திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-10-

புத்த்யாதி பதார்த்தங்களுக்கு எல்லாம் தானே காரணம் ஆகையால் -ஞான விசேஷ அத்வேஷம் என்ன -க ணனை என்ன -நிரதிசய பக்தி என்ன –
இவற்றை எல்லாம் நிரதிசயமாக எம்பெருமான் தமக்குப் பிறப்பித்து தம்மோடு நிரவதிக சம்ச்லேஷத்தைப் பண்ணின படியைக் கண்டு
அத்வேஷாதிகள் உடையாரோடு தம்மோடு சம்ச்லேஷித்தால் போலே சம்ச்லேஷிக்கும்-என்றும் –
தான் நினைத்தார்க்கு அவ்வளவுகளைப் பிறப்பிப்பான் தானே -என்றும் அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் –

———————————————————————————————————————-

எம்பெருமான் தன்னுடைய ஸுந்தர்ய சீலாதிகளைக் காட்டி வசீகரித்து தம்மை அநந்யார்ஹம் ஆக்கி
தம்மோடு உன்மஸ்த கரசமாக முன்பு கலந்த கலவியை அனுபாஷிக்கிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு-திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
எம்பெருமான் பக்கலிலே பரிவாலே பிரதிபக்ஷத்தின் மேலே விழா நிற்பதும் செய்து எம்பெருமான் வளர்த்திக்குத் தக்கபடி மிகவும் வளரா நின்றுள்ள
திவ்யாயுதமான திரு வாழியோடும்-ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் -அழகியதாய் பூஜ்யமாய் வளரா நின்றுள்ள திருவடிகளை சகல லோகங்களும் கண்டு தொழும் படி
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்-கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே-
அர்த்திகைக்கு ஈடாக அழகாலே ஆகர்ஷகமான குறள் வடிவாய்
தன்னுடைய அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதி அதிசயத்தாலே மிகவும் வளருவதும் செய்து விலக்ஷணமான அழகை உடைய
எம்பெருமான் அப்படியே எனக்கு வந்து ஸூ லபன் ஆனான்

——————————————————————————————————————

எம்பெருமான் தன் பக்கல் நிரதிசய பக்தர் ஆனவர்களுக்கும்-தான் ஒருவன் உளன் -என்று பரி கணித்தாருக்கும்
அத்யந்த ஸூலபனாம் -என்ற குணத்தாலே தாம் ஈடுபடுகிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்-எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்-
இங்கனே யான பின்பு நமக்கு ஒரு குறை இல்லை
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்-விண்ணுமாய் விரியும் எம் பிரானையே-
இப்படி ஆஸ்ரித சம்ரக்ஷணார்த்த மாக கார்ய பூத ப்ருதிவ்யாதி சகல பதார்த்த ரூபேண அத்யந்த விஸ்திருதனாய் உள்ளவன் -சர்வேஸ்வரன் -என்றுமாம்
நல் வாயுவும் -என்கிறது தாரகத்தைப் பற்ற –

—————————————————————————————————————

எம்பெருமானுக்கு ஆஸ்ரித விஷயத்தில் வந்த நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து
திரு உள்ளத்தைக் குறித்து அவனைத் தொழாய் பவ்யமான நெஞ்சே என்கிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்-தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை-
என்நாயனை-எம் குடி நாயனை என்று ப்ரீதி அதிசயத்தாலே அருளிச் செய்கிறார்
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே-
வஞ்சிக்க கொம்பு போலேயும்-அரவு போலவும் -நுண்ணியதாய் நேரிதான இடையை உடைய பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவன்
கொம்பை -லகூ கரியா நின்றுள்ள இடை என்றுமாம்
எம்பிரானை
பிராட்டியோட்டை சம்பந்தத்தை அனுசந்தித்து ப்ரீத்தியா மீளவும் என்நாயனை என்கிறார்

————————————————————————————————

தம்முடைய நிகர்ஷ அனுசந்தானத்தை பண்ணி விஸ்லேஷத்தாலே முடிய வேண்டும் தசை வந்ததே யாகிலும்
அவனை விடாதே பற்று என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை-
அத்யந்த வி லக்ஷணமாய் இருந்தது உன் படி என்று தம்முடைய நெஞ்சைக் கொண்டாடுகிறார்
உன்னைப் பெற்றால்-என் செய்யோம் இனி என்ன குறைவினம்-
பகவத் விஷயம் என்னில்-பிரதி கூலியாதே பாங்காய் இருக்கிற உன்னைப் பெற்றால் இனி நமக்கு சாதிக்க முடியாது உண்டோ
நமக்கு இனி என்ன குறை உண்டு
மைந்தனை மலராள் மணவாளனைத்-துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டா-
நித்தியமான யவ்னத்தை உடையனாய் -நிரதிசய போக்கியமான பெரிய பிராட்டியாருக்கு போக்தாவாய் உள்ளவனை –

———————————————————————————————-

தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

ஒரோ பிரயோஜனங்கள் நேர் படப் புக்கால்
இயலுதல் -பலிக்கை
உண்டதும் -உலகு ஏழும் மூவடி கொண்டதும் -ரக்ஷணத்திலே அபேக்ஷை இல்லாதாரையும் ரக்ஷிக்கும் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம்
வேறே சில த்ருஷ்டாந்தங்கள் சொல்ல வேணுமோ
அபேஷா கந்த ரஹிதமான நீயும் அன்றோ கண்டு கொண்டாய் –

———————————————————————————————–

இப்படி ஸூ லபனானவன்-நம்மை விடான் இ றே என்னில் -நீயும் நானும் நம் அயோக்யதையை அனுசந்தித்து
அவனோடே சம்ச்லேஷிப்போம் அல்லோம் என்னாதே
இப்படி இசைந்து இருக்கில் நம்மை ஒரு நாளும் விடான் என்று திரு உள்ளத்தைக் குறித்துச் சொல்லுகிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ சம்ச்லேஷ விரோதிகளை எல்லாம் போக்கி நம்மோடே சம்ச்லேஷம் பண்ணும்
நெஞ்சே இவ்வர்த்தத்துக்கு என்னை விஸ்வஸித்து இரு
தாயும் தமப்பனும் போலே பரிவுடையனாய் இவ்வுலகத்தில் வந்து திருவவதாரம் பண்ணி
தன் வடிவு அழகைக் காட்டி -தான் இட்ட வழக்கு ஆக்கி அடிமை கொள்ளுகிறவன்
பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப்பாட்டுக்கு கருத்து –

——————————————————————————————————

அத்யந்த விலஷணனான எம்பெருமானை அத்யந்த நிக்ருஷ்டனான நான் வாங்மனஸ்ங்களாலே
நினைத்தும் பேசியும் தப்பச் செய் தேன்-என்று அகலுகிறார் –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

என் தனக்கு பரிவன் என்றும் -ஸ்வாமி என்றும் –
எம்பெருமானை நினைக்கவும் பேசவும் யோக்யராய் உள்ள அயர்வறும் அமரர்கள்
ஸ்னேஹ உக்தராய்க் கொண்டு எம்பெருமானை நினைத்து அது உள் அடங்காமையாலே
எந்தை எம்பெருமானே என்று சொல்ல அத்தாலே மதிப்பன் ஆனவனை –

—————————————————————————————————

அநர்ஹன் என்று அகன்ற நான் யாதிருச்சிக பகவான் நாம ஸ்ரவணத்தாலே அபலனாய் அகல மாட்டு கிறிலேன்-
எம்பெருமானும் என்னை விரும்பி விடிகிறிலன் –
இது ஒரு விசமயம் என்கிறார் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்-மல்கும் கண் பனி நாடுவன் மாயமே-
ஸ்ரீ மானான நாராயணன் –
அல்லேன்-என்ற நான் என்னுடைய சாபல்ய அதிசயத்தாலே -எங்குற்றாய் என்று தேடா நின்றேன்
இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் –
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி-நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –
என்னைப் பெறுகையாலே பரி பூர்ணனான எம்பெருமான் தன்னோட்டை சம்ச்லேஷத்தாலே
நன்றான இரவும் பகலும் இடைவிடாதே என்னை ஸ்நேஹித்து விடுகிறிலன் –

——————————————————————————————————–

அவன் விடாது ஒழிந்தால் நீர் அந்நிய பரராய் அவனை மறந்தாலோ வென்னில் –
திருக் குறுங்குடியில் நின்று அருளினை நம்பியைக் கண்டு வைத்து மறக்க உபாயம் உண்டோ -என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ–1-10-9-

ஓட வைத்த செம்பொன்னின் ஓளி போலே திகழா நிற்பதும் செய்து ஒருவருடைய வாங்மனசாதிகளாலும்
பரிச்சேதிக்க ஒண்ணாத படியான திருமேனியை உடையவனை
ப்ரஹ்ம ஈஸா நாதிகளில் காட்டில் அத்யந்த வி லக்ஷணரான நித்ய ஸூ ரிகளுக்கு ஜீவன ஹேதுவாய் அதி மநோ ஹரமான
தேஜஸை உடையானுமாய் அயர்வறும் அமரர்களைப் போலே
தாமே தாரகமாம் படி என்னைப் பண்ணினவனை –

——————————————————————————————————–

வருந்தி யாகிலும் அவனை மறந்தாலோ என்னில் -அழகிய திருக் கண்களாலே நோக்கிக் கொண்டு
ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே நிரந்தரமாக வர்த்திக்கிறவனை நான் மறக்கும் படி எங்கனே -என்கிறார்-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-

ஞானம் என்று ஓன்று என்றும் மறப்பு என்று ஓன்று என்றும் அறிந்திலேன் -அஸத் கல்பன்
ஏவம் விதனான எனக்கு அறிவைப் பிறப்பித்து -இவன் நம்மை மறக்கும் -என்று பார்த்து
தன்னுடைய திரு அழகை எனக்கு போக்யமாம் படி தந்தவனை –

——————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் கற்பார் நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பெறுவார் என்கிறார்
இக்கல்வி தானே அமையும் என்றுமாம் –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

தனக்குத் தானே பூஷணமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
ஆஸ்ரயிப்பார்க்கு எளியனாய் இருந்துள்ளவனை
ஆழ்வாருக்கு அத்யந்த விதேயமாய் சொற்கள் பணி செய்த ஆயிரத்து இப்பத்தையும்
எம்பெருமானுக்கு சொல்லாலே ஆழ்வார் பணி செய்த ஆயிரம் என்றுமாம்
சாபிப்ராயமாக ஸ்ரத்தா நராய்க் கற்பார் ஆகில் கல்வி வாய்க்கும் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: