பகவத் விஷயம் காலஷேபம் -149- திருவாய்மொழி – -7-4-1….7-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியிலே, பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினை யுடையரானபடி சொல்லிற்று:
மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல்,
ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ?
‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று சர்வேஸ்வரன் பார்த்து அருளி ‘ஒன்று கொடுக்கலாவது இதற்குமேல் இல்லை அன்றோ?
என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

நினைத்து அனுபவிக்கவில்லை -கண்டு அன்றோ அனுபவிக்கிறார்-

அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத
‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்!
தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ?
இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி
இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக்கட்டுகிறார்.
இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான்.
அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காணவல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ?
மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!

முதலிலே -திருவடியில் -திரு உலகு அளந்த விருத்தாந்தம் தொடக்கமாக -என்றவாறு

அன்றிக்கே, மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று
இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே,
அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து,
இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும்,
கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும் இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல்.

‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105.
இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.
என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால் நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே!
தேவ குமார ரூபம் – அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது?
‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று
தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார்.
அலங்க்ருதம் – அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை.
தம் ஸூதம் – இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி.
ஆ வ்ரஜந்தம் – மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே.
அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?
நந்தாமி பஸ்யந்நபி – கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று,
நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி.
தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும்.
கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலேகாணும் பிரயோஜனம்,
‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ? பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி,
பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’-வா போகு–வந்து ஒரு கால் கண்டு அருளி -ஏசல் கண்டு –
‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலே காணும்.
‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து,
தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?

‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.

அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு
எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிக்கும்படி-

சூட்டு நான் மாலைகள் தூயன ஏந்தி -கொடுத்துக் கொள்ளாதே கொண்டதுக்கு கைக்கு கூலி கொடுத்து -அமுது செய்திடில் ஒன்றுக்கு
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளவும் செய்ய வேண்டுமே -வென்று தரும் மேவி கற்பார்க்கு -இந்த திருவாயமொழி –
ஸமஸ்த சரிதங்களைக் காட்டி -ஆழ்வார் ஸமஸ்த துக்கங்களையும் -மகள் தோழி தாயார் தசை துக்கங்களை -தீர்த்து அருளினான் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில மணி வண்ணன் -கனம் குழை இட காது பெருக்குவாராய்ப் போலே விச்வாஸம் பிறப்பித்து
-பைய பைய -சிறுச் சிறிதே விழித்து -கோதில் வாய்மையினான் சாந்தீபன் –

மகா க்ரம -கிராமத்தில் ஏத்தி அருளுவான்
இது ஒரு நேர் முக ஒளி பரப்பு -ஆழ்வார் இருந்த இடத்திலே பத்தும் பத்தாக காட்டி அருளுகிறார்
இதற்கு மங்களா சாசனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே –

——————————————————————————————–

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

திரு உலகு அளந்த பிரகாரம் அனுசந்தித்து சந்துஷ்டர் ஆகிறார் –
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை-வளருகின்ற போது திவ்யாயுதங்கள் பரிவாலே -முன்னாக அவைகள் வளர
-சங்கல்பித்தான் என்றதுமே முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்ற
ஹேதி ராஜர் ஹேதி புங்கவர் –ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் -திரு சார்ங்கமும்
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்-மங்களம் பாட -தாண்டும் நந்தகமும்-சங்காய்ஸ் ஸூ றானாம் -திக்குகள் தோறும்
பொலிக பொலிக பொலிக எட்டுத் திக்குகளிலும்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்-அண்ட கபாலம் பிளந்து ஆவரண ஜலம் -குமிழித் தண்ணீர் -திருமுடியும் திருப்பாதங்களை
ஓக்க கிளம்பும் படி -இரண்டும் போட்டி போட்டிக் கொண்டு வேகமாக ஓக்க கிளம்ப
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.-நல்லடிக்காலம் போர் காலம் பிறக்க -சர்வேஸ்வரன் உலகம் அளந்த -சர்வ ஸ்வாமி -கொண்ட வாறே

திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம்
ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன
நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!
‘தண்டும் வாளும் எழத் திசையும் வாழி எழ’ என மாற்றுக, ஏகாரம், ஆச்சரியப்பொருளில் வந்தது.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை அருளிச்செய்கிறார்.

‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்;
அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,
‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர் பறையறைந்தபடியாம்.
தனக்கு ஆக்கிக்கொண்ட செயல் அன்றோ?
இராவணனைப்போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி.

நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்?
ஆழி எழ –
‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி.
‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே.
‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’- என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

‘புண்ணியசீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’ என்கிறபடியே,
போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?
ஆழி எழ –
தோற்றத்திலே அரசு போராயிற்று; ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி?
பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

‘அத ஹரிவர நாத:-அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம்தலையிலே ஏறிட்டுக்கொண்டார்.
நிசிசர பதிம் – அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச்செய்தார். தன்நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம் போது தெரியாது அன்றோ?
ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ –
‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.
சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.
அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்கஇடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ?
பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ?
துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு,
அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்?
‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே,
‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’- என்பது, பாரதம், உத்யோக.

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ?
பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார்,
பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று
சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம்.
நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள்.
அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ –
இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-
தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள்.
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்.
அன்றிக்கே, ‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்;
இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே,
மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல்.
‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.
-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப.
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-
அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு
நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி.
விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை
உமிழுமத்தனை அன்றோ திருவனந்தாழ்வானாலாவது?
அரவணைமேல் தோன்றல் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன்.
திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-
ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது?
பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும்.
அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை
அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’
‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற
திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
திசை வாழி எழ –
‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன!
‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ?
‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ?
அன்றிக்கே, திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழிவாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல்.
திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார்,
திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே.
ஏத்த ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.
-தண்டும் வாளும் எழ-
‘தூசித்தலையில் அவர்களே கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே;
‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி;
ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு.
அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’
‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.- என்று நமுசிவந்து,
‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’ என்று
திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ?
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி.
‘சீராற்பிறந்து’-பெரிய திருவந். 16. என்கிறபடியே, ‘உன்கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற
பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.
‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ –
இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது?
கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி சென்று,
‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை உருவி நிற்க,
கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ.
ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்?
‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி.
முடி பாதம் எழ-
திருமுடியளவும் திருவடிகள் கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக.
அப்பன் ஊழி எழ –
மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று;
நல்லடிக்காலம் கிளரும்படி.யாகவும்.
அப்பன் உலகம் கொண்டவாறே –
‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்:
அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல்.
அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம்.
அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

——————————————————————————————————-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

அமிருத மதன விருத்தாந்தம் -சந்துஷ்டர் ஆகிறார் -புருஷகார பூதை உண்டே என்பதால் –
அப்பன்சாறு பட அமுதம் கொண்ட நான்றே.-அன்றே -ரசம் -உத்சவம் களிப்பு என்றுமாம் -சாரம் கோது நீக்கிய ரசம் -நஷ்ட ஸ்ரீ யானதேவர்கள்
-சாமான்ய அமிர்தம் கொடுத்து பெண்ணமுது கொண்ட நாள்
ஆரு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர-கடைந்த வேகத்தால் -மந்த்ர மலை கருடன் கொண்டு வந்து வாசுகி கொண்டு கடைய –
கோமதி -நதி கடல் நீர் ஆற்று நீர் உயரம் மாறி காலையில் ஆற்று நீர் போகும் சூர்யன் உதித்த பின்பு கடல் நீர் ஆற்றுக்குள் போகுமே –
அது போலே கடையும் பொழுது -ஆற்றுக்கள் பிறப்பிடம் மலை நோக்கி எதிரே ஓடும்
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்-உடம்பை சுற்றி ஒலிக்கும் ஒலி-நான்கு ஒலிகள் நம் பெருமாள் புறப்பாடு சப்தங்கள்
-காசும் பிறப்பும் -கலகலப்ப கை பேர்த்து-இடை நோவ-தயிரை மோராக ஓட்டேன் புறம் புல்கி -என்றார்
இடை கண்ணனால் கட்டப் பட்ட இடை -நானும் கடைவன் ஒல்லை -அநந்ய பிரயோஜனர் –
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி -கடல் சுழலும் ஒலி

‘தேவர்களுக்குத் திருவிழா உண்டாகும்படி எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் ஆறுகள் எல்லாம்
தாம் பிறந்து வந்த மலைகளை நோக்கி எதிர்த்து ஒடுகின்ற ஒலியும், வாசுகி என்னும் பாம்பினது உடலைச் சுற்றி மந்தரம் என்னும்
மலையானது தேய்கின்ற ஒலியும், திருப்பாற்கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் உண்டாயின,’ என்றவாறு.
‘கொண்ட நான்று ஒலி ஒலி ஒலி உண்டாயின’ என்க. ‘உண்டாயின’ என்னும் வினைச்சொல் ஒன்றைக் கொணர்ந்து முடிக்க.
நான்று – காலம். அரவு – ஈண்டு வாசுகி, ஊறு – உடல். சுலாய் – சுற்றி.

திருப்பாற்கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
அஜிதன் -அமிருத மதன பெருமாள் திருநாமம் -எட்டு உருவங்கள் கொண்டாரே
ஹரி கஜேந்திர ரேஷன் பெருமாள் திருநாமம்

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-
கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது;
நீரானது தாழ்ந்தவிடத்தே ஓடக் கடவதன்றோ?
ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.
இவர்க்கு முக்காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச்சிறப்பித்தது?
அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி –
வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசரவென்கிற ஒலியும்.
ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.
கடல் மாறுசுழன்று அழைக்கின்ற ஒலி –
மந்தர மலையை கொடுபுக்கு நட்டுத் திரித்த போது, கீழ்க்கடல் மேற்கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே
திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,
அப்பன் –
உபகாரகன்.
சாறு பட –
கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது, ‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி.
அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவசாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட – என்றபடி.
அமுதம் கொண்ட நான்றே –
திருப்பாற்கடல் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் இவை எல்லாம் உண்டாயின.

————————————————————————————–

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

ஸ்ரீ வராஹ நாயனார் பூமி உத்தரணம் விருத்தாந்தம் -ஸ்திதே -அஹம் ஸ்மராமி -நயாமி பரமாம் கதிம் –
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்-இமையோர் வாழும் தனி முட்டை -சப்தாவரண புறப்பாடு –
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்-சப்த த்வீபதி பிருத்வி -பூ பேதங்கள் நழுவாமல் -அலுங்காமல் குலுங்காமல்
மண் மலைகள் அசலம்-ஸ்வ ஸ்வ ஸ்தானங்கள் இருக்கும் படி -அதுக்கு தாயகமான குல பர்வதங்களும் அப்படியே
நான்றில ஏழ்கடல் தானத்தவே-அதே போலே சப்த கடல்களும்
அப்பன்ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-தான் வடிவை அழிய மாறி -பெருமைகள் ஒன்றும் குறையாமல்
அஜகத் ஸ்வஸ்த பாவம் -நீருக்கு இறாயாத -பூமாதேவியை -உதாரணம் பெரும் கேழலார் -மேரு கணா கணா —
ஸ்புட பத்ம லோசனன் -எயிற்று இடை மண் கொண்ட எந்தை –அண்ட புத்தி மேலே முட்டி தூக்க –

‘என் அப்பன் வராக அவதாரத்தைச் செய்து பூமியைக் குத்தி இடந்து தன் கொம்பிலே கொண்ட காலத்தில் ஏழு தீவுகளும் நழுவாமல்
அந்த அந்த இடங்களிலே உள்ளவாயின; அதற்கு மேல், ஏழு மலை சலித்தல் இல்லாதனவாய்க்கொண்டு அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின;
அதற்குமேல், ஏழு கடல்களும் உடைந்து ஓடாமல் அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின,’ என்றபடி.
‘ஏழ் மண்ணும்’ என்றது, ஏழு தீவுகளைக் குறித்தபடி, நாலுதல் -தொங்குதல். ‘நான்றில’ என்றது,
‘ஒவ்வொன்றும் தனது தனது நிலையினின்றும் மாறிற்று இல்லை’ என்றபடி.

மஹாவராஹ அவதாரத்தின் செயலை அருளிச்செய்கிறார்.

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது, ‘ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே,
ஒன்றும் நாலாதே முன்பு போலே தன்தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே.
ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.
பின்னும் –
அதற்கு மேலே,
நான்றில ஏழ்மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தாற்போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல் தன்தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
‘ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.
‘பின்னும் பின்னும்’ என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு செயலே அமையுங்கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.
நான்றில ஏழ்கடல் தானத்தவே –
அவைதாம் கடினத்தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ? அதுவும் இல்லை அன்றோ இதற்கு?
நீர்ப்பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத்தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
புண்ணியம் பாபம் -பேற்றுக்கு சாதனம் இல்லை -இரண்டையும் தொலைத்து -அவன் நிர்ஹேதுக கிருபையே மோக்ஷ ஹேது போலே –

‘இவை இப்படிக் கிடத்தல் அவன் குறிக்கோளுடையவனாய்க் கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில்,
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத்தைக்கும்படியாகக் குத்தி. அண்டபித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக்கொண்டு செயல் செய்தபோது:
‘மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்கியமாகக் காக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியறத்தத்தம் இடத்திலே நின்றன-

————————————————————————-

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

ஜெகன் நிகரணம் -அனுசந்தித்து சந்துஷ்டர் ஆகிறார் -மகா பிரளயம் –பிராகிருத பிரளயம் என்றுமாம் இதற்கு
அவாந்தர பிரளயம் கல்ப காலம் -நைமித்திக்க பிரளயம் இதற்கு பெயர் -மூன்று லோகங்கள் மட்டும் அழியும்
நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்கோளும் எழ எரி காலும் எழ மலை-கோள் கிரஹம்
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்ஊளி எழ உலகம் உண்ட ஊணே.-அத்தா -சராசரம் கிரஹாத் –
-அரியே என்று உன்னை அழைப்ப -பிரளய ஆபத் -ஸகாத்வம் -ஊளி சப்தம் –பசி என்றுமாம் நெருக்கு உள்ளே போலும் சப்தம்

நாள்களின் கூறுபாடு குலையவும், நிலம் தண்ணீர் இவற்றின் கூறுபாடு குலையவும், ஆகாயம் கிரகங்கள் இவற்றின் கூறுபாடு குலையவும்.
நெருப்புக் காற்று இவற்றின் கூறுபாடு குலையவும். மலைகள் வேரோடு பறிந்து விழவும், சூரிய சந்திரர்களுடைய கூறுபாடு குலையவும்,
என் அப்பன் ஒலி உண்டாகும்படியாக உலகத்தை உண்ட ஊண் இருந்தது.
‘எழ’ என்றது, தத்தம் நிலையினின்றும் நீங்குதலைக் குறித்தது. ஊளி-ஒலி. எழ-கிளர.

மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச்செய்கிறார்.
அன்றிக்கே, ‘‘இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான்’ என்கிற
புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச்செய்கிறாரகவுமாம்,’ என்று அருளிச்செய்வர்.

நாளும் எழ –
கால நியதி போக.
‘அக்காலத்தில் பகல் இல்லை; இரவு இல்லை; ஆகாயம் இல்லை; பூமி இல்லை; இருள்இல்லை: சூரிய சந்திரர்கள் இல்லை;
வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’ என்கிறபடியே.

‘நஅஹ: நராத்ரி: நநப; நபூமி; நஆஸீத்தம; ஜோதி: அபூத்நச அந்யத்
ஸ்ரோத்ராதிபுத்யா அநுப லப்தம்ஏகம் ப்ராதாநிகம் பிரஹ்ம புமாந்ததா ஆஸீத்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா, 1. 2 : 25.
இது, மஹாபிரளயத்துக்குப் பிராமணம்.
‘ந அஹ:நராத்ரி;’ என்பது மாத்திரமே அவாந்தர பிரளயத்துக்குப் பிரமாணம்.
எழ.
பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும் சொல்லுகிறவை எல்லாம்
சூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ?
பாகுபாட்டைச் செய்கிற சூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப்படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ?
நிலம் நீரும் எழ-
காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக.
காரியம் உள்ள இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணாநின்றோம்;
‘மாமாயை . . . . . . . .மங்க ஒட்டு’ என்று பிரகிருதி தத்துவத்தைச் சொல்லா நிற்கச்செய்தே,
‘இங்கு இவ்வுயிர் ஏய் பிரகிருதி’ என்று சொல்ல நின்றாரே அன்றோ?
இதுதான் காரணத்திலே போகாமைக்ககா.‘உயிர் ஏய் பிரகிருதி’ என்கிறார்,
ஆத்துமாக்களோடு கூடியுள்ள பிரகிருதி என்று தோற்றுகைக்காக.
ஜீவத்வாரா பிரவேசம் பிரகிருதி மகான் முதலான தத்துவங்களுக்கு இல்லை
ஆத்மா ஏய்ந்த பிரகிருதி சரீரம் -கார்ய பாவமாக பரிணமித்த என்றபடி -அபஞ்சீகரணமாக வெளியில் இருக்குமே
விண்ணும் கோளும் எழ-
ஆகாயமும் அங்குள்ள கிரகங்களும் எழ.
எரி காலும் எழ –
நெருப்பும் காற்றும் போக.
மலை தாளும் எழ-
மலைகள் அடியோடே பறிந்து உள்ளே புக. என்றது, ‘வேர்க்குருத்தோடோ பறிய’ என்றபடி.
சுடர்தானும் எழ-
சொல்லப்படாத ஒளிப்பொருள்களும் உள்ளேபுக.
அப்பன் ஊளி எழ-
ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால்
நம்முடைய அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே,
திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி.
அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலிகாண்!’ என்று நடாதூர் அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச்செய்வர்’
அதனால் நினைக்கிறது, ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.

——————————————————————————————-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-

பாரத சமர பிரவர்த்தக விருத்தாந்தம் -ஆயுதம் எடேன் என்று இருந்தும் –
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்-பயங்கர ஊண் உண்ட
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்-வீர புருஷர்கள் சேனை நடுங்கும் படி புருஷோத்தமன் கண்டதும்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்-ஆச்ரித பக்ஷபாதி அப்பன் -தேவர்கள் ஒளிந்து இருந்தனர் கம்சன் அட்டகாசத்தால்
இப்பொழுது தான் வெளிப்பட்டார் -தம் தாம் மரியாதை பதவிகள் -யுத்த தரிசன அர்த்தமாக வேடிக்கை பார்க்க
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.-அறைதல்- அடித்தல் தட்டி சொல்வது -பசுக்களை மேய்த்து -வ்யூஹம் செய்தால் போலே
-தர்ச நீயமான-பாரதம் -கை குவித்து சண்டை இட்ட பொழுது -கை தட்டியே சண்டை போட்டு -பார்த்து கை தட்டுவாரும் உண்டே

‘என் அப்பன், காட்சிக்கு இனியதான மஹாபாரதப் போரை அணி வகுத்தப் போர் செய்த காலத்தில், சிறந்த உணவுகளை உண்டு வளரந்த
மல்லர்கள் நெரிந்து விழுகிற ஒலியும். அசுரர்களுடைய ஆண்மை மிகுந்த சேனைகள் நடுங்குகின்ற ஒலியும், ஆகாயத்திலே பெருமை மிகுந்த
தேவர்கள் வெளிப்படையாய் நின்று காண்கிற காலத்தில் செய்கின்ற ஒலியும் தோன்றின,’ என்றபடி.
ஆண்-ஆண் தன்மை. ஏண்-வலியுமாம். கையறை-அணிவகுத்தல்.

பாரதப் போர்ச் செயலை அருளிச்செய்கிறார்.

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –
ஏற்றிலக்கை -அதிக சம்பளம் -பெற்று-உண்கிற மிடுக்கையுடையரான துரியோதனன் சேனை தேர்க்காலிலே நெரிந்த ஓசை.
மல் என்பது மிடுக்கு; ‘மிடுக்கையுடைய சேனை’ என்றபடி.
அன்றிக்கே, ‘மல்லர்க்கு மிடுக்கு உண்டாகைக்காக மது மாமிசங்களை உண்பித்து ஆட்டத்து வெளியிலே நிறுத்தினான் ஆயிற்று நலிகைக்காக:
அதனை அறிந்து பையல்களைத் தேர்காற்கீழே இட்டு நெரித்த ஓசை’ என்னுதல்.
வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து,‘ததர்ந்த’ என்கிறார்காணும்,
பசளைக்கலம் நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்தபடியைப் பற்ற.
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி –
அரசர்களுடைய ஆண் பிள்ளைத்தனத்தையுடைத்தான சேனை ‘கிருஷ்ணன் சாரதியாக ஏறினான்’ என்று கேட்ட வாறே
‘நாம் முடிந்தோம் அன்றோ?’ என்று அவ்வளவில் குடல் குழம்பிக் கூப்பிட்ட ஒலி.
ஆண் பிள்ளைகளான வீடுமன் துரோணன் முதலாயினோர்கள் அன்றோ தூசி ஏறின பேர்?

விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்ட ஒலி –
சர்வேஸ்வரனோடு ஒக்க இன்னார் இன்னார் என்னும்படி தங்கள் தங்களைச் சமையவிட்டுக்கொண்டு
செருக்கினையுடைவர்களாய் ஒரோ இருப்பிடங்களையுடையவர்களாய் இருக்கிற தேவர்களின் கூட்டம்
கண்ணுக்குத் தோற்றும்படி நின்று துதிக்கிற ஒலி.
இந்த அந்தரசாதிகளைத் தன்னுடனே ஒருசேர எண்ணலாம்படி தன்னைத் தாழவிட்டு வைக்குமே தன் சௌலப்பியத்தாலே!
‘அவன் பிரமன்; அவன் சிவன், அவன் இந்திரன்,’ என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள்
.‘ஸபிரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர;’ என்பது நாராயண சூக்தம்.
அப்பன்-
பூபாரத்தை நீக்கிய உபகாரகன்.
காணுடைப் பாரதம் கைஅறை போழ்தே-
கண் முதலான கரணங்களைப் படைத்ததற்குப் பிரயோஜனம் அற்றை நிலையைக் காண்கை அன்றோ?
சேனையின் தூளியும், கையும் உழவுகோலும் சிறு வாய்க்கயிறுதம், நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற நிலை அன்றோ அது?
இந்நிலைக்கு உபேயத்துவமாத்திரமன்றிக்கே, உபாயத்துவமும் உண்டு என்கிறார், ‘மாம்’ என்று தொடங்கி. ‘கையும் உ.ழவுகோலும், பிடித்த
சிறுவாய்க்கயிறும். ஸேநாதூளி தூசரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று
காட்டுகிறான்’ என்பது, முமுக்ஷூப்படி சரமஸ்லோகப்ரகரணம், சூ. 33.

காணுதற்கு இனிய பாரதம். கை அறை போழ்து –
கையும் அணியும் வகுத்து அங்கோடு இங்கோடு உலாவிப் படைபொருத்தி,
‘நீங்கள் இன்னபடி செய்யக் கடவீர்கோள்! நாங்கள் இன்னபடி செய்யக்கடவோம்’ என்று கைதட்டி விட்ட போது இந்த ஒலி எல்லாம் உண்டாயின.

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: