பகவத் விஷயம் காலஷேபம் -99- திருவாய்மொழி – -4-7-6….4-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

சர்வதா சந்நிஹிதன் என்னுள்ளே நிற்கும்படி அறிந்து இருக்க கண்ணாலே காண வேண்டும் என்று
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், -சபலமான நான்
யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன், -ஆசைப் படுகிறேன் -நெஞ்சால் ஆசைப்பட்டேன்
ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய-அதீந்த்ர்யன் என்ற ஞானம் இல்லை
கண்ணாக இருப்பான் கண்ணால் காண முடியாது -உபநிஷத்
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்-சரீரம் ஆத்மா -வேறு பட்ட இந்த்ரியங்களில் உள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் ஒன்றும் விடாமல் அந்தராத்மாவாக நின்று அருளி
நின்னை அறிந்து அறிந்தே-நன்றாக அறிந்தேன் –

‘என்னுடைய சரீரத்தினுள்ளும் உயிருக்குள்ளும் அவையல்லாத இந்திரியங்களுக்குள்ளும் ஒன்றையும் விடாமல் எல்லா இடங்களிலும்
எப்பொழுதும் அந்தராத்துமாவாய் நிற்கின்றவனே! உன்னை அறிந்திருந்தும், இனிமையான வடிவையுடைய உன்னைக்
காணும்பொருட்டுப் பலகாலும் பார்த்து, யான் என் மனத்திற்குள்ளே ஆசைப்படாநின்றேன்; அறிவு இல்லாமையாலே,’ என்கிறார்.

‘நின்னை அறிந்து அறிந்து உன்னைக் காண்பான் நோக்கி நோக்கி எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன்; என்?’ எனில்,
ஞானம் இல்லாமையாலே,’ என முடிக்க. ‘நாள்தோறும் நின்றாய்’ என்க.
நாள்தோறும் – எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.

‘என் பக்கலிலே எப்பொழுதும் உடனிருப்பவனாய் இருந்தே உன்னைக் காட்டாதொழிகிறது நீ நினையாமை என்று அறிந்து வைத்தே,
காண ஆசைப்படாநின்றேன்; அதற்குக் காரணம், என் அறிவு கேடு,’ என்கிறார்.

நோக்கி நோக்கி –
அடுத்து அடுத்து அவன் வரும் திசையையே பார்ப்பார் ஆயிற்று. ‘இப்படிப்பார்ப்பது என்ன பிரயோசனத்துக்கு?’ என்னில்
உன்னைக் காண்பான் –
உன்னைக் காண வேண்டும் என்னும் நசையாலே.
யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன் –
என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார், ‘எனது ஆவியுள்ளே’ என்கிறார்
. ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ?
ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும் பொருளைக் காட்டாநின்றது.
‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில்,
ஞானம் இல்லை –
இது இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற இது
அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில்
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் –
உன்னைப் பெறுவதற்குத் தடையாக உள்ள என் சரீரத்திலும்,
பெற இருக்கிற ஆத்துமாவிலும்,
இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும் விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய்.
கிழிச் சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.
நின்னை அறிந்து அறிந்து –
‘இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,
நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,
தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,
‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,
எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது;
இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று
இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?
அன்றிக்கே,
‘நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய்
நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை;
இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது
செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல்.

. இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும்,
‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும்,
‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும்,
‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும்,
‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலையுடையனாவது’ என்றும் அருளிச்செய்கிறார்.

நாராயணா -பிராப்தம் உண்டு
ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்
துப்பன் -சர்வசக்தன்
ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்

அவி நீதம் நிர் லஜ்ஜம் நீர் தயம் பரம புருஷம் -ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம்

———————————————————————-

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

சாம்சாரிக அறிவு கேடு தீர்ந்தேன் -நெஞ்சுக்குள் நின்ற உன் வடிவு அழகை அனுசந்தித்து –
போக்யமான வடிவை கண்ணாலே காண வேண்டும் என்பதே இப்போது ஆசை
பெரியவன் நீ நிர்பந்தித்து பேசாமல் அருளிச் செய்கிறார்
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–நெஞ்சால் கண்டு கொண்டு -அதனால்
திருத் துழாய் மாலை அணிந்து -சர்வாதிகன் -போக்யதையில் சபலனான நான்
நிரதிசய போக்யன் -பிராப்தனான உன்னை -பிரகாசிப்பிக்க நெஞ்சாலே அபரோஷித்து -நெஞ்சாலே கண்டு –
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே-மயர்வற மதி நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம்
பிராப்யம் பிராபகம் -இரண்டிலும் தெளிந்த ஞானம்
ஆபாத பிரதிபத்தி அறிந்து நுனி புல் மேய்ந்து
அறிந்து அறிந்து தேறி தேறி -யாதாம்ய தாத்பர்ய ஞானம்
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,பரிபூர்ணனான ஞான மூர்த்தி
சம்சயம் விபர்யயம் ஆகிய மலங்கள் -இல்லாமல் -பிரதிஷ்டிதமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;-
அலமந்து தீர்ந்து ஒழிந்தேன்
ஸூசகமாக -அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் -இஷ்ட பிராப்தி அருள வில்லையே
முன்னால் சொன்ன கண்டு கொண்டேன் -நெஞ்சால் -மானச அனுபவம் மாத்ரம் என்றவாறு
மார்பும் மாலையும் ஆன அழகை கண்ணிட்டு காணப் பெற வில்லையே –
ததாமி புத்தி யோகம் -உபாசகனுக்கு சொல்லி -சர்வ தரமான் பரித்யஜ்ய சொன்னீரே –
புத்தியால் அடைவது இல்லை -புத்தியால் அடைவிப்பவனும் நீ-அனுபவிப்பனும் நீ என்று அறிந்தேன் –

‘வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த அம்மானே! நான் உன்னை நெஞ்சாலே கண்டுகொண்டு
அறிந்து அறிந்து தெளிந்து தெளிந்து யான் என் உயிரினுள்ளே நிறைந்திருக்கின்ற ஞானமே திருமேனியாகவுடைய உன்னை,
ஐயம் திரிபுகள் அறும்படி வைத்துப் பிறப்பதும் சாவதுமாய் நிலைபெற்றுத் தடுமாறுகின்ற அறிவின்மை தீர்ந்துவிட்டேன்,’ என்கிறார்.

‘கண்ணி அம்மா! நிறைந்த ஞான மூர்த்தியாயை உன்னை நான் கண்டுகொண்டு அறிந்து தேறி அறிந்து தேறி யான் எனதாவியுள்ளே
நின்மலமாக வைத்து இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்,’ எனக் கூட்டுக. நின்மலம் – மலம் அறும்படி. தீர்ந்தொழிந்தேன் – ஒரு சொல்.
இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது,
‘பேதைமை தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம்.

‘நீர் நம்மைப் போர இன்னாதாகாநின்றீர்; உமக்கு ஒன்றும் உதவிற்றிலேமோ? நாம் ஒன்றும் உதவிற்றிலோம் என்றேயோ நீர்
நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சிறிது செய்தமை உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.

அறிந்து தேறி அறிந்து தேறி –
முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ?
அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்;
பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்;
பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்
இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?
அன்றிக்கே,
இனி, ‘அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கிவேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘
, ‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தையறிந்து தேறி’ என்றபடி
இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டுகொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,
உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம், ‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே,
அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய்
ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,
அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்
கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

யான் –
இப்படி நீ அறிவிக்க அறிந்த யான்.
எனது ஆவியுள்ளே –
எனது மனத்தினுள்ளே.
நிறைந்த ஞான மூர்த்தியாயை –
நிறைந்த ஞானமே உருவமான உன்னை. என்றது, ‘பெற்ற அளவினைக் கொண்டு மனம் நிறைவு பெற்றவனாக
ஒண்ணாதபடியான வேறுபட்ட சிறப்பினையுடைய உன்னை’ என்றபடி.
நின்மலமாக வைத்து –
குற்றம் அறும்படியாக நினைத்து. பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் –
சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவு கேடு தவிரப் பெற்றேன்.
என்றது, ‘அறிவு பிறந்த பின்பு, ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று விரும்பிய அது பெற்றேன்’என்றபடி.
நறுந்துழாயின் கண்ணி வேந்தே –
வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது.
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-
‘இவ்வறிவு பிறந்தமைக்கு’ என்று தொடங்கும் வாக்கியம், ரசோக்தி. ‘பச்சை’என்றது, சிலேடை : திருத்துழாய் என்பதும், உபகாரம் என்பதும் பொருள்.
– நான் உன்னைக் கண்டுகொண்டு –
உன் இனிமையை அறிந்த நான், எல்லையற்ற இனியனான உன்னைக் கண்டுகொண்டு.

‘நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு, அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த
ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்! இது நான் பெற்ற அளவு,’ என்கிறார்.

——————————————————————————–

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

உக்தமான இந்த போக்யதையில் -அபி நிவேசத்தால் அனுபவித்து கைங்கர்யம் செய்ய ஆசைப் படுகிறார்
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, -தடவும் -மநோ ரதம் பூர்த்தியாகும் படி
நின் திருப்பாதங்கள் மேல்-பிராப்தனான உன் திருவடிகளில்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,-ஸ்தோத்ர பூர்வகமாக பரி மாறி -தத் தத் பிரவ்ருதிகளில் ப்ரீதராய்
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே-போக்கு விட்டு ஆடுவதும் பாடுவதாம்படி -சம்சாரத்திலே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.-நெஞ்சில் பிரகாசிப்படுத்திய படி நேரிலே கண்டு கைங்கர்யம் -பெறாத அம்சம் இது என்கிறார்

‘வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த தலைவனே! உன்னைப் பார்த்துக்கொண்டு என் கைகளின் உறாவுதல்
தீரும்படியாக உன் அழகிய திருவடிகளின்மேல் எட்டுத் திசைகளிலுமுள்ள மலர்களைக் கொண்டு தூவித் துதித்து மகிழ்ந்து மகிழ்ந்து
தொண்டராகிய யாங்கள் பாடி ஆடும்படியாகக் கடல் சூழ்ந்துள்ள இவ்வுலகத்திற்குள் வருகின்றாய் இல்லையே!’ என்கிறார்.
‘தொண்டரோங்கள் பாடி ஆடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே வந்திடகில்லாயே!’ என்க.

மேல் திருப்பாசுரத்தில் பெற்ற அமிசம் சொன்னார்; ‘பெறாத அமிசம் இது’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.

கண்டுகொண்டு –
‘காண விரும்பும் என் கண்கள்’-3. 8 : 4. என்கிறபடியே, காணப்பெறாமல் பட்டினி விட்ட கண்கள் பட்டினி தீரும்படி கண்டுகொண்டு.
‘அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண்ணாரக் கண்டுகொண்டு’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே,
இக்கண்களின் வயிறு ஆரக் கண்டுகொண்டு.
என்கைகள் ஆர –
‘தாயவனே என்று தடவும் என்கைகள்’-3. 8 : 3.- என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக.
கலியர், ‘வயிறார உண்ண’ என்னுமாறு போன்று, ‘கைகள் ஆர’ என்கிறார்.
நின் திருப்பாதங்கள் மேல் –
உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார்
திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
‘திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின், ‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.

அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
.முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை
அடைந்தவனாகக் கடவேன்,’ என்பதனைக் கேட்ட ஆளவந்தார், ‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச்செய்தார்.
‘போக்கியதையுண்டானாலும் அடையத்தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘உன்னுடைய’ என்று
தொடங்கி. இது, மாலதீ மாதவ நாடகம்.

எண் திசையும் உள்ள பூக்கொண்டு –
விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின், ‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார்.
தம்முடைய ஆசைக்குத் தகுதியாக ‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார்.
அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று.
இங்ஙனமே அன்றோ கைங்கரிய ருசியுடையார் வார்த்தை இருப்பது?
‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்றாரே அன்றோ இளைய பெருமாள்?
உகந்து உகந்து –
பிரீதி மாறாதே செல்லும்படியாக.
தொண்டரோங்கள் –
இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள். ‘கேசவன் தமர்’க்குப் பின் தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார்.
பாடிஆட
-பிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப் பாடுவது ஆடுவதாம்படி. ‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ?
இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய், ‘மேலே சொல்லப் போகிற
சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் :

சூழ் கடல் ஞாலத்துள்ளே –
கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது,
‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’
வண் துழாயின் கண்ணி வேந்தே –
‘இவ்வுலகத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்குமாறு போலே காட்டவும் வேண்டும்.
நித்தியசூரிகளுக்குக் காட்சி கொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேண்டும்,’ என்பார், ‘துழாயின் கண்ணி வேந்தே’ என்கிறார்.
வந்திடகில்லாயே
வந்திடுகின்றிலை. இதனால் ‘கூவியுங்கொள்ளாயே’ என்றது பற்றாது என்கிறார். இது நான் பெறாத அமிசம்.

‘இவைதாம் இருந்தபடி என்? இந்தச் சரீர சம்பந்தம் அற்றமையும் இல்லை; கைங்கரியம் பெற்றமையும் இல்லை;
இங்ஙனம் இருக்க, ‘இவ்வமிசம் பெற்றேன், இவ்வமிசம் பெற்றிலேன்’ என்கிறபடி என்?’ என்னில்,
ஒன்று குறிக்கோளாய், மற்றையது அதற்கு உறுப்பாய் வருவதே அன்றோ? இவர்தாம் முதலிலே ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றார்;
அவனும் அளவிலா ஆற்றலையுடையவனாய் இருந்தான். ஆதலால், ‘இது கழிந்ததே அன்றோ?’ என்று அதனைப் பெற்றாராக நினைத்திருந்தார்;
கைங்கரியம் அவசியம் பெற்றல்லது நிற்க ஒண்ணாமையாலே, ‘அது கைபுகுராமையைப் பற்றப் பெற்றிலேன்,’ என்கிறார்.

——————————————————————————

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

அனுபாவ்யமான திருவாழி-ஏந்திய உன்னை -அகிஞ்சனனான நான் -எங்கே காண்பேன்
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; -ஒன்றும் இட வில்லை ஒன்றும் அட்டவும் இல்லை -சோறும் தண்ணீரும் கொடுக்க வில்லை
தானரூப கர்ம யோகம் இல்லை -ஞான யோகம் பிறக்காதே -ஆகையால் –
ஐம்புலன் வெல்லகிலேன்;-இந்த்ரியங்களை வெல்ல வில்லை
ஆத்மா சாஷாத்காரம் படிக்கட்டுகள்
ஞானம் ஏற்பட்டு -கர்ம யோகம் செய்து -அழுக்கு போகும் -சித்த சுத்தி ஏற்படும் -ஞான யோகம் தொடங்குவாய் -மேலே ஆத்மா சாஷாத்காரம்
பிராப்யம் புருஷார்த்தம் பகவத் சாஷாத்காரம் பெற -பக்தி யோகம் மேலே -சங்கிலி தொடர் –
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;-பக்தி யோக சரீரத்தில் அந்வயிக்கும் படி ஆராதான அனுரூபமான காலங்களில் –
ஆராதித்து ஸ்துதித்து செய்யவும் இல்லையே -அகிஞ்சனனாக இருக்கச் செய்தே
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்-பற்றின விஷயத்தில் பிரவணனாய்-மாற்ற விடுவிக்க முடியாமல் சிக்கென
அபி நிவேசம் விஞ்சி வர -அனுபவிக்க ஒட்டாத பிரபல பாவங்கள் -இருந்தாலும் அறிவு கேட்டை உடையவனாய்க் கொண்டு அயர்த்து
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?-போக்யமான திருவாழி உடைய –உன்னை தேடுகிறேன்

‘பசியுடையார்க்கு ஒரு பிடிச்சோற்றை இட்டேன் அல்லேன்; தாகமுடையார்க்கு ஒரு மிடறு தண்ணீர் வார்த்தேன் அல்லேன்;
ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன்; கடமையையுடையவனாய் அவ்வக்காலங்களில் பூக்களைப் பறித்துத் துதித்தேன் அல்லேன்;
மடமையையும் வலிமையையுமுடைய மனத்திலே காதல் மிக, கொடிய வினையையுடைய யான் அறிவின்மையால்
சக்கரத்தையுடைய தலைவனைக் காண வேணும் என்று தடவுகின்றேன்; எங்கே காணக்கடவேன்?’ என்கிறார்.

‘வல்வினையேன் சக்கரத்து அண்ணலைக் காணவேண்டுமென்று அயர்ப்பாய்த் தடவுகின்றேன்; எங்குக் காண்பன்?’ எனக் கூட்டுக.
‘காதல் கூரத் தடவுகின்றேன்’ என்க.

‘எம்பெருமானைக் காண்கைக்குத் தகுதியான கர்மயோகம் முதலான உபாயங்களுள் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
நான் ‘காண வேண்டும்’ என்று ஆசைப்பட்டால், காண்கைக்கு வழி உண்டோ?’ என்கிறார்.

இடகிலேன் –
வருந்துகிற உயிர்களைக் கண்டால், ‘ஐயோ!’ என்று இரங்கிச் சில இடில், அது சர்வேசுவரன் திருவுள்ளத்துக்கு
மிகவும் உகப்பே அன்றோ? அங்ஙனம் ஒன்றும் செய்யப் பெற்றிலேன்.
ஒன்று அட்டகில்லேன் –
கையில் பொருளை அவிழ்த்து இடாவிட்டால், உடம்பு நோவத் தண்ணீர் சுமந்து வார்க்கலாமே அன்றோ? அதுவும் செய்திலேன்.
ஐம்புலன் வெல்லகில்லேன் –
‘பிறர்க்கு ஒன்று வேண்டும்’ என்று இராவிட்டால், ‘எனக்கு’ என்னுமதுதான் தவிரப் பெற்றேனோ?’ என்கிறார்;
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களிலே பட்டி போகாதபடி வென்றிலேன்.
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன் –
சாஸ்திரங்களில் சொல்லுகிறபடியே, அடைத்த காலங்களிலே மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு தேவர் திருவடிகளிலே
சிறந்த ஆராதனத்தைச் செய்தேன் இலன். ‘ஆயின், இவர் சமாராதனம் செய்து அறியாரோ?’ என்னில்,
நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச் சொல்லுகிற சமாராதனத்தில் இவர்க்குச் சம்பந்தம் இல்லை;

மேலே, ‘எண்திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர் சமாராதனம் செய்து அறியாரோ? என்னில்,’ என்கிறார்.
‘நூல் பிடித்தாற்போலே’ என்றது, சிலேடை : நூல் – சாஸ்திரமும், முறையும். ‘முறை தப்பாமல்’ என்றபடி.
தேக யாத்திரைக்கு – கைங்கரியத்திற்கு.-அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே செய்துகொடு நிற்பர்.
இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமதுஉண்டு’ என்றபடி.

தேக யாத்திரைக்கு உடலாகச் செய்யுமது உண்டு. ‘இவை உண்டாயினவானால் பத்தி சொரூபத்திலே அடக்கிவிடலாம், அதுவும் இல்லை,’ என்கிறார்.
‘ஆயின், கர்மயோகம் முதலானவற்றை விலக்குகிறதோ?’ எனின், அவற்றினுடைய சொரூபத்தை விலக்க வந்தது அன்று;
அவற்றினுடைய உபாயத் தன்மையை விலக்குகிறது.

மடம் வல் நெஞ்சம் –
மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்து கொண்டு நிற்கை.
வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்கு நின்றும் மீட்க அரிதாய் இருக்கை.
காதல் கூர –
இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் –
‘அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்;
இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்; என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

அயர்ப்பாய் –
அறிவு கேட்டை உடையேனாய். தடவுகின்றேன் – ‘கௌசல்யையே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை,’ என்கிறபடியே,
முன்னே வந்து நின்றாலும் காண மாட்டாதபடி தடவாநின்றேன்.
எங்குக் காண்பன் –
ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்கக் கூப்பிடுகிற நான், எங்கே காணக் கூப்பிடுகின்றேன்?
சக்கரத்து அண்ணலையே –
கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை. எங்கே காணக் கடவேன்? யசோதைப் பிராட்டி கையும் வெண்ணெயுமாகப்
பிடித்துக்கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக்கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
நெய் -கூர்மை -நெய் பூசப்பட்ட என்றுமாம்

————————————————————————

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

வேத வேத்யன் -கையும் திரு ஆழியுமான அழகை ஆசைப் பட்டு -மறந்தும் பிழைக்க ஒட்டாமல் -பிரகாசிக்க வேணுமோ
ஞானக் கண்ணும் ஆபத்திலே முடிந்ததே
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,-கதகத குரலால் -அழகைக் காட்டி -அடிமை கொண்ட உன்னை –
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்;-கிலேசித்தேன்
பாவியேன் காண்கின்றிலேன்;-கண்களால் காண வில்லையே -பிரதிபந்தகமான பிரபல பாபங்கள் செய்தேனே
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை -மறந்து விட முடியாமல்
அபரிச்சின்ன ஞான ஸ்வரூபன் -வேத தீபத்தால் காணப் படுபவன் -வேதத்தை விளக்கினவன் என்றுமாம்
கண்ணால் ஆசைப்பட்டு கிலேசிக்கும் எனக்கு
என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.-மானஸ பிரத்யஷம் இருக்கிறது –
இதுவும் இல்லையே இருந்தால் -ப்ரேமம் -இவ்வளவு இருக்காதே -ஞானமும் விரோதியாய் உள்ளதே –
மதி நலம் -நீர் கொடுத்தது இவ்வளவு படுத்துகிறதே –
நடுவில் சிக்கு அலமாந்து போகிறேன்
காணப் பெறாமையாலே ப்ரேமம் துக்க ஹேது வான பாதி ஞானமும் -ஆந்தர பிரகாசத்தாலே துக்க ஹேது வானதே
மதி நலம் இரண்டுமே துக்க ஹேதுக்கள் ஆனதே –

‘சக்கரத்தையுடைய சுவாமியே!’ என்று சொல்லி அனுபவிக்கப் பெறாமையாலே கீழே விழுந்து கண்களில் நீர் மிகும்படி சுற்றும் பார்த்து
நின்று வருந்தினேன்; பாவத்தைச் செய்த நான் காணப் பெறுகின்றிலேன்; மேம்பட்ட ஞானத்தையே உருவமாக உடையவனும் வேதமாகிற
விளக்காலே காணப்படுகின்றவனுமான எந்தையை எனக்குத் தகுதியான ஞானமாகிற கண்களாலே கண்டு தழுவுவேன்,’ என்பதாம்.

‘காணப் பெறாவிட்டால், மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்கது ஒரு ஞானக்கண் எங்ஙனே உண்டாயிற்று?’ என்கிறார்.

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து –
‘திருவாழியைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!’ என்று இவ் வார்த்தையோடே தரைப்பட்டு.
கண் நீர் ததும்ப –
கண்கள் நீர் மிகைக்கும்படி. இவருடைய துக்கத்தின் எல்லை காண்பது கண்ண நீரிலே காணும்.
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் –
வருகைக்குத் தகுதியுள்ள திசையைப்பார்த்து நின்று வெறுத்தேன். ‘பெரிய ஆபத்தை அடைந்தவனாய்’ என்னுமளவே அன்றோ?
அலர்ந்தேன் -ஆபத்து மிகுதி -ஆபத் சகன் -என்பதை நம்பினேன் -காட்டுகிறார் –
பாவியேன் காண்கின்றிலேன் –
ஆபத்திற்குத் துணைவனாய் இருக்க, மஹா பாவி ஆகையாலே நான் காணப்பெறுகின்றிலேன்.
‘காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’ என்கிறார் மேல் :

மிக்க ஞான மூர்த்தியாய்
நிறைந்த ஞானத்தையே சொரூபமாக உடையவனான.
வேத விளக்கினை –
வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.
அன்றிக்கே, ‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’ என்னலும் ஆம்; என்றது,’ வேதத்திற்கு விளக்காய் இருப்பவன்’ என்றபடி.
வேத விளக்கினை’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்:
முதலது, ‘வேதத்தைத் தனக்கு விளக்காகவுடையவன்’ என்பது; ‘வேதத்தாலே பிரதிபாதிக்கப்படுகின்றவன்’ என்றபடி. இரண்டாவது, ‘வேதத்துக்கு விளக்கு’

என் தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவன் –
எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானக்கண் உண்டாய், அதனாலே கண்டு அனுபவிப்பன்.
காணப் பெறாமையாலே அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம்
ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது,
‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞான பத்திகள் இரண்டும் கழுத்துக் கட்டியாய்விட்டன,’ என்றபடி.
‘மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானமும் வேண்டுமோ?’ என்கிறார்.
கழுத்துக் கட்டி – கழுத்தைக் கட்டுவது; ‘பாதகம்’ என்றபடி. அதாவது, ‘கண்டு அனுபவிக்கவும் ஒட்டாது,
மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி. என்பது.

————————————————————————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

பிரேம பரவசமாய் ஆவார்கள் -பரமபதம் பெறுவார்
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்-அவி நா பூதம் -வேட்கையால் -நிதானம் புண்டரீகாஷன் –
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்-திரண்ட மாடங்கள் -குடிப்பிரப்பை உடைய -நிர்வாகர்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்-பகவத் குணங்கள் ஒன்றும் வழுவாத -ஒண்மை
போதகத்வ வைலஷண்யம் உடைத்தாய் -சர்வாதிகாரமான -திராவிட ரூபம்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.பாவ விருத்தி யுடன் -நெஞ்சு -தழுவி -பொருந்தும் படி
பிரேம பாரவச்யராய் ஆட வல்லவர்கள் அசங்குசித -வி குண்ட -குறைவு இல்லா அனுபவ ஸ்தலம் -ஏறப் பெறுவார்கள்
நினைத்து நினைத்து பார்த்து -பாரிக்க வேண்டுமே –

‘கூட்டங்கூட்டமான மாடங்களையுடைய அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறன் சடகோபராலே, தம்மைத் தழுவிக் கொண்டு
நிற்கின்ற காதலால், தாமரை போன்ற கண்களையுடைய சர்வேசுவரனைப் பற்றி அருளிச்செய்யப்பட்ட குற்றம் இல்லாத பிரகாசம்
பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் மனம் பொருந்தப்பாடி ஆட வல்லவர்கள் பரமபதத்தை அடைவார்கள்,’ என்றவாறு.
‘சடகோபன் தாமரைக் கண்ணனைக் காதலால் சொல் தமிழ்கள் ஆயிரம்’ என்க. தமிழ்கள் – திருப்பாசுரங்கள். ‘வல்லார் ஏறுவர்’ என்க.

‘இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே எப்பொழுதும் சேர்ந்திருக்கலாம்படியான திருநாட்டிலே செல்லப்பெறுவர்,’ என்கிறார்.

தழுவி நின்ற காதல் தன்னால் –
‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன்தன்னை –
இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.-அந்தரங்கர் -என்றுமாம் –

குழுவு மாடம் தென்குருகூர் –
‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை ‘வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’-பரத்வாஜர் பெருமாள் இடம் சொல்வது – என்பது போன்று கொள்க.
பாதுகையை முன்னிட்டு அயோத்யா வாசிகள் திருப்தி பட்டது போலே இங்கே ஆழ்வார் முன்னிட்டு -திரு நகரி குளிர்ந்து தேறின படி –
மாறன் –
சமுசாரத்தை மாற்றினவர்.
சடகோபன் –
பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் பகைவர்.
சொல் வழு இலாத –
பகவானைப் பிரிந்த பிரிவாலே கூப்பிடுகிற இந்நன்மையில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன.
ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப்பாடி ஆட வல்லார் –
ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும்
இதனைக்கற்க வல்லவர்கள். வைகுந்தம் ஏறுவரே –
முதல் -தழுவி -போ என்று சொன்னாலும் போகாத காதல் -ஆழ்வாருக்கு முன்னால் -இங்கு கொஞ்சமாவது அனைய நின்றாகிலும் என்கிறார் –
காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர்.
குழுவு மாடம் – நெருங்கின மாடம். தென்குருகூர் – ஆதலால், ஆழகிய திருநகரி.

——————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா பிரசங்காத்
முனிர் உத்பட துக்க போத
ஆபத் சகத்வம் முகத்
குணம் -ஆபத் சகத்வம்
உச்சயத்
ஆக்ருத்ச வாஞ்சி

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் பந்துத்வ தீப்தம்
நிரவதிக மகானந்தம்
கிராந்த லோகம்
பிதரம் அனுபதிம்
சர்வ பூதாந்தரச்தம்
பூர்ண ஞான ஏக மூர்த்தி
த்ருத சுப துளசிம்
சக்ர நாத
சுருதி நாம் விஸ்ராந்த ஸ்தானம்
கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக

துஸ் சீல
மாம்ஸ சஷூஸ்
நிரவதிக துரித
வீத லஜ்ஜா
விலோலக
ப்ரேஷா ஹீன
அந்ய சங்காத் க்ருத
சீலம் அந்தர் ததார்த்தம்
கர்ம ஜ்ஞனாதி சூன்யன்
நிருபதிக விஹிதான்
ஸூ தோஷான் ஏவம் பிரக்ய
பத்தி குண ரஸ்ய
தத் த்ருஷ்யா

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 37-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு———–37-

—————————————————————–

அவதாரிகை –

இதில்
திரு நாமத்தால் உணர்ந்தவர்
நாமியான நாராயணனை அனுபவிக்கப் பெறாமையாலே
அதி பிராலாபமாய் பிராலாபிக்கிற
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் –
வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே
சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய்
உணர்ந்த அநந்தரம்
பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே
கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய்
அத்தாலே நோவு பட்டு ஆபத் சகனாக
தந்நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய்
கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன்
ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய
நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற
சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை
அருளிச் செய்கிறார்
சீலம் மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –இத்யாதியாலே -என்கை –

—————————————————————————————

வியாக்யானம்–
சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –
பிரணயிநி களோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய
கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று
தோழி சொல்லக் கேட்டு
மோஹம் தெளிந்து –

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு –
உணர்ந்த அநந்தரம்
அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி
அனுபவிக்கைக்கு –
அதாவது
கோல மேனி காண -என்றும்
என் கண் காண -என்றும்
பாவியேன் காண வந்து -என்றும் –
உன் தோள்கள் நான்கையும் கண்டிட -என்றும்
உன்னைக் காண்பான் -என்றும்
நான் உன்னைக் கண்டு கொண்டே -என்றும்
கண்டு கொண்டு -என்றும்
எங்குக் காண்பன் -என்றும் –
தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே-என்று
இப்படி பத்தும் பத்தாக அபேஷித்து

சால வருந்தி –
மிகவும் வருந்தி –
அதாவது
நாராயணா -என்றும்
கூவிக் கூவி -என்றும்
வையம் கொண்ட வாமனாவோ -என்றும்
தாமோதரா -என்றும் –
ஆணி செம்பொன் மேனி எந்தாய் -என்றும்
அப்பனே அடல் ஆழி யானே -என்றும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் -என்றும்
நறும் துழாயின் கண்ணி யம்மா -என்றும்
வண்டுழாயின் கண்ணி வேந்தே -என்றும்
சக்கரத் தண்ணலே -என்றும்
இப்படி பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு –
ஹா ராமா ஹா லஷ்மணா -என்றும்
ந்சைவ தேவீ வீரராம கூஜிதாத் -என்னுமா போலே –

இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு –
காலம் தோறும் -என்றும்
நள்ளிராவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டாள் -என்றும்
கூவிக் கூவி நெஞ்சு உருகி -என்றும்
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து -என்றும்
இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஆழ்வார் –

இது என்னாகப் புகுகிறதோ என்று
இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –

தென் குருகூர் ஏறு –இருந்தனனே –
இனி திரு நகரியில் ஆழ்வார் பிரதான்யம்
எங்கனே நடக்கக் கடவதோ
என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: