திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-3–

உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று இவர் பிரார்த்திக்க
இப் பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல –இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில் உள்ள
அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி
அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று
-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

———————————————————————————————————————-

திருவேங்கடம் உடையானுக்கு எல்லா அடிமைகளும் செய்ய வேணும் -என்கிறார் –

ஒழிவு இல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்
உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே
மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற
வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்
செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்
கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து-
அடிமை கொள்ளுகைக்கு அத்தலையில் பாரிப்பு இருக்கிற படி
இவர் இருந்த இடத்தே பாரித்தார் -அவன் கலங்கா பெரு நகரின் நின்றும் வந்து பாரித்தான்
கம்பீரமான த்வனியை உடைய அருவி கைங்கர்ய ருசியை உடையாரை அழைத்தால் போலே இருக்கை
அர்ச்சிராதி கதியாலே-ஓரு தேச விசேஷத்திலே விலக்ஷண சரீரத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவ இவன்
இச் சரீரத்தோடு அனுபவிக்கலாம் படி ஸூ லபனாய் நிற்கிற திருமலையிலே
எழில் கொள் சோதி எந்தை –
துர்லபன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு -அந்த நிலம் மிதியாலே நிறம் பெற்ற அழகு
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத பிராப்தி -எந்தை -என்கிறது -ஸுலப்யத்தாலும் அழகாலும் தோற்பித்த படி சொல்லிற்று –
தந்தை தந்தைக்கே-
பரம சேஷி யானவனுக்கு -ப்ராப்ய பிரதானமான திரு மந்திரத்தில் உள்ளது எல்லாம் சொல்லுகிறது இப்பாட்டாலே –

————————————————————————————————————————-

இவ்வடிமை ஒரு தேச விசேஷத்திலே சென்றால் செய்யுமது அன்றோ -என்ன -அங்கு உள்ளாறும் இங்கே வந்து
அடிமை செய்யா நின்றால்-எனக்கு அடிமை செய்யக் குறை என் என்கிறார் –

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்-முந்தை –
அடியார் அடியார் -என்று ஸ்வ ஸ்வரூபத்தை நிரூபிக்கும் போது-அத்தலையே தொடங்குமா போலே
பர ஸ்வரூபத்தை நிரூபிக்கும் போது இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்லுகிறார்
வானவர் வானவர் கோனொடும்-
நித்ய ஸூ ரிகள் ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடும் கூட ஆராதன அர்த்தமாக தூவின புஷபங்கள் நில மிதியாலே செவ்வி பெறும்படியான திருமலை
சிந்து பூ-
திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு தோற்று அக்ரமமாக பிரயோகிக்கிற படி –
இங்கு உள்ளார் அங்கு சென்றால் மேன்மை கண்டு படும் பாடு எல்லாம் அங்கு உள்ளார் எல்லாம் இங்கு நீர்மை கண்டு படும் படி
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இ றே
மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க்-
பரம பதத்தில் சாவதி என்னும் படி யாயிற்று திருமலையில் வந்த பின்பாயிற்று புகழ் நிரவதிகம் ஆயிற்று
கார்எழில் அண்ணலே
நிர் குணன் ஆகிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத ஸ்வாமித்வம் –
கார் எழில் அண்ணலே-எந்தை தந்தை தந்தைதந்தைதந்தைக்கும்-முந்தை யானபின்பு
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி-வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்-

————————————————————————————————————————–

நீர் அனுபவிக்கப் பாரியா நின்றீர் -இது உமக்கு சித்திக்குமோ -என்னில் கண் அழிவு அற்ற ருசியை உடைய நித்ய சித்தருக்கு
தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கிறவன் நமக்குத் தரும் என்கிறார் –

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-

அண்ணல்-குறிஞ்சி நிலத்துக்கு நிர்வாஹகன் எண்ணுதல் -ஸ்வாமி த்வத்தை சொல்லுதல்
மாயன் -திருமலையில் நிலையால் அத்யாச்சர்யமான ஐஸ்வர்யத்தை உடையவன் –
அணிகொள்செந் தாமரைக்கண்ணன் –
அந்த ஐஸ்வர்ய ஸூ சகமான திருக் கண்களை உடையவன் -தனக்குத் தானே ஆபரணமாக திருக் கண்கள்
செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
அந்நோக்கில் அகப்பட்டாரை துவக்கும் முறுவல்
ஸ்மிதத்திலே துவக்கு பட்டாரை கொண்டு மூழ்கும் ஸ்ரமஹரமான வடிவு
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து-
தெளிந்து நிறைந்த சுனைகளால் அலங்க்ருதமான திரு மலையிலே -வடிவே அன்றிக்கே திரு மழையும் ஸ்ரமஹரமாய இருக்கிற படி
எண் இல் தொல்புகழ் –
எண்ணிறந்த ஸ்வா பாவிகமான குணங்களை உடையவன் -யதா ரத்நானி ஜலதே –
வானவர் ஈசனே. –
அக் குணங்களுக்குத் தோற்று அடிமை செய்கிற நித்ய ஸூ ரிகளுடைய சத்தாதிகளை நடத்துகிறவன்
கண் அழிவற்ற ருசி உடையாரை தன்னை அனுபவிப்பிக்கும் என்கை –

——————————————————————————————————-

அத்யந்தம் நீசனான என் பக்கலிலே சங்கத்தை பண்ணினவனுக்கு நித்ய ஸூரிகளுக்கு தன்னைக் கொடுத்தான் என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

ஈசன் வானவர்க்கு என்பன்-
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் என்பேன்
என்றால் அது-தேசமோ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கை ஏற்றம் அன்றோ என்னில் -அது வைகுண்ட நாதனுக்கு ஏற்றம் அத்தனை போக்கி
திரு வேங்கடத் தானுக்கு?
திருவேங்கடம் உடையானுக்கு தேஜஸ் ஸோ-
திருமலையை இட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்படி நிற்கிறவனுக்கும் இது ஒரு ஏற்றமோ
கானமும் வானரமும் விடுமா இவற்றுக்கும் ஓலக்கம் கொடுக்கிறவனுக்கு நித்ய ஸூ ரிகளுக்கு ஓலக்கம் கொடுக்கை ஏற்றமோ
முடி சூடினவனை தட்டியிலே இருந்த படி சொல்லுகை ஏற்றமோ
திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் –
என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இ றே –
அ நாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –
என்கண்-பாசம் வைத்த –
வானவர்க்கு ஈசன் ஆனவன் என் கண் பாசம் வைத்தான்
அவர்களோடு கலந்து அவர்கள் சத்தைக்காக
என்னோடு கலந்து தனக்கு சத்தை உண்டாக்குகைக்காக
தன் விஷயத்தில் பாசம் உண்டாம் படி என்னைப் பண்ணினான் என்றும் சொல்லுவார்
பரஞ்சுடர்ச் சோதிக்கே.–
என்னோட்டை கலவியாலே அது உஜ்ஜவலனமாம் படி
சங்கத்தாலே கலந்தான் என்னும் இடம் வடிவில் தோற்றி இருக்கை-

—————————————————————————————————-

திருவேங்கடமுடையான் படிக்கு என்னை விஷயீ கரித்தான் என்றால் தான் குணமாகப் போருமோ-என்னிலும்
தாழ்ந்தாரைத் தேடி அது பெறாதே இருக்கிறவனுக்கு – என்கிறார் –

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5

சோதி ஆகி,-
நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியை உடையனாய் –தேஜஸாம் ராசி மூர்ஜிதம்
எல்லா உலகும் தொழும்-
எல்லா உலகும் தொழும் படி யானவன் -இப்படி சொன்னால் தான் அவனுக்கு இது ஒரு ஏற்றமோ
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசன் என்னா-ஈசன் வானவர்க்கு என்பான் -என்று அநு பாஷித்தால் போலே
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்கிறாரோ என்னில் -விழுக் காட்டாலே சொன்னார் -எங்கனே என்னில்
கீழே நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்று சொன்னாரே -தம்மைத் தாழ்வுக்கு எல்லாரிலும் அவ்வருகாக
மேலில் படி அமிழ்ந்து என்றால் கீழில் படி அமிழ்ந்து என்ன வேண்டா இ றே
தாம் தொழுத போதே எல்லா உலகும் விழுக் காட்டாலே தொழுததாக குறை இல்லை –
தொழும் –
யதார்ஹம் கேசவ வ்ருத்தி மவஸா-பிரதி பேதிரே -என்று விமுகரும் தொழும் படி இ றே அழகால் வந்த ஒளி இருப்பது
ஆதி மூர்த்தி –
ஜகத் காரண பூதன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் என்னவுமாம் –
என்றால்அளவு ஆகுமோ,-
எண் கண் பாசம் வைத்த இது ஒரு ஏற்றமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்-
ப்ராஹ்மணோ நாம் தனம் வேத -என்கிற வேதனருடைய
வேதைஸ்ஸ சர்வைர் அஹம் ஏவ வித்ய -என்கிறபடியே வேதைக சமதி கம்யனாய்-பரம போக்யனானவனை –
ஆனந்தோ ப்ரஹ்ம-ரஸோவை ச -சர்வ ரஸா -என்னக் கடவது இ றே
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?-
சீருக்கு தீதாவது -ஆஸ்ரயிப்பாருடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை
திரு வேங்கடத் தானை-வரையாமை குணம் அன்றிக்கே ஸ்வரூபம் ஆகை –

——————————————————————————————————–

அவன் படி இதுவானாலும் பிரதிபந்த கர்மங்கள் விக்நத்தை பண்ணாவோ என்னில் -அடிமையில் இழியவே தானே நசிக்கும் என்கிறார் –

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

வேங் கடங்கள்
கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது
மெய் மேல்வினை முற்றவும்,-
தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –
உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்
உத்தராகத்துக்கு விநாசம் சொல்லுகிறது நாச பர்யாயமான நைஷப்பல்யத்தை பற்றி
இரண்டும் இவனை ஸ்பர்சியாது என்கை –
மெய் என்கிறது துஷ்ட காரண பிரசங்கம் உள்ள ப்ரத்யக்ஷம் போல் அன்றிக்கே நிர்த்தோஷ சாஸ்த்ர சித்தம் என்கை -ஆனால் கர்த்தவ்யம் என் என்னில்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,-
தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும்
நன்று என்று இருக்கிறது என் என்னில்
வேங்கடத்து உறைவார்க்கு –
சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது
நம –
தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது
என்னல்-
யுக்தி மாத்திரமே அமையும்
வருணனுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே –
இவ்விடத்தில் பட்டர் மொட்டைத் தலையன் விஷயமான இதிகாசம் –
ஆம்
ஸூசகம்
கடமை
பிராப்தம்
அது சுமந் தார்கட்கே.–
இக் கோட்டை எல்லாம் சுமந்தார்கட்க்கு என்று என்று ஆழ்வார் கருத்தால் யாதல்
இது தானே குவாலாய் இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே யாதல்
பூயிஷ்ட்டாம் தே நம உக்திம் விதேம-

———————————————————————————————————–

அபேக்ஷிதமான அடிமையைத் திருமலை தானே தரும் என்கிறார் –

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
சிலாக்கியமான புஷபாத் யுபகரணங்களை சுமந்து கொண்டு –
சுமந்து என்கிறது கனத்த ஆதாரத்தோடு செய்கை என்னுதல்-
இவ்வாதாரத்தை அவன் தான் கனக்க நினைத்து இருக்கையாலே என்னுதல்
ஸ்ரீ புருஷோத்தமுடையான் செண்பகப் பூவின் கனத்தை பொறுக்க மாட்டாதாப் போலே
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நித்ய ஸூ ரிகள் -ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடு என்னுதல்
தேவர்களோடு ப்ரஹ்மா என்னுதல் -அமர்ந்து -அநந்ய பிரயோஜனராய்
நமன்று எழும்-
தொழுது எழு-என்னும் தம்மைப் போலே என்கை -பக்கன அபிமானராய் உத்தியோகிக்கும்
திருவேங்கடம் –
பிரயோஜ நான்தர பரரை-அநந்ய பிரயோஜனர் ஆக்கும் -நில மிதியாலே
நங்கட்குச்
ருசி உடைய நமக்கு
சமன் கொள் வீடு தரும்-
பரமம் சாம்யம் உபைதி –ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்கிறபடியே சாமியா பத்தி என்னுதல்
ஸ்வரூபத்துக்கு சத்ருசம் ஆனது என்னுதல்
திருமலை ஆழ்வார் தம்முடைய சேஷத்வத்தை நமக்கு தருவர் என்னுதல்
தடங் குன்றமே.–
திருவேங்கடமுடையானுக்கு ஸ் வைர சஞ்சாரம் பண்ணுகைக்கு இடம் உடைத்தாய் இருக்கை –

————————————————————————————————————-

திருமலை தானே நம் விரோதியைப் போக்கும் என்கிறார் -அவனுக்கும் ப்ராப்யமான திருமலை நமக்கு ஓன்று
தர வேணுமோ -அது தானே ப்ராப்யம் என்கிறார் என்றுமாம் –

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
ஒரு மலையைக் கொண்டாயிற்று துக்க நிவ்ருத்தி பண்ணிற்று –
கோ கோபீ ஜன சங்குலம் -அதீவார்த்தம் -என்று அவர்கள் குளிரடி உண்கிற தசையில் ரஷித்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
அது ஓரூர் அளவிலே இ றே –
இந்திரனுடைய பூமியை மஹா பலி பறித்துக் கொள்ள எல்லை நடந்து மீட்டு பூமியை ரஷித்த உபகாரகன் –
பரன் –சர்வேஸ்வரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை-
சேஷியானவன் விரும்புகிற தேசம் சேஷ பூதனுக்கு ப்ராப்யமாகச் சொல்ல வேணுமோ
ஒன்றுமே தொழ –
ஒன்றையுமே அனுபவிக்க –
உள் நிற்கிறவனை தேடிப் போக வேண்டாம் என்கை –
நம்வினை ஓயுமே.–
அடிமைக்கு விரோதியை திருமலை தானே போக்கும் என்னுதல் –
ஒரு ப்ராப்யம் பெற்றிலோமே -என்னும் வியசனம் நீங்கும் என்னுதல் –

————————————————————————————————————–

துக்க நிவ்ருத்திக்கு திருமலை ஆழ்வார் எல்லாம் வேணுமோ -திருமலைக்கு அவயவ பூதனான திருவேங்கடமுடையான் அமையும் என்கிறார் –

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப்
ஜென்ம ஜரா மரணாதிகள் ஓயும் -ஓயும் என்கையாலே இதுக்கு முன்பு உச்சி வீடும் விடாதே சென்றது என்கை
பிணி -சரீர சம்பந்த ஹேதுவான கர்மம் –
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து-ஆயன்-
துக்க நிவ்ருத்திக்காக திருமலையில் வந்து நின்ற ஸூ லபன் ஆனவன்
நாள்மலராம் அடித் தாமரை-
நிரதிசய போக்யமான திருவடிகளை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–
மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு
இது இ றே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பன்குடி நீர் –

————————————————————————————————————–

திருமலையே ப்ராப்யமான பின்பு எல்லாரும் கரண பாடவம் உள்ள போதே திருத் தாழ் வரையை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-

வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
திருமலைக்கு போகைக்காக ஈஸ்வரன் நியமித்த ஆயுசின் இறுதியினுடைய எல்லையான நாள் குறுகி
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
ஸ்ரத்தை யேயாய் கரண பாடவம் இன்றிக்கே இருக்கும் தசையில் சென்று திரு மலையை அனுபவிக்க ஒண்ணாத படி கலங்கி
அவசன்னர் ஆவதற்கு முன்பே ஆஸ்ரயிங்கோள் -இருந்ததே குடியாக அபேக்ஷிக்கிறார்
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
ஸ்வ ஸ்பர்ஸ ஸூ காதி அதிசயத்தால் விகசிதமான பணங்களை உடைய திரு அனந்த ஆழ்வானைக் காட்டிலும் விரும்பி வர்த்திக்கிற திரு மலை
திரு மலையை திரு அனந்த ஆழ்வானாக வும் சொல்லக் கடவது
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–
செறிந்த சோலையையும் -பரப்பு மாறப் பூத்த பொய்கையும் உடைய திருத் தாழ் வரையை –
தாள்வரை –எய்த்து, இளைப்பதன் முன்னம்- அடைமினோ-வைத்த நாள்வரை எல்லை குறுகி எய்த்து இளைப்பதன் முன்னம்- சென்று அடைமினோ-என்றுமாம் –

——————————————————————————————————————

நிகமத்தில் இது திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர் ஆழ்வார் மநோ ரதித்த படியே
அடிமையையும் செய்யப் பெறுவார் என்கிறார் –

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-

தாள் பரப்பி –
கடினமான தரையிலே நாள் பூவை பரப்பினால் போலே யாயிற்று திருவடிகளை பரப்பிற்று –
மண் தாவிய ஈசனை-
உலகம் அளந்த பொன்னடி -என்று திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாக சொல்லக் கடவது
வரையாது ஒழி கையாலும்-ஜகாத்தை அடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொள்ள நிற்கிற நிலையாலும் –
ஈசனை –
ஸ்வாமியை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
இவருக்கு அடிமையில் மநோ ரதத்தில் பரப்போ பாதி போருமாயிற்று-திருச் சோலையில் பரப்பு –
கேழ்இல்
ஒப்பு இல்லாத -இப்பத்து ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தை சொல்லுகையாலே ஒப்பு இல்லாத பத்து
ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–
இவர் பிரார்த்தித்த கைங்கர்யத்தை பெற்று சிறியார் பெரியார் என்று இன்றிக்கே தம் தாம் பேறாக புகழும் படி அடிமை செய்யப் பெறுவர்கள் –

——————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: