திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-10-

இப்படி ஹேயரான சம்சாரிகளைப் போல் அன்றியே எம்பெருமானுடைய திவ்ய அவதாரங்களையும் திவ்ய குணங்களையும்
பலவகையாய் ஜகத் ரக்ஷண அர்த்தமாக உள்ள சேஷ்டிதங்களையும் அனுசந்தித்திக் கொண்டு போது போக்கப் பெற்றேனுக்கு
இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று தாம் பகவத் அர்ஹ கரணராய் க்ருதார்த்தரான படியை அனுசந்தித்து மிகவும் ப்ரீதர் ஆகிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரித சம்ரக்ஷணத்து அர்த்தமாக பல காலும் வந்து திருவவதாரம் பண்ணி யருளி அவர்கள் சத்ருக்களை நிரசியா நின்றுள்ள
எம்பெருமானுடைய கல்யாண குணங்கள் ப்ரீத்தி பூர்வகமாக அனுபவிக்கப் பெற்றேன் என்று
இத் திருவாய்மொழியில் பிரதிபாதிக்கிற பொருளை சங்க்ரேஹண அருளிச் செய்கிறார்-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு-
அசங்க்யேய அவதாரங்களை பண்ணிக் கொண்டு ஒருவரால் காண முடியாத தான் தோற்றி
வன்மை-
தன் அழகு கண்டால் சிதிலர் ஆகாமை –
படை
ஆயுதம்
நன்மை –
பிரதி கூல விஷயத்தில் ஆன்ரு சம்சயம் பண்ணாமை
சீர் பரவப் பெற்ற-
கல்யாண குணங்களை சிதில கரணனாய் அனுசந்திக்கப் பெற்ற நான் –

—————————————————————————————————-

திரு அவதாரம் பண்ணி அருளுகைக்கு அடியாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி -ஸ்ரீ வ ஸூ தேவர் திரு மகனாய் வந்து
திரு அவதாரம் பண்ணி அருளி ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணா நின்றுள்ள கிருஷ்ணனுடைய கீர்த்தியை ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு
பல படியும் அனுபவிக்கப் பெறுகையாலே எனக்கு ஒரு தட்டு இல்லை என்கிறார் –

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி-
தன்னுடைய சந்நிதானத்தாலே குறைவற்று கண் வளர்ந்து அருள போரும்படியான பெரிய கடலிலே நிரவதிக தீப்தி உக்தனான திரு வனந்த ஆழ்வான் மேலே ஏறி
கோள் ஆகிறது மிடுக்கு என்றும் சொல்வர் / கண்உறைகை -கண் வளர்ந்து அருளுகை
ஓர் யோகு புணர்ந்த-இத்யாதி
திரு வனந்த ஆழ்வானோட்டை ஸ்பர்சத்தாலும் -ஸ்வ குண அனுசந்தானத்தாலும் உஜ்ஜவலமான திரு நிறத்தை உடையவனாய்
ஆஸ்ரித ஆபன் நிவாரண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து திரு வவதாரம் பண்ணி யருளி பிரதி கூலருடைய ருதிரத்தால் கறை ஏறி
அதுவே ஆபரணமாக திரு மூக்கை உடைய பெரிய திருவடியை நடத்தி அஸூர நிரஸனம் பண்ணின சர்வேஸ்வரனுடைய
பரிபூரணமான புகழை ஹ்ருஷ்டனாய்க் கொண்டு மிகவும் அனுபவிக்கப் பெறுகையாலே நான் ஒன்றும் ப்ரதிஹத போகன் அல்லேன்

—————————————————————————————————–

சர்வேஸ்வரனுடைய போக்யதா அனுசந்தான ப்ரீதி பலாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையில்
ப்ரவ்ருத்தனான எனக்கு ஒரு மநோ துக்கமும் இல்லை என்கிறார் –

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

முட்டு இல் பல் போகத்து-ஒரு தனி நாயகன்
அப்ரதிஹத அசங்க்யேய போகனாய் நிரஸ்த ஸமஸ்த சமாதிகனான சர்வேஸ்வரனாய்
மூவுலகுக்கு உரிய-இத்யாதி
எல்லாருக்கும் ஓக்க பிராப்தமான ஜகத்திலே ரஸ வஸ்துக்கள் எல்லாம் போலேயுமாய் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத படி
நிரதிசய போக்யமாய் இருந்துள்ள அவன் திருவடிகளில் அடிமையில் அந்வயித்த பின்பு
மூ உலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் என்று கூட்டிக் கொள்ளவுமாம் –

———————————————————————————————————

தேவதாந்த்ரங்கள் ஆச்ரயித்தாருடைய ஆபத்துக்கு துணை யல்லர் என்னும் இடத்தைக் காட்டின
எம்பெருமானை ஆஸ்ரயித்து உன்மூலித ஸமஸ்த துக்கன் ஆனேன் –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

பரிவு இன்றி -வருத்தம் இன்றி /படை -சேனை –
திரிபுரம் பெற்றவன் -திரிபுர தஹன அபதான சஞ்சாத அபிமானனான ருத்ரன் –
மகன் -ஸூ ப்ரஹ்மண்யன் /அங்கி – அக்னி
போர் தொலையப்-இத்யாதி
பல ஹீனராம் படி பொரு கிற திருச் சிறகை உடைய பெரிய திருவடியை அத்யாச்சிரயமாம் படி கடவி ரமணீய தர்சநமான திரு வாழியை
தரிக்கையாலே சத்ருக்களுக்கு அப்ரதிருஷ்யனாய் திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு சோர்வு வராதபடி பண்ணும்
ஸ்வ பாவனான ஆயனைப் பற்றுகையாலே –

————————————————————————————————————-

வைதிக புத்ர அநயன மஹா அபதானத்தை அனுசந்தித்து துக்கம் இல்லை என்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்-படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
ஒரு நாளிலே ஒரு முஹூர்த்தத்திலே ஒரு வருத்தமும் இன்றிக்கேஅண்டத்துக்கு உறம்பான ஆவரண லோகங்களும் கழியும் படி தன்னையே
நாதனாகவும் தோழனாகவும் தூதனாகவும் சாரதியாகவும் மற்றும் எல்லா பரிஜனமாகவும் உடையனான பெரும் புகழை உடைய
அர்ஜுனனும் வைதிகனும் உடனே ஏற கார்ய ரூபமாய் வைத்து தன் ஆகாரம் அழியாது இருக்கச் செய்தெ காரியங்களுக்கு எல்லாம்
மூல காரணமான ப்ரக்ருதி பர்யந்தமாக போம்படி திருத் தேரை நடத்தி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை-உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே-
அப்ராக்ருத தேஜோ ரூபமாய் தனக்கு அசாதாரணமான திரு நாட்டிலே புக்கருளி வைதிக புத்திரர்களை அவ்வுடம்போடே அப்பருவத்தோடே
கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே நிர்த் துக்கன் ஆனேன் –

—————————————————————————————————————–

கிருஷ்ணனுடைய நிரவதிகமான அழகை அனுபவித்த எனக்கு ஒரு துக்க கந்தமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி-இத்யாதி
ஹேய ப்ரத்ய நீகமாக தேஜோ ரூபமாய் ஸ்வ அசாதாரணமான திவ்ய ரூபத்தை கூடக் கொண்டே துக்க சாகர மக்நரான
மனுஷ்யருடைய பிறவியிலே அவர்களை ரஷித்து அருளுகைக்காக வந்து திரு அவதாரம் பண்ணி அருளி அவர்களுடைய
சஷூர் விஷயமாக வந்து தன் ஸுந்தர்யாதி களாலே அவர்களை மிகவும் ஈடுபடுத்தி
தன் தெய்வ நிலை-இத்யாதி
தன்னுடைய அப்ராக்ருத ஸ்வ பாவத்தை லோகத்தில் ஆவிஷ்கரித்து அத்தாலே எல்லாரையும் அடிமை கொண்டு அச் செயலால்
அத்யாச்சர்ய பூதனான ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணகனான கிருஷ்ணனுடைய புகழை –

———————————————————————————————————————-

லீலா உபகரணத்தாலே எம்பெருமானுக்கு உண்டான ரசத்தை அனுபவித்து நிர்த் துக்கனேன் ஆனேன் -என்கிறார் –

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் –
ஸூக துக்கங்களை விளைக்கக் கடவ புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்
உலகங்களுமாய்
அவை ஆர்ஜிக்கும் கர்மா பூமிக்கு நிர்வாஹகனாய் -பல அனுபவ பூமி என்றுமாம் –
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான்-சுவர்க்கங்களுமாய்-
ஸூக கந்தம் இல்லாத துக்கமே அனுபவிக்கக் கடவதான நரகத்துக்கு நிர்வாஹகனாய் -சுத்த ஸூ கமே அனுபவிக்கக் கடவதான ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனாய் –
நரகு என்றும் ஸ் வர்க்கம் என்றும் ஸூ க துக்கங்கள் ஆகவுமாம்
மன்பல் உயிர்களும் ஆகிப்
ஸ்வர்க்க நரகாதிகளை என்றும் புஜிக்கக் கடவதான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய்
பலபல மாய மயக்குகளால்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–
இப்படி உள்ள அசங்க்யேயமான ப்ரக்ருதி விகார முகத்தால் உண்டான சேதனருடைய மதி விபரமங்களாலே
ப்ரீத்யாவஹமான லீலைகளை உடையவனைப் பெற்று பரம காருணிகனான எம்பெருமானுக்கு பிறருடைய துக்க அநு சந்தானம்
ப்ரீதி ஹேது வான படி எங்கனே என்னில் தன்னுடைய கருணையால் அவற்றை ரக்ஷிக்க நினைத்தால் அந்த ரக்ஷணம் அவற்றுக்கு
அநிஷ்டமாய் இருக்கிற இருப்பு அவனுக்கு ஹாஸ்ய ஹே துவாய் அவ் வழியால் லீலா ரஸ சாதகமாய் விட்டன –

——————————————————————————————————————–

எம்பெருமான் நித்ய விபூதி அனுபவம் பண்ணும் படியை பேசி அனுபவிக்கிறார் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

துக்க கந்தம் இன்றிக்கே நிரவதிகமான ஆனந்தத்தை உடையனாய் நிரதிசய ஸுந்தர்யத்தை உடையனாய்
போக்யையான பெரிய பிராட்டியாரோட்டை கலவியாலே வந்த நிரதிசய ஆனந்தங்களை உடையனாய் இருக்கை யாகிற ஐஸ்வர்யத்தை உடையனான
சஹகாராந்தர நிரபேஷமான தன் சங்கல்ப ரூப ஞானத்தால் பெரிய பிராட்டியாருக்கும் பிரியமாக கார்ய பூத ஜகத்தை எல்லாம் உண்டாக்கும்
ஸ்வபாவனாய் இப்படிப்பட்ட முடிவில்லாத ஆச்சர்யங்களை உடையனான கிருஷ்ணனுடைய திருவடிகளை சேர்ந்து –

———————————————————————————————————————-

சர்வாச்சார்ய பூமியான வடதள சாயியை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை என்கிறார் –
மஹா பிரளய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் என்னுதல் –

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

ஹேய ரஹிதமான ஞானத்தையும் நிரதிசய தேஜோ மயமான திவ்ய ரூபத்தையும் உடையனாய் சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத் துழாய்
மாலையால் அலங்க்ருதனாய் -அபரிச்சேதயமான அநேக ஆச்சர்ய சக்திகளால் ஸ்வ அபிமத திவ்ய தேஹங்களைக் கொண்டு
ஆச்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணி பிரதானரான ருத்ரன் ப்ரஹ்மா என்கிற இவர்கள் தொடக்கமாக சேதன அசேதனங்களை அடைய
தன் திரு வயிற்றிலே ஒரு காலே சென்று சேரும்படி விழுங்க வல்லவனை

—————————————————————————————————————–

ஸமஸ்த வஸ்துக்களிலும் ஆத்மதயா வியாப்தனாய் அவர்களுடைய இந்திரியங்களுக்கும் கோசாரம் இன்றிக்கே ஜகத் சரீரனான
கிருஷ்ணனை வணங்கப் பெற்ற எனக்கு ஒரு நாளும் ஒரு கேடு இல்லை என்கிறார் –

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

ஏக ரூபமாக என்றும் -எல்லா விடத்திலும் வியாப்பிப்பதும் செய்து -ஜகத்துக்கு சஹாயாந்தர நிரபேஷமான காரணமாய்
வி லக்ஷண ஞான ஸ்வரூபனாய் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரியங்களால் அறிய ஒண்ணாத படி அவற்றுக்கு விஷயமாய் நிற்கும் –
வியாப்பிய வஸ்து கத தோஷை அஸம்ஸ்ப்ருஷ்டனாய்-அவற்றுக்கு நியாமகனாய் மிக்கு இருந்துள்ள உஜ்ஜ்வல்யத்தை உடைய
திவ்ய தேஹ உக்தனாய் பூத பவ்திதமான ஜகத்தை சரீரமாக உடையனாய் நிரவதிக தேஜோ விசிஷ்டா திவ்ய ரூபத்தோடே வந்து
வஸூதேவ க்ருஹே அவ தீரணனான எம்பெருமானுடைய திருவடிகளை –

——————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யசிக்குமவர்களை இந்த லோகத்தில் எல்லாரும் அறியும் படி வைஷ்ணவ ஸ்ரீ யிலே நடத்தி
பின்னை திரு நாட்டிலும் கொண்டு போவதும் செய்து தன்னுடைய ஐஸ்வர்யம் எல்லாம் இவர்கள் இட்ட வழக்காகும் என்கிறார் –

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-

நித்ய சித்த கல்யாண குணங்களை உடையனான கேசி ஹந்தாவை ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லார்க்கு –நாடு நகரமும் -விஷேசஞ்ஞரும் -அவிஷேசஞ்ஞரும்

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: