இதர புருஷார்த்தங்கள் அடைய தோஷ அனுசந்தான பூர்வகமாக பகவத் வைலக்ஷண்ய அனுசந்தானத்தைப் பண்ணி
பரமபோக்யமான எம்பெருமானோடே கலந்து பரிமாற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே கலங்கி – முடியானே -யில்
பிறந்த விடாய் ரசாந்தரங்களால் அபிபூதமானது தலை எடுத்து அதுக்கு மேலே தேச காலங்களினாலே விபக்ருஷ்டமான
அவன் படிகளையும் காண வேணும் என்னும் அபிநிவேசம் மிகப் படர்ந்து நினைத்தபடி கிடையாமையாலே
அப்ரக்ருதிங்கதராய் தம்முடைய தசையைக் கண்டு பந்துக்கள் சோகிக்கிற படியை –
எம்பெருமானை ஆசைப் பட்டு பெறாதே நோவு படுகிறாள் ஒரு பிராட்டியுடைய திருத் தாயார் பேச்சாலே அவனுக்கு விண்ணப்பம் செய்கிறார் –
————————————————————————————————-
வடதளி சாயியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் சாத்தின திருத் துழாயை இப்போதே பெற வேணும்
என்று ஆசைப்படா நின்றாள் என்று திருத் தாயார் சோகிக்கிறாள்-
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
பரிவின்றி -நோவின்றிக்கே
அன்னவசம் செய்கை-இடம் வளம் கொள்ளுகை
மாலுமால் -மயங்கா நின்றாள்
வல்வினை என்கிறது -இவள் இங்கண் துர்கடங்களை ஆசைப்படுகைக்கு காரணம் என் கர்மம் என்கிறாள்
மடம்-தான் நினைத்ததே நினைக்கை –
—————————————————————————————————-
திருக் குரவையில் கிருஷ்ணனுடைய லீலா சேஷ்டிதங்களை காண ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-
வல்லி சேர்-என்று தொடங்கி
வல்லி போலே இருக்கிற வடிவையும் நுண்ணிய இடையையும் உடைய இடைப் பெண்களை தன்னுடைய
ஸுந்தர்யாதிகளாலே வரம்பு அழித்து அவர்களோடே திருக் குரவை கோத்து அருளினவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்
சூழ்வினை-தப்பாதே அகப்படுத்தும் பாவம்
——————————————————————————————————
திரு உலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் என்கிறாள் –
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-
பாவியல் வேத-இத்யாதி –
நல்ல சந்தஸை உடைத்தான் ருக்வேதத்திலே வைஷ்ணவமான பல ஸூக்தங்களைக் கொண்டு
தேவர்களும் ருஷிகளும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னைக் கொடுத்துக் கொடு நின்ற
கோள்வினை-முடித்து அல்லது போகாத பாபம்
கோதை -தன்னுடைய மயிர் முடியையும் மாலையையும் கண்டாரை இப்பாடு படுத்த வல்லள் என்று கருத்து
———————————————————————————————————
சர்வ ஸ்மாத் பரனாய் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளில்
திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –
கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-
கோது இல் -வண்புகழ் கொண்டு, சமயிகள்-
ஒரு குணத்தை அனுசந்தித்தால் குணாந்தரத்தில் போக ஒட்டாத படி கால் கட்ட வல்லவனான அவ்வவ குணங்களிலே நிஷ்டர் ஆனவர்கள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், –
அவ்வவ குணங்களிலே வாசிகளை சொல்லி ஈடுபட்டு அடைவு கெடச் சொல்லும்படியான உதார குணத்தை உடையனாய்
பரன்-
எல்லா படியாலும் எல்லாரிலும் மேல் பட்டு இருந்தவனுடைய
ஊழ் வினையேன் –
இப்படி துக்க அனுபவத்துக்கு ஈடாம் படி முன்னமே பாபத்தை பண்ணினேன்
தடந் தோளியே-
எம்பெருமானை பிச்சேற்ற வல்ல தோள்களை உடையவள் -என்றவாறு –
———————————————————————————————————-
நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அருளின கிருஷ்ணனுடைய திருவடிகளில் திருத் துழாயை ஆசைப் படா நின்றாள் -என்கிறாள் –
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—
தோளி சேர் பின்னை-இத்யாதி
தன்னோடு துல்யமான சீல வயோ வ்ருத்தங்களை உடையளாய் தனக்கே அசாதாரணமான தோள் அழகை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
எருது ஏழையும் தழுவிக் கொள்ளுவதும் செய்து அவர்களுக்கு சத்ருசமான ஆபிஜாத்யத்தையும் செருக்கையும் உடையவர்
நாளும் நாள்-நாள் தோறும் நாள் தோறும் –
———————————————————————————————————-
ஸ்ரீ வராஹமாய் பிரளய ஆர்ணவத்திலே பூமியை எடுத்து அருளின போதில் திருவடிகளில்
திருத் துழாயை பெற வேணும் என்று ஆசைப் படுகிற படியை சொல்லுகிறாள் –
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-
மாதர் மா மண் -இத்யாதி –
ஸ்நேஹ யுக்கதையாய் அதி ஸ்லாக்யையான ஸ்ரீ பூமிப பிராட்டிக்காக
பகவத் அவதார காலம் ஆகையாலே ஸ்லாக்க்யமான வராஹ கல்பத்தின் ஆதியிலே நீரும் சேறும் காண இறாயாத
வராஹ வேஷத்தைக் கொண்டு மஹா பிருத்வியை எடுத்து அருளினவருடைய
ஒத்திகை -சொல்லுகை –
———————————————————————————————————-
அம்ருத மதன தசையில் பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே வைத்து அருளின எம்பெருமானுடைய
திருவடிகளில் திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள் –
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-
மடந்தை -பருவம்
தடங்கொள் தார் மார்பினில்-இடம் உடைத்தாய் திருமாலையை உடைய திரு மார்பிலே
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்-மடங்குமால்
தொடை யுண்டு போக்யமாய் இருந்துள்ள தண்ணம் துழாய் மலரை ஆசைப்பட்டு சுருண்டு விழா நின்றாள்
ஏதேனும் தசையில் விக்ருதை யாகாது இருக்கக் கடவ என் மகள்
வாணுதலீர்-ஒளியை உடைய நுதலை யுடையீர்-உங்களை போலே இவளைக் காணப் பெறுவது காண் என்று கருத்து –
———————————————————————————————————-
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-
ஸ்ரீ ஜனகராஜன் திருமக்களுக்காக லங்கா தஹனம் பண்ணி அருளின சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளில்
நிரதிசய போக்யமான திருத் துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள்
அம்பு எரி உய்த்தவர் -சாரா அக்னியை புகை விட்டவர் –
——————————————————————————————————–
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-
அவனுடைய ஆயுதங்களை காண வேணும் என்று சொல்லப் புக்கு முடியா சொல்ல மாட்டாதே நோவு படா நின்றாள் -என்கிறாள்
நல்குகை -வளர்க்கை / ஏழையை-கிடையாதத்தை ஆசைப்படுகிற சபலையை
——————————————————————————————————–
உன் மகள்- நீ இட்ட வழக்கு அன்றோ – அவளுக்கு ஹிதம் சொல்லாய் என்றவர்களைக் குறித்து தான் சொல்லிற்றுக் கேளாதே
அவனை ஆசைப் பட்டு மிகவும் அவசன்னையாக நின்றாள் என்கிறாள் –
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-
என் செய்கேன்? -இத்யாதி
ஹிதம் கொள்ளுகைக்கு ஈடான விவேகம் இன்றிக்கே வியஸன சகையும் இன்றிக்கே இருந்துள்ள என் மகள்
நான் சொல்லிற்று கொள்ள முதலிலே நான் இட்ட வழக்கு அல்லள்
விளங்கா நின்றுள்ள கௌஸ்துபாதி ஆபரணங்களை திரு மார்பிலே உடைய கிருஷ்ணன் உடைய திருவடிகளில்
திருத் துழாயை விரஹ வைர்ணயத்தையே ஆபரணமாக உடைத்தாய் துவண்டு இருக்கிற முலைக்கு வேணும் என்று
சொல்லப் புக்கு முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்
இதுக்கு நான் செய்வது என்
பொன்செய் பூண்-பொன்னாலே செய்யப் பட்ட ஆபரணம் என்றும் சொல்லுவார் –
——————————————————————————————————
நிகமத்தில் ஆழ்வாருக்கு இனி இல்லை என்ன வந்த அவசாதம் எல்லாம் தீரும் படி சம்ச்லேஷித்து அருளின கிருஷ்ணன் திருவடிகளில்
தாம் அருளிச் செய்த ஆயிரத்தில் இத் திரு வாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு சத்ருசர் ஆவார் -என்கிறார்
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-
மலி புகழ் தொடங்கி
எட்டாத நிலத்தையும் அனுபவிக்கைக்கு அபி நிவேசித்தார் என்னும் புகழ் மிக்கு இருந்துள்ள ஆழ்வார் அருளிச் செயலாய்
எம்பெருமானுடைய கல்யாண குணங்களை வ்யக்தமாய்ச் சொல்லுகிற இது திருவாய் மொழி வல்லவர் –
————————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply