பகவத் விஷயம் காலஷேபம் -108- திருவாய்மொழி – -5-2-1….5-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்தியசூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
இத்திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச்செய்வர்.

தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும்,
குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயுமுள்ளார் குறைந்தவர்களாயிருக்கிறபடியையும்,
சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும்,
அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு
உண்டான நன்மைகள் “எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே,
பகவானுடைய பரிசத்தாலேயாயிருக்கிறபடியையும், (பாகவத ஸ்பர்சம் என்னாமல் பகவத் ஸ்பர்சம் என்றது -இவர்கள் பகவானுக்கு பிரகாரம்
-தஷிணோ பாஹூ இளைய பெருமாள் போலே -கொல்லை மூக்கரிந்த்திட்ட குமரனார் -போலே அபி நாபாவம் –
விட்டுப் பிரிக்காத சம்பந்தம் உண்டே ) அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத்
தண்ணியனவா யிருக்கிறபடியையும் சொல்லி, தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும், திருந்தாதாரை உபேக்ஷித்தும், இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும்
பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-

இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
‘நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற “தேவர்கள் தாமும் புகுந்து”, “நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும்.
இதனால், “ஒன்றும் தேவும்” என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள் இயைபு தோன்றும்.
இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய் மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)

பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம் செய்கிறார்
‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சத்துவ குணமுடையார்’ என்றும்,
“மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும் பரந்திருக்கிறபடியையும்’ என்றும்,
“உள்ளீரேல்” என்றதனை நோக்கிக் ‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
‘சத்துவகுணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது, “மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“பெரியகிதயுகம்பற்றி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும்’ என்கிறார்.
‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும். என்றது. “திரியும் கலியுகம் நீங்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி,
“சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி எனலுமாம்.
‘தேச காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.

கொசித் கொசித் என்று –இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்
பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –
தாமிரபரணி கரையில் -பயச்வினி -கரையில் வேகவதி -காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித்த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் -நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்
வஜ்ரா நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில்
-பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

——————————————————————————————————

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

நிரவதிக -சர்வேஸ்வரனால் லப்த சத்தை -பாகவத சம்ருத்தி கண்டு மங்களா சாசனம் அருளுகிறார்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-ரத்னங்கள் -குணங்கள் -குண ரூப வை லஷண்யம்-இரண்டாலும்
அபரிச்சின்ன மாஹாத்ம்யம்
லப்த ஸ்வரூப சத்தை -அனன்யார்ஹ சேஷத்வம் பாரதந்த்ர்யம்
பூ சத்தை பெற்றவர்கள் -இருக்கிற படி இருப்பு பெற்றவர்கள் –
மண் மேல் -மேட்டு மடை -பகவத் விஷயத்துக்கு
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-சம்ருதம் ஆகும் படி -ஓர் இருவர் உண்டாகில் -இல்லை -வந்து புகுந்து
பகவத் குணங்களை இசையுடன் பாடி நர்த்தனம் பாடி எங்கும் விஸ்தரமாக
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
அவித்யா கர்மா வாசனை ருசி -சாபம் -நியத கர்மம் -சாபமும் வரமும் –
கிருபா -தலைவிதி -அனுபவ விநாசம் பல கல்பங்கள் ஆகுமே
வலிய சாபம் -பிரபல -போகும் படி
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை கலியுங் கெடும் கண்டு கொண்மின்
தத் பலமாக நலியும் –துன்பப்படுத்தும் -நரகங்கள் சிதிலம் ஆகுமே -கர்மம் போனால் அதன் காரியங்கள் எல்லாம் போகுமே
நமனுக்கு இங்கு -இந்த விபூதியில் இல்லை -இதுக்கு அடியான கால தோஷமும் போகும் -அதாவது
கலி யுகத்திலே கிருத யுகம் தன்மைகள் வந்தனவே என்றவாறு
இது பிரத்யஷம் -கார்த்த யுக தன்மை வ்ருத்தி பாகவதர்களால் -மாதவன் பூதங்கள் மண் மேல் இருப்பதால்-என்றவாறு –
ஸ்ருதி சாந்தி சாந்தி சாந்தி போலே பொலியும் பொலியும் பொலியும் -பூதங்கள் –

கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்;
ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில்
ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!
பொலிதல்-நீடு வாழ்தல். உயிர் வல் சாபம் போயிற்று என்க. பூதங்கள்-பாகவதர்கள். உழிதரல்-சஞ்சரித்தல்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பொலிக பொலிக பொலிக –
நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.
“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும்முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு
மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;
பின்னை இத்திருவாய்மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
உயிர் வல் சாபம் போயிற்று-
உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது.
சாபத்தாலே பற்றப்பட்டவரைப் போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார்.
அன்றிக்கே, ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அவித்யை முதலானவைகள் போயிற்றன என்னுதலுமாம்.
நலியும் நரகமும் நைந்த-
கர்மங்களுக்குத் தகுதியாகச் சேதனர்களைக் கொண்டு போய் வருத்துகின்ற நரகங்களும் சிதிலமாயின.
நரக அநுபவத்திற்கு ஆள் இல்லாமையாலே, நரகங்களும் கட்டி மேய்க்கை தவிர்ந்து கோப்புக் குலைந்தன.
ஆயின், அவ்விடங்கட்கு அதிகாரிகளாயிருக்குமவர்கள் செய்வன என்? என்னில்,
இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை-
யமனும் தனக்கு அடைத்த இந்நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை;
இனிப் பரமபதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார்.
தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரக லோகத்தைக் காணுதல் செய்ய வேண்டியிருந்ததே யன்றோ, அதற்கும்
ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.

இவை எல்லாம் உண்டாவன கிருத யுகத்திலே அன்றோ, கலியுகத்திலே உண்டாவன ஆமோ? என்னில்,
கலியும் கெடும்-
அந்தக் கலிகாலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக்கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி,
‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர்காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.
அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.
நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,
கண்டு கொண்மின்-
அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,
‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச்செய்கிறார் மேல்:
“எந்தத் தேசத்தில் திரு அட்டாக்ஷர மந்திர சித்தியையுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ
அங்கு வியாதி துர்பிக்ஷம் களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே,
நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி –
உபாயத்வ விரோதி -சுவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் –
ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் –
பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ?
கடல் வண்ணன் பூதங்கள்-
அவனுடைய சிரமஹரமான வடிவழகை அநுசந்தித்து அதனாலே தங்கள் சத்தையாம்படி இருக்குவர்கள்.
“பூ ஸத்தாயாம்” என்று தாதுவாகையாலே, அவன் சத்தையே சத்தையாய் அறுகையாலே ‘பூதம்’ என்ற சொல் அடியார்களைக் காட்டுகிறது.
மண்மேல்-
அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரமபதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். -மண் பிடி எடுத்து காட்டுகிறார் –
பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன,
மலியப் புகுந்து-
“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து.
இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-
சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு,
யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம். உழிதருகை-பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.

கடல் வண்ணன் என்று தொடங்கி, உழிதரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு
யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று கூட்டுக.

——————————————————————————————

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

பரத்வ பிரகாசம் -ஸ்ரீ யபதித்வம் -மாதவன் -சர்வேஸ்வரன் குணங்களில் வித்தராய் -பாகவதர்களை மங்களா சாசனம் பாட
அநு கூல வர்க்கங்களைக் கூப்பிடுகிறார்
மேலே பெரியாழ்வார் ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளையும் கூப்பிடுவாரே
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
திருத் துழாய் சாத்தி இருக்கும் அழகை அனுபவிக்கும் பிராட்டி உண்டே -சேஷ பூதர்கள்
இந்த போகம் அனுபவிக்க நிலம் இல்லாத பூமியில் -அனுபவித்து பரவசப்பட்டு
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-பண் தான் -பாட பேதம்
பிரேமா பாரவச்யத்தால் பாடி ஆடி வியாபாரியா நிற்க
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்-நிரந்தர அனுபவம் -அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத போலே –
முன்பு சாந்தி போலே -காட்டி அருளினார் –அனுபவிக்கத் தக்க ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-நிரந்தர அனுவ்ருத்தி பண்ணி ச ஹர்ஷ கோலா ஹலம் –
இந்த போகத்தை இழக்காமல் எல்லீரும் வாருமின் –

கண்டோம் கண்டோம் கண்டோம், கண்களுக்கு மகிழ்ச்சியைக் கெடுக்கக்கூடிய கூட்டங்களைக் கண்டோம்; தொண்டீர்!எல்லீரும் வாருங்கோள்;
தொழுது தொழுது ஆரவாரிப்போம்; வண்டுகள் படிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்தவனான சர்வேச்வரனுடைய
அடியார்கள் இத்த உலகத்திலே பண்ணோடு பாக்களைப் பாடிக்கொண்டு நின்று ஆடிக்கொண்டு எங்கும் பரந்தவர்களாய்த் திரிகின்றார்கள்.
‘பூதங்கள்’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘திரிகின்றன’ என அஃறிணைச்சொல்லால் முடிந்தது.

இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.

கண்டோம் கண்டோம் கண்டோம் –
காணப்பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.
கண்ணுக்கு இனியன கண்டோம்-
”கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்.
தொண்டீர் எல்லீரும் வாரீர் –
பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று இருப்பார் அடையத் திரளுங்கோள்.
‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில்,
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் –
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –
‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அதுதானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.
ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.

வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் –
வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையையுடையனாய், திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தை யுடையனாய் இருக்கிறவனுடைய
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
மாதவன்” என்ற பதத்தைநோக்கி ‘ஸ்ரீய:பதித்வத்திலும்’ என்றும், “வண்டார் தண்ணம் துழாயான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
‘ஒப்பனையிலும்’என்றும் அருளிச்செய்கிறார்.
மண்மேல் பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-
“ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே” என்னும் தேசம் ஒழிய, அதற்கு மாறுபட்ட பூமியிலே, வேறு ஒன்றனாலே தூண்டப்பட்டவர்களாய் அன்றிக்கே,
தங்கள் பிரீதிக்குப் போக்குவிட்டு, பண் மிகும்படி நின்று தாங்களே பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆடி, பரந்து திரிகின்றார்கள்.
‘தாங்களே பாடி’ என்று பொருள் அருளிச் செய்வதனால், “பண்தாம் பாடி” என்ற பாடமே ஏற்புடைத்து.
“பண்தான் பாடி” என்பது இப்பொழுதுள்ள பாடம்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் எனக் கூட்டுக.

—————————————————————

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

ஆஸ்ரித அர்த்த்தமாக வடிவு -சௌந்தர்யாதிகளில் வித்தர் -ஆனவர்கள் -இந்த விபூதியிலும் –
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து-
அதரோதரம் -ஆகும் ஸ்வ பாவம் கலி யுகம் -நீங்கி -அவர்களும் வந்து -சாத்விகர் கோஷ்டி தேட்டம் அன்றோ அவர்களுக்கும்
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்-கிருத யுகம் தொடக்கி -ஆனந்த சாகரம் பெருக
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் -சியாமள -வடிவு -ஸ்வாமி-அநவதிக குண சாகரம் -ஆழங்கால் பட்ட பாகவதர்கள்
மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே-விஸ்தாரமாக பாடி -இருக்க –

பொருள்களின் தன்மையை மாற்றுகின்ற கலியுகம் நீங்கும்படியாகவும், பெருமை பொருந்திய கிருதயுகத்தின் தன்மையை யுடைத்தாய்ப் பேரின்ப வெள்ளம் பெருகும்படியாகவும், நித்தியசூரிகளும் புகும்படியாகவும், கரிய முகில்வண்ணனும் கடல்வண்ணனும் எம்மானுமாகிய சர்வேச்வரனுடைய அடியார்கள்
இந்த உலகத்தின் மேலே ஆரவாரம் உண்டாகும்படியாகப் புகுந்து இசையோடு பாடி எல்லா இடங்களையும் தங்களுக்குரிய இடங்களாகக் கொண்டார்கள்.
நீங்கி, தேவர்கள் தாமும் புகுந்து என்னும் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களைச் செய என்னும் வாய்பாட்டு எச்சமாகத் திரித்துக்கொள்க.
நீங்கப் புகப் பெருகக் கடல் வண்ணன்பூதங்கள் மண்மேல் எங்கும் இடம் கொண்டன என்க. பூதங்கள் கொண்டன என்க.

நித்தியசூரிகளும் புகுந்து பரிமாறும்படி சம்சாரம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களே யானார்கள் என்கிறார்.

திரியும் கலியுகம் நீங்கி –
“கலியுகத்தில் தந்தையின் வார்த்தையைப் புத்திரன் கேட்க மாட்டான்,
மருமகளும் மாமியார் வார்த்தையைக் கேட்க மாட்டாள், உடன் பிறந்தவர்களும் மூத்தவன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள்,
வேலைக்காரர்கள் யஜமானன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், மனைவி கணவன் வார்த்தையைக் கேட்க மாட்டாள்,

“ந ச்ருண்வந்தி பிது: புத்ரா ந ஸ்நுஷா ந சகோதரா:ந ப்ருத்யா ந களத்ராணி பவிஷ்யதி அதர உத்தரம்”-என்பது, பாரதம் மோக்ஷ தர்மம்.

முதற் பெருந் தேவெனும் முகுந்தன் பூசனை அதர்ப்பட ஆற்றிடார், அரிய மாமறை விதத்தொடு முரணிய விரியும், ஆகம மதத்தொடு மருவுவர்,
மாக்கள் என்பவே. மைந்தர் தம் மாமியர் மாமனார் சொலச் சிந்தை உண்மகிழ்ந்து தீங்கெனினும் செய்குவர்;தந்தையர் தாயர் சொற்
சார்ந்து கேட்கலர்; நிந்தனை புரிகுவர்; நிலத்தின் என்பவே.- பாகவதம் பன்னிரண்டாங்கந்தம் கலிதன்மம் உரைத்த அத். செய்.15. 20.

இப்படிக் கீழ் மேலாக மாறும்படி ஆகப் போகிறது” என்கிறபடியே, பொருள்களின் தன்மையானது மாறாடும் படியான கலிகாலமானது கழிந்தது.
அன்றிக்கே, போவது வருவதாகத் திரிகின்ற கலிகாலம் என்னலுமாம்.
தேவர்கள் தாமும் புகுந்து-
இவ்வருகில் உண்டாக்கப்பட்டவர்களான இந்திரன் முதலான தேவர்கள்;
அன்றிக்கே, அவர்கள் சம்பந்தம் சிறிதும் பொறுக்க மாட்டாமல் வாந்தி பண்ணும்
நித்தியசூரிகளும் அகப்பட ‘இவ்விடம் சம்சாரம்’ என்று பாராமல் புகுந்து என்னுதல்.
பெரிய கிருதயுகம் பற்றி –
கலிகாலம் முதலிய காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத ஒரு போகியான கிருதயுகத்தையுடையராய்.
பற்றி –
பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி.
அன்றிக்கே, ஆப்பான் ‘ஆதி சிருஷ்டியில் கிருதயுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம்.
இங்கு, பற்றி என்பதற்குத் தொடங்கி என்பது பொருள்.
பேர் இன்ப வெள்ளம் பெருக –
அந்தம் இல்லாத பேரின்ப வெள்ளம் இங்கே உண்டாகும்படி.
பெரிய கிருதயுகம்பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக –
ஆதி கிருதயுகம் தொடங்கி நடுவுள்ள கலிகாலத்தின் தோஷங்கள் தெரியாதபடி பேரின்ப வெள்ளம் பெருகிற்று.
‘கிண்ணகம் இத்தைப் பற்றிப் பெருகிற்று’ என்னக் கடவதன்றோ.
அன்றிக்கே, பற்றி என்பதற்கு, கலியைப் போகப் பற்றி என்றும், கிருதயுகத்தைப் புகுரப் பற்றி என்றும் பொருள் கூறலுமாம்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் –
“மேகஸ்யாமம் – நீருண்ட மேகம்போல் கரிய” என்கிற வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாற் போன்று,
எழுதிக்கொள்ளும் சிரமஹரமான வடிவிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
மண்மேல் இரியப் புகுந்து –
பெரிய ஆரவாரத்தோடே சஞ்சரிப்பது நித்திய விபூதியிலே யன்றோ; சம்சாரத்திலே ஆரவாரத்தோடே புகுந்து.
இசை பாடி-
பகவானை அநுபவிப்பதனால் உண்டாகும் பிரீதியாலே பாடி.
எங்கும் இடம் கொண்டனவே –
எங்கும் தங்களுக்கு இடமாகக் கொண்டார்கள். புறச் சமயத்தாருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் இல்லாதபடி
சிஷ்யர்களும் சிஷ்யர்களுக்குச் சிஷ்யர்களுமாக எங்கும் பரந்தார்கள்.
“வாநரங்களால் சூழப்பட்டுள்ள மதில் அகழி இவற்றின் பிரதேசங்களை, வானரங்களால் செய்யப்பட்டதுபோல் இருக்கிற
பிராகாரமாக அரக்கர்கள் கண்டார்கள்” என்கிறபடியே, பிரதிகூலர்க்கு இடம் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.
“கிருத்ஸ்நம் ஹி கபிபி; வியாப்தம் பிராகார பரிகாந்தரம் தத்ருஸூ ராக்ஷசா தீநா: பிராகாரம் வாநரீகிருதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41; 97.

————————————————————————————

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

ஆஸ்ரித உபகாரகன் அரணவ சாயி -குணங்களில் வித்தராய் -பாஹ்ய சமயங்களை உத்பாடனம் பண்ணு வாரைப் போலே
அநேக வித ஹர்ஷ சேஷ்டிதங்கள் செய்யா நின்றார்கள் –
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே-வைதிக சங்கோசம் பிறக்கும் படி -சர்வ பிரதேசங்களிலும்
பௌத்த ஆர்ஹதன் சாருவாகர் -பொகட்டு
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்-விச்தீர்ணமான –ஆஸ்ரித அர்த்தமாக கண் வளர்ந்து அருளும் -பாகவதர்கள் முழுவதும் பரந்து
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி-அவனை நினைத்து நர்த்தனம் -கிடந்தும் -இருந்தும் -நின்றும்
குண சேஷ்டித பிரகாசம் கீதங்கள் பாடி
சஞ்சரித்தும் -எவ்வாறு நடந்தனை -என்னும்படி நடை -ஆச்சார்ய அனுஷ்டானம் -தாசரதி ச்ரேஷ்டன் –
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–ஹர்ஷத்தால் மேல் கிளம்பியும் -சசம்பரம ந்ருத்தனம்
இப்பாட்டும் கீழ் உடன் அந்விதம்-கிருத யுக ஸ்வ பாவம் –பொலிக -பாட்டுடன் என்றுமாம் -கடல் வண்ணன் பூதங்கள் என்றாரே –

எல்லா இடங்களையும் தமக்கு உரிய இடமாகக் கொண்டுள்ள புறச்சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுமாறு போன்று, விசாலமான கடலிலே
யோக நித்திரை செய்கின்ற சர்வேச்வரனுடைய அடியார்களேயாகிக் கிடந்தும் இருந்தும் எழுந்தும் பலப்பல இசைகளைப் பாடிக்கொண்டு
நடந்தும் பறந்தும் ஆடியும் நாடகம் செய்யாநின்றார்கள்.
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்கள் இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
ஆய் நாடகம் செய்கின்றன என முடிக்க. பூதங்கள் செய்கின்றன என்க.

அசைக்க முடியாதவாறு வேர் ஊன்றியிருக்கின்ற புறச்சமயங்களை எல்லாம் வேரோடே அறுப்பாரைப் போன்று எங்கும் வைஷ்ணவர்களேயாகி,
பகவானுடைய குணங்களை அநுபவிப்பதனால் உண்டாகின்ற சந்தோஷத்தாலே களித்துத் திரியாநின்றார்கள் என்கிறார்.

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
– பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தையுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற
புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுவாரைப் போலே.
‘போலே’ என்பான் என்? என்னில், சத்துவ குணமுடைய பெரியோர்கட்குப் ‘பிறரை நலிய வேணும்’ என்ற ஓர் எண்ணம் இல்லையே அன்றோ
நெற்செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை.
“நெற் செய்யப் புற் றேய்ந்தாற் போல நெடும்பகை தற் செய்யத் தானே கெடும்”-என்பது, பழமொழி நானூறு. 83.
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிக் கண்வளர்ந்தருளுகைக்கு ஈடான பரப்பையுடைய திருப்பாற்கடலிலே
கண்வளர்ந்தருளுகிற அழகை நினைத்து,
“பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும், காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்” என்று அதிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய்.
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் –
தங்களுக்கு விருப்பமான எல்லாக் காரியங்களுக்கும் தகுதியாம் படி பூமியைக் கைக்கொண்டு, ஒவ்வோர் இடத்திலே இருந்தும்,
ஒவ்வோர் இடத்திலே நின்றும், பகவானுடைய அநுபவத்தின் மிகுதியால் வந்த களிப்பினால் பலப் பல பாட்டுக்களைப் பாடியும்,
மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாக உலாவியும், கால் தரையிலே பாவாதபடி பரபரப்போடு நிருத்தம் செய்தும்.
நாடகம் செய்கின்றன –
இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை.
“எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும்,
ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.
இங்கும் கீழ் பாட்டுடன் அந்வயம் –

——————————————————————————–

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

பிரதி கூலர் -அசுரர் ராஷசர் ஸ்வ பாவம் உள்ளவர்களை -ஸ்ரீ வைகுண்ட நாதன் குணம் வித்தர் -உங்களை நிரசித்து பொகடுவார்கள்
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து-இவர்கள் செய்கிற வியாபாரம் -பக்தர்கள் -உயர்ந்த ஒன்றாக இருக்குமே
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி-பரமபதன் நிலையன் பூதங்களே யான படி –
ஆச்சர்ய -மாயை -இச்சை -வ்ருத்திகளால் -நிரந்தர வாசம் பண்ணி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-ராஜச தாமச பிரக்ருதிகள் -இருப்பீர்கள் ஆகில்
உய்யும் வகை இல்லை தொண்டீர் உழி பெயர்த்திடும் கொன்றே-யுகம் பெயர்த்திடும் -இதர விஷய சபலம் உடையரவர்களாக
-தொண்டீர் -விஷயாந்தர -மேல் சோறு கூறைக்காக சேவா -செய்பவர்கள் -நாய் தொழில் –
நிரசித்து -முதல் கார்யம் -மேலே ஊழி பெயர்த்து கலி கிருதி யுகம் ஆகும் படி -இதில் ஐயம் இல்லை -நீங்களும் மாறுவதே நலம்

இதர விஷயங்களில் தொண்டு பூண்டு இருப்பவர்களே! இவர்கள் செய்கின்றது என்னுடைய கண்களுக்கு ஒரு காரியத்தைச் செய்வது
போன்று இருக்கின்றது; அது யாது? எனின், இந்த உலகத்திலே ஸ்ரீ வைகுண்டநாதனுடைய அடியார்களேயாகித் தங்கள் இச்சையாலே
எங்கும் நிலைபெற்று உங்களையும் கொன்று இந்தக் காலத்தையும் மாற்றி விடுவார்கள் போலே இருக்கின்றது; இதில் சந்தேகம் இல்லை;
ஆதலால், அரக்கர்களாயும் அசுரர்களாயும் பிறந்தவர்களாய் இருப்பீர்களேயானால், உங்களுக்குப் பிழைத்தற்குரிய வழியில்லை என்றவாறு.
தொண்டீர்! செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது; இவ்வுலகத்து, வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும்
மன்னிக் கொன்று ஊழி பெயர்த்திடும்; ஐயம் ஒன்று இல்லை; அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் (உங்களுக்கு) உய்யும் வகை இல்லை என்று கூட்டுக.
மன்னி – மன்னுதலால், கொன்று ஊழி பெயர்த்திடுவார்கள் என்க.

ஸ்ரீ வைஷ்ணவர்கள், அசுர இராக்ஷசரான உங்களையும் முடித்து யுகத்தையும் பேர்ப்பர்கள் என்கிறார்.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது –
செய்கிறபடி பார்த்தேனுக்கு என் கண்களுக்கு ஒன்று போலே இராநின்றது. என்போலே இராநின்றது? என்றால்
இவ் வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் –
பகவானுடைய குணங்களுக்கு மேட்டுமடையான சம்சாரத்தில் நித்தியவிபூதியில் இருப்புக்குத் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய்.
மாயத்தினால் எங்கும் மன்னி-
“மாயா வயுநம் ஞானம்” என்கிறபடியே, இச்சை என்ற பொருளைக் குறிக்கிற ஞானத்தாலே. இச்சையாலே எங்கும் புகுந்திருந்து.
ஐயம் ஒன்று இல்லை-
‘இங்கே இருந்தே அவ்விருப்புக்குத் தோற்றிருப்பர்கள்’ என்றதில் ஒரு சந்தேகம் இல்லை.
அன்றிக்கே, ‘பேர்த்திடும்’ என்னுமதில் ஒரு சந்தேகம் இல்லை என்னலுமாம்.
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை –
இராக்கதத் தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத் தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக்கொண்டு,
ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,
“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தினபடி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேடவேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேடவேண்டும்படியாயிற்று என்றபடி.
தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே –
”பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த் தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே தொண்டுபட்டிருக்க உங்களைக் கல்பந்தானே
வருத்திக்கொண்டு, தானும் பேரும் என்னுதல்;
அன்றிக்கே, வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: