பகவத் விஷயம் காலஷேபம்- 129- திருவாய்மொழி – -6-2–6….6-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

மேனானித்து-மரப்பாச்சி -எடுத்துக் கொண்ட அவன் இடன் உன் ஈச்வரத்வம் எம்மிடம் காட்டாதே -மின்னிடை மடவார் இடம் காட்டு
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;-பசப்பு மொழி -கைப்பட்ட பிரியத்தால் -மேன்மை பாவித்து –
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?-உன் சரசம் மேன்மை பண்டியே அறிவோம் -இத்தை நாங்கள் பொறுக்க மாட்டோம்
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;-உன் சர்வேஸ்வரத்வம்-விஷயமான ஐஸ்வர்யம் -லோக த்ரயத்துக்கும் தகுதியாய்
-அநேகம் பேர் உளர் -பதினாறாயிரம் தேவி மார் உண்டே
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–பரி பூர்ணன் -அவர்கள் திறலே உனக்குத் தகுதி -எங்கள் கழகம் வராதே –
பிறருக்கு தீமை செய்வதே உனக்கு ஸ்வ பாவம் -இளையது பாலனுக்கும் சிறு பிள்ளைத் தனம் என்றவாறு –
ஆஸ்ரித லீலா பரிகரமும் அவனுக்கு உத்தேச்யம் பிரியகரம்

வசீகரித்தற்குரிய செயலைச் செய்து எங்களுடைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை;
நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங்கட்கும் உம்மோடு
ஒக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உளர்; நம்பீ! எங்கள் கூட்டத்தில் ஏறாதே; உனக்கும் இது இளைமைப் பருவத்திற்கு உரிய செயலேயாம்.
இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் அழகியார் பலர் உளர் என்க. குழகுதல்-வசீகரித்தலுக்குரிய செயலைச் செய்தல்.
குழமணன்-மரப்பாவை. கோயின்மை – பெருமை. அல்லது, செருக்கு. கழகம் – கூட்டம். இளைது – இளமைப் பருவத்திற்குரியது.

தங்கள் மனங்களிலே ஓடுகின்றவற்றைத் தெரியாமல் மறைத்துக்கொண்டு அணுக முடியாதவர்களாயிருக்கிற
இந்தப்பிராட்டியையும் தோழிமாரையும் கண்டு, அவன் தன் முகமுத்திரைகளாலும், கருத்துடைய வார்த்தைகளாலும்,
அதனைத் தொடர்ந்து வருகின்ற இன்பச்செயல்களாலுமாக இவர்கள் எண்ணங்களைக் குலைத்து,
இனி இவர்கள், தான் செய்தவை எல்லாம்‘வேண்டா’ என்ன மாட்டாதவர்கள் என்னும்படி வாய்மாளப்பண்ணி
அவ்வளவிலே சென்று இவர்களுடைய விளையாட்டுக் கருவியாகிய குழமணனை எடுத்துக் கொண்டான்.

‘குழகி எங்கள் குழமணன் கொண்டு’
என்கிறார்கள். -குழகுகையாவது, யௌவன புருஷர்களாயிருக்குமவர்கள், பெண்கள், தங்களுக்கு வசப்பட்டவர்கள்
அல்லாதவர்களாயிருப்பார்களேயானால் அவர்களைச் சேரவிட்டுக் கொள்ளுகைக்காகச் செய்யும் செயல்கள்.
மேன்மையாலேயாகவுமாம், தாழ்மையாலேயாகவுமாம்; ஏதேனுமாக இவ்வளவு கிட்டி நின்று அவர்கள் நினைவைக் குலைத்துக்
குழமணனை எடுத்துக் கொள்ளும்படியாகக் கைப்புகுந்தான் அன்றோ.
‘எங்கள் குழமணன் கொண்டு’ என்றதனால்,
அதுதான் யாருடையது என்று நீ இருக்கிறாய்? அது நீ நினைக்கிறவர்களுடையது அன்று காண்;
அது எங்களுடையது; உனக்கு இதனால் ஒருகாரியம் இல்லை என்பதனைத் தெரிவிக்கின்றார்கள்.
‘எங்களது’ என்றவாறே பொகட்டுப்போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.
‘எங்கள் அனுமதிவேண்டாவோ உனக்கு?’ என்ன,
‘என்னைத் தடைசெய்வார் உளரோ, நான் செய்வது செய்யலாமித்தனையன்றோ?’ என்ன,
கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை –
பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே -பிரணயிதவம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் –
நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.
‘கன்மம்’ என்றது, கர்மத்தினது பலனை. ஆராய்ச்சி இல்லாத இடத்தே செய்யுமவற்றைச் செய்யாதேகொள்ளாய்.
அவைசெய்தாலும் ஆமே அன்றோ, உனக்கு ஒரு பிரயோஜனம் உளதாகில்.
கோயின்மை செய்கையாகிறது, இவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க இவர்கள் விளையாட்டுக் கருவிகளை எடுத்துக் கொள்வது,
அவர்கள் வேண்ட வேண்டக் கொடாதொழிவதாய் மிறுக்குப் பண்ணுகை.
நீ போகிற இடத்துக்கு இதனைக் கொண்டு போக ஒண்ணாது;
உனக்கு இதுதான் வேண்டுவ தன்று; இனி எங்களுக்கோ விருப்பமில்லாத காரியம்;
ஆனபின்பு, இச்செயலால் என்ன பிரயோஜனம் உண்டு என்பார் ‘ஒன்று இல்லை’ என்கிறார்கள். என்றது,
இது கொண்டு போனால் தங்களது அல்லாமையாலே அவர்கள் முகம் பாரார்களே;
நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆனபின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லைகாண் என்கிறார்கள் என்றபடி.

‘அது கிடக்க; நான் முன்னம் உங்களோடு ஒத்த கருத்துடையன், எனக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை,
இதனைக் கருவியாகக் கொண்டு முடித்துக் கொள்ள வேண்டுவது ஒரு பொருளைக் கண்டு வைத்திலேன்;
இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.
-அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –
அங்ஙனே ஆன அன்று அநவஸ்தா தோஷம் வரத் தொடங்குமன்றோ.
யாம் பழகி இருப்போம்-
இப்பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!
நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள்.
அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,
இத் திரு அருள்கள் எம்பரமே-
நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே
நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்கவல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.

அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்-
“மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேசுவரனையும் கூட
ஒருதட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒருகலா மாத்திரத்திற்கு எடை நிற்கமாட்டாது”
“ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு ஸீதா வா ஜநகாத்மஜா
த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத்கலாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 14. ‘
என்று கூறும்படியுள்ளவர்கள். ‘அவர்கள் எங்ஙனே இருப்பர்கள்?’ என்றான்
தேவிமை தகுவார் –
உனக்குப்பட்டங் கட்டப் போரும்படியாயிருப்பார் என்ன,
ஆனால், எனக்கு உபேக்ஷிப்பதற்கும் சிலர் வேணுமே? என்றான்.
பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று சுபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;
அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.
ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள்பக்கல் ஏறப்போம் என்ன, ஆனால்,
அங்குப்போகும் வழியும், போனால் செய்யும் படிகளும் எல்லாம் கேட்டுப் போகவேணுமே.
இனித்தான், -அந்தே வாசிகளுக்கு -சீடர்களுக்கு அன்றோ ஒன்று சொல்லுவதும்.
“சாஷ்டாங்க நமஸ்காரத்தினாலும் செவ்விதின் கேட்பதனாலும் ஆசாரிய சேவையினாலும் உபதேசிப்பார்கள் என்று அறிந்து கொள்”
“தத் வித்தி ப்ரணிபாதேந ப்ரச்நேந ஸேவயா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞாநிந: தத்வதர்ஸித:”-என்பது, ஸ்ரீ கீதை, 4 : 34.
என்பதே அன்றோ கேட்பார்படி. ஆனபின்பு, நாலடி கிட்ட நின்று கேட்கவேணும் என்று,
திரளிலே வந்து புகுரப் புக்கான்.
கழகம் ஏறேல் நம்பீ –
அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;
ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

இவ்விடத்தே, பட்டர் அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதியுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவாயிருக்கிற சர்வேசுவரன்
நான்கு இடைப்பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதேகொள்’ என்ன, விலங்கு இட்டாற்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற
சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர்முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேசுவரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால்,
‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காணமுடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்கவிடா நிற்க,
அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.

‘சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 11.-என்று சொல்லுவது,
வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக்கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;
“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்கவேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குசலவர்களின் கானத்தைக்கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
“தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெருமதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாடவிட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயரஇருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக்கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.

நம்பீ –
உமக்கும் எங்களுக்கும் உள்ள நெடுவாசி பாரீர்!
உமக்கு ஒன்று கேட்கவேண்டும்படியாய் இருந்ததோ?
அன்றிக்கே, முதலிகளாய் இருக்கிற உமக்கு நாங்கள் இருக்கிற இடத்தே புகுருகை போருமோ! என்கிறார்கள் என்னுதல்.
அழகிது! நான் முதலியாகிலும் ஆகிறேன், பயலியாகிலும் ஆகிறேன்; என்னைத்தான் அறிகை இல்லையோ!
‘தீமைசெய்யும் சிரீதரன்’ என்று அன்றோ என்னைச் சொல்லுவது?
ஆனபின்னர், நாலுபெண்கள் இருந்த இடம் எங்கும் தீங்கு செய்கை எனக்கு இயற்கையன்றோ? என்றான்.
உனக்கும் இளைதே கன்மமே –
தீமைசெய்கையில் சமைந்திருக்கிற உனக்குங்கூட இது பாலிசம். தீமைசெய்வார்க்கும் ஒரு சம்பந்தம் வேண்டாவோ?

—————————————————————————————-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.–6-2-7-

பிரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும்-பெருமை -எங்களை ச்பர்சித்து -கையில் உள்ள பாவையைப் பறிப்பது
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞாலம் உண்டிட்ட-இது கார்யம் இல்லையே உனக்கு -திரு வயிற்றில் வைத்து ரஷித்து
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;-தன் பேறாக செய்து அத்தாலே ஔஜ்வல்யம் -அடைந்து -இன்னமும் செய்தது
போராது என்று வெளிநாடு உமிழ்ந்து அருளி –உனக்கும் பிழை பிழையே -அவத்யமே ஆகும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில்என்னைமார்-பெரியவனான நீ -பூர்வ அம்ச்லேஷ ஸ்மரணம் சொல்லி மர்மம் –
சம்ச்லேஷம் பொது நடந்தவற்றை சொல்லி -எங்களுக்கு நினைக்கவும் முடியாத -சொல்லவும் வெட்க்கப் படும் வார்த்தைகளை சொல்லி –
இத்தை எங்கள் பந்துக்கள் கேட்கில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடிபிணக்கே.-தர்மம் -பாபம் -இருவருக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்ந்து அடிக்க –
சம்பந்தம் நிரூபிகாமால் உதை பாபம் – தடி அடி பிரயோகம் -தர்ம அடியா பாப அடியா -சஹஜ துர்மான -என்னைமார் –
டம்பம் மதம் உள்ளவர்கள் -பாவை -ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம்
ஆய்ச்சியர் கை வெண்ணெய்-கண்டால் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்

பிரளய வெள்ளத்தில் அழுந்துகிற உலகத்தைப் புசித்துக் காப்பாற்றிய குற்றமற்றவனே! நெடியவனே! எங்கள் கையிலேயுள்ள பாவையைப் பறிப்பது
செய்யத்தக்க காரியம் அன்று; இப்படிப்பட்ட உனக்கும் குற்றம் குற்றமேயாகும்; எம்மைப் பார்த்து மர்மமான வார்த்தைகளைச் சொல்லி நீ விளையாடுகின்றாய்;
அதனைக் கேட்கில், எங்களுடைய தமையன்மார்கள் தர்மம் பாவம் என்று நினையார்கள்; ஒரு நாள் தடியைக் கொண்டு மாறுபடுவர்.
கர்மம் வர்மம் தர்மம் என்பன, கன்மம் வன்மம் தன்மம் எனத் திரிந்து வந்தன. பாவை – விளையாடுதற்குரிய பொம்மை.
என்னை மார் – தமப்பன், தமையன்மார்கள். நான்று – காலம்.

ஸ்ரீபரதாழ்வான் எல்லா உபாயங்களையும் அநுஷ்டித்துத் தன்பக்கல் பட்டன எல்லாம் தான் இவர்கள் பக்கலிலே பட்டான்.
“ஸ்ரீராமபிரான் திரும்புவதற்கு எல்லாவிதமான உபாயங்களையும் மேற்கொள்ளப் போகின்றேன்”
“ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமக்ஷம் ஆர்ய மிச்ராணாம் ஸாதூனாம் குண வர்திநாம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 19.
என்று மீட்கையிலே போரவருந்தினான் அன்றோ.
தாமே இரங்கி மீளும்படி செய்கிறேன், அது தான் கேட்டார் வாய்க் கேட்கவேண்டுமோ?
“எவ்வளவு வரையில் அவர் என்னிடம் இரங்கவில்லையோ அவ் வளவு வரையிலும் பர்ணசாலையில் அவருக்கு முன்பு படுக்கிறேன்”
“அநாஹாரோ நிராலோகோ தநஹீநோ யதா த்விஜ:
சேஷ்யே புரஸ்தாத் சாலாயா யாவந்மே ந ப்ரஸீததி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 111 : 14.
என்றான் அன்றோ. இவனும் அப்படியே எல்லா உபாயங்களையும் செய்து பார்த்த விடத்திலும்
அணுக ஒண்ணாதபடி கடுமை தோற்ற இருந்தார்கள். ‘இனிச் செய்யலாவது என்?’ என்று பார்த்தான்;
‘பலத்தாலே காரியங்கொள்ளுவோம்’ என்று நிச்சயித்து, இவர்களுடைய பாவையை எடுப்பதற்குக் கணிசித்தான்;
“கோசல தேசத்தவர்கள் பார்வையைக் கொண்டே பிறர் எண்ணத்தை அறிவார்கள்”
“இங்கிதஜ்ஞாஸ்து மகதா: பிரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா: அர்த்தோக்தா: குருபாஞ்சாலா: ஸர்வோக்தா தக்ஷிணாபதா:”
நினைந்த முனி பகர்ந்தவெலாம் நெறி யுன்னி அறிவனும்தன்
புனைந்த சடை முடி துளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.-என்ற கம்பர்
என்கிறபடியே, நினைவு அறியுமவர்களாகையாலே, எல்லாரும் கூடிச்சென்று, வைத்த பாவையை எடுத்துக் கொண்டார்கள்;
அதுதான் “நம் காரியம்” என்றே இருந்தான்.
‘தனித்து முயற்சிசெய்ய விருப்பம் இன்றிக்கே ஒழியப் பெற்றோம்’ என்று பார்த்தான். என்றது
, திருக்குரவை போலே ஆளுக்கு ஆளாய் நின்று கைப்பிடிக்கவேண்டாவாய் இருந்தது என்றபடி.
‘நல்ல வாய்ப்பு’ என்று இவர்கள் பாவையைச் சென்று பற்றினான்.

கன்மம் அன்று –
வாராய்! உனக்கு இது காரியம் அன்று காண் என்கிறார்கள்.
‘ஏன்தான் இது காரியம் அன்றிக்கே ஒழிவான் என்?’ என்றான்.
எங்கள்கையில் பாவை பறிப்பது –
இதுதான் யாரது என்று இருக்கிறாய்? நீ நினைக்கிறவர்களது அன்று காண்!
இது எங்களது காண்! என்றார்கள். ‘அதுதான் மெய்யே’ என்றான்;
“மனைவி முதலான இவர்கள் எவருக்கு உடைமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடைமையே”
“த்ரய ஏவாதநா ராஐந் பார்யா தாஸஸ் ததா ஸு த:
யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம்”-என்பது பாரதம் உத்யோக பர்.
என்பதேயன்றோ பிரமாணம்.இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலேயன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.
எங்கள் கையில் பாவை பறிப்பது –
இவர்கள் கையிலே பாதிகொடுத்துப்போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; -ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –
அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும்போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப்போலே இன்பமாயிருப்பது.
கையில் பாவை பறிப்பது –
கிடக்குமவை யெல்லாம் கிடக்க, எங்கள்கையிற் பாவை பறிப்பது கர்மம் அன்று.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்யாநின்றாய்; உனக்கு இதனால் ஒரு பிரயோஜனம் இல்லைகாண் என்றார்கள்.
ஆக, இதனால், பலித்தது என்? என்னில்,
ஒருவைஷ்ணவன் “என்னது” என்று அபிமானித்துக் கைப்பிடித்தால் “அவன் விரும்புவது” என்றபடி.
“‘செய்யக்கடவது அல்லாததைச் செய்யாநின்றாய்’ என்று நீங்கள் சொல்லுவான் என்?
செய்யக்கடவனவற்றிற்கும் செய்யக் கடவவல்லாதனவற்றிற்கும் வரம்பு கட்டினேன் நானே அன்றோ” என்றான்.

கடல் ஞாலம் உண்டிட்ட –
பிரளய ஆபத்திலே இவற்றை எல்லாம் எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கிற்றிலேனோ?
இவர்கள் அளவும் அப்படியே ஆகாதே தான். இவன்சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அதுவேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே
-அதனாலே பாவையைப் பறித்தான் -அசித் அழிந்தால் அவஸ்தான்தரம்–ஸ்வரூப நாசம் அன்றோ இவர்களுக்கு –
‘ஆபத்து ரக்ஷகனன்றோ நான், ஆனபின்பு, நான் செய்யுமவையெல்லாம் பிரயோஜனத்தை எதிர்பாராமலே அன்றோ இருப்பன.
ஆகையினால் எனக்கு இதுதானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது’ என்றான்.
நீ இங்ஙன் சொல்லுமது வார்த்தை அன்றுகாண்;
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க, நீ பலத்தாலே பறிக்கிற இதற்கு “ஆபத்து ரக்ஷகன்” என்று
சொல்லுகிற இது எடுத்துக்காட்டு ஆகமாட்டாது காண். ஆனபின்பு, உன்னுடைய குணத்திற்குக்கேடு காண் மேற்படுவது என்றார்கள்
நின்மலா நெடியாய் –
குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானவனாய் அளவிடமுடியாத மஹாகுணங்களையுடையவனே!
‘பலகுணங்களை யுடைய எனக்கு ஒரு குற்றம் கிடந்த அளவிலே அது தெரியா நின்றதோ?’ என்றான்.
நின்மலா! நெடியாய்!-நின்மலனான சந்திரனுக்கும் அன்றோ மறுகிடக்கிறது?
ஆனபின்பு, குணங்கள் பிரகாசிக்கின்ற இடங்கள் எங்கும் குண மின்மையும் பிரகாசிக்குங்காண்.
உனக்கேலும் பிழை பிழையே –
அளவிடமுடியாத குணங்களையுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப்புக்கான்.
‘வன்மமே சொல்லி’
என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;- வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.
எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.
‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர்கேட்க, “மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் பாசுரமிட மாட்டாமல்
‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப்பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச்செய்தார்.
விளையாடுதி-
அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.
மீளவும் சிலவற்றைச் சொல்லப் புக்கான்.
பஞ்ச லஷம் பெண்கள் -உடன் சம்சலேஷித்த பிரகாரம் –அடியைப் பிடி பாரதம் என்றவாறு பேசப் புக்கான்
அது கேட்கில் என்னைமார் தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –
சொல்லுகிறவை எல்லாம் எங்கள் பந்துக்கள் கேட்பாராகில் சாலத் தப்பாய்விடுங்காண்.
என்னைமார் –
ஆணுடன் பிறந்தார்.
‘தன்மம் பாவம் என்னார்’
என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே நலிவர்காண் என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆனால் என்? அவர்கள் இதனை அறியாநின்றார்களோ? அவர்கள் இங்கு இல்லையே?’ என்றான்.
ஒருநான்று –
அதுவோ! முதலிலே தவிரில் அறியாதொழியுமத்தனை போக்கி எல்லாம் செய்தாலும் உண்டானால்
ஒருநாள்வரையிலே அறிவர்கள்காண். ‘அழகிது; அறிந்தால் தான் வருவது என்?’ என்றான்
தடி பிணக்கே –
பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக்கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக்காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே,
கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

————————————————————————————-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-

இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் -சிற்றில் இளைக்க போகலாம் என்று போகத் தேட -போகிற வழியை மறித்த அவனை நோக்கி
எல்லாம் அறிவீர் ஈதே அறீயீர்-சர்வஜ்ஞ்ஞன் நீ எங்களை தகித்தால் உகவாதார் என் சொல்வார்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்-சகல அசேதனம் சேதனம் -பிணக்கி கூட்டி –
சம்ஹ்ருத் அவஸ்தையில் நாம ரூப ரஹிதமாம் படி பின்பு சிருஷ்டித்து -குற்றம் வாராமல் -கர்மம் விட்டுப் போகாமல் –
தேவ திர்யக்-பிரித்தும் -ஸ்வரூப பேதம் வாராமல் –
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!-அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்ரம் -பிரபா ரூபம் -சங்கல்ப ரூபம் -ஞானமே ஒரு மூர்த்தியாக –
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை-சஜாதீயர் -தோழிமார் -சொல்ல -இசையும் படி வார்த்தை சொல்லி -விளையாட –
வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -குடக்கூத்துக்கு போலே -வினையாவது அறியாமல் –
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?-உண்ணவும் ஒட்டாதே நீ சரமம் கொடுத்து தகைத்தால் –
உகவாதார் நாட்டார் -உன்னுடைய மென்னிடை மடவார்-என் சொல்வார்
ஆச்சார்யர் கோயில் பிரசாதம் ஆசை காட்டி கூட்டிச் சென்று அவன் இடம் சேர்ப்பார் போலே
கங்கை தீர்த்தம் -ஜகன்னாத பிரசாதம் -நாம சங்கீர்த்தனம் -ஆசை காட்டி அவன் இடம் கூட்டிச் சேர்ப்பார்கள்
லீலா ரச விபதேசத்தால் -பகவத் விஷயத்திலே மூட்டி வைப்பார்கள் –

அழிக்குங் காலத்திலே அசேதனங்களையும் சேதனங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில் ஓர் ஆன்மாவின் கர்ம பலத்தை
மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும் வேறுபடாததாகிய ஒப்பற்ற எல்லையில்லாத கீர்த்திவெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே
திருமேனியாகவுடையவனே! எம்தோழிமார் எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன,
வந்த எங்களைத் துவளச்செய்து நீ வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்லமாட்டார்கள்?
பேதித்தும் பேதியாதது ஓர் ஞானம் என்க. ஞானம் – சங்கல்பரூப ஞானம். கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞானம் என்க.
அத்தகையஞானமே மூர்த்தி என்க. எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோம் என்க.

கிட்டுநின்று இவர்களைச் சில மிறுக்குக்களைச் செய்யப் புக்கான்;
‘இங்கே இருக்கில் அன்றோ இவைஎல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள்.
‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப்பற்றி இரு விலங்காகக் கிடந்தான்.–இருகை விலங்கு —
பூஞ்சோலையாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ.
இப் பாசுரத்தைச் சீயர் அருளிச்செய்யாநிற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான்
‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க,
‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்று அன்றோ அவன் தான் கிடந்தது’ என்று அருளிச்செய்தார்.
தாண்டி போனால் இடித்திக் கொண்டு தான் போக வேண்டும் -நின்றார்கள் ஆகில் இவன் நினைத்தது சித்திக்கும் என்று இருந்தான்

நீ வழியைப் பற்றிக் கிடவாநின்றாய்; நீ செய்கிறவை எல்லாம் உறவு உண்டாய்ச் செய்கிறாய் என்று இருப்பர்கள்காண்;
நீ எல்லா ஆன்மாக்கள் விஷயமகாவும் செய்யும் லீலைக்கு ஓர் அளவு உண்டோ?
உன்னை ஒழிந்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் கோடி விகாரத்தைச் செய்து,
விகாரம் இல்லாதவனாய் இருப்பான் ஒருவன் அன்றோ;
அப்படியே எங்களை வேறுபாட்டினையுடையவர்களாகச் செய்து நீ வேறுபாடு இல்லாதவனாய் இராநின்றாய்.
யாவையும் யாவரும் பிணக்கி-
தன்பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் — நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி,
“மூலப்பிரகிருதியானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது”
-“தம: பரே தேவ ஏகீபவதி” சுபால உப. 2.-என்கிறபடியே, தன்னோடு வேற்றுமையறக் கலசி.
பிணக்கி -வயிற்றில் வைத்து அவாந்தர பிரளயம் —
பிழையாமல் பேதித்தும் –
தப்பாமல் பிரித்தும் என்றது, வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், சம்ஹரித்துப் புறப்படவிடுதல்களைக் குறித்தபடி.
ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து,
விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.
ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும்.
பேதியாதது ஓர்கணக்கு இல் கீர்த்திவெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும், காரண நிலையில் அசித்தைப்பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,
சேதனத்தைப்பற்றி வருகின்ற அஜ்ஞானம், படைப்புக்காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள சொரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே, ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய்,
ஒளி உருவமான சங்கல்பரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!
எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் -திருவாய்மொழி, 1. 5 : 2.-முதலில் சிதையாத மனஞ்செய்ஞானமன்றோ.
இதனால், பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏகரூபன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படிபட்ட குணங்களை அளவிடுவோம்’ என்று பார்த்தார் உளராகில் இளைத்துக் கால்வாங்கும்படி இருத்தலின்
‘கணக்கில் கீர்த்திவெள்ளம்’ என்கிறது.
இப்படிக் கூட்டுவன கூட்டிப் பிரிப்பன பிரித்தாலும், ஞானத்திற்கு ஒரு குறைவு அற்று இருத்தலின்
‘கதிர்ஞான மூர்த்தியினாய்’ என்கிறது. என்றது,
காரியம் கொண்டது என்னா மழுங்காது இருக்கை;
காரியம் கொள்ளப் புகர்த்து வருகையைத் தெரிவித்தபடி.
ஞான மூர்த்தியினாய் –
அன்றிக்கே, ஞானமே சொரூபனாயுள்ளவனே! என்னுதல்.

எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை –
நீ செய்கிறவற்றால் பிரயோஜனம் உள்ளது நீ இருந்த இடத்தே நினைத்துத் தேடி வந்தார் உளராகில் அன்றோ?
இணக்கி – இசையும்படி வார்த்தை சொல்லி. என்றது, ‘அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்’ என்று காண் சொல்லிக்கொண்டு போந்தது என்றபடி.
உன்னுடைய கலவியாகிற அயாயம் வரும் என்று அறியாத நாங்கள் என்பார் ‘எம்மை’ என்கிறார்கள்.
உன்னை வெறுக்கிறது என்? உன்பக்கல் குற்றம் உண்டோ? சேர்த்தாராலே வந்தது காண் என்பார் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
ஒரே சாதியினராயிருந்து சேர்க்க வேண்டுமாதலின் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
அவர்கள் உனக்குப் பெருநிலை நிற்பது அறியப் பெற்றிலோம்.
சொலவுக்கு மேல் அகவாய் ஆராயப் பெற்றிலோம் என்பார் ‘விளையாடப் போதுமின் என்னப் போந்தோம்’ என்கிறார்கள்.
என்றது, ‘நீ இங்கே உண்டு’ என்று அறிந்தோமாகில் இவ்விடம் என்றும் நினையோம் என்றபடி.
“அவர்கள் உனக்குப் பார்வை” என்னுமிடம் அறியப் பெற்றிலோம். -ஆச்சார்யர்கள் -பெருமாளுக்கு சகாயம் பண்ணுபவர்கள் என்றபடி –
பகவத் விஷயத்தில் வைலக்ஷண்யம் நெஞ்சிலே பட்டால் உபகாரகரைக் கொண்டாடவேண்டும் என்னும் அர்த்தமன்றோ உள்ஓடுகிறது.
“எந்த நாதமுனிவருடைய இரண்டு திருவடிகளானவை எப்பொழுதும் எனக்கு ரக்ஷக வஸ்துக்கள்”-
“நாதாய நாதமுநயேத்ர பரத்ரசாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திரரத்நம், 2
என்கிறபடியே, இங்கோடு அங்கோடு வாசிஅற அவர்களாலே வருமதன்றோ.

பொகடுங்கோள்; ஆனால் என்? அவர்கள் சொல்லப் போந்தீர் கோளாகில் உங்களுக்கு வந்த தீங்கு என்? என்றான்.
உணக்கி நீ வளைத்தால் என்சொலார் உகவாதவரே –
உணக்குகையாவது, தரிக்க மாட்டாதே துவளும்படி செய்கை.
எங்களுக்கு இதற்குமேல் வருவது என்? கால்வாங்கிப் போகப்பெறுகின்றிலோம்;
கிட்டிநின்று முகம் பார்த்து அநுபவிக்கப் பெறுகின்றிலோம்.
இதனைக் காண வேண்டாதவர்கள் என்சொல்லுவர்கள்? “எதனைச் சொல்லுவது?
என்னை ‘ஈசுவரன்’ என்றீர்கோளாகில், உங்களை ‘ஆயர் சிறுமியரோம்’ என்றீர்கோளாகில், இனி எதனைச் சொல்லுவது?” என்றான்.
நீ சர்வேசுவரனான இதுவும், நாங்கள் ஆய்ப் பெண்கள் ஆன இதுவுமே யன்றோ சொல்லுகைக்குக் காரணமும்.’
ஈசுவரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள்தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.
‘அது என்தான்? என்னோடு உங்களுக்கு உறவு முறை இல்லை என்றீர்கோளாகில் இதனால் வருவது என்?’ என்றான்.
என் சொலார் உகவாதவரே –
உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே, உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.
பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.

——————————————————————————————

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

இவன் தகைந்தவாறே நகன்று போக -அநு வர்த்தித்து போகாமல் -காலால் சிற்றிலை அழிக்க –
நீ உன் முக சோபையைப் பார்க்காமல் -நல்லது கண்டால் பொறுக்க மாட்டாமல் -லௌகிகர் நல்லது பிரயோஜ நாந்தரம் -தானே –
தன் விபூதியும் தன்னையும் மட்டும் அழிக்காமல் -அது தானே அநந்ய பிரயோஜனம்
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின் -அகவாயில் உகவையால் -ஆனந்தமாக
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;-எங்களை அகப்படுத்திக் கொள்ளாமல்
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்-எங்கள் சிற்றிலையும் சோற்றையும் அழிக்க
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-பார்த்துக் கொண்டு நிலாதே -நின் முகம் உளவாகில் நோக்கிப் போ என்றாள்-
தகவு நியாயம் இறக்கம் இல்லாமல் ஆஸ்ரிதர் உடைய லீலா விபூதி ஆதாரம் அழிக்கும்

மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களின் பார்வையாகிற வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு,
எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும் பார்த்துக்கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல்
செய்துகொண்டு நின்றாய்இல்லை; உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
நெஞ்சம் உள் உருக, கண்டு திகழ முறுவல்செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறுசோறும் உன் திருவடியால் அழித்தாய்; தகவு செய்திலை என முடிக்க.
உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல்செய்து நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை,
வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக. பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
முற்றிலைப் பந்தைக் கழங்கைக்கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவைபொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெருவீட்டினைச் செய்தருளே.- என்ற அருமைத் திருப்பாசுரம் இங்கு நினைவிற்கு வருகின்றது. திருவேங்கடத்தந். 97.

“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது
இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒருதேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று
இருக்குமாறுபோன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;
பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம் என்று இருப்பான்’ என்று
‘வேறு ஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று இழைக்கப் புக
‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறு ஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும் இருப்பதே’ என்று
சிற்றிலையும் சிறுசோற்றினையும்தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து,
தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.
அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும். அடி யுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.
அவனுக்கு அபிமதம் திருவடியால் பெற்றானே -அடி -ஐஸ்வர்யம் -திருவடி

உகவையால் நெஞ்சம் உள்உருகி –
வாராய்! உன்செயல் பயன் இல்லாத செயல்காண்;
பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய,
எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது.
உன் தாமரைத் தடம் கண்விழிகளின் அகவலைப் படுப்பான் –
பகல்கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;
திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.
தாமரையைப்போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால்
உண்டறுக்க ஒண்ணாத இன்ப மிகுதியை யுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக.
அகவலை – வலைக்குள்ளே.
அன்றிக்கே, அகவிய வலை -என்றுமாம்; கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ, நாய்ச்சியார் திரு. 14 : 4.-. 6‘
கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ.
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை”-திருவாய்.2. 6 : 3.-என்பதன்றோ மறைமொழி.
உன் திருவடியால் அழித்தாய் –
தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.
அழித்தாய் – வெறும் சிற்றிலை அன்றுகாண் நீ அழித்தது;
எங்கள் அகவாயையும் நீ அழித்தாய்காண்;
சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய்காண்.முற்றத்தூடு புகுந்து” என்ற நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம் அனுசந்தேயம். 2 : 9.- 6
காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய்காண் என்கிறார்கள்.

தகவு செய்திலை –
கிருபையுடையார் செய்வதைச் செய்திலை.
பிரிந்தபோதே அன்புடைமை போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல்.
கண் படைத்ததற்குப் பிரயோஜனம் நல்லதுகண்டு கொண்டிருத்தலன்றோ?
உன் முகத்தன கண்கள் அல்லவே? -இது,நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.-
‘நான் செய்த குறை என்?’ என்ன,
எங்கள்சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலை –
உன் படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ?
‘என்னுடைய படைப்புக் கொள்ளத்தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத்தக்கதாயினவாறு என்?’ என்னுமே அவன்;
உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது?
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்டதன்றோ இது.
அன்னல் – வெயில். துன்னல் – சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டுநீர் உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.

நீ அடு சிறு சோறு
நிர்மால்யத்தைப்போன்று புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை;
நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து
உண்ணுமத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள்.
‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலையே’ என்றதனால்
எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்கமாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.
தகவு செய்திலை –
நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக்கண்ணாலே உன் முக ஒளியையும் முறுவலையும்
கண்டுகொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும் போன்றவர்களாவோமே?
காதலனைப்பார்ப்பது கடைக்கண்ணாலேயன்றோ?
எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள்தாம்!

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்மெய்விளை விடத்து முதலையம்விட லுற்றாள்
ஐயனை யகத்து வடிவேயல புறத்தும்கை வளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்.- என்றார் கம்பநாட்டாழ்வார்.

——————————————————————————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

முக ஒளி திகழ முறுவல் -முகம் பார்த்து வார்த்தை -அகவாயில் மறம் அதர்ம சிந்தனை தீர்ந்து -த்ருஷ்டே பராவரே -சுருதி போலே
பஹுமுக பிரவ்ருத்தியால் தங்களை ஆபிமுக்யம் பண்ணி வித்தபடியை சர்வ பிரகார ரஷகன் -நீ இருக்க நலிவதா
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட-நிலை நிற்க -ரஷணம் -விளங்கும் திரு அபிஷேகம் -அதற்கு கவித்த முடியும்
அசங்காமல் நிலை நிற்குமே -21 ஷத்ரிய அரசர்களை உன்மூலம் -வெற்றி பெற்ற மழுவை பரசுராமனே
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!-வியப்பான ஞாலத்தை சிருஷ்டி காலத்தில் உத்பாதித்தாய்
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!-ஆயர் குலம் சம்ரஷிக்க பிறந்தாய் -வீடு குடி குடுத்தனம் உடன் உய்ய
-நீல ரத்ன பிரபா ஔஜ்வலம் வடிவை உடையவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே–இப்படி சர்வ பிரகார ரஷகன் ஆகையாலே -எங்கள் நாயகன் -எங்கள் மறத்தையும் அழித்து –
அழிந்த சத்தையும் உண்டாக்கி -சர்வ வித உறவும் கொண்டாடி –அனுபாவ்யமான வடிவை யும் கொண்டு -உன்னாலே -அறிவில்லா இடைகுலம்-
முன்பு பட்ட நலிவை நினைத்து சொல்கிறார்கள் –படும் படி ஆவதே என்று சமாஹிதர்
முன்பு நான் அஞ்சுவன் -ஒருமை -பின்பு ஆத்மனி பகு வசனம் -தோழிகளையும் சேர்த்து சொன்னது ஆதல்

நிலைபெற்று விளங்குகின்ற கிரீடத்தையுடையவனே! இருபத்தொருபடிகால் அரசர்களைக் குலத்தோடு வேர் அறுத்த வெற்றி பொருந்திய
நீண்ட மழு என்னும் ஆயுதத்தையுடையவனே! அகன்ற உலகத்தையெல்லாம் முன்னே உண்டாக்கினவனே! இக்காலத்திலும் இந்த ஆயர் குலமானது
அடியோடு உய்வுபெறும்படியாகத் தோன்றிய கரிய மாணிக்கச் சுடரே! ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எப்பொழுதும் உன்னால் துன்பமே படுகின்றோம்.
களைகட்டல் – களைபிடுங்குதல். ‘மழுவா’ என்றது, பரசுராமனை. குலத்தை – குலமானது; உருபு மயக்கம். வீடு உய்ய – விடுபட்டு உய்ய என்னலுமாம்;
மோக்ஷத்தைப் பெற்று உய்வுபெற என்னலுமாம். ஆய்ச்சியோம் நலிவே படுவோம் என்க.

“நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே” என்று விழுக்காடு அறியாதே வாய் தப்பச் சொல்லிக்கொண்டு நின்றார்கள்;
காலால் அழித்தது சிற்றிலையன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல்நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்; அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச்சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளிவிடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடிசூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.
“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
”அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருதக்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீபரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது; 7
ஒருபடி அத்தலைச்சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச்சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்றுசூழ்வான்ம கனொடும் அறுவரானேம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்தொ டுகழற் செம்பொன் மௌலி சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.

அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.
‘அது கிடக்க; உங்களுடைய எண்ணங்களைக் குலைத்து உங்களை வென்றோம் அன்றோ’ என்றான்.
இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

வியன் ஞாலம் முன் படைத்தாய் –
பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.
வியன் – ஆச்சரியம். பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாற் போலே, விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்தபடி.
அங்கு விலக்குவார் இல்லாமையாலே செய்யலாம்; ‘கழக மேறேல்’ என்று விலக்கச் செய்தேயன்றோ உண்டாக்கிற்று.
இன்று இவ் வாயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் –
“பல பொருள்களாக ஆகக்கடவேன்” என்று பொதுவான சிருஷ்டியைத் தேடிப் போக வேணுமோ?
இந்த ஆயர்குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ்வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.
அன்றிக்கே, தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன்பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;
ஆதலின், ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.
அன்றிக்கே, பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே ‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.
ஒளி காட்டி குலம் ஜெயித்தான் —ரஷித்த படியாலே பொலிந்தான் –தன்பேறு என்று –பிரணய ரோஷம் தோற்பித்தான்-மூன்றும் –
“புத்திர பௌத்திரர்களாகிய அடிமைப்பொருள்களோடு” என்கிறபடியே,
ஒரு சேர உய்வுபெறும்படி செய்தானாதலின் ‘வீடு உய்ய’ என்கிறது. தோன்றிய – ஆவிர்ப்பவித்த.
நின்தன்னால் என்றும் நலிவே படுவோம்ஆய்ச்சியோமே –
பகைவர்களாய் முடிந்து போகப்பெறாதே, சம்சாரிகளாய் வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களாய்ப் போகப் பெறாதே,
நீ நலியவும் நாங்கள் நோவுபடவுமாம்படி சமைந்து விட்டதன்றோ!
இரண்டு தலையும் கூடி மேல்விழுந்து அணைத்துக் கொண்டு நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ.
இவ்வளவும் தங்கள் வெற்றியே அன்றோ சொல்லிப் போந்தது; இப்போது அன்றோ தங்கள் தோல்விக்கு இசைந்தது.
நலிவே படுவோம் –
இதுதான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவேயாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.

இத்திருப்பாசுரக் கருத்தோடு,
“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்”- என்னும் திருக்குறள், ஒரு புடை ஒப்புமையுடைத்தாம்.

———————————————————————————————

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

பகவத்அலாபம்ஆகிய தாரித்ர்யம் இல்லை –
ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு–வார்த்தை கேட்டதும் அழுது
விம்மல் -பொருமல் -தோப்பு கர்ணம் போட்டு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்-கூத்தை போலே நாடகம் தோற்ற நான் -லோக உபகாரகன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்-ஸ்தோத்ர ரூபம் -போகு நம்பி இத்யாதியால் -வசவையும் ஸ்தோத்ரம் ஆக
கொள்ளும் அவன் ஸ்வ பாவம் -நஞ்சை அமுதம் ஆக்கும் முஹூர்த்தம் அவதரித்தவன் அன்றோ -விமுகரை அபிமுகர் ஆக்கின இந்த பத்தும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.-இசை உடன்கூடி -நாவுக்கு பிரயோஜனமாக நன்கு அனுசந்தானம் பண்ணினால்
-அலாபம் -சங்கோசம் கிடையாமை -பகவத் அலாபம் இல்லை -ஜீவ ஸ்வா தந்த்ரத்தால் அவனை விலக்கும் நிலை வராது –

அன்று வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை பிறந்த அளவிலே ஆய்ச்சியாகிய தாயால் சீறப்பட்டு அழுத கூத்தனாகிய அப்பனை,
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் துதித்த தமிழ்மாலை ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இசையோடும்
நாவினால் விருப்பத்தோடு சொல்லுகின்றவர்கட்கு வறுமை இல்லை.
அன்று வெண்ணெய் வார்த்தையுள் ஆய்ச்சியாகிய அன்னையால் சீற்றம் உண்டு அழு அப்பன் என்க. ‘ஆய்ச்சியாகியஅன்னை’ என்றது,
பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். நவில உரைத்தல்-மனத்தொடுபடவுரைத்தல்.

இத் திருவாய்மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியாகிய அன்னையால்-
அரசர்குலத்தில் ஒரு தாயும் ஆயர்குலத்தில் ஒருதாயும் ஆகையாலே.
பொதுவறுத்து ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார்.
தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.
“தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரியதிருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே,
‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.
தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார்பக்கல் உள்ளது;
முலைச்சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.
அன்று வெண்ணெய்வார்த்தையுள் –
ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப்புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப்பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப்போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படியன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.
சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை –
தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே நிற்கிற நிலை,
வல்லார் ஆடினாற்போலே இருந்தபடி.
அன்றிக்கே, அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்னபோது ஒன்றிலும்விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப்போகமாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
-நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே -வெண்ணெய் க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே –
அப்பன் தன்னை –
அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக்கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –
பிரணயரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின்புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம் அந்தப் பிரணயரோஷம் போனவாறே ஏத்தாய்விட்டது.
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவ பந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து.
இசையொடும் –
சொல் மாத்திரத்தாலே.–அர்த்தம் புரிய வேண்டாம் -புரிவதும் கஷ்டம் தானே
நவில உரைப்பார்க்கு –
ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.
நல்குரவு இல்லை –
வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூதுவிட்டு, –6-1- ராமன் கண்ணனாக வர -அவன் வரக்கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் படவேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய். 6. 7 : 1.- என்று இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
“உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-என்கிறவர்கள்
இவற்றைச் செல்வமாக நினையார்களே.
“சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே அவன்தானே வந்து மேல்விழ நித்தியா நுபவம் பண்ணப்பெறுவர்கள்.

‘அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில் “முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாவது விளம்பம் அசஹன்
பிரணய
கிருஷ்ணம் சமாஹதம் அபி
த்வரயா விநிந்த்ய
தேன ஸூ சங்கம மனோ ரத அத்விதீய
சாந்த்வ உக்தி
பிஸ் சமாஹிதோ பூத்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ணத்வாத்
கோப நாரீ ஜன சுலபதயா
லோட நாத் அம்புராசி
நிக்ரோத அக்ரே
ஹரி சுபகதையா
ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்
நிர் தோஷ உத்துங்க பாவாத்
நிரவதிக யசஸ்
சத்வ வசீகாரீ த்ருத்வாத் அகவலைப் படுத்துவான்
மோஷ ஸ்பர்சம்
தவம் அபிசரதி மேல் விழுந்து ரஷிக்கும் குணம்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 52-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

———————————————————–

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: