திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-6–

கீழ் திருவாய் மொழியில் தாம் அனுபவித்த அனுபவம் மானஸ அனுபவ மாத்ரமாய் பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
ஆழ்வார் அத்யந்தம் அவசன்னராய் -வேறே சிலர் அனுசந்தித்து பரிஹரிக்க வேண்டும்படி தமக்கு பிறந்த தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்
ஏவம்விதமான எம்பெருமானை புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ருங்கி பேர புரத்திலே பெருமாள் வ்ருத்தாந்தத்தைக் கேட்டு
மோஹித்தால் போலே மோஹித்துக் கிடக்க
இவளுடைய பந்து ஜனங்கள் மிகவும் கலங்கி நோய் இன்னது என்றும் -நோய்க்கு நிதானம் இன்னது என்று என்றும் அறியாதே
ஒரு கட்டுவிச்சியை இது இன்ன நோய் என்றும் –இந்நோய்க்கு நிதானம் என் என்றும் கேட்டு அவள் சொற்படியே
பாஹ்யாகமம் த்ருஷ்டியாகவும் அதி ஷூத்ரமாய் இருக்கிறது ஒன்றையே தேவதையாகவும் நிந்த்யமான த்ரவ்யங்களை உபகரணமாகவும் கொண்டு
இவள் பக்கல் உண்டான ஸ்நேஹ அதிசயத்தாலே ஏதேனும் ஒரு வழியாலே இவள் பிழைக்க அமையும் என்று அமார்க்கங்களாலே சிகித்சிக்க உபக்ரமிக்க
இவளுடைய ரோகத்தையும் இவளுடைய பிரக்ருதியையும் நேரே அறிந்த தோழியானவள்
நோயும் பரிகாரமும் நீங்கள் நினைக்கிறவை அல்ல -என்று அவர்களை நிவர்த்திப்பித்து
இவளுடைய நோய் இன்னது என்றும் -இந்நோய்க்கு அடி கிருஷ்ணன் என்றும் சொல்லி வைஷ்ணவ கோஷ்ட்டியில்
பிரசித்தமான பகவான் நாம சங்கீர்த்த நாதிகளாலே இவளை பிழைப்பியுங்கோள் என்கிறாள் –

———————————————————————————————————————-

இப்பிராட்டி உடைய தோழி யானவள் -இந்நோய்க்கு நிதானத்தை சொல்லி -நீங்கள் பரிஹாரமாக நினைத்து
செய்கிறவை பரிஹாரம் அன்று -என்று அவற்றை நிவர்த்திப்பிக்கிறாள் –

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
நம்மைப் போல் அன்றியே தரித்து நின்று இனி இனி நோய் தீர்ப்பாரை நாம் எங்கனே தேடுவோம்
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
அதி லோகமான அழகை உடைய இவள் உற்ற ஸ்ப்ருஹணீயமான இந்த நோய் நிரூபணத்தாலே அறிந்தோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்-தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
சேனையை அணி வகுக்கை தொடக்கமாக யுத்தத்துக்கு வேண்டும் நிர்வாஹம் எல்லாம் தானே பண்ணி
தர்ம புத்ராதிகள் ஐவரையும் வெல்விப்பதும் செய்து ஆச்சர்யமான யுத்தத்தில் திருத்தேரை நடத்தின
ஸ்ரீ கிருஷ்ணனை பெறுகைக்காக இவள் அந்தக்கரணம் கலங்கி மதி கெடுகிறது –

——————————————————————————————————————–

ஷூத்ர தேவதா சாந்திகளால் இவ்வியாதி போக்குகை அரிது -நீங்கள் கலங்காதே
எம்பெருமானுடைய திறம் சொல்லில் இவளை பெறலாம் -என்கிறாள் –

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

இவள் நோய் நீங்கள் அறிகிறிலர் -இது பரதேவதையாலே வந்தது –
ஒரு சங்கதி அன்றியே நீங்கள் தேவதை ஏறி யாடுகிற ஷூத்ர தைவத்தால் வந்தது அன்று இது –
பிரமியாதே -சொல்ல வல்லி கோள் யாகில்
இல் பெரும் -ஜீவிக்கும் -இல் -உடம்பு –

———————————————————————————————————-

அயுக்தங்களை செய்யாதே எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துங்கோள் –
வாழ்த்தவே இவளுடைய துக்கங்கள் எல்லாம் போம் -என்கிறாள் –

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்-இத்யாதி
அதி ஷூ த்ரையான கட்டுவிச்சியுடைய அவிஸ்வாஸ நீயமான சொல்லைக் கொண்டு வி லக்ஷணை களான நீங்கள்
அசங்கத ப்ரவ்ருத்திகளைப் பண்ணி துர்த்ரவ்யங்களாலே இந்த வைஷ்ண க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள் என்று
முகத்தை திரிய வைத்து நிஷேதிக்கிறாள் –
மதுவார் துழாய் முடி-இத்யாதி
நிரதிசய போக்யமான திருத் துழாயை திரு முடியில் உடைய ஆச்சர்யமான திரு அழகை உடைய சர்வேஸ்வரனுடைய
திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணினால்
இவள் தான் உகந்து யுக்தமாய் இருக்கிற அதுவே இவள் உற்ற நோய்க்கு சிலாக்யமான மருந்தாகும் –
இவள் உற்ற நோய்க்கும் -உங்கள் நோயும் இவள் நோயும் தீரும் என்றுமாம் –

———————————————————————————————————–

வஞ்சகையாய் தோற்றிற்று சொல்லக் கடவாள் ஒரு கட்டுவிச்சியின் வார்த்தையைக் கொண்டு ரஜஸ் தமஸ் பிரசுரரான
தேவதைகளுக்கு நாநா வர்ணமான சோற்றைத் தூவி என்ன பிரயோஜனம் உண்டு
ஆபத் சகனான சர்வேஸ்வரனுடைய திரு நாம சங்கீர்த்த நத்தை பண்ண வல்லி கோளாகில்
இவளை உங்களுக்கு கிடைக்கும் என்கிறாள் –

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

களன் இழைத்து-தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களில் அவள் சொன்ன நியமங்களாலே இட்டு
ஒருங்காகவே-ஒரு காலே –
பேர் சொல்லகிற்கில்-பேர் சொல்ல வல்லி கோளாகில்-

—————————————————————————————————–

இவளுடைய நோய்க்கு யோக்யமான பரிஹாரம் சொல்கிறாள் –

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

இவளை பெறுகைக்கு உபாயம் இந்த ஷூ த்ரா தேவதா ஆவேச ப்ரவ்ருத்த விகட ந்ருத்தம் அன்று
இது பரிஹாரம் ஆகாமை அன்றிக்கே குவளை நிறம் போலேயாய்-அறப் பெருத்த கண்ணும் கோவைப் பழம் போலே
சிவந்த வாயும் கண்டார்க்கு தய நீயமாம் படி விவர்ணம் ஆயிற்று
கவளம் கொண்டு மதமுதிதமான குவலயா பீடத்தை முடித்த கிருஷ்ணனுடைய திரு நாமத்தை சொல்லி
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுவை இவள் மேலே இடவே இவள் நோய் தவிரும்
திரு நாம சங்கீர்த்தனம் தேவதாந்த்ர சம்பந்தத்தாலே வந்த நோய்க்கு பரிஹாரம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத ரேணு தேவதாந்த்ர சம்பந்திகள் சந்நிதானத்தால் வந்த நோய்க்கு பரிஹாரம் –

——————————————————————————————————–

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத தூளியைக் கொண்டு இட உபக்ரமிக்க பெறில் -அதுவே பரிஹாரம் –
-மாற்று இவள் நோய்க்கு பரிஹாரம் இல்லை என்கிறாள் –

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

தணியும் பொழுது இன்றி-இத்யாதி –
விடாதே நீங்கள் அணங்கு ஆடா நின்டறீர்கள் -இதுக்காக வியாதி வர்த்திக்கிறது அத்தனை போக்கிக் குறைந்து காட்டுகிறது இல்லை
மணியின் அணி நிற மாயன் தமர்-எம்பெருமானுடைய அழகுக்கும் குணங்களுக்கும் தொற்றி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

—————————————————————————————————————-

இதர தேவதைகளை ஆச்ரயித்தால் இவளுடைய வி நாசமே பலித்து விடுவது -இவள் பிழைக்க வேண்டி இருந்திகோள் ஆகில்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள்-என்கிறாள் –

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

அணங்குக்கு அருமருந்து என்று-இத்யாதி
அப்ராக்ருத ஸ்வ பாவையான இவளுக்கு ஒருவராலும் செய்ய ஒண்ணாத மருந்து செய்கிறோம் என்று
துர்த்ரவ்யங்களை பிரார்த்தித்து திரள நின்று கையைத் தட்டி தோளைக் குலைத்து ஆடுகிற அன்னைமீர் –
உணங்கல் கெடக் கழுதை-இத்யாதி
ஜீவன சாதனமான வரீஹ்யாதிகள் சேதப்படும் படி கழுதையைத் தின்ன விட்டு அதனுடைய உதட்டாட்டம் கண்டு போது போக்க இருப்பாரைப் போலே
இவள் நோவு படா நிற்க அசங்கத ப்ரவ்ருத்திகளாலே போது போக்கி இருந்தால் என்ன பிரயோஜனம் உண்டு –

—————————————————————————————————————

வைஷ்ணவர்களை புருஷகாரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புக்கு இவளுடைய நோயைத்
தீர்த்துக் கொள்ளுகை தவிர்ந்து ஷூ த்ர தேவதைகளை ஆச்ரயிக்கை உங்களுக்கு கீழ்மையைப் பண்ணும் என்கிறாள் –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வக்த்வயம் அல்லாதவற்றைச் சொல்லி அயுக்தங்களைப் பண்ணி துர்த்த்ரவ்யங்களைக் கலந்து தூவி
பொல்லாத பாட்டோடும் கூடின வாத்தியங்களை ப்ரவர்த்திப்பித்து நீங்கள் தைவாவேசத்தாலே ஆடுகிற இது உங்களுக்கு அவித்யாவஹம்

——————————————————————————————————————

நீங்கள் அணங்காடுகை யாகிற நிஷ்ப்பல ப்ரவ்ருத்தி நான் காண மாட்டேன் -கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் –
இவள் பிழைக்க வேண்டி இருந்தி கோள் ஆகில் -என்கிறாள் –

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

கீழ்மையினால்-இத்யாதி –
உங்களுடைய கீழ்மையாலே நிஹீன குல ஜனயாய் இருப்பான் ஒருவன் பிரவர்த்திப்பித்த வாத்தியத்தின் கீழே பல மேனாணிப்பு சொல்லி
-தேவதைகள் தரமுடைமை சொல்லி என்றவாறு –
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;-
இவளுக்கு காலம் உள்ளதனையும் ரக்ஷையாம் -இந்நோய்க்கும் இதுவே பரிஹாரம்
ஊழ்மையில்-யுக்தமான படியால் –

——————————————————————————————————————

இவளுக்கு கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை அனுசந்தித்து அதுக்கு ஈடாக அவனை வாழ்த்துங்கோள்
-வாழ்த்தவே இவள் உஜ்ஜீவிக்கும் என்கிறாள் –

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்,-அவனை அல்லால்;நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!-
அவனை ஒழிய மற்று ஒரு தெய்வம் உண்டு என்று அறிதல் தொழுதல் செய்யும் ஸ்வ பாவை அல்ல –
உங்களுக்கு பிரதிபந்தகங்களை சொல்லி அலமாக்கிற அன்னைமீர் –
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி-மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே-
ஸூ த்ருட ப்ரமாணமான வேத ப்ரதிபாத்யனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி
வண் த்வாராபதிக்கு ராஜா வானவனை பரிஹாரமாம் போலே நோய்க்கு நிதானமான கிருஷ்ண குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –

—————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழியை சஹ்ருதயமாக அப்யசிக்குமவர்கள் தாம் எம்பெருமானைப் பிரிந்து பட்ட வியசனம் படார் என்கிறார் –

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–4-6-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த-வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
திரு நாமத்தால் உஜ்ஜீவித்து நோய் தீருவதும் செய்து மோஹ திசையிலும் தேவதாந்த்ர ஸ் பர்சம் சஹியாமையும்
அத்தசையிலும் பகவத் குணங்களை உஜ்ஜீவனமாக உடையர் என்னும் ஸ்வ பாவிகமான புகழை புஸ்கலமாக உடைய ஆழ்வாருடைய சொல்லான
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
ஆயிரம் திருவாய் மொழியிலும் பகவத் குணங்கள் ஒன்றுமே ஒழியாமே ப்ரதிபாதித்ததான -வெறி விலக்கு-ஆன
இத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக அனுசந்திப்பார்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே
மோஹம் தீர பெறுகையாலே எல்லாம் பெற்றதாக அனுவர்த்திக்கிறது

——————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: