பகவத் விஷயம் காலஷேபம் -139- திருவாய்மொழி – -6-9-1….6-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூதுபோகச்சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும்வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்காநின்றால்,
சிறிது அறிவையுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது, தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்லவேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போகவேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி, கால்குலைந்து வரும்படி பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார்.
இனித்தான், தூதுபோவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல்போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.
இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.
அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது.
திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத் தம்மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப்போனோமோ? -ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும்தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்? நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காணவேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.
அதுவும் உன் ஐசுவரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்ததனால் -வந்தது உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விசுவரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தையுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளையுடையவரே, விசுவரூபத்தையுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக்கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்டவேணும் என்றான் அன்றோ.
என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும், உன்னுடைய விபூதி அழியாமல் நோக்கவேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலிதான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க்காணும் இருக்கிறது.-

ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாரானமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்

——————————————————————————————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

அகில ஜகத் ஆகாரனாய் இருக்கும் நீ உன்னுடைய அசாதாராண திவ்ய மங்கள விக்ரகம் காணுமாறு அருள வேண்டும்
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-அப ஏவ -தண்ணீர் -நீரின் கார்யம் பிருத்வி -உபய காரணமாய் அக்னி –
ஆராதனம் -பண்ணி கம் ஆகாசம் சுகம் -அளவிட அறிய சுகம்
தத் காரணமான வாயுவும் -பூத சதுஷ்த்யா பிரதானம் -மகா -ஆகாசம் -அவகாசம் -இடை வெளி -சமஷ்டி கொண்டு
வியஷ்டி சிருஷ்டி சங்கல்பித்து -பகுச்யாம்-அனுஷ்டானம் போது சமஷ்டி சிருஷ்டிக்கு அப்புறம் –
அந்தராத்மா -அனுப்ரேவிசித்து-தாது தாது ஆத்மாவாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்-சூர்ய சந்திர -அண்டாந்த வர்த்திக்களில் பிரதானம் -அழிந்ததே படைக்கப்படும் –
124/24/வ்யூஹம் -சங்கர்ஷன-ஞானம் பலம் சம்ஹாரம் தொடங்கி -அங்கும் -அது தானே ஜாக்ரதையாகப் பண்ண வேண்டும் –
கர்மங்களை மாறாமல் வைக்க -அதனால் சிவன் முதலில் -பொதுவான ஆகாரம்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்-ஆஸ்ரிதர் அனுபாவ்யமான -ஒருவர் ஒருவருக்கு உபகரிக்க -நாட்டியம் பாட்டு -ஓளியும் ஒலியும்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.-மண் -லீலா விபூதி வின் நித்ய விபூதியும் -மகிழவே -பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம்
ஆளீரோ-குருவி கையில் ந சாஸ்திர ந கிராமம் ஆழ்வாருக்கு -உம்மை நிர்பந்திக்கும் கொடியேன் -பால் வாராய்
-நடை அழகை காண வேணும் -ஒரு நாள் ஆகிலும் -தீர்த்த தாகம் பஞ்சில் நனைத்து தீர்த்தம் கேட்பது போலே

தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்;
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மைபொருந்திய சக்கரத்தையும்
வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக்கொண்டு ஒருநாள் வரவேண்டும்.
உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க.
வாராய் – வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

“உலகமே உருவமாயிருக்கும் தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது;
அசாதாரணமான வடிவைக் காணவேண்டும் என்கிறார்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் –
“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி, தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பம் செய்கிறார்.
யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே -திரளச் சொல்லி -கணக்கு சொல்லி ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்

நீராய் –
நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார். “நீர்தோறும்பரந்துளன்” –திருவாய். 1. 1 : 10.
“ஆபோ நாரா இதிப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டுஅநுசந்தேயம்.
என்றாரே யன்றோ மேல். “அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே,-பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து –
முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி,
இவற்றைக்கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ;
பஞ்சீகரணம் பண்ணி -அண்ட ரூபமான கார்யம் -பாதி -நாலாக்கி நாலில் கலந்து -தன் தன் அம்சம் பிரதானமாக இருக்கும்
-விபக்த அம்சம் – அப்ரதானம் –அவிபக்த அம்சம் -பிரதானம் என்றவாறு
இப்படி பஞ்சீ கரணம் பண்ணினால் தானே கார்ய கரம் ஆகும் -நாநா வீர்யம் -உள்ள இவை –
“ஐம்பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ
படைக்கும் முறைதான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஐம்பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.-“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.

இந்தச் சுலோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால், ஆஸ்ரய ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று
அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.

இவைதாம் ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ:
அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு
தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி,
அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி,
அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி.
இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது.
இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ;
அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி.
அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க்கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டுவர
ஒருவன் அழித்துக்கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி.
ஆயின், சிவனை முறைபடச்சொல்லுவான் என்? என்னில், அழித்தலை முன்னாகக் கொண்டேயன்றோ படைத்தல்தான் இருப்பது.

‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே,
“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே,
சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது.
‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப்படுத்திச் சொல்லுகையாலே,
நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற
அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று.

உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ?
உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது?
படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்துகொண்டிருக்கிற ஒருவனை
அந்தமில் பேரின்பத்தே கொடுபோய் வைக்கை அன்றோ. அது கிடக்க, இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெறவேண்டாவோ?
‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று,
இவர் தமக்கு ஈசுவர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப்போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி –
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மைபோன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சியாயிருக்கிறபடி
பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற்போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர்ஆர் ஆழி’ என்கிறது.
அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழியுமாயிருக்கை.
கொடியேன்பால் –
எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தம் உண்டாவதே! என் சொரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்;
இளையபெருமாளைப்போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்”
“குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 22.– என்று நிர்பந்திக்கும் தன்மையனாவதே!
வாராய் –
ஆசைப்பட்டாலும் நடக்கவல்லார் வருமித்தனை அன்றோ.
இளைய பெருமாள் போலே உன் பின்னால் என்னால் நடக்க முடியாதே -சாதனா புத்தி இல்லையே -பரகத ச்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –
‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப்போமோ? என்னில்,
ஒருநாள்-விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார்.
மண்ணும் விண்ணும் மகிழவே –
எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.
‘மானாவிச்சோலைபோலே ஆவது-மானாவிச்சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.-
அழிவதான இதுபோனால் என்செய்யவேணும்?’ என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ. அதுவும் இருக்கச்செய்தே அன்றோ, இது அழிய
“அந்தப் பரமாத்மா தனித்து இருக்கும்போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது.
இனித்தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!
மகிழவே –
அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக.
தேசிகன் -நான் போனதும் தயா தேவி உனக்கு ஆகாரம் இருக்காதே –
ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை -மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –

—————————————————————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2-

மகா பலிக்கு உன் அழகைக் காட்டி -ஆச்சர்ய சக்தன் -ஆனந்யார்ஹத்வம் காட்டி- நான் கண்டு உகக்கும் படி நடக்க வேண்டும் ஞானத்தில்
நடந்து ஞாலம் அளக்க வேண்டாம் இரண்டு திருவடி நடந்து காட்டினால் போதும்
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி-அர்த்தித்த அநந்தரம் கையில் நீர் பட்டு சிலிர்த்து வளர்ந்து சர்வ சக்தி யோகம் பிரகாசித்து
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே-ஆச்சார்ய -ஸ்வாமி
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட-அடியேன் அடைந்து -பிரயோஜ நாந்த பரர்களுக்கு காட்டிய நீ –
நான் கண்டு அல்லது தரிக்காத சபலன் நான் உன் வடிவு அழகை கண்ணாலே கண்டு -மானச அனுபவம் போதாதே
யஜ்ஞ்ஞாவாடம் வந்தால் போலே நீர் வந்து கிட்டி -நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே -நடந்து அருள வேணும்

மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
அளந்துகொண்ட ஆச்சரியத்தையுடைய அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக
நீ தானே வந்து கிட்டி இந்தப் பூமியிலே ஒருநாள் நடந்துவரல் வேண்டும்.
மகிழக் குறளாய்க் காட்டிக் கொண்ட அம்மான் என்க. நான் கூத்தாட நடவாய் என்க, நடவாய்: விதிவினை; நடக்கவேண்டும் என்பது பொருள்.

“வாராய் என்று நிர்ப்பந்தித்து அன்று காணும் நம்மைக் காண்பது; உம்மை ஒரு தேச விசேடத்தே அழைத்துக்காணும் காட்டுவது” என்ன,
அவ்வடிவு தன்னையே இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ? என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் –
இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே.
அனைவருக்கும் நியந்தா ஸ்வாமி குணம் போகுமே -அதனால் அனைத்து விபூதியும் அழியுமே –
ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே.
அன்றிக்கே, உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல்.
வலம் காட்டி –
கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப்போகாதே;
அழகாகிற பலத்தைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடி.
சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச்செய்தே அன்றோ, அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக்கொண்டு நின்றபடி.
குறளாய் –
கண்ட திறத்திது கைதவம் ஐய! கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்
அண்டமு முற்றும் அகண்டமு மேனாள்உண்டவ னாமிது ணர்ந்துகொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.
கோடியைக் காணி ஆக்கினாற்போலே முகந்து கொள்ளலாயிருக்கை.
மண்ணும் விண்ணும் கொண்ட –
பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக்கொண்ட.
இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது, அவன் அசுரத்தன்மை வாய்ந்தவனாகையாலே
அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அவிபாக ரசம் – என்க.
என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —

மாய அம்மானே –
திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,
சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.
“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதிதைவதம்”
என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்யவேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார்.
நான் உனை நண்ணி உகந்து கூத்தாட
இந்திரன் முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்;
நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன். நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும்.
வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கைதான் இவரது செயல்.
நான் கண்டு உகந்து கூத்தாட –
மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;
இந்திரனைப்போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக்கொண்டு பரிமாறுவது?
உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?
நான் உகக்க வேண்டும் –சாதனம் அந்வயம் இல்லை–கண்டு உகக்க வேண்டும் கேட்டால் மட்டும் போதாதே-நான் உகக்க வேண்டும் -அநந்ய பிரயோஜனன்
“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இதுதான் எங்களுக்குப் பெரிய செல்வம்” என்கிற இதிலே
அன்றோ இவர்க்குச் சம்பந்தம்.-விதுரனின் பரபரப்பே -பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்
நண்ணி-நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி.
ஒருநாள் – பின்பு ஒருநாள் அச் செயல் செய்யலாகாதோ?
மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ?
வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ?
ஞாலத்தூடே நடவாய்-
நடை அழகில் வாசிகண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது?
நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என்முன்னே நடக்கலாகாதோ?

———————————————————————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ -அங்கு திருக் குடந்தை -அகில பிரகாரத்தாலும் ஆஸ்ரித சம்ரஷணம் அர்த்தமாக வியாபாரம்
-சக தர்ம சாரிணி ஸ்ரீ லஷ்மி உடன் அனுபவியாமல் தளர்வேனோ
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-அவதரித்து -நடந்து -நின்றும் வில்லைக் கோத்து-பிரதிச்சிச்யே –
கடல் முன்னே குணக் கடல் போலே கிடந்தும் -இருவருமாக சித்ர கூடம் ச ராகவ சீதா சஹ –
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-சர்வ ரஷகன் -யுகம் தோறும் -சதா வர்ஷ சகஸ்ராணி 11000 வருஷம்
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே-விஷ்ணோ தேக அனுரூபம் -ஆபி ரூப்யை-வடிவு அழகு கோல வராஹம் -பொருந்திய அழகுடன்
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?-அநாதி காலம் இழந்தால் போலே உறவு அறிந்த பின் இன்னும் கிட்டி அனுபவிக்காமல் –
சம்பந்தம் அறிந்த பின்பு விஷயாந்தர ருசி விட்டு உங்கள் மேல் ருசி வந்த பின்பு கிலேசத்தால் துடித்து இருக்கவோ

யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே!
அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?
ஞாலத்தூடு – பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.

உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது;
அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்டவேணும் என்றார் முதற்பாசுரத்தில்;
அது உமக்குக்காட்டுவது ஒரு தேசவிசேடத்தே கொடுபோய்க் காணும் என்ன,
அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்;
அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம் என்ன,
‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து
காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் –
எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை,
யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.
“ஸ்ரீராமபிரான் முன்னே நடந்து சென்றார்”
“அக்ரத: ப்ரயயௌராம:” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற
பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும்.
வடதேசத்தினின்றும் போரப் பாடவல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடிதொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கைவசப்படுத்துமாறு போலேஏத்தி வசமாக்கிக் கணிசம்கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடிதொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக்கொண்டு சம்பாவனை பண்ணி யருளவேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு, திருப்புன்னைக்கீழ் நின்றும் அவர் நின்றவிடத்தே திருக்கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப்பாடிட்டு, “வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தேபட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

நின்றும் –
“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச்செய்தீரே’ என்கையன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து
சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படியன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.
கிடந்தும் –
“பாம்பின் உடல்போலே இருக்கிறதிருக்கையைத் தலைக்கு அணையாகக்கொண்டு
பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல்தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;
“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம் பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்
இருந்தும் –
அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.
“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-என்றும்,
“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.
“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி.
உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:
“சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு
சாலப்பலநாள் –
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ?
அன்றிக்கே, நூறு ஆண்டு பதினோராயிரம் ஆண்டு என்றுமாம்.
உகந்தோறும் –
“யுகங்கள்தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே.
உயிர்கள் –
ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர்,
எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷிப்பது அன்றோ உன்னது.
காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற்போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கைவாங்கினேன், இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக்கொள்.
“இராம்பிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராமலக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
– கடற்கரையிலே விட்டபோது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண்செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ; உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே –
தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.
“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இன்னும் தளர்வேனோ –
முன்னம் அநாதிகாலம் இழந்த நான் இன்னம் பலகாலம் இழக்கவோ?
அடியேன் –
அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கைவிடலாம் என்று இருக்கிறாயோ?
இன்னும் தளர்வேனோ –
“ஒரு மிதுநம் எனக்குப்பேறு” என்று அறிந்தபின்பும் தளருமத்தனையோ?
‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,
‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
‘எனக்கு நான் உரியேள்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லாவகையாலும் ரக்ஷிக்கவேண்டும்;
அதுதான் எல்லாக் காலமும் ரக்ஷிக்கவேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாகவேண்டும்;
இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும்,
“என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.
“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று;
‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது.
அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது;
“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக்கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

ஏவம் அஷர ரூபம் காரணத்வம் -ரஷனம் தாது சேஷித்வம் பத ரூபம் -ஸ்ரீ வாச்ய சக்தி -மூலம் -உஜ்யதே பரமாத்மா

————————————————————————————

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-

பிரபல சகடாசுரனை நிரசித்த நீ -பிரதிபந்தகங்கள் போக்கி வந்து அருள வேணும் -திருவடியால் விரோதி நிரசனம் பண்ணி நடந்து
வந்து அருள வேணும் -திருக் காலாண்ட பெருமான் –
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்-கோப்புக் குலைந்து சின்ன பின்னமாகும் படி
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!-திருவடியால் கார்யம் செய்த –
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ-சூழ்ந்து சேவிக்க
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே-ஔஜ்வல்யம் தோற்றும் படி கஜேந்த்ரனுக்கு வந்தால் போலே வந்து அறுக்க வேணும்

சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே!
பிரமன் சிவன் இந்திரன் மற்றைத்தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மைதோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.
அசுரர்: இகழ்ச்சியின்கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய – இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண்மீதே காண ஒருநாள் வாராய் என்க.
வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.

தளரக்கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக்கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திராநின்றன காணும்’ என்ன,
‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார்.
‘உன்கால் கண்டபோதே போகாதோ?’ என்கிறார்.
‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் – பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.-அன்றோ.

சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய –
சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல்வேறாகப் பிளந்து வீய;
“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-
சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-
கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே,
பின்பு, துகளும் காணஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச்சொல்ல அமைந்திருக்க,
‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ,
பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.
திருக் கால் ஆண்ட –
அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.
“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலைவரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;
அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;
“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” –பெரிய திரு.-10. 8 : 3.-என்று இவனும் அறிந்துசெய்தானல்லன்.
தன்னை உணர்ந்து பரிமாறும்போது திவ்விய ஆயுதமும், அவை உதவாதபோது கையும், அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி.
நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன;
திருமேனிதான் அடியார்களுக்காக ஆகையாலே, அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.
பெருமானே –
அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷவஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ?
அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது.
பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒருநாள் காண விண்மீதே வாராய் –
“கும்பிடு நட்டமிட்டாடி” –திருவாய். 3. 5 : 4.-என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே,
தம் வசம் அற்றவர்களாய்க்கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால்,
பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு,
இருட்டில் விளக்குப்போலே “ஒளிகளின் திரள்” “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.-என்கிறபடியே
தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே,
ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்றவேணும் என்கிறார்.
இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்.
‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.
நீள்நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காணவாராய்’ என்கிறார்.
இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண்மீதே’ என்கிறார்.

———————————————————————————————-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157

அடியார்க்கு இன்ப மாரி — பின் சொல்லியவை -பரத்வாதி அவஸ்தா பஞ்சகம் -நெஞ்சிலே பிரகாசிப்பித்தது உன் வடிவைக் காட்டாதே -மறைக்கலாமோ –
அந்தர்யாமி இரண்டு நிலை ஸ்வரூப வியாப்தி -வஸ்துவுக்கு சத்தைக்கு-ரூப வியாப்தி -லஷ்மி விசிஷ்டனாக -தேஜஸ் விக்ரகம் உடன் -யோகி ஹ்ருத் த்யான கம்யம் –
மறைந்து உறைவாய் -மானச பிரத்யஷம் பெற்றார் பாஹ்ய இந்த்ரிய விஷயம் அணைத்து குலாவி ஐந்து புலன்களுக்கும் அவன் இந்த விபூதியில் -ஆகவேண்டும் என்கிறார் –
விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!-நித்ய ஆஸ்ரிதற்கு அனுபாவ்யம் -நித்ய சம்சாரிகளுக்கு அனுபாவ்யம் அர்ச்சா ரூபத்தில்
ப்ரஹ்மாதிகளுக்கு-ஆபத்து போக்க -வ்யூஹ -அநிருத்தாதி-வ்யூஹித்தி-
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!-ராம கிருஷ்ண -சஜாதீயன் -அளவில்லாதவர் கண் கூட தர்சிக்க
-பாக்கியம் உள்ளவர்கள் -அழகாலே வசீகரித்து -உழல்வாய் -தாழ்ந்த செயல் -கஷ்ட நஷ்டங்கள் நம் போல் அனுபவித்து -சஜாதீயன் சஞ்சரித்து –
இஜ் ஜகத்தில் சமஸ்த பதார்த்தங்களிலும் இந்த்ரிய கோசரம் ஆகாதபடி வர்த்திப்பானாய்
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி-எண்ணிக்கையில் அடங்காத -அண்டங்களுக்கு புறத்தாய் -என்னுடைய ஆவியுள் பிராண ஆஸ்ரமான நெஞ்சுக்குள்
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ-நடை யாடி விட்டு இப்போது மறைக்கலாமா –

பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கின்றவனே!
பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே!
எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே!
என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?
முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய ஐவகை வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.

எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய் என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து,
என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.

விண்மீது இருப்பாய் –
எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி.
இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரமபதத்தில் இருப்புக்காணும் முற்படத்தோற்றுகிறது.
மலைமேல் நிற்பாய் –
நித்திய சூரிகளையும் நித்தியசம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடுகூத்தன் அல்லனோ–பெரிய திருமொழி, 2. 1 : 9.-
கடல்சேர்ப்பாய்-
கால் நடை தந்து போகவல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தபடி.
‘விண்மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலைமேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப்பெற்றது.
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -ஆறு கடலில்
சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு
மண்மீது உழல்வாய்-
அவ்வளவு போகமாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண்வட்டத்தில் திரியுமவனே!
“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்புதான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும் –பெரிய திருவந். 18.– என்கிறபடியே,
அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதிகூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
அனுகூலை யசோதை பிரதிகூலன் காளியன் பாடாற்றல் துக்கம்

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!
சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால்,
தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே.
“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகு முறுகு -பொறாமை -என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் –
எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!
“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.

எனது ஆவியுள் மீது ஆடி –
என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.
அன்றிக்கே, என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.
உருக்காட்டாதே ஒளிப்பாயோ –
வடிவு காணப்பெறாவிட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.
குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: