பகவத் விஷயம் காலஷேபம்- 111- திருவாய்மொழி – -5-3–6….5-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

ஆகர்ஷகமான ஸ்வ பாவத்தில் அகப்பட்டேன் -ஆசை என்னிடம் தவிருமின் –
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!-சமான சுக துக்கம் -பிரியமான அபிரியமான குண தோஷம் வாசி இல்லை
பிரதமஜ நித் யசூரிகளுக்கு முதல்வன்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்-மீட்க நினைக்க உங்களுக்கு -ஆசையை விடுமின்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி-பரத்வம் -சௌலப்யன் -நிர்வாககன் -நீர்மை
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-சௌந்தர்யம் -மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -போலே
இரண்டும் இல்லா வடிவு அழகு -ஆபி ரூப்யன் -விட ஒண்ணாத ஆபி ஜாத்யம் -வாஸூதேவன்
நாலு பாடும் கண்ணியான வலை -இது -பரதவ சௌலப்யம் சௌந்தர்யம் ஆபி ஜாத்யம்

தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும்
மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன?
ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.
என்னை, என்பது: வேற்றுமை மயக்கம். வண்ணம்-நிறம். வசுதேவன் குமரன்; கண்ணபிரான்.

மேல் ‘அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள். இப்பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் பிழைக்க மாட்டாள் என்ன, அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”-என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
“விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று; – ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய
அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள் ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன
ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? “கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல்,
இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.
தோழிமீர்-
‘தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ்விஷயத்தில்
ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே, ‘தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச்
சொல்லுமளவு உங்களது ஆன பின்பு. என்னை – “தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
‘தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை.
இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின். உமக்கு – ‘இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’
என்று ஆயவெள்ளம் எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.
அகப்பட்டேன்-
“இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமேயாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும் இவ்வருகே
எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன, அது அப்படியே, அதில் குறை இல்லை;
என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது,
பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி. -மனம் இந்த்ரியம் பிரித்தால் போலே –
“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில்
எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்தியசூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே ‘முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.
‘வண் துவராபதி மன்னன்’ என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னுகோயில்” என்கிறபடியே
பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.
மணி வண்ணன்-
அவ்விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.
வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு, ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.
வலையுள் . . . அகப்பட்டேன் – அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும்
புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, எம்பெருமானார் திருக்கண்களைக் காட்டியருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ. அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

————————————————————————————————

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

ஆஸ்ரயர் அர்த்தமாக ஷீராப்தி நாதன் -பள்ளி கொண்டு அருளி -ஆழ்வார் கைப் பிடிக்க வந்தானே
வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு-ஆகர்ஷக குண சேஷ்டிதங்களால் அகப்படுத்தி
என்னிலும் முன் அகப்பட்ட நல்ல நெஞ்சே -அடி அறுத்து அபஹரித்துக் கொண்டான் -திரைக்குள் -அலைக்குள் -இருந்து -பொருந்தும் படி
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்-ஏகாந்தமாக -கிடை அழகைக் காட்டி அடிமை -அழகுக்கு காத்தூட்டும் -ரஷணம் ஆழிப் பிரான்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு-பரிவட்டம் -விஸ்தீரணம் -இருவரும் ஒக்க -தோழியைக் கொண்டாடுகிறாள்
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே-குத்தல் பேசினவர்கள் முன்னால்-வந்ததுக்கு பெரும் கும்பீடு –
கும்பிடு நட்டமிட்டு ஆடி –பழி சொல்பவர்கள் முன் -அவன் வந்த உபகாரம் தோன்ற –

கலையைக் கொண்டிருக்கின்ற அகன்ற அல்குலையுடைய தோழீ! வலையிலே என்னையும் அகப்படுத்திச் சிறந்த மனத்தையும்
அழைத்துக்கொண்டு அலைகளையுடைய கடலிலே பள்ளி கொண்டிருக்கின்ற அம்மானாகிய ஆழிப்பிரான்தன்னை,
இந்தப் பெண்களுக்கு முன்பு நம் கண்களாலே கண்டு தலையாலே வணங்கவும் ஆகுங் கொல்லோ என்கிறாள்.
ஆழிப்பிரான்தன்னைக் கண்டு வணங்கவும் ஆகும் கொல்? என்க. கலை-புடைவை. மேகலாபரணமுமாம்.
தலையில்-தலையால். வேற்றுமை மயக்கம். தையலார்-பெண்கள்.

அவனிடத்தில் குணம் இன்மையைச் சொல்லுகிற பெண்கள்
என்னை வலியுள் அகப்படுத்து-
என்னைத் தப்பாதபடி புன்முறுவல், கடைக்கண் நோக்கம் முதலியவைகளிலே அகப்படுத்தி.
நல் நெஞ்சம் கூவிக் கொண்டு –
தான் என்றால், “நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி” என்று நான் பிற்பாடையாம்படி என்னிற்காட்டிலும்
முற்படும்படியான நெஞ்சைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு.
அலை கடல் பள்ளி அம்மானை-
“ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங் கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக்கொண்டு வரக்கூடும்” என்று
எட்ட ஒண்ணாத நிலத்திலே பின்னையும் போய்ப் புக்கான்.
பின்னையும் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆழ்வார் நெஞ்சை அபஹரித்த பின்பு மீண்டும் ஷீராப்தி நாதன் ஆனான் என்றபடி –
பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி கொந்தளிக்கிற கடல் என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள்.
பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல் ஓடத் தொடங்கினான். -அம்மான் -ஸ்வாமி -ஆழ்வார் -சொத்தை பெற்றதும் —
ஆழிப்பிரான் தன்னை –
‘புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாத படியாயிற்றுக் கையும் திருவாழியுமான அழகு.
கடல் ஓடியாகிலும் பெறவேண்டியாயிற்று இருப்பது.

கலை கொள் அகல் அல்குல் தோழி-
நல்ல புடைவையையுடைத்தான அகன்ற நிதம்பப் பிரதேசத்தையுடைய தோழீ! என்றது,
உன் வடிவு போலே அநுகூலமாய் இருக்க வேண்டாவோ உன் வார்த்தையும் என்றபடி.
அன்றிக்கே, அவள் மடியிலே கிடந்து சொல்லுகிறாள் ஆகவுமாம்.
மேல், “தோழிமீர், என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்; இங்கே,
‘தோழி நம் கண்களாற் கண்டு’ என்று விளிக்கிறாள்; இவை சேரும்படி என்? என்னில்,
தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்.
இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற
உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.
நம் கண்களால் கண்டு-
இப்போது இவள் ஹிதம் சொன்னாளேயாகிலும், காணும்போது நான்கு கண்களாலே காணும் காண்பது;
அல்லது, இரண்டு கண்களாலும் காண வேண்டாள்.-இடைக்கண் கடைக் கண்கள் நான்கும் என்றுமாம் –
தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே-
‘பிரிந்த இடத்தில் தன்னுடைய பெண் தன்மைக்குப் போரும்படி அவன்தானே வரப் பார்த்திருந்திலள்,
அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து, அவன் வந்த உபகாரத்துக்குப்
பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ!
இத்திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக்கொண்டிருக்க,
‘ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று,
‘ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்;
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச்செய்தார்.
“கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே,
ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

கௌசல்யா லோகபர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மமஅர்த்தே சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே, “அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.

“மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
-நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்; நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆனபின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கையன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்யவேணுமே அன்றோ;
ஆனபின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச்செய்தாள்.”

‘இதுதான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ, அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
‘மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க அருளிச்செய்கிற பாசுரம்’ என்று அருளிச்செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –
———————————————————————–

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

அநாயாசேன அகில விரோதிகளை நிரசிக்கும் -அவனை நான் கிட்டுவது என்றோ –
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை போய் முதல் -வேர் உடன் சாய்த்து
சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட–கேசி -குவலயா பீடம்
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?-விரோதிகள் பற்றாசு தொலைய -ஆடு அழைப்பார் இல்லை
-ஸ்மிதம் பண்ணி -தூய வெளுத்த தந்த பந்த காந்தி
தொண்டை பழம் போலே சிவந்த அதர சோபையும்-கோபிகளுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன்
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே-வெட்கப்படும் படி என்றாக கிட்டுவோம் –
கண்ணன் என்னைக் கைப்பிடிக்க இவர்கள் வெட்கப் படுவார்களே

பேயின் முலையை உண்டு சகடத்தின் மேலே பாய்ந்து மருத மரங்களின் நடுவே சென்று அவற்றை வேரோடு கீழே தள்ளிப் புள்ளின்
வாயைப் பிளந்து யானையைக் கொன்ற, தூய்மை பொருந்திய புன்சிரிப்பையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய
பிரானை, தோழீ! தாய்மார்கள் நாணுறும்படியாகச் சேர்வது எப்பொழுதோ? என்கிறாள்.
பேய் – பூதனை, சகடம்-சகடாசுரன். புள்-பகாசுரன். களறு-குவலயாபீடம். அட்டபிரானை அன்னையர் நாண உறுகின்றது எந்நாள் கொலோ? என்க.
தாய்மார், ஐவராதலின் அன்னையர் என்கிறாள். “ஐவர் நலன் ஓம்ப” என்றார் திருத்தக்கதேவரும். தூ-பரி சுத்தம்.

மஹோபகாரகனைக் ‘குணம் இல்லாதவன்’ என்று சொல்லுகிற தாய்மார் ‘இவனை யாகாதே நாம் குணம் இல்லாதவன் என்றது’ என்று
நாணம் உறும்படி அவனைக் காண்பது என்றோ! என்கிறாள். அவன், தன் சத்தையை உண்டாக்கி, நம் சத்தையைத் தந்தான்’
நாம் அவன் சத்தையால் உண்டான பலத்தைப் பெறுவது என்றோ என்கிறாள்.

பேய் முலை உண்டு –
பூதனையால் வந்த ஆபத்தைத் தப்பி,
சகடம் பாய்ந்து-
உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி காவலாக வைத்த சக்கரம் அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வர அதனை வருத்தம் இன்றியே முறித்து,
முக்தன் செய்த வியாபாரம் என்பதால் போரப் பொலிய பல பாசுரங்கள் அருளிச் செய்தார்கள் என்றபடி –
மருதிடை போய் முதல் சாய்த்து-
நிர்விவரமாக -மருதுகள் -இரட்டை என்றும் அறிய முடியாமல் நின்றபடி –
தவழ்ந்து போகா நிற்க இடைவெளி இல்லாமல் வழியிலே நின்ற மருத மரங்களின் நடுவே போய்த்தான்
அவற்றைத் தப்பிப் போன அளவே அன்றிக்கே, அவை தம்மை வேரோடு பறித்து விழவிட்டு.
அன்றிக்கே, முதல் சாய்த்து-குருந்தத்தைப் பறித்துப் போகட்டு என்னுதல்.
புள் வாய் பிளந்து-
பகாசுரனை வாயைக் கிழித்து,
களிறு அட்ட –
குவலயாபீடத்தைக் கொன்ற,
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை –
தடையாக வந்தவைதாம் பிரபலமாயிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை பாத்தம் போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி.
என்றது, வெண்முறுவலையும் சிவந்த அதரத்தையுமுடைய உபகாரகனை என்றபடி.
அன்றிக்கே, தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக் கனி போன்ற அதரத்தையுமுடையவனை என்னுதல்.
இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில், அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில்
இவையே யன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி. என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற
இத்தனை போக்கி, அவனை அழிக்க உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் என்றபடி.
அவ்வுபகாரங்கள் எல்லாம் தனக்காகச் செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.

பூத் தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு.
பூத் தரு புணர்ச்சியாவது, இவள் ‘உத்தியான வனத்திலே பூக் கொய்ய’ என்று புறப்பட்டுப் பூக் கொய்யாநிற்க,
அருங்கொம்பிலே எட்டாதே நின்ற பூவை இவள் ஆசைப்பட்டால் ஒருவன் தன்னைப் பேணாதே மரத்தின்மீது ஏறி
அம்மலரைப் பறித்துக் கொடுக்க, ‘இவன் தன்னைப் பேணாதே தன் நினைவைத் தலைக்கட்டினான்’ என்று அதற்காகத் தன்னைக் கொடுத்தல்.
புனல் தரு புணர்ச்சியாவது, புதுப்புனல் ஆடப் போய் நீரிலே இழிந்து விளையாடா நிற்க, ஒரு சுழி வந்து இவளைக் கொடுபோக,
அதில் நின்றும் எடுத்து ஏறவிட்டதற்காகத் தன்னைக் கொடுத்தல். களிறு தரு புணர்ச்சியாவது, வீதியிலே நின்று விளையாடாநிற்க,
யானையின் கையிலே அகப்படப் புக, அதன் கையில் நின்றும் தன்னை மீட்டமைக்குத் தன்னைக் கொடுத்தல் என்று ஒரு மரியாதை கட்டினார்கள்;
இவளை நோக்கினதற்காக, இவள், தன்னை அவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது;
அவ்வளவு அன்றிக்கே, இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை
அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப்பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது,
இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.

தோழீ! நாம் உறுகின்றது எந்நாள் கொலோ?-
தோழீ! அவன், தன்னை உளனாக்கி வைத்தான், இனி நாம் அவனைக் கிட்டுவது என்றோ?
சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.
“ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழிதான் இருப்பது;
ஆதலின், ‘நாம் உறுகின்றது’ என்கிறாள். ‘இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப்படுகிறோம் அல்லோம்;
பின்னை எற்றிற்கு? என்னின், அன்னையர் நாணவே-‘பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள்,
அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே,
‘நாம் இத்தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, “எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,
நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே,-பெருமாள் ரிஷிகளைப் பார்த்து லஜ்ஜித்து வார்த்தை சொன்னால் போலே
அவன் நாணமுற்று வந்து நிற்கிறபடியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ்வார்த்தை சொன்னோம்’ என்று
தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும்படியாக.

———————————————————————————-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

சர்வ ச்வபஹாரம் பண்ணி -எட்டாத பரம பதம் -அலை கடல் பள்ளி யில் இருந்து மீண்டும் வந்த வழியே மீண்டார்
இதில் தான் மடல் இடுவேன் என்கிறாள்
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை-மிகவும் உயர்ந்த வானம் -பரமாகாச சப்த வாச்யம் பரமபதம்
ஸூ ரிகளுக்கு பிரான் -இங்கு செய்யும் பிரகாரங்களைப் பிரகாசித்து -ஆழ்வார் சொத்தைக் காட்டுவானாம்
இருள் தரும் மா ஞாலத்தில்
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்-ஆணை இட்டுச் சொல்கிறார் -எனக்கு விதேயமான தோழி
அனைத்து உலகங்களிலும் -பிரசித்தமாம் படி -என்னால் முடிந்த அளவும் –
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே-மிருக்குகள் அடங்க -தப்பாக -நாணம் அற்ற பெண் -போலே மடல் –

என் தோழீ! ஆணை; என்னுடைய நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, நல்ல நெஞ்சினையும் அழைத்துக்கொண்டு மிக உயர்ந்திருக்கின்ற பரமபதத்திலே சென்று தங்கியிருக்கின்ற தேவபிரானை, உலகுகள் தோறும் அலரைத் தூற்றி என்னால் செய்யக்கூடிய மிறுக்குகளைச் செய்து அடங்காதவளாய் மடல் ஊர்வேன் என்கிறாள்.
அலர்-பிறர் கூறும் பழமொழி. தூற்றுதல்-பலர் அறியச் செய்தல், குதிரி-தடையில்லாத பெண்; அடங்காதவள். ஊர்தும்: தனித்தன்மைப் பன்மை.
“மடல் ஊர்தும்” என்றதனால், மடல் ஊராமை உணர்க.

நெஞ்சு விம்மல் பொருமலாகா நிற்கவும், தன் பெண்தன்மையாலே இதற்கு முன்பு மறைத்துக்கொண்டு போந்தாள்;
இனி, ‘அவனை அழிக்கப் புகுகிற நாம், யார்க்கு மறைப்பது’ என்று அது தன்னையே சொல்லுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து-
சத்தையோடு கூடி வருகின்ற நாணத்தையும் கொண்டான், களவு கலந்தால் வருமதனையும் கொண்டான். என்றது,
வாசல்விட்டுப் புறப்படச் செய்யக் கூடியதல்லாத நாணத்தையும் கைக்கொண்டு,
அகவாயில் ஓட்டம் தாய்மார்க்கும் சொல்லக் கூடியதன்றிக்கே இருக்கும் அடக்கத்தையும் கைக்கொண்டான் என்றபடி.
என்னை-
அவ் விரண்டனையுமே நிரூபகமாகவுடைய என்னை
நல் நெஞ்சம் கூவிக்கொண்டு-
பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி,
அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற்காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு
‘இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோ வேகம் இருந்தபடியால்
திரைமேலே-அலை மேலே- நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல்
சேண் உயர் வானத்து இருக்கும்-
மிக்க ஒக்கத்தை யுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள் குடி இருப்பில் அன்றிக்கே
பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு;
ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி.
தேவபிரான் தன்னை-
இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக் கொண்டு தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிறபடி.
அன்றிக்கே, பிரமன் முதலாயினோர் ஓலக்கம் போலப்பேறு இழவு முதலியவைகளில் வருகின்ற துடிப்பு அறியாத ஓலக்கம் அன்றிக்கே
‘சம்சார மண்டலத்திற்போய் நான் பெற்றுக்கொண்டு வந்தவை இவை’ என்று தன் வெற்றியைக் காட்டிக்கொண்டிருக்கிற ஓலக்கம்
முதன் முன்னம் அதுவாகப் பெற்றோமே என்பாள் ‘தேவபிரானை’ என்கிறாள் என்னலுமாம்.
பிரிவினால் வரும் வியசனம் அறியார்களேயாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம்.

அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’ என்னுமித்தனையாயிற்று அவ்விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது;
‘விரஹப் பிரளயம் ஏறிப் பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்;
அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே!
அன்றிக்கே, நீயே பார்ப்பாயாக அவ்வோலக்கமும் அவனும் அவ்விருப்பும் என்கையிலே படப் புகுகிற பாடு;
இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள்
‘தேவபிரான் தன்னை’ என்கிறாள் என்னலுமாம்.
இப்போது இங்ஙனே ஒருவாய்ப் பகட்டுச் சொல்லுகிறாய், அது செய்து தலைக்கட்ட வல்லையாகப் புகுகிறாயோ? என்ன,
ஆணை என்கிறாள்.
இவள் இப்போது அவன்மேல் ஆணை இடுகிறாளோ, தோழிமேல் ஆணை இடுகிறாளோ? என்னில்,
அழிக்க நினைக்கப்பட்டவன் மேல் ஆணை இடாளே,ஆதலால், தோழிமேல் ஆணையாமத்தனை.
இதற்கு உடன்பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பரதேவதை உண்டு’ என்று இராளே, இவள்தான்.
‘இது வார்த்தையளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக்கட்டப் பெறுவதுகாண்’ என்னும் தன் நினைவு
தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக்கொள்ளுகிறாள்.
அன்றிக்கே, இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ஆணை என்? என்கிறாள் என்னுதல்;
ஆணை என்-தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில்,
தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லையாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி.
அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே,
இத்தோழி தானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே. உலகுதோறு அலர் தூற்றி-உலகங்கள் எங்கும் புக்கு அழிக்கக் கடவேன்.
என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன்.
‘அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,
அவ்வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழியடையப்படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.
அங்கு தோஷங்களை குணமாகக் கொள்வார்கள் -இங்கோ குணங்களையும் தோஷங்களாக கொள்வார்களே –

ஆம் கோணைகள் செய்து-
என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன். கோணைகள் – மிறுக்குக்கள்.
என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே,
‘நம் குண நிஷ்டர்படி இது அன்றோ’ என்று – குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்;
ராமாயாணம் மகா பாரதம் போன்ற புராணங்களில் எழுதப் பண்ணுவேன் –
‘அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன்.
அன்றிக்கே, நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன்,
அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன்.
“வட்டிக்கு மேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன்.
கோவிந்தேதி யதா அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசிநம்
ருணம் பிரவிருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி” என்பது, பாரதம் உத்யோகபர். 58:22.
“தலையாலே வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால் செய்யப்படவில்லை” என்று
புண்படும்படி செய்யக் கடவேன். என்றது, பிள்ளை தலையாலே இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்னும்படி செய்யக் கடவேன் என்றபடி.
மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத: சிரசா யாசத: தஸ்ய வசனம் ந க்ருதம் மயா”-ஸ்ரீராமா. யுத். 24:19
நான் இதனைச் செய்தால், அவர் தம் மனிச்சு அழியாமைக்காக, ‘தம்மோடு அசாதாரண பந்தமுடையார் தங்கள்
ஆதரத்தாலே செய்யக் கடவது ஒன்று அன்றோ இது’ என்னக் கடவன்,
‘அது அன்று இது, நான் சாதந அநுஷ்டானம் செய்கிறேன்’ என்னக் கடவேன்.
“எக்காலத்திலும் கைகூப்பிக் கொண்டு நிற்பார்கள், அதுவே மிகவும் விருப்பம் என்பது தோன்றும்படியாகச்
சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்கிற இதிலே செலவு எழுதப் பார்ப்பர் அவர்;
அங்ஙனம் அன்று, உன் உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன்’ என்னக் கடவேன்.
புருஷார்த்தமாக இல்லை சாதனம் என்பதை அடித்துச் சொல்வேன் –

குதிரியாய்-
குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்
, தடை இல்லாத பெண் என்கிறபடியாய், தடையுடையேன் அன்றிக்கே என்னுதல்;
அன்றிக்கே, குதிரி என்பது, செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ,
அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீர மாத்திரமேயாய் என்னுதல்;
அன்றிக்கே, பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக்கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள், அதனையுடையேனாய் என்னுதல்.
மடல் ஊர்துமே-
‘செய்யக்கடவதாயிற்றபின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

——————————————————————————————————

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

பக்தி -இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி -ஒன்றையும் பொறுக்காது -பகவான் -தன்னைப் பொறுக்கும்
நிரதிசய போக்யன்-அசாதாராண சிஹ்னங்கள் எங்கும் பலி தூற்று ஜகத் சோபம் கலங்கும் படி மடலூர்ந்து திருக் கழுத்தில் உள்ள -மாலைச் சூடுவோம் –
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-அத்யந்த அபி நிவேசம் -ஏதேனும் ஒரு படியாக -ஸ்த்ரீத்வம் இல்லாமல்
கையும் திரு ஆழியுமான அழகை உபகரித்த
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-செவ்வியிலே தூயதான ஸ்ரமஹரமான -தர்ச நீயமான
-பூந்தாரைக் கொண்டு -பெருமாள் சீதைக்கு சம்மானம் -செய்தது போலே –
கையிலே மடல் வாங்கிக் கொள்ள -மாலை வாங்கி சூடிக் கொள்வோம் -பன்மை -மடல் சூட துணிந்த கௌரவ உக்தி
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்-பழி -உலகு எங்கும் குறும் தெரு தோறும் -ஈடு அல்லாத மடலை
யா மாடம் இல்லாமல் -எந்த வித மடப்பமும் இல்லாமல்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.-நா மடங்காத படி -சொல்ல முடியாத பழி சொற்கள் -நாடு கலங்கும்படி –

மடம் முதலான குணங்கள் ஒரு சிறிதும் இன்றித் தெருக்கள்தோறும் அயல்பெண்கள் நாக்கும் மடங்காமலே பழிகளைத் தூற்ற நாடும்
கூப்பிடும்படியாக, யாம் மடலை ஊர்ந்தாயினும் எம்முடைய சக்கரத்தைத் தரித்த அழகிய கையையுடைய எம்பெருமானுடைய
பரிசுத்தமான இதழையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரைச் சூடக் கடவோம் என்கிறாள்.
எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணம்துழாய் மலரை, தையலார் பழிதூற்ற நாடும் இரைக்க மடம் யா இன்றித் தெருவுதோறும்
யாம் மடல் ஊர்ந்தும் சூடுவோம் என்க.
இனி, தெருவுதோறு தையலார் தூற்ற எனக் கூட்டலுமாம். யா என்பது, அஃறிணைப் பன்மை வினாப்பெயர். யாவை அல்லது, எவை என்பது பொருள்.
“மடல் ஊர்ந்தும்” என்றதனானே, ஊராமை உணர்தல் தகும்.

உலகம் எல்லாம் கலக்கம் உறும்படி மடல் ஊர்ந்தாகிலும், தனக்குமேல் ஒன்று இல்லாததான
இனிமையையுடையவனைக் காணக் கடவேன் என்கிறாள்.

யாம் மடல் ஊர்ந்தும்-
செய்யக்கடவது அல்லாததனைச் செய்தேயாகிலும். என்றது,
“சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30.
“என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக்கூடிய நாம், மடல் ஊர்ந்தேயாகிலும் என்றபடி.
1-பெற்று அன்றித் தரியாத உபேய வைலக்ஷண்யம், –2-அதற்கு அடியான உபாய வைலக்ஷண்ய அநுசந்தானம்,
3–‘அவ் வுபாயந் தன்னாலே பேறு’ என்கிற துணிவு, 4-வேறு ஒன்றினை உபாயமாக நினையாமை,
5- முறையிலே பெறுகிறோம் என்று நினையாமை ஆகிய இவைகளே, -இங்கு ‘மடல்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

“மடல் ஊர்தும்” என்றாள் மேல்; ‘இது உனக்கு வார்த்தை அன்று,
முதல் தன்னிலே பெண்கள் மடல் ஊர்தல் ஆகாது என்று விலக்கியுள்ளார்கள். அதற்கு மேல், நீயோ எனின்,
“ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் பிராணஸமாஹிதா”- சங்க்ஷேபராமாயணம் பாலகாண்டம்.
“எப்பொழுதும் உயிரை ஒத்த நாயகன் நன்மையிலேயே நோக்கங்கொண்டவள்” என்கிறபடியே.
உன்னை அழிய மாறியும் அவனுக்கு நன்மையையே விரும்புகின்றவளாய் இருப்பவள் ஒருத்தி,
அவனோ எனின், உன்பக்கல் வருகைக்கு உன்னைக் காட்டிலும்விரைகின்றவனாவான் ஒருவன்,
முறையிலே பெறுகிறோம் என்று நினையாமையால் படுகிறாயித்தனை, நீ சாகஸத்திலே ஒருப்படுகிற இது
‘உன் ஸ்வரூபத்தோடு சேராது’ என்ன, அது பார்க்க ஒண்ணாதபடி காண் எனக்கு அவன்பக்கல் உண்டான அன்பின் மிகுதி என்கிறாள்.

எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான”-என்ற தொல்காப்பியச் சூத்திரம்,
“கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” என்ற திருக்குறள்-

யாம் மடல் ஊர்ந்தும்-
இப்படி இருக்கிற என் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் பெறத் தவிரேன். செய்யக்கடவது அல்லாததனைச் செய்தாகிலும் பெறக் கடவேன்.
ஆத்மாவோடு சேராத செயலைச் செய்தேயாகிலும் பெறக்கடவேன்.
பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம் இருக்கிறபடியாயிற்று ‘யாம்’ என்பது.
அத் தலையைக்கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.
அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷபூதன் –அகாரம் சேஷி -ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால்
அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம் முதலில் சொல்லி ஆழி அம் கைப்பிரான் -பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –
பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே
ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்
எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர்கொண்டு சூடுவோம்-
‘எம் பிரான்’ என்றதனால் நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது. இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது.
அகாரம் நாராயணம் நடுவில் மகாரம் விளங்குகிறார் -அவனை இட்டே சேஷன்-இவன் கைங்கர்யம் செய்யச் செய்ய நாராயணன் -பெருமை பெருகிறானே –
அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள்
இரண்டும் அமோகம் -வீணாகாதே –ஈஸ்வரத்வம் திரு ஆழி காட்டும் – பிரணயித்வம் மடல் காட்டுமே – தேஜோ கரம் இரண்டும் இருவருக்கும்
‘ஆழி அம்கைப் பிரான்’ என்கிறாள். நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில்
ஆபரணத்தை வாங்கி என்கையிலே இட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என்தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்;
இல்லையாகில் எல்லாங்கூட இல்லை யாகின்றன. -உபய ஸ்வரூபமும் அழியும் என்றவாறு –
ஆபரணம் என்பதால் இங்கு ஆழி -மோதிரம் என்றபடி -திவ்யாயுதமும் திவ்யாபரணம் தானே அநு கூலர்களுக்கு –
என் தோளில் மாலையைப் பாராய், நான் செவ்வி மாலை சூடவேணுங்காண் என்பாள் ‘பிரானுடைத் தூ மடல்’ என்கிறாள்.
விரஹத்தாலே தன் மார்பின் மாலை சருகாய் அன்றோ கிடக்கிறது, செவ்விமாலை உள்ளது அவன் பக்கலிலே அன்றோ.
நன்று; ஒன்றைச் சொல்லுகிறாயாகில் செய்து தலைக்கட்டப் புகுகிறாயோ,
உன் பெண் தன்மை உன்னைக் காற்கட்டுங்காண் என்ன,
யா மடம் இன்றி-
அதுவோ! பெண்தன்மை இல்லாதார் செய்யுமதனை முதலிலே செய்யக் கடவோம்.
தெருவுதோறு-
“உலகுதோறு அலர்தூற்றி” என்றாளே மேல்; அங்ஙனம் உலகமாகத் திரண்டிருக்க உலகத்திற்காக ஒரு
வார்த்தை சொல்லி விடுவேனோ, தெருவுகள்தோறும் புக்கு, அறியாதார் எல்லாரும் அறியும்படி அலர் தூற்றக் கடவேன்.
‘கிருஹ அர்ச்சனைகள் அர்ச்சக பராதீனம்’ என்று ஒரு மூலையிலே புக்கு இருக்க ஒட்டுவேனோ.
அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி-
வேற்றுப் பெண்கள் நாக்குப் புரளாத படியான பழிகளை எல்லாம் சொல்ல.
சிசுபாலன் முதலானார் வாயில் கேளாதவற்றை எல்லாம் என் வாயிலே கேட்க அன்றோ புகுகிறான்.
அன்றிக்கே, அவர்கள் நா, மீளாமல் உருவப் பழி சொன்னபடியே இருக்கும்படியான பழிகளைத் தூற்ற என்றுமாம்.
அன்றிக்கே, நாம் தங்களுக்கு அடங்காமல் மடல்கொண்டு புறப்பட்ட பழியைத் தூற்ற என்னலுமாம்.

நாடும் இரைக்கவே –
அவன் என்னுடைய ஊரவர் கவ்வை நீக்கிலனாகில், நான், தன்னை நாடாக இரைக்கும்படி பண்ணுகிறேன். என்றது,
உலகமெல்லாம் கலங்கும்படி செய்கிறேன். ‘ஒருத்தி ஒருவனைப் படுத்திற்றே! ஒருவன் முகங்காட்டிற்றிலன்’ என்னும்படி செய்கிறேன் என்றபடி.
அவனைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும் அவனை அடையும் சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும்
எல்லாம் அழிய அன்றோ புகுகின்றன;
நாராயணன் பரதத்வம் பர ஜோதிஸ் வாக்யங்கள் -அழிக்கப் பார்க்கிறாள் -நிதித்யாசிதவ்ய -உபாசன பரமான வாக்யங்கள் அழிக்கப் பார்க்கிறாள் –
‘ஒருவன் உளனாகில் ஆசைப்பட்டவள் இப்படிப் பட இருக்குமோ ஆன பின்னர் நிரீஸ்வரங்காண் உலகம்’ என்னும்படி செய்கிறேன்.
அவனோடே கலந்த என் வார்த்தை ஒழிய, -அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ?
பிரமேய சிரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் பிரமாண சிரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ.
‘ஆசைப்பட்டார்க்குப் பலம் இதுவான பின்பு இனி உபாசனத்துக்குப் பலம் இல்லை’ என்று கைவாங்கி நாஸ்திகராம்படி உலகினரனைவரையும் செய்கிறேன்.
நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும்-
நாட்டார் சொல்லும் பழிதானே தாரகமே அன்றோ. “ஊரவர் கவ்வை எருவாக” என்றாளே, அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.
அயல் தையலார்—நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே—அதுவே தாரகம்

———————————————————————————-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை-அலை எரிந்து இரைக்கும் சப்திக்கும்
அபி வ்ருத்தமான நிறம் இவனைப் போலவே –
அழகை ஆஸ்ரிதற்கு அனுபவிப்பிக்கும் ஸ்வ பாவன்
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன-பரிமளம் மிக்க சோலை -சர்வகந்தன் வந்ததால் ஆகுமே
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-பா இனங்கள் நிறைந்த அந்தாதி –
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.-மடல் எடுக்காமல் -ஆழ்வார் பெற்ற பலன் கிட்டுமே
-வைகுண்ட நாதன் கிட்டே வருவதால் இருந்த தேசமே பரம பதம்
சப்த மாத்ர உச்சாரணம் செய்ய வல்லார்களுக்கு -ஆனந்தாவஹமாக இருக்குமே –

ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரானை, வாசனை பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூரில்
அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத்
திருப்பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள் எல்லாம் வைகுந்த மா நகரமேயாகும் என்றவாறு.
இரைத்தல் – ஒலித்தல். விரை – வாசனை. நிரை-வரிசை. அந்தாதி-முதற்செய்யுளின் அந்தமானது, அடுத்த செய்யுளின் ஆதியில் அமையும்படி பாடுவது.
அந்தம்-ஈறு. ஆதி-முதல். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்பது, இலக்கணம். ’வைகுந்தம் – அழிவில்லாதது; பரமபதம்.

இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்கும் கருங்கடல் வண்ணன் –
அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில்
“‘வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாற் போலேயாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு
அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச்செய்தார்.
வண்ணன்-
ஸ்வபாவத்தை யுடையவன் என்றபடி.
இரைக்குங் கருங்கடல் வண்ணன் –
ஓதம் கிளர்ந்த கடல் போலே சிரமஹரமான வடிவையுடையவன்.
மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்னபடி.
வண்ணன் –
வடிவையுடையவன்.
கண்ணபிரான் தன்னை –
அவ்வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு இது. ஸ்வாபாவம் இது. இங்ஙனம் இருக்க
நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ?
விரைக் கொள் பொழில் குருகூர் –
இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது உண்டான பரிமளத்தால் -சஞ்சாத பரிமளம் -நிறைவு பெற்றபடி.
நிரைக் கொள் அந்தாதி –
இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது,
எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும்-பத்தும் பத்தாக — சேர விழுந்தபடி.
இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே,
இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ.
“சுலோகத்திற்குரிய எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீராமாயணமானது சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால்
சோக வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே, சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய
திருவருளால் எல்லா இலக்கணங்களோடு கூடி இருந்தாற்போலே.

உரைக்க வல்லார்க்கு –
மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.
தம் ஊர் எல்லாம் வைகுந்தமாகும் –
அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம்.
அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே
அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம்தானே பரமபதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப்பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்; இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே

—————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனுசம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி
சம்ச்லேஷ லோல ஹிருதய அலாப
லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் இத்யேஷூ தூக்காது
பார்யா தசாயாது

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஜோதிர் உபாயங்க கத்வாத்
சரசிஜ நயன
அநிஷ்ட வித்வம்ச
ஸ்ரீ தசரசித தயா
உத்கிருஷ்ட சௌலப்ய யோகாத் -த்வாராபதி
ரஷாயாம் சாவயாத்
சுபகத தனு
சோபகார-
அஸ்த்ர வஸ்த்ரத்வாத்
ஸூ ஆஸ்ரிதற்கு -அதி பிரேமம் உண்டாக்கி

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 43-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்———-43-

————————————————————————————-

அவதாரிகை –

இதில்
கீழ் -5-2-பிரஸ்துதமான வடிவு அழகை அனுபவிக்கப் பெறாமல்
மடல் எடுக்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10-
அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி
கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று
அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு-ஏறாளும் இறையோன் 4-8- தலை எடுத்து
வழி அல்லா வழியில் இழிந்து
இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம்
என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே
முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும்
தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்து
ஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு
நாடாகப் பழி சொல்லும்படி
அவனுக்கு அவத்யம் விளைவித்து
என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள்
ஒரு பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
மாசறு சோதி- யில் அர்த்தத்தை
மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————-

வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து –
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்றும்
என் செய்வாய் -மாசறு சோதி -மணிக்குன்றம் -என்றும்
எம் கண்ணன் -என்றும்
சொல்லும் படி அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட கிருஷ்ணன்
தன ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே
அபி நிவேசம் அதிசயத்து -அதாவது –
பாசறவெய்தி -என்றும்
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பூர்ந்த -என்றும்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி யோர் சொல்லிலேன் -என்றும்
காதல் கடல் புரைய விளைத்த -என்றும்
கொடிய வன்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
மணி வண்ணன் வாசுதேவன் வலை யுள் அகப்பட்டேன் -என்றும்
தலையில் வணங்க வுமாம் கொலோ -என்றும்
எந்நாள் கொலோ யாம் உறுகின்றது -என்றும்
அருளிச் செய்தவை -என்கை –

இப்படி ஆசை அதிசயிக்கையாலே –
பழிக்கு அஞ்சாமல் –
ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு
இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே
அஞ்சாதே –
அப் பழிச் சொல்லே தாரகமாக
அதாவது –
சீதே தஸ்மாத் துக்க மதோவ நம் -என்று வனத்தை நிஷேதித்து அருளிச் செய்ய
அக்ரதஸ் தேக மிஷ்யாமி -என்றும்
யான சக்யா புரா த்ரஷ்டும் போதை ராகாசகை ரபி
தாமத்ய சீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா -என்றும் சொல்லுகிறபடியே
ஊரவர் கவ்வை தோழி என் செய்யும் -என்றும்
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழி இனி நம்மை -என்றும் –
தீர்ந்த என் தோழி என் செய்யும் ஊரவர் கவவையே -என்றும்
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து -என்றும்
அன்னை என் செய்யுமே -என்றும்
அன்னை என் செய்யில் என் – என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்
அவர்கள் நிஷேத வசனங்களை ஒரு சரக்கு அறச் சொன்னவை -என்கை –

பழிக்கு அஞ்சாமல் ஏசறவே –
அபவாத பீதி இன்றிக்கே ஏசும் எல்லை கடந்து
அன்றிக்கே
எல்லாரும் துக்கிக்க -என்றுமாம் –

அன்றிக்கே
ஏசவே -என்ற பாடமான போது
பழி சொல்லவும் சொல்லி
ஏச என்று ஆகவுமாம்-

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –
அதாவது
குதிரியாய் மடலூர்துமே -என்றும்
நாடுமிரைக்கவே –யாம் மடலூர்ந்தும் -என்றும்
ஜகத் ஷோபம் பிறக்கும்படி
இஜ் ஜகத்திலே மடலூர ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார்
இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று
தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே
இவரும் தளும்புகிறார்-

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: