திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -4-4–

இப்படி பிறந்த பிரணயித்வ அனுசந்தான ஜெனித ப்ரீதி சாத்மிக்கைக்காக இவருடைய பிரகிருதி அறிந்து இருந்துள்ள
எம்பெருமான் இவரோட்டை கலவியை நெகிழா நிற்க
இப்படி பிரணயியான இவனை காணப் பெறாமையாலே பிச்சேறி ஏதேனும் ஒரு படியால்
அவனோடு சத்ருசமான பதார்த்தங்களையும் அவனோடு சம்பந்திகளான பதார்த்தங்களையும் கண்டு சிறிது தேறி
அவனைக் காணப் பெறாமையாலே வியாசனப் படா நின்ற ஆழ்வார் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசி அருளுகிறார் –

——————————————————————————————

வினவ வந்தவர்களுக்கு தன் மகள் படிகளை அறிவியா நின்று கொண்டு -இப்படி இவளை எம்பெருமான் பிச்சேற்றினான்
-இதுக்கு என் செய்கேன் -என்று திருத் தாயார் துக்கிக்கிறாள்-

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

பூமியை பலகாலும் ஸ்பர்சிக்கிறது ஸ்ரீ வாமனன் அளந்த மண் -என்னும் ஆதரத்தாலே என்று கருத்து
நாம சமயத்தாலே ஆகாசத்தை தொழுது அவன் நிரந்தர வாசம் பண்ணுகிற வைகுந்தம் என்று சொல்லப் புக்கு
பல ஹானியாலே மாட்டாது ஒளிந்து ஹஸ்த சேஷ்டையாலே காட்டா நிற்கும் –
திரு நாட்டிலே அவன் இருக்கிற படியை காணப் பெறாமையாலே கண்ணீர் மல்கும் படி நின்று தன் ஆற்றாமையால்
ஸ்ரமஹரமான திரு நிறத்தை நினைத்து -கடல் வண்ணன் -என்னும் –
அன்னே -செயல் அறுதியாலே சொல்லும் சொல் -மன்னே-என்ற போதும் இதுவே பொருள்
பெய் வளையீரே-உங்களை போலே கையும் வளையுமாய் இருக்க இவளைக் காண வல்லனே -என்று கருத்து –

————————————————————————————————————–

அப்ராக்ருத ரூபை யான இவள் செய்கின்றன ஒன்றும் தெரிகிறது இல்லை என்கிறாள் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

கடல் வண்ணன் என்று அனுசந்திக்கையாலே பூரித்த வளைகளை உடைத்தான கைகளை
உபகார சீலன்
ஆதித்யனும் பிரபையையும் சேர்ந்து இருக்கிற படியைக் கண்டு இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டையாம் –
பெரிய பிராட்டியார் சந்நிஹிதையாய் இருக்கச் செய்தே நான் அவனை பெறாது ஒழிவதே என்று சிதிலையாம்
அந்த சைத்திலயத்தாலே கண்ணீர் மல்க நின்று தன்னுடைய தாரண அர்த்தமாக தன்னோடு அவனுக்கு
உண்டான சம்பந்தத்தை நினைத்து நாராயணன் என்னும் –

—————————————————————————————————–

இவளுடைய அதி ப்ரவ்ருத்திகளை சொல்ல என்று புக்கு அவற்றுக்கு எண்ணில்லை என்கிறாள் –

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
மந்த்ராதிகளால் பிரதிபத்த சக்திகம் அன்று என்று அறியப் படுகிற செந்தீயை உஜ்ஜ்வல்யத்தாலே எம்பெருமானாகக் கருதி தழுவி
நாம் மங்காத படி வந்து சந்நிஹிதன் ஆனான் என்று சொல்லா நின்று கொண்டு அதக்தகாத்ரை யாம்
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
இனிதாக வீசும் காற்றை பசு மேய்த்து தன்னோடே சம்ச்லேஷிக்க வருகிற கிருஷ்ணனாகக் கொண்டு தழுவி
ப்ரீதி உள் அடங்காமையாலே என்னுடைய கோவிந்தன் என்னா நின்றாள்
வெறி கொள் துழாய் மலர் நாறும்-
உடம்பு எல்லாம் அதி பரிமளமான திருத் துழாய் நாறா நிற்கும் –
வினையுடை யாட்டியேன் பெற்ற
இவளை இங்கனே காண்கைக்கு ஈடான பாபத்தை பண்ணி என் வயிற்றிலே பிறந்த
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே
விஸ்லேஷ வியஸனத்தில் புதியது உண்ணாதவள் என்றும் தான் படா நின்றாள் என்றுமாம் –

———————————————————————————————-

வியஸன சஹை அன்றிக்கே இருக்கிற இவளை இப்படி நோவு படுத்தினான் என்று க்கேதிக்கிறாள்-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

பூர்ண சந்த்ரனைக் காட்டி இவன் ஸ்ரமஹரமான நிறத்தை உடைய எம்பெருமானே என்னா நின்றாள் –
நின்றதொரு மலையைப் பார்த்து சகல லோகங்களையும் அளக்கைக்கு வளர்ந்து அருளினை எம்பெருமானே
என்றே கொண்டு என் ஆர்த்தி தீர வாராய் என்று அழைக்கும் –
சாபராதனாய் கிட்ட வர அஞ்சி நிற்கிறவனாகக் கொண்டு உன்னுடைய ஸ்நேஹ அதிசயம் அறியோமோ –
வாராய் என்று ஷேப பூர்வமாக அழைக்கும் என்றுமாம் –
அபேக்ஷிதமான தசையில் வர்ஷிக்கும் மேகத்தை கண்டால் மயில்கள் நின்று ஆலுமா போலே -நாராயணன் வந்தான் என்று ஸம்ப்ரமியா நிற்கும்
துக்க அனுபவத்துக்கு பாத்தம் இல்லாத என் மகளை சொன்ன இப்படியே பிச்சேறப் பண்ணினான்
அதி பாலையாய் இருக்கும் இவளை என்று இப்பாடு படுத்தினான் என்றுமாம் –

—————————————————————————————————

இவளுக்கு இவ்வவசாதம் எவ்வளவாய் முடியக் கடவது என்று அறிகிறிலேன்-என்கிறாள்

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

ஸூ குமாரமான ஆன் கன்றுகளைத் தழுவி ஹ்ருஷ்டையாய் -இவற்றுக்கு இப் புஷ்கல்யம் உண்டாயிற்று கிருஷ்ணன் மேய்க்கையாலே என்னா நின்றாள் –
போகிறதோர் இளம் பாம்பை தொடர்ந்து இது அவன் படுக்கை என்னா நின்றாள்
இவ்வவஸ்தை ஆபன்னையாக இவளைக் காண்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நான் பெற்ற ஸூகுமாரையான
என் பெண் பிள்ளையை தன் பிரணயித்வத்தைக் காட்டி பிச்சேற்றி அடிக்கிற ஆட்டம் –

——————————————————————————————————

தன் மகளுடைய பிச்சுக்கு நிதானம் இன்னது என்கிறாள் –

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

குடகு கூத்தாடுவாரைக் காணில் கோவிந்தன் என்றே காணுவோம் என்று ஓடும்
நேர்பட்ட குழல் ஓசை கேட்க்கில் ஒருவன் குழலூதும் படியே என்று எம்பெருமானாகக் கொண்டு மோஹிக்கும்
இடைச்சிகள் கையில் வெண்ணெய் கள் காணில் -அவன் அமுது செய்த வெண்ணெய்யோடு சஜாதீயம் என்று விரும்பும்
பூதனையை முலை உண்கிறானாய் முடித்த உபகாரம் நிமித்தமாக -அத்யந்த விலக்ஷணை யான என் மகள் ஏறின பிச்சுக்கள் இவை

——————————————————————————————————–

தேறின போதோடு-தேறாத போதோடு வாசி இன்றிக்கே எப்போதும் -அவன் திறம் அல்லது அறிகிறிலள் -என்கிறாள்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

பிச்சேறி இருந்து வைத்தே இஜ் ஜகத்து எல்லாம் கிருஷ்ணனால் ஸ்ருஷ்டம் ஆயிற்று என்று தத் சம்பந்த நிபந்தனமாக விரும்பிச் செல்லா நிற்கும் –
பஸ்மத்தைக் கொண்டு மேல் நோக்கி இடிலும் கலக்கத்தின் மிகுதியால் ஸ்ரீ வைஷ்ணவர்களாகக் கொண்டு அவர்கள் நின்ற இடம் ஏற ஓடா நிற்கும் –
இத்திரு -பெரிய பிராட்டியாரோடு விகல்ப்பிக்கலாம் ஸ்வபாவையான இவள் –

——————————————————————————————————-

அத்யந்தம் துர்த்தசை வர்த்தியா நின்றாலும் இவள் தத் ஏக பரையாய் இருக்கும் என்கிறாள் –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

ஸ்ரீ மான்களான ராஜாக்களைக் காணில் -ஸ்ரீ யபதியைக் கண்டேனே -என்று த்ருத்தையாம்-
காயம் பூ முதலான பதார்த்தங்களுடைய நல்ல நிறங்களைக் கண்டால் -இச் செவ்வி உள்ளது திரு உலகு அளந்து அருளின
எம்பெருமானுக்கு என்றே அத்யவசித்து ப்ரீதியாலே சம்பிரமிக்கும்
ப்ரதிமாவத்தான தேவாலயங்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும்
பந்துக்களைக் கண்டு அஞ்சும் திசையிலும் மோஹித்த திசையிலும் அகப்பட நிரந்தரமாக கிருஷ்ணனுடைய திருவடிகளை விரும்பா நிற்கும்

———————————————————————————————————–

பெறுதற்கு அரியளான இப் பெண் பிள்ளையை இவ்வளவு அன்றிக்கே நோவு படுத்தா நின்றான் -என்கிறாள்

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

பகவத் பிராவண்யராய்-இதர விஷயங்களில் நிரபேஷராய் இருக்கும் பகவான்களைக் காணில் அவர்களை ஆதரித்து அவர்களுடைய
நைர பேஷ்யத்தாலே-ஜகத்தினுடைய பிரளய ஆபத்தை தீர்த்து நிரப்பரான எம்பெருமானே என்னா நிற்கும்
கறுத்து பெருத்து இருக்கும் மேகங்களைக் காணில் எம்பெருமானே என்று நினைத்து ஹர்ஷ ப்ரகரஷத்தாலே
அங்கே செல்ல பறப்பாரைப் போலே அலமரா நிற்கும்
சமகரமாய்த் தர்ச நீயமான பசு நிரையைக் காணில் ஆஸ்ரித அனுக்ரஹ பரனான கிருஷ்ணனும் உடனே
எழுந்து அருளுகிறான் என்று அதன் பின்னே செல்லும் –
பெறுதற்கு அரிய பெண்ணினைத் தன்னுடைய பிரணயித்வாதி கல்யாண குணங்களைக் காட்டி
பிரலாபித்து மோஹிக்கும் படியாக பண்ணா நின்றான்

———————————————————————————————————–

ஸ்மாராக பதார்த்த அனுசந்தான ஷமம் அல்லாத படியான வியஸநாதி அதிசயத்தாலே தன் பெண் பிள்ளைக்கு பிறந்த
விக்ருதிகளைச் சொல்லி -நான் என் செய்கேன் -என்கிறாள் –

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

சிந்தா வியாபாரம் இன்றிக்கே இருக்கும்
அதுக்கு மேலே காற்று அடிக்கிலும் அவன் வந்தானாகக் கொண்டு சுற்றும் சாதாரமாக நோக்கும்
அங்கு காணாமையாலே பிரதம பரிஸ்பந்தம் தொடங்கி காணலாம் படி பெரும் பரப்பாகக் கொண்டு
அவன் இருக்க சம்பாவனை உள்ள தேசத்து அளவும் தூர நோக்கும் –
அங்கே காணா விட்டவாறே -நான் இப்படி நோவு படா நிற்க வாராது ஒழிவதே -என்று குபிதையாய் வேர்க்கும்
கோபமும் ஆறி சோகத்தால் அழும்
அதுவும் போய் செயல் அற்று மூச்செறியும்
பின்னையும் மிகவும் மயங்கி பரவச காத்ரையாம்
பின்னையும் உணர்ந்து தன் ஆற்றாமையால் கிருஷ்ணா என்று சொல்லும்
இவ் வழியே பிறந்த அனுசந்தான பிரகர்ஷத்தாலே உண்டான உரு வெளிப் பாட்டாலே அவன் வந்தானாகக் கொண்டு
அவனை சம்போதித்து வரலாகாதோ என்று அழைக்கும் –
இப்படி தான் மதி கெடுகைக்கு ஈடான அதி ஸ்நேஹத்தை பண்ணி ஹிதம் சொன்னால் கேட்க்கும் பருவம் இன்றிக்கே இருக்கிற
என்னுடைய பாலைக்கு மஹா பாபியான நான் செய்வது ஒன்றும் காண்கிறிலேன் –

———————————————————————————————–

நிகமத்தில் இத் திருவாய் மொழி சம்சார துரிதம் நீங்கி பகவத் விஸ்லேஷ கந்தம் இல்லாத திரு நாட்டிலே
எல்லாரும் சிரஸா வஹிக்கும் படி பெரு விடாயோடே இருப்பார் என்கிறார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

ஆஸ்ரிதருடைய துக்க உபாதோதன ஸ்வ பாவனான கிருஷ்ணனை ஆழ்வார் குண பலாத்காரத்தாலே அருளிச் செய்த
ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திரு வாய்மொழி ஸ்நேஹம் இல்லையே யாகிலும் நன்று என்றாகிலும் கற்பார்-

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: