பிரவேசம் –
சர்வ சேஷியாய் -ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-நிரதிசய ஆனந்த பூர்ணனாய் –
தன்னை அனுபவித்தாரை தன்னில் காட்டிலும் நிரதிசய ஆனந்த பூர்ணராக பண்ண வல்லனாய் இருந்துள்ள எம்பெருமானை –
பஜியா நின்று வைத்தும் பலாந்தரத்தை இச்சிக்கிற வர்களை நிந்தித்து -அவர்களுக்கு அபேஷித பலத்தை கொடுக்கிற எம்பெருமானைக் கண்டு
அதீவ விஸ்மிதராய்-ஏவம் விதனாய் இருந்துள்ள எம்பெருமான் பக்கல் உள்ள பக்தியே நிரதிசய போக்யம் -என்கிறார் –
—————————————————————————————————————-
நிரதிசய போக்யனான தன்னை -ஆஸ்ரயியா நின்று வைத்தே-ஆத்ம மாத்ர நிஷ்டரான முமுஷுக்கள் உடைய
அபேஷித சம்விதானம் பண்ணுகிற எம்பெருமான் படியை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
ஜன்ம ஜர மரணாதி சாம்சாரிக துக்கம் அறுகைக்காக ஆத்ம ஞானத்தில் நின்று பிரகிருதி நிர்முக்த ஆத்ம ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்க வேண்டி இருப்பார்
அறவனை
அநந்ய பிரயோஜனரோடு ஒக்க பிரயோஜ நாந்தர பரரையும் அங்கீ கரித்து அவர்கள் அபேஷிதத்தை செய்யுமவனை
ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே
கையும் திருவாழி யையும் கண்டு தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அவன் பக்கல் சுத்தி மாத்ரத்தையே அனுசந்தித்து ஆஸ்ரியா நிற்பரே –
இவர்களுக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பதே -என்ன அறவனோ என்று கருத்து
———————————————————————————–
அநந்ய பிரயோஜனர் திறத்தில் எம்பெருமான் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமான பரம புருஷார்த்தமும் தத் விரோதியான சம்சாரம் போக்குகைக்கு மருந்துமாய் அவர்களை ஸ்வவிஸ்லேஷ ஜனகமான
மஹா பாபத்தை விளைக்க வற்றாது இந்திரியங்கள் நலியிலும் நலிவு பட வீட்டுக் கொடான்-
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –
ஆனந்த வல்லியில் சொல்லி நின்றபடியே எல்லா இடத்திலும் உள்ள எல்லாரிலும் காட்டில் ஆனந்தத்தால் மேற்பட்டு வாங்மனஸ் ஸூக்களுக்கு
நிலம் அன்றியே இருந்து வைத்து தன்னுடைய நிரவதிக கிருபையால் ஆஸ்ரிதற்காக இடையரில் பிரதானனாய் வந்து பிறந்தான்
———————————————————————————-
எம்பெருமானைத் தனக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தே சாம்சாரிக சகல துக்கமும் போயிற்று என்கிறார்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
ஆயர் உளராக தானும் தன்மையை உடையனாய் -அவர்களது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தால் அல்லது தரியாமையாலே
வெண்ணெய் களவு காணப் புக்கு அகப்பட்டு தாயில் காட்டிலும் பரிவரான உரில் உள்ளார் எல்லாராலும் புடை உண்ணும்
ஆச்சர்யத்தை உடையனாய் ஆஸ்ரிதராலே நெருக்கு உண்கையாலே பெரு விலையனான தன் அழகை எனக்கு அனுபவிக்கத் தந்தவனை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
நியமங்களும் வேண்டாதே-அதிகாரி தான் ஆரேலும் ஆகவுமாய்-ஸர்வதா சேவ்யமுமாய்-சம்சாரத்தை போக்குமதுவுமாய் இருக்கிற
சுத்தியை உடைய அம்ருதத்தை மேன் மேல் எனப் பருகி சம்சாரத்தில் பிறக்கையாலே சஞ்சிதமான அஞ்ஞாதி களை எல்லாம் போக்கினேன்
————————————————————————-
தன்படியைக் காட்டி என்னை இசைவித்து அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த
மஹா உபகாரகனை எனக்கு விட உபாயம் உண்டோ என்கிறார் –
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை –
அஞ்ஞானம் எல்லாம் போம்படி -ஒருநாளும் மாறாதே என் நெஞ்சிலே இருந்து எனக்கு மேன் மேல் என
உச்சராயத்தைத் தந்து அது தன் பேறாகக் கொண்டு அத்தாலே விட விளங்கா நின்றுள்ள அழகை உடையவனை
ஒண் சுடர்க் கற்றையை -என்று தம்மை வசீகரிக்கைக்கு அடியான அழகைச் சொல்லுகிறது என்றும் சொல்லுவர்
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ-
பகவத் விஷயத்தில் விஸ்மரணம் இல்லாத அமரர்களுடைய சத்தாதிகளுக்கு ஹேதுவாய் பிரதானமாய் வைத்து
எனக்கு தன்னை அனுபவிப்போம் என்னும் இசைவைப் பிறப்பித்தவனே –
—————————————————————————–
தன்னை அறியாதே மிகவும் அந்நிய பரனாய் இருக்கிற என்னை தன் திருக் கண்களின் அழகாலே இடைப் பெண்களை
அகப்படுத்திக் கொண்டால் போலே -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவனை விட உபாயம் உண்டோ -என்கிறார் –
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
ஸ்வ விஷய அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் நீங்கும்படி தன்னுடைய கல்யாண குணங்களை பிரகாசிப்பித்து
நான் மிகவும் அந்நிய பரனாய் இருக்கச் செய்தே-நிர்ஹேதுகமாய் வந்து ஸ்வ விஷய ஞான விஸ்ரம்ப பக்திகளை பிறப்பித்து
உஜ்ஜீவிப்பியா நின்று கொண்டு என்னை அடிமை கொண்டவனே –
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே-
நவ நீதாதிகளைக் களவு கண்டு -இவன் களவு கண்டான் -என்று முறையிட வந்த இள வாய்ச்சியார்க்கு
மறு நாக்கு கொடுக்க ஒண்ணாத படி வேறு ஒருவருக்கும் தெரியாதே அவர்கள் கண் உள்ளே படும் படியாக விடவே பண்ணி நோக்கி அடிமை கொண்டவனை
கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் –
கண்ணின் உள்ளே தூதராக விழிக்கும் என்றுமாம்
விடவு -விடருடைய செயல்
விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை -என்றுமாம் –
—————————————————————————————
அவனே தான் விடில் செய்வது என் என்னில் தன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்பித்து
என்னோடே கலந்தவனை நான் விட சம்வத்திப்பேனோ -என்கிறார் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னையான் ஒட்டுவேனோ –1-7-6-
தொடுக்கப் பட்டு பரிமளத்தையும்-செவ்வியையும் உடைய திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியை உடையனாய்
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை எடுப்பதும் செய்து ஆஸ்ரிதர் ஏவிற்றுச் செய்து அவர்கள் பக்கலிலே வியாமுக்தனாய்
-இச் செயல்களால் என்னை அடிமை கொண்டவன்
விராய் மலர்த் துழாய் -பூக்கள் விரவின துழாய் -என்றுமாம்
————————————————————————————
எனக்கு இசைவு இன்றிக்கே இருக்க தானே வருந்தித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டவன்
நான் போவேன் என்னிலும் என்னைப் போக விடான் என்கிறார் –
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7-
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
நான் இசைந்து ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்
தானே இருப்பானாக ப்ரதிஜ்ஜை பண்ணி கொடுவந்து அவிதேயமான என்னுடைய நெஞ்சை தன்னுடைய
கல்யாண குணங்களைக் காட்டி என்னை அறியாமே அகப்படுத்தி
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
என்னுடைய தேஹத்தையே நிரதிசய போக்யமாக பற்றி விடாதே நின்று என் ஆத்மாவோடு கலந்து அக்கலவியால் அல்லது செல்லாத தன்மையை உடையவன் –
—————————————————————————————
என்னை ஒருபடி விடுவித்தான் ஆகிலும் அயர்வறும் அமரர்கள் சேவிக்க நப்பின்னை பிராட்டியோடே கூட இருந்து அருளின அழகைக் கண்டு
அடிமை புக்க என் நெஞ்சை சர்வ சக்தியான தானும் தன் பக்கல் நின்றும் இனி விடுவிக்க மாட்டான் என்கிறார் –
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-
நப்பின்னை பிராட்டியுடைய நெடியதாய் பணைத்து இருந்துள்ள தோளை அனுபவிக்கைக்கு ஈடான முதன்மை உடையனாகை
பணைத் தோள்-வேய் போலே இருந்த தோள் என்றுமாம் –
————————————————————————————-
தாம் அவனோடே கலந்த கலவியின் மிகுதியால் விஷலிஷ சம்பாவனை இல்லை என்கிறார் –
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அயர்வறும் அமரர்களுக்கு எல்லாம் தானே காரணமாய் இருப்பானாய் பீஜே ஜகத்துக்கும் காரணமாய்
ஷூ த்தரமான பிரயோஜனங்களை வேண்டின ப்ரஹ்மாதிகளுக்கும் அவர்கள் அபேக்ஷித்ங்களைக் கொடுப்பது செய்து
இடைச் சாதியிலே வந்து அவர்கள் உளராகத் தானும் உளன் ஆனவனை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –
மிகவும் நெருக்க கலசி என் ஆத்மா ஒருவராலும் பிரிக்க ஒண்ணாத படி சம்ச்லேஷித்தது
——————————————————————————
என்னோடு கலந்த எம்பெருமானுடைய குணங்களை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் அல்லேன் என்கிறார்
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–
தன்னை ஆஸ்ரயித்து பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு போகில்-தான் இழவாளனாகக் கொண்டு அகலும் ஸ்வ பாவனாய்
அவர்களே அநந்ய பிரயோஜனர்கள் ஆகில் நிரதிசய அபி நிவேசத்தோடே கூட சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனாய்
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாதவனாய் ஸமாச்ரயண உன்முகனாய் இருப்பிற்கு ஒரு தடை இன்றியே எளியனுமாய்
இந்த நீர்மைகளாலே என்னை அடிமை கொண்டவன்
ஒப்பில்லாத அவன் குணங்களிலே மிகவும் அவகாஹித்து நிரந்தரமாய்ப் பாடி இனிமையின் மிகுதியால் விடவும் மாட்டுகிறிலேன்
————————————————————————————————-
நிகமத்தில் -பக்திக்கு பிரதி பந்தகமான சகல துரிதங்களையும் உன்மூலிதம் ஆக்கும் என்கிறார் –
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை -அடைந்த தென் குருகூர் ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை யாயிரத்து இப்பத்து -உடைந்து நோய்களை யோடுவிக்குமே–1-7-11-
வண்டுகள் முழுகி மது பானம் பண்ணின திருத் துழாயை திரு முடியில் உடையன் ஆகையால் நிரதிசய போக்யனாய் உள்ளவனை
அவ்வண்டுகள் திருத் துழாயிலே மதுவுக்கு படிந்தால் போலே அநந்யார்ஹம் ஆம்படி ஆக்ருஷ்டரான
ஆழ்வாருடைய சொல் செறிந்த தொடையை உடைய ஆயிரத்து இப்பத்து –
—————————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply