பகவத் விஷயம் காலஷேபம் -154- திருவாய்மொழி – -7-6-6….7-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

பிராப்யதா பிரகாசமான நிரதிசய ஆபி ரூப்பியம் -உன்னை நான் எப்படி கிட்டுவேன்
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்–நீலச் சுடர் பரந்து -உபாயம் நான் அறியேன்
அறிந்த நீயே தானே வந்து அருள வேணும் என்றவாறு
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்-இடை இடையே சிவந்த பூக்கள் -நீல மாணிக்கம் –
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்-பரம வ்யோமம் -இங்கு -யீட்டில் பீதாம்பரம்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே-எழுந்து அருளி இருக்கும் இருப்பை -எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ மான்

‘செறிந்த நீலச் சுடரானது பரவச் சிவந்த சுடர்ச் சோதிகள் மலர்ந்து ஒரு நீல இரத்தினம் சேர்வது போன்று, திருவரையின் மேலே அணிந்திருக்கிற
செம்பட்டோடு திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருவாயும் சிவந்த சுடர்ச் சோதியைப் பரப்ப
எழுந்தருளியிருக்கின்ற என் திருமார்பனை நான் சென்று கிட்டும் வழியை அறியேன்,’ என்றவாறே.
வந்து-இடவழுவமைதி. ‘செலவினும் வரவினும்’ (தொல்சொல்.) என்னும் பொதுச் சூத்திரத்தாற்கொள்க. ‘மார்பனை வந்து எய்துமாறு அறியேன்’ என்க.
‘தழைப்பப் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் சோதி விட உறை திருமார்பன்’ என்க.

(அசக்தன் )ஆனாலும், ‘ஏதேனும் ஒரு படி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன,
‘உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் –
வந்து கிட்டும் உபாயத்தை அறியேன். என்றது,
‘நீ தானே மேல் விழுந்து உன் வடிவழகைக் காட்டா நின்றால் அதனை விலக்காமைக்கு வேண்டுவது உண்டு;
என்னால் உன்னை ஒரு சாதனத்தைச் செய்து வந்து கிட்டப் போகாது,’ என்றபடி.
‘ஆனால், இழந்தாலோ?’ என்ன,
‘இழக்கலாம்படியோ உன் படி இருக்கிறது?’ என்கிறார்.

வடிவழகு இல்லை என்று விடவோ,(மல்கு நீலம் சுடர் தழைப்ப )
பெறுவிக்கைக்குப் புருஷகாரம் இல்லை என்று விடவோ,(திருமார்பனை)
எனக்கு ஆசை இல்லையாய் விடவோ(வந்து எய்துமாறு அறியேன் -ஆசை உண்டு -என்னால் வர முடியாதே )

மல்கு நீலம் சுடர் தழைப்ப –
குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப?
கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். என்றது,
‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளரா நிற்கின்றது’ என்றபடி. –
மல்கு தழைப்ப-பர்யாயம் -மேலும் மேலும் மிக்கு வளரும்

நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-
சிவந்த சுடரை யுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து.

ஒரு மாணிக்கம் சேர்வது போல் –
அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே.

‘மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று;
‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று;
‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே,
இரண்டுக்கும் -ஆஸ்ரயமான-பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கிற இடத்தில்
தெரியாதபடி மறைத்துச் சொல்லிற்று ஒன்று உண்டே அன்றோ?
அதனை விளக்கமாக அருளிச் செய்கிறார் மேல்:

அந்தரம் மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட –
அந்தரம் – நடுவு. உடம்புக்கு நடுவு, அரை. திருவரையில் (பன்னீராயிரப்படி -அந்தரம் பரம வ்யோமம் )
திருப் பீதாம்பரத்தோடே, திருவடிகள், திருநாபி கமலம், திருக் கைகள்,
பெரிய பிராட்டியார் எழுந்தருளி யிருக்கையாலே மேலே கூறியவற்றோடு ஒக்கச் சொல்லலாம்படி சிவந்திருக்கிற
திரு மார்பு, திருக் கண்கள், திருப் பவளம்
இவை, சிவந்த சுடரை யுடைத்தான ஒளியை வீச.

உறை என் திரு மார்பனை –
இதுவும் ஓர் ஆபரணம் போலே:
என் தலைவியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை.

திருப்பாற் கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டு,
அதிலே பலப் பல வர்ணங்களாய் இருப்பது ஒரு மேல் விரியை விரித்தாற்போலே அவன் சாய்ந்தருள,
மேல் எழுந்தருளி இருக்கமாயிற்றுப் பிராட்டி.
நானும் மிக்க ஆயாசனத்தினால் பெருமாள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தேன்’ என்னக் கடவதன்றோ?

‘மலராள் தனத்துள்ளான்’ (மூன்றாந்திருவந். 3.) என்ன வேண்டி யிருக்க,
அவன் மார்விலே இருக்கிறான் எனக் கூடுமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நானும்’ என்று தொடங்கி.

‘பரிஸ்ரமாத் பர்ஸூப்தா ச ராகவாங்கே அஸ்மிஅஹம் சிரம் பர்யாயேண ப்ரஸூப்தஸ்ச
மமஅங்கே பரதாக்ரஜ;’-என்பது, ஸ்ரீராமா, சுந். 38 : 20.

——————————————————————————————————-

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

ஸ்வரூபேணாகாவும் கார்ய புருஷ ரூபமாகவும் நின்று சர்வ பிரகார ரக்ஷகன் -என்று காண்பேன்
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை-சேஷித்வ ஸூசகம் எனக்கு பிரகாசிப்பித்து பார்வதி சரீரம் கொண்ட
அர்த்த நாரீஸ்வரன் பிரகாரம் என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை–சரஸ்வதி வாக் தேவி -நான் முகனை -எனக்கு பிரகாசிப்பித்து
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த-சமமாக படிக்கும் சசிபதி மணாளன் இந்திரன் -ஸ்ரீ வராஹனாக உத்தரணம் பண்ணி
திரிபுரம் எரித்த -அந்தர்யாமி வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ-மூன்று லோகம் ரஷித்த-இந்திரியங்கள் வசப்படுத்தி
ஸ்ருஷ்டித்த நான் முகனுக்கு அந்தர்யாமி -காணக் கிட்டாது ஒழிவதே-காண ஆசை இருந்தாலும் –

‘என்னுடைய திருமகளை மார்பிலே கொண்ட திருமாலை, என்னுடைய பார்வதியை ஒரு பக்கத்திலேயுடைய சிவபெருமானுக்கு
உள்ளுயிராய் இருப்பவனை, என்னுடைய சரஸ்வதியை எப்பொழுதும் தன்னிடத்திலே கொண்டவனான பிரமனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை,
நின்ற இந்திரனுக்கு உள்ளுயிராய் இருப்பவனை, நிலத்தைக் கேட்டாலே குத்தி மேலே கொண்டு வந்து, முப்புரங்களை எரித்த,
ஐம்புலன்களையும் வென்று ஓட்டிய சுவர்க்கலோகத்தை ஆளுகின்றவனைக் காணேனோ?’ என்கிறார்.

நிலங்கீண்டல், எயில் மூன்று எரித்தல், வென்று புலன் துரத்தல், விசும்பு ஆளுதல் என்னும் நான்கனையும், மேலே கூறிய நால்வர்க்கும்
முறை நிரல் நிறையாகக் கொள்க. ‘என் திருமார்பனாய் நிலங்கீண்டவன், என் மலைமகள் கூறனாய் எயில் மூன்று எரித்தவன்,
நாமகளை அகம்பாற்கொண்ட நான்முகனாய் வென்று புலன் துரந்தவன், சசிபதியாய் விசும்பு ஆண்டவன்’ என்க. சசி-இந்திராணி.

உத்தேசிய லாபம் அவனாலேயாயிருந்தது.
இத் தலையாலே முயற்சி செய்வதற்குத் தகுதி இல்லாதபடியான பாரதந்திரியும் உண்டாய் இருந்தது;
அத் தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது;
இப்படி இருக்கச் செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே
‘நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையே யன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன் தன்னை –
இவ் விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேடண அமிசத்திற்கு அடைமொழி;
‘என் திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று கொள்க.
என் ஸ்வாமினியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனை.

என் திரு மார்பன் தன்னை –
ஆஸ்ரயண தசையில் அவளைப் பற்றும் –
பிராப்தி தசையில் அவனைப் பற்றும் –
பிராபகத்தில் இருவரையும் பற்றும் –
(இப்படி மூன்றிலும் -விசேஷணத்திலும் விசேஷ்ய அம்சத்திலும் விசிஷ்டத்திலும் உண்டே )

‘என் மலை மகள் கூறன்’ என்பது முதலான இடங்களில் உள்ள ‘என்’ என்பது,
விசேடிய அமிசத்திலே ஊற்றம். ‘என்றது,
என் சொல்லியவாறோ?’ எனின்,
‘அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி,
‘மறந்தும் புறம் தொழா மாந்தர்’ நான்முகன் திருவந். 68.-ஆக இருக்குமவர் ஆதலின்,
இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம் உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி,

என் மலை மகள் கூறன் தன்னை –
இமய மலையின் பெண் பிள்ளையைத் தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலே யுடையனாய் இருக்கிற
சிவனைத் தான் இட்ட வழக்காக வுடையனாய் இருக்கிறவனை.என்றும்

என் நா மகளை அகம் பால் கொண்ட நான்முகனை –
சரஸ்வதியை என்று மொக்கத் தன் பக்கலிலே யுடையனாய் இருக்கிற பிரமனுக்கு
அந்தராத்துமாவா யுள்ளவனை.

நின்ற சசிபதியை –
இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி ஐஸ்வரியத்தால் குறைவற்றிருக்கிற இந்திரனுக்கு
அந்தராத்துமாவாய் உள்ளவனை.
‘அவன் பிரமன், அவன் சிவன்’ என்றால்,
‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற
இந்திரனுக்கு அந்தர்யாமியா யுள்ளவனை.
ஸ ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர;’ என்பது, தைத். நாரா.

‘இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘ஸ்வரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்;
இங்கே, ‘தக்க வயதினை அடைந்த புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும்
தமப்பன் மார்களைப் போலே,
இவர்கள் தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று;
சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.

‘இவர்களுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்:

நிலம் கீண்டு. . .விசும்பாளியை –
‘பிரளய சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப் பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு
எடுத்துக் கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனாற்போலே,
அவர்களுடைய செயல்களும் அவனுடைய அதீனம்’ என்கிறது.

எயில் மூன்று எரித்த –
மதிள் மூன்றை எரித்த.
‘விஷ்ணு அந்தராத்துமாவாய் நின்றான்’ என்னக் கடவது அன்றோ?
அதுவும் அவன் இட்ட வழக்கு-

‘விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’-என்பது, பாரதம், கர்ண பர்வம்.

வென்று புலன் துரந்த-
படைப்புக்கு உறுப்பாக ஐம் பொறிகளை அடக்கியவனை புலன்களை வென்று ஓட்டின

விசும்பாளியை –
ஸ்வர்க்கத்தை வன்னியம் அறுத்து ஆளுகின்றவனை.

காணேனோ –
காணப் பெறேனோ?

ஆகச் சொல்லிற்றாயிற்றது:
உத்தேஸ்ய லாபம் அவனாலேயாய் இருந்தது.
அதற்கு உறுப்பான முயற்சியில் ஈடுபடுதற்குத் தகுதி இல்லாதபடி அதுவும் அவன் இட்ட வழக்காய் இருந்தது.

இனி.
இத் தலையாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் உண்டாய் இருந்தது;
அவனாலே பேறு ஆம் அன்று விளம்பத்திற்குக் காரணம் இன்றிக்கே இருந்தது.

இப்படி இருக்கச் செய்தேயும்
தம்மை இழந்து இருக்கக் கண்டார் ஆகையாலே,
‘இனி, இந்த இழவோடே இங்ஙனே முடிந்து போமித்தனையே அன்றோ?’ என்று வருந்துகிறார்.

———————————————————————————————————–

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப-
பிலத்துவாரம் பாதாளம் -பய அதிசயத்தால் -குளவிக் கூடு
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்-பலிஷ்டமான பெரிய திருவடி நடத்தி
மாலிக்கு நான்கு பிள்ளைகள் -விபீஷணன் கூட போன நால்வர் -சுமாலிக்கு -பெண் கைகசி விச்வரஸ் கல்யாணம்
ப்ரஹ்மா மகன் புலஸ்தியர் மகன் விச்வரஸ் -குபேரன் முதல் மனைவி பெண் -மால்யவான் -இவன் வேற
ராவணனுக்கு உபதேசித்த மால்யவான் வேற — சுகேசன் பிள்ளைகள் இந்த மூவரும் மாலி சுமாலி மால்யவான் -நந்தி சாபம்
குரங்கால் சாவு வேகவதி சாபம் ராவணனுக்கு பல சாபங்கள்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ-அதி சூரர் புருஷர்கள்
புலஸ்தியர் பிராதா மரீசி -இஷுவாகு குலம் -பிராமண ராக்ஷஸன் ராவணன்
அழிக்கும் உபேந்த்ரன் -அகங்கார மமகார பிரதானம் ராக த்வேஷம் தொலைக்க இந்த சரித்திரம் கூறுகிறார்

‘யாளியைக் கண்ட குதிரை போலவும், சிங்கத்தைக் கண்ட நரி போலவுமாகி அரக்கர்கள் கதறிக்கொண்டு அக்காலத்தில்
இலங்கையை விட்டுப் பிலத்திலே சென்று மறைய, வலிய அழகிய கருடப் பறவையை நடத்திய வலிய மாலி என்றவனைக் கொன்று,
பின்னும் உயர்ந்த பிண மலைகளாக வீரர்களைக் கொன்று குவித்து சர்வேஸ்வரனையும் காணக் கூடுமோ?’ என்கிறார்.
ஆளி வேறு: அரி வேறு. ‘ஒளிப்பக் கடாய் மாலியைக் கொன்று குன்றங்கள் செய்து அடர்த்தவன்’ என்க. அடர்த்தவன் – பெயர்.

‘மாலி தொடக்கமான பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின சர்வேஸ்வரனைக் காண வல்லோமே?’ என்கிறார்.
முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்பியன் அவனே என்னும் இடம் சொல்லி,
மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம் சொல்லி.
இப் பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் பகைவர்களை அழிக்கின்ற அவனது தன்மையைச் சொல்லி,
தடைகளைப் போக்குவான் அவனே என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.
10 -பாசுரத்தால் -இஷ்ட பிராப்தம் மோக்ஷ பிரதத்வம் சொல்லி -நிகமிக்கிறார் –

ஆளியைக் காண் பரியாய் –
யாளியைக் கண்ட குதிரை போலவும்.

அரி காண் நரியாய் –
சிங்கத்தைக் கண்ட நரியைப் போலவும்.
ஸ்ரீராமாயணத்தே, அந்த அரக்கர்கள் அஞ்சின படியாகப் பல உதாரணங்களை இட்டுச் சொல்லிப் போரக் கடவதன்றோ?
இங்கே இரண்டு வகையாலே அதனைச் சூசிப்பிக்கிறார். பரி-குதிரை. அரக்கர்.

(சரபம் கண்ட ஸிம்ஹம்
ஸிம்ஹம் கண்ட-யானை
யானை கண்ட புலி
புலி – கண்ட மக்கள் –
போல் பெருமாளைக் கண்டு ராக்ஷஸர்கள் )

ஊளை இட்டு –
மேலே ‘நரி’ என்கையாலே அதற்குத் தகுதியாகச் சொல்லுகிறார்.

அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப –
தூசித் தலையில் நேர் நின்று போர் புரிய ஆற்றல் இல்லாமையாலே
இலங்கையை விட்டுப் போய்ப் பாதாளத்திலே புக்கு ஒளிப்ப. என்றது,

‘புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே,
‘மாலி, சுமாலி, மால்யவான்’ என்றாற் போலே சொல்லப் படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய்,
பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக் கடவது அன்றோ?
அதனை இங்கே அருளிச் செய்கிறார்’ என்றபடி.

‘பிலம் புக்கு ஒளிப்ப’
கையில் ஆயுதம் பொகட்டாரையும், முதுகு காட்டினாரையும் கொல்லக் கூடாதே அன்றோ?
ஆகையாலே, தப்பி ஓடிப் போய் ஒளிப்பாரும்
உள்ளே பட்டுப் போனாருமாய்ப் போனார்களாதலின், ‘பிலம் புக்கு ஒளிப்ப’ என்கிறார்.

மீளி அம் புள்ளைக் கடாய்-
வலியை யுடைய பெரிய திருவடியை நடத்தி. மீளியம்; ஒருசொல்; வலி என்பது பொருள்.
அன்றிக்கே,
‘மீளி அம் புள்’ என்று பிரித்து,
‘கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி’ திருவாய், 3. 10 : 2.-என்கிறபடியே,
பகைவர்களுக்கு யமன் போலே இருப்பானாய்,
‘தூவாய புள்ளூர்ந்து’பெரியதிருமொழி, 6. 8 : 3.-என்கிறபடியே,
அநுகூலர்க்குக் காண்பதற்கு இனியதான வேடத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்தி என்னுதல்.

பெரிய திருவடி முதுகிலே வந்து தோற்றும் போதை அழகையே அன்றோ இவர் பாவித்துக் கிடப்பது?
‘பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து’ (திருவாய். 3. 8 : 5) என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘இவர் பாவித்துக் கிடப்பது’ என்கிறார்.

மீளி என்று வலிக்கும், யமனுக்கும், பாலை நிறத் தலைமகனுக்கும் பேராகச் சொல்லுவர்கள்.

விறல் மாலியைக் கொன்று –
ஆக, பிரசித்தர்களிலே ஒருவனைச் சொல்லிற்று. பின்னும்

ஆள் உயர் குன்றங்கள் செய்து-
பின்னும் ஆண் பிள்ளைகளாய் இருப்பார் பலரை அழியச் செய்து, அவர்களாலே பிண மலையாம்படி செய்து.
ஆண்களாலே உயர்ந்த மலைகளாம்படி செய்து.

அடர்த்தானையும் காண்டுங்கொலோ-
அவன் அரக்கர் கூட்டத்தை அழியச் செய்தாற்போலே, நம் விரோதிகளைப் போக்கி
நமக்குக் காட்சியிலே தொடர்புண்டாய் நாம் கண்டோமாய்த் தலைக் கட்ட வல்லோமோ?

————————————————————————————————-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

விபீஷண பக்ஷ பாதத்தால் -ராவண குலத்தை நிஸ் சேஷமாக முடித்து -லங்காதிபதி பட்டம் -தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணி
தன்னுடைச் சோதி எழுந்து அருளி -சக்கரவர்த்தி திருமகனை காணப் பெறுவமோ
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்-உன் கூட்டாக சேருவோமோ
காண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து-பும்ஸவத்ம் செறுக்கு-வீரத்தால் -பர அபிபாவ வீரம் –
மீளி -சிம்கம் போல மிடுக்கு -ராஜஸ ஜன்மா ராக்ஷஸன் -விசேஷங்கள் அவனுக்கு -கும்ப கர்ணன் இந்திரஜித் குலத்துடன் அழித்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி-விபீஷணன் -ஆஸ்ரயித்த காரணத்தால் -ராஜ்யம் கொடுத்து அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே-போர் ஏற்று நாயனார் -11000 வருஷம் திரு அயோத்யையில்
அசாதாரண ஜோதி ரூபம் பரம பதம் -நித்ய ஸூரிகளுக்கு சிம்ம ஸ்ரேஷ்டம் போலே செறுக்கு தோன்ற –
மீண்டு -என்பதை ஆண்டு என்பதுடன் அந்வயிக்கவுமாம் –
ரஜஸ் தமஸ்-அழித்து -குலம் -கும்பன் நிகம்பன் கும்ப கர்ணன் பிள்ளைகள் -அந்யதா விபரீத ஞானங்கள் அழித்து –
தேகாத்ம அபிமானம் விபரீத ஞானம் -ஸ்வ தந்த்ரன் பிரமிப்பு அந்யதா ஞானம் –ரஜஸ் தமஸ் தத் ஜெனித காம க்ரோதங்கள் –
தேகத்துக்கு விருப்பம் செய்து -தர்மாத்மா விபீஷணன் –விச்வரஸ் புத்ரன் குபேரன் வைஸ்ரவணன் இன்னொரு பெயர் –
சுத்த சத்வ கார்யம் -ஞான விசேஷத்துக்கு ராஜ்யம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் -கொடுக்கும் ஸூரி தலைவனைக் காணக் கூடுமோ –

கொடுந்தொழிலையே செய்கின்ற ஆண் தன்மையினையும் திறலையும் மிக்க வலியினையுமுடைய அரக்கனான இராவணனுடைய குலத்தைக் கொன்று,
மீண்டும், அவனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கே கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்து, திரு அயோத்தியில் வீற்றிருந்து பதினோராயிரம் ஆண்டுகள்
அரசாட்சியைச் செலுத்தித் தன்னுடைச் சோதியை அடைந்த நித்திய ஸூரிகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனான சர்வேஸ்வரனை நெஞ்சம்! காண்போமோ?
‘குலத்தைத் தடிந்து தம்பிக்கு அருளி ஆண்டு புக்க அரியேறு’ என்க.

‘இராவணன் முதலியோரை அழித்த சக்கரவர்த்தி திருமகனை, நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

காண்டுங்கொலோ நெஞ்சமே –
இழவாலே கட்டிக் கொண்டு கதறுகைக்குக் கூட்டான நீ, இப் பேற்றாலே இன்பமடைந்தவர் அனுபவிக்கும் அனுபவத்துக்கும்
கூட்டாய் நாம் அவனைக் காண வல்லோமோ?

கடிய வினையே முயலும் –
தாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ,
பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று?
இதில் தாழ்ந்திருப்பது ஒரு செயல் இல்லையாயிற்று, இவன் செய்யுமவற்றில்.
‘கிரமத்திலே பலம் கொடுக்கிறோம்’ என்று சர்வேஸ்வரனுக்கு ஆறியிருக்க ஒண்ணாதபடி யாயிற்றுக் கொடிய செயல்கள் செய்யும்படி.

‘மிகக் கொடியனவான பாவங்கள், மிக உயர்ந்தனவான புண்ணியங்கள் ஆகிய இவற்றால் உண்டான பலன்களை
இப் பிறப்பிலேயே மூன்று வருடங்களில் மூன்று மாதங்களில் மூன்று பக்ஷகளில் மூன்று நாள்களில் அனுபவிக்கிறான்’ என்னும்படியே.

‘அத்யுத்கடை: புண்யாபாபை: இஹைவபலம் அஸ்நுதே
த்ரிபி: வர்ஷை: த்ரிபி: மாஸை: த்ரிபி: பக்ஷை: த்ரிபி: திநை:’-என்பது, தர்ம சாஸ்திரம்.

கொடிய வினையே என்ற ஏகாரத்தால்
இவன் நல் வினைத் தொடர்பு இல்லாதவன் என்பது பெறப்படும்.

ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் –
ஆண் பிள்ளைத் தனத்தில் வந்தால், திறலையுடைய சிங்கம் போன்ற மிடுக்கையுடைய அரக்கன்.
மீளி-சிங்கம்.
அன்றிக்கே,
‘திறலை யுடையனாய், பிறரை அடக்குதற்குரிய ஆற்றலை யுடையனாய்,
யமனைப் போன்ற மிடுக்கை யுடையனான இராவணனுடைய’ என்னுதல்.

குலத்தைத் தடிந்து-
‘ஜனக ராஜன் திருமகள் காரணமாகப் பிசாச ஜாதி அற்றதாயும் அரக்கர் குலம் அற்றதாயும் செய்வேன்’ என்கிறபடியே,
கரிஷ்யே மைதிலீ ஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 64 : 66.

எந்தையே! இராகவ! சரணம் என்ற சொல் தந்தவர் எனைவரோ சாற்று மின் என’

குலமாக அழித்து.அவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி –
‘இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது,
விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.

‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே,
அவன் தானே வரப் பெறுவது காண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ?

‘அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டாராக அமையாதோ? இந் நிர்பந்தம் என்?’ என்னில்,
அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக் கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப் போம்;
அவன் தானே வரப் பெற்றதாகில் துருப்புக் கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ?

மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே,
‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ?
இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக் கொண்ட பின்பாயிற்று.

‘அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
பவந்தம் ஸர்வ பூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’-என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.

‘நான் இராவணனுக்குப் பின் பிறந்தவன்’ என்று அவன் வர,
இவரும் ‘அவன் தம்பியே’ என்றாயிற்று அவனைக் கைக் கொண்டது.

‘பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்றருள் செய் தானோ?’-என்றார் கம்பரும்.

விரிநீர் இலங்கை அருளி –
கடல் சூழ்ந்த இலங்கையைக் கொடுத்தருளி.

மீண்டும் ஆண்டு –
இராவணனைக் கொன்ற பின்பு, பிரமன் முதலான தேவர்கள், ‘தேவரை அம்புக்கு இலக்கு ஆக்கி,
நாங்கள் எங்கள் காரியத்தைத் தலைக் கட்டிக் கொண்டோம்;
இனி தன்னுடைச் சோதி ஏற எழுந்தருள அமையும்,’ என்ன,

அவ்வளவிலே சிவன்,
‘தேவர் அங்ஙன் செய்தருள ஒண்ணாது,
திருவடி சூடுதற்குத் தடை உண்டாகையாலே திருத் தாய்மாரும் இழிவு பட்டிருந்தார்கள்;
நாடும் அடைய நொந்திருந்தது: ஸ்ரீபரதாழ்வானும் ஆர்த்தனாய் இருந்தான்:
ஆன பின்பு, ‘வருந்தியிருக்கிற ஸ்ரீபரதாழ்வானையும்
பெருமை பொருந்திய ஸ்ரீகௌஸல்யையாரையும் சமாதானம் செய்து’ என்கிறபடியே’
‘ஆஸ்வாஸ்ய பரதம் தீநம் கௌஸல்யாம்ச யஸஸ்விநீம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 122 : 4.

ஸ்ரீபரதாழ்வான் தொடக்கமானவர் ‘இழவுகள் எல்லாம் தீரும்படி மீண்டு எழுந்தருளி,
திருமுடி சூடி, நாட்டை வாழ்விக்க வேணும்’ என்ன,
அது திருவுள்ளத்துக்குப் பொருந்தும் செயலாகையாலே பதினோராயிரம் ஆண்டு
ஒரு படிப்பட இருந்து நாட்டினை வாழ்வித்தருளி.

தன் சோதி புக்க –
அம்புக்கு இலக்கு ஆக்குவார் இருந்த இடத்தை விட்டுத்
தனக்கே சிறப்பாய்
எல்லை அற்ற பேரொளிப் பிழம்பு வடிவமாய் இருக்கிற
பரம பதத்திலே போய்ப் புக்க.

அமரர் அரி ஏற்றினையே-
அம்பு இட்டு எய்வார் இன்றிக்கே ஆநுகூல்யமே தன்மையாய்த் தொண்டிலேயே நிலை பெற்றவர்களான நித்திய ஸூரிகள்
நடுவே அவன் இருக்கும் இருப்பைக் காண வல்லோமே?

பசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்திய ஸூரிகள் கொண்டாட,
அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.

நித்திய ஸூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை
அன்றோ பிராப்பியமாகிறது?

———————————————————————————————

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

தனது கிருஷ்ண அனுபவ துறையில் மேலும் ஆழ்ந்து அனுபவிக்கிறார் -ஸூஜனம் வாசுதேவ பாண்டவ விரோதி நிரசித்து அருளிய
நமக்கு இஷ்ட பிராப்தம் அருளுவான்
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்-ஈன்று -பிறந்த உடனே அதி சைஸவம் -ரசிக்கும் –
கோப குலத்தில் ஏகி பவித்து புக்கு பூதநா சகட யமலார்ஜுனாதி -பிரவர்த்திப்பித்து
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து-10 வயசில் —கூற்று -மிருத்யு தேவன் -போலே கஞ்சனை
பிராண புதன் தன்னை பிரித்தானே -62 வயசில் மகா பாரதம் -ஒன்றும் செய்தாரைப் போலே ருணம் -கோவிந்தா கூப்பிடட கடன் வளர -சீற்றம் மிஞ்சி
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே-அபரிச்சின்ன மஹாத்ம்யம் -கீழே பெருமாள் தன்னுடைச் சோதி எழுந்து அருளியதை
அருளிச் செய்து இதில் கிருஷ்ணன் -பூ பாரம் நீத்து புக்கு –
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து-ஏற்ற அரிய-ஸ்ரீ வைகுண்டம் ஏறுவதற்கு ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு –
பரம யோகிகளுக்கும் வாக்குக்கும் மனஸ் எட்டாத -பரம பதம் நிர்ஹேதுக கிருபையால் –
மாஸூச என்றபடி -அருளுவான் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி 8/9 பாசுரங்கள்
அரி -பாபங்கள் அபகரித்து -அரம் சக்கரம் கையில் பிடித்து என்றுமாம் –

‘பிறந்த ஓர் இளம்பிள்ளையாய் ஆயர் குலத்திலே புகுந்து ஆச்சரியமான காரியங்களையே செய்து, யமனப் போன்ற தன்மையனான
கம்ஸனைக் கொன்று, பாண்டவர்களுக்காக் கொடியசேனைகள் எல்லாவற்றையும் கொன்று, ஆற்றலின் மிக்கானாய், பெரிய பரமபதத்திலே
சென்று சேர்ந்த கிருஷ்ணனானவன், ஒருவர் தம்முயற்சியால் ஏறுதற்கு அரிய பரமபதத்தை நமக்குக் கொடுப்பான்’ என்றவாறு.
ஸ்ரீ வைகுண்டம் தரும் -என்றாலும் அவனைத் தானே அனுபவிக்கக் கொடுப்பான் -என்றபடி

ஏற அரு என்பது, ‘ஏற்றரு’ என்றாயிற்று. ‘அரி நமக்கு வைகுந்தத்தை அருளும்,’ என்க. அரி – சிங்கம்; உவம ஆகு பெயர்.
‘ஈன்ற இளம்’ என்பது, ‘ஈற்றிளம்’ என்றாயிற்று. ‘ஆயர் குலத்திலே புக்கு இயற்றிக் கொன்று தடிந்து ஆற்றிலின் மிக்கான்’ என்க.
ஆற்றல் – பொறை. வலியுமாம்.

பிராப்யன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி, (1-2)
தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி,(3-4-5-6-7 )
விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி, (8-9-)
இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவு இன்றிக்கே இருந்த பின்பு
அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.
(வைகுந்தம் தரும் என்றாலே அவன் தன்னைத் தந்து கைங்கர்யம் கொள்வது தானே )

ஏற அரு வைகுந்தத்தை அருளும் நமக்கு –
ஒருவராலும் தம் முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை
அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும்.
‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரே யாகிலும்,
பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில்,

ஆயர் குலத்து ஈற்றிளம்பிள்ளை –
நம் படி பார்க்க அறியாத இளைஞன்.
அவனே தருவான் -வைகுண்டம் தருவான் -உடனே தருவான் -தந்தே ஆக வேண்டும் –
நம்மைப் பார்க்க அறியாத சிறு பிள்ளை அன்றோ –
‘இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்திய ஸூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக் கடவதன்றோ?
முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.

ஈற்றிளம்பிள்ளை –
‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு.
அன்றிக்கே,
ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி.
இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி.

ஒன்றாய்ப் புக்கு –
கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட,
இவனும் பொய்யே மருமகனாய்
அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விரும்பிப் போய்ப் புக்கானாயிற்று.
அன்றிக்கே,
‘வில் விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

மாயங்களே இயற்றி –
ஆயுதச் சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, -ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது,
குவலயா பீடத்தின் கொம்பை முரிப்பது, -மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து.

இயற்றுதல் – செய்யத் தொடங்குதல்.
இவன் இப்படிச் செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்க மாட்டாமல்
கூற்றுவனைப் போலே கிளர்ந்தான் ஆயிற்றுக் கம்ஸன். —
போய்ப் புக்கு- கோகுலத்தில் புக்கு -வட மதுரையில் புக்கு என்றுமாம் –

கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-
மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப்பட விழ விட்டுக் கொன்று பொகட்டானாயிற்று. இயல்பு-தன்மை.
‘அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக்
கருத்து என்னையோ?’ எனின்,‘

கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.

‘இராஜத் துரோகிகளைக் கொல்லும் போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலே காண்’ என்று அம்மாள் பணிப்பர்.
தான் கொடுத்த தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ?

ஆக, தன்னைத் தான் அறிவதற்கு முன்பு,
கம்ஸன் வர விட்டவர்களையும்
அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது;

பருவம் நிரம்பித் தன்னைத் தான் அறிந்த பின்பு,
பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.

ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து –
பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய் பாறிக் கொண்டு வர,
அவர்களை அடையத் தேர் காலாலே உழக்கிப் பொகாட்டானாயிற்று.

ஆற்றல் மிக்கான் –
பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் பொகட்டு, தரும புத்திரன் தலையிலே முடியையும் வைத்து,
இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும்,
‘நிலை பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?
‘நாதி ஸ்வஸ்த மநா யயவ் :’ என்பது, பாரதம், உத்யோக.

ஆற்றல் என்று பொறையாய், ‘பொறை மிக்கவன்’ என்னுதல்.
அன்றிக்கே,
வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல்.
இவற்றை அடைய அழியச் செய்கைக்கு அடியான வலியைச் சொன்னபடி.

பெரிய பரஞ்சோதி புக்க அரியே –
கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,
‘நித்திய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே,
கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று,ஆசிலே வைத்த கையுந்தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் தொடர்ந்தபடி.

————————————————————————————————–

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

பகவத் கைங்கர்ய பரர்கள் மதி முக மடந்தையர் சாமராதிகள் கொண்டு சத்கரிப்பார்கள் -பலம் அருளிச் செய்கிறார்
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த–புக்கு -அரி உருவாய் -புக்க-புக்கு அ -அத்புதமான சிம்ம விக்ரகம் -ஆஸூர பிரகிருதி
ஹிரண்யன் அனாயாசன -ஆஸ்ரித விரோதி தொலைந்தால் உகந்து
சடக்கென புக்கு என்றுமாம் -உருவம் முடிவு ஹிரண்யன் வார்த்தை கேட்ட பின்பே எடுத்தார் –
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன-விரோதி நிரசனம் அவகாசம் இல்லாத படி
அழகுக்கும் செல்வத்துக்கும் ஐஸ்வர்யம் -திரு ஆழி-உடைய -மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே-மதி முக மடந்தையர் அப்சரஸ் ஸ்த்ரீகள் –
பகவத் குண சேஷ்டிதங்களை முழுமையாக பிரதிபாதிக்கும் ஆயிரம் -பிராப்த்யத்வ உபாயத்வ விரோதி நிவர்த்தகங்கள் அடியாக இப்பத்து -அபி நிவேசம் மிக்கு
சபல புத்தி உடைய -மதி முக மடந்தையர் பாகவத கைங்கர்யம் மேல் சபலம் -தத் விஷயத்தில் செய்வதை இவர்களுக்கும் –

அந்த நரசிங்கத்தின் உருவமாகிப் புக்கு அவுணனாகிய இரணியனுடைய சரீரத்தைப் பிளந்து மகிழ்ந்த சக்கரத்தையுடைய சர்வேஸ்வரனை,
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மேம்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இத்திருப்பாசுரங்கள் பத்தையும்
கற்று வல்லவர்களாகிய அவர்களைப் பெண்கள் சூழ்ந்து கொண்டு பல்லாண்டு பாடிச் சாமரை வீசுவார்கள்.

முடிவில், ‘இத்திருவாய்மொழி கற்றாரை மதிமுக மடந்தையர் விரும்பித் திருப்பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்கு அ அரி உருவாய் –
உக்ரம் வீரம் –இத்யாதி அந்த அரி உருவாய்ப் புக்கு. அவ்வரியுரு என்னுமித்தனையாயிற்றுச் சொல்லலாவது.
நரசிங்கமான வேடத்தைக் கொண்டு பகைவன் அண்மையிலே கிட்டி.
அன்றிக்கே,
இரணியன் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக்கடுமை,(அங்கு அப்பொழுதே தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை )
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே,
உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு புறப்பட்டாற்போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.

அவுணன் உடல் கீண்டு உகந்த –
இரணியன் உடலைப் பிளந்து போகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம்!’ என்று உகந்தனாயிற்று.

சக்கரச் செல்வன் தன்னை –
இரணியனுடைய உடலுங்கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,
பின்னை அழகுக்குப் பத்திரங்கட்டின இத்தனையாயிற்று.
(அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பாக திருவாழி
பத்ரம் கட்ட -பல்லாண்டு பாட
திரு உகிரின் அழகுக்கு )

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ஆழ்வார் அருளிச் செய்த.

மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்-
பகவத் விஷயத்தை உள்ள அளவும் சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் கற்றவர்களை.

தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரி செய்வர் ஏழையர் –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனி இழிய ஒண்ணாமை திரண்டு கொண்டு,
‘பொலிக! பொலிக!’ என்று மங்களாசாசனம் செய்து,
சர்வேஸ்வரன் பக்கல் செய்யக் கூடிய அசாதாரண கைங்கரியங்களை யடைய இப் பத்தைக் கற்றவர்கள்
பக்கலிலே செய்யா நிற்பார்கள் மதிமுக மடந்தையர்.
நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

——————————————————————————————

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே

விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்-அதனால் வளர்ந்த ஆர்த்தி
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –துடிப்புக்கடல் -பூர்ண அனுபவ ஆசை மிக்கு
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -பின் தொடர்ந்து அடைவது என்றோ என்று கதறி
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே என்று அறுதியிட்டு
எப்படி அடைவேன் யோசிக்க வேண்டாமே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –

1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை

2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-

3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-

4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்

5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்

6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –

7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ

8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்

9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–

10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்

11-புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்

பதிஐ பகவான் –

ஆழ்வார் புலம்பலை அபகரித்த ராமன் கண்ணன் நரஸிம்ஹன் என்றவாறு
ஒரே பாசுரத்தில் ஒவ்வொரு அவதாரம் சுருக்கமாக அருளிச் செய்கிறார் இதில் –

——————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 66-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் (அநிஷ்ட நிவர்த்தகமும் இஷ்ட பிராப்தியும் )ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டற்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

பா மருவு வேதம்-சந்தஸ் ஸூக்கள் கூடிய வேதம்
மால்-ஆஸ்ரித வ்யாமோஹன் இங்கு
நண்ணார் ஏழையர்-ஆஸ்ரியாதார் ஏழையர் -ஆஸ்ரயிப்பார் ஸ்ரீ மான் ஆவார்

—————————————————-

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டற்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –

தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகதலோடே கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணங்கள் –
அவை தான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகத்வம் ஆகிற
உபய ஆகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

1-பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
2-என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்

3-காத்த எம் கூத்தாவோ -என்று தொடங்கி -உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
4-எங்குத் தலைப் பெய்வன் நான் என்று தொடங்கி -என்னுடைக் கோவலனே -என்றும்
5-என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
6-வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி -என் திரு மார்பனை -என்றும்
7-என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

8-ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி -அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
9-காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி -அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
இவ் விரண்டு பாட்டாலே விரோதி நிரஸனத்தையும்

10-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்

பற்ப பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தாமரைக் கையாவோ- செய்ய நின் திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்

காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும் (த்ரிபங்க அழகு )

பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்

என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்

என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்

மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்

அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்

அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்

என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து

ஏவம் விதமானவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading