திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -2-3-

எத்தனையேனும் அளவுடையார்க்கு பாஹு பலத்தால் சம்பாதிக்க ஒண்ணாததுமாய் -தமக்கு நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்தமுமாய்
நிஸ் சமாதிகமுமாய் இருந்துள்ள பகவத் சம்ச்லேஷ ஸூ கத்தை அனுபவித்து அப்படிப்பட்ட ஸூ கம் தம்மால் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே
அதுக்கு நிலவரான அயர்வரும் அமரர்களோடே கூட அனுபவிக்கைக்காக அவர்களை நான் என்றோ கிட்டுவது -என்று மநோ ரதித்து முடிக்கிறார் –

—————————————————————————————————

அபரிச்சேதயமான ஸூகம் பிறக்கும் படி எம்பெருமானும் நானும் கலந்தோம்
இது எல்லாம் உன்னால் வந்த ஸம்ருத்தி இ றே என்று நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே நல்லை போ –
பிரக்ருதியிலே இருந்து வைத்தே பகவத் குணங்களை தாரகமாகக் கொண்டு வாழ்கிற நெஞ்சே –
பிரக்ருதியே தாரகமாக வாழ்கிற நெஞ்சே -என்று பழைய தசையை சொல்லிற்று ஆகவுமாம்
நல்லை-
நல்லை என்று கொண்டாடுகிறது
உன்னைப் பெற்று-வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
நீ பாங்கு ஆகையால் அயர்வறும் அமரர்களாகி வைத்து என்னொட்டை சம்ச்லேஷத்துக்கு உள்ள -விக்னங்களை
எல்லாம் போக்கி -என்னை அடிமை கொண்டு -அத்தாலே
தானும் யானும்
நிரதிசய போக்யனான தானும் -தன்னோடு யதா மநோ ரதம் சம்ச்லேஷிக்கப் பெறாமையாலே வாயும் திரையுகளில் படியே மிகவும் நோவு பட்ட நானும்
எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
சர்வ ஸூகமும் இக் கலவியாலே உண்டாம் படி பூர்ணமாகக் கலந்தோம்
ரஸவஸ்துக்கள் எல்லாம் சேர்ந்தால் அதினுள்ளே சர்வ ரசமும் உண்டாய் இருக்குமா போலே
இதிலே சொன்னவை சர்வ வஸ்துக்களும் உப லக்ஷணம் –

—————————————————————————————————-

நிரபேஷனாய் இருக்கிற நீ என் பக்கலிலே-சா பேஷனாய்க் கொண்டு என் ஹிருதயத்தையும் எனக்கு அனுகூலமாக்கி
எனக்கு பண்ணின உபகார பரம்பரைகளை என்னால் பரிகணித்து முடிய ஒண்ணாது என்கிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

சமாதிக தரித்ரனாய் அத்யாச்சர்யமான படியை உடையவனே -ஆச்ரித ஸூலபவத்வார்த்தமாக தேவ மனுஷ்யாதி சஜாதீயனாய்
ஒருவன் தான் தனக்கு பண்ணிக் கொள்ளும் நன்மைகளையும் -பெற்ற தாய் செய்யும் நன்மைகளையும் -தமப்பன் செய்யும் நன்மைகளையும்
– ஆச்சார்யன் செய்யும் நன்மைகளையும் -செய்து இவ்வழியாலே என்னை அடிமை கொண்ட ஸ்வாமி –

——————————————————————————————————-

உனக்கு என்ன உபகாரம் செய்தோம் -என்று எம்பெருமான் கேட்க -என் பக்கல் யோக்யதை இன்றிக்கே இருக்க
-உன்னோட்டை கலவிக்கு என்னை நிலவனாக்கி வைத்தாய் -என்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

மிகவும் அறிவு கேட்டைப் பண்ண வற்றான சம்சாரத்திலே இருக்கிற என்னை அறிவு பிறக்கைக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலேயே
அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்
அழகிலே மஹா பலி மதி மயங்கி ஈஸ்வரன் என்று ஆராயாதபடி வாமனனாய் மநோ ஹராமான பேச்சாலே மஹா பலி மதி மயங்கும்படி பண்ணி
அவன் சர்வ ஸ்வாபஹாரத்தை பண்ணினாய்
அப்படியே என்னுள்ளே புகுந்து உன்னுடைய குண சேஷ்டிதங்களைக் காட்டி வசீகரித்தது –

———————————————————————————————————

தமக்கு எம்பெருமான் பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் காணாதே தடுமாறுகிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

அத்யந்த நிக்ருஷ்டனான என்னுடைய ஆர்த்தி தீரும்படி-உன் பேறாக வந்து கலந்த மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக என் ஆத்மாவை உனக்குத் தந்தேன் –
என் ஆத்மாவுக்கு சேஷியாய் இருக்கிற நீ பிரளயம் நலியாத படி லோகங்களை எல்லாம் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டால் போலே
உன்னைப் பிரிந்து நான் பட்ட வியசனம் எல்லாம் தீரும்படி என்னோடே வந்து கலந்து என்னை அடிமை கொண்டவனே
கொடுக்கப் படுகிறேனாய் நிற்கிற என்னோடும் கொடுக்கிறேனாய் நிற்கிற என்னோடும் எனக்கு என்ன அடைவு உண்டு -உன்னதை நீ கொண்ட பின்பு –

———————————————————————————————————-

பிரளய ஆர்ணவத்தில் மக்நமான ஜகத்தை எடுத்து அருளினால் போலே -சம்சார சாகரத்தில் முழுக்கிக் கிடக்கிற என்னை
உன் திருவடிகளில் உறவை அறிவித்து எடுத்து அருளுகையாலே இனி உன் திருவடிகளை பெற்றேன் என்று திருப்தர் ஆகிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
திருவடிகளில் அடைவிலர் ஆகில் எத்தனையேனும் அளவுடையாருடைய அறிவுகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத என் நாதனே –
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே-
ஓர் அளவு இல்லையே யாகிலும் திருவடிகளில் ஆசை உடையோருக்கு மோக்ஷ ஸூ கம் போலே போக்யமானவனே
பக்திமான்களில் பரிகணிக்கப் படாதே இருக்கிற எனக்கும் அத்யந்த சித்த போக்யமே
வீட்டு இன்பம் -அவர்கள் இருந்த இடத்தே வந்து போக்யமாகையும்-
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்-நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே-
சம்சாரியாய் திருவடிகளில் உறவும் அறியாது இருக்கும் காலத்தில் திருவடிகளுக்கு பெறுகைக்கு அடியான ஸூக்ருதத்துக்கு உத்பாதகனே
நுனியார் கோடு-கூர்மை மிக்க கொம்பு –

———————————————————————————————————–

அநாதி காலம் விஸ்லேஷித்த விஸ்லேஷம் எல்லாம் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே சம்ச்லேஷிக்கை யாலே இன்றோ பெற்றது –
இவ்வாத்மா உள்ள வன்றே தேவரீரைப் பெற்றேன் அல்லவோ என்கிறார் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

ஆஸ்ரிதருடைய பாபங்களை மறுவல் இடாத படி போக்குவதும் செய்து ஒருவராலும் கலக்க ஒண்ணாத அறிவைக் கொடுக்கும் ஸ்வ பாவனாய்
உனக்கே தீர்ந்து உன்னால் அல்லது செல்லாதே இருக்கிறவர்கள் ஹ்ருதயத்தின் நின்றும் ஒருகாலும் பிரியாதே இருந்து
உன்னைப் பிரிந்து அவர்கள் ஆத்மா மங்கிப் போகாத படி பரிஹரித்து
அத்தாலே உஜ்வலனாய் பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியான சூர்பணகையை போக்கினால் போலே
அவர்களோட்டை பரிமாற்றத்துக்கு விரோதியைப் போக்கும் ஸ்வபாவனாவனை –

————————————————————————————————-

கலந்த கலவிக்கு விச்சேதம் பிறக்கிலோ வென்று சங்கித்து -விஸ்லேஷிக்கில் தரிக்கும் பிரகிருதி அல்ல என்று
என்னைத் திரு உள்ளத்திலே கொண்டு அருள வேணும் என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே-
பழையதாய் -வி லக்ஷணமாய் -அப்யஸிக்கப் படுவதுமாய் -யாழ் விஷயமாக ப்ரவ்ருத்தமான சாஸ்திரம் சொன்ன
லக்ஷணத்தை உடைய நரம்பாலே பிறந்த முதிரான ரசம் போலே போக்யமானவனே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே-
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான அயர்வறும் அமரர்கள் எல்லாருக்குஎப்போதும் அனுபவித்தாலும் தொலையாத போக்யத்தை உடையையாய்
சம்சாரிகளையும் அந்நிய பரதையை கெடுத்து உன் பக்கலிலே பிரவணர் ஆக்கிக் கொள்ளுமவனே-
உன் திருவடிகளுக்கு நல்லார் பலரும் எப்போதும் எப்போதும் அனுபவியா நின்றாலும் தொலையாத போக்யதையை உடையையாய்
அவர்களுக்கு தத் அனுபவ விரோதிகளை போக்குமவனே -என்றுமாம் –
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–
நிரதிசய போக்யனாய் பரம உதாரனாய் நிர்ஹேதுகமாக எனக்கு உன்னைத் தந்தவனே -உன்னை ஒழியத் தரியேன் –

——————————————————————————————————-

கீழ் பாட்டில் நீர் எண்ணின விஸ்லேஷத்துக்கு பிரசங்கம் உண்டோ -என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அத்தாலே-
தரித்த ஆழ்வார் அநேக கால சாத்தியமான நிரதிசய புருஷார்த்தத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலே அயத்நேந
பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்-கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன்
யம நியமாதி க்ரமங்களாலே அவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்கும் பக்தி ரூப ஞானங்களாலே அநேக கால சாத்தியமான புருஷார்த்தத்தை
யான்-
இங்கனே இருபத்தொரு புருஷார்த்தமும் உண்டு என்று அறியாத நான் அநாவிலமாய் இருபத்தொரு உபாயத்தைக் கொண்டு
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்-நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே-
தன் திருவடிகளை ஆஸ்ரயித்தாரது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தால் அல்லது தரியாத பிரகிருதி யாகையாலே
உறிகளிலே வைத்த வெண்ணெய்யையும் பாலும் எல்லாம் போக்கினேன் –
இது — பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –
எம்பெருமான் சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே –
பிறவித் துயர் கடிந்து-பகவத் ப்ராப்திக்கு உப லக்ஷணம் -இப்படியும் நிர்வஹிப்பர்

———————————————————————————————————–

எம்பெருமானுடைய குணங்களை பெரிய விடாயோடே கூடி அனுபவித்துக் களிக்கப் பெற்றேன் என்கிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் –
திரு உடம்பில் ஸ்பர்சத்தாலே எப்போதும் பிரவ்ருத்த மது தாரமான-திருத் துழாயாலே அலங்க்ருதனான கிருஷ்ணன்
விண்ணவர் பெருமான்-படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்-
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி-அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –-
இவ் வழகாலே அயர்வறும் அமரர்களை பிரதி க்ஷணம் தோற்பித்து -அவர்களை அடிமை கொள்ளுவதும் செய்து
திரு நாட்டிலும் கூட ஒருபடியாலும் தன்னோடு ஒத்தாரை உடையன் அன்றிக்கே
எல்லாரிலும் மேற்பட்டு உள்ளானுமாய் சம்சாரத்தில் ஆஸ்ரயித்தாருக்கு தன்னோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியான பாபத்தை போக்குமவனுடைய
கல்யாண குணங்களில் -வாயும் திரையுகளில் பிறந்த வியசனம் எல்லாம் தீரும்படி பிரவேசித்து மிகவும் அவகாஹித்து –
படிவானம் இறந்த பரமன் -மேகம் ஒப்பாக மாட்டாத திரு நிறத்தை உடையவன் என்றுமாம்
செடியார் நோய்கள் -சம்சார துரிதம் -என்றுமாம் –

———————————————————————————————————–

சாம்சாரிக துரிதம் எல்லாம் சமூலமாக நீங்கி அயர்வறும் அமரர்கள் உடைய ஸமூஹங்களிலே சென்று புகுவது என்றோ –
என்று அனுபவித்த பகவத் குணங்களுக்கு உசாத் துணை தேடுகிறார்-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

விஷய லாபங்களால் வரும் களிப்பையும் விஷய சங்கத்தையும் அற்று –
ஜென்மமும் ஜென்ம பிரயுக்தமான துரிதங்களும் எல்லாம் அற்று பகவத் அனுபவத்துக்கு பாங்கான தேஹத்தை உடையோமாய்
வர்ஷிக்கிற ஆகாசத்தையும் -வர்ஷத்தாலே ஜீவித்துக் கிடக்கும் இந்த பூமியையும் தானே திவ்யாயுதரனாய்க் கொண்டு
ரக்ஷித்து அருளுகிற ஆச்சர்ய பூதனான எம்பெருமான் –

—————————————————————————————————————

இத்திருவாய் மொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் எல்லாரும் –
என்னைப் போலே தனிமைப் படாதே கூடி புஜியுங்கோள் என்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
அசங்க்யேயமான சேனா சமூகங்களை உடையனாய் அதி பலவான ராவணன் குலம் முடியும் படி சீறினவனை
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
தம்மை அனுபவிக்க வந்த வைஷ்ணவ சமூகங்களோடு கூடின திரு நகரியை உடைய ஆழ்வார் உள்ளபடியே அனுசந்தித்துச் சொன்ன
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி-குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே-
ஒரோ திருவாய் மொழியாய்க் கொண்டு குழாமான ஆயிரத்திலும் இது திருவாய் மொழியைக் கருத்தோடேகூடப் பாடி –

———————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: