திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-5-

மது வனம் புக்க ஹனுமத் பிரமுகரான முதலிகளைப் போலே பகவத் குண பலாத்க்ருதராய்க் கொண்டு அடிமை செய்யப் பெற்று
ஹ்ருஷ்டராய் களித்த ஆழ்வார் -ஸ்ரீ கீதையில் எம்பெருமான் தேவ அஸூர விபாகம் பண்ணி அருளி
ஆஸூர ப்ரக்ருதிகளை நிந்தித்து தேவ ப்ரக்ருதிகளைக் கொண்டாடினால் போலே –
அறிவில்லாதாரையும் பகவத் சம்பந்திகள் அன்றிக்கே சிஷ்ட அபிமானிகளாய் இருப்பாரையும் சதிர் அடிப்பாரையும் அபஹூஸ்ருதரையும்
எம்பெருமானையும் ஆஸ்ரயித்து -பிரயோஜ நான்தர பரர்களையும் ராக்ஷஸ ப்ரக்ருதிகளையும் ஆஸூர ப்ரக்ருதிகளையும் அகப்பட
ஆரேனுமாக எம்பெருமானுடைய குணங்களை அனுசந்தித்தால் பரவசராய் கும்பீடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதாரை நிந்தித்து
பகவத் குண பிரஸ்தாவத்திலே கலங்கும் ப்ரக்ருதியானவர்களுடைய படி நமக்கு நினைக்கவும் பேசவும் நிலம் அல்ல வென்று இவர்களைக் கொண்டாடுகிறார் –
சாத்விக அஃரணிகளாய் இருக்கிற ஆழ்வாருக்கு களிக்கையும் சிலரை இகழ்க்கையும் கூடின படி என் என்னில்
விஷயாஸ் வத்தாலே பிறந்த தர்ப்பமும் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய் தேயும் சிலரை இகழ்க்கையும் ஆகாது என்றாய்த்து சாஸ்திரம் சொல்லுகிறது
பகவத் தாஸ்ய அனுபவத்தால் வந்த களிப்பும் அது இல்லாதாரை இகழ்க்கையும் சாஸ்த்ரங்களோடு அவ்ருத்தம் என்னும் இடமும் முக்தருடையவும்
ஸ்ரீ நாரத பகவானுடையவும் வ்ருத்தாந்தங்களிலே பகவத் அனுபவ ஜெனிதமான ப்ரீதியில் அவையாம் என்றும் கொள்வது –

—————————————————————————————————————————–

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரக்ஷித்து அருளினை எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்சல்யத்தை அனுசந்தித்தும்
அவிகிருதரராய் இருப்பார் வியர்த்த ஜன்மாக்கள் என்கிறார் –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம் பொழில் –
மநோ ஹரமாய பெருத்து இருக்கிற திருச் சோலை -கைம்மா -யானை
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்-
வடிவு அழகால் என்னை அடிமை கொண்ட கிருஷ்ணனை -சொல்லிப் பாடி என்று மேலுக்கு எல்லாம்
வாயாலே பேசி குண ஜிதராயப் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே பறப்பாரைப் போலே நெஞ்சு துடிக்க மாட்டாதார்
தங்களுடைய ஸத்பாவத்தில் இஹலோக பர லோகங்களில் கொண்ட பிரயோஜனம் என்
இப்பூமியில் உள்ளீர் சொல்லீ கோளே-
தண் கடல் வட்டத்து உள்ளீரே
இப் பூமியில் பிறந்தது அவனுடைய குண அனுசந்தானம் பண்ணுகைக்கு என்று கருத்து –

———————————————————————————————-

சகல ஜகத்தினுடைய உபத்திரவங்களை போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதி யினுடைய இந்நீர்மையில் அகப்படாதார்
மஹா துக்கம் பொறுக்க ஒண்ணாத படி வந்து அனுபவிக்க சம்சாரத்திலே வந்து பிறக்கிறவர்கள் -என்கிறார் –

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

தண் கடல் -இத்யாதி –
ஜகத்தில் உள்ளாரை நிர் நிபந்தனமாக கொண்டு தந்தாமுக்கு இரையாக புஜித்து இங்கனே இருக்கும் அநீதிகள் பண்ணுகைக்கு
காலிலே ஒருவரால் தவிர்க்க ஒண்ணாத வீரக் கழல் இட்டு இருக்கிற அஸூரர்க்கு பிராட்டியும் தானும் கூட அனர்த்தங்களை எண்ணா நிற்குமவனை
பண்கள்-இத்யாதி –
பண்கள் உஜ்ஜவலமாம் படி நெஞ்சம் அலமந்து கூத்தாடி இதுவே படியாய்த் திரியாதார்

—————————————————————————————–

உபகாரம் அறியாத பசுக்களுக்கும் -தத் பிராயருக்கும் வந்த ஆபத்தை நீக்குகைக்காக கோவர்த்தன உதாரணம் பண்ணி அருளின
இம் மஹா குணத்தை அனுசந்தித்து வைத்து அவிகிருதராய் இருக்கும் இருப்பு கிடீர் நரக அனுபவம் ஆவது என்கிறார் –

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

தொலைவு தவிர்த்த பிரானை-
விநாசத்தை தவிர்த்த மஹா உபகாரகனை
தலையினொடு-இத்யாதி –
கும்பிடு நட்டையும் குணாலையும் இட்டு ஸம்ப்ராந்தகர் ஆகாதார் துக்க பஹுளமான நரகத்திலே நாள் தோறும் துக்கப் படா நின்று கொண்டு
யமபடர்க்கு பாத்யதயா அபூர்வவத் லால நீயர் ஆனவர்கள்

———————————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்து அவளோடு சம்ச்லேஷித்த பிரணயித்தவ குணத்தை அனுசந்தித்து
ஈடுபடாதவர்கள் வைஷ்ணவர் நடுவே என் செய்யப் பிறந்தார் என்கிறார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

வம்பு அவிழ் கோதை பொருட்டா-இத்யாதி
நறு நாற்றம் புறப்படா நின்றுள்ள பூ மாலையை உடைய நப்பின்னை பிராட்டிக்காக பெரிய விடை ஏழையும் ஊட்டியாக நெருக்கி
அவை பாத்தம் போராமே முறுவல் செய்கையாலே சிவந்து தோன்றின திருப் பவளத்தை உடையனாய் இத்தாலே பிறந்த
வீர ஸ்ரீ யையும் உடையனான கிருஷ்ணனுடைய பிரணயித்தவ குணத்தை ப்ரீதியா சொல்லி
கும்பிடு நட்டம் இட்டு-இத்யாதி –
ஹர்ஷ பிரகரக்ஷத்தாலே கும்பிடு நட்டமிட்டு கூத்தாடி அமர்யாதமான ப்ரவ்ருத்திகள் மிக்கு இதுவே போக்யமாய் வர்த்தியார் –

————————————————————————————————

ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக ஸ்வ அசாதாரண திவ்ய ரூப விசிஷ்டானாய்க் கொண்டு திரு வவதாரம் பண்ணின
குணத்தைக் கேட்டால் அவிக்ருதராய் இருக்குமவர்கள் வஸ்து பூதர் அன்று என்கிறார் –

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

ஆதி அம் சோதி உருவை-இத்யாதி
நித்தியமாய் அப்ராக்ருத தேஜோ ரூபமான திரு உடம்பை அங்கு இருந்த படியே வைத்துக் கொண்டு இங்கே வைத்து
பிறப்பதும் செய்து இப்படி வேத ப்ரத்யனானவனை –
ஓதி உணர்ந்தவர் முன்னா-
ஓதி உணர்ந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அவர்கள் நிந்தியரில் பிரதம பாவிகள் என்று கருத்து –
என் சவிப்பார் மனிசரே?–
எத்தை ஜபிப்பது -அவர்கள் சேதனரோ

———————————————————————————————

மனுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி அருளின எம்பெருமானுடைய போக்யதையை அனுசந்தித்து
பரவசராய் இருப்பார்கள் ஆகில் அவர்கள் எல்லா அறிவின் உடைய பலமும் கை வந்தவர்கள் என்கிறார் –

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

மனிசரும் -இத்யாதி
மனுஷ்யாதி ரூபேண அத்தியாச்சார்யமான பிறவியை உடையனாய்க் கொண்டு வந்து பிறப்பதும் செய்து இந்நீர்மையில்
தனக்கு ஒருவரும் அகப்படாதே தானேயாம்படி தனியனானால் சோம்பி விடக் கடவன் அன்றிக்கே இதுக்கு முன்பு
ஆஸ்ரிதற்காக பிறவாதானாய் திரு அவதாரங்களுக்கு எல்லாம் அடியாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து
அருளி சகல ஜந்துக்கள் பக்கலிலும் அனுக்ரஹ சீலன் ஆனவனை
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்-இத்யாதி –
நிரதிசய போக்யனானவனை அநஸூயுக்களாய் ஏத்திக் குனிப்பார் –
முனித்வம் ஆகிற தெளிவின்றிக்கே ஏத்திக் குனிப்பார் என்றுமாம் –

——————————————————————————————————-

ஆஸ்ரிதரான பாண்டவர்களுடைய விரோதிகளை போக்கின எம்பெருமானுடைய
குண அனுசந்தானத்தாலே சிதிலர் ஆகாதார் ஜநநீ க்லேசகாரிகள் என்கிறார் –

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

நீர்மை இல் நூற்றுவர் வீய-இத்யாதி
பந்துக்கள் ஜீவிக்க வேணும் என்னும் நீர்மை ஒன்றும் இன்றிக்கே இருக்கிற துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி
பாண்டவர்களுக்கு பிரசாதத்தை பண்ணி நின்று பூமிக்கு பாரமாம் படி பல்கின சேனை எல்லாம் முடிப்பதும் செய்து
சாரத்ய வேஷம் ஆகிற விலக்ஷணமான அழகை உடையவனை நினைத்து ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ஆடி –
நீர் மல்கு கண்ணினர் ஆகி-இத்யாதி –
கண்ண நீர் செற்றி சிதில அந்தகரணராய் ஓசியாதே சரீரங்கள் மாம்சளமாய் பிசல் பருத்து இருக்குமவர்கள்
வைஷ்ணவர்களுக்கு ஒரு பிரயோஜனத்துக்கு உறுப்பு அல்லர் –

———————————————————————————————

சம்சாரத்திலே இருந்து வைத்து -சர்வ காலத்திலும் சர்வ ஆசிரயணீயனான திருவேங்கடமுடையானுடைய குணங்களுக்கு
ஈடுபடுமவர்கள் அயர்வறும் அமரர்களிலும் சிரேஷ்டர் என்கிறார் –

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

நிரதிசய போக்யமான திருமலையில் நின்று அருளி என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானுடைய
விபூதிமுகமாக வாசகமான நாமங்களையும் அசாதாரணமான நாமங்களையும் சொல்லிப் பிதற்றி –
வைஷ்ணவர்கள் அல்லாதார் பித்தர் என்று சொல்லும் படி –
வைஷ்ணவர்களுடைய விஷயீ காரத்திலும் அவைஷ்ணவர்கள் இகழ்க்கையே புருஷார்த்தம் என்று கருத்து
மனுஷ்யர் சந்நிதத்தோடு அசந்நிதத்தோடு வாசி இன்றிக்கே லௌகீகர் சிரித்த அச் சிரிப்பே தாளம் போலே
உத்தம்பாகமாம் படி சசம்ப்ரம சேஷ்டிதத்தை உடையராய் அபி நிவேசம் மிக்கு கூத்தாடுமவர்கள் –

——————————————————————————————————

கைவல்ய புருஷார்த்த நிஷ்டரை நிந்தித்து மாற்று உள்ளார் எல்லாரும் பிரேம பரவசராய்
குணங்களை அனுபவியுங்கோள்-இதுவே புருஷார்த்தம் என்கிறார்-

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் சர்வேஸ்வரனாய் இருந்துள்ள எம்பெருமானை மனசிலே தயலுற யோகாப்யாஸம் பண்ணி
அவனோடு சாம்யத்தை பிராபிக்க வேணும் என்று துணிய வல்லாரை ஒழிய அல்லாதவர் எல்லாம் பகவத் குணங்களை
நெஞ்சிலே ஈடுபடும் படி அனுசந்தித்து கிளம்பி யாடி யவற்றை சொல்லிக் கூப்பிடுகையே கர்த்தவ்யம் –

—————————————————————————————————–

பகவத் குணங்களைக் கேட்டால் விக்ருதர் அன்றிக்கே இருக்கும் இருப்பாகிற அறிவு கேட்டைத் தவிர்ந்து
எல்லீரும் அவனுடைய குணங்களை அனுசந்தித்து பரவசராய் லஜ்ஜை அபிமானங்களை விட்டு அவனை ஏத்துங்கோள் என்கிறார்-

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-

கருமமும் கரும பலனும்-இத்யாதி –
புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களும் நியந்தாவாய் -சர்வ ஜகத் காரணமுமாய் வடிவு அழகையும்
கண் அழகையும் காட்டி அயர்வறும் அமரர்களைப் போலே என்னை அடிமை கொண்டவனை –
ஒருமை மனத்தினுள் வைத்து-இத்யாதி –
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஹ்ருதயத்தில் வைத்து சிதில அந்த கரணராய் கிளம்பி ஆடி –

——————————————————————————————————

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு-பகவத் குண அனுசந்தானத்தால் ஒரு விக்ருதி
பிறவாமை யாகிற மஹா பாபத்தை இது தானே நிச்சேஷமாகப் போக்கும் என்கிறார் –

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத்-இத்யாதி –
எம்பெருமானையே ப்ராப்யமும் பிராப்பகமும் என்று அத்யவசித்து இருக்கும் ஆஸ்ரிதரை நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராக்கி
அடிமை செய்வித்துத் கொள்ளும் மிக்கு இருந்துள்ள புகழை உடையவனாய் அவர்களோடு நித்ய சம்லிஸ்ஷடன் ஆனவனை –
அமரர் பிரானைஎம் மானை-
தான் ஒருவன் உளன் என்று அறியாத என்னை அயர்வறும் அமரர்களோடு ஓக்க அடிமை கொண்டவனை –
வாய்ந்த வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்-
வாய்ந்த திருநகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழி –

——————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: