திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-9–

எம்பெருமான் விரும்பாத ஆத்மாத்மீயங்களால் கொள்வதொரு கருமமில்லை -அவனுக்கு உபயோகப்படாதவை நசிக்க அமையும் -என்று
மநோ ரதித்து இருந்த இடத்திலும் -அது தாம் நினைத்த படி அல்லாமையாலே விரக வியசனத்தால் மிகவும் தஹ்யமானராய்
சம துக்கிகளோடே கூடே பிரலாபித்து தரிப்போம் என்று லோகத்தை அந்வேஷித்த இடத்தில் –
தம்மைப் போலே தத் சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கர் அன்றிக்கே அந்நிய பரராய் சப்தாதி விஷயங்களுடைய
லாப அலாபங்களே ஸூ க துக்கங்களாக கொண்டு இருக்கிற ஜந்துக்கள் படுகிற துக்கத்தை அனுசந்தித்து மிகவும் நோவு பட்டு
-தமக்கு எம்பெருமானோடு உள்ள விஸ்லேஷ வியசனத்தை மறந்து இஜ் ஜந்துக்களுடைய துக்கத்தை போக்கும் விரகு ஏது-என்று அதிலே தத் பரராய்
சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் -பரம உதாரனாய்-என்றும் எல்லாருடைய ரக்ஷணத்திலே தீஷிதனாய் -சர்வ அபராத ஸஹனாய்-
நினைத்தது முடிக்கைக்கு ஈடான சாமர்த்தியத்தை உடைய சர்வேஸ்வரனான நீ உளனாய் இருக்க
ஸமஸ்த ஜந்துக்களும் எண்ணிறந்த துக்கங்களாலே மிகவும் நலிவு படும்படியாக -இது ஒரு லோக ஸ்வ பாவத்தை பண்ணும் படியே
-இவற்றை இங்கனே படுத்தி அருள ஒண்ணாது -இவர்களை நிர் துக்காராம் படி பண்ணி அருளுதல் –
இது கண்டு பொறுக்க மாட்டாதே இருக்கிற என்னை முடித்து அருளுதல் செய்ய வேணும் -என்று ஆழ்வார் ஆன்ரு சம்சயத்தாலே நோவு பட்டு அர்த்திக்க
அவர்களுக்கு இச்சை இன்றிக்கே ஒழிந்த பின்பு என்னால் செய்யலாவது உண்டோ -என்று எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கனே யாகில் என்னை ஈண்டென விஷயீ கரித்து அருள வேணும் -என்ன
இவருக்கு சம்சார அனுசந்தானத்தால் வந்த கிலேசம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி பரமபதத்தில் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
அயர்வறும் அமரர்கள் அடிமை செய்ய பெரிய பிராட்டியாரும் தானும் வ்யாவருத்தனாய் இருந்து அருளினை படியை
காட்டி அருள கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிறார் –
உன்னை ஒழிய அந்நிய பரமான ஜகத்தில் இருக்கிற இருப்பு உன்னை விஸ்லேஷித்த வியாசனத்தில் காட்டிலும் மிகவும் துஸ் சஹமாய் இரா நின்றது –
ஆனபின்பு அவர்கள் நடுவே இராமே என்னை முடிக்க வேணும் என்று எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார் -என்றுமாம் –

————————————————————————–

நீ சர்வ ரக்ஷண சமர்த்தனாய் -சர்வ நிர்வாஹகனாய் இருக்க இந்த சம்சாரிகள் அபரிமித துக்க பாக்குகளாய் இருக்கிறபடியைக் கண்டு
நான் பொறுக்க மாட்டு கிறி லேன்-இவர்கள் ஆர்த்தியைத் தீர்த்தல் -இத்தை அநுஸந்தியாதபடி என்னை முடித்தல் செய்ய வேணும்
என்று எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கிறார்

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

சத்ருக்கள் ப்ரீதராய் சிரிக்கும் படியாகவும் -ஸ்நே ஹிகளான பந்துக்கள் அவசன்னராம் படியாகவும் எண்ணிறந்த துக்கங்களை
விளைகிற இவை என்ன லோக யாத்திரை –
க்ருபாவானாய் மஹா யத்னம் பண்ணியும் ஆஸ்ரிதருடைய அபேக்ஷித்ங்களை முடித்துக் கொடுக்குமவனே
உன் திருவடிகளில் வரும்படி தாழாதே என்னை சரீரத்தை விஸ்லேஷிப்பித்து அருள வேணும் –


சேதனருடைய மரணாதி அநர்த்தங்களை சொல்லி விஷண்ணராய்-இவர்கள் துக்கத்தை போக்கி அருளாயாகில் நான் இது அநுஸந்தியாத படி என்னை ஈண்டென திருவடிகளில் அழைத்து அருள வேணும் என்கிறார் –

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

தமர்உற்றார் -இத்யாதி
ஞாதிகளும் சம்பந்திகளும் மேல் விழுந்து மேல் விழுந்து துக்கிதராய் கிடந்தது கூப்பிடுகையும் இவை என்ன லோக யாத்திரை –
ஆமாறுஒன்று-இத்யாதி –
இந்த துக்க நிவ்ருத்திக்கு ஈடான உபாயம் நான் ஒன்றும் அறிகிறி லேன்-
சர்வேஸ்வரனாகை சுட்டி இவற்றினுடைய ரக்ஷணம் உனக்கு பாரமாகையாலே அதுக்கு உறுப்பாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனே
அடியேனைக் குறிக்கொண்டே.–- என் ஸ்வ பாவத்தை அறிந்து அருளி –


ஜந்துக்கள் ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

கொண்டாட்டும்  குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

கொண்டாட்டும் குலம் -இத்யாதி
சிலாகையும் ஆபிஜாத்யமும் ஞாதிகளும் சம்பந்திகளும் சீரிய நிதியும் அத்யந்த போக்யையான ஸ்திரீயும் இஸ் சம்பந்தத்துக்கு ஈடான க்ருஹமும் இவை எல்லாம் கிடக்க தான் மாய்ந்து போம் படியான இந்த லோக யாத்ரையைக் கண்டு தரிக்க மாட்டு கிறி லேன்
கடல் வண்ணா -இத்யாதி
இவர்கள் துக்க அனுசந்தானத்தால் படுகிற வியசனமும் உன்னைப் பிரிந்து நான் படுகிற வியசனத்தோ பாதியாக நினையாதே என்னுடைய கிலேசம் தீர ஸ்ரமஹரமான உன் வடிவைக் காட்டு


அதி சம்ருத்தமான ஐஸ்வர்யமே தங்களுக்கு அநர்த்த ஹேதுவாய் இருக்கச் செய்தே பின்னையும் அத்தையே ஆசைப்படுகிற லோகத்தினுடைய பொல்லாங்கை அனுசந்தித்து இத்துக்க அனுசந்தான கந்தம் இல்லாத உன் திருவடிகளில் என்னை கொண்டு போக வேணும் என்கிறார் –

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

கொள் என்று கிளர்ந்து -இத்யாதி
ஒரு காலுக்கு ஒருகால் சம்ருத்தமான சம்பத்து அநர்த்த ஹேதுவாய் பின்னையும் சஹ்ருதயமாக இவ் வைஸ்வர்யத்தை ஆசைப்படுகைக்கு ஈடாக தபஸ் ஸூ அபிபவிக்கும் படியான இந்த லோக யாத்திரை பொறுக்க ஒண்கிறது இல்லை
கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம் –
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே-
பரம உதாரனாய் ஆச்ரித ஸூ லபனான நீ உன் கிருபையால் குணாகுணம் நிரூபணம் பண்ணாதே என்னை விஷயீ கரித்து உன் திருவடிகளில் வாங்க வேணும் –


ஜென்ம ஜராதி துக்கங்களை உடையரான இவ்வாத்மாக்கள் வர்த்திக்கிற இந்த லோகத்தின் நின்றும் அடியேனை இதன் படியை காட்டி மறுகப் பண்ணாதே வாங்கி அருள  வேணும் என்கிறார் –

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

வாங்கு நீர் மலர் உலகில்-இத்யாதி
ஸ்வ கார்ய வர்க்கத்தை அடைய தன் பக்கலிலே உப சம்ஹரிப்பதான நீரிலே பிறந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஆத்மாக்கள் ஜரா மரணாதிகளால்நலிவு படுவார்கள்
இஹ லோகத்தில் இந்த சரீரம் போனால் பின்னை கொடிய நரகங்களை அனுபவிப்பவர்கள்
இது ஒரு லோக யாத்திரையே -சிலாக்யமான உன்னுடைய திரு அழகை அனுபவிக்கலாம் படி உன் திருவடிகளிலே வாங்கி அருள வேணும் –
வாங்கு நீர் மலர் உலகில்-வளைந்த நீரை யுடைத்தாய் மலரைத் தளை யாக யுடைய லோகத்தில் என்றுமாம் –
ஆங்கு வாங்கு என்று கூட்டிக் கொள்வது

 

—————————————————————–

சம்சாரிகளுடைய பகவத் வைமுக்யாதி தோஷங்களை அனுசந்தித்து ஈஸ்வரனை இன்னாதாகை தவிர்ந்து ஜீவன அர்த்தமாக பரஹிம்ஸை பண்ணுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்து அருள வேணும் என்கிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
இஜ் ஜந்துக்கள் அர்த்த அபஹாரம் பண்ணுகைக்காக நிரபராதராய் இருப்பார்க்கு மஹாபய ஹேதுக்களை உத்பாதித்து மனஸ் மறுகும் படி பண்ணி நலிந்து அவர்களை ஹிம்சித்து ஜீவிப்பர்
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
தர்ம தத்துவத்தை அறிந்து நமக்கு வேணும் என்று அத்யவசாயம் பண்ணுவார் இல்லை -இது ஒரு லோக ஸ்வ பாவம் இருந்தபடி என் –
ஓரார்-பர ஹிம்ஸையினின்றும் நீங்கார் -என்றும் சொல்லுவர்
அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் மாற்று ஒரு நன்மை தீமைகளை ஆராயார் என்றுமாம்
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே-
இங்கனே யானபின்பு இனி இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என்
உன்னுடைய நிரதிசய போக்யமான வடிவு அழகைக் காட்டி விஷய பிரவணன் ஆன நான் உனக்கேயாம் படி பண்ணின நீ –


அபேக்ஷிதம் தாம் நினைத்த போதே கிடையா விட்டவாறே நீரே யத்னம் பண்ணி வாரீர் என்று எம்பெருமான் பேசாதே இருந்தானாகக் கொண்டு
சகல பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதியாதி கள் எல்லாம் த்வத் அதீனமான பின்பு த்வத் விமுகமான சம்சாரத்தைக் காட்டாதே நான் உன் திருவடிகளிலே வரும்படி நீயே பார்த்து அருள வேணும் என்கிறார்-

ஆயே இவ்  உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

ஆயே இவ் உலகத்து -இத்யாதி
இந்த லோகத்தில் ஸ்வ தந்திரமாய் ஜீவிப்பது ஒரு பதார்த்தமும் இன்றிக்கே ஸ்த்தாவர ஜங்கமகமான சகல பதார்த்தங்களும் த்வத் அதீன ஸ்வரூப ஸ்திதி யாதிகளாம் படியாக நீயே நின்றமையாலே
ஆயே -பரிவனே என்றுமாம் / இறப்பிறப்பு-இறப்பு பிறப்பு / கூயே கொள்-அழைத்து கொள்

—————————————————————–

எம்பெருமான் நீர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் -என -என்று செய்வது என்கிறார்

காட்டி நீ  கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

காட்டி நீ -இத்யாதி
நீ ஸ்ருஷ்டித்து திரு வயிற்றிலே வைத்து புறப்பட விடும் பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தாலும் சமைத்து வைப்பதும் செய்த ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் அத்யந்த வி லக்ஷணமான அண்டமாகிற கோட்டையினின்றும் புறப்பட விட்டு
எனை உன்-இத்யாதி
வி லக்ஷண தேஜோ ரூபமாய் மாற்று எல்லாப் படியாலும் மேற்பட்டு இருந்துள்ள திரு நாட்டிலே தந்தம் மிடுக்காலே துஷ் ப்ராபமான உன் திருவடிகளை-

————————————————————-

இவருடைய வியசனம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி திருநாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு -த்வத் வ்யதிரிக்தங்களில் ருசியை எல்லாம் தவிர்த்து அருளி துஷ் ப்ராபமான உன் திருவடிகளை எனக்குத் தந்தாய் -நான் அனுபவிக்கப் பெற்றேன் என்று திருப்தராகிறார்-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

கூட்டுதி நின் குரை கழல்கள்;-இத்யாதி –
ஓர் அளவில்லாதவரையும் நீ நினைத்தாரை உன் திருவடிகளோடே திரு வனந்த ஆழ்வானைப் போலே கூட்டுதி -எத்தனையேனும் அளவுடையாரே யாகிலும் நீ நினையாதாரைக் காண ஒண்ணாத படி விஷயங்களைக் காட்டி அகற்றி அலமந்து திரியப் பண்ணுதி
லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன்
வேட்க்கை என்று தொடங்கி-
நீர் அறிந்த படி எங்கனே என்னில்-பாஹ்ய விஷய சங்கத்தை எல்லாம் அறுத்து உன் திருவடிகளில் கைங்கர்யமே பண்ணி வர்த்திக்கும் படி ஸ்வ பாஹு பலத்தால் துஷ் ப்ராபமான உன் திருவடிகளைக் காட்டினாய் -நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன் –


விட்டது இன்னது பற்றிற்று இன்னது என்று ப்ரீதியதிசயத்தாலே வ்யக்தமாக அருளிச் செய்கிறார்  –

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

கண்டு கேட்டு-இத்யாதி
இப்பாட்டுக்கு கண் செவி முதலான இந்த்ரியங்களாலே அனுபவிக்கப்பட்ட ஸூ கத்தையும் -சம்சாரிகளுக்கு துர் ஜே யமாய் -இந்திரிய ஸூ கத்தில் காட்டில் பெருத்து -பகவத் கைங்கர்யத்தில் காட்டில் சிறுத்து இருந்துள்ள ஆத்ம அனுபவ ஸூ கத்தையும் இழந்தேன் -திரு நாட்டிலே வேறு ஒருவர் அபிமானிக்க கடவர் இன்றிக்கே எல்லாரும் உங்கள் அபிமானத்தாலே அடங்கும்படியாக பெரிய பிராட்டியாரும் நீயுமே வர்த்திக்க கடவதாக கண்டு வைத்த நேர்பாட்டைக் கண்டு திருவடிகளை அடையவும் பெற்றேன் –
ஒண் தொடி-அழகிய வளை


நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தாரை இத்திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளிலே சேர்க்கும் -ஆனபின்பு இத்தை அப்யஸித்து அவன் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள்-என்கிறார் –

திருவடியை  நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

திருவடியை நாரணனை-இத்யாதி –
எல்லாருக்கும் ஸ்வாமியாய் -வத்சலனாய் ஸ்வ ஆஸ்ரித சம்ச்லேஷ விரோதியான கேசிபிரப்ருத்யஸூர நிரசனத்தை பண்ணும் ஸ்வ பாவனாய் திருவவதாரம் பண்ணின இடத்தில் ஐஸ்வரமான படியில் காட்டிலும் உஜ்ஜவலமான தேஜஸ்ஸை யுடையவனை திருவடிகளை சேர வேணும் என்னும் கருத்தாலே
செழுங் குருகூர்-தம்முடைய துக்கத்தை எம்பெருமான் கெடுத்து அருளுகையாலே சம்ருத்தமான திரு நகரி

——————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: