திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-4–

தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு
ஸம்ப்ராந்தரான ஆழ்வார் பூதங்களையும் பவ்திகங்களையும்-விளக்குகளில் உஜ்ஜ்வல பதார்த்தங்களையும் ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்
ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில்
ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே
இவ்விபூதி யோகத்தால் தன்னுடைய அசாதாரண மான திரு மேனியால் பெறும் ஏற்றத்தையும் உடையனாய்
ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்
-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்
கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும்
அவற்றைச் சொல்லும் சொல்லாலே இவனைச் சொல்லி வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

——————————————————————————————————————————-

முதல் பாட்டில் இது திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவன் என்கோ!
சுருதி ஸ்ம்ருதி யாதிகளால் புகழப் பட்ட நன்மையை உடையனான அத்விதீய புருஷன் என்பேனோ
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களை உடைய பூமி என்பேனோ
திகழும் தண் பரவை என்கோ-தீ என்கோ! வாயு என்கோ!-நிகழும் ஆகாசம் என்கோ!-
ஸ்வ வ்யதிரிக்த பூத சதுஷ்ட்யம் ஸம்ஹ்ருதம் ஆனாலும் சில நாள் வர்த்திக்கும் ஆகாசம் என்பேனோ –
நீள் சுடர் இரண்டும் என்கோ!
மிக்க ஒளியை உடைய சந்த்ர சூ ர்யர்கள் என்பேனோ
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-கண்ணனைக் கூவு மாறே.————
ஓன்று ஒழியாமே இப்பதார்த்தங்கள் எல்லாம் என்பேனோ –

————————————————————————————————

பூதங்களினுடைய கார்யமான பதார்த்தங்களையும் அடைவே பேசி அவற்றை விபூதியாக உடையனான தன்மையை அருளிச் செய்கிறார் –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

நாவியல் கலைகள் என்கோ!-
நாவினால் இயற்றப் படா நின்றுள்ள வாயு கார்யமான வித்யைகள் என்பேனோ –
வித்யைகளுக்கு வாயு கார்யத்வம் ஆவது -வித்யா ரூப சப்த உச்சாரணம் -வாயு ஜன்ய பிரயத்தன கார்யம்
ஞான நல் ஆவி என்கோ!
ஆவி என்று லக்ஷணையாலே சரீரத்தை சொல்லுகிறது –
ஞானத்துக்கு சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது –

————————————————————————————————

இந்த விபூதி யோகம் அவனுடைய அப்ராக்ருதமாய் திவ்ய பூஷணாதி களாலே அலங்க்ருதமான திருமேனியோடு ஓக்க தகுதியாய்
இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக விபூதி கதனத்தின் நடுவே அவனுடைய திரு மேனியின் அழகைப் பேசுகிறார் –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

மற்றைப் பாட்டுக்களிலும் அவனுடைய அசாதாரணமான படியை பேசின இடங்களுக்கும் இதுவே பிரயோஜனம்
கதிர் -என்று ஒளி
சாதி மாணிக்கம் என்கிறது -நிர்த்தோஷமாய்-சகஜமான அழகை உடையவன் என்கை –

————————————————————————————————–

தேஜோ விசிஷ்டமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாக உடையனான படியைப் பேசுகிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

சாதி மாணிக்கம் என்கோ!
ஆகரத்தில் பிறந்த மாணிக்கம் என்பேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
நிறைந்த ஒளியை உடைய பொன் என்பேனோ -நீர்மையை உடைத்த முத்தம் என்பேனோ –
சாதி நல் வயிரம் என்கோ!-
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
விச்சேதியாத அழகை உடைய பிரகாசம் என்பேனோ
ஆதி அம் சோதி என்கோ!
வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கிற இருப்பு –
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை-அச்சுதன் அமலனையே.–
எனக்கு ஒரு துணை இல்லாத காலம் நிர்ஹேதுகமாக அடிமை கொண்டு என்னை மங்காத படி காத்தவன் –

———————————————————————————————————

ரஸ வஸ்துக்கள் எல்லாம் அவனுக்கு விபூதி என்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

நித்ய விபூதியோடே கூடி இருக்கும் இருப்புக்கு ஒரு நாளும் ஓர் அழிவு இல்லாதானாய் -தன் பக்கல் ஆச்ரயண லேசம் உடையாரை
உபேக்ஷிக்கை யாகிற தோஷம் இன்றிக்கே அவர்களை அங்கீ கரிக்கும் ஸ்வ பாவன் என்பேனோ –
நச்சப்படும் மஹா ஒளஷதம்
கீழ் சொன்ன அமுதம் போலே இருந்த சுவை
நெய்ச்சுவை என்பேனோ மது என்பேனோ –

————————————————————————————————-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்த ராசியை விபூதியாக உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

பிரமாண ஜாதத்தில் சார பூதமான வேதம் நாலும் என்பேனோ
வைதிக சமயத்துக்கு உப ப்ரும்ஹணமான சாஸ்திரங்கள் என்பேனோ
ஸ்ரவண மாத்திரத்திலே ஈடுபடுத்த வல்ல இசை என்பேனோ
இவற்றிலும் அற விலக்ஷண பாக்ய தமம் என்பேனோ
சாதன ரூபமான யத்னத்தின் அளவன்றிக்கே அதிமாத்ரமான பல ரூபம் என்பேனோ
வானவர் என்பது ப்ரஹ்மாதிகளை –

—————————————————————————————————–

ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாவற்றையும் விபூதியாய் உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வரூப ஸ்தித் யாதிகளும் மற்றும் உள்ளன வெல்லாம் என்பேனோ –
பரி பூர்ணமான மோஷாதி புருஷார்த்தம் என்பேனோ –
வி லக்ஷணமான அழகை உடையவனை –

—————————————————————————————————

ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளை விபூதியாக உடையானுடைய படியை பேசுகிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

ஒருவன் என்று ஏத்த நின்ற-நளிர் மதிச் சடையன் என்கோ!
பிரதானம் என்று ஏத்துகைக்கு பாத்தம் உண்டாய் நின்ற ருத்ரன் என்பேனோ -நளிர் மதி -குளிர்ந்த சந்திரன்
நான் முகக் கடவுள் என்கோ!-
சதுர்முகனான தேவம் என்பேனோ
அளி மகிழ்ந்து-கிருபையை உகந்து/ களி -என்று தேன்

——————————————————————————————————-

அவனுடைய விபூதி விஸ்தாரங்கள் தனித்தனியே பேச முடியாது -கார்ய காரண ரூபமான சேதன அசேதனங்கள் அடைய
அவனுக்கு விபூதி என்று ப்ரயோஜகத்தாலே சொல்லலாம் அத்தனை என்கிறார்-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

ஷூத்ர புருஷார்த்தத்தை இரந்தார்கள் என்று பாராதே தானே ஆயாசித்து அவர்களுடைய ப்ரயோஜனங்களை
முடித்துக் கொடுத்த பெரியோனை – அச்சுதனை -ஆஸ்ரிதற்கு ஸ்யுதி இல்லாத படி இருக்கிறவனை –

—————————————————————————————————–

சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மா தயா வியாபித்து நின்றால் தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் இருக்கும் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்-அவர் அவர் சமயந் தோறும்-தோய்வு இலன்;
சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் வைத்து அவற்றினுடைய துக்கித்தவ பரிணாம -இத்வாதி வியவஸ்தைகள் ஒன்றிலும் தோய்விலன்
அவரவர் என்று இரண்டுக்கும் உப லக்ஷணம்
புலன் ஐந்துக்கும்-சொலப்படான்;
சஷூராதி கரணங்களுக்கு விஷயமாக சொல்லப் படான்-
உணர்வின் மூர்த்தி;
ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்-ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,-அவனையும் கூட லாமே.–
அநாதி காலம் கார்ய காரண உபய ரூபமான ப்ரக்ருதியோடே கலசி இருக்கிற பிரத்யாகாத்மாவுக்கு
பிரக்ருதியினுடைய பரிணாமித்வாதிகள் தட்டாதே இருக்கிறா போலே எம்பெருமானுக்கு இரண்டோடு கலசி
இருந்து வைத்தே அவற்றினுடைய ஸ்வ பாவம் தட்டாதே இருக்கக் கூடும் –

—————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் கற்றவர்கள் நித்ய கைங்கர்யத்தை பெற்று அயர்வறும் அமரர்களாலே விரும்பப் படுவர் என்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

வண்டுகள் எல்லாம் கூடி வந்து அலைக்கும் படியான போக்யதையை உடைத்தான் மாலையையும் வர்ஷூக வலாஹம் போலே
இருக்கிற நிறத்தை உடையவனை
இத் திருவாய் மொழியில் பேசின விபூதி தோளில் தோள் மாலை உடன் நிறத்தோடும் ஓக்க தகுதி என்னும் இடத்தை
நிகமத்திலே சொல்லுகிறது என்று கருத்து –
ஏவம்வித திவ்ய ரூபத்தை உடையனாய்க் கொண்டு என்றும் திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் என்றும் சொல்லுவர்
அசேஷ தோஷ ப்ரத்ய நீகனாய் ஆஸ்ரிதரோடு நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவனாய் ஆச்ரித ஜன ஸமஸ்த துக்காபேநோதன ஸ்வ பாவனாய்
-பரம உதாரனாய் இருக்கும் என்றும் சொல்லுவர் -மாடு -பர்யந்தம் -பாடல் -கானம்

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: