பகவத் விஷயம் காலஷேபம் -88- திருவாய்மொழி – -4-2-1….4-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

இராம விரகத்தில் திரு வயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப்
பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ -3-8-என்ற திருவாய்மொழியில்;
இக்கூப்பீட்டை அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே
ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம் அன்றோ?’ என்று உகந்தார்,
‘சொன்னால் விரோதம்’3-9- என்ற திருவாய்மொழியில்;
‘அவ்வளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார்
‘சன்மம் பலபல’-3-10- என்ற திருவாய்மொழியில்;
அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு
உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய சிறுமை,நிலையின்மை முதலிய தோஷங்களையும்,
சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும் உபதேசித்து,
‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ -4-1-என்ற திருவாய்மொழியில்.
பரம புருஷார்த்வம் -பரம பிராப்யத்வம் கல்யாண குணம் காட்டி அருளினார் -ஒரு நாயகம் பதிகத்தில் –

நான்கு -அன்யாபதேசம் -2 தாய் /1 மகள் /1 தோழி பதிகங்கள் –
கிண்ணகத்தில் இழிந்து ஓடும் ஆறு -கரைகள் இரண்டையும் நடுவிலும் ஓடுமா போலே மூன்று தசைகள் -அனைத்திலும் பக்தி ரசம் ஓடுமே –
திவ்ய தேசம் -4-10/திரு நாராயண புரம் மன்னார் குடி சமர்ப்பித்த பாசுரங்கள் இந்த பத்தில்
4-2/6-10-திருவடி பிரஸ்தாபம் எல்லா பாசுரங்களிலும் உண்டு
திருத் துழாய் சம்பந்தத்தையும் அடிக்கடி சொல்லி -சங்க சக்கரம் -6-1 போலே இதிலும் சொல்லி வருவார்
3-3- சகல கைங்கர்யம் பிரார்த்தித்தார் -இதில் முன் காலத்து அனுபவம் -பூத காலம் மட்டும் பிரார்த்திக்கிறார்

பிராசங்கிகமாக, இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும்-10-9- அருளிச்செய்தார்?
இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது,
‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர்
அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! இனி எத்தனைநாள்?’ என்றபடி.

ஆக மூன்று திருவாய்மொழிகளாலும்-வீடு -சொன்னால்- ஒரு – இப்படிப் பரோபதேசம் செய்த இது,
சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல்.
அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.
அத்தாலும்–உம்மைத் தொகை -முடியானே பதிகத்தில் கரணங்கள் விடாய்த்தாலும் -இந்த உபதேசத்தாலும் என்றபடி –

‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,என்றது, மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல்
முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி,
‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே
அன்றோ அருளிச் செய்தது?-
அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று;
ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல்
தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி
மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும்
இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச் செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல்,
மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே
தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி.
சங்காயம்–ஆனைப்புல்-பயிர் போலவே இருக்கும் -ஏமாற்றி கெடுக்கும் -கைவல்யம் என்றவாறே-
இவர்களுக்குக் களையாவது,
1-2-பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும்,
3-9-சேவிக்கத் தகாதாரைச் சேவை செய்து திரிகையும்,
4-1-ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும்.
சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து,
அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் பொகடாத போது
நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று.
அப்படியே கைவல்யமும்.

இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’-3-8- என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய்
வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது;
அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி
இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது;
அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் வேறு நிலையைப் பிறப்பித்தது;
அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டி தான் மயங்கினவளாய்க் கிடக்க,
அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார்,
‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும்
அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’
என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்
திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, ‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி
செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே,
‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ?
அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடி யாலேயும்,
தன் ஆசையின் மிகுதி யாலேயும்
இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படா நின்றாள் என்கிறாள்.

—————————————————————————————

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

இரண்டாவது தாய் பதிகம் -ஆடி ஆடி -முதல் தாய் பதிகம் –
வடதள சாயி திருவடிகளில் திருத் துழாய் பெற வேண்டும் என்று பிரமியா நிற்கிறாள் –
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி-ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
மிறுக்கு இல்லாமல் ஆலிலை மேல் உண்டதுக்கு ஈடாக சயனித்து -வலப்பக்கம் -ஜீரணம் ஆகக் கூடாதே -சுவாமி
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல் வினையேன் மட வல்லியே-இந்த அபதானத்துகுத் தோற்று
நித்ய ஸூரிகள் சாத்திய திருத் துழாய் மேல் நசை வைக்கிறாள்
பவ்யமான -பிடித்த பிடி விடாத துவட்சி -கொடி போலே -உபக்னம் அபேஷை-கொள் கொம்பு தேடுமே –
அகடிதங்களை கடிப்பிக்கும் சக்தனால் ஆகாதது இல்லையே —
காலிணை-பாட பேதம்

அதிபால்யமான வடிவையுடையனாய் எல்லா உலகங்களையும் உண்டு வருத்தம் இல்லாமல் ஆலின் இலையிலே உண்ட உணவு
அறாமைக்குத் தகுதியாகக் கிடக்கும் பெருமையையுடைய இறைவனது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய
திருத்துழாயினைப் பெறவேண்டும் என்றே மயங்காநின்றாள்; தீவினையேனாகிய என்னுடைய, பற்றியதை விடாத வல்லிக்கொடி
போன்ற பெண்ணானவள்.
‘வல்வினையேன் மடவல்லி ஆல் இலை அன்ன வசம் செயும் அண்ணலார் தாளிணை துழாய் என்றே மாலும்,’ என்று கூட்டுக.
‘பரிவு இன்றி அன்ன வசம் செயும் அண்ணலார்’ என்க.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.

‘ஆல் இலையைப் படுக்கையாக உடையவனுடைய திருவடிகளிலே சார்த்தின திருத்துழாயைச் செவ்வியோடே
இப்போதே பெறவேண்டும் என்று ஆசைப்படாநின்றாள்,’ என்கிறாள்.

பாலன் ஆய் –
கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; ‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ?
பருவம் நிரம்பின பின்பு உலகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து ஆலிலையிலே சாய்ந்தானாகில்,
என் மகள் இப்பாடு படாளே! ‘அவன் ஒரு நிலையிலே காண் காப்பாற்றுமவன் ஆவது’ என்று மீட்கலாமே!’ என்பாள்
‘பாலன்’ என்கிறாள். ‘என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த நிலை ஒழிய முன் நிலை
நெஞ்சிற்படாமல் இருந்தானாதலின், ‘ஆய்’ என்கிறாள்.
ஏழ் உலகு உண்டு –
‘இது சரிக்கும்; இது சரியாது,’ என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம்.
‘காப்பாற்றுகின்ற சர்வேசுவரனுடைய தொழில் ஆகையாலே, இது பாதுகாவலாய் முடிந்தது இத்தனை.
ரக்ஷகன் உடைய வியாபாரம் ஆகையால் ரக்ஷணம் ஆயிற்று-
அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில்,
இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள்.
ஆபத்து உண்டானால் வரைந்து நோக்குமது இல்லை ஆதலின், ‘உலகு’ என்கிறாள்.

பரிவு இன்றி –
ஒரு வருத்தம் இன்றிக்கே. என்றது, உலகங்களை எடுத்து வயிற்றிலே வைக்கிற இடத்தில் அதனால்
ஒரு வருத்தம் இன்மையைத் தெரிவித்தபடி.
ஆல் இலை –
அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது,
‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி,
அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’என்றபடி.
அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை.
அன்ன வசம்செயும் –
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் இல்லாமல் தன் வசமாக அன்றிக்கே –
‘அஹம் அன்னம் – நான் இனியபொருளாய் இருப்பவன்’ என்கிற
அன்னத்திற்கு வசமாக. என்றது,- உண்ட உணவு சரியாதபடி அதற்குத் தகுதியாகச் செய்தமையைத் தெரிவித்தபடி.
அதற்குத் தகுதியாக’ என்றது, ‘வலக்கை கீழாக’ என்றபடி.
‘தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்த பழஞ் சேமப் புவனம் செரிக்கும் என்றே சிவன் மாமுடிக்கு
நாமப் புனல்தந்த பொற்றாள் அரங்கர் நலஞ் சிறந்த வாமத் திருக்கர மேலாகவே கண் வளர்வதுவே.’- – திருவரங்கத்து மாலை.

அண்ணலார் –
எல்லாப் பொருள்களையும் காக்கின்றவருமாய் எல்லாப்பொருள்களுக்கும் ஸ்வாமியும் ஆனவர்.
எல்லாப் பொருள்களையும் காக்கின்றவரான உமக்கு உம்மை ஆசைப்பட்ட வலிமை அற்றவளான
என் விருப்பத்தைச் செய்யத் தட்டு என்?’ என்கிறாள் என்பாள்.
‘அண்ணலார்’ என்கிறாள். அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில்
குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.
ரஷணம் பாலனாய் இருந்தாலும் விடாதவன் போலே சேஷத்வத்தில் இவள் கலக்கம் அற்று இருக்கிறாள் –

அண்ணலார் தாள் இணை –
அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ?
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் –
இப்படி இவள் ஆசைப்படுகைக்கு அடியிலே பச்சை யிட்டாள் காணும்.
பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று,
இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லா நின்றாள்;
தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே -திருவாய். 2. 1 : 2.-அன்றோ வாசனை பண்ணிற்று?

துழாய் என்றே – எப்போதும் அத்தையே சொல்லாநின்றாள்.
அடியிலே பச்சையிட்டாள், சிலேடை : அடியிலே – முதலிலே, திருவடிகளிலே. பச்சை – உபகாரம், திருத்துழாய்.
அடியோம் என்றும் -அடிச்சியோம் -நாயகி -தேறியும் தேறாமால் இருந்தாலும் சேஷத்வம் மாறாதே
‘கெடுவாய், இது, சேராதது காண்; இறந்த காலத்தில் உள்ளது ஒன்றுகாண்,’ என்றால்,
அது செவியிற்படுகிறது இல்லை என்பாள்
‘என்றே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறாள்.
ஒரு காரணத்தாலே சாதித்துக்கொள்ள முடியாமல் இருக்கையைத் தெரிவித்தபடி.

மாலுமால்–மாலும் –
மயங்கும். என்றது, ‘இது ஒரு சொல் அளவேயாய் அகவாயில் இன்றிக்கே இருக்கை அன்றிக்கே,
உள் அழியா நின்றாள்,’ என்றபடி.
மாணிக்கத்தின் ஒளியிலே நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ?

வல்வினையேன் –
மயக்கம் உற்றவளாய்க் கிடக்கிற இவளுக்கு ஒரு துக்கத்தின் நினைவு இல்லை ஆதலின், உணர்ந்திருந்து
பார்த்துக் கூறுகிற தன்னை ‘வல்வினையேன்’ என்கிறாள்.

மடம் வல்லி –
-ஒரு கொள் கொம்போடே சேர்க்க வேண்டும் பருவமாதலின், ‘வல்லி’ என்கிறாள்.
‘தமப்பபனாரான ஜனக மஹாராஜர் நாயகனை அடைவதற்குத் தக்க என்னுடைய வயதினைப் பார்த்து வியசனமாகிற
கடலில் மூழ்கினார்,’ என்கிறபடியே இருக்கையைத் தெரிவித்தவாறு. மடம் – பற்றிற்று விடாமை.

———————————————————————–

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

திருக் குரவை கோத்த -அவன் திருவடி திருத் துழாய்
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்-கொடி போன்ற நுண்ணிய இடை -வரம்பு அழியும் படி
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்-மரியாதை இல்லாத தன்மை கொல்லமை-ராசக்ரீடை
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே-ந்ருத்தம் ஆடும் நல்ல அடி -ஆயர் பெண்களுக்குத் தக்க -அதீத வாசனை
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே-காணும் படி தப்பாமல் சூழ்ந்த வினைகள் -என் பெண் பிள்ளை –

செய்த தீவினையை யுடையேனாகிய என்னுடைய பாவை போன்ற பெண்ணானவள், ‘கொடிபோன்ற நுண்ணிய இடையையுடைய
ஆயர் பெண்களோடும் வரம்பு அழிந்த செயல்களைச் செய்து குரவைக்கூத்தைக் கோத்து ஆடிய கண்ணபிரானுடைய சிறந்த
திருவடிகளின் மேலே அணிந்த வாசனை வீசுகின்ற திருத்துழாய்,’ என்றே சொல்லா நின்றாள்.
‘பாவை சொல்லும்’ என மாறுக. பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், ‘நல்லடி’ என்கிறாள்.
‘வாலறிவன் நற்றாள்’ என்றார் திருவள்ளுவனாரும்.

‘எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான சர்வேசுவரன் பிரளய ஆபத்திலே உடைமையாகிற
தன் உலகத்தைக் காப்பாற்றினானாகில், அதுவும் பேற்றுக்கு உடலாமோ?’ என்ன, ‘
அது உடல் அன்றாகில் தவிருகிறேன்;
என் பருவத்தினையுடைய பெண்களுக்கு உதவின இடத்திலே எனக்கு உதவத் தட்டு என்?’
என்னா நின்றாள் என்கிறாள்.

வல்லி சேர் நுண் இடை –
‘வள்ளி மருங்குல்’-பெரிய திருமொழி, 3. 7 : 1.– என்றாற்போலே,
வல்லிக்கொடி போலே இருக்கிற இடையை யுடையவர்கள் என்னுதல்;
நுண்ணிய இடையை யுடைய வல்லி போன்ற வடிவினை யுடையவர்கள் என்னுதல்.
இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’ என்கிறது.
ஆய்ச்சியர் தம்மொடும் –
திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும்.
கொல்லைமை செய்து –
வரம்பு அழிந்த செயல்களைச் செய்து.
அன்றிக்கே, ‘தன் அழகு முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம்.
குரவை பிணைந்தவர் –
அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி.
இதனால், ‘என் பருவத்தினை யுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர்,
அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னா நின்றாள் என்றபடி.
ஒவ் ஒன்றில் ஆழ்வாருக்கு சாம்யம் சொல்லி -அனைத்திலும் இவருக்கு ஈஸ்வரனும் சாம்யம் இல்லை -ஆச்சார்ய ஹிருதயம் –

நல் அடிமேல் அணி –
பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்?
நாறு தூழாய் –
அவர்களும் அவனுமாகத் துகைத்தது என்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; ‘கலம்பகன் நாறுமே அன்றோ?’
தாயார் மாலை மாத்தின வாசனை வேற நாற்றம் உண்டாகுமே -வாசனை அறிந்தார் அறிவார் -அடி அறிந்தார் அறிவார் —
என்றே சொல்லுமால் –
நினைத்தது வாய் விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று?
சூழ் வினையாட்டியேன் –
தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன்.
அத்ருஷ்ட பூர்வ வ்யசன -தேன துக்கேன மஹதா ‘பிராட்டி துக்கத்தால் அழுதுகொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும்
சொல்லவில்லை,’ என்பது போன்று இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது என் பாபமே அன்றோ என்பாள்,
தன்னைச் ‘சூழ் வினையாட்டியேன்’ என்கிறாள்.
பாவையே –
‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த
பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!

—————————————————————————

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

சர்வ லோகமும் ஸ்துதிக்கும் த்ரிவிக்ரமன் திருவடி திருத் துழாய்
கண்ணன் விட்டாலும் உலகத்துக்கு உதவின -இவன் அன்றோ –
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,-சந்தஸ்ஸில் -வர்த்திக்கும் -வேத ஸூக்தங்களை-நல் மாலை –இரண்டையும்
வேதேஷூ புருஷ ஸூ க்தம் –
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற-சங்க ஈச்வரனாம் -சனகாதி முனிவர்களும் -ஆழி எழ –ஜய ஜய
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே-அவர்களால் அணிவிக்கப்பட்ட -பொன் போன்ற ஸ்ப்ருஹநீயம்
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.-மாலை /சூடும் குழல் /பெண் மூன்றும் -பிரபல பாபம் -போக்க முடியாத –
சூழ் விசும்பு அப்புறமும் இப்பெண் அழுவதை பார்க்க முடியாத பாவியேன் –

‘வலிய தீய வினைகளைச் செய்த என்னுடைய பெண்ணானவள், ‘பாக்களோடு கூடின வேதங்களில் சிறந்த மாலைகளைக் கொண்டு
தேவர்களும் பெருமை பொருந்திய முனிவர்களும் துதிக்கும்படி உலகத்தை அளந்து நின்ற சிவந்த திருவடிகளின்மேலே அணிந்த
சிவந்த பொன் போன்று விரும்பத்தக்க திருத்துழாய்’ என்றே கூப்பிடாநின்றாள்.’
தேவர்கள் முனிவர்கள் நன்மாலை பல கொண்டு இறைஞ்ச நின்ற சேவடி’ என்க, ‘கோதை கூவும்,’ என மாறுக.

‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’
என்னா நின்றாள் என்கிறாள்.
கீழும் மேலும் திரு அவதாரபரம் என்பதால் இப்பாசுரமும் திரு அவதாரபரம் என்கிறார் –

பா இயல் வேதம் –
பாவாலே இயற்றப்பட்ட வேதம், பா – செய்யுள். 2‘அநுஷ்டுப்’ என்றும், ‘பிருஹதீ’ என்றும், ‘திருஷ்டுப்’ என்றும்
இவை முதலாகச் சொல்லப்படுகின்ற சந்தஸ்ஸூக்களை யுடைத்தான வேதம் ஆதலின், ‘பா இயல் வேதம்’ என்கிறார்.
நல் மாலை பல கொண்டு –
அதிலே நன்றான மாலைகளைக் கொண்டு; என்றது, ஸ்ரீ புருஷசூக்தம் முதலியவைகளை.
‘யாதொரு அடையத் தக்க பரம்பொருளின் சொரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும்,
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் யானே’ என்றும் சொல்லப்படுகின்றவாறே மற்றைய இடங்களிலும்
சொல்லப்படுகின்றவன் அவனேயாகிலும்,
சொரூப ரூப குணங்களுக்கு நேரே வாசகங்களாக இருக்கையாலே, அவற்றை நன்மாலைகள்’ என்கிறார்
அன்றிக்கே, ‘
ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும்
ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற –
தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் –‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும்
ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன்,
எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே
துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற.
சே அடி –
‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே,
தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே
அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை. –
‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை?
அன்றிக்கே,
செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே,
அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை.
‘தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?

சே அடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் –
அத் திருவடிகளிற் சாத்தின விரும்பத் தக்கதான திருத்துழாய் என்று சொல்லிக் கூப்பிடா நின்றாள்.
‘தோளிற் சார்த்தின மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள்,
‘சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள்.
ஆல் – இது ஒரு ஆச்சரியம் இருந்தபடி என்னே!
அன்றிக்கே,
அசையுமாம்.
கோள் வினையாட்டியேன் –
முடித்து அல்லாது விடாத பாவத்தைச் செய்த என்னுடைய.
அன்றிக்கே,
கோள் என்று மிடுக்காய், ‘அனுபவித்தே தீர்க்க வேண்டும்படியான பாவம்’ என்னுதல்.
கோதையே –
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே!
இம் மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு
மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.
கோதை என்பது, ‘பூமாலை, பெண்களின் தலைமயிர், பெண்’ முதலிய பல பொருள்களைக் குறிப்பதொரு பெயர்ச்சொல்.
முதல் இரண்டு பொருள்களையும் அருளிச்செய்கிறார், ‘தன் மாலையையும்’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருளை அருளிச்செய்கிறார், ‘இம்மாலையையுடைய இவள்’ என்று தொடங்கி.
கோதை என்பது, பிராட்டி தன்னைச் சொல்லுகிறதாகத்
திருவுள்ளம் பற்றிப் பொருள் அருளிச்செய்கிறார், ‘மார்வத்து மாலையான’ என்று தொடங்கி.
மார்வத்து மாலை – பிராட்டி. ‘உன் திருமார்வத்து மாலைநங்கை’ என்பது -திருவாய். 10. 10 : 2.)
மார்வத்து மாலைக்கு மால் அவன் -இவள் அம்மாலுக்கு மால் -திருமாலுக்கு மாலுக்கு விஷயம் என் மாலை கோதை –

——————————————————————————-

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

ஸூரி போக்யன் -பரமபத நிலையானது திருத் துழாய் -விபவம் தீர்த்தம் பிரசாதித்து போவானே –
அவன் நித்ய விபூதி நாயகன் அன்றோ
வைதிகன் பிள்ளைகளை கொண்டு வந்து கொடுத்தானே –
கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்-உயர்ந்த கல்யாண குணங்கள் –
ஸூ உத்கர்ஷம் -அவனால் இவற்றுக்கு பெருமை
பரார்த்தமாகவே அனுபாவ்யம் –
குண சித்தாந்திகள் -சீலாதிகள் -சௌர்யாதிகள் –
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்-தது தது உத்கர்ஷ பேதங்கள் –
சரசமான அக்ரமான உக்திகள் -உபகாரகன் -சர்வ ஸ்மாத் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே-பசுத்த -திருத் துழாய் -பாராயணம் பண்ணா நின்றாள்
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–தோள் விஞ்சி -கால தத்வம் -அளவும் போக்க முடியாத பாபங்கள்
வேய் போலும் எழில் உருண்ட தோள்கள்

ஊழ்வினையேனான என்னுடைய பெண்ணானவள், ‘சமயிகள் குற்றம் இல்லாத வளவிய
கல்யாணகுணங்களைக் கொண்டு
ஒவ்வொரு குணத்திற்குரிய உயர்வின் பேதங்களைச் சொல்லிப் பிதற்றும்படியான
பிரானாகிய பரனுடைய திருவடிகளின் மேலே
அணிந்த பசுமையான அழகிய திருத்துழாய்’ என்றே சொல்லாநின்றாள்.
‘சமயிகள் வண்புகழ் கொண்டு பேதங்களைச் சொல்லிப் பிதற்றும் பரன்’ என்க.
பிதற்றும் – பிதற்றப்படுகின்ற. பிரான் – உபகாரகன்,
‘தடந்தோளி ஓதும்’ என மாறுக.
ஊழாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாய நியதி.
தோளி -தோளையுடையவள். ‘சமயிகள்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற் காண்க.

‘பெருக்காறு வற்றினாற் போலே ஒருகால் எல்லாரையும் வாழ்வித்துப் போன அவதாரங்களில் உள்ளதனை
நான் இப்போது எங்கே தேடுவேன்?’ என்ன,
‘அது தவிருகிறேன்; என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற
பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னா நின்றாள் என்கிறாள்.

பரன் பாதங்கள்மேல் அணி’ என்றது போன்றவைகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘பெருக்காறு வற்றினாற் போலே’ என்ற
இவ்விடத்தில் ‘பூகத ஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே பரத்வம்;
பாற்கடல் போலே வியூகம்; பெருக்காறு போலே
விபவங்கள்;அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்,’ என்னும்
பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீ சூக்திகளை ஒப்பு நோக்குக.

கோது இல் —
குற்றம் அற்ற; ‘குற்றங்கட்கு எதிர்த்தட்டான’ என்றபடி.
குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற் போகாதபடி காற் கட்டுகை.
அப்படி இராதாகில், அல்லாத விஷயங்களிற் காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ?
வண்புகழ் –
கல்யாண குணங்கள். கொண்டு – இக்குணங்களைச் சொல்லிக்கொண்டு.
சமயிகள் –
ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து மற்றைய குணங்களில் போக மாட்டாதவர்கள்; என்றது,
‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம் துவக்க வற்று;
அதிலும் உருவ குணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று
இவற்றிலே நிஷ்டரானவர்கள் என்றபடி.
இனி, சொன்ன இவர்களை ஒழிய, ‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,
உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.

சர்வஜ்ஞத்வம் முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுபவர்கள் சத் வித்யா நிஷ்டர்.
‘குணமும் உபாசிக்கத் தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா நிஷ்டர்.
‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் உபகோசல வித்யா நிஷ்டர்.
‘உலகமே உருவாயுள்ள சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய வித்யா நிஷ்டர்.

பேதங்கள் சொல்லி –
தாங்கள் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி; என்றது,
சீல குணத்தை அனுபவித்து, இதுவும் ஒரு குணமே! இது போலேயோ வீர குணம்!’ என்றாற் போலே சொல்லுதல் என்றபடி.
பிதற்றும் –
அந்தக் குணங்களிலே ஈடுபட்டு ஜ்வர சந்நி பதிதரைப்போலே அடைவு கெடக் கூப்பிடா நிற்பர்கள்.
பிரான் பரன் –
அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது,
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’-திரு விருத்தம்- என்கிறபடியே,
இக் குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி.

பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் –
‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே,
மிக்க சீர்த் தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சார்த்தினதாய்
அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள்.
ஊழ் வினையேன் –
வந்தது அடைய முறையாம் படியான பாவத்தைப் பண்ணின யான். ஊழ் – முறை.
தடந்தோளியே –
இப்படிக் கை விஞ்சின அழகை யுடையவள், குணங்களுக்கு இருப்பிடமான
அவன் திருவடிகளிலே திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்.
இத் தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.

—————————————————–

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

கிருஷ்ணன் திருவடிகளில் திருத்துழாய்
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்-சீலாதி களால் அவனுக்கு சத்ருசையான நப்பின்னை
தழுவி -இவளை அடைய -விரோதியையும் தழுவுவான் –
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்-ஸ்வ பாவர் -அனுரூபமான குலம்-குடக் கூத்தில் மநோ ஹர சேஷ்டிதங்கள் உடையவர்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே-வீர அபதானத்துக்குத் தோற்று –
ராச க்ரீடை -திருவிக்கிரம -ரிஷபங்கள் தழுவியவன் திருவடி வாசம் அறிபவள்
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே–என் பெண் பிள்ளை சிதிலை ஆகிறாள் -மாதர் -மார்த்தவம் படைத்தவள்-

‘என்னுடைய பெண்ணானவள், ஒத்த தோள்களை யுடையவளான நப்பின்னைப் பிராட்டி காரணமாக ஏழ் எருதுகளையும்
தழுவிக் கொண்டவரும், ஆயர் வமிசத்தில் பிறந்தவரும், குடக்கூத்தை ஆடியவருமான கண்ணபிரானது இரண்டு திருவடிகளின் மேலே
அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய் என்றே நாளுக்கு நாள் வருந்தா நின்றாள்,’ என்கிறாள்.
தோளி – தோள்களையுடையவள். தழீஇ – தழுவி; சொல்லிசை அளபெடை.
கோளியார் – கொண்டவர். ‘மாதர் நைகின்றது,’ என மாறுக.

‘எல்லா ஆத்துமாக்களுக்கும் பரனாய்ப் பரமபதத்தில் உள்ளவனாய்க் கிட்டுதற்கு முடியாதவனாய் இருக்கிறவன் திருவடிகளில்
சார்த்தின திருத்துழாயை என்னால் தேடப்போமோ?’ என்ன,
‘ஆனால், இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத்
தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சாத்தின
திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்கிறாள்.

தோளி சேர் பின்னை –
‘ஒத்த சீலம் வயது ஒழுக்கம் இவற்றையுடையவளும், ஒத்த குலம் இராஜ லக்ஷணம்
இவற்றையுடையவளுமான பிராட்டிக்குப் பெருமாள் தக்கவர்;
பெருமாளுக்குப் பிராட்டியும் தக்கவள்,’ என்கிறபடியே, குடிப்பிறப்பு முதலியவைகளால் பெருமாளுக்கு ஒத்தவளாய்க்
‘கறுத்த கண்களையுடையவள்’ என்று அவரிலும் இவளுக்கு ஏற்றமானாற் போலே,
மற்றை அழகு எல்லாம் கிருஷ்ணனோடு ஒத்திருக்கும்;
தோள் அழகு அவனைக் காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது.
அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத் தோளோடே அணைக்கைக்காக;

தோளி சேர் பின்னை பொருட்டு -தாதர்த்த சதுர்த்தி -அவளுக்காகவே வியாபாரித்தது –

எருது ஏழ் தழீஇக் கோளியார் –
எருதுகள் ஏழனையும் தழுவிக் கொள்ளுமவர். -கொல்லுமவர்-அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே,
அவளைத் தழுவினாற் போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்;
ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது?
அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, அவற்றின் கொம்போடே பொருததும்
இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி.

கோவலனார் குடக்கூத்தனார் –
அவளைப் பெறுகைக்குத் தகுதியான குடிப்பிறப்பையும் செருக்கையும் உடையவர்.
வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும்
ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.

தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே –
அவளுக்கு உதவின கிருஷ்ணன் திருவடிகளில் சாத்தின திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்பட்டது.

நாளும் நாள் நைகின்றது –
ஒருநாள் நைகைக்கும் ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள்.
நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப் பண்ணும் விஷயமே அன்றோ?

என்றன் மாதர் –
என் பெண் பிள்ளை.
அன்றிக்கே, தன்னைப்போலே பிறந்து விலங்கு முரித்துக் கொண்டு போய்ப் பூதனை சகடாசுரன் இரட்டை மருத மரங்கள்
முதலானவைகளோடே பொருது, ‘தழும்பு இருந்த தாள் சகடம் சாடி’ என்கிறபடியே,
தழும்பு ஏறி இருப்பாள் ஒருத்தியோ என் பெண்பிள்ளை என்பாள், ‘என்மாதர்’ என்கிறாள் என்னுதல். என்றது
‘தொடுங்கால் ஒசியும் இடை இளமான் அன்றோ?’ என்கிறாள் என்றபடி.
நமஸ் சப்த்தார்த்த நிஷ்டை -இடையில் உள்ள பதம் அன்றோ –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: