பகவத் விஷயம் காலஷேபம் -102- திருவாய்மொழி – -4-9-1….4-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார்,
தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை.
‘ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில்
அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே -திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும்
இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –

புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம்
லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே
வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல்
கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,- ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற
இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்; இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர்
‘கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலைநின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்றதன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் -ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

அங்ஙன் அன்றிக்கே,
‘ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு ஆவார் உளரோ என்று
உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்;
அவர்கள், தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய்
அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்;
அதனைக் கண்டவாறே வாளேறு காணத் தேளேறு மாய்ந்தாற்போலே, தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது;
சர்வேசுவரனைப் பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம வள்ளலாய் எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய் எல்லாக் குற்றங்களையும்
பொறுக்குமவனாய் எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
ஆமாறு ஓன்று அறியேன் -பிரதிகோடி-சர்வஜ்ஞ்ஞன் / கடல் கடைந்தாய் -சர்வ சக்தன் /வள்ளலே -பரம உதாரன் /
அரவணையாய் -ரஷணத்தில் தீஷிதன் –கூப்பாடு கேட்க ஷீராப்தி -நம்மைப் போலே தாழ்ந்தவர்களை ரஷிக்க ஸ்ரீ ரெங்கத்தில் சயனம்
வினையேனை அடியேனாகக் கொண்டாய்-அபராத சஹத்வம் / கண்ணாளா -சர்வ நியந்த்ருத்வம் –இது ஒரு ஐந்து –
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் ‘தன்னரசு நாடோ?’ என்று பார்த்து,
‘நீ சர்வேசுவரனாய்ப் பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய் –கண்ணாளா -பரம கிருபாவான் -அம்மானே -சர்வேஸ்வரன் -பிராப்தன் –
இவற்றின் துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க, இவை இங்ஙனம் கிடந்து நோவுபடுகை போருமோ?
இவற்றைக் கரைமரம் சேர்க்கவேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க,
‘நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே?
நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே? புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது?
அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியங் கொள்ளுகிறோம் அல்லோமே? இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு
நாம் பார்த்து வைத்த வழிகளை யடையத் தப்பின பின்பு நம்மாற் செய்யலாவது இல்லைகாணும்; நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.
அதனைக் கேட்ட இவர்,
‘நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தை யடைந்தேனாவது
‘இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவுபடுகின்றார்கள்’ என்று உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன,
‘இவர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று நம்மை -விபவம் அர்ச்சை -ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை
ஒரு தட்டுமாக வைத்து,’ ‘உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்; -பாரமான பொருள் தாழும் -தாழ்ந்த சம்சாரம் –
நாமும் ஆகுந்தனையும் பார்த்து முடியாமை காணும் கைவாங்கியது; இனி நம்மாற்செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.
அறப் பொருளை அறிந்து ஓரார் –

‘ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று
பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு
தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில்,
இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.
ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடாநிற்க,
‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.
ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

ஆழ்வாருக்கு
மூன்று ஆர்த்தி திருவாய்மொழி
முந்நீர் -பிரகிருதி சம்பந்த நிமித்த ஆர்த்தி
சீலமில்லா சிறியேனில் பகவத் விஸ்லேஷ பிரயுக்த ஆர்த்தி
சம்சாரிகள் இழவால் வந்த ஆர்த்தி இது

—————————————————————————————————————-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

சம்சாரிகள் படுகிற துக்கம் அசஹ்யமாக இருந்தது –
ஆஸ்ரிதர்க்கு பல உபகாரம் நீர் செய்தாலும் இவர்கள் இழந்து விஷயாந்தரங்களில் மண்டி இருக்க
துக்கம் காணாதபடி என்னை கொள்வாய் -என்கிறார்
நண்ணாதார் முறுவலிப்ப, -இதுவும் துயரமா -பகவான் சேஷி -இவன் சேஷ பூதன் -ஐயோ என்று வருந்த வேண்டாமோ
சாத்ரவத்தால் இவன் அனர்த்தம் கண்டு ப்ரீதராய் ஸ்மிதம் பண்ணி
நல்லுற்றார் கரைந்துஏங்க,-ஆத்மாவைப் பார்க்காமல் தேகம் பார்த்ததால் இதுவும் துயர் –
இவன் அனர்த்தத்துக்கு தம் இழவைக் கண்டு ஏங்க-
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?-அடங்காத -தன்னில் தான் விளைத்துக் கொண்டு துயர் அடைய –
பூமி துக்கம் தானே விளைத்துக் கொள்ளாதே-லோக யாத்ரை
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,-நிருபாதிக நிர்வாகன் -காருணிகன்-பிரயோஜன பரர்களுக்கும் உபகாரம்
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.-தள்ளிப் போடாமல் -சங்கல்ப்பிக்க வேண்டும்
பிராப்தன் -உனது திருவடிகளில் சேர்த்து -உனக்கே சேஷ பூதன் -அடியேன் -சரீர விச்லேஷம்
மோஷயிஷ்யாமி போலே வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -சர்வ பாபேப்யோ -பாப சப்தத்துக்குள் சரீரம் சேர்த்து கொள்ளவேண்டும்
சரீரமும் அந்தர்பூதம் -அதனால் வந்த சரீரம் -காரண கார்ய பாவம் உண்டே
கண்ணாளன் -கிருபையே வடிவாக கொண்டவனே –

‘பகைவர் மகிழ்ச்சி கொள்ளவும் சிறந்த உறவினர்கள் மனங்கரைந்து வருந்தவும் எண்ணுவதற்கு அமையாத துன்பத்தை உண்டாக்குகின்ற
இவை என்ன உலகத்தின் தன்மை! கிருபையையுடையவனே! திருப்பாற்கடலைக் கடைந்தவனே! உன் திருவடிகளுக்கே
நான் வரும்படி காலம் நீட்டியாமல் அடியேனைச் சாகுமாறு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்,’ என்கிறார்.
‘முறுவலிப்ப ஏங்கத் துயர் விளைக்கும் உலகு’ என்க. ‘உலகு இயற்கை இவை என்ன?’ என்க
. என்ன – எத்தன்மையவாய் இருக்கின்றன? அன்றிக்கே, ‘என்னே!’ எனலுமாம். ‘வரும் பரிசு பணி கண்டாய்’ என்க.
கண்டாய் – முன்னிலையசைச்சொல். சாமாறு – உடலை விட்டு உயிர் பிரியும் வழியை. தண்ணாவாது – காலம் நீட்டியாமல்.
இத்திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

‘உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே வந்து
கிட்டும்படி எனக்கு இச்சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.
அவதாரிகை -எம்பார் நிர்வாஹத்துக்குச் சேர –

நண்ணாதார் முறுவலிப்ப –
ஒருவனுக்கு ஒரு கேடு வந்தவாறே, அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியார்களே யாகிலும்,
அன்றைய தினத்திலே ஒரு வெற்றிலை தேடித் தின்பது, ஓர் உடுப்பு வாங்கி உடுப்பது, சிரிப்பது ஆகா நிற்பர்கள் ஆயிற்று.
நண்ணாதார் – பகைவர். பிறர் கேடு கண்டு சிலர் உகக்கும்படியாவதே! இஃது என்ன ஆச்சரியந்தான்!
அருச்சுனன், ‘என் பரகு பரகு-ராக த்வேஷம் – கெடுவது என்று?’ என்ன,
‘எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதனாய் இருக்கிற என்னை!’ என்கிறபடியே,
‘நான் எல்லா ஆத்துமாக்களுக்கும் சினேகிதன்,’ என்று அறிந்தவாறே
நீயும் என்னைப் போன்று என் விபூதிக்குப் பரியத்தேடுவுதிகாண்,’ என்றானே அன்றோ?
சர்வ பூத ஸூஹ்ருத் என்று அறிந்தால் ராக த்வேஷம் போகும் என்றானே –
நல் உற்றார் –
சர்வேசுவரனே காரணம் பற்றாத உறவாய் அவனைப் பற்றினவர்களையே
‘அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன் அவன் தமரே,’ என்று,
அவர்களை ‘ஒருகாலும் பிரிகிலேன்’ என்றிருத்தல் தகுதியாக இருக்க,
சரீர சம்பந்தம் காரணமாக வருகின்றவர்களைக் காரணம் பற்றாத உறவினர்களாக நினைத்து,
அவர்களுக்கு ஒன்று வந்தவாறே, ‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,’ என்று
இவர் பகவத் விஷயத்தை நினைத்தல் சொல்லுதல் செய்யப்புக்கால், படுவன எல்லாம் படா நிற்பர்களாயிற்று.
‘கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற இரண்டனையுமே யன்றோ? ‘எல்லா ஆத்துமாக்களையும் சரீரமாகவுடைய கோபாலனிடத்தில்
பகைவன் நட்டோன் என்கிற தன்மை ஏது?’ என்றது,-மித்ரா அமித்ரா சப்தம் -பிரகலாதன்
‘ஆசையையும் துவேஷத்தையும் பற்றி வருகையாலே, நட்புத் தன்மையோடு பகைத்தன்மையோடு வாசி இல்லை.
‘சுகம் துக்கம் என்கிற பெயரையுடைய இரண்டால் விடப்பட்டவர்கள்’ என்கிறபடியே,-ராக த்வேஷம் இரட்டை தாண்டி இருக்க வேண்டுமே –
‘சுக துக்கங்கள்’ என்று சில பெயர் மாத்திரமேயன்றே உள்ளன? உண்மையை
நோக்குங்கால், இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன? ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
சுகம் -சுக ரூபத்தில் வரும் துக்கம் -துக்கம் -துக்க ரூபத்தில் வரும் துக்கம் -இரட்டை தாண்டியவர்கள் உண்டோ –
‘ஸ்ரீராமபிரானையே நினைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் நலியவில்லை,’ என்கிறபடியே,
திருவயோத்தியையில் உள்ளார், ஒருவரை ஒருவர் வேரோடே வாங்கிப் பொகட வேண்டும்படியான பகைமை தொடர்ந்து
நிற்கச் செய்தேயும் எல்லாரும் ஒரு மிடறாக விரும்பினார்கள்; ‘அதற்கு அடி என்?’ என்னில்,
பகைமை நெஞ்சிலே பட்டு அவர்களை நலிய நினைத்த போதாகப் பெருமாளை நினைப்பார்கள்;
‘அவர் முகம் சுளியும்’ என்னுமதனாலே அதன் காரியம் பிறக்கப் பெற்றது இல்லை.
‘சர்வேசுவரன் பெரிய பிராட்டியாரோடு பரிமாறும் போது மற்றுள்ள பிராட்டிமார் மலர் சந்தனம் முதலியவைகளைப் போன்று
இன்பத்திற்கு உறுப்பான பொருள்களின் கோடியிலே சேர்ந்திருப்பார்கள்; மற்றைப்பிராட்டிமார்களோடு பரிமாறும் போது
பெரிய பிராட்டியார் தம்மோடு பரிமாறுவதைப் போன்றே நினைத்து மகிழாநிற்பார்;’
‘திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்?’ என்கிறபடியே,
அவர்களோடு இவன் பரிமாறும்போது பிராட்டிக்கே அற்றானாய் இருக்கும்; அதற்கு அடி, அதனால் பிறக்கும் முகமலர்ச்சி
அவள் பக்கல் காண்கையாலே. உயர் குணங்கள் பல பொருந்தியிருந்த ஸ்ரீ கௌசல்யையார் தமக்கு என ஒரு தன்மை
இன்றிக் காலந்தோறும் காலந்தோறும் சக்கரவர்த்தியின் நினைவுக்குத் தகுதியாக மற்றைய மனைவிமார்களுக்கு
விரோதவுணர்ச்சி தோன்றாதவாறு பரிமாறிப் போந்தாரே அன்றோ?
தனக்கு என்று ஆகாரம் இல்லாமல் -அவனைப் பார்த்த படியால் -ராக த்வேஷம் தாண்டினார்கள் இவர்கள்

எண் ஆராத் துயர் விளைக்கும் –
முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும் இரண்டு துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு.
அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது; அதனால் ‘எண் ஆரா’ என்கிறார்.
பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.
‘இராச்சியத்தினின்று நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும்,
பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட
எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே
அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?
ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே -இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட —புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார் அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

இவை என்ன உலகு இயற்கை –
உன்னை ஒழியப் புறம்பேயும் இந்த உலகப்பேறு இழவு ஆம்படி இது ஒரு உலக ஒழுக்கினை நீ
பண்ணி வைத்தபடி என்? பிரானே! ‘நாம் பண்ணுகையாவது என்? இவர்கள் தாங்கள் செய்த கர்மங்களினுடைய
பலம் தொடர்ந்து வருகிறது இத்தனையன்றோ? நம்மால் வந்தது அன்றுகாணும்,’ என்று பகவானுடைய அபிப்பிராயமாக, அருளிச்செய்கிறார் மேல் :

கண்ணாளா –
இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில்,
உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே? கண்ணாளன் – அருளை உடையவன்.
அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக்கடவதன்றோ?
அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல்.
அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது, ‘நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல்.
கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர். ‘தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே
அனுபவிக்க வேண்டாதபடி நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் மேல் :
கடல் கடைந்தாய் –
‘தூர்வாச முனிவரது சாபத்தால் வந்த கேட்டினைத் தப்புகைக்கு வேறு பிரயோஜனங்களை
விரும்புகிறவர்களுக்கும் அரியன செய்து உதவுமவன் அன்றோ?’ என்கிறார்.
‘நன்று; அவர்களுக்கு இச்சை உண்டு; இச்சை இல்லாதவர்களுக்கு நம்மாற்செய்யலாவது உண்டோ?’ என்ன,
‘ஆகில், இவர்கள் நடுவே இராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி செய்ய வேண்டும்,’ என்கிறார் மேல் :

உன கழற்கே வரும் பரிசு –
விலக்கடிகளில் போகாமல், வகுத்ததுமாய் இனியதுமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுவது ஒரு வகை.
இவர்க்குக் காற்கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈசுவரன்.
தண்ணாவாது –
தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது;
செய்துகொடு நிற்க வேண்டும்,’ என்றபடி. ‘நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
‘அடியேனை’
என்கிறார்; என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி.
பணி கண்டாய் சாமாறே –
பணிக்கை -சொல்லுகை; சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது?
அன்றிக்கே, ‘சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.

அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல்.
‘நன்று; பிரபந்த ஜனகூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில்,
‘கண்ணபிரானுடைய தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு சகவாசம்செய்தலாகிற பெருந்துன்பத்தைக் காட்டிலும்
நெருப்பினுடைய சுவாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே,
இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகைதானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது,
‘காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது?
பின்பே அன்றோ இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது? அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு
அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்கவேண்டும் என்கிறார்,’ என்றபடி.

——————————————————————————

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

லௌகிக கிலேசம் என்னை முடியப் போகிறது என்று அறிய கில்லேன்
நிருபாதிக சேஷி என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும்
சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து-சிரகாலம் ஜீவிக்க -ஐஸ்வர்யம் நசிக்கும் பிரகாரம் –
தாயாதிகள் -நண்பர்கள் -சம்பந்திகள் -மேல் விழுந்து -இவன் சாகும் பொழுதும் ஐஸ்வர்யம் நசியும் பொழுதும்
தலையில் கை வைத்து அழுது என்றுமாம்
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?கூப்பாடு -தான் விஞ்சி உள்ளதே –
உன் சம்பந்தி உன் உற்றார் -உன் இடத்தில் பேறு இழவு என்று இல்லாமல்
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!-இது எங்கு போய் முடியும் -பகவத் சொத்து அறிவோமோ –
சேஷ வ்ருத்தி கொள்ளுகிறாய் அவன் இடம் -இங்கு என்று கைங்கர்யம் கிட்டும் என்று அலற்றப் பண்ணினாய்
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே -அடையாளம் கண்டு கொண்டு -துக்க சஹன் அல்லன்

‘சாகின்ற விதமும், செல்வம் கெடுகின்ற விதமும், தாயாதிகளும் மற்றைய உறவினர்களும் மேல் விழுந்து மேல் விழுந்து
துக்கத்தினால் கிடந்து அழுகின்ற வகையுமான உலக இயற்கை இவை என்ன? இவர்கள் உய்யும் வகை ஒன்றனையும் அறிகின்றிலேன் யான்.
அரவணையாய்! அம்மானே! அடியேன் விஷயத்தில் திருவுள்ளம் பற்றி அடியேனை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் வகையில் விரைய வேண்டும்,’ என்கிறார்.
தமர் – தாயத்தார். உற்றார் – மற்றைய உறவினர். தலைத்தலை – இடந்தோறும். அரவணை – பாம்புப்படுக்கை.
‘குறிக்கொண்டு அடியேனைக் கூமாறே விரை கண்டாய்,’ என்க. கண்டாய் – முன்னிலையசைச்சொல்.

முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று தொகுத்துக் கூறினார்; அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய்,
‘இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.
கூரத் தாழ்வான் நிர்வாஹம் ஒற்றி அவதாரிகை இதில்

சாமாறும் கெடுமாறும் –
சாகும்படியும் கெடும்படியும். ‘‘ஆறும், ஆறும்’ என்னுதல் என்னை? சாதலுக்கும் கெடுதலுக்கும்
மேற்படச் சில வகைகளும் உளவோ?’ என்னில், ‘பல காலம் ஒருபடிப்பட வாழக்கடவனாகவும், தன்னோடு ஒக்க வாழ்வாரை
அழியச் செய்யக் கடவனாகவும் கோலிக் கொண்டு போகா நிற்க, நினைவு அற முடிந்து கொடு நிற்கும்படியும்,
நான்கு சின்னம் கைப்பட்டவாறே, ‘இனி, நமக்கு உள்ளதனையும் வாழ்வதற்கு ஒரு குறை இல்லை’ என்று நினைத்திருக்கச்செய்தே,
அதனை இழந்து துன்பப்பட்டுக் கூப்பிடும்படியும் எனச் சில உளவே அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி.’
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ -ஜீவ ராசிகள் அனைத்தும் வாழ -இதுவே வைதிக சித்தாந்தம் –
ஒருவன் தன் சாக்காட்டிற்கும் இசைவான், தன் கையில் அகப்பட்ட பொருள் தப்பினால்; அதனையே அன்றோ இவன் தஞ்சமாக நினைத்திருப்பது?
ஆதலின், சாதற்குப் பின் ‘கெடுதலை’ வைத்து ஓதுகின்றார். ஒருத்தனை ‘ராஜத்துரோஹி’ என்று கையையும் காலையும் தரிக்க,
இவனை வினவப் புகுந்தவர்கள், ‘இப்படிப்பட்டது வரல் ஆகாதே!’ என்ன, ஆயிரம் ஐந்நூறு என்று காசு சில தா,’ என்னாதே
இவ்வளவோடே போயிற்று உங்கள் அநுக்கிரஹமே அன்றோ?’ என்றானாம்.
இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின; ‘நின்னலால் இலேன்காண்’ என்றும்,
‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ ‘இன்னம் கெடுப்பாயோ?’ என்றும், ‘பகவானை அடையாதொழிவது விநாசத்திற்குக் காரணம்,’
என்றும், ‘இதர விஷயங்களைப் பார்ப்பது கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது.
‘அடியவனான என்னைத் தேவரீர் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருளவேண்டும்; என்னை அழைத்துக்கொண்டு
போவதில் பாவம் இல்லை; தேவரீருக்கே பயன் கிடைக்கின்றது; நான் தேவரீருக்குக் கைங்கரியத்தைச் செய்து அதனால்
பயனை அடைந்தவன் ஆகப் போகிறேன்,’ என்றும், ‘ஸ்ரீராமரே! உம்மோடு கூடி வசிக்கும் இடம் எதுவோ, அது சுவர்க்கம்;
உம்மைப் பிரிந்து வசிக்கும் இடம் எதுவோ அது நரகம் என்று எண்ணுகின்ற எனது சிறந்த பிரீதியை அறிந்தவரான நீர் என்னுடன் புறப்படும்,’ என்றும்,
இவற்றை விநாசமும் கேடுமாகவேயன்றோ இவர்கள் நினைத்திருப்பது? இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும்
எங்கே தேடிக்கொண்டார்கள்? ‘என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?’ என்னுமவர்களே அன்றோ இவர்கள்?

தமர் உற்றார் –
சரீரசம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம்
அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு
இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார்
தலைத்தலைப்பெய்து –
மேல் விழுந்து மேல் விழுந்து.
ஏமாறிக் கிடந்து அலற்றும் –
‘ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
‘ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.
இவை என்ன உலகு இயற்கை –
இவை ஒரு உலக வாழ்வு இருக்கும்படி என்? என்றது, ‘வாழ்வதற்கு எண்ணாநிற்க முடிவது;
நான்கு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்று இருக்க, அது அழிந்து போவது;
சரீர சம்பந்தம் காரணமாக வருகிறவர்களையே தனக்கு எல்லாவித உறவுமாக நினைத்து, அவர்களுக்கு
ஒன்று வந்தவாறே ‘பட்டேன் கெட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுவது ஆகிற இவையும் ஒரு உலகப் போக்கே! பிரானே!’ என்கிறார் என்றபடி.

‘நன்று; அவர்கள் என்படில் உமக்கு நல்லது? நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே!
‘சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்:
நான் ஆமாறு ஒன்று அறியேன் –
‘அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ? சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ?
அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ? இவ்வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று
அறியாநின்றேனோ?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது,
‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

அரவணையாய் அம்மானே –
இவற்றைக் காக்கும் பொருட்டுத் திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, இவற்றைப் பாதுகாத்தல் உன் பேறாம்படியான
குடல் சம்பந்தத்தை உடையவனே! இவற்றிற்கு இவனோடு மெய்யான குடல் சம்பந்தமே அன்றோ?-மெய் -உண்மை சரீரம் இரண்டும் உண்டே –
இவனுடைய பொய்யோடு மெய்யோடு வாசியற இவனுக்கு இரண்டும் காப்பதற்குக் காரணமாக இருக்கும்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யுமே ரஷண ஹேது –
கூமாறே விரை –
சுலபனாய் இவற்றைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டி வந்து கிடக்கிற நீ,
நான் உன் திருவடிகளை வந்து கிட்டும்படி என்னை அழைத்துக்கொள்வதிலே விரைய வேண்டும்.
‘இப்படி விரைய வேண்டுகிறது என்?’ என்னில்,
கண்டாய் –
என்னைக் கண்ட உனக்குவிரையாதே இருக்கலாய் இருந்ததோ?
‘காட்டிலே கொடியவர்களான இராக்கதர்களாலே பல வகையில்
துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலருடைய சரீரங்களைக் கடாக்ஷிக்க வேண்டும்; எழுந்தருளவேண்டும்,’ என்றாற்போலே,
‘பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.விரஹம் தின்ற உடம்பு இவருக்கு ராஷசர்கள் தின்ற உடம்பு அவர்கள் –
‘ஆனாலும், அநாதி காலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாரும் அன்றோ?’ என்ன,
அடியேனைக் குறிக்கொண்டே –
‘இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய்இருக்கிற என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.
உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க
மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்’ என்னுதல்.
‘நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், ‘பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில்,
‘இவை என்ன உலகியற்கை?’ என்று இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?

——————————————————————————

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

நாங்கள் நன்மையாக நினைத்து இருக்கிறவை ஒழிந்து போக -தாங்கள் நசிக்கிறபடி –
அபரிச்சின்ன -உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் –
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்-இல்லாதவற்றை ஏறிட்டுக் கொண்டு ஆபி ஜாத-
ஐஸ்வர்யம் இருப்பதால் வந்த நண்பர் -சம்பந்திகள் -இதுக்கு எல்லாம் அடி -சீரிய அர்த்த சஞ்சயமும் –
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்-போக்ய பூதையான ஸ்திரீயும் -இவை ஏழும்-இப்படியே இருக்க
-தன்னை விட்டு குறி அழியாமல் இருக்க பிராண விநாசம்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்-அளவுக்கு இல்லா அழகன் -அழகுக்குத் தோற்று சேஷபூதன் ஆன அடியேனை
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–கூவவும் வேண்டும் பணியும் கொள்ள வேண்டும் -பிரிந்து கூப்பிட்ட பண்டு போலே இல்லை –
பொய் நின்ற ஞானம் -கூப்பாட்டு வேற இதில் வேற –வியசனம் அதிகம் –

‘கடல் போன்ற நிறத்தையுடையவனே? மக்களால் கொண்டாடப்படுகின்ற கொண்டாட்டமும் குலத்தின் பெருமையும் பங்காளிகளும் உறவினர்களும்
சிறந்த செல்வமும் வண்டுகள் தங்கியிருக்கின்ற மலர்களையுடைய கூந்தலையுடைய மனைவியும் வீட்டிலேயே தங்கியிருக்க, இறத்தலாகிற இந்த உலகியற்கையைக் கண்டு பொறுக்ககிலேன்! ஆதலால், அடியேனை முன்பு போலக் கருதாது உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்து அடிமை கொள்ளவேண்டும்,’ என்கிறார்.
ஒழிதல் – ஈண்டு இறவாது தங்கியிருத்தல். ‘அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே, முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்’ (தொல். எழுத். சூ. 315)
என்றவிடத்து ‘ஒழிய’ என்பதூஉம் இப்பொருளிலேயே வந்திருத்தல் காண்க.

‘குலம் முதலானவைகள் எல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்க மாட்டுகின்றிலேன்;
துக்கம் சிறிதும் இல்லாத உன் திருவடிகளிலே அடிமை கொள்ள வேண்டும்,’ என்கிறார்.

கொண்டாட்டும் –
முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப் புக்கவாறே
‘முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள். ‘பயிலும் திருவுடையார்’ என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்?
குலம் புனைவும் –
நல் வாழ்வு வாழப் புக்க அன்று தொடங்கி இவனுக்கு ஒருகுலம் உண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள்.
தமர் – முன்பு ‘இவனோடு நமக்கு ஓர் உறவு உண்டாகச் சொல்லுமது சாலத் தண்ணிது’ என்று போனவர்கள்
இவன் வாழப் புக்கவாறே உறவு சொல்லிக்கொடு வந்து கிட்டுவார்கள், ‘அவன் தமர்’ என்று தமக்குத் தமர் புறம்பே அன்றோ?
உற்றார் –
முன்பு, ‘இவனோடு சம்பந்தம் செய்து கோடல் தரம் அன்று; நிறக்கேடாம்,’ என்று போனவர்கள்,
இப்போது ‘இவனோடு ஒரு சம்பந்தம் பண்ணினோமாக வல்லோமே!’ என்று ஆதரித்து மேல் விழுவர்கள்.
விழு நிதியும் –
நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப்புகுருமே;
அச்செல்வத்திற்குப் போக்கடி காணாமல், செய்வது அறியாமல், அதனை முன்னிட்டு ஒரு பெண்ணை மணந்துகொள்வான்;
அவள்தான் வண்டு ஆர் பூங்குழலாள் ஆயிற்று. இவள் செவ்வி வண்டே உண்டு போமித்தனை போக்கித் தான் உண்ண மாட்டான்
ஆதலின், ‘வண்டார் பூங்குழலாள்’ என்கிறது. ‘என்னை?’ எனின், இன்பத்திற்குத் தகுதியில்லாத பருவத்திலே ஆயிற்றுத் தான் அவளை மணந்துகொண்டது.
‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனே யன்றோ இவருக்கு?

மனை ஒழிய –
அவளுக்கும் தனக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கைக்குத் தன் ஆற்றல் எல்லாம் கொண்டு பல நிலமாக அகத்தை எடுப்பான்.
உயிர் மாய்தல் –
இவை குறி அழியாதிருக்க, இவளைக் கூட்டோடே கொடுத்து, இப்படிப் பாரித்த தான் முடிந்து போவான்.
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
இப்படிப்பட்ட உலக வாழ்வினை என்னால் பொறுக்கலாய் இருக்கிறதில்லை.
கடல் வண்ணா –
இந்த உலக வாழ்க்கையின்படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே.–படி -முறை -திருமேனி சாடு –
இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய்.
அடியேனைப் பண்டே போல் கருதாது –
‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது.
‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச் சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற
சொற்களைப் போன்று இராதே அன்றோ?
சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு
கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம்.-கூரத் ஆழ்வான் -நிர்வாகம் -முன்பு தன் அநர்த்தம் மட்டுமே
உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –
உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும். உன் திருவடிகளிலே அழைத்தாலும்,
அடிமையின் இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது?
ஆன பின்னர், என்னை நித்திய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’ என்னுதல்;
அன்றிக்கே, ‘சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.
பரமபதத்தில் வைத்து கைங்கர்யம் கொடுத்து அருள பிரார்த்திக்கிறார் –

——————————————————————————-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

நச்வரமான ஐஸ்வர்யம் உருண்டு ஓடிடும் செல்வம் –பற்று இல்லாமல் -உன் வடிவை காட்டி உபகரித்த நீ -அங்கே கூட்டிச்
செல்லும் வள்ளல் தனமும் காட்டி அருள வேண்டும்
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்-விநாசாதிகள்-நெருப்பை போலே அவிக்கும் –
பிரதி பஷங்கம் அபிபக்கைக்கு ஹேது -பரி தாப கரம்
வாசனை சாபல்யம் -தெரிந்தும் விடாமல்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!அஜ்ஞ்ஞான தமஸ் வந்து மூட
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,-நிரதிசய ஔதார்யம்
தர்ச நீயமான அளவில்லா வடிவு அழகு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே -பொருள் போலே -அசித்வத் பரதந்த்ர்யம்
இதுக்கும் ஔதார்ய விசேஷம் பண்ணி
ஆறு -எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் பாதமே -ஔதார்யம் வானமாலையில் கொழுந்து விடும்
அவன் தன் சரண் தந்திலன் -நீ தந்து அருளினாய் ராமானுசா –

‘‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று கிளர்ந்து வருகின்ற பெரிய செல்வமானது, நெருப்பைப் போன்று தங்களையழிக்க,
பின்னையும் செல்வத்தைக் கொள்வாய் என்று பிறர் சொன்ன அளவிலே அறிவின்மையால் மூடப்பட்டு அச்செல்வத்தை விரும்புகின்ற இவை என்ன உலகு இயற்கை! வள்ளலே! மணி வண்ணா! உன் திருவடிகட்கே வரும்படி திருவருளைச்செய்து அடியேனை உன் திருவருளால் கைக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.
‘நெருப்பாக’ என்றது, ‘நெருப்பைப்போன்று இருக்க’ என்பது பொருள். ‘என்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு.
‘கொள்ளென்று தமம் மூடும்’ என்ற இடத்தில் ‘கொள்ளென்று தூண்டுதல், மனம்’ என்று கோடலுமாம்.

‘மக்கள், செல்வத்தை விரும்பினால், அது அழிவிற்குக் காரணமாதலைக் காணாநிற்கச் செய்தேயும், மீண்டும் அந்தச் செல்வத்தை
விரும்புதலே இயல்பாம்படி இருக்கிற இதற்குக் காரணம் யாதோ? நான் இது கண்டு பொறுக்கமாட்டுகின்றிலேன்:
முன்னம் என்னை இவர்கள் நடுவினின்றும் வாங்க வேண்டும்,’ என்கிறார்.

கொள் என்று கிளர்ந்து எழுந்த பெருஞ்செல்வம் –
இவன் தான் விரும்பாதிருக்கச்செய்தேயும் ‘கொள், கொள்’ என்று மொண்டெழு பானை – ஏத்தச்சால்-போலக்
கிளர்ந்து வருகிற எல்லை இல்லாத செல்வமானது.
நெருப்பாக –
‘அடியோடு அழிய’ என்னுதல்; அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல்.
‘செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின், ‘இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ
பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க.
கொள் என்று தமம் மூடும் –
இப்படிச் செல்வமானது அழிவிற்குக் காரணமாதலைக் காணச் செய்தேயும், பிறர் இவனைக் ‘கொள், கொள்’ என்று தூண்ட,
அறிவின்மையால் மூடப்பட்டவனாய் பேராசையாலே முன்பு அழிவிற்குக் காரணமான அச்செல்வத்தை ஏற்றுக்கொள்வான்.
‘அறிவின்மையால் மூடப்பட்டவனாய் விரும்புகிறான் என்பதனை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின்,
மீளவும் அச்செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப்பட்டவனாய்த்தானே இருத்தல் வேண்டும்?
அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம்.
அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து,
‘அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச்செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம்.
‘மஹாரதரான வீடுமர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும்,
சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே,
அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப் போகாநிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை
வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்?
இவை என்ன உலகியற்கை –
இவை உலக வாழ்வுகள் சில இருக்கிறபடியே!

வள்ளலே –
‘செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே!
மணிவண்ணா –
மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண அன்றாயிற்று.
அன்றிக்கே,
‘செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார்,
‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.–பச்சைவடம் கழற்ற விட்டு -அழகைக் காட்டி அருளினாய் –
உன கழற்கே வரும் பரிசு –
ஞானலாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தரவேண்டாவோ?
மயர்வுஅற மதிநலம் அருளினதைப் போன்று, துயர்அறு சுடரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ?
பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?
வள்ளல் செய்து –
உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது, ‘இவன் இப்பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி.
அடியேனை –
‘பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை.-அடியோங்களை-
உனது அருளால் –
மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்யவேண்டும்.
‘வாங்காய்’
என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத்தலையில் பரமபத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும்,
பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத்தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.

———————————————————————————–

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

ஜன்ம -முதலிய -கிலேசங்கள்-வாராத படி ஆஸ்ரித சுலபன்-என்னை மறுக்காமல் வாங்கிக் கொண்டு அருள வேண்டும்
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்-அலைக்குள் அகப்பட்டவை கிரஹிக்கும் -நீரில் மலரும் -உலகில் -அப்பு -விச்தீர்ண பூமியில்
வளைந்து இருக்கும் நாபி கமலம் -அதில் படைக்கப்படும் உலகம் – பிராணாஸ்ரயமான ஆத்மாக்கள்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்;நெருக்குண்ணா நிற்கும்
ஈங்கு இதன் மேல் வெந்நரகம்; இவை என்ன உலகியற்கை!-இதுவே வெந்நரகம்-வெந்நரகம் சேரா வகை சிலை குனித்தான்
இதுக்கே மேலே குரூரமான நரக வகைகள் –
வாங்கு எனைநீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.ஆஸ்ரிதர்கள் முடிந்து ஆளலாம் படி -சுலபன் -அங்கீ கரித்து-கலக்காமல் வாங்கி அருள் –

‘வளைந்த கடலாற்சூழப்பட்ட பரந்த உலகத்திலே நிற்பனவும் திரிவனவுமான அவ்வவ்விடங்களிலே வசிக்கின்ற உயிர்கள் பிறப்பாலும்
இறப்பாலும் வியாதியாலும் வருந்தாநிற்கும்; ஈங்கு இதற்குமேலே கொடிய நரகமுமாம்; இவை என்ன உலகு இயற்கை!
நீலமணி போன்ற நிறத்தையுடையவனே! நீ என்னை அங்கீகரித்தருளவேண்டும்; அடியேனைக் கலங்கும்படி செய்யாதொழிய வேண்டும்,’ என்கிறார்.
‘வாங்கு நீர்’ வியாக்கியானம் பார்க்க. தகர்ப்புண்ணல் -வருத்தத்தை அடைதல்; அழிதல். மறுக்கேல் – கலங்கப்பண்ணாதே.

‘பிறப்பு மூப்பு இறப்பு முதலியவைகளாலே நோவுபடுகிற இம்மக்கள் நடுவினின்றும்,
இவை நடையாடாத தேசத்திலே அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

வாங்கு நீர் மலர் உலகில் –
இவ்வருகு உண்டான காரியவர்க்கத்தையடையத் தன் பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே.
காரியங்கள் எல்லாம் காரணத்திலே இலயமாகக் கடவன அன்றோ? இலயத்தை முன்னிட்டு அன்றோ படைப்பு இருப்பது?
சிருஷ்டிக்கு பின் லயமா –லயத்துக்கு பின்பே சிருஷ்டி -புதிதாக உருவாக்க வில்லை -சத்கார்யம் –
அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல்.
வாங்கு –
வளைந்த.
திரிவனவும் நிற்பனவும்
-தாவரங்களும் சங்கமங்களும், ஆங்கு உயிர்கள் – அந்த அந்தச் சரீரத்திலேயுள்ள ஆத்துமாக்கள்.
அன்றிக்கே, ‘நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள்’ என்று கூட்டித் ‘தாவரமாகவும் சங்கமமாகவும் இருக்கின்ற உயிர்கள்’ என்னலுமாம்.
‘ஆங்கு’ என்பதனை, மேலே வருகின்ற ‘வாங்கு எனை நீ’ என்றதனோடு கூட்டுக.

பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் –
பிறப்பு இறப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்குண்ணா நிற்பர்கள் சமுசாரத்தில் இருக்கும் நாள்கள் முழுதும்.
இதன்மேல் வெந்நரகம் –
இதற்குமேல் போனால் கொடிதான நரகம். ‘இங்கு இருந்த நாள் 3மூலையடியேசுகாநுபவம் பண்ணித் திரிந்ததைப் போன்றது
அன்றே அங்குப் போனால் படும் துக்கம்?’ என்பார், ‘வெந்நரகம்’ என்கிறார். என்றது,
‘துன்பத்தை இன்பமாக மயங்கும் மயக்கத்தாலாவது இன்பம் உண்டு இங்கு; அங்கு, வடிகட்டிய துக்கமே ஆயிற்று உள்ளது,’ என்றபடி.
உயிர்க்கழுவில் இருக்குமவன் நீர் வேட்கை கொண்டு தண்ணீரும் குடித்து நீர் வேட்கை நீங்கினவனாய் இருக்குமாறு போன்றதே
அன்றோ இங்குள்ளவை? அதுவும் இல்லை அங்கு.
இவை என்ன உலகு இயற்கை –
இது ஓர் உலக வாழ்வினைப் பண்ணி வைக்கும்படியே! ‘ஆனால், உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
ஆங்கு வாங்கு எனை –
‘நினைவிற்கும் எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடுகூட
ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே.
ஏழுலகும் தனிக்கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்கவேண்டும்.
மணி வண்ணா –
ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை,
‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும்.
‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே,
இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?
அடியேனை –
உன் படி அறிந்த என்னை; என்றது, ‘நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிற இருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி.
மறுக்கேலே –
பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ணவேண்டும்.
என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளிவிசும்பிலே வாங்கியருளவேண்டும்.
‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், ‘அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.
அடியேனை -அசாதாரணமான -சேஷத்வ ஞானம் -இருந்தும் லீலா ரசம் அனுபவிக்கக் கடவதோ –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: