கீழ் மோஹங்கதையான பிராட்டி -சிரேண சம்ஜ்ஞாம் ப்ரதி லப்ய-என்று காலம் உணர்த்த உணர்ந்து -அநந்தரம்
அவனைக் காணப் பெறாமையாலே -அவனைக் கண்டு அல்லது தரிக்க மாட்டாத தசை பிறந்து -பந்துக்களையும் தன்னுடைய லீலா பரிகரங்களையும்
பொகட்டுத் தன் மரியாதைகளையும் அதி லங்கித்து தனி வழியே திருக் கோளூர் ஏறப் போனாள் –
திருத் தாயார் வளை இழந்தாள் நிறம் இழந்தாள் -என்று கூப்பிட்டு சோக நித்ரா விஷடையாய்க் கிடந்தவள் உணர்ந்து
-இவளைத் தன் மாளிகையில் காணாமையாலே எங்கே போனாள் என்று விசாரித்து இங்கு இருந்த போதும் அவனையே போது போக்கி
இருக்கக் காண்கையாலே-திருக் கோளூரிலே போனாள் -என்று நிச்சயித்து -ம்ருது பிரக்ருதியாய் அதின் மேலே விரஹ தூர்பலையாய் இருக்கிற இவள்
-அவ் வூர் தனி வழியே எங்கனம் போகிறாள் -சென்றால் தான் அவ் வூரையும் அவனையும் கண்டு எங்கனே உடை குலையப் படுகிறாள் என்று
தன் மகள் அவசாதத்தாலும் -தான் அவளை பிரிகையாலும் மிகவும் நோவு பட்டுக் கூப்பிடுகிறாள் -இங்குப் பொருந்தாமையும்
-அங்குப் புக்கு அல்லது தரிக்க மாட்டாமையும் தனி வழியே போகையும்-பழிக்கு அஞ்சாமையும் –
இவை இ றே கீழில் திருவாய் மொழியில் காட்டில் இதுக்கு ஏற்றம் -அவனைப் பார்த்து இலள்-தன்னைப் பார்த்து இலள்
–என்னைப் பார்த்து இலள் -தனி வழியே போய் இத்தை எல்லாம் கடலிலே கவிழ்த்தாள் என்கிறாள் –
அல்ப சராசரங்கள் இவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் என்று சப் தாதி விஷயங்களில் கை கழிய போந்தேன் என்றவர்
-பகவத் விஷயத்தில் கை கழிய போனபடி சொல்லுகிறது -நித்ய சித்தருடைய யாத்திரை சம்சாரத்தில் இவர்க்குப் பிறந்த படி சொல்லுகிறது –
——————————————————————-
தன் மகள் ஆகையாலும் அவள் தன் ஸ்வ பாவத்தாலும் இவள் இங்கு நின்று போய்ப் புகுமூர் திருக் கோளூர் என்று அத்யவசிக்கிறாள் –
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்-கண்ணன்எம் பெருமான்
ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது
என்றென்றே கண்கள் நீர்மல்கி-
இடைவிடாமல் இப்படியே சொல்லி -அவளைக் காணப் பெறாமையாலே கண்கள் சோகா ஸ்ருவாலே நிரம்பி -அவ்விஷயத்தை இடைவிடாமல் அனுசந்தித்து -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்கிறபடியே ஆனந்தா ஸ்ருவாலே நிரம்பி என்னவுமாம் –
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணை யாகையாலே விண்ணில் போகாள் என்று இருக்கிறாள் –சீர் -என்கிறது ஸுசீல்யாதிகளை-அவை ஸ் புடமாக அனுபவிக்க லாவது இங்கேயே –பரமபதத்தில் குண ஸத்பாவம் இ றே உள்ளது -வ ளம் மிக்கவன்-சம்பன்னமானவன் -ப்ரணய தாரையிலே விதக்தனானவன்
ஊர்-பரமபதம் கலவிருக்கை என்னும் படி விரும்பி வர்த்திக்கும் நத்தம் இது –வினவி –வழி க்கு பாதேயம் இருக்கும் படி -திருக் கோளூர் எங்கே என்னவும் –இங்கே என்னவும் இங்கேயோ என்று அனுபாஷிக்கையும் -இது இ றே வழி க்கு தாரகம்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் வயிற்றில் பிறப்பாலும்-இவள் படியாலும் இவள் புகுமூர் திருக் கோளூரே –இது ஸூ நிச்சிதம்
மரு பூமியிலே தண்ணீர் போலே இ றே சம்சாரத்தில் திருக் கோளூர்-
———————————————————————-
திருக் கோளூரிலே புக்க என் பெண் பிள்ளை மீள வருமோ -சொல்லி கோள் என்று பூவைகளை திருத் தாயார் கேட்க்கிறாள் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –
தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இ றே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் -அரவிந்த லோசனன் என்றும் -மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை -ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –
கற்பு வான் இடறி-வானான கற்பை இடறி -வலிதான மரியாதையை மதியாதே என்னுதல் -வலிய அறிவை என்னுதல் -கடக்க அரிதான மரியாதையை த்ருணம் போலே அதி லங்கித்து
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே-போருங்கொல் உரையீர் –
தகுதியான நல்ல சம்பத்தையும் நீர் நிலங்களையும் யுடைய திருக் கோளூருக்கே புகுருமோ -தன் மனஸ் ஸூ முற்பட்டு நிற்கையாலே வந்து புகுர வல்லளோ-என்கிறாள் -திருக் கோளூருக்கே புக்கவள் மீளுமோ என்றுமாம்
கொடியேன் -இவளை பெறுகைக்கு பாக்யத்தை பண்ணி வைத்து தனியே புறப்பட்டு போன இவள் அளவு உங்களைக் கேட்டு அறிய வேண்டும்படி பாபத்தைப் பண்ணினேன்
கொடி பூவைகளே –உபக்னத்தை ஒழிய தரியாத தசை -அவ் வூரில் புக்கு அல்லது தரிக்க மாட்டாள் என்கை –பூவைகளே உரையீர் –சொல்லாது ஒழி கைக்கு பெற்ற குற்றம் இல்லையே உங்களுக்கு -நான் ஹிதம் சொல்லுகையாலே மறைத்தாள் ஆகிலும் -இன்ன இடத்துக்கு போகிறேன் என்றும் -அங்குப் போனால் செய்யுமவையும் உங்களுக்கு சொல்லிப் போகக் கூடும் இ றே -சொல்லி கோள் -அறிவித்து போனாள் ஆகில் ராமாவதாரத்தில் போலே லோகமாகப் பின் தொடரும் இ றே-
———————————————————————
திருக் கோளூர் ப்ரத்யாஸன்னம் ஆனால் எங்கனே உடை படக் கடவள்-என்கிறாள் –
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-
பூவை -கிளியிலே அவாந்தர பேதம்
பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்-பச்சைக் கிளி பூம் புட்டில்கள்-தன்னுடைய லீலா உபகரணங்களான
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்-
யாவையாலும் பிறக்கும் ரசம் எல்லாம் அவனுடைய திரு நாமத்தால் பிறக்குமாயிற்று இவளுக்கு -அவனுடைய லீலா உபகரணங்களோ பாதியும் போருமாயிற்று இவளுடைய லீலா உபகரணங்களும் -பகவான் நாமங்களை சொல்லி உஜ்ஜீவிக்கும் –திரு நாமச் சுவடு அறிந்த பின்பு லீலா உபகரண தர்சனம் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் போலே அஸஹ்யமாய் இருக்கும் -இவளுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்களாய் இருக்கும் -இந்த லீலா உபகரணங்கள் திரு நாமத்தை சொல்லிற்று ஆனாலோ என்ன -என்று பெற்றி கேட்க -பந்து தூதை பூம் புட்டிகளால் ஏறாது என்று பிள்ளை பரிஹரித்தார் -அவற்றைத் திரு நாமத்தை சொல்லி அழைத்தால் ஆனாலோ என்னில் அது -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறதுக்குச் சேராது –
திருமால் -இவள் திரு நாமம் சொல்லும் போது த்வயத்தில் படியே ஸ்ரீ மன் நாராயணன் என்று ஆயிற்று சொல்லுவது
என் பாவை -நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –
போய்இனித்-லீலா உபகரண ரசமும் திரு நாம மேயான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்
தண்பழனத் திருக்கோளூர்க்கே-ஸ்ரமஹரமான நீர் நிலங்களை உடைய ஊர்
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–கலக்கிற போது தானே மேல் விழுந்து கலக்கிற படியும் -பிரியேன் பிரிவில் தரியேன் -என்று கலந்த படியும் -பிரிந்த படியும் -வரவு தாழ்த்த படியும் -தனி வழியே தாம் செல்ல இருந்த படியும் -சென்ற பின்பு -ஹ்ரீரேஷா ஹி மமாதுலா -என்று லஜ்ஜாவிஷ்டனாய் காலைப் பிடியாது ஒழிந்த படியும் -இவற்றை நினைத்து கோவைப் பழம் போலே இருக்கிற அதரம் துடிக்க மிக்க நீரை உடைய கண்ணோடு என் படுகிறாளோ -தனி வழியே போனாள் -நான் கூடப் போகப் பெற்றிலேன் என்கிறாள் –
——————————————————————–
இவளை நாட்டார் குண ஹீனை என்பார்களோ குணாதிகை என்று கொண்டாடுவார்களோ என்கிறாள் –
கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-
கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
கொல்லை -வரம்பு அழிந்த நிலம் -அவன் தானே வர இருக்கக் கடவ மரியாதையை அழித்துப் போனார்களோ என்பார்கள் -குணாதிக விஷயத்துக்கு போரும்படி செய்தாள் என்று கொண்டாடுவார்களோ -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிற வசனத்தை பார்த்து கர்ஹிப்பார்களோ -இவளுடைய ருசி விஷயத்துக்கு அனுரூபமாய் இருந்தது என்பார்களோ விதியைப் பார்த்து கர்ஹிப்பார்களோ -காம வசனத்தைப் பார்த்து நன்று என்பார்களோ -ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்த்தி -விரக்தரான நீர் காம பரவசரான எங்களை என் படுத்துகிறீர் என்றாள் இ றே-தாரை இளைய பெருமாளை -ஸ்வரூபத்தை பார்த்து கர்ஹிப்பார்களோ -விஷயத்தை பார்த்து உகப்பார்களோ –
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும்
சிலுகு வாரிகளான நம் சேரியில் உள்ளாரும் -அயல் சேரியான அந்நிய ஸ்த்ரீகளும் -வசன பரரானவர்களும் -அவர்களுக்கு உடல் அன்றியே -இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ -என்னும் ப்ரேமார்த்த சித்தரும்
எல்லே!-என்னே என்று ஆச்சர்யம் ஆதல் -சொல்லுகிறவர்களைக் குறித்து சம்போதானம் ஆதல் –
செல்வம் மல்கி-இவர்கள் சொல்லிற்று சொல்லுகிறார்கள் என்று அவள் செய்வது செய்தாள் -சம்பத்தானது கரை புரண்டு வரும்படியான தேசம்
அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-தன் பெருமையைப் பாராதே ஆர்த்த ரக்ஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற தேசம் –மெல்லிடை நுடங்க-இவளும் தன் ஸ்வரூபத்தை அறிந்திலள் தன் இடையை அறிந்தாள் ஆகில் போக்கிலே ஒருப்படுமோ-மிருதுவான இடை துவள –இளமான் -முக்தையான பெண் -தன் மார்த்வத்தையும் -வழியில் அருமையையும் -அவன் ஸ்வரூபத்தையும் அறிய மாட்டாத மௌக்த்யம்
செல்ல மேவினளே.–இவள் போக்கிலே ஒருப்பட்டாள் -கொல்லை என்பர் கொலோ –
—————————————————————-
திருக் கோளூருக்கு அணித்தான திருச் சோலையையும் அங்கு உள்ள பொய்கை களையும்-அவன் கோயிலையும் கண்டால் எங்கனே உகக்குமோ என்கிறாள்-
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்
அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே நெஞ்சை வைத்து -நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று சிதிலை யாகா நின்றாள் –
பருவத்துக்கு அனுரூபமான வியாபாரத்தை விட்டாள்-மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே அத்தலையைப் பற்றி யாயிற்று இதில் உள்ளவற்றை விட்டது
என்சிறுத்தேவி-த்யாஜ்ய உபாதேய விபாகம் -பருவம் நிரம்பாத அளவிலே கிடீர் உண்டாயிற்று -பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-என்கிறபடியே பருவம் நிரம்பாது இருக்க பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கிற படி
போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே என்றுமாம் –
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
நித்ய வசந்தமான பொழிலும் -அதுக்கு உள்ளாக பரப்பு மாறப் பூத்த தடாகங்களும் -அதுக்கு உள்ளாக அவன் கோயிலும் கண்டு -இங்கே இருந்து அனுசந்தித்து நோவு பட்டவள் காணப் பெருகிறாளே
ஆவிஉள் குளிர-கமர் பிளந்த ஹிருதயம் மறு நனையும் படி
எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–எங்கனே பிரிய படுகிறாளோ -இங்கே இருந்து நினைத்துப் பட்ட கிலேசத்தை கண்ட நான் அந்த அனுபவ ப்ரீதி காணப் பெற்றிலேன் இன்றே -எனக்கு அவளை பிரிந்த சோகமே யாய்ச செல்லுகிறது -அவளுக்கு நல்விதிவாய் ப்ரீதியோடே செல்லுகிறது இ றே –
———————————————————-
அவனுடைய ஸ்நேஹ பஹு மான வீஷீதாதிகளைக் கண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிதிலை யாகக் கடவள் ஆகாதே என்கிறாள் –
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-
இன்று எனக்கு உதவாது அகன்ற
தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் -இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்
இளமான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்
இனிப்போய்த்-பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இ றே ப்ராவண்யத்துக்கு எல்லை
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
தெற்குத் திக்குக்கு திலதமான திருக் கோளூரிலே சென்று -பல ஹானியாலே போய்ப் புகுகையில் உண்டான அருமையை சொல்லுகிறது –
சென்று தன் திருமால் -பிதா மாதா ச மாதவ -என்று நிருபாதிக பந்தத்தைக் காட்டி யாயிற்று சோபாதிக பந்தத்தை அறுத்தது
திருக்கண்ணும் -நெடு நாள் பிரிந்து விட்ட விடாய் தீர பஹு மானம் தோற்ற நோக்கும் கண் –
செவ்வாயும்-சாபராதன் ஆனேன் என்று தாழ்வு தோற்ற சொல்லும் அதரமும்
கண்டு-நோ பஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -என்னும் விஷயத்தை இ றே கண்டது
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–
ப்ரீதி பிரகர்ஷத்தாலே காணக் காண சிதிலை யாகா நின்றாள் இ றே -கண்களின் பரப்பு அடங்கலும் ஆனந்த ஸ் ருவாலே பூர்ணம் ஆகிறது இ றே-
———————————————————–
இவள் பிரகிருதி மார்த்வத்தையும் -பிரிவால் வந்த சைத்திலயத்தையும் அனுசந்தித்து இவை எல்லாம் அவ்வளவு செல்ல போக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் –
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்-அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத்து -பகவத் குண ஸ்ம்ருதியாலே நீர் மல்கின கண்களையும் -அனுசந்திக்க ஒண்ணாத படி அறிவு கெட்ட மனசையும் உடையளாய் -உள்ளும் புறமும் ஓக்க இருண்டு கிடக்க-எங்கனே போம்படி -கண்ண நீரால் பதார்த்த தர்சனம் இல்லை -திகப்ரம்மம் உண்டாம்படி அகவாய் இருந்தது -நல்ல இரவும் நல்ல பகலும் -மனஸ் சஹகாரமும் இன்றிக்கே இருக்க -அதிவ்யாமுக்தனே என்று கூப்பிடா நின்றாள் -இழவிலும் அவ்விஷயத்தையே சொல்லி கூப்பிடுகையாலே சிலாக்யமான காலம் என்கிறாள் -தன் வ்யாமோஹத்தை காட்டி இ றே இவளை அலவலை யாக்கிற்று
இனிப்போய்ச்-அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் -யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இ றே போயிற்று
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஐஸ்வர்யம் மினுங்க அவன் கிடந்த தேசம் -ஸ்ரீ மான் ஸூ க ஸூ ப்த பரந்தப -என்ற கிடை அழகு காண வாயிற்று இவள் போயிற்று -கிடந்ததோர் கிடக்கை என்ன கடவது இ றே -சாய்ந்த போது யாயிற்று அழகு மிக்கு இருப்பது
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–
ஒடுங்கி ஒடுங்கி -ஓர் அடி இடும் போது நடுவே பலகால் இளைப்பாற வேண்டும்படி இருக்கை -துவண்டு எங்கனே போடப் புக்க கடவள்-
———————————————————-
திருக் கோளூரிலே சங்கத்தால் என்னை பொகட்டுப் போனவள் அஸ் சங்கமே துணையாக அங்கே போய் புக வல்லளோ -என்கிறாள் –
ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-
ஒசிந்த நுண்ணிடைமேல்-தொட்டார் மேல் தோஷமான நொய்ம்மை -அதுக்கு மேலே ஸ்தான பாரத்தால் வந்த துவட்சி-அதின் மேலே
கையை வைத்து நொந்துநொந்து-ஸ் ராந்தியாலே இடையிலே கையை வைத்தாள்-அது பொறாமையால் ஸ்ராந்தி ஹேது வாயிற்று -மிகவும் அவசன்னையாய் பல ஹானியை பரிஹரிக்கைக்காக விளைவது அறியாதே செய்தாள் -அத்தாலே பலஹானியை விளைத்தாளாய் விட்டது -நெஞ்சிலே பல ஹானி இறுக்கியபடி
கண்ணநீர் துளும்பச் -நெஞ்சை நோவு படுத்துகிற வகை இருக்கிற படி
செல்லுங்கொல்?-அங்கே போய் புக வல்ல ளோ –
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன-வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளை கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இ றே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது
திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்-திருக் கோளூரிலே சங்கத்தை பண்ணின நெஞ்சை உடையவளாய் –
எம்மை நீத்தஎம் காரிகையே.–என்னைப் பொகட்டுப் போன -என் பிள்ளை தன்னை சன்யசித்துப் போன பின்பும் தன் சாபலத்தாலே ஒரு தலை விடாது ஒழிகிறாள்
கசிந்த நெஞ்சினளாய் –எம்மை நீத்த எம் காரிகை –கசிந்த நெஞ்சினளாய் சொல்லுங்கோள்-அங்குத்தை சங்கம் என்னோட்டை உறவு அறுக்கும் அத்தனையோ -அங்கே கொடு போகவும் வற்றோ –
————————————————————–
எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்-
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –
ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்
இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப்போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
சேரியில் உள்ளார் பழிகளை சொல்லி கடல் கிளர்ந்தால் போலே கோஷிக்க -போக நினைத்தாள் -புறப்பட்டாள் -தனி வழியே போனாள் -தாயைப் பொகட்டு போனாள் -குலத்தை பார்த்திலள் -அவனைப் பார்த்திலள் -என்றால் போலே பல பழிகள் –
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–
திருக் கோளூரிலே போகையாலே போனாள் என்னாதே-நடந்தாள் என்கிறாள் -வயிற்றில் பிறந்தாரே யாகிலும் பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றால்கௌரவித்து வார்த்தை சொல்ல வேணும் என்கை -வழித்துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் -குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-
———————————————————————
குடிக்கு வரும் பெரும் பழியைப் பாராதே திருக் கோளூரிலே புக்கு அவனை ஒரு காலும் விடுகின்றிலள் என்கிறாள் –
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
புகுந்த விருத்தாந்தத்தை நினைக்கில் ஆழம் காலாய் இரா நின்றது -தன்னோடு ஓக்க உறங்காமையாலே தெய்வங்களைக் கூட்டிக் கொள்கிறாள்
நெடுங்கண்– போக்தாக்கள் அளவில்லாத கண் –இளமான்-தன் கையில் பிரஹ்மாஸ்திரம் என்று அறியாத பருவம்
இனிப்போய்-சர்ப்ப யாகத்தில் போலே அவன் தான் வந்து விழும் படியான கண்ணைப் படைத்த இவள் -தான் போகை மிகை என்கை –
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை -இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் -அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
க்ஷண காலமும் விடாள்-இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே -அங்கு அனுபவிக்கப் புக்கால் பிரியேன் என்னவும் நெஞ்சை விட்டுக் கொடாள்-அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-புகுகையில் ஒருப்பட்டாள் -என்னுதல் -நாசா புனராவர்த்ததே என்று தான் மீளாத படி புகுகையாலே நாம் அங்கே செல்லும்படி வைத்தாள் என்னுதல் –
குடிக்கு வரும் வலிய பழியையும் நினைக்கிறிலள் -இவள் போய் அவனைப் பெறுகை குடிக்கு நிலை நின்ற பழி என்று இருக்கிறாள் –
—————————————————————–
நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார் –
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-
உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிராசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு
கொத்தலர் – நித்ய வசந்தமான திரு நகரி -விரஹத்தை அனுசந்திக்க ஷமம் இல்லாதபடி அவன் பக்கலிலே ஏகாக்ர சித்தர் ஆகையால் பிறந்த தேற்றத்தாலே ஊருக்கு பிறந்த ஸம்ருத்தி
பத்து நூற்றுள் இப்பத்து– கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே –
அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே நெஞ்சை வைத்து சொல்லுமவர்கள்
திகழ் பொன்னுல காள்வாரே.– தனி வழியே போனாள் என்று கரைய வேண்டாத படி -அர்ச்சிராதி கணம் வழி நடத்த பரமபதத்தில் புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –
———————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-