பகவத் விஷயம் காலஷேபம்- 105- திருவாய்மொழி – -4-10-6….4-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

கர்மாதீனமாக -நிர்வகிக்கிறான் -இவ்வர்த்தம் உங்களுக்கு பிரகாசிக்காது ஒழிகிறது கர்ம அநு ரூபமாக அவன்
சம்சாரம் நிர்வகிக்கும் சாமர்த்தியம் -என்கிறார் –பாப பிராசுர்யத்தாலே உபதேசங்கள் ஏற மறுக்கிறது
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே-வேறு ஒரு தேவதை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும் படி தனக்கு புறத்தே இட்டு வைத்து
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;-இப்படி உங்களுக்கு இவர்கள் பக்கல் விஸ்வாசம் இருக்கும் படி வைத்தது
எல்லாரும் -பகவத் பிராப்தி ரூப மோஷம் பெற்றால் கர்ம அனுகுணமாக பலம் அனுபவிக்கும் லோக மரியாதை குலையும் –
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்-சேற்று நிலத்தில் செந்நெலும் கமழும் வளர
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே-இது அதிசயித விவித சக்தி உக்தன் -கட்டத்துக்குள் வைத்து -கர்ம பலம் அனுபவிக்க -வைத்தவன்
மாயா -பிரகிருதி கூண்டு -லீலா உபகரணம் -அநந்த கிலேச பாஜனம் -அவன் திருவடி பற்றியே விலக்க முடியும்
தந் நிஸ்தரன -பிரபத்தி செய்து உஜ்ஜீவிமின் –

வேறு ஒரு தெய்வத்தைத் துதித்து ஆதரிக்கும் படியாகத் தனக்குப் புறம் ஆக்கி உங்களை இவ்வகையாகத் தெளியும் படியாகச் செய்து
வைத்தது. எல்லோரும் மோக்ஷத்தை அடைந்தால் சாஸ்திர மரியாதை கெட்டுவிடும் என்றே ஆம்; சேற்றிலே செந்நெற் பயிர்களும்
தாமரைகளும் உயர்ந்து வளர்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மிக்க ஆற்றலோடு கூடிய
எம்பெருமானது மாயமாகும் இது; அதனை அறிந்து அறிந்து தப்பிப் பிழைப்பதற்குப் பாருங்கோள்.
‘மற்றோர் தெய்வம் போற்றிப் பேண’ எனக் கூட்டுக. உலகு – சாஸ்திரம். ஆற்ற வல்லவன் – இறைவன். கண்டீர் – முன்னிலை அசைச்சொல்.

‘பகவானுடைய பரத்துவத்தை நீர் அருளிச்செய்யக் கேட்ட போது வெளிச்சிறத்து அல்லாத போது வேறு தெய்வங்களிடத்தில் ஈடுபாடு
உண்டாகா நின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘உங்கள் பாபம்’ என்கிறார்.
‘எம்பெருமானே சர்வேசுவரனாகில் எங்களை வேறு தெய்வங்களிடத்திலே ஈடுபாடுடையவர்களாக்கி வைப்பான் என்?’ என்ன,
‘உங்களை இங்ஙனே வைத்தது, ‘புண்ணிய பாவங்களைச் செய்த ஆத்துமாக்கள் அவ்வவற்றிற்குத் தகுதியான பலன்களை
அனுபவிக்க வேண்டும்,’ என்று கூறுகின்ற சாஸ்திர மரியாதை அழியும் என்று;
ஆன பின்னர், அதனை யறிந்து எம்பெருமானையே இறுகப் பற்றி அவன் வஞ்சனத்தைத் தப்புங்கோள்,’ என்கிறார்.

போற்றி –
நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்;
உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை.
மற்றோர் தெய்வம் –
‘அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தியுடையவர்களாய்க்கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ,
அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே.
பேண –
‘அவை தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல் அவர்களை
அடைகின்ற உங்களுக்கே பாரம்’ என்பார், ‘பேண’ என்கிறார்.
புறத்திட்டு –
ஈசுவரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து.
உம்மை இன்னே தேற்றி வைத்தது –
உங்களை இப்படியே தெளியும்படி செய்து வைத்தது. என்றது, ‘ஓர் இடத்தில் நின்றும் அஞ்சுகிறான் இல்லை,’ என்கிறபடியே,
நான் மேல் வரும் கேட்டிற்கு அஞ்சாதே பாரம் அற்றவனாய் இருக்கின்றாற் போலே,
ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே ருசி விசுவாசங்கள் உண்டாம்படி
செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’ என்றபடி.

எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே –
எல்லீரும் இருந்ததே குடியாக மோக்ஷத்தைப் பெற்றால், லீலைக்கு அடியான சாஸ்திரம் பயன் அற்றதாய்விடும். என்றது,
‘புண்ணியங்களைச் செய்வாரும் பாவங்களைச் செய்வாருமாய் அன்றோ நாடு தான் இருப்பது?
பாவம் செய்தவர்களும் புண்ணியம் செய்தவர்களுடைய பலத்தை அனுபவிக்குமன்று,
‘புண்ணியத்தினாலே புண்ணியனாகவும் பாவத்தாலே பாவியாகவும் ஆகின்றான்’ என்கிற சாஸ்திர மரியாதை குலையும்,’ என்றபடி.
ஆக, பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும் ஆகிற
சாஸ்திர மரியாதை குலையாதபடியாகச் செய்து வைத்தான் என்றவாறு.
‘ஆதலால், உலகத்திலும் ( சாஸ்திரங்களிலும் ) வேதங்களிலும் புருஷோத்தமன் என்று பிரசித்தனாய் இருக்கிறேன்’ என்றவிடத்தில்
‘லோக’ சப்தத்தால், பிரமாணத்தைச் சொல்லிற்று என்று கொண்டதைப் போன்று, இங்கும் ‘உலகம்’ என்ற சொல் சாஸ்திரத்தைச் சொல்லுகிறது.

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு –
அவ்வூரில் உள்ள பொருள்கள் முழுதும் ஒன்றற்கு ஒன்று இசலி வளரா நிற்கும்.
இதனால், ‘உரம் பெற்ற மலர்க்கமலம்’ என்பது போன்று, அவ்வூரிலே உள்ள பொருள்களில் ஒன்றில்
ஒன்று குறைந்திருப்பது இல்லையாயிற்று என்பதனைத் தெரிவித்தபடி.
ஆற்ற வல்லவன் –
மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும்,
பாவம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ என்றபடி.
மாயம் கண்டீர் –
‘என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டக்கூடாதது,’ என்கிறபடியே, தான் அகற்ற நினைத்தாரைத்
தன் பக்கல் வந்து கிட்டாதபடி பிரகிருதியை இட்டு வஞ்சித்து வைத்தபடி கண்டீர்கோள்.

அது அறிந்து –
‘இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து.
அறிந்து ஓடுமின் –
‘சத்திய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,
அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான
பிரபத்தியையும் தானே அருளிச்செய்து வைத்தான்; அதனை அறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றி,
இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது, ‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில்,
அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’ என்றபடி.

———————————————————————————–

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

இதற்கு முன்பு ஆஸ்ரயித்து பெற்ற பலம் பிறவி சுழல் -பரத்வ சின்னமான கருடக் கொடி உடையானுக்கு கைங்கர்யம் செய்மின்
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்-பலவகையாக பிறக்கக் கண்டீர் –
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;-எங்கேயோ சுத்தி -இப்படி இருக்க வேண்டுமோ –
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்-தேவதைகளும் தம் ஆபத்து போக்க ஆஸ்ரயிக்கும் இந்த சர்வேஸ்வரனை
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே-பகவத் கைங்கர்ய ப்ரீதியால் ஆடும் பெரிய திருவடி
கைங்கர்யம் பண்ண வர வேண்டும் -கருக் குழியில் புகா வண்ணன் காத்து அருள்வான்

‘வேறு ஒரு தெய்வத்தைப் பாடியும் ஆடியும் வணங்கியும் பலப்பல வகைகளாலே சாஸ்திரங்கள் கூறிய வழிகளிலே சென்று திரிந்து திரிந்து,
பல பிறப்பும் பிறந்து, அதன் பலன்களைக் கண்டீர்கள்; ஆன பின்பு, தேவர்கள் ஒருங்கு கூடித் துதிக்கும்படியாகத் திருக்குருகூர் என்னும்
திவ்விய தேசத்திலே நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற ஆடு புட்கொடியையுடைய ஆதிமூர்த்திக்கு அடிமை புகுங்கோள்,’ என்கிறார்.
‘மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து வழி ஏறி ஓடி ஓடிப் பிறந்து கண்டீர்’ என்க. ‘வானவர் கூடி ஏத்தத் திருக்குருகூரதனுள் நின்ற ஆதிமூர்த்தி’ என்க.
ஆடு புள் – வெற்றி பொருந்திய கருடப்பறவை. ஆதிமூர்த்தி – உலகிற்குக் காரணனான மூர்த்தி. மூர்த்தி – திருமேனியையுடையவன்.
புகுவது – வியங்கோள் வினைமுற்று. ‘கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுகளே’ (திருக்கோவையார், 87.) என்புழிப்போன்று கொள்க.

‘அது செய்கிறோம்; ‘மற்றைத் தேவர்கட்கும் உயர்வுகள் சில உண்டு,’ என்று நெடுநாள் அவர்கட்குப் பச்சை இட்டுப் போந்தோம்;
அப் பச்சையின் பயன் அற்றுப் போகாமல் இன்னம் சிலநாள் அவை பலிக்கும்படி கண்டு பின்பு பகவானை அடைகிறோம்,’ என்ன,
‘அவையும் எல்லாம் செய்து கண்டீர்கோள் அன்றோ?’ இனி அமையும் காணுங்கோள்,’ என்கிறார்.

ஓடிஓடி –
சுவர்க்கம் முதலான உலகங்களில் விருப்பம் உள்ளவர்கள், போவதையும் வருவதையும் அடைகிறார்கள்,’ என்கிறபடியே,
போவது, பிறவிகளோடே வருவதாய்த் திரிந்தது இத்தனை அன்றோ?
பல பிறப்பும் பிறந்து –
ஆத்துமா என்றும் உள்ளவன்; அசித்தும் அப்படியே; அசித்தினுடைய சேர்க்கையும் என்றும் உள்ளதாய், கர்மப் பிரவாஹத்தாலே பரம்பரையாய்
வருகிற பிறவிகளும் உருவப்போருகிறது; நீங்கள் முன்னும் பின்னும் அறியாமலே அன்றோ ‘இது ஒரு பிறவியே உண்டாயிற்று,’ என்று இருக்கிறது?
மற்றும் ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து –
வேறு ஒரு தெய்வத்தை அடைந்து பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்ச் சொல்லி, அவ்வளவில் முடிவு பெறாமல் வேறுபட்டவராய்,
‘என்னை நமஸ்காரம் செய்’ என்கிறபடியே, பகவத் விஷயத்தில் உட்புகுமளவும் உட்புகுந்து. என்றது,
‘இப்படி அநாதியாகத் தொடர்ந்து போதருகிற பிறவிகளிலே ஒரு பிறவி ஒழியாமல் மற்றைத் தேவர்களை அடைக்கலமாக அடைந்து போந்தீர்கள்;
அது செய்கிறவிடத்தில் முக்கரணங்களாலும் செய்தீர்கள்; ஆதலால், பற்றுகிற தன்மையில் குறையால் பலியாது இருந்தது அன்று; அதில் குறை இல்லை,’ என்றபடி. பல்படிகால் –
ஒருவகையாகப் பற்றி விட்டீர்களோ? பல வகைகளால் பற்றினீர்கள்.
வழி ஏறிக் கண்டீர் –
அவ்வத் தேவர்களைப் பற்றும்படி சொன்ன சாஸ்திரமரியாதை தப்பாமல் பற்றி அதன் பலமும் கண்டீர்கோள் அன்றோ
‘நன்று; ‘பல் படி கால் வழி ஏறிக் கண்டீர்’ என்கைக்கு, ‘இவர்கள் ஒரு பிறவியிலும் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்’ என்று
இவர் அறிந்தபடி எங்ஙனே?’ என்னில், இப்போது தாம் இந்தப் பொருளை உபதேசிக்க வேண்டும்படி இவர்கள் இருக்கக் காண்கையாலே,
‘இதற்கு முன்னர் இவர்கள் பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திலர்கள்,’ என்று அறியத் தட்டு இல்லையே அன்றோ?
‘சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தை விரும்பக்கடவன்; அக்கினியிடமிருந்து செல்வத்தை விரும்பக்கடவன்;
சிவனிடமிருந்து ஞானத்தை விரும்பக்கடவன்’ என்கிறபடியே, பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்திருப்பார்களே யானால் முத்தர்கள் ஆவார்களோ?
மற்றைத் தேவர்களைப் பற்றிய காரணத்தினாலேயே இவ்வளவும் வர இறந்தும் பிறந்தும் போந்தார்கள்;
‘பிரமனையும் சிவனையும் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்களையும் மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் சேவிக்கமாட்டார்கள்; ‘என்னை?’ எனின்,
‘அந்தத் தேவர்களிடமிருந்து கிடைக்கும் பலம் மிகச் சிறியது,’ என்கிறபடியே ‘மோக்ஷபலம் சித்திக்க வேணும்’ என்று இருக்கிறவர்கள்,
புன்சிறு தெய்வங்களைப் பின் செல்லார்களே அன்றோ? அதற்குக் காரணம், அவர்களால் கொடுக்கப்படுமவை அழியக்கூடிய பலன்களாகையாலே.
‘முருகன் சிவன் இந்திரன் முதலான தேவர்கள் ஆராதிக்கும் விஷயத்தில் விலக்கப்பட்டிருக்கிறார்கள்,’ என்றதே அன்றோ சாஸ்திரமும்?

ஒருவன் பகவானைத் தியானம் செய்துகொண்டிருக்கச்செய்தே, ‘இவன் சமாதியிலே நின்ற நிலையை அறியவேண்டும்’ என்று
பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்திலே ஏறி வந்து முன்னே நின்று,
‘உனக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் யார்?’ என்றான்;
‘சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானே, கொண்டு வந்த வேடம் இதுவாகையாலே?’
வந்தவனைப் பார்த்து, ‘நீ யாவன் ஒருவனை அடைந்து இந்தச் செல்வம் முழுதும் பெற்றாய்? அப்படிப்பட்டவனைக் காண் நான் பற்றுகிறது;
இப்படி வழியிலே போவார்க்கு எல்லாம் பச்சையிட்டுத் திரியுமவன் அல்லேன்காண்;
இப்போது முகங்காட்டாதே போக வல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றானே அன்றோ?
பகவானிடத்தில் அடைக்கலம் புகுந்து ஞானாதிகராய் இருப்பார் ஒருவர், இருந்து தம்முடைய வஸ்திரத்தைப் புரையா நின்றாராய்,
அவ்வளவிலே தேவியும் தேவனுமாகப் போகாநிற்க, இவர் அநாதரித்திருந்தாராய், தேவியானவள்,
‘நீர் எல்லார்க்கும் பெரியராய் இருக்க, உம்மைக் கண்ட இடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக்கொண்டிருந்தானே!’ என்ன
, தேவனும், ‘அவன் பகவத் பத்தன் போலேகாண்,’ என்ன, தேவியும், ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன,
இருவரும் இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும்
வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாய் இருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல்,
சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே?’ என்ன,
‘அழகிது! அவையெல்லாம் செய்யக்கடவன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன ‘அது நம்மாலே செய்யலாமதன்று;
பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெற வேண்டும்,’ என்ன,
‘ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது?
நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி
திருவருள் புரிந்து நடக்குமித்தனை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற் கண்ணைக்காட்ட,
இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்,’ என்ற சரிதம் இங்கு நினைக்கத் தகும்.

கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள் –
உங்களால் அடையப்படுகின்ற தேவர்கள் இவ்வளவும் உங்களைக் கும்பீடு கொண்டு, இத்தனை போது சென்று அங்கே
வணங்காநிற்பர்கள்; அவர்கள் செய்கின்றவற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை வணங்கப் பாருங்கோள்
தலையறுப்பாரும் தலையறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப் போகட வேண்டும்படியான
விரோதம் செல்லாநிற்கச் செய்தேயும், ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தாநிற்பர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச்செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

ஆடு புட்கொடி மூர்த்தி –
‘வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன்
செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார்.
ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு – வெற்றி. புள் – பறவை.
அன்றிக்கே, ‘சர்வேசுவரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடாநின்ற புள்’ என்றுமாம்.
‘கருடக் கொடியன், கருடவாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான்.
ஆதி மூர்த்திக்கு –
‘காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே, உலக காரண வஸ்துவேயன்றோ உபாசிக்கத் தக்கதாவது?
ஆக, ‘மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய் எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேசுவரனுக்கு’ என்றபடி.

அடிமை புகுவதுவே –
அடிமை புகுவதுவே செய்யத் தக்க காரியம். ‘உங்களுக்குச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை;
அவன் உடைமையை அவனுக்காக இசைய அமையும்’ என்பார், ‘புகுவதுவே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.
‘அவன் இதனை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராமல், ‘அவனது’ என்று இசைய அமையும்,’ என்றபடி.
‘‘அடிமை புகுவது’ என்ற இடம், விதியாய், ‘கண்டீர்’ என்கிற இடம், அதுவும் செய்து பார்த்தீர்கோள் அன்றோ?
இனி, அவன் திருவடிகளில் அடிமை புகப் பாருங்கோள்,’ என்கிறார்.

யயாதி சரிதத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச்செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்,
‘வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாய் வெளிப்போந்த பிரபந்தங்களில் இது எந்தப் பொருளை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க,
‘புன்சிறு தெய்வங்களை அடைந்து ஒரு பயனைப் பெற்றாலும், பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால், அதனை அவர்கள் பொறுக்கமாட்டார்கள்’ என்றும்,
‘சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்’ என்றும் சொல்லி, -அனைவரும் அவன் அங்கமாக இருப்பதால் –
‘ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் வணங்கத் தக்கவர் அல்லர்; அவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன் என்னும் பொருளைச் சொல்லுகிறது,’ என்று அருளிச்செய்தார்.
முனி புங்கவரே! இதற்கு முன் ஏவிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தவர்களாய் வந்து உம்மைச் சார்ந்திருக்கிறோம்,’ என்கிறபடியே,
பெருமாளும் இளைய பெருமாளும் விஸ்வாமித்ரர் இடம் – தாழ நிற்க வல்லான் இவனேயன்றோ?

‘யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே,
‘கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடுவந்து கொடுத்துச் செய்யாதன இல்லை;
பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம்
அங்ஙனே ஆகிறதோ?’ என்று அஞ்சியிருந்தோம்,’ என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்ச வேண்டா;
அவர்கள் ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர சம்பந்தத்தைக் கொண்டு விரும்புகையாலே
அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டது; நாம் சொரூப ஞானத்தாலே, என்றும் உள்ள ஆத்துமாவுக்கு வகுத்த பேறு
பெற வேண்டும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.

—————————————————————————-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

பல ப்ரதன் ருத்ரன் -இவன் கிருபையால் –
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை-சேஷ வ்ருத்தி முகத்தால் புக்கு -புராண பிரசித்தன்
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;நக்னன் திகம்பரன் -பிரளய தசையில் பிழைப்பித்து
-நாராயணன் அந்தராத்மாவாக இருந்து செய்து அருளே
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்-கொக்கின் நிறம் போல அலறும் பூக்கள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–சர்வாதிகன் -நிரபேஷ காரண பூதன் -சா பேஷமான எந்த தெய்வம் ஆஸ்ரயிக்கப் பார்க்கிறீர்

‘அடிமையாய்ப் புகுந்து சிவபிரானாகிய தன்னைக் கண்ட மார்க்கண்டேயனைச் சிவபிரானும் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றியது
நாராயணனுடைய திருவருளாலேயாம்; கொக்கைப் போன்று வெண்மை நிறத்தோடு மலர்கின்ற பெரிய தாழைகளை வேலியாகவுடைய
திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்திலே மேன்மையையுடைய ஆதிப்பிரான் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்க,
வேறு தெய்வங்களைப் பற்றிப் பேசுகின்றீர்களே! உங்கள் அறிவின்மை இருந்தவாறு என்னே!’ என்கிறார்.
‘அடிமையினால் புக்குத் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன்’ என்க. ‘தன்னை’ என்றது, சிவபெருமானை.
நக்கன் – வஸ்திரமில்லாதவன்; சிவபிரான். ‘திகம்பரன்’ என்றபடி. அருளே – ‘அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமை விரிக்கவும்.
கொக்கு – ஒரு பறவை, மாமரமும் ஆம்.

‘இங்ஙனே இருக்கச்செய்தேயும், மற்றைத்தேவனாகிய சிவபிரானை வணங்கி அன்றோ மார்க்கண்டேயன் தான் விரும்பிய
பயனைப் பெற்றது?’ என்ன, ‘ஆகில், இருந்தபடி கேட்கலாதோ?’ என்கிறார்.

புக்கு அடிமையினால் –
அடிமையினால் புக்கு; என்றது, ‘சர்வேசுவரனுக்கு அடிமை என்று புக்கான் அல்லன்;
‘உருத்திரனுக்கு அடிமை’ என்று புக்கான்,’ என்றபடி.
தன்னைக் கண்ட –
காணப் பெறாமையாலே தான் இழந்தான் அல்லன்.
ஆக, ‘போற்றி வணங்கிய தன்மையில் குறையினாலே இழந்தான் அல்லன்; காணப் பெறாமையாலே இழந்தான் அல்லன்,’ என்றபடி.
மார்க்கண்டேயன் அவனை –
மார்க்கண்டேயனானவனை.
நக்கபிரான் –
நக்கன் – நக்நன். ‘பிரான்’ என்கிறார், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனாய் இருக்கையாலே.
அன்றிக்கே, ஞானத்தினைக் கொடுக்கக் கூடியவன் ஆதலாலே ‘பிரான்’ என்கிறார் என்னுதல்.
ஆரோக்கியம் பாஸ்கரன் -செல்வம் அக்னி –ஞானம் ருத்ரன் மோஷம் ஜனார்த்தனன் -பிரசித்தம் அன்றோ –
மேல், ‘நாராயணன்’ என்கையாலே, ‘அவனுக்கு அடிமையாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று
ஞானோபதேசத்தைச் செய்து அவன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தான் என்கை.

அன்று உய்யக்கொண்டது –
ஆபத்துக் காலத்திலே பாதுகாத்தது.
நாராயணன் அருளே –
நாராயணனுடைய திருவருளாலேயாம். என்றது,
‘நீ நெடுநாள் பச்சையிட்டு என்னை வணங்கினாய்; அவ் வணக்கம் பயன் அற்றுப் போயிற்றதாக ஒண்ணாது,’ என்று அவனை அழைத்து,
‘நானும் உன்னைப் போன்று ஒருவனை ஆஸ்ரயித்துக்காண் இப்பதம் பெற்றது;
ஆதலால், இனி உன்னுடைய விருப்பத்தை நம்மால் செய்து முடிக்க இயலாது; இனி ஊண் கொடுத்தல் உபதேசங் கொடுத்தலே அன்றோ?’ என்று
அவனைக் கொண்டுபோய்ச் சர்வேசுவரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தமையைத் தெரிவித்தபடி.
‘அருள்’ என்ற பெயர்ச்சொல் எல்லா வேற்றுமையோடும் சேரத் தக்கதாகையாலே, ‘அருளாலே’ என்று மூன்றாம் வேற்றுமையாக விரித்துக் கொள்க.
அன்றிக்கே, ‘சிவபிரான் இவனைக் காப்பாற்றிக்கொண்டது சர்வேசுவரன் திருவருளைப் பண்ணிக் கொடுத்து’ என்று
இரண்டாம் வேற்றுமையாக விரித்துப் பொருள் கோடலுமாம். ‘இவன் புருஷகாரமாய் நின்று திருவருள் புரியச் செய்தான்,’ என்றபடி.

கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூரதனுள் –
கொக்குப் போன்று வெளுத்த நிறத்தையுடைய மலர்களை உடைத்தாயிருப்பதாய்ப் பெருத்திருந்துள்ள தாழைகளை
வேலியாக உடைத்தாயிருக்கின்ற திருநகரியாயிற்று; இதனால், நிலத்தியல்பு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
மிக்க ஆதிப்பிரான் நிற்க –
அறப்பெரிய உலகத்திற்கெல்லாம் காரணமாயுள்ளவன் நிற்க; ‘மிக்க’ என்றதனால், சொல்லும் போது கனக்கச் சொல்லி,
கிட்டினவாறே குறைந்திராதொழிகையைத் தெரிவிக்கிறார். ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
நெடுநாள் தன்னை வணங்கும்படி செய்துகொண்டு பின்பு காரிய காலத்தில் வந்தவாறே வேறே ஒருவன்
வாசல் ஏறக் கொண்டுபோக வேண்டாதிருக்கையைத் தெரிவித்தபடி.
மற்றைத் தெய்வம் விளம்புதிரே –
‘சரீரங்களிலே ஒன்றை ஈசுவரனாகச் சொல்லுகின்றீர்கோளே!’ என்றது, ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஒன்றற்கும்
பொருளாகுந் தன்மை இன்றிக்கே யிருக்க, சரீரியாகச் சொல்லிக் கேட்டினை அடைகின்றீர்கோளே கெடுவிகாள்!’ என்கிறார் என்றபடி.
‘விளம்புதிரே’ என்ற ஏகாரத்தால், ‘எடுத்துப் பேசுவதற்கும் தகுதி இல்லை’ என்று இருக்கிறார் காணும் இவர்.

————————————————————————–

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

இதரர்களால் துர் அவபோதன் -வர்த்திக்கும் திரு நகரியை உஜ்ஜீவிக்க பற்றுமின்
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்-பேச்சு நன்றாக இருக்கும் -சப்த சாமர்த்தியம்
சாரு வாகன் –பாசுததன் -பாஹ்ய சமயம் -மற்ற குத்ருஷ்டிகள் சங்கர –இத்யாதி
இவை சபையாகத் திரண்டாலும் -அபரிச்சின்ன விஷயமான
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்-விஷயத்தில் -ஒரு ஸ்வ பாவ்யமும் காண அறிய முடியாதவன்
இன்னவன் இல்லை என்று சொல்லவும் அளக்க முடியாதவன்
சர்வ காரண பூதன் -உபகாரகன் -நித்ய வாஸம் செய்யும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை-கிளிர்ந்த நீரால் சூழப் பட்ட திவ்ய தேசம்
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.-மானச ஞானத்துக்கு திவ்ய தேசத்தை
விஷயம் ஆக்குமின் -உஜ்ஜீவிக்க -மனம் உண்டாகில்

சொல்லப்படுகின்ற ஆறு புறச் சமயங்களும், மற்றுமுள்ள குத்ருஷ்டிகளும் சபையாகத் திரண்டு வந்தாலும், தன் விஷயத்தில்
அளவிட்டுக் காண்பதற்கு அரியனாய், இருக்கிற ஆதிப்பிரான் அவன் எழுந்தருளியிருக்கின்ற, வளப்பம் பொருந்திய குளிர்ந்த வயல்கள்
சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தை, நீங்கள் உங்களை உய்வித்துக்கொண்டு
நடக்கவேண்டியிருந்தீர்களாகில், மனக்கண்ணிலே வையுங்கோள்,’ என்கிறார்.
‘ஆறு சமயமும் மற்றும் அவை ஆகியும்’ என்க. அவை -சபை. ‘அமரும் திருக்குருகூர்’ என்க. ‘உம்மை உய்யக்கொண்டு போகுறில்,
அதனை உளம்கொள் ஞானத்து வைம்மின்,’ என்க.

‘நீங்கள் உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ? அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும் –
சிலவற்றைச் சொல்லா நின்றால், தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லாநிற்பர்களத்தனை போக்கி,
பிரமாணத்திற்கு அநுகூலமான தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உத்திசாரமேயாயிருக்கிற புறச்சமயங்கள் ஆறும்.
புறச்சமயங்கள் ஆறாவன: சாக்கிய உலூக்கிய அக்ஷபாத க்ஷபண கபில பதஞ்சலி மதங்கள். இது பாஷ்யகாரர் அருளிச்செய்தது.
மற்றும் அவை ஆகியும் –
மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும். புற மதத்தில் உள்ளவர்களும் குத்ருஷ்டிகளும் மோக்ஷ பலனைப் பெறாதவர்கள்.
அவர்கள் தாமத குணமுடையவர்கள் என்று எண்ணப்படுகின்றார்கள்.
தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும் –
பிரமாணத்திற்கு மாறுபட்ட தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறிய ஒண்ணாதபடி இருக்கிற உலக காரணன்
விரும்பித் தங்கியிருக்கிற; தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று அளவிட அரிதாய் இருக்கும்;
‘இல்லை’ என்னும் போதும், வஸ்துவை ‘இது’ என்று அளவிட வேண்டுமே?
அதாவது, ‘இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால் அசைக்கமுடியாதனவாய் -அவிசால்யமாய் -இருக்கும்,’ என்றபடி.
‘அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப்பிரான்’ என்கிறார். என்றது, ‘என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனை –
செல்வத்தையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான நீர் நிலங்களாலே சூழப்பட்டு, கண்டார்க்கு வைத்த கண் வாங்க
ஒண்ணாதபடி காட்சிக்கு இனியதான திருநகரியை.
உளம்கொள் ஞானத்து வைம்மின் –
ஞானம் உதித்து, புறத்தேயுள்ள இந்திரியங்களாலே புறப்பொருள்களில் செல்வதற்கு முன்னே,
மனக்கண்ணுக்குத் திருநகரியை விஷயம் ஆக்குங்கோள்.
உளம் கொள் ஞானம் –
மானச ஞானம். என்றது, ‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில் (திருநகரியில்) ஈடுபடும்படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி.
உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –
‘இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப் போகவேண்டியிருக்கில்.
இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார் ஆயிற்று இவர்.
‘மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாதபடியான பெருமாளோடே
விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.

——————————————————————————————–

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

சர்வ சரீரியாய் நிரதிசய சீலவானாய் சர்வ மநோ ஹர சேஷ்டிதங்கள் உடையவன் -திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப பிரயுக்தம் –
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்-சகல தேவதா வர்க்கங்களும் சமஸ்த லோகங்களும்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே-நிரவத்ய மூர்த்தி உடன் ஒத்து -இவை அனைத்தும்
அசாதாரண விக்ரகத்தோ பாதி -அத்தலைக்கு அதிசயமான பிரகாரமாகக் கொண்டு
ஸ்வரூப ஸ்வபாவம் குலையாதபடி -செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்-சேர்ந்து வளரும்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே-ஆஸ்ரிதர்க்கு சுலபமாக சிறாம்பித்து -அனுபவிக்கும் படி
அர்த்தித்வமே நிரூபகமாய் -கேட்டார் எல்லாரும் ஈடுபடும்படி -இன்றும் ஆனந்திக்கும் படி நிரதிசய போக்யதா மகாத்மயம்
ஆள்செய்வதே பொருந்தும் –உறுவதும் இது ஆவதும் இது -சீரியதும் இது-

எல்லாத் தேவர்களும் எல்லா உலகங்களும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் ஆகிய இத்தனையும், குற்றம் இல்லாத
மூர்த்தியைப் போன்று இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க, வயல்களிலே நெற்பயிர்கள் கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்கின்ற
திருக்குருகூர் என்ற திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பிரஹ்மசாரி வேடத்தையுடைய வாமனனாகிய
நீள்குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே சீரியதாயும் தக்கதாயு முள்ள புருஷார்த்தம் ஆகும்.
‘இத் திருப்பாசுரத்தை ஆட்செய்வதே உறுவது ஆவது,’ எனப் பூட்டுவிற்பொருள்கோளாக முடிக்க.
‘மற்றும் இத்தனையும் மறுவின் மூர்த்தியோடு ஒத்துத் தன்பால் நின்ற வண்ணம் நிற்க’ எனக்கூட்டுக.
மாண் – பிரஹ்மசாரி. குடக்கூத்தன் – குடக்கூத்து ஆடியவன்; கிருஷ்ணன்.

‘தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.

‘நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது ஆவது,’ என்க.
‘உறுவதும் இது – சீரியதும் இது; ஆவதும் இது – செய்யத்தக்கதும் இது,’ என்னுதல்.
அன்றிக்கே, ‘உறுவதாவது இதுவே’ என்னுதல்.
எத்தேவும் எவ்வுலகங்களும் –
எல்லாத் தேவர்களும், தேவர்களுக்கு இன்பத்தை அனுபவிப்பதற்குரிய இடங்களான எல்லா உலகங்களும்.
மற்றும் –
மற்றும் உண்டான உயிர்ப் பொருள்களும் உயிரல் பொருள்களும்.
தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து –
தன்னிடத்து வந்தால் மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது,
இவை மூர்த்தியாமிடத்தில் பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்கிரஹத்தைப் போன்று குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மறு ஆகிறது – குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை.
பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.
அன்றிக்கே,
மறுவையுடைத்தான விக்கிரகம் – ஸ்ரீவத்சத்தை யுடைத்தான விக்கிரகம்; அதனோடு ஒத்து என்னுதல்; மறு – ஸ்ரீவத்சம்; இல் – வீடு; இருப்பிடம்.
அன்றிக்கே,
மறு இல்லாத மூர்த்தி உண்டு – குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;
மறு – குற்றம். ‘இவை சரீரத்தோடு ஒத்திருத்தலாவது என்?’ என்னில்,
1- பிரிந்து நிலைத்திருத்தலுக்குத் தகுதியில்லாத -2-ஆதார ஆதேய பாவ – 3-ஏவுகின்ற ஏவப்படுகின்ற பாவ –4- சேஷி சேஷ பாவமான
சரீர இலக்கணங்கள் நான்கும் இவற்றிற்கு உண்டு ஆகையாலே. மரத்திலே தேவதத்தன் நின்றால் அது அவனுக்குச் சரீரமாகாதே அன்றோ?
இங்கு அங்ஙன் அன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

இத்தனையும் நின்ற வண்ணம் தன்பால் நிற்க –
இவையடங்கலும் இருந்தபடியே தன் பக்கலிலே நிற்க.
தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அடிமையாம்படி இருக்கிற இந்த ஐசுவரியத்தில்
ஒன்றும் குறையாதபடி வந்து நிற்கை. என்றது, ‘இரு வகையான உலகங்களையும் உடையவனாகையாலே வந்த ஐசுவரியம்
அடையத் தோற்றும்படிக்கு ஈடாக ஆயிற்று இங்கு வந்து நிற்கிறது,’ என்றபடி.
‘நன்று; தாழ நிற்கிற இடத்தில் ஐசுவரியம் தோற்றுமோ?’ எனின், இராஜபுத்திரன் ஓர் ஒலியலை உடுத்துத் தாழ இருந்தாலும்
இறைமைத்தன்மையில் குறைந்து தோன்றாதே அன்றோ?

செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக்குருகூர் அதனுள் –
வயல்களில் செந்நெற்பயிர்களானவை கரும்போடு ஒக்க ஓங்காநின்றுள்ள திருக்குருகூரதனுள்;
பரமபதத்திலே எல்லாரும் ஒருபடிப்பட்டு இருக்குமாறு போலே, அவ்வூரில் பொருள்களில் ஒன்றில் ஒன்று குறைந்திருப்பதில்லை;
குறிய – கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி.
மாண் உருவாகிய –
இட்டபோதொடு இடாத போதொடு வாசியற முகமலர்ந்து போகும்படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி.
நீள் குடக் கூத்தனுக்கு –
குடக்கூத்து ஆடிவிட்ட பின்பும், மனத்தைக் கவர்கின்ற அச்செயலைப் பிற்பட்டகாலத்தில் கேட்டார்க்கும் சம காலத்திலே
கண்டாற்போலே பிரீதி பிறக்கும்படி யாயிற்றுக் குடக்கூத்து ஆடிற்று.மன்றில் இன்றும் அமர்ந்து ஆனந்திக்கும் படி அன்றோ குடக்கூத்து ஆடி மகிழ்ந்தானே
ஆள் செய்வதே –
அச்செயல் தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.

———————————————————————————————

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

பரமபதம் உள்ளங்கை நெல்லிக்கனி
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,-பரோபதேச கைங்கர்யம்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்-அபி நவ பரிமளம் -குடிப்பெயர் -திரு நாமம் -சடர்களை நிரசித்ததால்
-சதர் பாஹ்யர் குத்ருஷ்டிகள் பரர்களுக்கு அங்குசம்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்-அபி நிவேசம் -காதல் -கான ரூபம் -அர்த்தானுசந்தானதுடன்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.-ஆத்மா குணம் -கை வந்தால் -ஆச்சார்யன் கை புகுரும் -மேல் மந்த்ரம் கை புகுரும்
-மேல் நாராயணன் கை புகுரும் -மேல் வைகுந்தம் -மற்றது கையதுவே -நச புன ஆவர்த்ததே –

‘வாசிகமான கைங்கரியத்தைச் செய்து, ஆழிப்பிரானைச் சேர்ந்தவரும், வளப்பம் பொருந்திய திருக்குருகூர் நகரை உடையவரும்,
புதிய வாசனையோடு கூடின மகிழம்பூ மாலையைத் தரித்த மார்பையுடையவரும், ‘மாறன், சடகோபர்’ என்ற திருப்பெயர்களையுடையவருமான நம்மாழ்வார்,
விருப்பத்தோடு அருளிச்செய்த திருப்பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்களது கையிலே இருப்பதாம்,
இவ்வுலகத்திற்கு வேறுபட்டதும் சென்றவர்கள் மீண்டு வருதல் இல்லாததுமான வைகுந்தமாநகரமானது,’ என்றவாறு.
‘மற்றதுவாகிய வைகுந்த மா நகர், மீட்சியில்லாததான வைகுந்த மா நகர், இப்பத்தும் வல்லார் கையது,’ என்க.
இனி, வைகுந்த மா நகர் அது மீட்சி இன்றிக் கையது என்று கூட்டலுமாம். கையது – குறிப்பு வினைமுற்று. ‘ஆழிப்பிரானை ஆட்செய்து சேர்ந்தவன்’
என்க. மகிழம்பூமாலை ஆழ்வார்க்குரியது; ‘வகுளாபரணன்’ என்ற திருப்பெயரையும் நினைவு கூர்க.

‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் எளிது,’ என்கிறார்.

ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் –
அடிமை செய்து சர்வேசுவரனைக் கிட்டினவர். முறையிலே சர்வேசுவரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். என்றது,
‘வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உறுப்புகளைக்கொண்டு
உலக விஷயங்களிலே போகாமல், ‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே, வகுத்த விஷயத்துக்கே உரியதாக்கிக்கொண்டு
கிட்டினமையைத் தெரிவித்தபடி. ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி. கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், சரீரத்தால் செய்தல் என அவ்வடிமை தான் மூன்று வகைப்படும்.
இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில்,
‘கால் ஆழும் நெஞ்சழியும் கண் சுழலும்’ என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமேயானால்.
வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று; அப்படியாமன்று இப்பாசுரம்;
‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்;
இல்லையாகில், எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலேயாகிலும் ஆக வேண்டும்;
இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.

‘ஆனால், மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேசுவரனுடைய
பரத்துவத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.
‘ஆனால், பரத்துவ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில்,
அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலேயாதல், ‘அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
‘ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில்,
‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும்.
‘ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின்
‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்; அவற்றிலும் ஆகப்பெற்றதில்லை.
‘ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே,
‘திருக்குருகூரதனுள் பரன்திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று,
பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப்பெரியவன் என்று இவர் அருளிச்செய்யக் கேட்டு,
‘கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
‘இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
‘பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேசுவரன் அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சமுசாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்துவ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி ‘இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன
போலத் தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே, ‘ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

வண் குருகூர் நகரான் –
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே இம்மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு; இப்போது, பகவானுடைய பரத்துவத்தை விரித்து அருளிச்செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று;
ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும் இப்பத்தையும் வல்லார்.
சிலர் ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது –
இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது.
இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப்பொருளில் ‘மற்றது’ என்பது இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழியாக்கி, ‘மற்றையதான – அதாவது,
இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்துவ ஞானமே பிரயோஜனம் போரும்;
அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

உபய பிரதானமான பிரணவம் போலே -உறை கோயிலில் -எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –
அவன் மேவி உறையும் கோயில் -அர்ஜுனன் தேர் தட்டு /ராச மண்டலம் -சமமான பிரதானம் –
பரே -பரன் /ஈஸ்வரன் -நியமனத்தில் உட்படுத்தி -இயற்கையிலே வைத்து –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பந்தே சமேபி ஹரிணா
நிகிலாத்மா ராசே
சம்சார ஹேது இதரேஷூ பரத்வ போதம் -பீஜம் அந்ய சேஷத்வ பரத்வ பிரமம்
வேத இதிகாச -முகத பரிக்ருத –வேத இதிகாச புராண யுக்திகள்
சௌரே அர்ச்சா தநோ -தசமே -பரத்வம் விவர்நோத்

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

கல்பாந்தேபி சிதத்வாத் -தான் ஒருவனே இருந்த அன்று –
சகல சுரகண ஸ்ர்ஷ்டு பாவாத்
ஜனானாம் ரஷாத் வியாபகத்வாத்
சிவா விதி தரணாத் -வேத அபகார குரு பாதக -தைத்ய பீடா
சர்வ தேவ ஆத்மபாவாத் -தெய்வமுமாகி நின்றான்
தது கர்மானுரூபம் பல விதரணதக-எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லையே
வைனதேய த்வஜதத்வாத் -ஆடு புட்கொடி -கொற்றப் புள்
மார்கண்டேயே அவதானேகா -ஆதி சப்தம் 8/9/10 -அபரிச்சின்ன ஆச்சர்ய சேஷ்டிதங்கள் -புக்கடிமையினால்
அளந்து காண்டற்கு அரியன்-நீள் குடக்கூத்தனுக்கு ஆட் செய்வது –47 ஸ்லோகம்

நித்ய ஐஸ்வர்யம் -ஒரு நாயகமாய் – -ஆபத்சகத்வம் வைத்த மா நிதி
சஹஜங்கள்-பஹூ வித போக்ய வஸ்துக்கள் -பாலனாகி
அந்யோந்ய சக்தன் -கோவை வாயாள்
விரஹ சமய -கிலேச -வளர்க்க -சத்ருச-சுவ சம்பந்தி சத்ருச பதார்த்தங்கள் -மண்ணை
ஸுவ ஆஸ்ரிதர்களை கிருதார்த்தராக செய்ய வல்லவன் -வீற்று இருந்து
ச்நேஹம் உடைத்தார்க்கு தானே வைத்தியன் –தீர்ப்பாரை
சமீசீன குணா விசிஷ்டன் -சீலமில்லா சிறி யேன்
ஸுவ ஆஸ்ரிதர்களால் பரிகரிகரிப்பட்ட ஆத்மாத்மாயங்கள் -உபேஷ்யம்
அபீஷ்டமான புருஷார்த்த ரூபன் -நண்ணாதார் -நிலா நிற்ப கண்ட சதிர்
சர்வ தேவதா சார்வ பௌமன் சமஸ்த போக்ய வஸ்துக்களிலும் அதிசய போக்கியம் உடையவன் –48 ஸ்லோகம்

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 40-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என வாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை————-40-

——————————————————————————-
அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக அர்ச்சாவதாரே
பரத்வத்தை அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
நண்ணாதாரில் -ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு
ப்ரமாணாந்தர விலஷணமாய்
நித்ய
நிர்தோஷமான
வேதாந்த வாக்யங்களாலும்
சந்தம்ச நியாயங்களாலும்
இதிஹாசாதி சித்திதமான
ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும்
சம்சார பீஜமான தேவதாந்திர பரதவ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று
த்ருடதரமாக உபபாதித்து
இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று
கை வாங்க வேண்டாத படி
திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆனபின்பு
அவனை ஆஸ்ரயிங்கோள் என்று
பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற
ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————————————————

வியாக்யானம்-

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என –
இவ்வுலகம் படைத்த மால் அன்றி
தேவு
ஒன்றும் இலை
என-
சர்வ ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள்
ஒருவரும் இல்லை என்று –
அதாவது
ஒன்றும் தேவும் -என்று துடங்கி
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -என்றும்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் -என்றும்
அருளிச் செய்த காரணத்வ பிரயுக்தமான சந்தைகளை கடாஷித்த படி -என்கை –

யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி யருள் –
அதாவது
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
தவம் அப்ரமேயச்ச –
தம்ஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர –என்று
தாரா அங்கதாதிகளும் அறியும்படி ஆனால் போலே
பரந்த தெய்வமும் -என்று துடங்கி -கண்டு தெளியகில்லீர்-என்றும்
பேச நின்ற சிவனுக்கும் -என்று துடங்கி -கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்றும்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் -என்று துடங்கி -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -என்றும்
போற்றி மற்றோர் தெய்வம் -என்று துடங்கி -ஆற்றவல்லவன் மாயம் கண்டீர் -என்றும்
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -என்று துடங்கி -பல் படி கால் வழி ஏறிக் கண்டீர் -என்றும்
புக்கடிமையினால் நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -என்றும்
விளம்பு ஆறு சமயமும் -என்று துடங்கி -உளம் கொள் ஞானத்து வைம்மின் -என்றும்
உறுவதாவது நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே -என்றும்
பேச நின்ற தேவதா ஜ்ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டமையும் சொல்லி
ஓடி –கண்டீர் –
கண்டு –தெளிய கில்லீர் –
அறிந்து ஓடுமின்
ஆட்செய்வதே -உறுவதாவது -என்று
விரகத பூர்வகமாக
ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள்

மூதலித்து பேசி அருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை –
எம்பெருமான் திருவடிகளுக்கு
ஆட்சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருதமய தடாக அவகாகன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர
நிரதிசய ஸூகந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஆழ்வார் திருவடிகளை –
வகுளாபிராமம் ஸ்ரீ மத அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹச்தங்கள் ஆனவை –

காதலிக்கை -கௌதூஹலிக்கை ஆகவுமாம்
முடியானிலே -கரணங்களின் படியேயாயிற்று –
தம் கரணங்கள் குருகூர் நம்பி மொய் கழல்களிலே
காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் மா முனிகள் திருக்கரங்கள் ஆசைப்படுகின்றன

இத்தால்
பரோபதேசம் பண்ணி
உஜ்ஜீவிப்பிக்கும் ஆழ்வார் திருவடிகளிலே
பற்ற அடுப்பது –
என்றதாயிற்று-

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: