தன்னுடைய விபூதி ஸ்ரவணத்தாலே-சஞ்சாத பக்திகனாய் -ஏவம் விதனான தன்னை -சாஷாத் கரித்து அனுபவிக்க வேணும் -என்ற
அர்ஜுனனுக்கு அதுக்கு ஈடான திவ்ய சஷூஸ் ஸைக் கொடுத்து அருளி -அதி விஸ்மயகரமான வைஸ்வ ரூப்பியத்தைக் காட்டி
அவனை உஜ்ஜீவிப்பித்து அருளினால் போலே
சர்வேஸ்வரனாய் –
ஸ்ரீ யபதியாய்-
பரம ரசிகனாய் –
ஆழ்வார் பக்தியில் துவக்குண்டு -அவரோடு ஏக ரசனான எம்பெருமான்
கீழில் திருவாய் மொழியில் சொன்ன ஆர்ஜவ குண அனுசந்தானத்தாலே பிறந்த பக்த்ய ஆரோக்யத்தை உடைய ஆழ்வாருக்கு
மஹிஷீ பரிஜா நாதி ரூபத்தாலே பல வகைகளாலும் தனக்கு போக்தாக்கள் ஆனவர்களுக்கு நிரதிசய போக்யமான தன்னுடைய படிகளைக் காட்டி
அவர்கள் எல்லோரோடும் கூட சம்ச்லேஷிக்கும் சம்ச்லேஷத்தை
அநாதிகாலம் தாம் இழந்த இழவு எல்லாம் தீரும் படி -சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரங்களாலும்
யதா மநோ ரதம் தமக்கு ஸாத்மிக்கும் படி தம்மோடு சம்ச்லேஷிக்க-அத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் –
————————————————————————————————————
ஜகத்தின் உடைய ஸ்ருஷ்டி யாதி ஹேதுவாய் சர்வ அந்தராத்மா தயா நின்று -அவற்றுக்கு தாரகனாய் -ஸ்ரீ யபதியாய் -பரம ரசிகனாய் –
எனக்கு போக்ய பூதனாய் -எனக்கு நாதனாய் உள்ள -கிருஷ்ணனானவன்
என் தனக்கு தன்னோட்டை சம்ச்லேஷ ரசத்தை தந்து அருளுகைக்காக என்னுடைய பர்யந்தங்களிலே வந்து வர்த்தியா நின்றான் என்று ஹ்ருஷ்டராகிறார் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
சேதன அசேதனங்கள் எல்லாவற்றையும் சம்ஹரித்து
தன்னுடைய தலையாலே அவற்றை உண்டாக்கி
அவற்றினுடைய ரக்ஷணத்தையும் பண்ணுமவன்
———————————————————————————————-
ப்ரஹ்ம ஈஸ நாதிகள் உடைய வாங்மனஸ் ஸூ களுக்கும் அபூமியாய் இருந்து வைத்து -அவர்களுக்காக ஷீரார்ணவ சாயியாய்
தன்னுடைய திரு வவதாரங்களாலும் குண சேஷ்டிதங்களாலும் வசீகரித்து என்னைத் தனக்கு அடிமை யாக்கிக் கொண்டவன்
எனக்கு தன்னோட்டை சம்ச்லேஷ ரஸம் தருகைக்காக என்னருகே வந்து நின்றான் என்று திருப்தராகிறார் –
சூழல் பல பல வல்லான் தொல்லை யங்காலத்து வகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஓசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகிலானே–1-9-2-
சேதனரை எல்லாம் தன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ள வல்லவான பல திரு வவதாரங்களை பண்ண வல்லனாய்
வராஹ கல்பத்துக்கு முதலாய் தான் திருவவதரிக்கப் பட்டவன் ஆகையால் -அழகிதான காலத்திலே பிரளய ஆர்ணவ மக்நமான பூலோகத்தை
அதி விலக்ஷணமான அழகை உடைய ஸ்ரீ வராஹமாய் அநாயாசேன எடுத்து அருளி –
ஆர்த்தமாய் அதி ஸூ ந்தரமான கேச பாசத்தை உடையவன் -குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன பிடுங்கினவன் –
—————————————————————————————————–
மஹிஷீ பிரப்ருதிகள் ஒரோ வகைகளால் தன்னோடே சம்ச்லேஷ ரசம் பெறுமா போலே அன்றிக்கே
எல்லா வகைகளாலும் உள்ள சம்ச்லேஷ ரசத்தை எனக்குத் தந்து என்னை ஒரு காலும் விடாதபடி யானான் -என்கிறார் –
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் –
ஹேய ப்ரத்ய நீக-கல்யாண மஹா குணனாய் -அயர்வறும் அமரர்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி யாதிகளுக்கும் -போஷண -ஆதிகளுக்கும்-காரணமாய்
கறுத்து நெய்த்து விலக்ஷணமான திரு உடம்பில் நிறத்தை உடையான்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் -ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –
தன்னுடைய விஷயீ காரத்தாலே-பிறந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே பற்றி நின்றுள்ள திருச் சிறகை உடைய பெரிய திருவடி மேலே
ப்ரீதனாயக் கொண்டு ஏறுவதும் செய்து பெரிய பிராட்டியாருக்கு நாயகன் என்னும் வைலக்ஷண்யத்தை உடையான்
அருகல் -ஷயிக்கை
———————————————————————————————————-
சர்வேஸ்வரனாய் அத்யாச்சர்ய பூதனாய் எனக்கு ஸ்வாமியான கிருஷ்ணன் என் ஓக்கலையிலே வந்து இருந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே-1-9-4-
உடன் அமர் காதல் மகளிர்-திருமகள் மண் மகள் ஆயர் -மடமகள் என்று இவர் மூவர்
அவனோடே நிரந்தர சம்ஸ்லேஷாதி ரசத்தை உடைய பிராட்டிமார்
ஆளும் உலகமும் மூன்றே –
கீழும் மேலும் நடுவும் உள்ள லோகங்கள் ஆதல் -த்ரிவித சேதனர் ஆதல்
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன்-
தன் விபூதியில் பிரளய ஆபத் கதமானவற்றை -தரம் பாராதே ஒரு காலே விழுங்கி ஆலிலையில் கண் வளர்ந்து அருளினவன்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன்
கடலில் மிக்கு இருந்துள்ள ஆச்சர்யங்களை உடைய சர்வேஸ்வரன்
———————————————————————————————————
ப்ரஹ்ம ஈஸ நாதிகளுக்கும் கூட ஜனகனான ஈஸ்வரன் என்னுடைய பிரதிபந்தங்கள் எல்லாம் போக்கி என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார் –
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி -செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்-
தந்திட-கொடுக்க –
தாய் முகம் பார்த்து முலை உண்ணுமா போலே திருப் பவளத்திலே சிவப்பு மிகவும் தோற்றும் படி பூதனை முகத்தை பார்த்து
அத்தசையிலே அவள் பக்கல் நின்றும் பிராணன் போம் படியாக முலையை உண்ட -இவ் உபகாரத்தாலே எல்லாரையும் அடிமை கொண்டவன்
செக்கஞ்ச்செக-அவள் கருதின தீங்கு வெல்லும் படி என்றுமாம்
தோற்றிய -தோற்றுவித்த
மாயன்-இப்படியாலே மஹா ஆச்சர்ய பூதன் –
———————————————————————————————————
சர்வ அந்தராத்மாவாய் -அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் ஆஸ்ரிதற்கு ஸூலபனான எம்பெருமான் வந்து
தோளிணை யானது என் ஒருவன் பக்கலிலே பண்ணும் பிரசாத அதிசயம் என்கிறார் –
மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-
மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
நான் பெற்ற பேறு மற்றும் யாரேனும் பெற்றார் உண்டோ
காயமும் சீவனும் தானும் காலும் எரியும் அவனே
தேவாதி சரீர பேதங்களுக்கும் -தத் அந்தரவர்த்திகளான ஆத்மாக்களுக்கும் ஜகத் ஆரம்பகமான
ப்ருதிவ்யாதி பூதங்களுக்கும் அந்தராத்மா தான் -காலும் எரியும் என்று பூத பஞ்சகத்துக்கும் உப லக்ஷணம்
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் -தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –
அநாஸ்ரிதர்க்கு அத்யந்த துர்லபனாய் ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய் எத்தனையேனும் அளவுடையாரே யாகிலும்
அநாஸ்ரிதர்க்கு மநோ ரதத்துக்கும் விஷயம் இன்றிக்கே ஆஸ்ரிதற்கு அறிய எளியனாய் அநாஸ்ரிதர்க்கு தன்னை
அறிய ஒண்ணாத படி சம்சய விபர்யய அஞ்ஞானங்களை பிறப்பித்து மதி கெடுக்குமவன் –
—————————————————————————————————————
என்னோடு சம்ச்லேஷிக்கைக்காக திருத் துழாயாலே திரு மேனி எல்லாம் அலங்கரித்துக் கொண்டு
எம்பெருமான் என்னுடைய நாவிலே வந்து புகுந்தான் என்கிறார் –
எனக்கு ஸ்துதி விஷயமானான் என்றுமாம் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே–1-9-7-
கேளிணை ஒன்றும் இலாதான்-
தன்னுடைய ஸ்வரூப குணா திகளுக்கு -திரளாவும் தணியும் ஒப்பு இல்லாதவன்
பூரணமான ஒப்பு இல்லாதவன் என்றுமாம் –
கிளரும் சுடர் ஒளி மூர்த்தி –
கிளரா நின்றுள்ள உஜ்வல்யத்தை உடைய ஒளியே வடிவாக உடையவன்
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
நாள் தோறும் அணைந்து ஒரு காலும் அகலுகிறிலன் –
——————————————————————————————————
சர்வ வித்யாஸ் தலங்களுக்கும் சப் தார்த்த சம்பந்த நியமங்களையும் -அவற்றின் உடைய ஸ்திதி சம்ஹாரங்களையும் பண்ணும்
ஸ்வபாவனான எம்பெருமான் என் கண்ணுள்ளே வந்து புகுந்தான் என்கிறார் –
என் கண்ணுக்கு விஷயமானான் என்றுமாம்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள வித்யாஸ் தலங்களுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
ஆவி யாகிறது -அர்த்தம் -ஆக்கை யாகிறது -சப்தம்
அழிப்போடு அளிப்பாவது -வித்யைகள் கெடாமல் காக்கவும் லேகக தோஷாதிகளால் ஸ்வரூபம் அந்யதாபிவித்தால் அத்தை சம்ஹரிக்கையும்
பூவியில் நால் தடம் தோளன் –
திரு மாலைகளால் அலங்க்ருதமான நாலு திருத் தோள்களையும் உடையவன்
பொரு படை யாழி சங்கேந்தும் -காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே-
யுத்த சாதனமான திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தும் ஸ்வ பாவனாய்
-ஒரு சாயல் நெய்தலொடு ஒத்து -அதில் காட்டில் அத்யந்த விலக்ஷணமான திருமேனியும் தாமரைப் பூ போலே இருந்துள்ள திருக் கண்களையும் உடையான் –
——————————————————————————————————
சர்வ சிரஷ்டாவான எம்பெருமான் என் நெற்றியிலே வந்து நின்றான் என்கிறார் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி –
நானும் அவனைக் காணா நின்றேன் -தன்னைக் காண வல்லேனாம் படி நிர்த்தோஷனாக என்னை நோக்கி அருளா நின்றான்
அவனுடைய திரு அழகைக் கண்டு என் இந்திரியங்களும் அவனுக்கு சரீரவத் விதேயம் ஆயிற்றன
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி- அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே
கமலா சனனாய் பிரதானனான ப்ரஹ்மாவை லலாட நேத்ரனான ருத்ரனோடும் கூட தோன்றுவித்து சத்துவ பிரசுரரான
தேவர்களோடும் கூட லோகங்களை எல்லாம் உண்டாக்குமவன் –
—————————————————————————————————
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அறிய வரியனாய் உள்ள எம்பெருமான் தன் திருவடிகளை அவர்கள் கொண்டாடி ஏத்தா நிற்கச் செய்தே
அத்தை அநாதரித்து தான் வந்து என் உச்சி உள்ளே புகுந்தான் என்கிறார் –
நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-
நெற்றி உள்ளே நிற்கிற என்னை ஆளுகிற ஒழுங்கான மலர்கள் போலே இருக்கிற திருவடிகளை ஆதரித்து திருக் குழலிலே
செவ்வியாலே சாத்தி அருளின திருத் துழாய் தழைக்கும் படியான திரு முடியின் அழகை உடைய கிருஷ்ணனை தொழுவார் –
—————————————————————————————————-
நிகமத்தில் -இது திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய எம்பெருமான் திருவடிகள்
அவன் தலையிலே நாள் தோறும் சேரும் என்கிறார் –
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு
தேவ தேவனாய் வைத்து என் உச்சி உள்ளே நின்ற வனுக்கு
என் உச்சி உள்ளே நிற்கையாலே அயர்வறும் அமரர்கள் அதிபதியானான் என்றுமாம்
கண்ண பிராற்கு
உள்ளத்திலே படும்படி அமைத்து –
————————————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply