ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –
——————-
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்
—————–
அவதாரிகை –
வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்
தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க
ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –
இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி
எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –
அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –
இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க
அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –
இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –
ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –
தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –
——————————————————–
ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-
மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது
விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது
சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –
எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –
இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –
அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே
ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –
ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –
எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –
ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –
—————————————–
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறை யானை ஈன்றனை -தவிச்சு-ஆசனம் –
விலக்ஷணமாய் பெருமை பொருந்திய திரு நாபியில் உண்டான பெரிதான தாமரைப் பூ வாகிற-
ஆசனத்தின் மீது ஒரு கால் பிரமனை படைத்து அருளினாய் –
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை -பெரியாழ்வார்
உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரஷித்து அருள வேணும் -என்கைக்காக
முதலிலே இத்தை அருளிச் செய்கிறார் –
—————————–
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
ஸ்ரீ ராமனாய் அவதரித்த காலத்தில் –
சந்த்ர ஸூரியர் அச்சத்தால் மேலே சஞ்சரிக்க ஒண்ணாதததும் –
பகலவன் மீதி யங்காத இலங்கை -பெரிய திருமொழி -5-8-7- –
நீர் மலை வன துர்க்கங்கள் ஆகிற அரண்களை உடையதுமான இலங்கா புரியை
இரண்டு நுனியும் வளைந்த ஒப்பற்ற சார்ங்க வில்லில் பொருந்தியதும்
இரண்டு பற்களை உடையதும்
நெருப்பை கக்குகிற வாயை உடையதுமான அம்பினால் நீராக்கினாய் –
ஈர்கின்ற எயிற்றை உடையது என்றுமாம் –
——————————————————————-
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மாவலியிடம் சென்று மூன்று அடி நிலத்தை யாசித்து –
நானிலம் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் –பூமியிலே
யஜ்ஜோபவீதத்தோடே கூட கிருஷ்ணா ஜினமும் விளங்கா நின்ற திரு மார்பை உடைய
இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – ஒரு ப்ராஹ்மண ப்ரஹ்மச்சாரியாகி
மான் கொண்ட தோல் மார்பின் மாலையாய் -பெரிய திருமொழி –
த்விஜ -ஜன்மனா ஜாயதே -சூத்ர கர்மணா ஜாயதே த்விஜ –
முதலில் யோனியில் பிறந்து –
வேதம் ஓத இரண்டாம் பிறப்பு
ஒரு காலத்தில் இரண்டு திருவடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து கொண்டாயே
கீழே அம்பால் செய்த கார்யம் அருளிச் செய்து
இதில் அழகால் செய்த கார்யம் அருளிச் செய்கிறார் –
பாலை நிலம் -பிராணிகள் சஞ்சரியாத நிலம் –
நான்கு வகை தன்மை இல்லாததே பாலை என்பதால் அத்தை சொல்ல வில்லை –
————————————————–
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி
நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
கருடாரூடனாய் -வந்து அருளினான்
நாலுவாய் தொங்குதல் -மும்மதம் -இரு செவி –
இது ஒரு கால் அழகே
கை அழகே
தலை அழகே என்று
தாய் குழந்தையை -அழகில் ஆழ்ந்து அவன் அருளிச் செய்ததை ஆழ்வார் அருளிச் செய்கிறார்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆனபடியாலே சொல்லுகிறது –
ஒரு தனி வேழம் –
தொழும் காதல் களிறு அன்றோ ஒப்பற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
அரந்தை- துன்பம் –
———————————————————————–
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-முத்தீ நான்மறை ஐவகை வேள்வி
அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
நான்குடன் -அடக்கி –
உண்ணுதல் உறங்குதல் அஞ்சுதல் விஷய போகம் செய்தல் போன்றவை அடங்க இல்லை செய்து –
ஆஹார நித்ரா பய மாய்த்து நா நி சாமான்ய மேதத் பசுபிர் நராணாம் —
இரு பிறப்பு அறுப்போர் –
நீண்ட சம்சார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே
————————————————————–
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-
நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை-
நாம் முக்கண் உடையோம் -அரவம் பூண்ட பெருமை உடையோம் நாகாபரணன் —
கங்கை நீர் தரித்த வலிமை உடையோம் -என்று மேனாணித்து இருந்தாலும்
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்வார் வெள்கி நிற்ப –
தன்மை பெருமையுள் நின்றானை –
சிவனாலும் அறியப் போகாத தன்மையை உடையனாய் இருக்கிற பெருமை பொருந்தியவன்
நின்றனை –
முன்னிலை ஒருமை வினை முற்று –
அச்சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ –
பரம போக்யன் –
அறு சுவைப் பயனும் ஆயின –
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி –
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் –
உறங்குவான் போல் யோகு செய்யும் துயில் –
அமர்ந்தாய்
முன்னிலை வினை முற்று –
———————————————————
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் -முப்பொழுதும் வருட
அறிதுயில் அமர்ந்தனை-
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-
ஐம்பால் ஓதியை -மென்மை குளிர்ந்து நறு மணம் கருமை நெடுமை –
ஐந்து லக்ஷணங்கள் உடைய கூந்தலை உடைய பிராட்டியை
அறுபதம் -ஷட்பதம் -வண்டு
ஒன்றாய் விரித்து நின்றனை-
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –
மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –
————————————————————————–
குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி
மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த
கற்போர் புரி செய் கனக மாளிகை-நிமிர் கொடி –
விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –
திகழ் வன முடுத்த கற்போர் புரி –
விளங்கும் வனங்களை நான்கு புறங்களிலும் உடையதும் –
வித்வான்கள் உடைய நகரமாகச் செய்யப் பெற்றதும் –
புரி செய் -புரிசை பாட பேதம் –
வித்வான்கள் படுகாடு கிடைக்கும் நகரி என்றவாறு –
புரிசை –
மதிள்களை உடைத்ததாய் என்றபடி –
கனக மாளிகை-நிமிர் கொடி –
பொன் மயமான மாளிகைகளின் நின்றும் மேல் முகமாக ஓங்கும் த்வஜங்கள் –
ஒரு பேர் உந்தி -தொடங்கி-ஒன்றாய் விரித்து நின்றனை -என்னும் அளவும் –
ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளும் ஸ்வரூப ஸ்வ பாவங்களை பரக்கத் பேசி
இந்த திருக்குணங்கள் செவ்வனே விளங்க திருக் குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே-
சம்சார தாபங்களை தீறும்படி அருள் புரிய வேணும் என்று ஆர்த்தராய் சரணாகதி பண்ணித் தலைக் கட்டுகிறார் –
தம்முடைய ஆர்த்தி எல்லாம் தோற்ற திருவடிகளில் தீர்க்க சரணாகதி பண்ணியும் –
இன்னும் இவரைக் கொண்டு
திவ்ய பிரபந்தங்களை வெளியிடுவித்து நம்மை வாழ்விக்க
திரு உள்ளம் பற்றி திரு முகம் காட்டாது ஒழியவே-இவர் மடலூரப் பெற்று
நாம் சிறிய திருமடல் பெரிய திரு மடல் பெறப் பெற்றோமே -என்று சங்கதி –
————————————————————————–
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –
ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply