திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-9–

எம்பெருமான் விரும்பாத ஆத்மாத்மீயங்களால் ஒரு கார்யம் இல்லை -இவை – நசிக்க அமையும் -என்று
மநோ ரதித்து இருந்த இடத்திலும் -அது தாம் நினைத்த படி முடிந்ததில்லை
பேற்றுக்கு அவன் வேண்டினோபாத்தி முடிகைக்கும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கையாலே விரக வியசனம் மிக்கு
சம துக்கிகளோடே கூடே கூப்பிட்டு தரிப்போம் என்று லோகத்தை அந்வேஷித்த இடத்தில் –
தாம் பகவத் விஷயத்தில் இருக்கிறாப் போலே சப்தாதி விஷயங்களுடைய
லாப அலாபங்களே ஸூ க துக்கங்களாக கொண்டு இருக்கிற ஜந்துக்கள் படுகிற துக்கத்தை அனுசந்தித்து மிகவும் நோவு பட்டு
-தமக்கு எம்பெருமானோடு உள்ள விஸ்லேஷ வியசனத்தை மறந்து இஜ் ஜந்துக்களுடைய துக்கத்தை போக்கும் விரகு ஏது-என்று அதிலே தத் பரராய்
சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் -பரம உதாரனாய்-என்றும் எல்லாருடைய ரக்ஷணத்திலே தீஷிதனாய் -சர்வ அபராத ஸஹனாய்-
நினைத்தது முடிக்கைக்கு ஈடான சாமர்த்தியத்தை உடைய சர்வேஸ்வரனான நீ உளனாய் இருக்க
ஸமஸ்த ஜந்துக்களும் எண்ணிறந்த துக்கங்களாலே மிகவும் நலிவு படும்படியாக -இது ஒரு லோக ஸ்வ பாவத்தை பண்ணும் படியே -விஷண்ணராய்
-இவற்றை இங்கனே படுத்தி அருள ஒண்ணாது -இவர்களை நிர் துக்காராம் படி பண்ணி அருளுதல் –
இது கண்டு பொறுக்க மாட்டாதே இருக்கிற என்னை முடித்து அருளுதல் செய்ய வேணும் -என்று ஆழ்வார் ஆன்ருசம்சயத்தாலே நோவு பட்டு அர்த்திக்க
அவர்களுக்கு இச்சை இன்றிக்கே ஒழிந்த பின்பு என்னால் செய்யலாவது உண்டோ -நாமும் உம்மைப் போலவே நொந்து காணும் இருக்கிறது என்ன –
-என்று எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கனே யாகில் இவர்கள் நடுவில் நின்றும் என்னை உன் திருவடிகளில் வாங்கி அருள வேணும் -என்ன
இவருக்கு சம்சார அனுசந்தானத்தால் வந்த கிலேசம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி பரமபதத்தில் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
அயர்வறும் அமரர்கள் அடிமை செய்ய பெரிய பிராட்டியாரும் தானும் வ்யாவருத்தனாய் இருந்து அருளினை படியை
காட்டி அருள கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிறார் –
பிரியம் ஜனம பஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸே கணம் ஸ்வ கணே நம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ-என்கிறபடியே
உன்னை ஒழிய அந்நிய பரமான ஜகத்தில் இருக்கிற இருப்பு உன்னை விஸ்லேஷித்த வியாசனத்தில் காட்டிலும் மிகவும் துஸ் சஹமாய் இரா நின்றது –
ஆனபின்பு அவர்கள் நடுவே இராமே என்னை முடிக்க வேணும் என்று எம்பெருமானைக் குறித்து விண்ணப்பம் செய்கிறார் -என்றுமாம் –

————————————————————————–

நீ உளையாய் இருக்க சம்சாரிகள் படுகிற துக்கம் அஸஹ்யமாய் இரா நின்றது –
ஆனபின்பு இவர்கள் நடுவே இராமே என்னை முடிக்க வேணும் என்கிறார் –

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

நண்ணாதார்  முறுவலிப்ப,
சத்ருக்களானவர்கள் ஓர் அநர்த்தம் வந்தவாறே அதுவே ஹேதுவாக ப்ரீதராய் சிரிப்பர்கள்
நல்லுற்றார் -ஸ்நேஹிகளான பந்துக்கள்
கரைந்துஏங்க,
நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே நிகிலேசப்படா நிற்பார்கள்
சத்ருக்கள் சிரிக்கிற சிரிப்போடு பந்துக்களுடைய அதி பிராவண்யத்தோடு வாசி இல்லை –
இவருக்கு அஸஹ்யமாம் இடத்தில் பகவான் லாப அலாபங்களே ஸூ க துக்கமாய் இ றே அடுப்பது-
பகவத் வ்யதிரிக்த விஷயத்தில் மித்ர அமித்ர கதை -இல்லை -என்கை –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்று தத் சம்பந்தத்தால் ப்ரீதி-
எண்ணாத மாநிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே – என்று அவைஷ்ணவ விஷயம் இ றே அநாதரம்
எண்ணாராத் துயர்விளைக்கும்
எண்ணிறந்த துக்கங்களை விளைக்கும்-அந்தமில் பேரின்பத்தை விளைக்கும் தேசத்துக்கு எதிர்தலையாய் இருக்கை-
ராஜ்யாதி ப்ரம்சோ வநேவாச -அனுக்ரஹத்தால் ரக்ஷண அர்த்தமாக இழிந்த இடத்திலே பட்ட பாடு இ றே இது-
இவை – ஒருவருக்கு ஒரு அநர்த்தம் வந்தால் -ஐயோ என்னும் இடத்தில் ப்ரீதர் ஆகையும்-பிராகிருத சம்பந்தங்களைப் பற்ற அதி பிராவண்யம் பண்ணுகையும் -இரண்டும் அப்ரோஜகமாய் -ஸ்வ கர்மத்தால் வந்த தூக்கமே அனுபவிக்க வேண்டுகையும் –
இவைஎன்ன உலகியற்கை-இவற்றின் ஸ்வரூபத்துக்கு சேராது -உன்னுடைய ரக்ஷணத்துக்கு சேராது -இது என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –
அவர்கள் தம் தாம் கர்மத்தால் படுகிறார்கள் ஆகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன –
கண்ணாளா!
ஸ்வ ஸ்வ கர்மங்கள் தாம் தாமே அனுபவிக்க வேணுமாகில்-உன் கிருபைக்கு விஷயம் ஏது-
நீர்மை உடையவனை கண்ணுடையவன் என்ன கடவது இ றே
கண் -என்று நிர்வாஹகத்வமாய்-தம் தாம் கர்மமாயேயாய் இருக்க இது என்ன தன்னரசு நாடோ என்கை
தாம் தாம் சூழ்ந்து கொண்டவை அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர் என்ன
கடல்கடைந்தாய்!
துர்வாச சாபத்தால் வந்த அநர்த்தத்தை தப்புகைக்கு பிரயோஜனாந்த பரர்க்கும் அரியன செய்தும் உதவினான் அன்றோ –
அவர்களுக்கு இச்சை உண்டு -அநிச்சுக்களுக்கு நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
உனகழற்கே வரும்பரிசு,
ஆகில் இவர்கள் நடுவு நான் இராத படி என்னை உன் திருவடிகளில் வரும்படி பண்ணி அருள வேணும் –
தண்ணாவாது
தண்ணாக்கை யாவது -தாழ்க்கை –தாழாது-செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும்
அடியேனைப் பணிகண்டாய் சாமாறே
ஸ்வரூப ஞானத்தாலே சம்சாரிகளோடு பொருந்தாத என்னை –
பணிக்கை யாவது -சொல்லுகை -சொலவு நினைவோடு கூடி இ றே இருப்பது –
சரீர விஸ்லேஷத்தை பண்ணும்படி பார்த்து அருள வேணும் –


எண்ணாராத் துயர் -என்று திரள் சொன்னார் முதல் பாட்டில் -அவற்றில் சில வகைகளை சொல்லி விஷண்ணராய் -இவர்கள் துக்கத்தை போக்கி அருளாயாகில் என்னை உன் திருவடிகளில் அழைத்து அருள வேணும் என்கிறார் –

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

சாமாறும் –
நீள ஜீவிக்கக் காட்டுவோம் என்று மநோ ரதியா நிற்க -நடுவே முடிந்து கொடு நிற்கிற படியும் -சிலரை அழிய செய்யக் காட்டுவோம் என்று மநோ ரதியா நிற்க தான் நடுவே கடுக முடிந்து கொடு நிற்கிறபடியும்
கெடுமாறும் –
தன் உடைமையான தனாதிகளை ஸ்திரம் என்று பார்த்து கொண்டு இருக்கச் செய்தே நடுவே அபஹ்ருத்யமாய் கூப்பிடா நிற்கும் படியும் –
இவருக்கும் ஒரு விஷயத்திலே உண்டு இ றே -நின்னலால் இலேன் காண் -பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -கிறி செய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ –
யஸ் த்வயா ஸஹ சஸ்வர்கோ நிரையோ யஸ் த்வயா வி நா -என்று இ றே பகவத் விஷயத்தில் கை வைத்தார் படி
தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
தமர் -ஞாதிகள் -உற்றார் சம்பந்திகள் –
தலைத்தலைப்பெய்து-மேல் விழுந்து மேல் விழுந்து -தமர்கள் தமர்கள் தமர்களாம் -என்று இ றே இவர் இருப்பது
ஏமாறிக் கிடந்துஅலற்றும்
ஏஎன்று ஏக்கமாய் -அது மாறி -வாய் மாறாதே கூப்பிடும் என்னுதல்
ஏமாற்றம் என்று முழுச் சொல்லாய் -துக்கப்பட்டு கூப்பிடும் என்னுதல்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் -என்ன கடவது இ றே -கூவிக் கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால்-என்று இ றே இவர் கூப்பிடுவது –
இவைஎன்ன உலகியற்கை?
இவை -சரீர விஸ்லேஷத்தை விநாசம் என்றும் -அர்த்த ஹானியைக் கேடாகவும் -ஞாதிகளையும் சம்பந்திகளையும் உடன் கேடராகவும் இவை எங்கே தேடிக் கொண்டார்கள் –
இது என்ன லோக யாத்திரை -சம்சாரிகள் படி கொண்டு கார்யம் என் -உம்முடைய இழவு பேறு நாமேயாம்படி பண்ணினோமே என்ன
ஆமாறுஒன்று அறியேன்நான்,
சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ
எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ
இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன் -என்றுமாம் –
அரவணையாய்?
இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே திரு வனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவனே
அம்மானே!
இவற்றினுடைய ரக்ஷணம் உன் பேறாம்படியான குடல் துவக்கை உடையவனே
கூமாறே விரைகண்டாய் –
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற பின்பு என்னை அழைத்துக் கொள்ளும் பிரகாரத்தில் த்வரிக்க வேணும்
அடியேனைக் குறிக்கொண்டே.–
சம்சாரிகள் கிலேசம் பொறுக்க மாட்டாதே என் வாசியைத் திரு உள்ளம் பற்றி நம்மோட்டை சம்பந்தத்தை அறிவித்த பின்பு பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதான் என்று திரு உள்ளம் பற்றி


ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

கொண்டாட்டும்  குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

கொண்டாட்டும்
அவஸ்துவாய் போந்தான் ஒருவன் ஜீவிக்க புக்க வாறே பிள்ளை முதலியார் என்பார்கள்-
பயிலும் திரு உடையார் என்று இ றே இவர் கொண்டாடும் விஷயம்
குலம் புனைவும்
ஜீவிக்கப் புக்கவாறே-ஒரு வம்சம் உண்டாக்கி புகழ தொடங்குவார்கள்
குலம் தரும் வித்யையால் உண்டான வம்சம் இ றே இவருக்கு வம்சமாய் இருப்பது
தமர் உற்றார் விழு நிதியும்
இவனோட்டை சம்பந்தத்தை மறைத்து திரிந்தவர்கள் இவன் ஜீவிக்கப் புக்கவாறே உறவு சொல்லாத தொடங்குவார்கள் –
முன்பு சம்பந்தம் பண்ண தரம் போராது என்று இருந்தவர்கள் மேல் விழுந்து சம்பந்திக்க தேடுவார்கள்
சீரிய நிதியும் -இதுக்கு எல்லா வற்றுக்கும் அடி சறுகிலை திரண்டால் போலே திரண்ட தனம்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை-
தனம் மிக்கவாறே செய்வது அறியாமே ஸ்திரீயை சம்பாதிக்கும் –போக யோகியையான ஸ்திரீயும்
சேலேய் கண்ணியரும்-என்கிறபடியே இவை எல்லாம் ஒரு விஷயம் இ றே தமக்கு
மனை -தன் இயற்றி எல்லாம் கொண்டு பலநிலமாக அகத்தை எடுக்கும் –
ஒழிய, உயிர் மாய்தல்
இவை குறி அழியாது இருக்க தாம் முடிந்து கொடு நிற்கும்
கண்டு ஆற்றேன் உலகியற்கை!
சம்சாரிகள் பாரிப்பும் -இவர்கள் முடிந்து கிடக்கும் படியையும் கண்டு என்னால் பொறுக்கப் போகிறது இல்லை –
கடல்வண்ணா!
இவர்களுடைய துக்க அனுசந்தானத்தால் வந்த கிலேசம் தீர உன்னுடைய ஸ்ரமஹரமான உன் வடிவைக் காட்டி அருளாய்
அடியேனைப்
ஸ்வரூப ஞானம் உடைய என்னை
பண்டே போல் கருதாது,
முன்பு உன்னை இழந்த கிலேசம் -இப்போது அவைஷ்ணவ ஸஹவாசத்தால் வந்த கிலேசம் அன்றோ
முன்பு என் இழவு -இப்போது பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத கிலேசம்
இவரக்காக்கில் சேர்க்கைப் பல்லி போலே இது பணி என்று இருக்க ஒண்ணாது என்கிறார்
உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–
உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொண்டு அருள வேணும் –


ஐஸ்வர்யத்தை விரும்பி அது விநாச ஹேதுவாய் காணா நிற்க -பின்னையும் அத்தையே விரும்புகிற இவர்கள் நடுவில் நின்றும் உன் திருவடிகளில் என்னை வாங்கி அருள வேணும் -என்கிறார் –

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம்
இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –
நெருப்பாகக்
நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்
கொள் என்று தமம் மூடும்;
இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்
கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்
ஹதே பீஷ்மே ஹதேத்ரோணே ஹதே கர்ணே மஹாரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்
இவை என்ன உலகியற்கை!
ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –
வள்ளலே!
இந்த தபோ அபிபூதியை தவிர்த்து -இது அஸஹ்யமாம் படி பண்ணின மஹா உதாரனனே
மணிவண்ணா!
ஐஸ்வர்யாதிகளில் குதசையைப் பிறப்பித்தது இரு சாதனா அனுஷ்டானத்தாலேயோ
வடிவு அழகை காட்டி யன்றோ
பண்ணின உதார குணம் தன்னை சொல்லிற்று ஆகவுமாம்
உனகழற்கே வரும்பரிசு,-வள்ளல் செய்து
ஞானத்தை உண்டாக்கினால் போலே உன்னை லபிக்கைக்கும் உதார குணம் பண்ணி அருள வேணும்
அடியேனை உனது அருளால் வாங்காயே.–
யாரேனும் உடைமையையோ நான் நோக்கச் சொல்லுகிறதோ
மயர்வற மதி நலம் அருளினவோ பாதி ப்ராப்திக்கும் தனியே ஒரு கிருபை பண்ணி அருள வேணும்
வாங்காயே- என்று அசித் சமாதியாலே சொல்லுகிறார்
பரம பத்தி உண்டானாலும் பேற்றுக்கு அவன் கிருபையே ஹேது என்று இருக்கிறவர் –


ஜென்ம ஜராதிகளால் நோவு படுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும் இது நடையாடாத தேசத்தில் அழைத்து கொண்டு அருள வேணும் -என்கிறார்-

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

வாங்கு நீர் மலர் உலகில்
தனக்கு இவ்வருகு உண்டான கார்ய ஜாதத்தை தன் பக்கலிலே உபசம்ஹரிப்பதான நீரிலே விஸ்திருதமான லோகத்தில்
காரியத்துக்கு காரணத்தில் இ றே உத்பத்தியும் லயமும்
வாங்குதல் -வளைதலாய்-நீரால் சூழப் பட்டு திரு நாபீ கமலத்தில் பிறந்த லோகம் என்றுமாம் –
நிற்பனவும் திரிவனவும்
ஸ்தாவரங்களும் ஜென்மங்களும்
ஆங்கு உயிர்கள்
அவ்வவ சரீரங்களிலே வர்த்திக்கிற ஆத்மாக்கள் என்னுதல்
ஆங்கு என்றது கிடக்க -நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள் என்னுதல்
பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;ஈங்கு-
உத்பத்தி மரணாதிகளால் நலிவு படும் இங்கு
இதன் மேல் வெந்நரகம்;
இங்கு மூலையடியே திரிந்தற்கு பல அனுபவம் பண்ண நிஷ்க்ருட துக்கமே யான நரகத்தை பிராபிக்கும்
இஹ லோகத்தில் ஸூ க பிராந்தியாலும் உண்டு -அதுவும் இல்லை அங்கு –
இவை என்ன உலகியற்கை!
-இது ஒரு லோக ஸ்வ பாவம் இருக்கும் படியே
ஆங்கு வாங்கு எனைநீ,
இந்த துரிதம் இல்லாத பரமபதத்தில் இது அஸஹ்யமான என்னை அழைக்க வேணும்
விஷய பரரான இவர்கள் நடுவில் நின்றும் -பக்தைர் பாகவதஸ் ஸஹ -என்கிற திரளில் கொடு போக வேணும்
மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–
கண்ட போதே இத்துக்கம் எல்லாம் தீரும்படியான வடிவை யுடையவனே-சேஷ பூதனான என்னை இதன் படியைக் காட்டி கலங்கும் படி பண்ணாது ஒழிய வேணும் -அசாதாரணரையும் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கக் கடவதோ


சம்சாரிகளுடைய பகவத் வைமுக்யாதி தோஷங்களை அனுசந்தித்து ஈஸ்வரனை இன்னாதாகை தவிர்ந்து ஜீவன அர்த்தமாக பரஹிம்ஸை பண்ணுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்து அருள வேணும் என்கிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

மறுக்கி
கிராமணிகள் த்ரவ்ய ஆர்ஜனம் பண்ணும் படி –
தன்னை ஆபாஸ்ரயமாக பற்றினான் ஒருவனைக் குறித்து -உன்னை சில பழி சொல்லி சிலர் அழியச் செய்ய நினையா நின்றார்கள் -என்னும் –
அவன் இவனை ஆப்தனாக நினைத்து எனக்குச் செய்ய அடுப்பது என் என்னும் –
உன் உடைமைகளை என் வசமாக்கி வைத்து நீ ஸூ கமே இரு என்று இப்படி கலங்கும்படி பண்ணி
வல் வலைப்படுத்திக்
இவனுடைமையை ஸ்வ அதீனமாக்கி மீள ஒண்ணாத படி சூழ்க்கும்
குமைத்திட்டுக்
அவன் பேரிலே கடைமையை யிட்டு அடிப்பது கட்டுவதாகப் பண்ணும்
கொன்றுண்பர்;
இவன் இருக்கில் அநர்த்தம் என்று ஹிம்ஸிக்கும்-இப்படி செய்து வயிறு வளர்ப்பர்கள் –
அறப் பொருளை அறிந்து ஓரார்;
தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார் -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம்
ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார்
அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் –
இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே
இவை என்ன உலகியற்கை! வெறித் துளவ முடியானே!
இவர்களில் அந்நிய தமனான என்னை உன் போக்யதையைக் காட்டி விஷயாந்தரங்களிலே போக்கிய புத்தியை தவிர்த்து உனக்கே சேஷமாக்கிக் கொண்டாய்
வெறி -பரிமளம்
வினையேனே
முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை
உனக்கு அடிமை-அறக் கொண்டாய்
அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய்
இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–
உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு
இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒன்னாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை
என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே
நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும் –


அபேக்ஷிதம் அப்போதே கிட்டாது ஒழிந்தவாறே பேறு தம்மதான பின்பு தானே யத்னம் பண்ணி வருகிறார் என்று நினைத்து இருந்தானாகக் கொண்டு சகல பதார்த்தங்களும் த்வத் அதீனமான பின்பு நீயே உன்னைக் கிட்டும் வழி பார்த்து அருள வேணும் என்கிறார்

ஆயே இவ்  உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்-நீயே
ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே -மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்
இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லாத படி சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டு நீ பிரகாரியாய் நிற்கையாலே -நேஹா நா நாஸ்தி கிஞ்சன –
சரீரத்தில் வந்த துக்கங்கள் சரீரி போக்குமா போலே எனக்கு வரும் துக்கங்கள் போக்குகை உனக்கே பரம் என்கை
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–
அழைத்துக் கொள் -கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்

—————————————————————-

எம்பெருமான் நீர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் -என -என்று செய்வது என்கிறார்

காட்டி நீ  கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

காட்டி நீ கரந்து உமிழும் –
காட்டி -சிருஷ்டித்து -நாம ரூபங்கள் அழிந்து சத்வஸ்தமான ஜகத்தை-யதா பூர்வம கல்பயத் -என்கிறபடியே நாம ரூபங்களை உண்டாக்கி
நீ கரந்து உமிழும்-சிரஷ்டாவான நீயே பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து உள்ளே இருந்து தளராத படி உமிழும்
நிலம் நீர் தீ விசும்பு கால் ஈட்டி நீ
பஞ்ச பூதங்களையும் -சமேத்ய அந்யோன்ய சம்யோகம் என்கிறபடியே த்ரிவ்ருத்திகரித்து
ஆசமா கம்ய கிருஸ்த நச ப்ரஜாஸ் ஸ்ரஷ்டும் நாசக் நுவன் -என்ன கடவது இ றே
வைத்து அமைத்த
சமைத்து வைத்த
இமையோர் வாழ் தனி முட்டைக்-கோட்டையினிற் கழித்து
ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் -ஈஸ்வரோஹம் -என்று வன்னியம் செய்கிற தேசமாய் அத்விதீயமான வை லக்ஷண்யத்தை உடைத்தான் அண்டமாகிற அரணின் நின்றும் புறப்பட விட்டு –
புக்காருக்கு புறப்பட ஒண்ணாத அரண் இ றே
எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
இம் முட்டுக் கோட்டையிலே அகப்பட்டேன் என்று இருக்கிற என்னை –
கொழுஞ்சோதி- வி லக்ஷண தேஜோ ரூபமாய்
உயரத்துக்-சர்வோத்தரம் என்னுதல் -சர்வ பிரகாரத்தாலும் உத்க்ருஷ்டம் என்னுதல்
கூட்டரிய திருவடிக்கள்-
துஷ் ப்ராபமான திருவடிகளிலே –என்னால் சாத்தியம் இன்றிக்கே நீயே தர காணுமது என்கை –
எஞ்ஞான்று கூட்டுதியே?–
இன்ன நாள் செய்யக் காட்டுவோம் என்று எல்லை பெறிலும் தரிக்கலாம்
மா ஸூ ச என்று ஒரு வார்த்தை பெறிலும் ஸ்திதி தோஸ் மிக்கது ஸந்தேஹ-என்று தரிக்கலாம்
பூர்ணே சதுர்த்தசே வர்ஷே என்று நாள் எல்லை பெற்ற ஸ்ரீ பரத ஆழ்வானை போலே –
விரோதியைப் போக்கிலும் தன்னைப் பற்றியே போக்க வேணும்
தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேணும்
மாமேவ ப்ரத்யந்தே –தமேவ க்ரணம் கச்ச –


இவருடைய சம்சார அனுசந்தானத்தால் வந்த வியசனம் எல்லாம் நிவ்ருத்தமாம் படி திருநாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு -அனுபவிக்கப் பெற்றேன் என்று திருப்தராகிறார்-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,ஆட்டுதி நீ;
ஓர் அளவு இல்லாதார் ஆகவுமாம் –
நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி
தேவர்களே யாகிலும் நீ நினையாதாரை உன்னை அனுபவிக்க ஒண்ணாத படி விஷயங்களை காட்டி அலமந்து திரியப் பண்ணுதி
அரவணையாய்!
திருவடிகளிலே கூட்டும் கொள்ளும்படிக்கு உதாஹரணம் –
அடியேனும் அஃது அறிவன்;
லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன் -எத்தாலே என்ன -என் திறத்தில் செய்து அருளினை படியால்
வேட்கை எலாம் விடுத்து
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி
எனை உன் திருவடியே சுமந்து உழலக்
ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.
அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்


கீழே விடுத்து என்றும் கூட்டினை என்றும் ப்ரஸ்துதமான பேற்றை ப்ரீத்யதிசயத்தாலே -விட்டது இது பற்றிற்று இது -என்று வ்யக்தமாக அருளிச் செய்கிறார் –

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி-கண்ட இன்பம்,
ரூபாதிகளை க்ரஹிக்கைக்கு கருவியான சஷூராதிகளாலே அனுபவிக்கப் பட்ட ஸூ கம்
ஆத்மாவுக்கு நித்யதர்மமான ஞானம் கர்மத்தால் சங்குசிதம் ஆகையால் உழக்காலே அளக்குமா போலே இந்த்ரியத்வாரா பிரஸ்ருதமான ஞானத்தால் வந்த ஐஹிக ஸூ கம்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூ கத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூ கத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூ கம் இவற்றை
ஒழிந்தேன் -விட்டேன்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
தொடி-முன்கை வளை –ஒண்மை யாவது -ஒரு காலும் கழலாது ஒழிகை -விஸ்லேஷிக்கை இ றே கழலுவது -இவள் நித்ய அநபாயினி இ றே
நீயும் அவளுமே என்னும் படி இருவருடையவும் அபிமானத்துக்கு உள்ளே ஒரு விபூதியாக அடங்கும் படி இருக்கை -நான்யோர் வித்யதேபரம்-என்னா நிற்க –
வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை
கண்ட சதிர் கண்டொழிந்தேன்
பார்த்து வைத்த வாய்ப்பு -உங்கள் இவருடைய அனுபவமும் நித்தியமாய் செல்லும்படி நீ பார்த்து வைத்த வாய்ப்பைக் கண்டு -அதாவது அவ் விபூதியில் உள்ளார் சந்த அனுவர்த்திகளாம் படி பண்ணி வைத்த சதிர் -அத்தைக் கண்டு
; அடைந்தேன் உன் திருவடியே.–
உன் திருவடிகளை அடையவும் பெற்றேன் –

——————————————————————-

நிகமத்தில் இது திருவாய்மொழி அப்யசித்தாரை இது தானே அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் என்கிறார் –

திருவடியை  நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

திருவடியை
தமக்கு அவன் பண்ணின உபகாரத்திலே தோற்று ஏத்துகிறார் -சர்வ ஸ்வாமி யானவனை
நாரணனைக்
ஸ்வாமியாய்ப் பிரிய நிற்கை அன்றிக்கே -அல்லோம் -என்றாரையும் விட மாட்டாத வத்சலனை
கேசவனைப்
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து ஆவோம் என்றாருடைய விரோதிகளை போக்குமவனை
பரஞ்சுடரைத்
அவதரித்த இடத்திலும் மனுஷ்யத்வே பரத்வம் இருக்கிற படி -பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜவலமான நீர்மையால் வந்த தேஜஸ்ஸை யுடையவன்
திருவடி சேர்வது கருதிச்
திருவடிகளை சேர வேணும் என்று மநோ ரதித்து
செழுங் குருகூர்ச் சடகோபன்
தம்முடைய துக்கத்தை அவன் போக்குகையாலே சம்ருத்தமான திரு நகரி என்னுதல் –
இவருக்கு இவ்வாசிக்கு அடி அவ் ஊரில் பிறப்பு என்னுதல் –
திரு அயோத்தியில் உள்ளார்க்கு மண் பாட்டாலே ராம பக்தி உண்டாமாப் போலே
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடிகளிலே வைத்து சொன்ன ஆயிரம் என்னுதல் –
இவ் விசேஷணங்களை ஆயிரத்திலும் இட்டு நிர்வஹிப்பர்கள் பூர்வாச்சார்யர்கள் -பட்டர் அவ்வோ திருவாய்மொழியிலே இட்டு நிர்வஹிப்பர்
திருவடியே அடைவிக்கும்
இத்திருவாய் மொழி தானே திருவடிகளிலே சேர்விக்கும் –
திருவடி சேர்ந்து ஒன்றுமினே.-
திருவடிகளை பிராபித்து-சாயுஜ்யம் பிரதி பன்னாயா-என்றும் -யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே இளைய பெருமாளை போலே பிரியாதே நின்று எல்லா அடிமைகளையும் செய்யப் பாருங்கோள் –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: