திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -3-1–

திருமலையின் போக்யதையை அனுபவித்த ஆழ்வார் -வேதங்கள் வைதிக புருஷர்கள் ப்ரஹ்ம ருத்ரர்கள் தொடக்கமானவருடைய
ஸ்தோத்ராதிகளுக்கு அபூமியாய் -ஸமாச்ரிதர்க்கு அத்யந்த பராதீனராய் -வடமா மலை யுச்சி என்னுமா போலே
திருமலைக்கு அவயவமாய் இருபத்தொரு கற்பக தரு போலே இருக்கிற அழகருடைய
அபரிச்சேத்யமான ஸுந்தர்யாதிகளை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –

——————————————————————————————————

அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திரு அணிகலன்களும் உண்டான ஸூ கடித்த்வத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச்சோதி என்று தொடங்கி-உன்னுடைய திரு முகத்தின் ஒளி முடிச்ச சோதியாய் விகசிதம் யாயிற்றோ –
திருவடிகளின் அழகு ஆசன பத்மமாமாயக் கொண்டு விகசிதம் யாயிற்றோ
படி -என்று தொடங்கி உன்னுடைய கடிப் பிரதேசத்தின் விலக்ஷணமான ஒளி ஸ்வாபாவிகமான அழகை
உடைத்தான திருப்பி பீதாம்பரமாயும் மற்றும் உள்ள திரு அணிகலன்களாயும் திரு மேனியில் கலந்ததோ
பிராட்டியும் நீயும் கூட எனக்கு அருளிச் செய்ய வேணும் –

——————————————————————————————————–

அழகருடைய அழகுக்கு ஒப்பாக போரு வன இல்லாமையால் லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரம் அங்குத்தைக்கு
குண தானம் பண்ண மாட்டாத படி அத்யாவஹமாம் அத்தனை என்கிறார் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

சொல்லில் -உன்னோடு கூடுவன உரைத்து -சத்ருசங்கள்- மிகவும் இருந்தபடி ஒழிய
தோற்றிற்று சொல்லுகையாலே அவாசகமாய்-அவாத்யஹமுமாம் –
சிலவற்றை த்ருஷ்டாந்தமாக சொல்லி ஸ்துதிக்கும் ஸ்தோத்ரத்துக்கும் நிலம் அல்லாத அழகின் மிகுதியை உடையவனே –

————————————————————————————————————–

எம்முடைய படி வேறு சிலர்க்கு பேச நிலம் அல்லவாகில் நீர் பேசினாலோ என்னில் -எனக்கு முடியாது என்கிறார் –

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரஞ்சோதி நீயே -அழகாலே எல்லாரிலும் மேம்பட்டு மிக்கு இருக்கையாலே
நின் இகழ்ந்து பின் என்று தொடங்கி -உன்னைத் தவிர மாற்று ஒரு பரஞ்சோதி இல்லாமையால் ஒப்புக்கு இன்றிக்கே வர்த்தியா நிற்கையாலும் பரஞ்சோதியாய்
இப்பிரபஞ்சத்தை எல்லாம் உன் சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கையாலே ஜகத் காரணத்வ ப்ரயுக்தமான உத்க்ருஷ்ட தேஜஸையும்
உடையையாய் ஆஸ்ரித ஸூ லபன் ஆனவனே -பண்பு -படி –

————————————————————————————————————-

ஸமஸ்த சேதனரும் அத்யந்த வி லஷணனாய் உபநிஷத் ரகஸ்யனான உன்னை இழந்தே போம் அத்தனை ஆகாதே
என்று கொண்டு அழகர் உடைய திரு அழகின் மிகுதி சொல்லுவிக்கச் சொல்லுகிறார் –

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

மாட்டாதே -என்று தொடங்கி -ப்ரஹ்மாதி பீபீலிக அந்தமான் ஸமஸ்த சேதனரும் பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான
தங்கள் அஞ்ஞானத்தாலே நிதி போலே ஸ்லாக்கியமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள உன்னுடைய திருவடியை அனுசந்திக்கைக்கு
அறிவுடையார் இன்றிக்கே இருக்கச் செய்தே-அதுக்கு மேலே அறிவைக் கெடுக்கும் ஸ்வ பாவமாய் ஒன்றோடு ஓன்று சேராதே
பாஹ்ய சமய புத்தியை பிரவர்த்திப்பித்தாய் –
மலர்த்துழாய்-என்று தொடங்கி பேர் அளவுடைய உன்னுடைய திரு உள்ளத்தையும் கூட
அந்நிய பரமாக்க வல்ல திருத்த துழாய் முதலான போக்கிய ஜாதத்தாலே நீ ப்ரவண சித்தனனாய் –

———————————————————————————————————-

அஞ்ஞமான லோகம் மாட்டாதாகில் நீர் பேசினாலோ என்று எம்பெருமான் அருளிச் செய்ய –
நிஸ் ஸீமமான குண விபூதி யாதிகளை உடைய உன்னை என்னால் முடிய பேச முடியாது என்கிறார் –

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

யத்ன ஸித்தம் அன்றிக்கே சகஜமாய் உள்ள நிரதிசயதம பல ரூபமாய் விகஸ்வர தேஜோ ரூபமான திருவடியை உடையையாய்
யத்நேந சம்பாதிக்க வேண்டாதே-சகஜமான ஞானத்தையும் மற்றும் எல்லையில்லாத குண விபூதியாதி களையும் உடையையாய்க்
கால த்ரயத்தாலும் லோகத்தை ஒரு படியே ரஷிக்கிற உன்னுடைய குணங்களை -உலக்க -முடிய –

———————————————————————————————————-

வேதங்கள் எங்கனே நம்மை ஸ்துக்கிற படி -அப்படியே நீரும் நம்மை ஸ்துதிப்பீர் என்ன –
அவையும் உன்னை ஸ்துதிக்கையில் உபக்ராந்தமாய் நிவ்ருத்தமான அத்தனை -இங்கனே இருக்கிற உன்னை
அளவில்லாத நான் ஸ்துதிக்க விரகு உண்டோ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

லோகம் தோறும் தர தம பாவேந உண்டான அத்யேதாக்களுக்கு ஈடாக சிறுத்தும் பெருத்தும் இருக்கிற ப்ரதிபாதிகமான வேதங்கள்
எல்லாம் உன்னுடைய குண ஏக தேச விஷயம் ஆயிற்று ஒழிய புறம்பு போயிற்று இல்லை –
வேதங்கள் உன்னுடைய கல்யாண குண விஷயம் ஆயிற்று என்னும் இத்தனை யல்லது உன்னை உள்ளபடி
எல்லாம் அறிந்து பேசிற்று என்ன முடியாது என்றுமாம் –
பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி மிகா நின்றுள்ள திருத் துழாயை திரு முடியில் உடையையாய்
நிரதிசய போகியையான பெரிய பிராட்டியார் நித்ய அனுபவம் பண்ணி வாழ்கிற திரு மார்பை உடையவனே –

—————————————————————————————————

இருந்ததே குடியாக -எல்லாரும் ஏத்துதல் -அதிக ஞானரான ருத்ராதிகள் ஏத்துதல் செய்தாலோ என்னில் –
த்வத் ஸ்ருஷ்டனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டராகையாலே சங்குசித ஞானரானவர்களுடைய ஸ்தோத்ரமும்
உன்னுடைய கல்யாண குணங்களுக்கு திரஸ்காரத்தைப் பண்ணும் அத்தனை -என்கிறார் –

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

ஒருவர் ஏத்தின இடம் ஒருவர் ஏத்தாதே -சர்வாதிகாரமாக ஏத்தினாலும் ஏத்த முடியாதே
ஏகார்ணவத்திலே சயா நயனாய்க் கொண்டு -லோகங்களையும் படை என்று கொண்டு சதுர்முகனை உன் சங்கல்பத்தாலே முதலிலே படைத்தவனே
மிக்கு இருந்துள்ள ஞானாதி குணங்களை உடையரான ருத்ர முகரான தேவர்கள் ஸ்தோத்ர கரண சக்தியோடு உத்யுக்தராய்
ஒரோ பிரயோஜனங்களிலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் எல்லாம் அகப்படும்படி விரகுகளாலே கால தத்வம் உள்ளதனையும்
நின்று ஸ்தோத்ரம் பண்ணினால் -சூழ்ந்து -சூழ்ந்து என்னவுமாம் –

—————————————————————————————————-

உபய பாவனை உடையனான ப்ரஹ்மாவை வனஸ்பதி கோடியிலே நிறுத்தி அதிசயித ஞானனான
உத்ப்ரேஷிதனான ப்ரஹ்மா ஏத்தினாலும் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு திரஸ்காரமாம் அத்தனை -என்கிறார் –

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

ஹேய ப்ரத்ய நீகமாய் -சுத்த சத்வ மய தேஜோ ரூபமாய் சங்குசிதமாதல்-விகசிதமாதல் – செய்யாதே
நிரதிசய போக்யமாய்க் கொண்டு என்றும் ஏக ரூபமாய் இருக்கிற திரு மேனியை உடையையாய் -அவற்றை நிர்வஹிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
அப்ராக்ருதமான ஞானாதி பூஷணங்களை உடையனாய் இருப்பான் ஓர் அமரர் கோன் உண்டாய் அவன் உன் திருவடிகளிலே
ஸ்தோத்ர ரூப பரிசரியைகளைப் பண்ணினால் சதுர் முகன் தான் ஆகவுமாம்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி-ஹேய பிரதி படமான உன்னுடைய திருவடிகளின் அழகு –

——————————————————————————————————

எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்கிறார் –

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்காத கூர்மையை உடைய நேமியோடு கூடின திரு வாழியை தர்ச நீயமாம் படி வலவருகே தரியா நின்று கொண்டு
தொழ வேணும் என்னும் காதலை உடைய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரக்ஷித்து அருளுகைக்காக
பெரிய திருவடியை ப்ரேரித்து நடத்திக் கொண்டு தோற்றினாயே-
அநேக கார்யங்களிலே பிரயோகித்தாலும் மழுங்கக் கடவது அன்றிக்கே மிகவும் உஜ்ஜவலமாகக் கடைவதான
உன்னுடைய சங்கல்ப ரூப ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
திரு நாபீ கமலத்தை அடியாக உடைய சம்சாரத்திலே அடிமை யானார்க்கு ரக்ஷை பண்ணினால்
பெரு முதலியாய் இருந்து வைத்து திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு தானே தடுமாறி கொண்டு வந்து உதவும் என்னும்
இவ் வழகிய தேஜஸ் ஸை இழந்தாய் ஆகாதே -தொழும்பு -அடிமை / ஆயார் -ஆனார் –

——————————————————————————————————–

வேதைக சமதி கம்யனாய் சர்வேஸ்வரனாய் இருந்த உனக்கு த்வத் த்ருஷ்டராய் உன்னாலே லப்த ஞானரான
ப்ரஹ்மாதிகள் ஈஸ்வரன் என்று அறிந்து ஏத்த இருக்கும் இது விஸ்மயமோ என்கிறார் –

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

அநாஸ்ரிதற்கு தோற்றாமே ஆஸ்ரிதற்கு காட்டும் ஸ்வபாவமான வேத பிரதி பாத்யமான நிரதிசய யோக்கியதையை உடையையாய்
ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவ்வுலகத்துக்கு ஸ்ருஷ்டியாதி உபகாரங்களை பண்ணினவனே –

———————————————————————————————————–

நிகமத்தில் இது திரு வாய் மொழியைக் கற்றாரை உஜ்ஜீவிப்பித்து பின்னை சாம்சாரிக துக்கத்தை
எல்லாம் இது திருவாய் மொழி தானே போக்கும் என்கிறார் –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கண்டதாகில் விஸ்மயமாம் படி இருக்குமவை எல்லாம் இங்கே கண்டதாகில் விஸ்மயம் இல்லாத படியை உடையனாய்
யதாபூத வாதியான வேத ப்ரதிபாத்யனாய் உள்ளவனை -சயப் புகழ் -சம்சாரத்தை வென்ற புகழ்
துயக்கின்றி-சம்சய விபர்யய அஞ்ஞானங்கள் இல்லாத படி –

—————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: