பகவத் விஷயம் காலஷேபம் -98- திருவாய்மொழி – -4-7-1….4-7-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

காற்றாலும் வெயிலாலும் அடிபட்டு உலர்ந்த பயிரானது, மழை பெய்தவாறே பச்சை பெற்றுப் பருவம் செய்வது போன்று, மகிழ்ச்சி அடைந்தாள்,’
என்கிறபடியே, மழை பெய்தால் பயிர் பருவம் செய்வது தன் உணர்த்தியால் அன்றே? அப்படியே, திருநாமப் பிரசங்கத்தால் இவர் உணர்ந்தார்.
‘ஆயின், மேல் திருநாமப் பிரசங்கம் உண்டோ?’ எனின், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்று அமிருத சஞ்சீவினியான
திருநாமப் பிரசங்கம் உண்டாயிற்றே அன்றோ? அந்தத் திருநாமப் பிரசங்கமே குளிர்ந்த உபசாரமாக உணர்த்தி உண்டாயிற்று.
அதனால் பெற்ற பலம், முன்புத்தை மயக்கத்தையும் இழப்பதற்கு உறுப்பானது இத்தனை.
மயங்கியிருக்கும் நிலையில் நினைவு இல்லாமையாலே துன்பம் இல்லை;
பிறந்த உணர்த்தி பேற்றுக்குக் காரணம் அல்லாமையாலே துன்பத்தை விளைக்க, அதனாலே கூப்பிடுகிறார்.

உறக்கத்தில் பசி பொறுக்கலாம்; உறக்கத்தினின்றும் உணர்ந்தால் உண்டு அன்றி நிற்க ஒண்ணாதே அன்றோ?
உணர்ந்த பின்னர்ப் பொறுக்க ஒண்ணாதபடி தனக்குப் பிறந்த பயனில் துன்பத்தை நினைத்து, அவன் ஆபத்துக்கு உதவும்
தன்மையனாய் இருக்கிறபடியையும், ஆபத்தின் காரணத்தை அறிந்து அதனைப் போக்குவதில் வல்லன் என்பதனையும் நினைத்து,
ஆபத்துக்கு உதவுகைக்குத் தகுதியான சம்பந்தத்தையுடையவனாவது, பிரிந்தால் பொறுக்க ஒண்ணாதபடியான
வடிவழகையுடையவனாவது, ஆபத்துகளிலே விரோதியைப் போக்கி உதவுகைக்குத் தகுதியான ஆற்றலையுடையவனாவது,
அதற்குத் தகுதியான சாதனங்களையுடையவனாவது, வரையாதே, எல்லாரையும் ஒருசேரப் பாதுகாக்க வல்லவனாவது,
இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக் காணாமையாலே, பரமபதத்திலே இருந்தானாகிலும் அவ்விருப்பு நிலை குலைந்து
வந்து முகம் காட்டும்படி துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே, கேட்டார் அனைவரும் நீராகும்படி கூப்பிடுகிறார்.

‘அதனாலே கூப்பிடுகிறார்’ என்றதனை விரித்து அருளிச்செய்கிறார்,
‘உணர்ந்த பின்னர்’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘ஞாலமுண்டாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆபத்துக்கு உதவும்
தன்மையன்’ என்கிறார்.
‘ஞானமூர்த்தி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,‘ஆபத்தின் காரணத்தை அறிந்து’ என்கிறார்.
‘நாராயணா’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘சம்பந்தத்தையுடையவனாவது’ என்கிறார்.
‘கோலமேனி’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வடிவழகையுடையவனாவது’ என்கிறார்.
‘ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான ஆற்றலையுடையவனாவது’ என்கிறார்.
‘அடலாழியானே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தகுதியான சாதனங்களையுடையவனாவது’ என்கிறார்.
‘வையங்கொண்ட வாமனாவோ’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வரையாதே’ என்கிறார்.
‘வள்ளலேயோ! வாமனாவோ! என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றிக் ‘கூப்பிடுகிறார்’ என்றார்.

‘ஓ கௌசல்யே! ஓ சுமித்திரே! ஓ ராமா! ஓ லக்ஷ்மணா!’ என்றாற்போலேயும், ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளைப் பிரிந்த
ஆற்றாமையாலே ‘பிரியேதி புத்ரேதிச ராக வேதிச’ என்று கூப்பிட்டாற்போலேயும் இவரும் கூப்பிடுகிறார்.

‘ததாபி சூதேந’ என்ற சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு :-
‘ஸ்ரீ கௌசல்யையார்பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீ சுமந்திரன், ‘அவரைப் பிரிந்தோம் என்று
கூப்பிட வேண்டாகாணும்; தாமே வந்து புகுவர்காணும்,’ என்று தேற்றினான்.
சூதேந –
சொன்ன வார்த்தை ‘நம்பத்தகுந்தது’ என்று கைக்கொள்ள வேண்டும்படி அந்தரங்கன் ஆவது, சாரதிகள் சொல்லுவனவெல்லாம் நம்பத்தக்கன அன்றோ?
சுயுக்தவாதிநா –
அஃது இல்லையேயாகிலும் வார்த்தையைக் கேட்டால், ‘இது அப்படியே’ என்று நம்பி ஓடுகிற சோகம் தீரும்படி வார்த்தை சொல்ல வல்லன் ஆவது.
நிவார்யமாணா –
இவனாலே ‘இது வேண்டா’ என்று தடுக்கப்படாநிற்கச்செய்தேயும்.
சுதசோக கர்சிதா –
இப்படி இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில் நீங்காதே அன்றோ, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை?
நெடு நாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் தரிக்கப் போகாதே!
நசைவ தேவீவிரராம கூஜிதாத் –
பிறர் கண்ணீரையும் மாற்றி, இதற்கு முன்பு சோகமும் புதியது உண்ணாதே போந்தவள், கூப்பிடுகிற கூப்பீட்டினின்றும் ஓவிற்றிலள்;
கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கு அடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற்போலேகாணும் கூப்பிடுவது. கூப்பிட்ட பாசுரம்,
பிரியேதி புத்ரேதிச ராகவேதிச –
‘பிரிந்தால் தரிக்க ஒண்ணாதபடி எனக்கு இனியவரே! உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமையை நீக்கும் தன்மையையுடையவரே!
எல்லாரையும் பாதுகாக்கும் குடியிலே பிறந்து, பெற்ற தாயை நலியலாமோ!’ என்று அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.

————————————————————————–

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

அசாதாராண சம்பந்தம் -உண்டே -அகில சத்தையையும் நோக்கும் –
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;-அங்கீ கரியாமல் இருக்கும் படி பாப அதிசயம் –
ஜகத் சிருஷ்டி போலே சங்கல்பம் நினைவு மட்டும் இல்லாமல் செய்த கர்மங்கள் -நினைவாலும் வாக்காலும் கைகளாலும் செய்தோமே
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
அமுது செய்து -தாழ்ந்தவர்களையும் திரு வயிற்றில் வைத்து
பிராப்தியும் உண்டே -அபேஷா நிரபேஷமாக பிரளய ஆபத்தில் -அகிலஉண்டு சத்தையும் நோக்கி
ரஷணம் விரகு அறியும் ஞானமே வடிவம் கொண்டு உள்ளாயே
அப்ருதக் சித்த சம்பந்தமும் உண்டே –வீப்சை-இதுவே கால யாத்ரை -சொல்லி சொல்லி –
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,–காலம் ஒழியாமல் -வியதிரேகத்தில் அழியும் படி ஸ்வ பாவம்
காண வேண்டும் என்ற ஆசையால் தளர்ந்து -கையை தலையில் வைத்து
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே- –
கோல மேனி காண்பதே -இதுவே பரம புருஷார்த்தம்-இதுக்கு உபாயம் அவனே வருவது –
காண வாராய் -பிராப்ய பிராபகம் -இரண்டு சப்தங்களில் -உம்மையே உம்மாலே பெறுவேன்
அழகான சௌந்தர்யம் உடைய உன் வடிவை காட்ட வராமல்
உன் தரத்துக்கு போராது ஆகில் -கூட்டிக் கொள்ளக் கூடாதோ
வர வில்லை -கூவிக் கொள்ளவும் இல்லை

‘உலகத்தை எல்லாம் உண்டவனே! ஞானத்தையே வடிவாக உடையவனே! நாராயணனே!’ என்று என்று யான் இங்கே இருந்துகொண்டு
காலமெல்லாம் கையைத் தலையிலே குவித்துக்கொண்டு அழைத்தால், அழகிய உன் திருமேனியைக் காணும்படி வருகின்றாய் இல்லை;
நீ இருக்குமிடத்திற்குக் கூவிக்கொள்ளுகின்றாயும் இல்லை; ஆதலால், யான் நல்லொழுக்கம் இல்லாத சிறியேன் ஆயினும் என்னால்
செய்யப்பட்ட பாவங்கள் மிகமிகப் பெரியனவாய் இருக்கின்றன,’ என்கிறார்.
சீலம் – ஒழுக்கம். ஓகாரம் – துக்கத்தின் மிகுதிப் பொருளைக் காட்டுவதோர் இடைச்சொல். பூசலிடல் – அழைத்தல். பூசல் – ஒலி.
‘வாராய், கொள்ளாய்’ என்பன, எதிர்மறை முற்றுகள். ‘கூவியும் கொள்ளாய்; ஆதலால், செய்வினை, ஓ பெரிது!’ எனக் கூட்டுக.
இத்திருவாய்மொழி, அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

‘நெடுங்காலம் கூப்பிடச்செய்தேயும், அங்கீகரியாதபடியாக நான் செய்த பாவங்களின் மிகுதி இருக்கிறபடி என்னே!’ என்கிறார்.
காலந்தோறும் யான் இருந்து கைதலை பூசலிட்டால், கூவியும் கொள்ளாய்;செய்வினையோ பெரிதால்,’ என்றதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.

சீலம் இல்லாத –
சீலம் – நன்மை, அதாவது, நல்லொழுக்கம். ‘நல்லொழுக்கத்தைச் சீலம் என்னக்கடவதன்றோ?
இப்போது நன்மை இல்லாவிட்டால், மேல் ஒரு நன்மையை உண்டாக்கிக் கொள்ளுகைக்கு ஓர் இடமும் இல்லை கண்டீர்,’ என்கிறார் மேல்:
சிறியனேலும் –
ஆத்துமா அணுவாய், ஞானம் எங்கும் பரந்ததாய் அன்றோ இருப்பது? ஆற்றாமையாலே ஞான ஒளி அடங்கி,
ஆத்துமாவின் உளதாம் தன்மை ஒன்றே இப்பொழுது இருப்பது ஆயிற்றுக் காணும்.
இப்போதும் ஒரு நன்மை இன்றிக்கே, மேலும் ஒரு நன்மையை ஈட்டிக்கொள்ளுவதற்கு இடம் இல்லாதபடி சிறியனாய் இருந்தேனேயாகிலும்.
‘‘ஆத்துமா அணு அளவினது,’ என்பது எல்லார்க்கும் ஒவ்வாதோ? ‘சிறியன்’என்றதனால் ‘இவருக்கு வாசி யாது?’ என்ன,
‘இங்குச் ‘சிறியன்’ என்கிறது, அணுத்துவமன்று; ஞான சூக்ஷ்மத்தை,’ என்கிறார்,
‘ஆத்துமா’ என்று தொடங்கி. என்றது, ‘அல்லாதார்க்கு ஆத்துமா அணுவாகிலும் ஞான வைபவமாகிலும் உண்டே? அதுவும் எனக்கு இல்லை,’ என்கிறார் என்றபடி.
இதனால், சொரூப சங்கோசம் சொல்லுகிறதன்று; ஞான சங்கோசத்தை நோக்கிச் ‘சிறியன்’ என்கிறார் என்றபடி.

செய்வினை ஓ பெரிது –
செய்த பாவத்தைப் பார்த்தவாறே, ‘சித்து அசித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவங்களையும்’
விளாக்குலை கொள்ளும்படி பெருத்திருந்தது.
அன்றிக்கே, ‘சமுசாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கும் ஈசுவரனுடைய குணங்களைக்காட்டிலும், அவன் தந்த
மதிநலன்களைக்காட்டிலும் பெரிதாய் ஆயிற்று இருக்கிறது,’ என்னுதல்.
அந்த ஞானமும் செயல் அற்றதாய், அந்தக் குணங்களும் நடையாடாநிற்கச்செய்தேயன்றோ பாவம் தொடர்கிறது?
உலகத்தில் பெரியது தத்துவத்திரயம் ஆயிற்று; அவற்றிலும் பெரியதாயிற்று இவருடைய ஞானம்;
இதனையும் விளாக்குலை கொள்ளும்படிகாணும் பாவத்தின் பெருமை இருப்பது.
செய்வினை – இவைதாம் ஈசுவரனைப் போலே சங்கற்பத்தாலே உண்டாக்கப்பட்டன அல்ல ஆதலின், ‘செய்வினை’ என்கிறது,
‘இவையடையச் செய்து அற்றவையே அன்றோ?’ என்றபடி. ஓ – இஃது என்ன ஆச்சரியம்!
அன்றிக்கே, துக்கத்தின் மிகுதியைக் குறிக்க வந்ததாதல்.
‘திருநாமப் பிரசங்கத்தாலே உணரும்படி ஆனாராகில் இவர்க்குப் பாவமாவது என்?’ என்னில்,
அப்படி, தம்முடைய இருப்புக்குத் தாரகமாய் உள்ள சர்வேசுவரனை இப்போது விரும்பியவாறே அனுபவிக்கப் பெறாமையாலே
இழக்கைக்குக் காரணம் பாபமே அன்றோ?

‘மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் – ‘என்னுடைய தீய செயலே’ என்றாளே அன்றோ பிராட்டியும்? ‘என்றது
, என் சொல்லியவாறோ?’ எனின், ‘பகைவர்கள் கூட்டத்தை அடியோடு அழித்து என்னைக் காப்பதற்குத் தகுதியான ஆற்றலையுடையவர்களாவது,
இதற்கு முன்னரெல்லாம் பகைவர்கள் மண்ணுண்ண வளர்ந்து போந்தவர்களாவது, நான்தான் தங்களை அழிய மாறியும் பாதுகாக்க வேண்டும்படி துன்பத்தையுடையவளாயிருப்பது; இப்படியிருக்க, அவர்கள் என்னைப் பார்த்துத் திருவருள் புரியாதிருந்தார்கள்;
இதற்குக் காரணம், அவர்கள் பக்கலிலேயாதல் என் பக்கலிலேயாதல் ஆக வேண்டுமேயன்றோ?
ஆயின், அவர்கள் பக்கல் ஒரு கண்ணழிவு சொல்லலாய் இருந்ததில்லை; இனி, என்னுடைய பாபமேயாமித்தனை,’ என்கிறாள் என்றபடி.
‘நாம்தாம் எல்லாம் அறிகைக்கு முற்றறிவினர்கள் அல்லாமே!’ அறியாதிருப்பது யாதேனும் ஒன்று உண்டாக வேண்டுமே!’ என்பாள்,
‘கிஞ்சித்’ என்கிறாள். காரியத்தைக் கொண்டு காரணம் கற்பிக்கப்படுவது உண்டேயன்றோ?

ஞாலம் உண்டாய் –
‘தங்களுடைய முயற்சியாலே பேறு’ என்று இருப்பவர்கள், பாவங்களின் மிகுதியை நினைத்தால் கழுவாய் செய்ய இழிவார்களத்தனை;
இவர் ‘இதற்குப் பரிஹாரம் அவன் கையிலே’ என்றேயன்றோ அறுதியிட்டிருப்பது?
எப்போதும் ‘கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்’ என்றேயன்றோ இவர் சொல்லுவது?
இதுதான் சுதரிசனமாய் இருக்குமேயன்றோ? ‘பகவானுடைய பலத்தினாலே பகவத் கைங்கரிய ரூபமான கர்மங்களைச் செய்கிறேன்,’ என்ற
ஜிதந்தா தோத்திரத்தையும் ஈண்டுக் காணல் தகும். ஆகையாலே, ‘ஞாலம் உண்டாய்’ என்று அவன் படியை அனுசந்திக்கிறார்.
‘ஆயின், அப்படி அவன் படியை நினைந்து அச்சம் அற்றவர்களாய் இருந்த பேர் உளரோ?’ எனின்,
‘யானைகளையும் புலிகளையும் சிங்கங்களையும் கண்டு பிராட்டி பயப்படவில்லை,’ என்று ஸ்ரீ ராமாயணம் கூறுதலை ஈண்டு நினைக்கத் தகும்.
‘இனி ‘ஞாலமுண்டாய்’ என்றதனால், ‘இனிப் பரிஹாரம் இல்லை’ என்னும்படியான ஆபத்துகளிலே வந்து உதவுமவனன்றோ?
பூமியாகப் பிரளயங்கொள்ளிலோ பாதுகாக்கையாவது? எல்லார்க்கும் உண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால், உதவலாகாதோ?
தங்கள் தங்களுடைய ஆபத்தை அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது?
‘ஆபத்து அறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம்’ என்னும் நிர்ப்பந்தம் உண்டோ?’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, ‘பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமி, தன்னைத்தானே எடுக்க முயற்சி செய்யும் அன்றேயன்றோ தாங்கள் தாங்கள்
செய்த கர்மங்களைத் தாங்கள் போக்கிக் கொள்ளத் தகுதியுள்ளது? சம்பந்தமும் ஆபத்தையுடைய வராகையும் அன்றோ
உனக்குக் காப்பாற்றுவதற்கு வேண்டுவது?’ என்கிறார் என்னுதல்.-
ஆபத்து -சம்பந்தம் -இரண்டும் இருந்தும்- ஆத்மா ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை

‘நாம் உதவி செய்யும் தன்மையோம் ஆனாலும், பேறு இத்தலையாலேயான பின்பு, பேற்றுக்குத் தகுதியான
ஞானம் வேண்டுங்காணும் உதவும் போது!’ என்ன,
ஞானமூர்த்தி –
நிதானம் அறிந்து பாவங்களைப் போக்குவதற்குத் தகுதியான ஞானத்தையே சொரூபமாக உடையவனே! ‘என்றது என் சொல்லியவாறோ?’ எனின்
‘ஆமாறு ஒன்று அறியேன் நான்’, ‘ஆமாறு அறியும் பிரானே’ என்கிறபடியே, ‘என்னை அறிவு கேடன் ஆக்கிக்கொள்ளுகைக்குத்
தகுதியான ஞானம் அன்றோ என் கையில் உள்ளது? இதனைக் கழித்து என்னையும் நல்வழி போக்கும்
ஞானம் உள்ளது உன் கையிலே அன்றோ?’ என்கிறார் என்றபடி.
மேலும், ‘தேவரீரால் அறியப்படாத பொருள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, நான் அறிவது ஒன்றும் இல்லை;
நீ அறியாதது ஒன்றும் இல்லை; நான் செய்ய வல்லது ஒன்றும் இல்லை; நீ செய்யமாட்டாதது ஒன்றும் இல்லை.
யார் காரியம் யாருக்குப் பரம்? ஒருவனுக்குக் கண் தோற்றாதே காலும் நடை தாராதே இருந்தது; ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக்
காலும் நடை தருவதுமாய் இருந்ததானால். யார்க்கு யார் வழி காட்டிப் போவார்?’ என்கிறார் என்றபடி.

‘ஆபத்துக்கு உதவிசெய்பவனுமாய், அறிந்து போக்குதற்குத் தகுதியான ஞானமும் உண்டானாலும் சம்பந்தம்
உள்ள விஷயங்களிலே அன்றோ உதவுவது?’ என்ன,
நாராயணா –
‘இப்படிக் காப்பதற்குச் சம்பந்தம் உள்ளவனே!’ என்கிறார். இதுதான் சரீரமாய் இருப்பதனால் அடிமையாக இருக்கிறது என்றே
அன்றோ இத்தால் சொல்லுகிறது? ஆனால், கேவலம் சரீரமோ, சரீரியைப் பெறுகைக்கு முயற்சி செய்வது?
என்று என்று –
உபாயத்திற்கு உறுப்பான வாத்சல்யம் முதலிய குணங்களும், உபேயத்திற்கு உறுப்பான இறைவனாம் தன்மை முதலிய குணங்களும்
நாராயண பதத்துக்கு அர்த்தமாகையாலே அவ்விரண்டனையும் பற்ற ‘என்று என்று’ என்கிறார்.
இனி, இவர்தாம் ஒரு பிரயோஜனத்திற்காக ஒருகால் சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்குமவர் அல்லரே!
நம் உபாயத்தில் வர்த்தமானம் போலே இதுதான் பிரயோஜனமாய் இருக்குமே இவர்க்கும்! ஆதலின், ‘என்று என்று’ என்கிறார் என்னுதல்.
‘நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை’-முதல் திருவந்தாதி, 95.- அன்றோ இதுதான்? -இனிமையாய் இருக்கும் என்பதற்குப் பிரமாணம்,
வர்த்தமானத்திற்கு நிகழ்காலம் முதலிய பல பொருள் உண்டானாலும், இவ்விடத்தில் இனிமையிலேயே நோக்கு.
இத்திருப்பாசுரத்தில், ‘ஓவாதுரைக்கும்’ என்றதற்கு இரண்டு கருத்து: அதாவது,
ஸஹஸ்ராக்ஷரீ மந்திர ஜபம்போலன்றிக்கே மூச்சு விடாமல் சுலபமாக அநுசந்திக்கலாயிருக்கும்’ என்னுதல்.
‘இனிமையாலே நித்தியமாக அநுசந்திக்கப்படும்’ என்னுதல்

காலந்தோறும் –
‘ஒரு காலத்திலே இதனையும் சொல்லி, வேறு ஒரு காலத்திலே ‘வேறு ஒரு பொருள் வணங்கத் தக்கது’ என்று
அதிலே கால் வாங்குகிறேனோ?’ என்பார், ‘காலந்தோறும்’ என்கிறார்.
யான் இருந்து –
படுவன எல்லாம் பட்டும் நூறே பிராயமாக இருக்கவேண்டுமோ? குணங்களால் மேம்பட்ட ஒருவனைப் பிரிந்தால் முடியவொட்டாது,
‘இன்னமும் காணலாமோ?’ என்னும் நசை.
கை தலை பூசல் இட்டால் –
‘தலையிலே கை வைத்தால் மெய் காட்ட வேண்டாவோ?
அன்றிக்கே, ‘தலையில் கை வைத்துக் கூப்பிட்டால்’ என்னுதல்;
அன்றிக்கே, ‘கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தால்’ என்னுதல்.
கைதலை பூசலிட்டால்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார்:
முதல் கருத்து, ‘பூசல்’ என்று பொருந்துதலாய், தலையிலே கை பொருந்தினால்; அதாவது, ‘அஞ்சலி செய்தால்’ என்பது.
இதனை அருளிச்செய்கிறார், ‘தலையிலே’ என்று தொடங்கி. ‘மெய் காட்ட வேண்டாவோ?’ என்றது, சிலேடை: ‘கோல மேனி’ என்றதிலே நோக்கு.
இரண்டாவது கருத்து, ‘தலையிலே கையை வைத்துக் கூப்பிட்டால்’ என்பது; பூசலிடல் – கூப்பிடுதல்.
மூன்றாவது கருத்து, ‘காலந்தோறும் இருந்து அஞ்சலி இட்டால்’ என்பது; அதாவது, ‘இத்தலையில் அஞ்சலி மாறாமல் ஒருபடியே
இருந்தால்’ என்றபடி. பூசல் பொருந்துதல்.

கோலம் மேனி –
ஆசைப்பட்டார்க்கு அன்றாகில், அவ்வடிவு யார்க்கு? ‘உனது திருமேனியும் உனக்காக அன்று; பத்தர்களுக்காகவே,’ என்றே
அன்றோ சாஸ்திரம் சொல்லுகிறது? சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப்போலே,
வேட்டார்க்கு உதவாத தண்ணீர் ஆவதே! ‘மரகத மணித்தடம்’ என்னப்படுமவன் அன்றோ அவன்?

காண –
கருமுகை மாலை தேடுவார், சூட அன்றிக்கே, சும்மாட்டைக் கொள்ளத் தேடுவர்களோ?
கிட்டினாலும் ‘ஸதா பஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்’ என்பதே அன்றோ?
‘காரார் திருமேனி காணுமளவு’மே -சிறிய திருமடல், 69.-அன்றோ இங்கும்?
‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’- ஸ்ரீராமா. சுந். 25 : 16.- இத்தனையே அன்றோ?
‘என் கணவனைப் புண்ணியம் செய்த மகா புருஷர்கள் பார்க்கிறார்கள்,’- என்கிறபடியே,
நாடாகக் கொள்ளை கொள்ளா நின்றது கண்டீர் என்றாளே அன்றோ பிராட்டியும்?

வாராய் –
‘வாராய்’ என்றதனால் உபாயம் சொல்லுகிறது. அவ்வடிவைக் காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கை போலே காணும் முறை.
‘நீ முறை செய்யப் பார்த்திலையேயாகிலும், என் துன்பம் தீரும் அத்தனையே எனக்கு வேண்டுவது,’ என்கிறார்.
காண -பிராப்யம் -தர்சனமே பிராப்யம் -வாராய் -பிராபபகம் -அவனே உபாயம்

கூவியும் கொள்ளாயே –
முறை கெட அழைத்தாகிலும் கொள்ளுகின்றிலை.காலந்தோறும் யான் இருந்து கைதலை பூசல் இட்டால் கோல மேனி காண
வருகின்றிலை; கூவியும் கொள்ளுகின்றிலை; இதற்குக் காரணம், சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்,’ எனக் கூட்டுக.
‘நாராயணன்’ என்கையாலே, இறை நிலை சொல்லிற்று; ‘சிறியன்’ என்கையாலே, உயிர்நிலை சொல்லிற்று;
‘வாராய்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘காண’ என்கையாலே, பலம் சொல்லிற்று;
‘செய்வினையோ பெரிதால்’ என்கையாலே, விரோதி சொல்லிற்று; ஆக, ஐந்து பொருள்களும் இத்திருப்பாசுரத்திலே சொல்லப்பட்டன.

ப்ராசாங்கிகம் -த்வயார்த்தம்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -ஞான சக்தியாதிகள்
நாராயணா -ஆஸ்ரையான சௌகர்யர் ஆபாதாக
ஞாலம் உண்டான் -ரஷகம் -சப்த சாமர்த்தியத்தால் ஸ்ரீ மத் பதார்த்தமும்
கோல மேனி -சரண -திருவடி -சப்தார்த்தம்
வாராய் -சரண உபாயம் சப்தார்த்தம்
கை தலை பூசல் இட்டால் கிரியா பிரபத்யே பிரபதனம்
பதில் கதௌ தாது -காலம் தோறும் -மகா விஸ்வாசம்-பிரகர்ஷனே பிரபர்த்யே
யான் -உத்தம அதிகாரி -அஹம் –
என்று என்று -பூர்வ உத்தர வாக்யமும் கிரியா பதம்/வர்த்தமானம் –
காண -சதுர்யதமான பிராப்யம் -ஆய –
செய்வினையோ பெரிது -நமஸ் -அவித்யாதி கழி உண்ணும்

—————————————————————————————–

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-

அனந்யார்ஹன் ஆக்கி அனுபவிப்பித்த ஔதார்யம் –
என் வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
மகா பலி அனுபவித்த வையத்தை அனன்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஔதார்யம்
உபகாரத்வத்தை அனுபவிக்கக் கொடுத்து -என்
ஆனந்த சமுத்ரத்தை –
அனுபவ சமயத்தில் போதும் என்ற எண்ணம் வந்தால் கோது -வேறு ஒன்றில் போனாலும் கோது -அந்ய ஆங்காஷை
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்-மத்திய இரவில் -பகலிலும் -உன்னை ஒழிய செல்லாமை -அந்ய வியாபாரம் இல்லாமல் இருந்து –
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.-நெஞ்சுக்குள் இருந்து கண்ணுக்கு வாராமல் கிரித்ரிமன்
கண்டு அல்லது தரிக்க ஒண்ணாத
தருகிறது இல்லை -ஈயாய் -தர வேணும் -ஒ விஷாதம்

‘பூவுலகை அளந்துகொண்ட வாமனனே! குற்றம் இல்லாதனவும் அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாதனவுமான ஆனந்தக்கடலைக்
கொடுக்கின்ற வள்ளலே!’ என்று என்று நள் இராவும் நன்பகலும் நான் இருந்து அழைத்தால், கள்ள மாயனே! உன்னை என் கண்கள்
காணும்படியாக நடந்து வந்து திருவருள் புரிதல் வேண்டும் என்கிறார்,’ என்றவாறு.
‘கோதில’ என்பது, இன்பத்திற்கு அடைமொழி. ‘கோதில்லாதனவும் கொள்ள மாளாதனவுமான இன்பம்’ என்க. கோது – குற்றம்.
நல் – செறிவு. ‘வந்து ஈயாய்’ என்க. ‘ஈயாய்’ என்பது விதி வினை; ‘ஈதல் வேண்டும்’ என்பது பொருள். இனி, இதனை
மறைவினையாகக் கொண்டு, ‘ஈகின்றிலை, கொடுக்கின்றிலை’ என்னலுமாம். ஓகாரங்கள் துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன.

‘முன்பு செய்த உபகாரங்களைச் சொல்லி, அப்படி உபகரித்து உன் இனிமையை
அறிவித்து, இப்போது நான் கூப்பிட முகங்காட்டாதே எழவாங்கி இருத்தல் போருமோ?’ என்கிறார்.

கொள்ள மாளா இன்பவெள்ளம் –
அனுபவிக்க அனுபவிக்கக் குறை பிறவாதபடியான ஆனந்த மாக்கடல்;
‘வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்,’ என்றதனைச் சொல்லுகிறார்.
கோது இல தந்திடும் –
ஆனந்தத்திற்குக் கோது ஆகிறது, ‘அனுபவித்தால் அமையும்’ என்றிருத்தல்;
வேறு விஷயங்களிலே ஆசையை உண்டாக்குதல் செய்கை;
இஃது அங்ஙன் அன்றிக்கே, அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும்
பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ என்கிறார்.
ஆக, ‘கோது இலவாய்க் கொள்ளக்கொள்ள மாளாதபடியான ஆனந்த வெள்ளத்தைத் தந்தவன்’ என்றபடி.

என் வள்ளலேயோ –
தருகிற போது உன் பேறாகத் தந்து, இப்போது பேறு என்னது ஆக்கி, நான் கூப்பிட இருக்கிறாயே?
வள்ளல் தனமாவது, தன் பேறாகக் கொடுத்தலே அன்றோ? ‘ஆனந்தமய’, ‘ஆனந்தோ பிரஹ்ம’ என்கிற தன்னை உபகரித்தபடி அன்றோ?
இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ என்கிறார்.
நடுவிலே மயங்கி அன்றோ தீர்ப்பாரையில் -சிறியதுக்கு இனியது இட்டுக் கெடுத்தான் காணும். ‘சிறியன்’ என்றாரே தம்மை.
வையம் கொண்ட வாமனாவோ –
இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? ‘மூன்று உலக ஆட்சியையும் இழந்தேன்’ என்று காலிலே விழுந்த
இந்திரனைக் கண்ணநீரை மாற்றுகைக்காக, திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளன் ஆக்கினானே அன்றோ? என்றது,
‘நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’ என்கிறார் என்றபடி.

என்று என்று –
இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர், மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர்,
எப்போதும் இதனையே சொல்லி. வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது;
ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார்.-வையம் கொண்டபின் திரிவிக்ரமன் அன்றோ –
நள் இராவும் –
‘நள்’ என்று நடுவாதல்; செறிவாதல்; இரவில் மற்றைய பொருள்களின் ஒலி மாறினால் வருவதொரு ஒலியுண்டு, அந்த ஒலியாதல்.
எல்லாவற்றாலும் பலித்த பொருள், ‘நடு இரவு’ என்பது,
‘இந்தப் பூதங்கள் தூங்குகிற காலத்தில் எவன் விழித்துக்கொண்டு இருக்கிறானோ’ என்கிறபடியே,
‘நீ உணர்ந்து கூப்பிடும்படி செய்வதே!’ என்பார், ‘நள்ளிராவும்’ என்கிறார்.
நன்பகலும் –
‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியோடு வேற்றுமை அற, பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகையாலே ‘நன்பகல்’ என்கிறார்.
அன்றிக்கே, புறம்பு ஒரு விஷயத்தை அனுபவித்தால், காணாத போது மறந்து -வேறு ஒன்றிலேயும் நெஞ்சை வைக்கலாம்படி இருக்குமே அன்றோ?
அவனைக் காணப் பெறாமையாலே பாழ் அடைந்த காலம் ஆகையாலே, செவ்வாய்க் கிழமையை
மங்களவாரம் என்னுமாறுபோன்று ‘நன்பகல்’ என்கிறார் என்னலுமாம்.
நான் இருந்து –
கூப்பிடுகைக்கு ஆற்றலன் அல்லாதபடி பலமற்றவனான நான் இருந்து.
அன்றிக்கே, ‘வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நான் இருந்து’ என்னலுமாம்.
ஓலம் இட்டால் –
கூப்பிட்டால்.
கள்ள மாயா – கண்களால் பார்க்க ஒண்ணாதபடியாக்கி, நெஞ்சிலே மறக்கவொண்ணாதபடி செய்கிற ஆச்சரியத்தை உடையவனே!
உன்னை – கண்டு அல்லது தரிக்கவொண்ணாதபடியான சிறப்பினையுடைய உன்னை; ‘கோலம் மேனி’யே அன்றோ?
என் கண் காண –
விரும்பும் என் கண்கள் காணும்படி. வந்து ஈயாய் – திருவாய். 3. 8 : 4.– நடையழகு கண்டு வாழும்படி முன்னே நடந்து வந்து தர வேண்டும்.
அன்றிக்கே, ‘பிராட்டியைப் பிரிந்து ஒரு கணமும் பிழைத்திருக்க மாட்டேன்!’ என்றும்,
‘இப்படிப்பட்ட பிராமணர்கள் வந்து என்னைத் தஞ்சம் அடைந்தார்கள் என்பது எனக்கே நாணமாய் இருக்கின்றது!’ என்றும் கூறும்படி இருக்கையாலே,
‘இவன் பக்கல் ஒரு குறை இல்லையாகாதே!’ என்று தோற்றும்படி ஆயிற்று வருவது. உன்னை நீயே கொண்டு வந்து தரவேண்டும்.
தந்தோமே – ‘அல்லாதார் இப்படிக் கூப்பிடாதிருக்க, உம்மை நம்மையே சொல்லிக் கூப்பிடச் செய்தோமே!’ என்ன,
‘அதனால் போராது,
கண் காண வந்து ஈயாய்,’ என்கிறார். என்றது,
‘மாநச அனுபவத்தால் போராது; கண்களுக்கு இலக்காம்படி வரவேண்டும்’ என்றபடி.
‘ஈயாய்’ என்பதற்கு, ‘ஈகின்றிலை’ என்னலுமாம்;அங்ஙனம் கொள்ளுமிடத்துச் ‘செய்விவினையோ பெரிதால்’ என்ற மேல் பாசுரத்தோடே கூட்டுக.

————————————————————————————

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

அனன்யார்ஹர் பக்கல் அத்யந்த பவ்யன் -தாமோதரன் -உன்னை அழைத்துக் கூப்பிட்டால்
பாபம் செய்த நீ கூப்பிடுவது -என் என்று கண் முன்னே வந்து சொல்ல வேண்டும்
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?-அனந்த கல்பம் அனுபவித்தாலும் விநாசம் ஆகாத –
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,-அளந்து உனது ஆக்க்கிக் கொண்டே
யசோதைக்கு கட்டவும் அடிக்கவும்
தாம்பு உதரத்தில் -ஆஸ்ரித பரதந்த்ரன் பட்டம் கொண்ட
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,-ஆர்த்தி உடன் நின்றால்
காணப் பெறாத பாவி -காணும் படி முன்னே வந்து
பாவி காண் ஓன்று
காண வந்து சொன்னால் அதுவும் அமையும்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே
காண வந்தால் பா கூட சொல்ல முடியாதே பாபம் போகுமே
காணப் பெறாத பாபம் மட்டும் இல்லை -தர்சித்த மாதரத்தில் அனைத்து பாபங்களும் போகுமே -உபநிஷத் –

‘அழியக் கூடியன அல்லாத பாவங்கள் எத்தனை செய்தேனோ அறியேன்! பூலோகத்தை அளந்துகொண்ட எந்தையே! தாமோதரனே!’
என்று என்று கூவிக்கூவி நெஞ்சம் உருகிக் கண்களிலே நீர் சோரும்படி நின்றால், பாவியேன் காணும்படி முன்னே வந்து
‘நீ பாவி’ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுகின்றாய் இல்லையே!’ என்கிறார்.

‘ஈ’ என்பது, ‘வீ’ என்ற சொல்லின் விகாரம்; தழல் – அழல், மலர் – அலர் என்பன போன்று வந்தது. வீ – அழிவு.
‘ஈபாவம் செய்து’ என்றார் முன்னரும். (திருவாய். 2. 2 : 2) சொல்லாய் என்பது, விதி மறை இரண்டற்கும் பொதுவான முற்று.
சொல்லுவாய் என்ற பொருளில் விதி; சொல்லமாட்டாய் என்ற பொருளில் மறை. ‘காண வந்து ஒன்று சொல்லாய்;
ஆதலால், பாவியேன் ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்’ என்க.

எனக்கு உன்னைக் காட்டாதொழிந்தால், ‘நீ என்னைப் பார்ப்பதற்கு நல்வினை செய்தாய் இல்லை,’ என்றாகிலும்
என் கண்முன்னே வந்து ஒரு வார்த்தை சொல்லுகின்றிலை,’ என்கிறார்.

ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன் கொல் –
நான்தான் பெரிய பாவத்தைப் பண்ணுகிறேன்; அனுபவித்தாலும் மாளாதபடியான பாவத்தைச் செய்ய வேண்டுமோ?
‘கர்மங்கள் அவசியம் அனுபவித்தே தீர்க்க வேண்டும்; அனுபவிக்கப்படாத கர்மங்கள் பல கோடி கற்ப காலங்கள்
கழிந்தாலும் நாசத்தை அடையமாட்டா, என்கிற வசனமும் என் அளவிலே பொய்யோ? அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ?
அனுபவிக்காத கர்மம் தொலையாது
அனுபவித்த கர்மம் தொலைய வேண்டுமே
நானோ அனுபவித்தேனே -ஆனால் கர்மம் தொலைய வில்லையே –
‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், -அரை ஷணம்-சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ?
‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார், ‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார்.
தாவி வையம் கொண்ட எந்தாய் –
அரிய செயல்களையும் வருத்தம் அறச் செய்ய வல்லவன் அன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் காக்குமவன் அன்றோ?
அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்; அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.
தாமோதரா –
‘நீ எங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்’ என்று சிலர் இரக்க, அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவும் ஆம்படி உன்னைப் பரதந்திரன்
ஆக்கினவன் அன்றோ? உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவுகண்டு கட்டுண்டு அடி உண்டது?

என்று என்று –
இதனை-தாமோதரா – ஒருகால் சொல்லி, பின்பு வேறு ஒன்றனைச் சொல்லுமவர் அன்றே!
கூவிக் கூவி –
இத்தகைய பெருஞ்செயல்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கூப்பிட்டு.
நெஞ்சு உருகி –
முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு,
நெஞ்சமானது நீர்ப்பண்டமாய் உருகும் ஆயிற்று.
கண் பனிசோர நின்றால் –
உருகின மனத்திற்குப் போக்குக் கண்டு – விடுமாறு போலே கண்ணநீர் பெருக்கு எடுக்கும்படி நின்றால்.
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் –
‘இந்திரனுக்கு உதவினோம், யசோதை, முதலானவர்கட்கு உதவினோம்,’ என்றதனை நினைத்து நசை பண்ணுகிறது என்?
‘இந்திரன் சத்துவகுணத்தையுடையவன்; யசோதை தாய்; நீ பாவி’ என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ?
‘இந்திரனைச் சத்துவகுணத்தை உடையவன் என்னலாமோ?’ எனின், ‘தேவர்களையும் அசுரர்களையும் வேறுபடுத்திப் பார்க்கும்
வகையில் அவனையும் சத்துவ குணத்தையுடையவன் என்னலாமே அன்றோ? நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை
சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்.

‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை;
உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.

ஆனால், அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு; ‘என்னை?’ எனின், அதனைச் சொல்லுகிறார் மேல்:
பாவியேன் காண வந்து –
‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்; நாடு முழுதும் உண்டு உடுத்துத் திரியாநிற்க,
இப்படிக் கேளாவிடில் உய்யாதபடி பாவத்தைச் செய்தேன்,’ என்பார், தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார்.
‘நெஞ்சிலே மறைந்து நின்று சொல்லிலும் ஆமே அன்றோ? அத்தால் போராது’ என்பார், ‘காண வந்து’ என்கிறார்.
‘சொல்லாய், காண,’ என்கிறார்;
நாடு அடையே உண்டியே உடையே போகும் பொழுது இவர் சப்தாதி விஷய பிராவண்யம் –
இவற்றால், இவருடைய ஐம்பொறி இன்பங்களின் ஈடுபாடு இருக்கிறபடி. ‘சொல்ல மாட்டுகின்றிலை’ ஆதலால்,
‘ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்!’ எனக் கூட்டுக.
இனி, ‘சொல்லாய்’ என்பதற்குச் சொல்ல வேண்டும் என்று பொருள் கூறலுமாம்.-
சொல்லாய்’ என்கையாலே, செவி. ‘காண வந்து’ என்கையாலே, கண்.
‘சொல்லாய்’ என்பதற்கு இரு வகையான பொருள் அருளிச்செய்கிறார்; முதல் வகை, மறைவினை. இரண்டாவது வகை, விதி வினை.

————————————————————————————

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

ப்ரஹ்மாதிகள் உபாசனம் செய்தும் காண முடியாத உன்னை ஸ்ப்ருஹணீயமான வடிவு அழகைக் கொண்டு -காண
அழவும் கதறவும் வெட்கம் இல்லாத –
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,-ஒளி படும் படி -பிரகாசிக்க -ஆழ்வாரைக் கண்டதும் –
பாவி சொல்ல முடியாதே -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -கிருஷி பலித்ததே –
நிரதிசய போக்யன்-ஆனந்தமாக பார்க்க -ஆரம்பமே தொடங்கி நான் காணும் படி -பிரதம பரிஸ்கந்தம் தொடங்கி –
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,-பலகாலம் சொல்லி
ஒட்டு அற்ற -அதிக மாற்று -26 -இல்லாத உவமை -அபூத உவமை –
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்-வெட்கம் இல்லாமல் -இருக்கிற இடமே -சம்சாரம்
-நானும் அல்பன் -இதுவும் பகவத் விஷயத்தை அகற்றும் தேசம்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?—ஞான பிரேம அனுரூபமாக பேணி -பெருமை உடைய ஸ்வாமியை

‘பிரமன் முதலான தேவர்கள் விரும்பியும் காண முடியாத பெருமை பொருந்திய சுவாமியை, ஓட்டு அற்ற ஆணிச் செம்பொன் போன்ற
திருமேனியையுடைய எந்தையே! உன் தாமரை போன்ற கண்கள் விளங்கும்படியாக, நான் காணும்படி வந்து என் கண்களின் முன்னே
நிற்கவேண்டும் என்று என்று வெட்கம் இல்லாத சிறுதகையேனாகிய நான், இந்த உலகத்திலே இருந்துகொண்டு
அலற்றுவதனால் என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.
‘வானோர் பேணிக் காணமாட்டாத பீடுடை அப்பனை, ‘எந்தையே! நின் தாமரைக்கண் பிறழக் காண வந்து கண்முகப்பே நின்றருளாய்’ என்று
என்று சிறுதகையேன் இங்கு அலற்றுவது என்?’ எனக் கூட்டுக. ‘பிறழ நின்றருளாய்’ என்றும், ‘காண வந்து நின்றருளாய்’ என்றும்
தனித்தனியே கூட்டுக. ஆணி – மாற்றுயர்ந்த பொன்.

‘தாம் காணும்படியாக வரவேண்டும் என்றார்; இவ்வுலக சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகள் அனுபவிக்கும் வடிவை,
பிரமன் சிவன் முதலானோர்களும் காணமாட்டாததை நான் காணவேண்டும் என்று ஆசைப்படுகிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு?
இதற்குக் காரணம், என்னுடைய நாணம் இன்மையும் ஞானம் இன்மையுமே அன்றோ?’ என்கிறார்.

காண வந்து
‘மானச அனுபவம் மாத்திரம் அன்றிக்கே, கண்களாலே, காணும்படிக்குத் தகுதியாக வந்து’ என்னுதல்;
அன்றிக்கே, ‘புறப்படுதல் தொடங்கி நான் கண்டு அனுபவிக்கும்படிக்குத் தகுதியாய் வந்து’ என்னுதல்.
‘ஆணிச்செம்பொன் மேனி எந்தாய்! என் கண்முகப்பே நின்றருளாய்,’ என்பார் ஆயிற்று.
ஸ்வ இதர சமஸ்த வி லஷணமான ஸ்வரூப ஔஜ்வல்யம் உடையவன் –ஆணிப் பொன் / செம் பொன் /
பொன்னை மாற்றி -செம் பொன் -மேலே ஆணி செம் பொன்-ஆணிப்பொன் – அதிகமாற்றுடைய பொன்.
‘மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே!’ -திருவிருத்தம், 85.-என்கிற இவ்வாணியை இட்டுப் பார்த்தவாறே,
‘சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது’ என்றதுவும் மழுங்கிக் காட்டிற்று ஆதலின்,
‘ஆணிப்பொன்மேனி’ என்னாது, ‘ஆணிச்செம்பொன் மேனி’ என்கிறார்.
நாவாகிற உரைகல்லிலே உரைத்து-என்னாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்’ என்ற பெரியாழ்வார் திருமொழி அநுசந்தேயம்.-,
நெஞ்சாகிற மெழுகிலே இட்டுப் பார்த்தால், அது தள்ளுண்ணுமே அன்றோ? இவர்தாம் கண் ஆணியாக அன்றோ காண்பது?
‘மாற்று அற்ற பொன் போலே இருக்கும் திருமேனியில் அழகினைக் காட்டி என்னை உனக்கே உரியவன் ஆகும்படி செய்தவனே!’ என்பார்,
‘செம்பொன் மேனி எந்தாய்!’ என்கிறார். ‘பொன் ஆனாய்’ –திருநெடுந்தாண்டகம், 10.-என்கிற தன்னைக் காட்டிக்காணும் இவரை அடிமை கொண்டது.

எப்போதும் ஒரே தன்மையாய் இருக்கும் அவன் வடிவிலே ஆழ்வாரைக் கண்டால் பிறக்கும் விகாரம் சொல்லுகிறது மேல் :
தாமரைக் கண் பிறழ –
‘கடல் கலங்கினாற்போலே, ஆழ்வாரைக் கண்ட காட்சியிலே திருக்கண்கள் மிளிர’ என்னுதல்.
கண் கரு விழியால் காண -ஆழ்வாருக்கு உரைகல்லே வேண்டாமே -இத்தைக் கண்ட வாறே அவன் தாமரைக் கண் மிளிர –
அன்றிக்கே, ‘திரு கண்கள் விளங்க’ என்னுதல்.
நின்றருளாய் –
என் கண் வட்டத்திலே நிற்க வேண்டும். என்று என்று –
‘நான் உனக்குக் கொடுக்கிறேன், நீ எனக்குக் கொடு’ என்னுமவர்களே அன்றோ ஒருகால் சொல்லுவார்கள்?’ என்றது,
அவன் கண்வட்டத்திலே வந்தால், இவன் போவதற்கு முன்னர்ப் பிரயோஜனத்திற்கு மடி ஏற்போம் என்பவர்களைத் தெரிவித்தபடி.
நாணம் இல்லாச் சிறுதகையேன் –
என்னுடைய முன்னைய ஒழுக்கத்தை நினைக்கமாட்டாத நாணம் இல்லாதவனும், மிகச்சிறியனுமான நான்.
சிறுதகையேன் – சிறிய ஞானத்தன். பிரமன் முதலானோர்களும் நித்திய சூரிகளுடைய கோடியிலே யாம்படி இவர் தம்மைச் சிறுக
நினைத்திருக்கிறார் ஆதலின், ‘சிறுதகையேன்’ என்கிறார். இதனால், ‘யார் சொல்லும் வார்த்தையை யார் சொல்லுவது?’ என்கிறார்.

நான் இங்கு அலற்றுவது என் –
அவனுக்கு அடியிட ஒண்ணாத நிலத்திலே இருந்து கூப்பிடுகிற இதற்கு என்ன பிரயோசனம் உண்டு?
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனை –
‘பூமியில் கால் இடாதவர்களாலேதான் காணப்போமோ?’ என்பார், ‘வானோர்’ என்கிறார்.
பிரமன் முதலானோர்கட்கும் உபாசிக்குந்தொழில் உண்டு; ஆதலின், ‘பேணி’ என்கிறார்.
பேணுதல் – ஆசைப்படுதல்; அதனாலே, உபாசனத்தைச் சொல்லுகிறது. ‘உபாசனத்திற்கு வேண்டிய சாதனங்கள் உண்டு;
ஆகையாலே, மனிதர்களுக்கு மேலேயுள்ள தேவர்களுக்கும் உபாசனத்தில் அதிகாரம் உண்டு,’ என்பது சூத்திரம்.
தது உபர் அபி பாதராயணா -சம்பவாத் -சூத்ரம்
இவ்விரண்டும் -அர்த்தித்வம் -சாமர்த்தியம் உண்டே
அர்த்தித்வம் -தாபத்ரயம் பிறந்த துக்கம் போக்கிக் கொள்ள -நம்மைப் போலே இவர்களுக்கும் உண்டே -நிரதிசய சுக ரூப ப்ரஹ்ம அபேஷா –
சாமர்த்தியம் -படுதர தேக இந்த்ரியாணி -மத்வம் பிரார்த்தித்து –
இதனால் உபாசிப்பவர்கள் –

ஆக, பேணி வானோர் காண மாட்டாப் பீடு உண்டு. பீடு – பெருமை;
‘அதனையுடைய சர்வேசுவரனை, நாணமில்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்?’ என்கிறார் என்றபடி.

ஆரா தனஞ்செய்து கண்டன் நின் கீர்த்தி அறைவன்,திரு
ஆரா தனம்செய்வன் வேதா என்றால்,அடியே ன்புகழ்கைக்கு
ஆரா தனஞ்செய்ய போதாந் திருமகளாக!பல்பூண்
ஆரா! தனஞ்செயன் பாகா! அரங்கத் தமர்ந்தவனே!–என்றார் திவ்விய கவியும்.

——————————————————————————

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

சதுர் புஜத்வம் காண -நசையால் -தேவர்களும் துர்லபனாய் இருக்கையாலே –
ஆஸ்ரிதர் அரும் தொழில் செய்தாயே -கடைந்த பொழுதை உன் பரந்த தோள்களைக் காண ஆசை கொண்டேன் –
அவர்கள் கண்டார்களே
அப்பனே!அடல் ஆழி யானே! -சத்தையே தொடங்கி நோக்கும் உபகாரகன் -தேவாத்மா விபாகம் அறிவித்து –
அகங்காரம் போக்கி -பரம்பரைகள் பல உண்டே அவன் செய்து அருளிய கிருஷிகள்
விரோதி நிரசன பரிகாரம் கொண்டவனே
ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!‘-அகாத கடலை கடைந்து அபேஷிதம் கொடுத்து அருளி
மிடுக்கன் -பிரயோஜ நாந்தர பரர்களுக்கும் -செய்தாயே -அக்காலத்தில் உனது அனுபாவ்யமான
உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று-நான்கும் கண்டிடக் கூடுமோ –
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, -சர்வ காலமும் -கண்ண நீர் கொண்டு
ஆவி துவர்ந்து துவர்ந்து,-உலர்ந்து வற்றி
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே-சபலன்-திக்குகள் ஆகாசம் -தூண்கள் -பூமி -எங்கும் நோக்குவேனே

‘எந்தையே! வலிமை பொருந்திய சக்கரத்தை உடையவனே! ஆழ்ந்துள்ள திருப்பாற்கடலைக் கடைந்த வலிமையை உடையவனே!
‘உன்னுடைய தோள்கள் நான்கனையும் கண்டதாய் விடக்கூடுமோ?’ என்று, எப்பொழுதும் கண்ணும் கண்ணீருமாய் நின்று என் உயிரும்
பசையற உலர, இந்தக் கணத்திலேயே வரவேண்டும் என்று விரும்பி, அறிவில்லாத யான், நீ வரக்கூடிய திசையைப் பார்ப்பேன்,’ என்றவாறு.

‘கூடுங்கொல் என்று கண்ணநீர் கொண்டு துவர்ந்து துவர்ந்து நோக்குவன்’, என்க. ஏழையேன் – அறிவில்லாதவனான யான்; சபலனான நான்.

‘பிரமன் சிவன் முதலானோர்கட்கும் காண முடியாதிருக்கிற உன்னுடைய வடிவழகைக் காணவேண்டும் என்று
ஆசைப்படாநின்றேன்; என் ஆசை இருந்தபடி என்?’ என்கிறார்.

அப்பனே –
நீ முகங்காட்டாத போதும் நான் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படி எனக்கு இவ்வளவான பெரிய உபகாரத்தைச் செய்தவனே!
அடல் ஆழியானே –
மிடுக்கையுடைய சக்கரத்தை உடையவனே! அன்றிக்கே, ‘எப்போதும் ஒக்கப் போர் செய்தற்கு ஆயத்தமாக இருப்பவனும்,
விரோதிகளை அழிக்கக்கூடியவனும், என் தடைகளைப் போக்குகைக்குப் பரிகரமானவனுமான திருவாழியை உடையவனே!’ என்னுதல்.
ஆழ்கடலைக் கடைந்த துப்பனே –
உன்னை விரும்பாமல் ‘வேறு பிரயோசனங்களே அமையும்’ என்னுமவர்களுக்கும் ‘அளவிட முடியாத கடல்’ என்கிறபடியே,
ஒருவரால் அளவிட ஒண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஆற்றலை உடையவனே!

உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங்கொல் என்று
‘உன் தோள்கள் நான்கனையும் கண்டேனாய்விடக் கூடுமோ?’ என்று. அவர்களைப் போன்று உப்புச்சாறு கொண்டுபோமவர் அல்லரே இவர்!
அந்தக் கடலைக் கடைகிறபோது பரந்திருந்த தோள்களைக் காணக்காணும் இவர் ஆசைப்படுகிறது.
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோள்களே அன்றோ அவை?- நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.

எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு –
கிடைப்பதற்குத் தகுதியுள்ள நிலம் போலே கண்ணநீர் பாயாநிற்பர் ஆயிற்று.
ஆவி –
என் உயிரானது,
துவர்ந்து துவர்ந்து –
பசையற உலர்ந்து.
அன்றிக்கே, ‘இங்ஙனம் உலர்ந்து முடிந்து போகவும் பெறாமல், குணாதிக விஷயமாகையாலே ‘காணலாம்’ என்னும் நசை முடியவும்
ஒட்டாமையாலே, தரிப்பது மீண்டும் உலருவதான நிலை உருவச் செல்லுமாயிற்று,’ என்னுதல். என்றது,
‘சென்றற்றது, சென்றற்றது’ என்னும் நிலை ‘முடியச் செல்லுகின்றது’ என்றபடி.
இப்பொழுதே வந்திடாய் என்று –
தம் துன்பமே செப்பேடாக அரைக்கணமும் தாழாமல் வரவேண்டும் என்று.
நோக்குவனே –
வருவதற்குச் சம்பாவனையுள்ள திசையைப் பாராநிற்பன்.
‘வருகைக்கு அவன் பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படிச் செய்கிறது?’ என்னில்
,ஏழையேன் –
அஃது ஒன்று இல்லை. இவர்தம் ஆசையே உள்ளது.
ஆழ்வான் பணித்த வரதராஜ ஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார்,
‘இப்பாசுரங் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான், உன்முகத்தைக் காட்டிக்காணாய்,’ என்று பார்த்தருளினார்.

நாள்தோறும் –
எப்பொழுதும். ‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் – ஆசைப்படுதல்.

கிடையாததிலும் ஆசை செல்லுவதற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘ஆழ்வான்’ என்று தொடங்கி. என்றது, எம்பெருமானார், ஆழ்வானுக்கு வந்த ஆபத்தைக்
கண்டு திருவுள்ளம் மிகவும் புண்பட்டு ஆழ்வானைப் பார்த்தருளி, ‘ஆழ்வான்! நான் உம்மை இப்படிக் காணச் சகியேன்! ஸ்வரூப
விருத்தமானாலும் ஆயிடுக! நீர் பெருமாள் சந்நிதியிலே சென்று தோத்திரம் பண்ணி நம் அபீஷ்டத்தைப் பெற்று வாரீர்,’ என்ன, இவரும் சென்று
தோத்திரம் பண்ணி மீண்டு எழுந்தருள, ‘இரங்கியருளினாரோ?’ என்று கேட்டருள, ‘இரங்கியருளினார் இலர்’ என்று விண்ணப்பம் செய்ய,
‘உம்முடைய அபேக்ஷை தோன்ற விண்ணப்பம் செய்தீரோ?’ என்ன, ‘அப்படியே விண்ணப்பம் செய்தேன்’ என், ஆனால், அதிலே ஒரு சுலோகம்
சொல்லீர்’ என்று அதனைக் கேட்டருளி, ‘இப்பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான்! முகத்தைக் காட்டிக் காணாய்’ என்று
பார்த்தருளினாராம் என்பது. இது, சாபலத்தின் மிகுதியேயன்றோ?
நீல மேக -சியாமள -அப்ஜ பாணி நேத்ர சாத்குரு-கரீச -மானச கண்ணுக்கு விஷயம் ஆக்கினால் –
த்வாம் உதார புஜம் -உன்னச ஆயத கர்ண பாசம் – –அபிசாத கபோலம் -பாரணம் -பால போகம் போலே கண்ணுக்கு காட்டி அருள வேணும் –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: