில் லிங்க ப்ரஸம்ஸார்த்தமாக ப்ரவ்ருத்தமான புராண நிஷ்டரான உங்களுக்கும் -மற்றும் யுக்திகளை சொல்லி -வலிந்து பிணங்கா நின்றுள்ள ஷபண சாக்கிய மத அனுசாரிகளான உங்களுக்கும் உங்கள் தேவதைகளுக்கும் ஆத்மதயா நின்றான்
மலிந்து செந்நெல்-இத்யாதி
செந்நெல் கதிரிகள் வந்து கவரி வீசினால் போலே அசைந்து வருகிற திருநகரி உள்ள எழுந்து அருளி நின்று அருளின பொலிந்து நின்ற பிரானே கிடி கோளே –
இவ்விடத்தில் ஓர் அர்த்தவாதம் இல்லை –

————————————————————

எம்பெருமானே சர்வேஸ்வரனாகில் எங்களை தேவதாந்த்ர பிரவணர் ஆக்கி வைப்பான் என் என்னில் -இங்கனே செய்தது சத் அஸத் கர்ம காரிகளான ஜந்துக்கள் அவ்வவ கர்ம அனுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை அழியும் என்று –
ஆனபின்பு இத்தை அறிந்து எம்பெருமானை சமாஸ்ரயித்து அவன் வஞ்சனத்தை தப்புங்கோள் என்கிறார் –

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

போற்றி -என்று தொடங்கி-
தன் பக்கல் நின்றும் அகற்றி இதர தேவதைகளை விரும்பி சமாஸ்ரயிக்கும் படி உங்களுக்கு இவற்றின் பக்கலிலே இப்படி விச்வாஸம் பிறப்பித்து வைத்தது -தன்னையே சமாஸ்ரயித்து எல்லாரும் முக்தரானால் புண்ய பாப ரூப கர்மங்களை பண்ணினவர்கள் அவ்வவ கர்ம பலங்களை பெற கடவதான சாஸ்திர மரியாதை கெடும் என்று –
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே-அதிசயித சக்திகன் ஆனவனுடைய வஞ்சனம் கிடி கோள்-

—————————————————–

அபிலஷித புருஷார்த்தங்களுக்காக தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்ததாலோ என்னில் -நெடும் காலம் அவர்களை ஆஸ்ரயித்து பெற்ற பலம் இ றே -இனி ஆஸ்ரயித்ததாலும் பெறுவது –ஆனபின்பு அவற்றை விட்டு பொலிந்து நின்ற பிரானை ஸமாச்ரயிங்கோள் என்கிறார்

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து-இத்யாதி –
இனி ஆராய வேண்டாத படி கர்ம அனுகுணமாக போய் போய் பல பிறவிகளிலும் பிறந்து தேவதாந்தரங்களை சாதரமாக ஆஸ்ரயித்து அநேக பர்யாயம் அவை தரும் புருஷார்த்தங்களையும் பெற்று அப்புருஷார்த்தம் இருக்கும் படியும் அறிந்தி கோள்
கூடி வானவர் ஏத்த நின்ற-இத்யாதி –
ஆகில் செய்ய அடுப்பது என் என்னில் -நீங்கள் ஈஸ்வரர்களாக சங்கிக்கிற தேவதைகள் எல்லாம் ஏக கண்டராய் ஆஸ்ரயிக்கும் படி திருநகரியில் நின்று அருளின சர்வேஸ்வர சேஷத்வ அனுசந்தான ஜெனித ஹர்ஷ பிரகரக்ஷத்தாலே ஆடா நின்றுள்ள பெரிய திருவடியை ரக்ஷகத்வ க்யாபன த்வஜமாக யுடைய ஜகத் காரணமான சர்வேஸ்வரனுக்கு அடிமை புகுங்கோள்-

—————————————————

மார்க்கண்டேய பகவான் ருத்ரனை ஆராதித்து ஸ்வ பிரார்த்தி தத்வத்தை பெற்றிலேனோ என்னில் -அவ்விடத்தில் ருத்ரன் புருஷகாரமே மாத்திரமே -அவனுடைய பிரார்த்திதம் கொடுத்து அருளினான் எம்பெருமானே என்கிறார் –

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட-
அடிமையாலே புக்கு தன்னை கண்ட
நாராயணன் அருளே;-ப்ரஸாதத்தாலே
கொக்கு அலர்தடம் -இத்யாதி
கொக்கின் நிறம் போலே இருந்துள்ள பூக்களை யுடைய பெரிய தாழை களை வேலியாக யுடைய திரு நகரியிலே தன்னுடைய ஐஸ்வர்யாதிகளாலே சம்ருத்தனான ஜகத் காரணமான ஈஸ்வரன் நிற்க மற்று என்ன தேவதைகளை பேசுகிறிகோளே

——————————————————————-

வேத பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் பண்ணும் துஸ் தர்க்கங்களால் அழிக்க ஒண்ணாத ஐஸ்வர்யத்தை யுடைய எம்பெருமான் எழுந்து அருளி இருக்கிற திரு நகரியை ஆஸ்ரயிங்கோள் -பிழைக்க வேண்டி இருந்து கோள் ஆகில் -என்கிறார் –

விளம்பும்  ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

விளம்பும் ஆறு சமயமும்-இத்யாதி –
இப்பாட்டுக்கு எல்லாம் பேச்சுப் போக்கி உள்ளீடு இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறாலும் விழுக்காட்டில் அவற்றோடு ஒத்து இருக்கிற மற்று உள்ள குத்ருஷ்டிகளாலும் அவிஸால்யமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடைய சர்வேஸ்வரன் நிரந்தர வாசம் பண்ணுகிற வளவிதான நீர் நிலத்தை யுடைத்தாய் அதி ரமணீயமான திரு நகரியை மானஸ ஞான விஷயம் ஆக்குங்கோள் -உங்களை நீங்கள் பிழைப்பித்துக் கொண்டு போக வேண்டில் –

————————————————————

தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றுமே குறையுமே வந்து நின்று அருளின பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செயகையே  உறுவதாவது -என்கிறார்

உறுவது ஆவது  எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

உறுவது ஆவது எத்தேவும் -இத்யாதி –
எல்லா தேவதைகளும் எல்லா லோகங்களும் மற்று உள்ளன வெல்லாம் தன்னுடைய அப்ராக்ருதமான திருமேனியோடு ஓக்க விதேயமாம் படி யான இந்த ஐஸ்வர்யத்தோடு கூடவே
செறு -விலை நிலம்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே-
ஆஸ்ரிதற்காக ஸ்ரீ வாமனனாயும் அனுபவிப்பார் அளவில்லாத படி குடமாடுவதும் செய்த பொலிந்து நின்ற பிரானுக்கு-

———————————————————

நிகமத்தில் இது திருவாய்மொழி கற்றார்க்கு பரமபதம் ஸூலபம் என்கிறார் –

ஆட்செய்து  ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,-நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
ஆட்செய்து- இப்பாட்டுக்கு -எம்பெருமானுடைய கையும் திருவாழியுமான அழகுக்கு தொற்று அடிமை செய்து கொண்டு திருவடிகளில் சேர்ந்த திருநகரியை யுடையராய்
பகவத் அனுபவ ப்ரீதியாலே செவ்வி பெற்று நாள் தோறும் கமழா நின்றுள்ள மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையராய் -பகவத் அனுபவ விரோதிகளுக்கு சத்ருவான ஆழ்வார்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்-மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–-
அபி நிவேசத்தால் சொன்ன ஆயிரம் திருவாய் மொழிகளிலும் இது திருவாய் மொழி வல்லவர்களுக்கு
இப்பத்து அப்யஸித்து பெற்றதும் மேலே மீட்சி இல்லாத வைகுந்த மா நகராகிறதும் அத்யந்த ஸூலபம்
இப்பாட்டில் ஆழ்வார் தம்மை ஸ்தோத்ரம் பண்ணிற்று -பரப்ரதிபாதன அர்ஹமாம் படி பகவத் ஞானம் கை வந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே-ஸ்ரீ வால்மீகி பகவான் -வால்மீகீர் பகவான் ருஷி -என்று கொண்டு தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் போலே –


கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: