திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -4-5–

கீழ் சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் கண்டு பிச்சேறின இவர் விடாயின் மிகுதி தீர உபய விபூதியோடே கூடாது
தன்னைக் காட்டிக் கொடுத்தாலும் பூர்ண அனுபவம் பண்ணுகைக்கு ஈடான பக்த்யாரோக்யம் பிறந்த படியை கண்டு
அயோத்யை என்றும் அபராஜிதை என்றும் சொல்லப் படுகிற திவ்ய நகரத்தையும் ஆனந்த மயமான திவ்ய ஆஸ்தானத்தையும்
திவ்ய பர்யங்கத்தையும் உடைத்தான பரம பதத்தில் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ பூஷண ஆயுத பரிஜன உபேதனாய்
பெரிய பிராட்டியாரோடே கூட வீற்று இருந்து அருளி இருக்கிற இருப்பையும் ஆவது அழிவதுமான லீலா விபூதியில் உள்ளாரையும்
நித்ய ஸூ ரிகள் படி யாக்குகைக்காக ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி ஸ்ருஷ்டமான ஜகத்திலே ததேவ அநு ப்ராவிஸத்-என்று
முகம் தோற்றாமல் வந்து ரக்ஷிக்கும் அளவு அன்றிக்கே -தேவ மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
நிகில ஜன மநோ நயன ஹாரியான குண சேஷ்டிதங்களை உடையனாய் இருக்கிற படியையும்
ஆக இப்படி உபய விபூதி உக்தனான தன் படிகளை எல்லாவற்றையும் இவருடைய இழவுகள் எல்லாம் தீரும் படி
காட்டிக் கொடுக்கக் கண்டு -மங்களா சாசனம் பண்ணி க்ருதக்ருத்யராய்
உபய விபூதியிலும் இவ்விஷயத்தை ஏத்தப் பெற்றாரில் என்னோடு ஒப்பார் இல்லை என்று திருப்தராகிறார் –
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று பிரமித்தவருக்கு –
தூவி யம் புள்ளுடையான் -அடலாழி யம்மான் என்று நித்ய ஸூ ரிகளைக் காட்டிக் கொடுத்தான்
செய்யாதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -என்று பிராட்டியும் தானுமான சேர்த்திக்கு போலி கண்டு பிரமித்தவருக்கு
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -என்று தானும் பிராட்டியுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்தான்
திரு உடை மன்னரைக் காணில் -என்று அல்ப ஐஸ்வர்யம் கண்டு பிரமித்தவருக்கு உபய விபூதி உக்தனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக் கொடுத்தான் –
விரும்பிப் பகவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும் -என்று ஆனந்த லேசம் உடையாரைக் கண்டு பிரமித்தவருக்கு
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -என்று ஆனந்த மயனாக இருக்கும் இருப்பைக் காட்டிக் கொடுத்தான்
என் செய்கேன் என்று பிறர் வாயாலே சொன்ன இவரை தம் வாயாலே இனி என்ன குறை எழுமையும் -என்னப் பண்ணினான்
இப்படி இவர் விடாயைக் கண்டு தன் படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்கக் கண்டு மங்களா சாசனம் பண்ணி திருப்தர் ஆகிறார் –

———————————————————————————————–

சர்வேஸ்வரனாய் வைத்து -மனுஷ்ய சஜாதீயனாய் வந்து -திருவவதாரம் பண்ணி யருளி ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணி அருளுகிற
கிருஷ்ணனைக் கவி பாடப் பெற்ற எனக்கு ஒரு நாளும் ஒரு குறை இல்லை -என்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வேறு பாடு தோற்ற இருந்து
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் சேஷி என்று தோற்ற இருக்கை
ஸ்வ வ்யாதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும் சேஷமாக உடையான் ஆகையால் உண்டான ஆனந்தத்தால் வந்த இறுமாப்பு தோற்ற இருக்கை –
சேதனர்க்கு பரஸ்பரம் பேதம் உண்டாகிலும் ஞான ஏக ஆகாரதையாலும் பகவத் சேஷத்வ ஆகாரதையாலும் சாம்யம் உண்டு –
விபுத்வ நியந்த்ருத்வ சேஷித்தவாதிகள் இவனுக்கே உள்ளது
இருந்து
இப்படி நிர்வஹிப்பது-சுற்றும் பயணம் வந்த வன்னியம் அறுத்தோ என்னில் -தான் இருந்த இருப்பில் தனி யாணை செல்லும் படியாய் யாயிற்று இருப்பது
ஏழுலகும் –
உபய விபூதியும் சொல்லிற்று ஆதல் -லீலா விபூதியை சொல்லிற்று ஆதல் –
உபய விபூதி பரமான போது சதுர்வித பிரக்ருதியும் த்ரிவித ஆத்மவர்க்கமும்
லீலா விபூதி பரமான போது பாதாளாதிகளும் பூமியும் கூட ஒன்றாய் அந்தரிஷிதிகள் ஆறுமாக கடவது
அப்போது வீவில் சீர் -நித்ய விபூதியாகக் கடவது -உபய விபூதி பரமான போது கல்யாண குணமாக கடவது
தனிக்கோல் செல்ல,
தன்னுடைய அத்விதீயமான சாசனம் செல்லும் படி
வீவு இல் சீர்
முடிவு இல்லாத கல்யாண குணங்கள் –
ஒரு நாளும் அழிவு இல்லாத நித்ய விபூதி என்னவுமாம் –
ஆற்றல் மிக்கு ஆளும்
இப்படி உபய விபூதியையும் உடையனாய் இருந்தால் அணுக ஒண்ணாத படி இருக்குமோ என்னில்
ஒன்றும் இல்லாதானாப் போலே அநுத்தனாய் ஆளும்
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா-
அமரர்க்கேணா கதாம் லஷ்மீம் ப்ராப்யே வான் வய வர்ஜித-என்கிறபடி அன்றே
ஆற்றல் என்று வலியாய் உபய விபூதியையும் நிர்வஹிக்க வல்ல சாமர்த்தியத்தை உடையவன் என்றும் சொல்லுவர்
இது சொல்லிப் போருமது அன்று
அம்மானை
ஸ்வ இதர ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷியானவனை –
உடையவன் ஆகையால் சாத்மித்து இருக்கும் இ றே
வெம்மா பிளந்தான்றனைப்
ஆற்றல் மிக்கு ஆளுகிறபடியைச் சொல்லுகிறது –என்று பட்டர் –
ஆற்றல் மிக்கு ஆளுமவன் இன்னான் என்கிறது என்பர் எம்பார்
உபய விபூதி உக்தன் ஆனால் தஹ பச என்று நிர்வஹிக்கை அன்றியே சஜாதீயனாய் வந்து அவதரித்து
அவர்கள் பண்ணும் பரிபவங்களை பொறுத்து அவர்களுடைய விரோதி வர்க்கத்தை போக்கி ரக்ஷிக்குமவனை
ஸ்யமந்தக மணி ப்ரவ்ருத்திகளிலே பரிபவம் பிரசித்தம்
தாஸ்யம் ஐஸ்வர்ய வாதேன ஞானத்தீ நாஞ்ச கரோம்யஹம் -என்றும்
அர்த்த போக்தாச்ச போகா நாம் வாக் து ருக்தா நிஸ் சஷமே -என்றும் அருளிச் செய்தான் இ றே
வெம்மா பிளந்தான்
வியாதி தாஸியோ மஹா ரவ்த்ரஸ் சோ அ ஸூர க்ருஷ்ண பாஹு நா -நிப பாதத் வித்தா போதோ வைத்யுதே நாயனாத் ரூமே –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
கேசி கையில் அகப்பட்ட அதுக்கு இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணுகிறார்
சமகாலம் போலே யாயிற்று இவருக்கு இருக்கிறது
என்றே -சொல் மாலைகள்
ஒருகால் பல்லாண்டு என்று விடுகை அன்றிக்கே-அத்தையே பலகாலும் சொல்லுகை –
நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
கைகள் ஆரத் தொழுது-
வைகுந்தம் என்று காய் காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது
சொல் மாலைகள்
வாடாத மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு
இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது
இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல்
பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இ றே
பூர்வ க்ஷண வர்த்தி இ றே ஒன்றுக்கு ஹேது ஆவது –
இனி என்ன குறை எழுமையுமே-
இங்கே ஸ்வரூப அனுரூபமான கிஞ்சித் காரம் பண்ணின எனக்கு பின்பு ஒரு நாளும் ஒரு குறை இல்லை
தேஹ சம்பந்தம் அற்றதில்லை -ஒரு தேச விசேஷம் சித்தித்தது இல்லை என்கிற குறைகள் ஒன்றும் இல்லை
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன
எழுமையுமே-
என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இ றே

—————————————————————————————————-

இந்த மஹா ஐஸ்வர்யத்துக்கு அடியான ஸ்ரீ யபதித்தவத்தை அருளிச் செய்கிறார் –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

மைய கண்ணாள்
அஸி தேஷிணை இ றே-இவள் சர்வேஸ்வரனை ஒரு கால் நோக்கினால் ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே-
அவன் திருமேனி திமிர்க்கும் படியாய் யாயிற்று இருப்பது
மழைக் கண் மடந்தை இ றே -இது இவளுடைய அவயவ சோபை –
மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
இவள் ஸுகுமார்யத்தைச் சொல்லுகிறது -பரிமளம் உபாதானமாக பிறந்தவள் –
உறை மார்பினன்
ஜென்ம பூமியான பூவில் காட்டில் பொருந்தி வர்த்திப்பது மார்பிலே யாயிற்று –
மார்பிலே சுவடு அறிந்த பின்பு பூ நெரிஞ்சி முள்ளோ பாதி யாயிற்று
பெருமாளைக் கைப் பிடித்த பின்பு பிராட்டி ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலேயும்
நோ பஜனம் ஸ்மரன் நிதம் சரீரம் இதம் சரீரம் -என்று சம்சார யாத்திரையை நினையாதாப் போலேயும்
மலர் மேல் உறைவாள்-என்ற இடம் குந்தி அடியிட்டது என்றும்
உறை மார்பினன் என்ற இடம் திருமார்பில் பொருந்தி வர்த்திக்கும் என்றும் இயலில் தோற்றி இருக்கிறது –
செய்ய கோலத்தடங் கண்ணன் –
இவள் கடாக்ஷத்தாலே அவன் திரு உள்ளத்தில் புஷ்கல்யத்தை கோள் சொல்லித் தருகிற திருக் கண்களை உடையவன்
மதுபான மத்தரைப் போலே சிவந்து அழகியதாய் பெருத்த கண்களை உடையவன்
இம் மிதுனம் இ றே இவர் பாட்டுக்கு விஷயம்
அவள் மைய கண்ணாள்-இவன் செய்ய கோலத் தடம் கண்ணான்
அவள் அடுத்து பார்க்கையாலே அவள் கண்ணின் வாசனை ஊறி இவன் திருமேனி ஸ்யரமமாய் இருக்கும்
இவன் கண்ணின் சிவப்பு ஊறி அவள் மேனி சிவந்து இருக்கும்
இவள் கடாக்ஷம் உண்டாகையால் இ றே அவன் புண்டரீகாக்ஷன் ஆயிற்று
அது இல்லாமையால் இ றே அல்லாதார் விருபாக்ஷராய் இருக்கிறது
நம ஸ்ரீ ரங்க நாயக்யை யத்ப்யவிப்ரம பேத தரூ–ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோன்ன தமிதம் ஜகத்-
ஒருவன் அழகிய மணவாள பெருமாளாய் இருக்கிறதும் -ஒருவன் பிஷூகனாய் இருக்கிறதும்
விண்ணோர் பெருமான் தனை
இச் சேர்த்தி அழகு காட்டில் எறித்த நிலவாகாத படி அனுபவிக்கைக்கு போக்தாக்களை உடையவனை
அவர்களுக்கு நியாமகனாய் அத்தாலே மேனானித்து இருக்கிற படி –
இக் கண் குமிழியின் கீழே விளைகிற நாடு இருக்கிற படி
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
மொய்
என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை-
பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –
யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –
இசை மாலைகள் –
பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை –
அவனும் அவளும் நித்ய ஸூ ரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இ றே
ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக
நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே
கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –
ஏத்தி உள்ளப் பெற்றேன்
மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று -இவர் படி
ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது
கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி
சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி
முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறது
ஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.
குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘
வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்
லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்
க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –

—————————————————————————————————–

உபய விபூதி உக்தனான ஆனந்தமயனைத் திருவாய்மொழி பாடி அனுபவிக்கப் பெறுகையாலே நிரதிசய ஆனந்தி யானேன் என்கிறார் –

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

வீவு இல் இன்பம் –
விச்சேதம் இல்லாமை -இன்பம் என்று ஆனந்தம் –
மிக எல்லை நிகழ்ந்த –
மிக்க எல்லையில் வர்த்திக்கிற -நித்தியமாய் நிரதிசயமான ஆனந்தத்தை உடையவன் என்கை
நம் அச்சுதன்
நம் -என்று ஆனந்த வல்லீ முகத்தாலே தமக்கு பிரகாசிப்பித்தவன் –
அச்சுதன் -இவ் வானந்ததுக்கு ஒரு காலும் பிரஸ்யுதி இல்லாமையால் -அச்சுதன் என்னும் திரு நாமத்தை உடையவன் –
வீவு இல் சீரன்-
இவ் வானந்ததுக்கு அடியான நித்ய விபூதியை உடையவன் –
நித்தியமான குணங்களை உடையவன் என்றுமாம் –
குண விபூதிகள் ஆனந்தாவஹமாய் இ றே இருப்பது
மலர்க் கண்ணன்
இவ் வைச்வர்யத்தை உடையவன் என்னும் இடத்தை கோள் சொல்லித் தருகிற திருக் கண்களை உடையவன் –
இவ் வைஸ்வர்யத்தால் இ றே -அவன் புண்டரீகாக்ஷன் ஆயிற்று
அல்லாதார் அது இல்லாமையால் இ றே விருபாக்ஷர் ஆகிறது
விண்ணோர் பெருமான் தன்னை –
அக் கண் அழகுக்கு தோற்று ஜிதந்தே புண்டரீகாக்ஷ –என்று ஒரு நாடாக ஏத்த இருக்கிறவனை-
இஸ் சம்பந்தத்தை நித்ய ஸூ ரிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறவனை –
போக்தாக்களும் விஷய அனுகூலமாயி றே இருப்பது –
வீவு இல்காலம்
அனுபவிக்கிற விஷய அனுகூலமாக காலமும் முடிவில்லாத காலமாகப் பெற்றது –
ஒழிவில் காலம் எல்லாம் -என்ன கடவது இ றே
அஸ்திர விஷயங்களை அனுபவிக்கப் புக்கால் அனுபவிக்கும் காலமும் பரிமிதமாய் இருக்கும் –
இசை மாலைகள்
விஷயமும் இதுவாய் -காலமும் நித்யமானால் போலே -ப்ரீதிக்கு போக்கிவிடும் பாசுரமும் இதுவாகப் பெற்றது
ஏத்தி மேவப்பெற்றேன்;
ஏத்திக் கொண்டு கிட்டப் பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்
நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்
அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே-
அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்
என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி
என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்
ஏஷ ஹ் யேவா நந்தயாதி –

——————————————————————————————————

அநந்ய பிரயோஜனரையும் முதலிலே பிரயோஜ நாந்தரங்களில் இழியாத நித்ய ஸூரிகளையும் உடையனாய் வைத்து
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகான தான் நித்ய சம்சாரியான என் பக்கலில் பண்ணின
மஹா உபகாரம் என்னால் பரிச்சேதிக்க ஒண்கிறது இல்லை என்கிறார் –

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

மேவி நின்று தொழுவார்
அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் –
வினை போக
பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி
மேவும் பிரான்
அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன்
தூவி அம் புள்ளுடையான்
ஆஸ்ரிதர் இருந்த இடத்தே கொடுவரும் சிறகை உடையவனாய் -த்வத் அங்க்ரி சம்மர்த்தகி ணாங்க சோபி நா -என்கிற
அழகையும் உடைய பெரிய திருவடியை வாகனமாக உடையவன் -தூவி -சிறகு –
அடல் ஆழி
அடல் என்று யுத்தமாய் -யுத்த உன்முகமாய் பிரதிபக்ஷத்தை அழியச் செய்யும் திரு வாழியை உடையவன்
ஆஸ்ரிதர் இருந்த இடத்தே கொண்டு வருகைக்கும் -பிரதிபந்தங்களைப் போக்குகைக்கும் பரிகரம் உடையவன் –
கீழில் பாட்டுக்கள் தோறும் -விண்ணோர் பெருமான் என்றது -ப்ரஹ்மாதிகளைச் சொல்லுகிறது என்று
பிரமிக்கலாய் இருக்கையாலே இதிலே அவர்கள் இன்னார் என்கிறது
அம்மான் தன்னை –
திருவடி முதுகிலே பேராதே இருத்தல் -திரு வாழி யை சலியாமல் பிடித்தல் செய்யுமவன் இ றே சர்வேஸ்வரன் ஆவான் –
நாவியலால் இசை மாலைகள்-
நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;
இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்
ஆவி என் ஆவியை யான் அறியேன்
ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –
ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –
என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை
செய்த ஆற்றையே.-யான் அறியேன்
விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்
ஏஷ ஹ் யேவா நந்தயாதி –
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் –
சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப்பேறாகத் தலையால் சுமப்பதே
யான் அறியேன்
உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ
உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம்
தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற
விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

————————————————————————————————

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் சர்வேஸ்வரனாய் -சர்வாதிகனாய் இருந்து வைத்து அர்ஜுனனுக்கு சகல அர்த்தங்களையும்
அருளிச் செய்தினால் போலே -எனக்கு க்ரமத்தாலே தன் படிகளை -குண சேஷ்டிதங்களைக் காட்டி அவ் வழி யாலே
என்னை அடிமை கொண்டவனை-அனுபவித்து திருவாய்மொழி பாடி மிகவும் ப்ரீதன் ஆனேன் என்கிறார் –

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

ஆற்ற
அமைய -பொறுக்க பொறுக்க
நல்ல வகை காட்டும் அம்மானை
தன் குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்தவன் –
தன் படிகளை ஒரு காலே காட்டில் குளப் படியில் கடலை மறுத்தால் போலே இவருடைய ஆஸ்ரயம் சிதிலமாம்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்ற போதே வீற்று இருந்து ஏழு உலகை அனுபவிப்பித்தால்
இவரை கிடையாது என்று இறே இவ்வளவும் கொண்டு போந்தது –
அம்மானை அமரர் தம்-ஏற்றை-
சர்வேஸ்வரனாய் -நித்ய ஸூ ரிகளை போக்தாக்களாய் உடையனாய் வைத்து -தனக்கு ஒரு குறை உடையனாய் அன்று -போக்தாக்கள் இல்லாமை அன்று –
ஷூ த்ரனாய் ஷூ த்ர விஷயங்களில் கால் கிடையிலே கிடந்த என்னை க்ரமேண அனுபவிப்பித்த மஹா உபகாரகனை
எல்லாப் பொருளும் விரித்தானை
அர்ஜுனனுக்கு சார்வார்த்தங்களையும் வீசாதீ கரித்தால் போலே யுக்த அயுக்தம் அறியாதே
சிஷ்யாஸ் தேஹம் சாதிமாம் த்வம் ப்ரபன்னம் -என்று அர்ஜுனனுக்கு ஆத்ம யாதாம்யா ஞான பூர்வகமாக கர்மத்தை உபதேசித்து
தத் சாத்தியமான ஞானத்தை உபதேசித்து உபய அனு க்ருஹீதையான பக்தியை உபதேசித்து அவன் அதன் அருமையைக் கண்டு
அஞ்சின அளவிலே என்னையே தஞ்சமாகப் பற்று என்று அருளிச் செய்தான் இறே
விரித்தானை
சுருதி சுத்தமான அர்த்தத்தை ஸ்ரீ கீதா முகத்தாலே உபதேசித்தான்
எம்மான் தன்னை
அர்ஜுனனுக்கு -உபதேஸித்தால் போலே தன் குண சேஷ்டிதங்களை எனக்கு சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பித்த மஹா உபகாரகனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி
பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று
சொல் மாலையைத் தொடுத்து ஏத்தி -மாற்றம் –சொல்
நாளும் மகிழ்வு எய்தினேன்;
நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் –
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்
தேவ மாத்ருகம் போலே காதாசித்கம் அன்றிக்கே பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஆகையால் நதீ மாத்ருகம் போலே நித்ய ஸித்தமாய் இருக்கும் இறே
இப்படி செய்கிற இடத்தில் பிரதிபந்தகங்கள் செய்தது என் என்ன
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–
பாபங்களும் பாப பலமான துக்கங்களும் சடக்கென தக்தமாய் போயிற்று
க்ரமத்தாலே போக்க வேண்டுவது ஸ்வ யத்னத்தால் போக்கும் அன்று இறே
வினை நோய்கள் கரியும்படி-மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்று அந்வயம்-

————————————————————————————————–

அடிமை செய்யப் பெற்றேன் -பிரதி பந்தகங்கள் போகப் பெற்றேன் என்றார் கீழ் –
உமக்கு இனி வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க -நான் பெறாதது உண்டோ என்கிறார் –

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-
திருக் கண்ணின் கரிய விழியினுடைய கறுத்த நிறத்தின் மேலே -காரியவாகிப் புடை பரந்து என்னக் கடவது இ றே –
வெளிய நீறு -அஞ்சன சூர்ணம் -ஆரார் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து -என்ன கடவது இ றே
சிறிதே இடும்-ஒப்பனைக்காக இட வேண்டாம் இ றே -மங்களார்த்தமாக அமையும்
பெரிய கோலத்
ஒப்பனை வேண்டாத படி -அழகு அளவிருந்து இருக்கிற படி
தடங்கண்ணன்
போக்தாக்கள் அளவு அன்றிக்கே போக்யத்தை இருக்கிற படி
அதவா –
கரிய மேனி -இத்யாதி
கறுத்த திரு நிறத்தால் வந்த அழகுக்கு மேலே அதுக்கு பரபாகமாக திருக் கண்களிலே அஞ்சனத்தை இடும் என்றுமாம்
கரி -என்று ஆனையாய்-ஆத்தாள் நினைக்கிறது குவலயா பீடமாய் -அது -அம் மேனியில் -அழகிய மேனியில் –
வெளிய கோபிக்க -நீறு சிறிதே இடும் -பொடியாகும் -பஸ்மாத்தாக்கும் -என்று ஒரு தமிழன் நிர்வாஹம்-
விண்ணோர் பெருமான் தன்னை
இக் கண் அழகுக்கு போக்தாக்கள் நித்ய ஸூ ரிகள் யாயிற்று
பெருமான் -த்ரிபாத் விபூதியாக அனுபவியா நின்றாலும் அநு பூத அம்சம் சுருங்கி அநு பாவ்ய அம்சம் விஞ்சி யாயிற்று இருப்பது –
உரிய சொல்லால்
இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே
இசைமாலைகள்
ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை
ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு
அரியது உண்டோ
நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ
எனக்கு
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான
அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு
இன்று தொட்டும் இனி என்றுமே?–
அடிமையை இழிந்த இன்று தொடங்கி-மேல் உள்ள காலம் எல்லாம் -அரியது இல்லை –
தீர்ப்பாரை யாம் இனி அடுத்து நிற்க இ றே -இவர் வார்த்தை சொல்லுகிறது
பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இ றே

—————————————————————————————————–

அரியது உண்டோ எனக்கு என்கிற பூர்த்தி உமக்கு உமக்கு எத்தாலே வந்தது -என்ன பகவத் கிருபையால் வந்தது -என்கிறார் –

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

என்றும் –
பரத்வத்தை ஆவிஷ்கரியாதே மனுஷ்யாதி மாத்ரமாய் வந்து அவதரித்து நின்ற இடத்திலும்
ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும்– தன் தனக்கு- இன்றி நின்றானை-
தன்னுடைய எல்லா படிகளுக்கும்-ஓத்தார் இல்லை என்கை அன்றிக்கே ஒரு வகையிலும் ஓத்தார் இல்லை
தன் தனக்கு
நீர்மையே ஸ்வரூபமான தனக்கு -ஆத்மாநம் நாதி வரத்தேதா
எல்லா உலகும் உடையான்றனைக்
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் –
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச்
முதன்மை கொண்டாடி ரஷ்ய வர்க்கத்தை நோவு பட விடுமோ என்னில்-
ஆபத்தே கைம்முதலாக –
ரஷிக்கும் இடத்தில் பரிகர நியதி இல்லை என்கை
இடையரும் பசுக்களும் தொலையும் படி இந்திரனும் பசியாக்ரஹத்தாலே வர்ஷிக்க ரஷித்தான்-தீ மழை இ றே –
பிரானை –
தென்றல் சந்திரன் தண்ணீர் போலே உபகரிக்கையே செல்லமாய் இருக்குமவன்
சொன் மாலைகள்
என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை -என்ன கடவது இ றே
நன்று சூட்டும்
அவ்விஷயத்தை விளாக் குலை கொண்டு பேச வல்லேன் ஆனேன் -அவன் விரும்பும்படி சொல்லப் பெற்றேன்
விதி எய்தினம்
விதி என்று பகவத் கிருபை -விதி சூழ்ந்ததால் -என்றது இ றே
என்னகுறை நமக்கே?–
ந-ஷமாமி க்கு இலக்காகாதே கிருபைக்கு விஷயமான நமக்கு ஒரு குறை உண்டோ
நமக்கு ஒரு குறை உண்டாகை யாகிறது கிருபையை பரிச்சின்னம் ஆக்குகை இ றே

—————————————————————————————————–

எம்பெருமானுக்கு தம் பக்கல் உண்டான சங்காதிசயத்தை அனுசந்தித்து இப்படி இருக்கிற
சர்வேஸ்வரனை கவி பாட வல்ல எனக்கு திரு நாட்டிலும் நிகர் இல்லை என்கிறார் –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

நமக்கும்
இன்று தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நமக்கும் –
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றார் இ றே
பூவின்மிசை நங்கைக்கும்
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாய்-ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய் இருந்துள்ளவளுக்கும்
புஷபத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருந்துள்ள ஸுகுமார்யத்தையும் போக்யத்தையும் உடையவள்
இத்தலை நிறைவு இன்றிக்கே இருக்கிறாய் போலே யாயிற்று அத்தலையில் குறைவற்று இருக்கிற படி
இன்பனை
ஸ்நேஹித்து இனியனாம் இடத்தில் முற்பட்டு இருப்பது நம் பக்கலிலே
த்வயி கிஞ்சித் சமாபன்னே-ஒருத்தருக்கு பிரஜைகள் பலரானால் அவிலக்ஷணர் பக்கலிலே இ றே -ஸ்நே ஹம் மிக்கு இருப்பது
ஞாலத்தார்-தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத்
இப்படி நெடு வாசி பட்ட விஷயங்களில் ஸ் நே ஹம் ஒத்து இருக்கைக்கு ஆதி சம்பந்தம் ஒத்து இருக்கை -என்கிறது –
தண் தாமரை-சுமக்கும் பாதப் பெருமானைச்
குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை
திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி
ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை
சொல்மாலைகள் சொல்லுமாறு-அமைக்க வல்லேற்கு
ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்
பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்
ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இ றே இருப்பது
இனியாவர் நிகர் அகல் வானத்தே?–
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்கிறவர்கள் தான் எனக்கு எதிரோ
த்ரிபாத் விபூதி என்னா-இங்கே இருந்து கவி சொல்ல வல்ல எனக்கு ஒத்தார்களோ
தெளி விசும்பு ஆகையால் அந்நிலம் தானே சொல்லுவிக்கும்
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இந்நிலம் அத்தை தவிர்ப்பிக்கும்
சீதனையே தொழுவார் விண்ணுளா ரிலும் சீரியர் என்ன கடவது இ றே

————————————————————————————————

அவனுடைய வ்யாபித்தியாவதாரங்களில் எங்கும் புக்கு கவி சொல்ல வல்லேன் என்று ஹ்ருஷ்டராகிறார் –
அங்குள்ளார் பரத்வத்தில் போக்யத்தையிலே கால் தாழ்ந்து இங்கு அறியார்கள் –
இங்குள்ள பராசர்ய பாராசார்யாதிகள் ஒரோ துறைகளில் மண்டி இருப்பார்கள்
இவர் அங்கண் அன்றியே இங்கோடு அங்கோடு வாசி அற பகவத் விஷயத்தில் புகை புக்க இடம் எங்கும் புக்கு
கவி சொல்லி அனுபவிக்க வல்லார் ஆகையால் என்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்-தானத்தும்
ஸ்வர்க்கத்திலும்-அதுக்கு உள்ளாய் பெரிதாய் இருக்கிற மஹர் லோகாதிகளிலும் -பூமியிலும் -கீழ் உண்டான பாதாளாதிகளிலும்
எண் திசையும் தவிராது நின்றான் தனை,
சர்வ தேசங்களிலும் உண்டான தேவாதி சகல பதார்த்தங்களிலும்
ஜாதி போலே வியக்தி தோறும் பரி சாமாப்ய வர்த்திக்கிறவனை
இத்தால் -அணு த்ரவ்யங்களிலும் விபுவான ஆகாசாதிகளிலும் வியாவ்ருத்தி சொல்கிறது –
அனுவுக்கு ஸர்வத்ர வியாப்தி இல்லை -விபு த்ரவ்யத்துக்கு நியன்தருதயா வியாப்தி இல்லை
கூனற் சங்கத் தடக்கை யவனை,
சங்கு சக்கர கதாதரனாய் கொண்டு ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாய் வந்து அவதரிக்கும் -ஜாதோ அஸி தேவ தேவேச –
கூனற் சங்கம் -ப்ராஞ்ஜலிம் ப்ரஹவா மாஸீநம் -என்ற இளைய பெருமாளை போலே -பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்தாலே ப்ரஹவீகரித்து இருக்கை-
குடமாடியை,
ஊரில் உள்ள எல்லாருக்கும் காட்சி கொடுக்கைக்காக குடமாடின படி
சேஷ்டிதங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்
வானக் கோனைக்
ஓர் ஊர் அளவன்றியிலே ஒரு நாட்டுக்காக காட்சி கொடுத்து கொண்டு இருக்கிற படி
கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–
இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-

——————————————————————————————————

அவன் சேஷ்டிதங்கள் அடங்க என் சொல்லுக்குள்ளே யாம்படி கவி பாட வல்லேனாய் ப்ராப்த விஷயத்திலே வாசிகமான
அடிமை செய்யப் பெற்ற அளவன்றிக்கே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹன் ஆனேன் -என்கிறார் –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
பிரளய ஆபத்தில் திருவயிற்றிலே வைத்து நோக்கியும்
திருவயிற்றிலே இருந்து நெருக்கு படாத படி வெளி நாடு காண உமிழ்ந்தும்
மஹா பாலி போல்வார் பருந்து இறாஞ்சினால் போலே பறித்துக் கொண்டால் எல்லை நடந்து மீட்டும்
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் அண்ட புத்தியில் செல்ல முழுகி எடுத்துக் கொண்டு ஏறியும்
பஹும் புஜக போகாய முபத்தாயாரி ஸூ தன-அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிசிஷ்ய மஹோததே -என்று கிடந்த கிடையிலே
லங்கை குடி வாங்கும் படியாக ஒரு கடல் ஒரு கடலோடேசீறி கிடந்தால் போலே கடற்கரையிலே கிடந்த படி
அவஷ்டப்யச்ச திஷ்டந்தம் ததர்ச தநு ரூர்ஜிதம்-என்று நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்
உடஜே ராம மாஸீனம் -என்று இருந்த இருப்பதால் –
ஷாத்ரமான ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பதால்-
மணம் கூடியும்-
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை–
பிரமாணம் கொண்டு அறிய வேண்டாதே-அநாத்யனுபவமே கொண்டு இவனது என்று அறியலாய் இருக்கை –
ஒருவன் ஒரு க்ஷேத்ரத்தை திருத்துவது எரு இடுவது க்ருஷி பண்ணுவது ஆகா நின்றால் இது இவனது என்று அறியலாம் இ றே
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு
திருவாய்மொழி பாடுகைக்கு பாக்யம் பண்ணினேன் –
வண்தமிழ்-ஆவது பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே ஸ்பஷ்டமாய் இருக்கை
சிர நிர்வ்ருத்தம் அப் யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம்
அடியார்க்கு இன்ப மாரியே.
ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ
இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று-
இன்ப மாரி-
இன்பத்தை உண்டாக்கும் மேகம்
இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன் –

—————————————————————————————————–

நிகமத்திலே இத்திருவாய்மொழி கற்றாரை பிராட்டி தானே தமக்கு பரமாகக் கொண்டு ஸமஸ்த துக்கங்களையும் போக்கும் என்கிறார் –

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே ஸ்ரமஹரமான திருமலையை உடைய சர்வேஸ்வரனை
நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் இன்பனை -என்று கொண்டு நித்ய அநபாயினியான பிராட்டிக்கு முன்னே
நித்ய சம்சாரிகளுக்கு முகம் கொடுக்கும் என்னும் சீலாவத்யைச் சொல்லிற்று ஆகையால்
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானை யாயிற்று கவி பாடிற்று
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
திருமலை மாரி மாறாதாப் போலே திரு நகரி வாரி மாறாதே இருக்கும்
இதற்கு அடி திரு நகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
சொன்ன அர்த்தத்தில் அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்த்யதிசயம் சொல்லுகிறது
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–
இத்திருவாய்மொழி கற்றார்க்கு-பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டியார் என்கிறது
திருமலை -மாரி மாறாது
திரு நகர் வாரி மாறாது
பிராட்டியுடைய ஆசன பத்மம் வேரி மாறாது -வேரி -பரிமளம்
இதுக்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என் என்னில்-தனக்கு முன்பே தான் காட்டிக் கொடுத்த சம்சாரியை விரும்பும் சீலமாயிற்று இதில் சொல்லிற்று
இந்த சீல குணம் ஒருவருக்கும் நிலம் அன்று -தான் அறிதல் -மயர்வற மதி நலம் அருள பெற்ற இவர் அறிதல் செய்யும் இத்தனை யாயிற்று
இப்பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார் என்னும் பிரசாத அதிசயத்தாலே -சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற தசையில் அவனை விலக்கி-
நானே இதுக்கு பலம் கொடுக்க வேணும் என்று தனக்கு பரமாக ஏறிட்டுக் கொண்டு பலம் கொடுக்கும் -என்று தனக்கு பரமாக ஏறிட்டுக் கொண்டு பலம் கொடுக்கும் –
வினை தீர்க்குமே-
இது திருவாய்மொழி கற்றார் உடைய பகவத் அனுபவ விரோதியான சகல பிரதிபந்தகங்களையும் போக்கும்
இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்தில் படியும் நடையும் என்கை –

—————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: