திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-10–

கீழ் உபதேசித்த ஹிதம் நெஞ்சில் படாத -இப்படி ஹேயரான சம்சாரிகளைப் நடுவிலே இருந்து வைத்து
பகவத் விஷயத்துக்கு அர்ஹமான கரணங்களை உடையேனாகப் பெற்றேன்
அது தன்னிலும் ஆஸ்ரித அர்த்தமாக கர்மா வஸ்யரைப் போலே சம்சாரிகள் நடுவே வந்து திருவவதரித்த
திவ்ய அவதாரங்களையும் அவதார ஸித்தமான திவ்ய குணங்களையும் திவ்ய சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து
இதுவே போது போக்கப் பெற்றேனுக்கு -இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று மிகவும் ப்ரீதர் ஆகிறார் –
முடியானேயில் தம்முடைய ஆற்றாமையும் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தையும் அனுசந்தித்தவாறே இழவாய் தோற்றிற்று
சொன்னால் விரோதத்தில் சம்சாரிகள் படியை பார்த்தவாறே அவ்விழவு தானே பேறாகத் தோற்றிற்று –

—————————————————————————————————

இத் திருவாய்மொழியில் பிரதிபாதிக்கிற பொருளை சங்க்ரேஹண அருளிச் செய்கிறார்-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பலபல செய்து –
ஜென்ம ஹேது இன்றிக்கே-சம்சாரி சஜாதீயனாக பிறக்கிற இவ்வவதாரத்தை அடி யறியுமவர்கள் அவதாரத்துக்கு அவ்வருகு
பரத்வத்திலும் போக மாட்டாதே இறே இருப்பது
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம்-என்னக் கடவது இறே
வேத புருஷனும் -ப ஹூ தா விஜாயதே -என்னும் இத்தனை இறே
ஜென்ம கர்மச மே திவ்யம் -என்றும் -ப ஹூ நி மே என்றும் அவன் தானே நெஞ்சு உளுக்கி இறே இருப்பது
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும் -பிறந்தவாறும் -என்றும் தீமதாம் அக்ரேஸரான இவரும் வித்தராய் இருப்பர்
ஆக பிராமண ஸ்ரேஷ்டமான வேதத்தோடு பிரமேய பூதனான ஈஸ்வரனோடு பிரமாதாக்களான இவரோடு வாசி அற பரிச்சேதிக்க மாட்டாதே வித்தராய் யாயிற்று இருப்பது –
பல
ஒரு அவதாரத்தை அனுசந்தித்தால் -எத்திறம் என்று வித்தராமவர் அநேக அவதாரத்தை பொறுக்க மாட்டார் இறே
பல பல
தேவாதி யோனி பேதங்களும் -அவாந்தர பேதங்களும்
செய்து
தன் தரம் குலையாமே ஆவிர்பவித்து தன் கார்யம் செய்யப் பெற்றோமோ
ததச்ச துவாதச மாஸே -என்றும் பன்னிரு திங்கள் என்றும் -நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாசம் பண்ணினால்
தான் பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் பண்ணி இறே அவதரித்தது
பிதா புத்ரேண பித்ருமான் யோ நி யோ நவ் -நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -என்கிறபடியே
சர்வ காரணனான தான் ஸ்வ கார்யங்களிலே ஒன்றுக்கு காரியமாய் இறே அவதரித்தது –
வெளிப்பட்டுச்
ந சஷூஷா க்ருஹ்யதே -என்கிற தன்னை கண்ணுக்கு விஷயம் ஆக்கி சதா சஞ்சரிக்கிற இடத்தே நிதி கண்டு
எடுக்குமா போலே யாயிற்று கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
சங்கொடு சக்கரம் வில்-ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு-
அவதரிக்கும் போது திவ்ய ஆயுதங்களோடு வந்தாயிற்று அவதரிப்பது-
தன்னை வெளியிட்டிலும் திவ்ய ஆயுதங்களோடு சேர்த்தி மறைக்க வேண்டி இ றே இருப்பது
உபஸம்ஹர சர்வாத்மன் ரூபமேதத் சதுர்புஜம் -ஜா நாது மாசாவதாரந்தே கம்சோயம்திதி ஜன்மஜ –என்ன கடவது இ றே
சங்கொடு சக்கரம்-
தன்னில் பிரியாத ஸுர ப்ராத்ரம் -கச்சதா மாதுல குலம் இத்யாதி –
வில்-ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு –
என்று எல்லாம் இவர்க்கு ஆபரணமாய் இருக்கிற படி
ஒரு கற்பக தரு பணைத்து பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று வடிவு அழகும் தோளும் திவ்ய ஆயுத சேர்த்தியும் இருப்பது –
புள் ஊர்ந்து
இதுவும் ஒரு சேர்த்தி அழகு –
ஒரு மேருவை கினிய ஒரு மேகம் படிந்தால் போலே யாயிற்று பெரிய திருவடியை மேல் கொண்டால் இருப்பது –
மஞ்சுயர் பொன் மலை மேல் -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே சென்று காட்சி கொடுக்கை
உலகில்
நித்ய ஸூ ரிகளுக்கு தகுதியாய் இருக்க சம்சாரிகளுக்கு காட்சி கொடுத்த படி –
வன்மை உடைய அரக்கர் அசுரரை
இவ் வழகைக் கண்டும் நெஞ்சு நெகிழாதவர்கள்
இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போலே எல்லார்க்கும் இருக்குமோ என்று இருக்கிறார்
திருவடி திருத்த தோளிலே காணவே-வணங்கிப் போகலாய் இருக்க எதிரிடுவதே பையல்கள் –
அழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாய் இருக்க அம்புக்கு இலக்கு ஆவதே
மாளப் படை பொருத
படை -ஆயுதம் -தேவா நாம் தானவா நாஞ்ச-என்று சம்பந்தம் ஒத்து இருக்க -ஆச்ரித விரோதிகள் என்னுமத்தை பார்த்து அழியச் செய்யும்
படை பொருத நன்மை -உடையவன் –
அவர்கள் பக்கல் ஆன்ரு சம்சயம் பண்ணாது ஒழிகை -சங்கல்பத்தை கொண்டு கார்யம் கொள்கை தீமை என்கை –
சீர் –
வீர குணம் -அதுக்கு அடியான ஆஸ்ரித வாத்சல்யம் -அதுக்கு அடியான ஸ்வாமித்வம் இவை முதலான கல்யாண குணங்கள்
பரவப் பெற்ற நான்-
இக்குணங்களை அடைவு கெட ஏத்தப் பெற்ற நான்
ஓர் குறைவு இலனே-
முதலிலே சம்சாரிகளைப் போலே அறியாது ஒழிதல் -அவதரித்து கண்ணுக்கு இலக்காய் பாசுரம் இட்டு பேச நிலம் இன்ரிக்கே இருத்தல் –
சிசுபாலாதிகளை போலே நம்மில் ஒருத்தன் என்று பரிபவித்து முடிந்து போதல்
ஸ்ரீ விஸ்வ ரூபத்தில் அர்ஜுனனைப் போலே நீச்சு நீராய் இருத்தல் அன்றிக்கே இவ்விஷயத்தை புகழப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை என்கிறார் –
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் -என்று ஒரு தேச விசேஷத்தில் அனுபவிக்கக் கடவ குண அனுபவத்தை இங்கே அனுபவிக்கப் பெற்ற எனக்கு
பரம பதத்தில் போகப் பெற்றிலேன் என்கிற குறை உண்டோ என்கிறார் –

——————————————————————————————————–

முதல் பாட்டிலே திருவவதாரங்களை சொன்னார் -இதில் திரு அவதார கந்தமாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அவதரித்து
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த கிருஷ்ணனுடைய பூக்களை பேசப் பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை என்கிறார் –

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

குறைவு இல் தடம் கடல்
நானே அன்று -என்னிலும் குறைவற்றார் உண்டு
திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கருங்கடல் என்நோற்றாய்-என்கிறபடியே சர்வ காலமும் தன மடியிலே வைத்துக் கொண்டு இருக்கப் பெற்ற இதுவும் ஒன்றே –
தடம் கடல்
தாலும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே அங்குசிதமாக கண் வளர்ந்து அருளும் படி இடமுடைத்தான இதுவும் ஒரு பாக்யமே-
கோள் அரவு ஏறி
கோள் -என்று ஒளியாய் -ஸ்வ ஸ் பர்சத்தாலே உண்டான ஒளியை சொல்லுகிறது
கோள் என்று தேஜோ பதார்த்தங்களான க்ரஹங்களாய் அவ் வழியிலே ஒளியைச் சொல்லுகிறது
கோள் என்று மிடுக்காய் -ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலை கதாமநி -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை சொல்லுகிறது என்றுமாம்
அரவு
மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றை பிரக்ருதியாக உடையனாய் இருக்கை
ஏறி
சுழல வந்து சாதரமாக நோக்கி ஏறுகை
தன் கோலச் செந்தாமரைக் கண்-உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் ஐஸ்வர்யா ஸூ சகமான சிவப்பை உடைத்தாய் இருக்கை
கண்ணுறைகை -கண் வளர்கை – கண் வளர்த்தல் என்ற பேராய்-ஜகாத் ரேஷன் சிந்தனை உக்தன் ஆகை
ரஷ்ய வர்க்கம் கரைமரம் சேரும்படி யாதல்
ஆத்மாநம் வா ஸூ தேவாக்க்யம் சிந்தையன் -என்கிறபடியே -ரக்ஷகனான தன்னை யாதல் அனுசந்திக்கை –
ஒளி மணி வண்ணன் கண்ணன்
ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்-
ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக்
ராஜாக்கள் கறுப்பு உடுத்து நகர சோதனை க்குப் புறப்பட்டால் பரிகரமும் முகம் தோற்றாமல் சேவிக்கக் கடவது இ றே
பிரதி கூலருடைய ருதிரத்தாலே கறை ஏறி அதுவே ஆபரணமாய் இருக்கும் மூக்கு என்னுதல்
முட்டையை பருவம் நிரப்புவதற்கு முன்பே உடைத்ததால் பிறந்த தழும்பாய் -அது ஸ்ரீ வத்சம் போலே இவனுக்கு ஆபரணமாய் இருக்கும் என்னுதல்
கடாவி
நடத்தி
அசுரரைக் காய்ந்த
ஆஸ்ரிதர் உடைய போக பரிகரமே ஆஸ்ரிதர் விரோதி நிரசனத்துக்கும் பரிகரம் என்கை -காய்ந்த -நசிப்பித்த
அம்மான்
இப்படி சிறியத்தை பெரியது தின்னாத படி நோக்கும் நிருபாதிக சேஷி
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–
இந்த லக்ஷணத்தாலே குறைவற்ற புகழை ப்ரீதி பிரகரக்ஷத்தாலே ஏத்தியும் பாடியும் பிரேம பாரவஸ்யத்தாலே
இருந்த இடத்தில் இராதே ஆடியும் வர்த்திக்கிற நான் பகவத் போகத்துக்கு ஒரு ப்ரதிஹதையை உடையேன் அல்லேன் என்கிறார் –

——————————————————————————————————–

சர்வேஸ்வரனுடைய போக்யதா அனுசந்தான ப்ரீதி பலாத்காரத்தாலே அவனுக்கு அடிமை செய்கையில்
ப்ரவ்ருத்தனான எனக்கு ஷூ த்ர விஷய ப்ராவண்யத்தால் ஒரு மநோ துக்கமும் இல்லை என்கிறார் –

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
சில நாள் சென்றவாறே முட்டுப் படக் கடவது அன்றிக்கே பலவகைப் பட்ட போகங்களை உடையனாய் இருக்கை –
அப்ரதிஹத அசங்கக்யேய போகனாய் இருக்கை –
ஒரு தனி நாயகன்
ப்ரஹ்மாதிகளுக்கும் ஏகாதி பத்யம் சொல்லக் கடவது -அங்கண் இன்றியிலே அத்விதீயனான தனி நாயகன் –நிரஸ்த சாமாப்யதிகனாய் இருக்கை
மூ உலகுக்கு உரிய தனி நாயகன் என்று கீழே கூட்டுதல்
த்ரைலோக்கியம் அபிதாதேந யேந ஸ்யான் நாத வத்த்ரம் -என்கிறபடியே சர்வ லோக சாதாரணனான
சர்வ லோக சரண்யாய என்று என்னோபாதி பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ என்னும் படி இறே இருப்பது
‘மூவுலகும் உரிய கட்டியை என்று மேலோடு கூட்டுதல்
போக்யமும் சர்வ சாதாரணமாய் இருக்கை
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
கட்டியை -உள் வாயோடு புற வாயோடு வாசி அற ஏக ரசமாய் ரஸ கண்மாய் இருக்கை -ரஸோவை ச
தேனை -அதில் காடின்யம் தவிர்ந்து இருக்கை
அமுதை -வி லக்ஷண போக்யமாய் இருக்கை
நன் பாலை -அவிலக்ஷணர்க்கும் போக்யமாய் இருக்கை
நன்மை -எங்கும் கூட்டக் கடவது
கனியை -கண்ட போதே நுகரலாம் படி இருக்கை
கரும்பு தன்னை -கை தொட்டு ரசிப்பிக்க வேண்டாது இருக்கை
ஆக சர்வ ரஸ -என்றபடி
இவை எல்லாம் உபமானமாகப் போராமையாலே அது தன்னையே சொல்லுகிறது
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை
தேன் விரிகிற திருத்த துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை உடையவனை -ஆக ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஸ்வரூபம் சொல்லிற்று
வணங்கி
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளை கிட்டுகை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
அவன் திறத்துப்-பட்டபின்னை
அவன் இடையாட்டத்தில் பட்ட பின்பு
இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.-
அத்யல்பமும் -விஷயாந்தர விமுகனான நான் -ஏன் மனசில் துக்கம் உடையேன் அல்லேன் –

——————————————————————————————————–

தேவதாந்தரங்களை பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னும் இடத்தையும் தன்னைப் பற்றினாரைத் தான் கை விட்டுக் கொடான்
என்னும் இடத்தையும் காட்டின இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை -என்கிறார் –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று
அநிருத்த ஆழ்வானைப் பற்ற கிருஷ்ணன் எடுத்து விட்ட தசையில் ருத்ரன் பண்னக்கு பண்ணின பிரதிக்ஞ்ஜை –
வருத்தமற வாணனை காக்கக் காட்டுவோம் என்று தன் ஓலக்கத்திலே சொன்னான்
காக்கக் கடவேன் அல்லேன் என்னா விட்டது தன்னை குவாலாக நினைத்து இருக்கை
அன்று
அநிருத்த ஆழ்வானை சிறை வைத்த அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
தனி வீரம் செய்யக் கடவதாக நினைத்து தன் வெற்றி காண்கைக்கு படை திரட்டிக் கொண்டு வந்தபடி -முண்டன் நீறன் -இத்யாதி -படை -ஆயுதம் என்றுமாம் –
பாரவஸ்யம் சமாயாத சூ லீ ஜ்ரும்பண தேஜஸா -என்று கையில் ஆயுதத்தோடு மோஹித்தபடி
தன் வெறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டு வரும் விஷயத்தை எதிர்க்கைக்கு ஹேது என் என்னில்
திரிபுரம் செற்றவனும்
திரிபுர தஹநம் ஆகிற அபதானத்தாலே சஞ்சத அபிமானன் ஆகையால்
திரிபுர தஹன சமயத்தில் வில்லுக்கு மிடுக்காய் நாணுக்கு திண்மையாய் அம்புக்கு கூர்மையாய் தனக்கு அந்தராத்மாவாய்எ
திரிகளை தலை சாயும்படி பண்ணின படியை மறந்து தானே செய்தவனாக பிரமித்தவன் என்கை –
மகனும்
தன்னிலும் மிடுக்கனாய் தேவ சேனாபதியான ஸூப்ருஹ்மண்யனும்
பின்னும் அங்கியும்
அதுக்கு மேலே நாற்பத்து ஒன்பது அக்னியும்
போர் தொலையப்
இனி ஒரு யுத்தத்திலும் புக்க கடவோம் அல்லோம் என்னும்படி -போரிலே மாள -என்றுமாம் –
பொரு சிறைப்
இப்படி தொலைத்தார் ஆர் என்னில் -பெரிய திருவடியின் சிறகு
புள்ளைக் கடாவிய மாயனை
அவன் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சர்ய பூதனை
ஆயனைப்
அவன் தோற்றது தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே
இவன் வென்றது தன்னைத் தாழ விட்ட இடத்திலே
பொன் சக்கரத்து-அரியினை
அநு கூலர்க்கு ஸ் ப்ருஹணீயமான திரு வாழியைத் தரித்து சத்ருத்துக்களுக்கு அப்ரதிருஷ்யன் ஆனவனை-
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-
தோள் வலி கண்ட பின்பு ஆயிற்று சர்வேஸ்வரன் என்று அறிந்தது
அச்சுதனைப்
ஆஸ்ரிதனை நழுவ விடாதவனை
அநிருத்த ஆழ்வானுக்காக மார்பிலே அம்பு ஏற்கையாலே ஆஸ்ரிதற்கு தஞ்சம் என்று விசுவசிக்கத் தட்டு இல்லை
பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–
இவனைப் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை –
பேரன் என்று இருக்கையாலே அநிருத்த ஆழ்வானுக்கு நாலு நாள் சிறை இருக்க வேண்டிற்று
அடியேன் என்று பற்றினவன் ஆகையால் எனக்கு அதுவும்வேண்டிற்று இல்லை –

———————————————————————————————————-

வைதிக புத்ர அநயன மஹா அபதானத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார்

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

இடர் இன்றியே
வருத்தம் இன்றியே
ஒருநாள்
ஏகாஹதீக்ஷை யான க்ரதுவிலே
ஒரு போழ்தில்
ப்ராதஸ் ஸ்வநம் தலைக் கட்டி மாத்யந்திந சவனத்துக்கு முன்னே –
எல்லா உலகும் கழியப்
ஆவரண சப்தகத்வத்துக்கும் அவ்வருகு படுத்தி
படர் புகழ்ப் -பார்த்தனும் வைதிகனும்
யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூ ஹ்ருச்சைவ ஜனார்த்தன -என்கிறபடியே சர்வ வித பந்துவாய் பற்றின புகழை உடைய அர்ஜுனனும்
-கிருஷ்ணன் திருவடிகளில் நிரவதிகமான ஸ்நேயத்தை உடைய ப்ராஹ்மணனும்
உடன் ஏறத்
தன்னோடே கூட ஏற
திண் தேர் கடவிச்
காரியாகாரம் குலையாமே மூல காரணமான ப்ரக்ருதி பர்யந்தமாக தேருக்கு திண்மையைக் கொடுத்து நடத்தி
சுடர் ஒளியாய் நின்ற –
நிரவதிக தேஜோ ரூபமாய் ஏக ரூபமாய் நின்ற
தன்னுடைச் சோதியில்
தனக்கு அசாதாரணமான தேசம் –
காகபக்ஷதரோ தன்வீ சிகீ கநகமாலயா சோபயன் தாண்ட காரண்யம் தீப் தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே
தன்னுடைய காந்தி வெள்ளம் இட்டால் போலே இருக்கை –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன –
வைதிகன் பிள்ளைகளை-உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–
சரீர சம்பந்தம் அற்றால் போகக் கடவதாய் இருக்க -இச் சரீரத்தோடு யாயிற்று இவர்களைக் கொண்டு போயிற்று
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையால் அவ்வுடம்போடே அப்பருவத்தோடே கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே ஒரு துக்கம் இல்லை என்கிறார் –
புத்ரார்த்தியான அளவன்றியே ஸ்வரூபத்தை அறிந்து பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார் –

——————————————————————————————————————

தன்னுடைய அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயமாக்கி சம்சாரிகள் கண்ணுக்கு விஷயமாக்கின கிருஷ்ணனுடைய
குணங்களை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
ஹேய ப்ரத்ய நீக சுத்த சத்வ மயம் ஆகையால் நிரவதிக தேஜோ ரூபமாய் பிறருக்கு உள்ளது ஓன்று அன்றிக்கே-தனக்கு அசாதாரணமான விக்ரஹமானது
நின்ற வண்ணம் நிற்கவே
அவ்விருப்பில் ஒன்றுமே குறையுமே விளக்கில் கொளுத்தின விளக்கு போலே அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துக்கோத்தரமான மனுஷ்யருடைய ஜென்மத்தில் வந்து ஆவிர்ப்பவித்து மாம்ஸ சஷூஸ்ஸூ க்கு விஷயம் இன்றிக்கே
நித்ய ஸூ ரிகளுக்கு சதா தர்ச நீய விஷயமான தன்னை மாம்ஸ த்ருஷ்டிக்கு விஷயம் ஆக்கி
துயரங்கள் செய்து
அநு கூலரை அழகால் ஈடுபடுத்தி பிரதி கூலரை ஆயுதத்தால் அழியச் செய்து –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன மோஹயித்வா ஜகத் சர்வம் கதஸ் ஸ்வம் ஸ்த்தானமுத்தமம் –
பிரதி கூலரை முட்க்கோலால் சாடியும் அநு கூலரை அழகால் சாடியும் போனபடி
தன் தெய்வ நிலை
தன்னுடைய அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை
உலகில்
இதுக்கு இட்டுப் பிறவாத சம்சாரத்திலே
புக உய்க்கும்
பிரவேசிக்கும் -பரமபதத்தில் நடையாடக் கடவ ஸ்வபாவத்தை சம்சாரிகளுக்கு தெரிவித்தவன்
தூது போயும் சாரத்யம் பண்ணியும் தன் படியைத் தெரிவித்தவன் என்றுமாம்
உய்க்கும் -செலுத்தும்
அம்மான்
அபேஷா நிரபேஷமாக-இவர்களுக்கு தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் ப்ராப்தியைச் சொல்லுகிறது
இச் செயலால் லோகத்தை எழுதிக் கொண்டவன் என்றுமாம் –
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–
ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை
நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

———————————————————————————————————————–

அகர்ம வஸ்யன் ஆகையால் ஈஸ்வரனுக்கு இவ்விபூதியில் உள்ளது லீலா ரஸமாத்ரம் ஆகையால் அத்தை அனுசந்தித்த
எனக்கு கர்ம வஸ்யத்தை இல்லை -இந்த லீலா விபூதியில் அந்வயிக்கவும் வேண்டா –

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய்
ஸூ க துக்கங்களை விளைக்கக் கடவதான புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்
உலகங்களுமாய்
அவற்றை ஆர்ஜிக்கும் கர்ம பூமிக்கு நிர்வாஹகனாய் என்னுதல்
போக பூமிகளான ஸ்வர்க்க நரகங்களுக்கு நிர்வாஹகனாய் என்னுதல்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
ஸூ க கந்த ரஹிதம் அன்றிக்கே கொடிதான் துக்க அனுபவமேயான நரகத்துக்கு நிர்வாஹகனாய் -சுத்த ஸூ க அனுபவமேயான ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனாய்
உலகங்களுமாய் -என்ற இடம் கர்ம பூமியான போது-ஸ்வர்க்க நரகங்களை சொல்லுகிறது
அங்கு போக பூமியைச் சொன்ன போது ஸூ க துக்கங்களை சொல்லிற்றாகக் கடவது
மன்பல் உயிர்களும் ஆகிப்
கர்ம கர்த்தாக்களும் தத் பல போக்தாக்களுமாய் நித்யராய் அசங்க்யாதரான சேதனர்க்கு நிர்வாஹகனாய்
பலபல மாய மயக்குகளால்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று-
இப்படிப் பலபலவான பிரக்ருதி விகார முகத்தால் சேதனர்க்குப் பிறக்கும் மதி விப்ரமங்களாலே ப்ரீத்ய அவாஹமான லீலைகளை உடையவனை பெற்று
பரம காருணிகனானவனுக்கு பர துக்க அனுசந்தானம் ப்ரீதிக்கு ஹேது வானபடி என் என்னில்
இவற்றைத் தன் தயையாலே ரக்ஷிக்க நினைத்தால் அது இவற்றுக்கு அநிஷ்டமாய் இருக்கும் இருப்பு அவனுக்கு ஹாஸ்ய ஹேதுவாய்
அவ் வழி யாலே லீலா ரச ஸாதனமாய் விட்டன –
ஏதும் அல்லல் இலனே.-
அவனுடைய அகர்ம வஸ்யத்தையை அநு சந்திக்கப் பெற்ற எனக்கு கர்ம வஸ்யன் ஆகையும்-தத் பலமான
லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை என்கிறார்
நமாம் கர்மாணி லிம்பந்தி நமே கர்ம பல ஸ் ப்ருஹா-இதிமாம் யோ அபி ஜா நாதி கர்மபிர் ந சபத்யதே-
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே -என்ன கடவது இ றே –

————————————————————————————————————————–

நித்ய விபூதியை அனுபவித்துக் கொண்டு இருக்கிற மேன்மையை உடையவன் ஜகாத் ரக்ஷணம் பண்ணும் நீர்மையை
அனுசந்திக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் -பிராட்டி புருஷகாரமாக மாமேகம் -என்ற
கிருஷ்ணனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் என்றுமாம் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து –
ஸ்வர்க்காதி களைப் போலே துக்க மிஸ்ரமாய் பரிச்சின்னமான ஸூ கம் இன்றிக்கே துக்க கந்த ரஹிதமாய் அபரிச்சின்னமான ஆனந்தத்தை உடையவன் –
எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
த்ரிபாத் விபூதி எல்லாம் வெள்ளமிடும் காந்தியை யுடையவன் -அழகு என்று அவயவ சோபையாய் சூழ் ஒளி என்று சமுதாய சோபையைச் சொல்லுகிறது
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
இவ்வழகு காட்டில் எறிந்த நிலா ஆகாத படி அநு பவிப்பார் உண்டு என்கிறது
புஷபத்தில் பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற பிராட்டியோட்டை கலவியால் பிறந்த
மயக்குகள் -ஆனந்தங்கள் –
ஆகியும் நிற்கும் -தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே ஸ்ரீ யபதித்வத்தால்வந்த ஆனந்தத்தைத் உடையனாய் இருக்கும்
அம்மான் -ஆனந்த மயனாய் ஸ்ரீ யபதி யானவன் இ றே சர்வேஸ்வரன்
எல்லை இல் ஞானத்தன் –
மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்
ஞானம் அஃ தேகொண்டு -எல்லாக் கருமங்களும் செய்
அவன் அடியாக பிறந்த சஹகாரி நிரபேஷமான சங்கல்ப ரூப ஞானத்தால் கார்ய பூதமான ஜகத்தை எல்லாம் அவளுக்கு பிரியமாக உண்டாக்கினவன்
யஸ்யா வீக்ஷம் முகம் ததிங்கித பராதீ நோ விதத்தே அகிலம் -என்றார் இ றே
எல்லை இல் மாயனைக்
சங்கல்ப ரூப ஞானத்தால் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ண வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனை
இப்படி ஆர் இருக்கிறார் என்னில்
கண்ணனைத்
கிருஷ்ணனை -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம்
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–
பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய்
ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

—————————————————————————————————————————–

அகடிதக்கடநா சமர்த்தனான வடதள சாயியை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு தளர்வும் இல்லை என்கிறார் –
மஹா பிரளய வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் என்னுதல் –

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
அஞ்ஞானம் கலசாத ஞானத்தையும் நிரதிசய தேஜோமய மான திவ்ய விக்ரஹத்தையும் உடையனாய்
அதுக்கு ஒப்பனையான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனான சர்வேஸ்வரன்
மிக்க பன் மாயங்களால்
அபரிச்சேதயமாய் பலவகைப் பட்ட ஆச்சர்ய சக்தி யோகத்தால்
விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
இச்சா க்ருஹீதமான விக்ரகங்களை பரிக்ரஹித்து சிறிய வடிவைக் கொண்டு பெரிய லோகங்களை திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து -இப்படி சேராச் சேர்த்தியான சேஷ்டிதங்களைப் பண்ணி
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்-ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப்
ஸ்வ கோஷ்டியிலே உபகாரகனாக ப்ரசித்தனான ருத்ரன் –அவனுக்கு ஜனகனான ப்ரஹ்மா தொடக்கமான சகல சேதன அசேதனங்களையும்
தன் திரு வயிற்றிலே ஏக காலத்திலே பிரளயம் தேடிலும் காண ஒண்ணாத படி வைத்து ரக்ஷிக்க வல்லவனை
நைமித்திக பிரளயமான போது அவர்களுக்கு ரஷ்யமான த்ரை லோக்யத்தை ரஷிக்கையாலே அவர்களுக்கு ரக்ஷகன் என்கை –
பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–
சர்வ சக்தியாய் -ப்ரஹ்மாதிகளுக்கு ரக்ஷகனானவனை அனன்யா ப்ரயோஜனனாய் ஆஸ்ரயித்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ என்கிறார்

——————————————————————————————————————————-

ஜகத் சரீரியாய் சர்வத்தையும் நோக்கி ஆபிமுக்யம் பண்ணினாரை அசாதாரண விக்ரஹத்தோடே வந்து அவதரித்து
ரக்ஷிக்குமவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை என்கிறார் –

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
ஒரு பதார்த்தத்திலும் குறையாத படி என்றும் ஓக்க ஏக ரூபமாய் எல்லாக் காலத்திலும் வியாபித்து இவற்றை ஸ்ருஷ்டிக்கும் இடத்தில்
த்ரிவித காரணமும் தானே யாய் விலக்ஷண ஞான ஸ்வரூபனாய்
அளவுடை ஐம்புலன்கள் -அறியா வகையால் அருவாகி நிற்கும்
அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இ றே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்
வளர் ஒளி ஈசனை
வியாப்த கத தோஷம் தட்டாதே -அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி-என்று நியன்தருதவத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தை உடையவன்
மூர்த்தியைப்
இப்படி ஜகத்தை தனக்கு சரீமாக உடையனாய் இருக்கச் செய்தே அசாதாரண விக்ரஹத்தை உடையனாய் இருக்கும் –
பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
வியாபிக்கும் இடத்தில் காரியத்தோடு காரணத்தோடு வாசி அற வியாபித்து இருக்கும் –
பூதங்கள் என்று காரணத்துக்கு உப லக்ஷணம்
இரு சுடர் என்று காரியத்துக்கு உப லக்ஷணம்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத்
நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு வ ஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணன் ஆனவனை
தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–
இவன் விமுகனான அன்றும் வியாப்தியாலே சத்தையை நோக்கி இவன் ஆபிமுக்யம் பண்ணின அன்று கண்ணுக்கு தோற்ற நின்று
ரக்ஷிக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் ஒரு அநர்த்தம் இல்லை –

———————————————————————————————————————————–

நிகமத்தில் இது திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தராம் படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யிலே நடத்தி
பரம பதத்தில் சென்றால் தன் ஐஸ்வர்யம் இவர்கள் இட்ட வழக்கு ஆகும் என்கிறார் –

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11-

கேடு இல் விழுப்
கேடின்றி விழுப்பத்தை உடைத்தான்
புகழ்க் கேசவனைக்
நித்ய சித்த கல்யாண குணங்களை உடைய கேசி ஹந்தாவை யாயிற்று இவர் கவி பாடிற்று
குருகூர்ச் சடகோபன் சொன்ன-பாடல்
ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் -என்கிறபடி அவதாரத்துக்கு அவ்வருகு போக மாட்டாத ஆழ்வார் ஆயிற்று கவி பாடினார்
பாடல் ஓர் ஆயிரத்துள்- இவையும் ஒருபத்தும்
புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசையோடு யாயிற்று பிறந்தது
பயிற்ற வல்லார்க்கு
பயில வல்லார்க்கு என்னுதல் -ப்ரவர்த்திப்பிக்க வல்லார்க்கு என்னுதல் -அவன் தரும் என்று அந்வயம்
நாடும் நகரமும்-
அவிசேஷஞ்ஞரும் த்ரவ்ய விசேஷங்கள் அறிந்து இருக்கும் விசேஷஞ்ஞரும்
நன்குடன் காண
நன்மையுடனே காண -இவனும் ஒருவனே என்று கொண்டாட
நலனிடை ஊர்தி பண்ணி
நன்மையாவது -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஸ்ரீ வைஷ்ணவனாம் படி பண்ணி
வீடும் பெறுத்தித்
இங்கே இருந்த நாள் வைஷ்ணவ ஸ்ரீ யோடே நடக்கப் பண்ணி பின்பு நிரதிசய புருஷார்த்த மோக்ஷத்தைக் கொடுக்கும் –
தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–
தன்னுடைய த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் இவன் தான் அத்விதீய நாயகனாம் படி பண்ணிக் கொடுக்கும் –
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் என்னது என்னும் படி பண்ணும் –

——————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: