பகவத் விஷயம் காலஷேபம்- 107- திருவாய்மொழி – -5-1–6….5-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

தோஷத்துடன் இருக்கச் செய்தே -நெஞ்சில் படாதபடி -அவன் பிரகாசிப்பித்த விலஷண விக்ரகம் அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார்
புறமறக் கட்டிக்கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்-கர்மங்கள் உயர் திணை -பீடிக்கும்
முறைமுறை யாக்கை புகல் -தேவாதி சரீரங்களில் பஹூ பிரகாரமாக -ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்-தவிரும்படி
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண்-தர்ச நீயமான -நான்கு வகை -சுற்று உடைத்தான
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே-ரஷணம் தர்மம் -உத்யுக்தனான -சேஷியானவனை சேவித்தே
இழவு தீரும் படி அபரோஷித்து -ஆந்தர விக்ரக அனுபவ ப்ரீதி -இனி சரீர சம்பந்தம் இல்லை என்னும் பிரதி பத்தி ஏற்படும் படி இருந்ததீ –

புறத்திலே ஒன்றும் தோன்றாதவாறு நலமுறக் கட்டிக் கொண்டு வருத்துகின்ற கொடிய இரண்டு வினைகளாலே சரீரத்தில்
முறை முறையாகப் புகுதல் தவிரும்படியாக, நிறத்தையுடைய விசாலமான நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருவாயினையும்
சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையும் அறத்தையே செய்கின்ற சக்கரத்தைத் தரித்த அழகிய திருக்கையையும்
கரிய மேனியையுமுடைய சுவாமியைக் கண்டுகொண்டேன் என்கிறார்.
கட்டிக்கொண்டு குமைக்கும் வினையார் என்க. ‘வினையார்’ என்பதில் ஆர் விகுதி, இழித்தற்கண் வந்தது.
யாக்கையிலே முறை முறை புகல் ஒழிய அம்மான் தன்னைக் கண்டுகொண்டொழிந்தேன் என்க. ‘கண்டுகொண்டொழிந்தேன்’ என்பது, ஒரு சொல்.

“போரவைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’ என்று
பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட, அவ் வடிவழகைக் கண்டவாறே தம் முடம்பை மறந்து பிரீதராய், கண்டு கொண்டேன் என்கிறார்
இவரை மெய்ம் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.

புறம் அறக் கட்டிக்கொண்டு-
பிணைத்த இடம் அறிந்து இவனால் அவிழ்த்துக்கொள்ள ஒண்ணாதபடியாக, புச்சம் தோன்றாதபடி உள் முடியாக முடிந்து.
“என்னுடைய மாயையானது தாண்ட முடியாதது” என்கிறபடியே, சர்வ சக்தியான தான் பிணைத்த
பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்ணாது என்றானே அன்றோ.-ஸ்ரீ கீதாச்சார்யன் –
இரு வல் வினையார் குமைக்கும்-
இரு வகைப்பட்ட மஹாபாவங்கள் தகர்க்கும்.
குமைக்கும் முறை முறை யாக்கை – புண்ணியங் காரணமாகத் தேவ சரீரத்தை அடைந்தும், பாவம் காரணமாக
விலங்கு முதலான சரீரங்களை அடைந்தும், இவ்விரண்டு வினைகளும் காரணமாக மனித சரீரத்தை அடைந்தும்
படும்பாட்டுக்கு ஒரு முடிவு இல்லை அன்றோ? திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே,
கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள்தோறும் பிரவேசித்துத் திரியும்.
புகல் ஒழிய –
புகுதல் தவிர. ஞான ஆனந்த லக்ஷணமான ஆத்மாவே அன்றோ தோன்றுதல் வளர்தல் முதலான தொழில்களையுடையதாய்,
நிலை இல்லாத சரீரத்திலே அகப்பட்டு நோவுபடுகிறது. அது தவிர,
கண்டு கொண்டொழிந்தேன் –
உத்தேசிய வஸ்துவைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன். பிறவி நீங்கினேன் என்றபடி.

நி்றமுடை நால் தடம் தோள் –
“எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கைக்குத் தகுதியாக இருக்கிற திருத் தோள்கள்” என்கிறபடியே,
ஆபரணத்திற்கு ஆபரணமாய், நான்காய், சுற்றுடைத்தான திருத் தோள்களை யுடையனாய்.
செய்ய வாய் செய்ய தாமரைக் கண் –
“விலாசத்தோடு கூடிய திருமுறுவலுக்கு ஆதாரமான திருமுக மண்டலத்தையுடையவர்” என்கிறபடியே,
“முறுவல் எடுத்த கலம்” என்னும்படி திருமுகத்தைச் செவ்வி பெறுத்தா நின்றுள்ள புன்சிரிப்பையும், இழவு மறக்கும்படி
குளிரக் கடாக்ஷிக்கிற திருக் கண்களையுமுடையனாய்.
அறம் முயல் ஆழி அம் கை-
அடியார்களைக் காப்பாற்றுதலாகிற பரம தர்மத்திலே தன்னிலும் முயலா நின்றுள்ள திருவாழியை யுடைய அழகிய திருக்கையையும்,
கரு மேனி –
அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும்,
அம்மான் தன்னை –
‘இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும்படியான சம்பந்தத்தை யுமுடையவனைக் காணப் பெற்றேன் என்க.
“அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின
பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின்,
கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும் உருக்கின தங்கம் போன்ற காந்தியையுடையதாயுமிருக்கிற
ஒரு சிகை இருந்தால் அதுபோன்று இருக்கிறது” என்கிறபடியே, இருதயத்திலே இருக்கிற படி.
முன்பு இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.

மாலின்யம் போக்கி அடிமை கொண்டான்
மாலின்யம் என்ன -சரீர சம்பந்தம் ஐந்தாம் பாட்டில் அறிவித்து-இவரின் இழவை -மறப்பித்து தனது வடிவு அழகை காட்டி –
தம்முடைய உடம்பை மறந்து ப்ரீதராய் கண்டு கொண்டேன்-இவரை -மெய் மறக்க பண்ணிற்று அவன் வடிவு அழகு

“நிறமுடை நால் தடந்தோள்” என்பது போன்றவைகளால் இறைவன் தன்னுடைய வடிவழகைக் காட்டுகையாலே ‘இவருடைய இழவை
மறப்பித்தல்’ பொருள் ஆற்றலால் போதரும். ‘வடிவழகை’ என்றது, “நிறமுடை நால் தடம் தோள்” என்பது போன்றவைகளால் பெறுதும்.
“கண்டுகொண்டு” என்றதனால், அவன் ‘காட்ட’ என்பது போதரும். ‘உடம்பை மறந்து’ என்றது தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தை
அநுசந்தித்தபடியால் வந்த துக்கத்தை மறந்து என்றபடி. ‘மெய்’ என்றது சிலேடை: சரீரமும், சத்தியமும் என்பன பொருள்.
மெய்ம் மறக்கப் பண்ணிற்று -சரீரம் காரணமாக வந்த துக்கத்தை மறக்கப் பண்ணிற்று.

————————————————————————————

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

கிருபா அதிசயத்தால் -எத்தனை நிகர்ஷ்டருக்கும் ஸூ வ விஷயத்தில் ஆசையை விளைவித்து தானும் ஆசை கொள்ளும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?-அமுதனார் -சுரம் வைத்து -அவனை
மேலாகவும் தம்மை கீழாகவும் காட்டி அருளுவாராம்
நிருவாதிக ஸ்வாமி- உபகாரகன் –
ஸூ ரிகளாலும் அளவிட முடியாதபடி -அங்கே உள்ளவன் –
கிருத்ரிம உக்தாதிகளை பண்ணும் நீசன் –
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கையை தலை மேல் வைத்து கூப்பி -கூப்பிட்டு -பாரமார்த்திக பிரேமம் -உள்ளவனாய் ஆனேனே
கஜேந்திர -ஜன்மாத் அபகர்ஷம் பாராமல் –
தும்பிக்கையால் தாமரை -கைங்கர்யம் உத்யுக்தமான -கிலேசம் ஒழித்து
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.-
என் பக்கல் அபி நிவிஷ்டன் ஆனானே
ஆதலால் மகா பாபிகளுக்கும் தப்ப ஒண்ணாத கிருபை பலம் கொடுத்தே தீரும்

எல்லார்க்கும் சுவாமியும் திருவாழியைத் தரித்திருக்கின்ற உபகாரகனுமான அந்தச் சர்வேச்வரன் எவ்விடத்திலே உள்ளவன்,
யான் எங்கே உள்ளவன், துதிக்கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கினவனே! என்று சொல்லிக் கைகளைத் தலையிலே
வைத்துக்கொண்டு மனத்தொடு படாமலே கூப்பிட, அது உண்மையான பக்தியாக மாறும்படி நின்றேன்; எம்பிரானும் என்மேலே
காதல்உள்ளவன் ஆனான்; ஆதலால், எத்தகைய பெரிய பாவங்களைச் செய்தவர்கட்கும் புண்ணியம் வாய்க்குமிடத்தில் வாய்த்தே விடும் என்கிறார்.
‘எவ்விடத்தான்’ என்பது, பரமபதத்திலே உள்ள தன்மையைக் காட்டுகிறது. பாவியர்க்கும் உம்மை, இழிவு சிறப்பு.
வாய்க்கின்று என்பது, கின்று விகுதிபெற்ற வினையெச்சம்.

அவன் கிருபையாலே தாம் பெற்ற பேற்றினைக் கண்டு ஆச்சரியத்தை அடைந்தவராய்ப் பகவானுடைய கிருபை நடையாடாநிற்க,
சிலர்க்கு ‘நான் தீவினையேன்’ என்று இழக்க வேண்டா என்கிறார்.

அம்மான் –
சர்வேச்வரன்.
ஆழிப்பிரான் – கையும் திருவாழியுமான அழகை நித்தியசூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்குமவன்.
அவன் எவ்விடத்தான் –
அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்திய சூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.
யான் ஆர் –
நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.
பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.
எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எல்லா வழியாலும் மஹாபாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும் பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை. நீர் கிட்டினபடி என்? என்ன,
பாபம் இல்லாதவருக்கு பள்ள மடை -பாபம் உள்ளவர்க்கு மேட்டு மடை -வெள்ளம் வந்தால் வாசி இல்லையே –
கர்மம் ஆகிய கரையிலே -நின்றால் அத்தையும் சேர்த்து அழித்துப் போகுமே –
கைம் மா துன்பு ஒழித்தாய் என்று-
உயர்ந்த பிறவி ஆசாரம் ஞானம் இவைகள் ஒன்றும் இன்றிக்கே இருக்கின்ற யானையானது முற்பிறவியின் வாசனையாலே,
முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவுபட்டவாறே திருவடிகளை நினைக்க, சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல்
மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று
அந்த உபகாரத்தின் நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.

கை தலை பூசல் இட்டே –
தலையிலே கையை வைத்து வாயாலே கூப்பிட்டு என்னுதல்;
மாறாதே அஞ்சலி செய்து என்னுதல்;
தலையிலே வைத்த கை மாறாமல் என்னுதல்.
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் –
யானைக்கு உதவினது தங்களுக்கு உதவி செய்தது என்று இருக்கும் பரசம்ருத்தியேகப் பிரயோஜநர் அந்த உபகாரத்திற்குத் தோற்று
உபகாரத்தின் நினைவாலே அஞ்சலி செய்து சொல்லும் பாசுரத்தை, மனத்தொடு படாமலே சொல்லி அது நெஞ்சிலே ஊற்றிருந்து
பொய்ம் மால் போய் மெய்ம் மாலாய் விழுந்தது. நன்று; அவன் உம்மளவில் செய்தது என்? என்ன, அருளிச்செய்கிறார் மேல்:
எம்பிரானும் என் மேலோனே-
எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான். என்றது,
நான் மெய்சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற என்றும் ஒக்க மெய்ம் மாலாய்ப் போருகின்றவன் விடுவானோ என்றபடி.
இது இருந்த படியால், எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எவ்வளவு மஹாபாவத்தைப் பண்ணினார்க்கும் பகவானுடைய கிருபை பெருகாநின்றுள்ள இடத்தில் தப்ப விரகு இல்லை அன்றோ?
பூசல் இடுதல் – பிரசித்தமாகக் கூப்பிடுகைக்கும், ஒன்றோடு ஒன்று சம்பந்திக்கிறதற்கும் பேர்.

கை தலை பூசல் இட்டே” என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள், பூசலிடுதல்-கூப்பிடுதல்.
இரண்டாவது பொருள், பூசலிடுதல் என்பது, கூட்டுகையாய் தலையிலே கையையும் கையையும் கூட்டி அஞ்சலி செய்து என்றபடி.
மூன்றாவது பொருள், தம் எளிமை தோன்றக் கையைத் தலைமேலே கூட்டி வைத்து என்றபடி. “இட்டே” என்ற ஏகாரத்திலே நோக்காக ‘மாறாமல்’ என்கிறார்.

“கைம் மா துன்பொழித்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து “மெய்ம் மாலாய் ஒழிந்தேன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘யானைக்கு’ என்று
தொடங்கி. பரசம்ருத்தியேகப் பிரயோஜநர்-பிறருக்கு வந்த நன்மைகளையே தமக்கு வந்ததாக நினைப்பவர்கள்;
நித்திய சூரிகள். ‘மனத்தொடு படாமலே சொல்லி’ என்றது, இத்திருப்பதிகத்தின் முதற்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.

———————————————————————————————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

உபய விபூதி நாதன் -என் நெஞ்சுக்குள் புகுந்து -மேல் விழுந்து -அனைத்தும் காட்டி அருளினான்
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்-சர்வ பிரகார உத்க்ருஷ்டர்கள் –
நித்ய சூரி களுக்கு சமமாக ஞான பக்த்யாதிகளால்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சர்வாதிகர் -அபிமுகராய் வந்து -அடியேன் -அனன்யார்ஹ சேஷத்வமே பற்றாசாக – பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்து
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.-கயல் விளி-குணாதிகர் -பிரிய ஹிதங்கள்-
இவர்கள் கிட்டி பிறக்கும் ஹர்ஷம் தம்மை அனுபவித்து பெரும் படி –

மேன்மை பொருந்திய நித்தியசூரிகளாலும் நிலத்தேவர்களாகிய ஸ்ரீவைஷ்ணவர்களாலும் பொருந்தி வணங்கப்படுகின்ற திருமால் ஆனவர்,
இப்பொழுது அடியேன் மனத்திலே வந்து நிலை நின்றார்; இனிமேல், சேல் போன்ற கண்களையுடைய பெண்களும் பெரிய செல்வமும்
சிறந்த புத்திரர்களும் மேலான தாயும் தகப்பனும் அவரே ஆவார் என்க.
நிலத்தேவர்-திருமாலடியார். மன்னுதல்-நிலைபெறுதல். ‘சேல் ஏய்’ என்பதில் ‘ஏய்’ உவம உருபு.

உபயவிபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல்விழுந்து என்னை விடாதே மனத்திலே புகுந்திருந்தான்; நானும், இனி
நித்தியசூரிகளைப் போலே நித்திய சம்சாரத்தை விட்டு, அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

மேலாத் தேவர்களும் –
நித்தியசூரிகளும். நிலத் தேவரும்
– பூசுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களும்.
மேவித் தொழுஉம் மாலார் –
இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில்
உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.
வந்து –
தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல் தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து.
இன நாள் –
இப்போது, என்றது, முக்கணத்தில் அறியாது இருக்க, இங்ஙனே விடிந்துகொண்டு நிற்கக் கண்டேன் என்றபடி.
இப்படி வருகைக்குக் காரணம் என்? என்னில்,
அடியேன்-
விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான். வந்து செய்தது என்? என்னில்,
மனத்தே மன்னினார் –
“மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே, பரம யோகிகள் நெஞ்சிலும், திருப்பாற் கடலிலும்,
பெரிய பிராட்டியார் திருமுலைத்தடங்களிலும் இருக்கக்கூடிய அவன், நித்திய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலைபெற்று நின்றான்.

இனி, நீர் செய்யப் பார்த்தது என்? என்ன, இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ? என்கிறார் மேல்:
சேல் ஏய் கண்ணியரும் –
தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.
பெரும் செல்வமும்-
நிரவதிகமான செல்வங்களும்.
நன்மக்களும் –
குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும்.
மேலாத் தாய் தந்தையும் –
தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம்.
இனி அவரே ஆவார்-
இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய
சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
“தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும் ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம்.
“யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.
ஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.

நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்.

—————————————————————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

சன்ம விடாய்க்கு நிழல் ஆழ்வார் திருவடிகளே -கிருபா பரவசன்-அவன் என்று காட்டி அருள்கிறார் –
நிர்ஹேதுக கிருபை நம் அனைவருக்கும் பிரவஹிக்குமே
வித்யா மலைக்கு தெற்கில் இருந்து இதே நிலையில் ஸ்ரீ ராமானுஜர் -பெரும் தேவித்தாயார் தேவ பெருமாள் -தோன்றி அருளினார்கள் –
ஹ்ருஷ்டராக அருளிச் செய்கிறார் -ஆழ்வார் இதில் -நமக்காக அருளிச் செய்கிறார் –
சர்வ வித பந்து -அசாதாராண விக்ரகத்துடன் என்னுடன் கலந்தான் –
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்-துணை யாவார் யார் என்று –
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்-சம்சார சமுத்திர மத்யத்தில் நின்று கரை ஏற முடியாமல் நடுங்க
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
திவ்ய சௌ ந்தர்யாதிகள் உடன் -அவ்வடிவுக்கு அழகு கூட்டும் திவ்ய ஆயுதங்கள் உடனும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே-என்னுடனும் ஆனார் -உம்மைத் தொகை -திருச் சங்கு திருச் சக்கரத்துடன் போலே
தாழ்ந்த என்னுடனும் ஆனான் -நைச்ய பாவத்துடன் -அசாதாராண விக்ரகத்துடன் கூடினான் –
ஆ ஆ -காலம் தாழ்ந்தோமே என்று -விதி என்று சொல்லிப் போந்தை அருள் என்று வெளியிடுகிறார் இதில் –

துணை ஆவார் யார்? என்று, அலைகளையுடைய நீரையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப்போன்று, பிறவியாகிய பெருங்கடலுள்
நின்று நான் நடுங்கிக்கொண்டிருக்க, தெய்வத் தன்மை பொருந்திய திருமேனியோடும் திருச்சக்கரத்தோடும் திருச்சங்கினோடும்
அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான் என்கிறார்.
நாவாய் என்றது, நாவாயிலுள்ளவர்களைக் குறித்தது. ஆகுபெயர். நான் துளங்க அருள்செய்து ஆனான் என்க.
ஆஆ என்பன: இரக்கத்தைக் காட்டுகின்ற குறிப்பு இடைச்சொல்.

பல சொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.
அலை நீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
‘நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்தபோது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவுபடா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.
திரு நாவாய் – -பிரிந்த துன்பக்கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.
இவ்விதமான நடுக்கத்தில் சர்வேசுவரன் செய்தது என்? என்னில்,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே-
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ்வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து,
ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.-ஆவா என்று ஆராய்ந்து அருளினான் –

பின் இரண்டு அடிகட்கு, “கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார்
அருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி
“இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ -திருவாய். 6. 9 : 1.-என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது;
ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச்செய்தார்.
இவர் தாம் பூவேளைக்காரரைப் போலே, இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ.
பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக் கொண்டு முடியுமவர்கள். ‘இவை காணாத போது’ என்றது, இவற்றைக்
கைமேலே காணாத போது என்றபடி. “கைமேலே முடிவார்” என்பதற்குப் போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.
“கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர்
, இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார்.
ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே, அப்ராகிருத
விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ-ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து.
“அடியேனொடும்” என்ற உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும் சேர்ந்தான் என்றபடி. “கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.

——————————————————————————-

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-

அசாதாராண விக்ரக விசிஷ்டன் -சர்வ அவதாரங்களை அனுபவிப்பித்து -என்னுடன் கலந்தான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் -மத்ச்யமுமாய் -கூர்மமுமாய் -வனவாரகமுமாய்
கார்வண்ணனே.வள்ளல் -கருமை நிறம் ஔதார்யம் இரண்டிலும் -இன்னம் -பிரசவிக்க பிரசவிக்க ஒளி விஞ்சி –
காள மேகம் -பவிஷ்யத் -கற்கியாம் –
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து-இப்படி சொன்னதே கொண்டு உகந்து வந்தானே
வாய் வார்த்தையாக -சொன்னதை -உக்தியையே பற்றாசாகக் கொண்டு
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
அபேஷா நிரபேஷமாக-நிரதிசய போக்யதையை -சர்வ அவதார விசிஷ்டையையாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்தான்
அவ்வவதார வை லஷண்யத்தை அனுபவிப்பித்தான்

மீனாகியும் ஆமையுமாகியும் நரசிங்கமுமாகியும் குட்டையனாகியும் காட்டில் வசிக்கும் பன்றியுமாகியும் இன்னம் கற்கியும் ஆகின்ற
கார்வண்ணன், என்னை அடிமைகொண்டவன் ஆனான் என்றேன்; என்ற அந்த வார்த்தையை மட்டும் கொண்டு மகிழ்ந்து வந்து
தானாகவே இனிய திருவருளைச்செய்து எனக்கு எல்லா உறவு முறையும் தானே ஆனான் என்கிறார்.
‘என்ற அஃதே’ என்பது, ‘என்றவஃதே’ என்று வால் வேண்டும், ‘என்றஃதே’ என வந்தது, தொகுத்தல் விகாரம்.
வந்து செய்து முற்றவும் ஆனான் என்க. என்னை: வேற்றுமை மயக்கம். எனக்கு என்பது பொருள்.
மீன் – மச்சம், ஆமை – கூர்மம். குறள் – வாமனம். ஏனம் – வராகம். கற்கி – கற்கி அவதாரம்; கற்கி – குதிரை.

சர்வேசுவரன் தன் கிருபையாலே ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த
மஹோபகாரத்தை நினைத்த க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.

ஆளுடையான் ஆனான்-
என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒருவார்த்தை சொன்னேன்.
என்ற அஃதே கொண்டு-
என்று கூறிய இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு.
நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான், -இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்
உகந்து –
பலத்தை அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, சந்தோஷமும் தன்னதே ஆயிற்று.-பல போக்தாவும் அவனே -நாம் போக்யம் என்ற உணர்வே வேணும்
அதமன் -நாம் போக்தா விஷயாந்தரங்கள் போக்யம் – என்ற நினைவு
மத்யமன் -நாம் போக்தா -அவன் போக்கியம் – என்ற நினைவு
உத்தமன் -நாம் போக்யம் அவன் போக்தா -என்ற நினைவு
வந்து-
வருதலும் மாறாடிற்று. -சந்தோஷம் மாறாடினாற் போலே,
தானே இன் அருள்செய்து-
நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன்பேறாகத் திருவருளைச் செய்து.
என்னை முற்றவும் தானானான்-
உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல்.
அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல்.
“ஆக முற்றும் அகத்து அடக்கி”–திருவாய்மொழி. 4. 3 : 3.- என்றாரே அன்றோ முன்னரும்.
“என்னை முற்றவும் தானானான்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருள், என்னை-என்னோடு, முற்றவும் – உள்ளும்புறம்புமான எல்லாவிடத்திலும், தான் ஆனான் – தான் என்னோடு கலந்தான் என்பது.
இரண்டாவது, என்னை – எனக்கு, முற்றவும் – எல்லாவிதமான இனிய பொருள்களும் தானானான் என்பது.
மூன்றாவது, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களுமாகக் கொண்டான் என்பது.

மீனாய் –
உலகில் உள்ள சாதிகட்கு எல்லாம் வேறுபட்டவனான தான், ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டுத் தண்ணீரில் சஞ்சரிக்கின்ற சாதியன் ஆனான்.
ஆமையும் ஆய் –
எல்லாவற்றையும் தாங்கும் பொருட்டுக் கூர்மத்தின் வடிவையுடையவன் ஆனான்.
நரசிங்கமும் ஆய் –
உடனே விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான்.
குறள் ஆய் –
கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான்.
கான் ஆர் ஏனமும் ஆய் –
பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
“ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய
இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே, காடு அடங்க மயிற்கழுத்துச் சாயல் ஆக்கும்படியான
வடிவையுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார். –காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.கோலம் -அழகு பன்றி இரண்டு பொருள் –
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.

இன்னம் கற்கி ஆம் –
மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?” என்று
கொண்ட குதை–எடுத்துக் கொண்ட உத்யோகம் – மாறுகின் றிலன் என்றபடி. நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன்
என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும். நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.
கார் வண்ணனே-
நீர் கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.
எப்போதும் மழை பெய்யக் காத்து இருக்கும் மேகம் -என்றவாறு –
வண்ணம் – ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.

சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்த உக்ர பாழித் திகிரிப்படை அரங்கேசர் படைப்பவன் தன்
ஊழிப் பொழுதொரு சேலாய் ஒருசெலுவுட் கரந்த ஆழிப் பெரும்புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே.–என்றார் திவ்ய கவியும்.

அருமறையார் இருக்கெசுர் சாமத்தினோடும் அதர்வணமாகிய சதுர்வேதங்கள் தம்மைத்
திருடி எடுத்துக்கொண்டே உததி சேரும் தீயனுக்கா மச்சாவதாரமாய் நீ
ஒரு செலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே வைத்து உக்கிரத்தாற் சோமுகாசுரனைக் கொன்றிட்டு
இருளறவே விதி படைக்க அவ்வேதத்தை இரங்கி அளித்தனை அரியே! எம்பி ரானே!–என்றார் பிறரும்.

திரிக்கின்ற பொற்குன்றழுந்தாமல் ஆமைத் திருவுருவாய்ப் பரிக்கின்றதிற் பெரும் பாரமுண்டே பண்டு நான்மறைநூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தந்திரு மேனியின்மேல் தரிக்கின்றது மகரக் கடலாடைத் தராதலமே.– திருவரங்கத்துமாலை. 24.

“தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இரு நிலம் உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்”– பரிபாடல்

———————————————————————–

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

ஆவீர் பூத ஸ்வரூப சேஷத்வ பாரதந்த்ர்ய -குணா -சம்பத் விசிஷ்டராய்க் கொண்டு கிருஷ்ணன் திருவடிகளைப் பிராபிப்பார்கள்
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை-உபகாரகன் -அவதரித்து -போக்யம்-
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-ஏர்களின் வளம் மிகுதி
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்-சீரும் சந்தமும் -பா இனம் -அர்த்த பிரகாசகம் –
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.-ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று –
ஸ்ரத்தையால் சொல்லுவார்களுக்கு பலன் -தெளிந்த மனத்துடன் -அமிருத பானம் பண்ணுவாரைப் போலே –

மேகம் போன்ற நிறத்தையுடையவனும், தாமரை போன்ற விசாலமான திருக்கண்களையுடையவனுமான கண்ணபிரானை,
ஏர்களையுடைய வளம்பொருந்திய அழகியனவான வயல்களால் சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச்செய்யப்பட்ட சீர்களோடும் வண்ணங்களோடும் கூடின தமிழ்ப்பாசுரங்கள் இவை ஆயிரத்துள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும்
அமிருதபானம் பண்ணுவாரைப் போன்று விருப்பத்துடன் சொல்லுகின்றவர்கள், பொலிந்து இறைவன் திருவடிகளை அடைவார்கள் என்றவாறு.
கமலத் தடங் கண்ணனாகிய கண்ணபிரான் என்க. கண்ணபிரானைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தமிழ்கள் என்க.
தமிழ்கள்-தமிழ்ப் பாசுரங்கள். இப்பத்தையும் உரைப்பார் பொலிந்து அடிக் கீழ்ப் புகுவார் என்க. அடிக் கீழ்-திருவடிகளிலே. கீ்ழ்: ஏழாம் வேற்றுமை உருபு.
ஆர் வண்ணம்-பருகுகிற வண்ணம். ஆர்தல் – பருகுதல்; அல்லது, புசித்தல். வண்ணம்-வகை. “பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி” என்றார் நன்னூலார்.

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், தனக்குமேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.

கார்வண்ணன் –
காளமேகம் போலே சிரமஹரமான வடிவையுடையவன்.
கண்ணபிரான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வடிவை என்னை அநுபவிப்பித்தவன்.
கமலத்தடங்கண்ணன் தன்னை –
மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருக்கண்களையுடையவன்.
அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. -திரு மேனி முழுவதும் திருக்கண் வியாபிக்க -பட்டர் –
மேலே “நிறமுடை நால் தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.
ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சினபோது, சிரமஹரமான வடிவைக் காட்டித் தன்னை
முழுக்கக் கொடுத்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.
ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-
நிறைந்த ஏர்களையுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி.
‘வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது.
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் –
சீரியதான பிரகாரத்தையுடைய அழகிய தமிழ் என்னுதல்;
கவிக்கு உறுப்பான சீரையும் வண்ணத்தையுமுடைய அழகிய தமிழ் என்னுதல்.
‘சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை.
ஆர் வண்ணத்தால்-
நிறைவாக என்னுதல். ஆர்தல்-பருகுதலாய்,
“தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது, மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
பொலிந்தே அடிக்கீழ்ப் புகுவார் –
நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே
ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப்பெறுவர்.

—————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதே முநிச்ய
ஸ்ரேயஸ் ஹித போதன ச்வயீத மீஷமான
ஏதத் விரோதி பஹூளச்ய-மம -அத்ர ஹேது
சௌரே கிருபை ஏவ மகாதீதி சமஸ்ய பூயக
முநிச்ய பஞ்சமச்ய ஆதியில்
நிருஹேதுக கிருபா -கிருபா பரவச்த்வம் –
பேர் அருளின் தன்மை -மகா காருண்யம் –

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

காரி ஸூ னு
ஸூவ ஜன வசதயா
ரஷணம் உத்ய பாவாத்
பவ்யத்வாத் -அவதரித்து அனுஷ்டிக்கை
ச்வாத்மதானாத்
அமல தனுதயாத்
ஸ்ரீ கஜேந்திர அவநாச்ச
நாநா பந்துத்வ யோகாத்வாத்
விபதி சஹிதயாத் -நாவாய் போல்
வ்யாஜமாத்ராத் ரஷித்து
கிருபா பரவசராய்

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 41-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து —————41-

———————————————————————————-

அவதாரிகை –

இதில்
சம்சாரிகளையும் திருத்தும் படியாக சர்வேஸ்வரன் பண்ணின
நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே வித்தராகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வ பிராப்தி சாதனங்களில் இறங்காமல்
துர் விஷயங்களிலே மண்டி
இவ் வனர்த்தத்தை உணரவும் அறியாதே
அத்யந்தம் உபேஷ்யனாய்-சம்சாரிகளில் அந்ய தமனான வென்னை
இவை ஒன்றுமே பாராமல் நிர்ஹேதுகமாக
அங்கீகரித்து
தன் திருவடிகளிலே சேஷத்வத்தையும் அறிவித்து
கைங்கர்யத்தால் அல்லாது செல்லாதபடி பண்ணி
பிறரையும் திருத்தும்படியான சதிரையும் உண்டாக்கி
என் பக்கல் வ்யாமுக்தனாய்
என்னோடு வந்து கலந்தான் என்று ப்ரீதர் ஆகிற
கையார் சக்கரத்து -அர்த்தத்தை
கையாரும் சக்கரத்தோன் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

——————————————————————————————

வியாக்யானம்–

கையாரும் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்று தொடங்கி
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்னும் அளவும்
கடாஷித்து
அருளிச் செய்தபடி –

கையாரும் -சக்கரத்தோன் –
திருக்கை நிறையும்படி
திரு ஆழியை தரித்தது
அதுவே நிரூபகம் ஆனவன் –

காதல் இன்றிக்கே இருக்க –
ஸ்வ விஷய பக்தி இன்றிக்கே
இருக்க –

கையாரும் -சக்கரத்தோன் -காதல் இன்றிக்கே இருக்க –பொய்யாகப் பேசும் புறனுரைக்கு –
சக்கரத்து உன்னையே அவி இன்றி ஆதரிக்கும் என் ஆவியே -என்னும்படி
தத் விஷயத்தில் ப்ரேமம் உண்டாக வேண்டி இருக்க

இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான
அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து
அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –

பொய்யாகப் பேசும் புறன் உரையாவது –
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி -என்றும்
என்று என்றே சில கூத்துச் சொல்ல -என்றும்
புறமே சில மாயம் சொல்லி -என்றும்
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -என்றும்
இப்புடைகளிலே சொன்னவை –

ஏவம் விதமான
மித்ரபாவ
மாத்ர ஜல்பிதங்களுக்கு
மெய்யான பேற்றை யுபகரித்த-
யதா ஞானம் உடையார் பேறும்
சத்யமான பேற்றை
உபகரித்த –
அதாவது –
மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்றும்
என்னாகி ஒழிந்தான் -என்றும்
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்றும்
எம்பிரானும் என் மேலானே -என்றும்
மாலார் வந்து இன்னாள் அடியேன் மனத்தே மன்னினார் -என்றும்
அடியோனோடும் ஆனானே -என்றும்
ஆனான் ஆளுடையான் என்னை முற்றவும் தானான் -என்றும்
பேசும்படியான இப் பேற்றை என்றபடி –

இத்தை யுபகரிக்கை அடி என் என்னில்
பேர் அருள் -என்கிறது
அதாவது –
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்றும்
எம்மா பாவியேற்கும் விதி வாய்கின்று வாய்க்கும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
தானே இன்னருள் செய்து -என்றும்
அருளிச் செய்தவை-என்கை –

பேர் அருளின் தன்மைதனை -போற்றினனே மாறன் பொலிந்து-
அதாவது
இரும்பைப் பொன் ஆக்குவது போலே
நித்ய சம்சாரிகளுக்கும்
நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஆழ்வார் -என்கை
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: